“அகன் கண்ணா, நீ சொன்னப்பவே அம்மா கேட்டிருக்கணும். பெரிய தப்புப் பண்ணிட்டேன். அப்படி போயிருந்தா இப்போ நீயாவது நல்லா இருந்திருப்ப அகன். இப்போ என்னால தான் உனக்கும் இந்த நிலைமை” என்று பழியை தன் மீதே போட்டுக் கொண்டார் அகல்யா. விளைவு அனைத்தில் இருந்தும் ஒதுங்க ஆரம்பித்தார். தயாளனை அறவே வெறுத்தார். தனக்கு ஆதரவாய், அன்பாய் இருந்த மகன் படுக்கையில் இருக்க அனைத்தும் வெறுத்து விட்டது அவருக்கு.

அகல்யாவின் விலகல் மெதுவாய் புரிய ஆரம்பித்தது தயாளனுக்கு. மகன் மருத்துவமனை வசத்தில் இருக்க, குடியை மறந்து நிதானமாய் யோசித்தவருக்கு தான் செய்து வைத்த செயலின் வீரியம் புரிந்தது. இடையில் ஏற்பட்ட குடிப்பழக்கமும், கேடுகெட்ட நட்பும் தன் வாழ்க்கையையே மாற்றி இருப்பதைத் தாமதமாகத்தான் உணர்ந்தார். அவர் உணர்ந்த நிமிடம் அகல்யா அவரை விட்டு வெகு தூரம் சென்றிருந்தார்.

கண் விழித்திருக்கும் நேரங்களில் தன் அன்னை எப்போதும் அழுது கொண்டிருப்பதும், தந்தையின் செயல்களையும் தனக்குள் உள்வாங்கிக் கொண்டே இருந்த கார்த்தி கொஞ்சம் கொஞ்சமாக மன அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தான்.

திடீரென்று நின்று போன பேச்சும், யார் பேசுவதையும் கேட்க முடியாத நிலையும் அவனை மேலும் அழுத்தத்திற்கு உள்ளாக்க, எப்போதும் போல் அகல்யாவின் அன்பையும் அணைப்பையும் அவன் எதிர்பார்க்க, வேறு ஒரு உலகத்தில் குற்ற உணர்வில் சஞ்சரித்துக் கொண்டிருந்த அகல்யாவிற்கு இதெல்லாம் புரியவில்லை. அவனுக்கோ வாய்விட்டு சொல்ல முடியாத நிலை.

அகல்யாவின் இந்த போக்கை உணர்ந்த தயாளன்,

“நான் அப்படி பேசினது தப்புத்தான் அகல்யா. நிதானமா யோசிச்சுப் பார்த்தா நான் எவ்வளவு பெரிய முட்டாளா இருந்திருக்கேன்னு தோணுது” என்று ஆரம்பித்தவர் ஆரம்பத்தில் இருந்து தன் நடத்தை மாறியதற்கான காரணங்களை மனைவியிடம் சொல்ல, இந்த ஒரு சம்பவத்தால் பாதிக்கப்பட்டிருந்த அகல்யா, ஏற்கனவே தன் நடத்தையின் மீது கணவனுக்கு சந்தேகம் இருந்திருக்கிறது என்ற உண்மை தெரிய வர உள்ளுக்குள் முற்றிலும் உடைந்து போனார்.

“நானெல்லாம் மனுஷனே இல்லை அகல்யா. என் பையனோட இந்த நிலைமைக்கு காரணமானவனை நான் சும்மாவே விட மாட்டேன்” என்று மனைவிடம் சொன்னவர் ரத்தினத்தை தேடி சென்றிருந்தார். அனைத்தும் மருத்துவமனையில் கார்த்தியின் கண் முன்னேயே நடக்க, அவர்களின் உதட்டசைவை வைத்தே அவர்கள் பேசுவதை முடிந்த அளவு புரிந்து கொள்ள முயற்சி செய்தான் கார்த்தி.

கேட்ட விஷயங்களை ஜீரணிக்க முடியவில்லை அகல்யாவால். தான் எப்படி ஒரு வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறோம் என்று அவர் மீது அவருக்கே கழிவிரக்கம் தோன்ற, உணர்ச்சிகளின் பிடியில் இருந்தவர் செய்யக் கூடாத ஒரு விஷயத்தை செய்தார்.

ஆம், மருத்துவமனையில் கார்த்தி இருந்த அதே அறையில் மகன் முன்னாலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் அகல்யா. தன் கண் முன்னால் தாய் செய்யும் செயலின் வீரியம் உணராதவன், அவர் துடிக்கும் போது கத்தவும் முடியாமல், யாரையும் அழைக்கவும் முடியாமல் துடிக்க, அவன் கண் முன்னாலேயே துடிதுடித்து இறந்திருந்தார் அகல்யா. உணர்ச்சி வேகத்தில் வாழ்க்கையை வெறுத்து ஒரு நிமிடம் அவர் யோசிக்காமல் எடுத்த முடிவு அவர் உயிரை காவு வாங்கியிருந்தது.

நகுலனை அழைத்துக் கொண்டு அவருக்கு சாப்பாடு எடுத்து வந்த சுகந்தி அறைக் கதவு உள்ளே பூட்டப் பட்டிருக்க, தட்டிப் பார்த்தவர், மருத்துவமனை நிர்வாகத்தின் உதவியோடு கதவைத் திறக்க, அங்கே கண்டது அகல்யாவின் உயிரற்ற உடலையும், பெட்டில் இருந்து தாயின் உடலையே வெறித்துக் கொண்டிருந்த கார்த்தியையும் தான்.

“அத்தாச்சி” என்று சுகந்தி அதிர்ந்து நிற்க, “அம்மா” என்ற நகுலனோ பெருங்குரலெடுத்து அழத் தொடங்கினான்.

மகனுக்கு இப்படி ஆனதில் மன அழுத்தத்தில் இருந்த அகல்யா தற்கொலை செய்து கொண்டதாகவே அனைவராலும் நம்பப்பட்டது. ஆனால் நடந்த அனைத்திற்கும் சாட்சியாய் இருந்த அகன் கார்த்திகேயனின் அகம் முழுவதும் அன்றிலிருந்து அனைவரிடமிருந்தும் விலகி இறுகிப் போனது.

நடந்து முடிந்த அனைத்தும் தயாளனின் கண் முன் வந்து போக,

“தப்புப் பண்ணிட்டேன் அகல்யா, உன்னோட சாவுக்கு நான் மட்டும் தான் காரணம். என்னோட புத்தி மட்டும் தான் காரணம்.  எனக்கெல்லாம் மன்னிப்பே கிடையாது” என்றவர் குலுங்கி அழ ஆரம்பித்திருந்தார்.

அதே நேரம் மனைவியின் மடியில் தலைவைத்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அகனின் உடலோ வியர்க்கத் தொடங்க,

“அகன் கண்ணா” என்ற அகல்யாவின் குரல் அவன் காதுகளுக்குள் விடாமல் கேட்டுக் கொண்டே இருந்தது. அவனின் சிறு அசைவில் கண் விழித்துவிட்ட தாராவிற்கு,

“அகன் என்னாச்சு உங்களுக்கு?” என்றாள். அவனுக்கோ அவள் குரல் எதுவும் கேட்கவில்லை. தாயின் குரலே விடாமல் கேட்டுக் கொண்டிருந்தது. ஏசியின் குளிரிலும் வியர்த்து கொட்டிய அகனின் முகத்தைப் பார்த்தவளுக்கு அவன் நிலை புரிந்தது.

 அவனின் மனப் போராட்டம் அவளுக்குப் புரிந்தாலும் ஏனோ அவன் தவிப்பை மட்டும் பார்க்க முடியவில்லை அவளால்.

“அகன் கண்ணைத் திறங்க ப்ளீஸ்” என்றவளுக்கு கண்ணீரும் நிற்காமல் வர, அவனுக்கு வலிக்கும் அளவிற்கு கிள்ளியிருந்தாள் தாரா. அந்த வலியில் நினைவு மீண்டவன்,

“அம்மா” என்றபடி எழுந்து அமர்ந்திருந்தான். அவள் அவனையே பார்த்திருக்க, அவன் தன் உணர்விற்கு வர நிமிடங்கள் பிடித்தது. ஆழ்மனதிடம் இருந்து தன்னை மீட்டவன், எதிரில் இருந்த தாராவைப் பார்க்க, அவளோ கண்ணீருடன் பரிதவித்திருந்தாள்.

தன் நெற்றியை நீவி தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டவனுக்கு மனைவியின் தவிப்பு புரிந்தது.

“யுகா” என்றவன் அவளை நோக்கி கைகளை நீட்ட,பாய்ந்து  அவனை மூச்சு முட்ட இறுக அணைத்துக் கொண்டாள். விட்டால் எங்கே அவனுக்கு எதுவும் ஆகிவிடுமோ என்ற பரிதவிப்பு அவள் உடல் மொழியிலும் தெரிந்தது.

“சாரி யுகா” என்றவனின் இதழ்களை ஒரு கையால் மூடியவள், பேச்சு வார்த்தைக்கு இடமின்றி அவனுக்குள் தன்னை புதைத்துக் கொண்டாள். அவளின் அந்த அணைப்பே அவனை அப்போதைக்கு மொத்தமாக மீட்டிருந்தது.