அத்தியாயம் 18:

அகனின் முகம் இறுகிப் போனதைப் பார்த்து வாயை மூடிக் கொண்டாள் தாரா.சில விஷயங்களைப் பேசினால் அவன் தன் இயல்பை இழக்கிறான் என்பது வரையிலும் அவளுக்கும் புரிந்து தான் இருந்தது. ஏனோ அவனின் முகம் சற்று கசங்கினாலும் அவளால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை.

அவள் அவனையே பார்த்துக் கொண்டிருக்க, அவனோ லேப்டாப் திரையை வெறித்திருந்தான்.சில நிமிடங்கள் மௌனத்தில் கரைய சட்டென்று லேப்டாப்பை மூடியவன், இரண்டு கைகளாலும் தலையைத் தாங்கியபடி அமர்ந்துவிட்டான்.

அவனும் நிமிர்ந்து பார்ப்பான், பேசுவான் என்று தாராவும் அவன் எதிரில் சிலையாய் நிற்க, அவளுக்கு கால் வலி எடுத்தது தான் மிச்சம்.

‘இது பர்ஸ்ட் நைட்டா, இல்லை பனிஷ்மென்ட் நைட்டா? நானும் எவ்வளவு நேரம் தான் நிக்கிறது? கொஞ்சமாவது நிமிர்ந்து பார்க்குறானா? கல்நெஞ்சக்காரன்’ என்றாள் கடுப்பாக.

“அவன் நல்லாத்தான் இருந்தான், நீதான் தேவையில்லாததைப் பேசி பஞ்சாயத்தைக் கூட்டி விட்ட” என்றது மனம்.

அவளை நிமிர்ந்து பார்த்தவனின் கண்கள் சிவந்திருக்க, அவன் பார்வையின் மொழி புரியாமல் முதன் முறையாக தவித்து நின்றாள் யுகந்தாரா.

“என்னோட இஷ்யூஸ் எப்பவோ சரியாயிடுச்சு. இடையில வந்த இஷ்யூ இடையில பண்ண ட்ரீட்மென்ட்டால சரியாகிடுச்சு. சரியானதை ஏன் யார்கிட்டயும் சொல்லலைன்னு கேட்டா என்கிட்ட பதில் இல்லை. ஏன்னா? என்கிட்ட யாரும் கேட்கவும் இல்லை. நான் பேசணும்னு யாரும் எதிர்பார்க்கவும் இல்லை. எனக்கு பேச்சு வந்தாலும் இங்க இருக்க யார்கிட்டயும் எனக்கு பேசவும் பிடிக்கலை” என்றான் வெறுமையான குரலில். மறந்தும் பேச்சு போனதற்கான காரணத்தை அவன் சொல்லவில்லை. அதை தாராவும் உணர்ந்திருந்தாள்.

“உனக்கு வேற எதுவும் கேட்கணுமா தாரா?” என்றான். அவன் அழைக்கும் விதத்திலேயே அவன் மன நிலை புரிய, பேச வேண்டாம் என்று மூளை அறிவுறுத்தினாலும், பேசியே ஆக வேண்டும் என்று மனம் அடம் பிடித்தது.

“இப்பவும் எதனால உங்களுக்கு இப்படி ஆச்சுன்னு நீங்க சொல்லவே இல்லை அகன்” என்றாள்.

“நான் ஒரு விஷயத்தை தவிர்க்குறேன்னு சொன்னா, அதை சொல்ல முடியலைன்னு அர்த்தம் தாரா. சில விஷயங்களை நினைச்சாலே நான் நானா இருக்குறது இல்லை. அப்படி ஒரு சூழ்நிலை வந்து எங்க உன்னை கஷ்ட்டப் படுத்திடுவேனோன்னு தான் நான் என்னை கண்ட்ரோல் பண்ணிட்டு இருக்கேன். சடனா ஒரு ரியாக்சன் எனக்குள்ள நடந்துடும். இப்படி எல்லாம் ஆகணும்னா சொல்லு, நான் சொல்றேன்” என்றான் தெளிவாக.

அவனுக்கு இருக்கும் பிரச்சனை அவனுக்குத் தெரிந்து தான் இருக்கிறது. கோபத்தில் அவன் ஹைப்பர் ஆவதும் அவனுக்குத் தெரிந்து தான் இருக்கிறது. எங்கே அதை தாராவிடம் காட்டி விடுவானோ என்று தன்னை அடக்கிக் கொள்கிறான் என்பதைப் புரிந்து கொண்ட தாராவிற்கு என்ன சொல்வதென்று புரியவில்லை.

அவன் அவளையே பார்த்திருக்க, அவன் பார்வையின் கேள்வியில் திகைத்தாள் தாரா.

“அகன்” என்றவளுக்கு வார்த்தைகள் வரவில்லை.

“எதையும் யோசிக்காம, எதையும் எதிர்பார்க்காம, என்னோட பிரச்சனை தெரிஞ்சும் என்னை எனக்காகவே ஏத்துகிட்ட ஒரே ஜீவன் நீதான்னு நினைச்சேன் தாரா. ஆனா, நீயும் மத்தவங்களை மாதிரிதான்னு சொல்லாம சொல்லிட்ட தாரா” என்றவனின் முகம் கசங்கிப் போனது.

அதுவரை அவனின் வேதனை கண்டு அமைதியாய் இருந்த தாராவிற்கு அவனின் இந்த குற்றச் சாட்டைக் கேட்டு மனம் வெம்பிப் போனது. நிதானமாய் பேசிக் கொண்டிருந்தவளின் பொறுமை எல்லாம் காற்றில் பறந்திருந்தது.

“மருந்து சாப்பிடாம எந்த நோயும் குணமாகாது அகன். அப்படி மருந்து எடுத்துக்கனும்னா முதல்ல என்ன நோய் இருக்குன்னு தெரியனும். எதுவுமே தெரியாம எப்படி மருந்து கொடுக்க முடியும்? எப்படி நோய் தான் சரியாகும்?” என்றாள் கோபமாய்.

“ஐ ஆம் நாட் அ பேஷன்ட்” என்றான் இறுகிய குரலில்.

“யா ஐ நோ! யு ஆர் நாட் அ பேஷன்ட். பட் யு ஆர் மை ஹஸ்பண்ட். மத்தவங்களை மாதிரி உங்க மேல அக்கறைப்படாம என்னால இருக்க முடியாது” என்றாள் கோபமாய்.

“இப்ப என்ன? என்னோட பிராப்ளம் என்னன்னு  தெரிஞ்சாகனும் உனக்கு?” என்றான் அகன்.

“ஆமா”

“பிரச்சனை என்னன்னு சொல்ல முடியாது. ஆனா என்னோட எல்லா பிரச்சனைக்கும் ஒரு மருந்து இருக்கு. அது என்னன்னு எனக்கே தெரியும்” என்றான்.

“என்ன மருந்து” என்றாள் கடுப்பாக.

“நீதான்” என்றான் பட்டென்று.

அவன் பதிலில் அவள் திகைத்து விழிக்க,

“அகன்”

“எஸ் தாரா, யு ஆர் த பெஸ்ட் மெடிசன் பார் மீ” என்றான் ஆழ்ந்த குரலில்.

“அகன்” என்றவளுக்கு வார்த்தைகளே வரவில்லை.

“ஹார்ட் பீட்டை செக் பண்ண என்னோட ஹார்ட்டை கேட்டாங்க ஒரு டாக்டர் மேடம். அவங்களைப் பார்த்திங்களா மிஸ்ஸஸ் அகன் கார்த்திகேயன்?” என்றவன் சட்டென்று அவளை இழுத்து தன் மடியில் அமர வைத்திருந்தான். அவன் கேள்வியிலும் செயலிலும் அவள் தான் படபடத்திருந்தாள்.

அவளின் பதட்டத்தை கண்டு சிரித்துக் கொண்டவன்,

“டாக்டர் மேடம் வெறும் வாய் தான் போலயே? இதுக்கே பாடி இப்படி ஷிவர் ஆகுது?” என்றான் சன்ன சிரிப்புடன்.

அவள் எதுவும் பேசாமல் தன் விரல்களை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தாள்.

அவள் காதுமடல்களை தீண்டிச் சென்ற அவன் இதழ்கள் மீண்டும் அவளை அழுத்தமாக ‘யுகா’ என்று அழைக்க, அந்த அழைப்பில்  எக்குத் தப்பாய் துடிக்கத் தொடங்கிய இதயத்தை கைகளை வைத்து அழுத்திக் கொண்டாள்.

“போற போக்கை பார்த்தா டாக்டரோட  ஹார்ட்பீட்டை தான் செக் பண்ணனும் போல. செக் பண்ணுவோமா?” என்றவன் புத்தம் புதிதாய் ஒரு ஸ்டெதஸ்கோப்பை எடுக்க,

“வாவ்..! இது ரொம்ப அழகா இருக்கு அகன். டாப் பிராண்ட் ஸ்டெதஸ். இதையும் எனக்காக வாங்குனிங்களா? அதான் ஏற்கனவே ஒன்னு கிப்ட் பண்ணிங்களே” என்றவளின் விழிகள் ஆர்வமாய் அதையே ஆராய்ந்து கொண்டிருக்க, அகனின் விழிகளோ மனைவியை ஆராய்ந்து கொண்டிருந்தது.

“ஏன் இப்படி பார்க்குறிங்க?” என்றாள்.

“இப்போ என் ஹாட் பீட்டை செக் பண்ணிக்கோ யுகா. நீ செக் பண்றியா இல்லை நான் பண்ணட்டுமா?” என்றவன் புருவத்தை ஏற்றி இறக்க,

“இங்க நான் டாக்டரா இல்லை நீங்க டாக்டரா?” என்றாள் முறைத்தபடி.

“எனக்கு எப்பவும் நீ தான் டாக்டரம்மா” என்றவன்,

“யுகா பீலிங் சோ டயர்ட். சோ எனக்குத் தூங்கனும்” என்றான் அகன்.

“தூக்கம் வந்தா தூங்க வேண்டியது தானே?” என்றாள் தன் உணர்வுகளை மனதிற்குள் மறைத்தபடி.

“இல்ல..நான் தூங்கிப் போக.. எங்க இதுக்கும் நான் சரிப்பட்டு வருவேனா மாட்டேனான்னு நீயா குழப்பிக்கக் கூடாது பாரு. அதான் இப்பவே சொன்னேன்” என்றவனை வெட்டவா குத்தவா என்று பார்த்து வைத்தாள் தாரா.

“போடாங்” என்று வாய் வரை வந்த வார்த்தையை அடக்கியவள், சட்டென்று அவனிடமிருந்து விலகி உறங்குவதற்கு ஆயத்தமாக,

“என்ன பண்ற நீ?” என்றான்.

“பார்த்தா தெரியலை, தூங்கப் போறேன். பிளாஸ்க்ல பால் இருக்கு. வேணுமா குடிச்சுக்கோ அகன்” என்றாள்.

“எனக்கு என்னோட பெட்டை ஷேர் பண்றது பிடிக்காது” என்றான் சிரிப்பை அடக்கி.

“ரொம்ப சந்தோசம்! ஷேர் பண்ண இஷ்ட்டம் இல்லைன்னா கீழ போய் படு. நீ சொன்ன உடனே கண்ணீர் சிந்தி தரையில பாய் விரிச்சு.. தூங்காம உட்கார்ந்து தூங்குற உன்னை ரசிக்கிற அளவுக்கு எல்லாம் நான் நல்லவ இல்லை. இஷ்ட்டம்னா மேல தூங்கு. இல்லைன்னா தரையில தூங்குடா பம்பரக்கட்டை மண்டையா” என்றவள் பேசிய பிறகு தான் நாக்கைக் கடிந்து கொண்டாள்.

அவன் முறைக்க,

“டங்க் சிலிப்பாகிடுச்சு அகன்” என்றாள் அசடு வழிந்தபடி.

அவளின் வழிசலை உள்ளுக்குள் ரசித்தவனின் முகம் சற்று தயக்கத்தைக் காட்டியது. “யுகா.. அது.. நான்” என்று திணறியவன் சொல்ல வந்ததை சொல்ல முடியாமல் தவிக்க, அவனை கேள்வியாய் பார்த்திருந்தாள் தாரா.