“இல்ல தூங்கும் போது, நான் சம் டைம்ஸ் ரெஸ்ட்லெசா பீல் பண்ணுவேன். இப் யு டோன்ட் மைன்ட், உனக்கு பிரச்சனையில்லையே” என்றான் யோசித்து.

“லைட் ஆப் பண்ணிட்டு வந்து தூங்குங்க அகன்” என்றவள் அவனுக்கு முதுகு காட்டி படுத்துவிட்டாள்.

கட்டிலின் மறுபுறம் அமர்ந்த அகனுக்கு, முதன் முறையாக வாழ்க்கை மீதான சிறு பயம் தோன்றியது. அவனிடமிருந்த மன திடமும், உறுதியும் ஏனோ தாராவின் அருகில் மட்டும் கரைந்து விடுவதைப் போல் உணர்ந்தான். தன்னை மீறி அவளைக் காயப்படுத்தி விடுவோமோ என்ற அச்சமும் அவனுக்குள் இருந்தது.

உறங்காமல் அறைக்குள் அவன் நடை பயின்று கொண்டிருக்க, அது தாராவுக்கும் தெரிந்திருந்தது. சிறிது நேரம் பொறுத்துப் பார்த்தவள் பிறகு முடியாமல் எழுந்து அமர்ந்தாள்.

“என்னாச்சு அகன்? நான் வேணும்னா ஏற்கனவே நான் யூஸ் பண்ண ரூம்க்கு போகட்டுமா?” என்றாள் அமைதியாக.

அவளின் அருகில் வந்து அமர்ந்தவன்,

“அதுக்கெல்லாம் அவசியமில்லை யுகா. இப் யு டோன்ட் மைன்ட்” என்றவன், அவளின் மடியில் தலை வைத்துப் படுத்துவிட்டான். எதிர்பாரா அவனின் செயலில் அவளுக்குத்தான் ‘அய்யோடா’ என்றிருந்தது.

“என்னாச்சு அகன்?” என்றவளின் கைகள் பரிவுடன் அவன் தலையை வருட, அந்த கரங்களின் மென்மையில் மெல்லக் கரைந்து கொண்டிருந்தான் அகன்.

“என்னை மீறி எங்க உன்னை காயப்படுத்திடுவேனோன்னு பயமா இருக்கு யுகா” என்றான் முதன் முறையாக தன் தயக்கம் விடுத்து.

“நமக்கு பிடிச்சவங்களை பிடிக்காத சமயங்கள்ல கூட நம்மளால காயப் படுத்த முடியாது அகன், தூங்குங்க” என்றவளின் அருகாமையிலும், தலைகோதலிலும் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றிருந்தான். நீண்ட வருடங்களுக்குப் பிறகான அவனுடைய நிம்மதியான உறக்கம்.

தாரா எதை செய்ய மாட்டேன் என்று சொன்னாளோ, இப்போது அதைத்தான் செய்து கொண்டிருந்தாள். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவனை விழி அகற்றாமல் ரசித்துக் கொண்டிருந்தாள்.

அவனுக்கு மன ரீதியான பிரச்சனை இருப்பது அவளுக்குத் தெரிந்த ஒன்று தான். அந்த பிரச்சனையை அவன் தெளிவாகக் கையாளும் விதம் தான் இப்போது அவளுடைய யோசனைக்குக் காரணம். உளவியல் பிரச்சனை இருப்பவர்களுக்கு இவ்வளவு திடமும், தெளிவும் ஒரே நாளில் வந்து விடுவது இல்லையே. அதற்காக அவன் பல நாட்கள் மெனக்கெட்டிருக்கிறான்  என்பதும் அவளுக்கு புரிந்திருந்தது.

“தயாளன் அங்கிளுக்கும் இவனுக்கும் இடையில அப்படி என்ன நடந்திருக்கும்? அவரை கேட்டா தெரியுமா? நான் அவர்கிட்ட கேட்டு, அது தெரிஞ்சு அகன் கோபப்பட்டா என்ன பண்றது?” என்று சிந்தனைகள் பலவாறு இருக்க, அவனைப் பற்றி யோசித்துக் கொண்டே  அமர்ந்த வாக்கில் தானும் உறங்கிப் போயிருந்தாள் தாரா.

அதே நேரத்தில் தயாளனும் மகனைப் பற்றிய சிந்தனையில் தூக்கத்தை தொலைத்திருந்தார். இன்று அவன் நடந்து கொண்ட முறையில் அவருக்கு எல்லாமே வெறுத்து விட்டது. என்றாவது ஒரு நாள் அவரை மன்னித்து அவன் ஏற்றுக் கொள்வான் என்று அவர் நினைத்திருக்க, இப்படி ஒரு மனச் சிதைவு நோயில் இருப்பான் என்று அவர் நினைக்கவில்லை. அவரின் யோசனைகள் அவர் வேண்டாமலே கடந்த காலத்திற்கு சென்றிருந்தது.

அரசாங்க உத்தியோகத்தில் பெரிய பொறுப்பில் இருந்த தயாளனுக்கும் அகல்யாவுக்கும் திருமணம் முடிந்து, இரண்டு ஆண் குழந்தைகளுடன் வாழ்க்கை மகிழ்ச்சியாகத் தான் சென்று கொண்டிருந்தது. அகல்யா வீட்டினர் அளவிற்கு வசதி வாய்ப்பு இல்லாவிட்டாலும் அவரின் வேலையும், குணமும் நன்றாய் இருக்க, தூரத்து உறவு முறையிலும் வர, அகல்யாவை மணம் முடித்துக் கொடுத்திருந்தனர். அகல்யா வசதியிலும், அழகிலும், குணத்திலும் தயாளனை விட பல படிகள் மேலே தான் இருந்தார்.

தயாளன் கொஞ்சம் கோபக்காரர். அவருக்கு எல்லாமே சரியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவர். எதிலும் நேர்த்தியுடன் இருக்க வேண்டும், அனைத்தும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர். வீட்டில் தூசி, குப்பை என்று எதையாவது பார்த்தால் ஆடித் தீர்த்து விடுவார்.அனைத்தும் பளிச்சென்று இருக்க வேண்டும் அவருக்கு. இதைத் தவிர்த்துப் பார்த்தால் அவரிடம் குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை.

நன்றாக சென்று கொண்டிருந்த திருமண வாழ்க்கையில் மாமியார் பரமேஸ்வரியால் அவ்வப்போது பிரச்சனைகள் வந்து கொண்டிருந்தது அகல்யாவுக்கு. குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகள் எக்காரணம் கொண்டும் பிறந்த வீட்டிற்கு தெரியக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் அகல்யா. அவரைப் பொறுத்தவரை தயாளன் அவரிடம் சரியாக இருக்கிறார். மாமியார் செய்யும் கலகமோ, பிரச்சனைகளோ பெரிதாய் தெரியவில்லை அகல்யாவுக்கு.

சுகந்தி கணவருடன் வாழாமல் விவாகரத்து வாங்கிக் கொண்டு வந்த பிறகு பிரச்சனைகள் அதிகமாகத் தொடங்கியது. தன் மகள் வாழாமல் வீட்டோடு இருக்க, மருமகள் மகனுடன் மகிழ்ச்சியாக வாழ்வதை  பல சமயங்களில் பரமேஸ்வரியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

“எனக்கு அவரோட ஒத்துப் போகலை, நான் பிரிஞ்சுட்டேன். அதுக்கு அத்தாச்சி  என்ன பண்ணுவாங்கம்மா? எதுக்கு தேவையில்லாம பிரச்சனை பண்ணிட்டே இருக்கீங்க?” என்று சுகந்தி பலமுறை பரமேஸ்வரியை சத்தம் போட்டும் அவர் கேட்டபாடில்லை.

வீட்டில் பிரச்சனைகள் அதிகமாக ஒரு கட்டத்தில்,

“நீங்களும் அத்தாச்சியும் தனியா போய்டுங்கண்ணா” என்று சுகந்தியே வாய் விட்டு சொல்லும் அளவிற்கு வந்து விட்டிருந்தது.

வேறு வழியின்றி அகல்யாவுடன் தனிக்குடித்தனம் வந்திருந்தார் தயாளன். தங்கள் கைக்குள்ளயே வைத்து வளர்த்த பேரனை பிரிய முடியாமல் நகுலனை தங்களுடன் வைத்துக் கொண்டார் பரமேஸ்வரி.

“ரெண்டு தெரு தள்ளி தான இருக்க தயாளா. நகுலன் எங்க கூடவே இருக்கட்டும். சுகந்திக்கும் ஒரு ஆறுதலா இருக்கும்” என்றார் பரமேஸ்வரி.

“அண்ணா கார்த்தியையும் விட்டுட்டு போங்களேன். ரெண்டு பேரையும் நான் பார்த்துக்கிறேன்” என்றார் சுகந்தி. கார்த்தியோ அகல்யாவை விட்டு ஒரு நாளும் இருக்க மாட்டான்.

குடும்பப் பிரச்சனைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்து வாழ்க்கை அதன் போக்கில் சென்று கொண்டிருக்கும் போது தான் ஆரம்பித்தது பிரச்சனை.

சமீப காலமாய் தயாளனின் நெருங்கிய நண்பன் ரத்னாவின் போக்கில் மாற்றம் ஏற்பட, அதைக் கண்காணித்து கண்டித்துக் கேட்ட தயாளனுக்கு கிடைத்தது என்னவோ நம்பமுடியாத விஷயம் தான்.

“நான் என்ன ஆசைப்பட்டா குடிக்கிறேன் தயா. உனக்கே தெரியும்ல நான் என் பொண்டாட்டி மேல எந்த அளவுக்கு உயிரா இருந்தேன்னு. ஆனா அவ எனக்கே துரோகம் பண்ணிட்டா தயா. நான் அவளுக்காக உழைக்கிறேன். அவ என்னடான்னா என்னை விட்டுட்டு இன்னொருத்தன் கூட.. அதை எப்படி என் வாயால சொல்லுவேன் தயா. அப்படி ஒரு அலங்கோலத்தை கண்ணுல பார்த்தும் நான் இன்னும் உயிரோட இருக்கனுமா?” என்று புலம்பியபடியே குடிக்க,

“சும்மா உளறாத ரத்னா. தங்கச்சி அப்படி பட்ட பொண்ணெல்லாம் கிடையாது” என்று அதட்டினார் தயாளன்.

“நானும் அப்படித்தான் நம்புனேன் தயா. இன்னும் குழந்தை இல்லைன்றதுக்காக நான் ஆம்பளையே இல்லைன்னு சொல்லிட்டா தயா” என்று புலம்ப, நண்பன் வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகள் தயாளன் மனதில் ஒரு புள்ளியாய் விழுந்து விட்டது. எக்காரணம் கொண்டும் ஒழுக்க சீர்கேட்டை அவரால் ஏற்றுக் கொள்ள முடியாது.

“அவளை நான் கொல்லாம விட மாட்டேன் தயா” என்று போதையில் உளற,

“பைத்தியக்காரன் மாதிரி எதுவும் பேசாத ரத்னா. உனக்கு பிடிக்கலைன்னா டைவேர்ஸ் வாங்கிட்டு வேற வாழ்க்கையை அமைச்சுக்குற வழியைப் பாரு” என்று நண்பனை அதட்டி வைத்திருந்தார் தயாளன்.

நண்பனை அதட்டி வைத்தவருக்கு தன் மனதை அதட்ட முடியவில்லை. மனதில் விழுந்த சிறு உறுத்தல் அவரின் நடத்தைகளில் தெரிய ஆரம்பித்தது. எதிலும் ஒரு சிறு சந்தேகக் கண்ணோட்டம் வர, அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் இருந்தார் தயாளன். முடியாத நிலையில் அகல்யாவிடம் கத்தி விடுவதும் உண்டு. அவர் ஏற்கனவே கோபக்காரர் என்பதால் அவரிடம் ஏற்பட்ட இப்படி ஒரு மாற்றம் முதலில் அகல்யாவுக்குத் தெரியவில்லை.

ஆனால் தந்தையிடம் ஏற்பட்ட மாற்றத்தை கார்த்திகேயனின் மனம் அறிந்து கொண்டது. தந்தை தன்னுடன் விளையாடும் நேரம் குறைந்ததை அவன் கவனித்தான். தன்னை முன் போல் கொஞ்சுவதில்லை என்று அவனுக்குப் புரிந்திருந்தது. அவரின் பேச்சு எப்போதும் போல் இல்லை என்பதை உணர்ந்திருந்தான். தான் அருகில் சென்றாலே அவர் தன்னை விட்டு விலகிப் போவதை அவன் நன்றாகவே உணர்ந்திருந்தான்.

கார்த்தி அவரை நெருங்க முயற்சிக்கும் போதெல்லாம், அவர் அவனைத் தவிர்க்க, காரணம் தெரியாத வயதில் ஏங்கிப் போனான் கார்த்தி. இத்தனை நாட்கள் தன்னைச் சீராட்டிய தந்தையின் விலகல் அவன் மனதை வெகுவாய் பாதித்தது.

“உன் பெரிய பையன் நகுலன் உன்னை மாதிரியே இருக்கான் தயா. ஆனா உன் சின்ன பையன் கார்த்தி எப்படி இவ்வளவு அழகா இருக்கான்? உன் ஜாடை கொஞ்சம் கூட இல்லை அவன்கிட்ட.உங்க வீட்டு ஆட்கள் யார் ஜாடையும் இல்லை. அப்படியே அகல்யாவைக் கொண்டு பிறந்திருந்தாலும் இவ்வளவு நிறமா?” என்று ரத்னா ஒரு நாள் போகிற போக்கில் சொல்லியிருக்க, அதிலிருந்து பிடித்தது அனர்த்தம்.

“பேசாம டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து பார்த்துடுவோமா?” என்ற சிந்தனை தனக்குள் தோன்றவும் அதிர்ந்தார் தயாளன்.

“ச்ச்ச..! எப்ப இருந்து எனக்குள்ள இப்படி ஒரு புத்தி வந்தது? அகல்யா என்னோட மனைவி. அவளைப் போய் எப்படி நான் இப்படி நினைக்க முடியும்? நான் இப்படி நினைச்சேன்னு தெரிஞ்சாலே அவ உயிரோட இருக்க மாட்டா. என்ன பண்ணிட்டு இருக்க தயாளா?” என்று ஒரு நாள் தனக்குத் தானே கேள்விகள் கேட்டு, தெளிந்திருந்தார் தயாளன்.

கார்த்தியிடமிருந்து விலகிச் சென்ற நேரத்தில் நகுலனிடம் பாசத்தைக் கொட்டியிருந்தார் தயாளன். மற்றவர்களுக்கு இதில் வித்தியாசம் தெரியவில்லை என்றாலும், தந்தையின் அன்பு புறக்கணிக்கப்பட்ட கார்த்திக்கு நன்றாய் தெரிந்திருந்தது.

சுய அலசலுக்குப் பிறகு தன் செயல்களை வெறுத்தவர், மீண்டும் கார்த்தியிடம் நெருங்க, இப்போது அவனோ அவரை விட்டு விலகத் தொடங்கினான். எப்போதும் அவன் தஞ்சமடைந்திருப்பது அகல்யாவிடம் மட்டும் தான்.

“கார்த்தி இப்பல்லாம் என்கூட சரியா பேச மாட்டேங்குறான். ஏன்னு தெரியுமா அகல்யா?” என்றார் ஒரு நாள்.

“அவன் எப்பவும் போல தான் இருக்கான்ங்க. உங்களுக்குத் தான் வித்யாசமா தெரியுது” என்றார் அகல்யா.

“அகன் கண்ணா, அப்பாகிட்ட நீ முன்ன மாதிரி பேசுறது இல்லையாம். அப்பா பீல் பண்றாங்க. அப்படியெல்லாம் இருக்கக் கூடாது” என்றார் மகனிடம்.

“அப்பாவுக்கு அண்ணாவைத் தானே பிடிக்கும்” என்றான் அகன் கார்த்திகேயன்.

“அப்பாவுக்கும் அம்மாவுக்கும் நீங்க ரெண்டு பேரும் ஒன்னு தான் அகன் கண்ணா. நகுல், பாட்டி கூட இருக்குறதால அவனைப் பார்க்கும் போது கொஞ்சம் அதிகமா கொஞ்சுறார். அதுக்காக உன்மேல பாசம் இல்லாம போய்டுமா?” என்று மகனை செல்லமாய் அதட்டியிருந்தார்.

புரிந்தும் புரியாத வயதில் ”சரிம்மா” என்று தலையை ஆட்டியிருந்தான் கார்த்தி.

ரத்னாவின் மனைவி தான் தொடர்பில் இருந்த நபருடன் சென்று விட்டார். ரத்னா இப்போது தனிக்கட்டை. குடியுடன் போதைப் பழக்கமும் சேர்ந்திருந்தது.

தன் வாழ்க்கை இப்படி மாறியிருக்க, தயாளன் மனைவி குழந்தைகள் என்று சந்தோஷமாக வாழ்வதை அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. முடிந்த அளவு தயாளனை குடிக்க வைக்க முயற்சி செய்தார்.

தயாளனின் கெட்ட நேரமோ என்னமோ, ஒழுக்க சீர்கேட்டை ஒரு நாளும் ஏற்றுக் கொள்ளாதவர், ரத்னாவின் உபயத்தில் குடிக்க ஆரம்பித்திருந்தார். ஒரு பேய் உடலில் புகுந்தால் ஊரில் உள்ள பேயெல்லாம் புகுந்து விடும் என்பதைப் போல அவரே ஒதுக்கி வைத்திருந்த எண்ணங்கள் மீண்டும் தலை தூக்க ஆரம்பித்தது.

“பொண்டாட்டிங்க எல்லாம் மோசம் தயா. நாம அவங்களுக்காக நாள் முழுக்க கஷ்ட்டப் படுறோம். அவங்க நம்மளை இங்குட்டு அனுப்பிட்டு அங்க வேற ஒருத்தன் கூட சந்தோஷமா இருக்காளுங்க” என்று தினமும் வேதம் ஓதுவதைப் போல் ஓத, தயாவின் மனம் ஒரு கட்டத்தில் அதையே நம்பத் தொடங்கியது. அதன் விளைவு குடும்பத்தில் தினமும் பிரச்சனை. பிரச்சனை முற்றினால் அடி என்ற நிலைமைக்கு ஆனது.

குடித்து விட்டு வரும் தயாளன், வீட்டில் சிறு தூசியைக் கண்டாலும் அதை காரணமாய் வைத்து அகல்யாவை அடிக்க, இதையெல்லாம் பார்த்திருந்த கார்த்தி, அவர் வருவதற்கு முன்பே தன்னால் முடிந்த அளவு அகல்யா சுத்தம் செய்த அனைத்தையும் மீண்டும் சுத்தம் செய்து விடுவான். தன் அம்மா அடி வாங்குவதை அவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

கணவரின் இந்த திடீர் குடிப் பழக்கம் கண்டு அகல்யாவிற்கு வருத்தமும் வேதனையும் எழத்தான் செய்தது. அதிலும் கார்த்தி அனைத்தையும் உன்னிப்பாய் கவனிக்கிறான் என்று அறிந்தவருக்கு அதை தயாளனிடம் சொல்லவும் பயம்.

“நாம லட்சுமி பாட்டி வீட்டுக்கு போய்டுவோம்மா. அப்பா வரவர சரியில்லை. நான் பெரிய பையனாகி உங்களைப் பார்த்துக்கிறேன். நகுலையும் கூட்டிட்டுப் போவோம்” என்றான் ஒரு நாள் பெரிய மனுஷனாய்.

“அப்பா அப்படியெல்லாம் இல்லை அகன் கண்ணா. அவருக்கு ஏதோ பிரச்சனை போல, அதான் இப்படி நடந்துக்கிறார். அப்பா முன்னெல்லாம் எப்படி இருந்தாருன்னு உனக்குத் தெரியும் தான? இனி இப்படி எல்லாம் பேசக் கூடாது. யார்கிட்டயும் அப்பாவைப் பத்தி தப்பா சொல்லவும் கூடாது” என்று மகனை அதட்டியிருந்தார் அகல்யா. அது கார்த்தியின் மனதில் பதிந்து போனது.

தன் கணவரின் நடத்தைகள் பிறந்த வீட்டிற்கு தெரிவதில் அவருக்கு உடன்பாடு இல்லை. பிறந்த வீட்டில் கணவரின் கௌரவம் கெட்டுவிடும் என்று எண்ணி அமைதியாய் இருந்து விட்டார்.

அகல்யாவின் பொறுமை தயாளனுக்கு சாதகமாய் அமைந்து விட, வாழ்க்கை நரகமாய் மாறத் தொடங்கியது. அதை ஒவ்வொரு நாளும் உடன் இருந்து பார்த்துக் கொண்டிருந்த கார்த்தி சிறிது சிறிதாக மனதளவில் பாதிப்படைந்து கொண்டிருந்தான்.

அகல்யாவைக் காப்பவன் தான் மட்டுமே என்பதைப் போல் எந்நேரமும் அவரை விடாமல் அவருடனேயே இருந்தான் கார்த்திகேயன்.