தூங்கி எழுந்ததில் கலைந்திருந்த தோற்றமும், அகனின் நிலை கண்டு பதறிய முகமுமாய் பார்ப்பதற்கே பரிதாப நிலையில் இருந்தாள் யுகந்தாரா. தன்னுடைய பயம் பதட்டத்தை எல்லாம் வெளிக்காட்டிக் கொண்டது என்னவோ ஒரு நிமிடம் தான். சட்டென்று அனைத்தையும் தனக்குள் மறைத்தவள் தந்தையைப் பார்க்க, அவரின் பார்வையில் மகளின் வாழ்க்கை மீதான பரிதவிப்பே மிஞ்சி நின்றது.
“நான் கூட லேசான பைத்தியம்னு நினைச்சேன் சித்தி. இவன் என்ன முத்துன பைத்தியமா இருக்கான்” என்றாள் மகி வேண்டுமென்றே. தாராவிற்கு கேட்க வேண்டும் என்றே அவள் பேசியிருந்தாள்.
தயாளனின் அருகில் வந்தவளோ,
“இப்போ உங்களுக்கு சந்தோஷமா அங்கிள்? உங்களுக்குள்ள என்ன பிரச்சனைன்னு எனக்கு தெரியாது. ஆனா அவர் உங்களால தான் இப்படி ஹைப்பர் ஆகுறார். அது தெரிஞ்சும் நீங்க அதையே திரும்பப் பண்ணினா என்ன அர்த்தம்?” என்றாள் கோபத்துடன்.
“தாரா இதையெல்லாம் அப்பறம் பேசிக்கலாம்மா. கார்த்தியை பாரும்மா” என்றார் தாமரை தவிப்புடன்.
சுற்றி நின்றிருந்த அனைவரும் அவனைப் பார்த்த விதத்தை ஏனோ அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. கண்கள் உடைப்பெடுக்க தயாராய் இருந்த போதும் கண்ணீரை உள்ளுக்குள் இழுத்துக் கொண்டவள், வரவழைத்துக் கொண்ட தைரியத்துடன் அவனருகில் சென்றாள்.
சுவருக்கும் அவன் கைக்கும் இடையில் சென்று நின்றவளோ எதுவும் பேசாமல் அவனையே பார்த்துக் கொண்டு நிற்க,
“தாரா மூவ், ஐ ஆம் நாட் ஸ்டேபிள் நவ்’ என்றான் கன்றி சிவந்த விழிகளுடன்.
அவளோ அடமாக அப்படியே நிற்க,
“தாரா நான் தான் சொல்றேன்ல, மூவ்” என்றான் கோபமாய்.
“ஏன் இப்படி பைத்தியக்காரத்தனமா நடந்துக்கிறிங்க அகன்?” என்றாள் நேர்பார்வையாய்.
“ஏய்!! நான் பைத்தியமா? சொல்லு என்னைப் பார்த்தா அப்படி தெரியுதா உனக்கு?” என்றான் கடுமையான குரலுடன்.
“எனக்கு அப்படி தெரியலை. ஆனா நீங்க நடந்துக்கிறதைப் பார்த்து, இதோ சுத்தி இருக்குற எல்லாரும் உங்களை அப்படித்தான் நினைக்குறாங்க அகன்” என்றவளின் விழிகளில் இருந்து கண்ணீர் உடைப்பெடுத்திருந்தது.
“தாரா”
“எனக்கு பயமா இருக்கு அகன். நீங்க பேசாம இருந்தப்போ கூட நான் இப்படி பயப்படலை. ஆனா உங்க குரலும் அதுல தெரியற ஆத்திரமும் நிஜமாவே எனக்கு பயமா இருக்கு” என்றாள்.
“தாரா” என்றவனின் கசங்கிய முகத்தைப் பார்த்தவளுக்கு அவனின் வேதனையைப் பொறுக்க முடியவில்லை. கண்ணீர் தன் வேலையை செவ்வனே செய்ய,
இத்தனை நாட்கள் சிரித்துக் கொண்டு சந்தோஷமாய் இருந்தவளின் கண்ணீர் அவனை அசைத்துப் பார்த்தது. எதற்கும் கலங்காதவளின் கலங்கிய தோற்றம் கண்டு அவன் நிதானத்திற்கு வர முயற்சி செய்ய, அது முயற்சியாய் மட்டுமே இருந்தது. அவனால் முடியவில்லை.
“தாரா இப் யு டோன்ட் மைன்ட்” என்றவன் கையை விரிக்க, அவளுடைய அணைப்பு வேண்டும் என்று கேட்டவனை நிமிடம் கூட தாமதிக்காமல் கட்டிக் கொண்டாள்.
“இப்படியெல்லாம் பண்ணாதிங்க அகன். எல்லாரும் உங்களைப் பைத்தியம் மாதிரி பார்க்குறதை என்னால தாங்கவே முடியலை, பிளீஸ்” என்றவளின் குரலில் அவன் நிதானம் கொஞ்சம் கொஞ்சமாய் திரும்ப, அவள் கண்ணீரோ அவன் சட்டையை நனைத்திருந்தது.
“உன்னை இன்னைக்கே ரொம்ப அழ வச்சுட்டேன் இல்ல. நீ ஒரு ஏஞ்சல் தாரா. நான் உனக்கு ஆப்ட்டானவன் கிடையாது” என்றான் வெற்றுக் குரலில்.
அவனின் கைப்பிடியில் இருந்து விலகி அவனை முறைத்தவள், எதுவும் பேசாமல் வேகமாய் அறைக்கு செல்ல,
“தாரா” என்றவன் அவள் பின்னாலேயே சென்றிருந்தான் அகன் கார்த்திகேயன்.
“என்னடா நடக்குது இங்க?” என்ற ரீதியில் அனைவரும் பார்த்துக் கொண்டு நிற்க,
“இங்க பாருங்க பாட்டி, இதுக்கு முன்னாடி எப்படியோ? இப்போ அகன் என்னோட புருஷன். அவரை இப்படி பைத்தியம் மாதிரி பார்க்குறதை நான் அக்சப்ட் பண்ணிக்கவே மாட்டேன். அவருக்கு இருக்குற பிரச்சனை தெரிஞ்சும், அவரைத் தூண்டி விடுற மாதிரி நடந்துக்கிறதை என்னால அக்சப்ட் பண்ணிக்க முடியாது. உங்களுக்கு விருப்பம் இல்லைன்னா சொல்லிடுங்க. நாங்க எங்க வீட்லயே ஸ்டே பண்ணிக்கிறோம். அவருக்கு உங்க பிராப்பர்ட்டி எதுவும் தேவையில்லை. எங்க வாழ்க்கையை பார்த்துக்க எங்களுக்குத் தெரியும்” என்றவள்,
“அன்ட் யு..! இங்க நடக்குற எல்லா பஞ்சாயத்துக்கும் நீங்களும் வசந்தி சித்தியும் தான் காரணம். அது எனக்குத் தெரியாம இல்லை. உங்க நடிப்பெல்லாம் வேற யார்கிட்டையாவது வச்சுக்கோங்க. இது தான் பர்ஸ்ட் அன்ட் லாஸ்ட் வார்னிங்” என்றவள்,
“அப்பறம் வசந்தி சித்தி, நானும் இந்த வீட்டுக்கு வந்ததுல இருந்து உங்க பேச்சைக் கவனிச்சுகிட்டே தான் இருக்கேன். அப்போ உங்க குடும்ப விஷயத்துல தலையிடக் கூடாதுன்னு அமைதியா இருந்தேன். இப்போ அப்படி இருக்க முடியாது பாருங்க. எப்பப் பாரு இந்த சொத்தை அகன் தூக்கிட்டுப் போற மாதிரியே பேசிட்டு இருக்கீங்க. நீங்க என்ன சொல்றது? நீங்களே முடியாதுன்னு சொன்னாலும் சொத்துல ஒருபாதி அகனோட அம்மாவுக்கு போய் தான் ஆகணும். அதாவது மிஸ்டர் நகுலனுக்கும், அகனுக்கும் உங்க உங்க கணவர் வீட்டு சொத்துல முழு உரிமையும் இருக்கு. சட்டமும் அதைத்தான் சொல்லுது. சட்டப்படி போனா உங்களால எதுவும் செய்ய முடியாது. அதை மறந்துடாதிங்க” என்று நிறுத்தியவள்,
“ஆனா அது எதுவும் அகனுக்குத் தேவையில்லை. நீங்க இப்படியே பேசிட்டு இருந்தா ஒரு நாள் கண்டிப்பா அதைப் பத்தியும் யோசிப்பேன்” என்று ஒரே போடாய் போட்டாள்.
“டாடி ஈவ்னிங் நம்ம வீட்டுக்கு கிளம்பலாம்” என்றவளை மற்றவர்கள் அதிர்ந்து பார்க்க,
“என்னம்மா தாரா இப்படி சொல்ற?” என்றார் லட்சுமி.
“இங்க இருக்குறது சரி வராது பாட்டி. அகனை இன்னும் ஏதாவது ட்ரிகர் பண்ணி குத்திக் கிழிச்சுட்டே இருப்பிங்க. அது அவரோட பிசிகல் ஹெல்த்துக்கும் நல்லது இல்லை, மென்டல் ஹெல்த்துக்கும் நல்லது இல்லை” என்றாள் தாரா.
“இனி கண்டிப்பா இப்படி நடக்காது தாரா. நீங்க முறைக்கு உங்க வீட்டுக்கு போயிட்டு வந்துடுங்க. எனக்காகம்மா..! அவன் இன்னும் எத்தனை நாள் இங்க இருப்பான்னு தெரியாது?” என்ற லட்சுமியைப் பார்க்கவும் தாராவிற்கு பாவமாய் இருந்தது.
“அது அகனோட முடிவு தான் பாட்டி” என்றவள், ஏற்கனவே அவள் இருந்த அறைக்குள் நுழைந்து கொண்டாள். வேணி என்னவோ ஏதோ என்று அவள் பின்னால் சென்றார்.
அவள் பேசிய அனைத்தையும் மேலிருந்து பார்த்துக் கொண்டிருந்தவன், அதன் பிறகே அறைக்குள் சென்றிருந்தான்.
“இன்னைக்கு புடவை தான். வேற டிரஸ் எல்லாம் வாய்ப்பே இல்லை. இன்னைக்கு ஒரு நாளாவாது பொண்ணா லட்சணமா இரு” என்றவர் அவளுக்குத் தேவையானதை எடுத்துக் கொடுத்திருந்தார்.
“பர்ஸ்ட் எய்ட் பாக்சும் குடுங்க” என்று எடுத்துக் கொண்டவள், அகனின் அறைக்கு சென்றாள்.
“எல்லாரும் மேரேஜ் முடிச்சு பர்ஸ்ட் நைட்டுக்கு போனா. நான் மட்டும் தான் பர்ஸ்ட் எய்ட் பண்ண போறேன். எல்லாம் என் நேரம்” என்று முணுமுணுத்துக் கொண்டே வந்தவளைப் பார்த்தவனுக்கு குற்ற உணர்ச்சியாய் இருந்தது.
“ஐ யாம் சாரி தாரா” என்றான்.
“நீங்க தான் எனக்கு ஆப்ட்டான பெர்சன் இல்லையே? அப்பறம் எதுக்கு என்கிட்ட சாரி எல்லாம் கேட்டுகிட்டு?” என்றவள் அவன் முகம் பார்ப்பதைத் தவிர்த்து, அவனுடைய காயத்தை சட்டென்று அழுத்திவிட்டாள்.
“ஸ்ஸ்” என்றவன் கையை உதறிக் கொள்ள,
“ஏன் அப்படி ஆங்காரமா அடிக்கும் போது தெரியலையா வலி எல்லாம்?” என்றாள் கோபமாய்.
“அப்போ தெரியலை. இப்பவும் தெரியாது. நீ பக்கத்துல இருக்குறதால தான் வலி தெரியுது போல” என்றவனின் குரலில் என்ன இருந்தது?
அவள் அவனைப் புரியாமல் பார்க்க,
“பொதுவா அடிபட்ட பிள்ளைங்களுக்கு அப்போதைக்கு தெரியாத வலி எல்லாம் அம்மாவைப் பார்த்தா தான் வலிக்கும்ன்னு சொல்லுவாங்க. தாயைக் கண்டா தான் தலையெல்லாம் நோகும்னு பாட்டி அடிக்கடி சொல்ற மாதிரி. அது மாதிரித் தான் இதுவும்” என்றான், காயத்தை ஆராய்ந்து கொண்டே.
அவனின் வார்த்தைகள் அவளைத்தான் மேற்கொண்டு எதுவும் செயல்பட விடவில்லை.
“எனக்குப் பிடிக்கலை” என்றான்.
“என்ன பிடிக்கலை?” என்றாள் கேள்வியாய்.
“நீ இப்படி இருக்குறது எனக்கு சுத்தமா பிடிக்கலை. பழைய தாரா தான் எப்பவும் அழகு” என்றான்.
“எனக்குக் கூடத்தான் நீங்க இப்படி இருக்குறது பிடிக்கலை. நான் பார்த்த அகன் கார்த்திகேயன் நீங்க இல்லையே?” என்றாள்.
“சோ மேடம்க்கு என்னைப் பிடிக்கலை” என்றான் தன் இயல்புக்குத் திரும்பி.
“ஆமா, உன்னை எனக்கு சுத்தமா பிடிக்கலை” என்றாள்.
“என்ன சில நேரம் மரியாதை அருவியா கொட்டுது, சில நேரம் தாண்டவமாடுது” என்றான்.
“எப்ப வாய்ல எது வருதோ அது தான். முன்ன இருந்து அப்படியே பழகிடுச்சு” என்றாள்.
“பிடிக்காத எனக்கு எதுக்கு இந்த பர்ஸ்ட் எய்ட் எல்லாம்” என்றவன் கையை விலக்கிக் கொள்ள,
“முடிஞ்சுடுச்சு” என்றாள் கோபமாய்.
“தெரிஞ்சதுனால தான் கையை எடுத்தேன்” என்றவன்,
“இப்போ நான் போய் குளிக்கலாமா?” என்றான்.
“இப்பவா?” என்றாள்.
“எஸ்..! என்னால இந்த பிளட் எல்லாம் பார்த்துட்டு அப்படியே இருக்க முடியாது” என்றான். அவளுக்கு இருந்த டென்ஷனில் அவனின் ஓசிடி பிரச்சனையை மறந்திருந்தாள்.
“சாரி அகன், இதெல்லாம் இப்போ கிளீன் பண்ணிடுறேன்” என்றவள் அனைத்தையும் வேகமாய் எடுத்து வைக்க, அவளைத் தடுத்தவன், அவனே அனைத்தையும் செய்து முடித்தான்.
அவன் செய்து முடிக்கும் வரை யோசனையாய் பார்த்தவள், அவன் குளிக்க செல்ல எத்தனிக்கும் போது அவனை நிறுத்தியிருந்தாள்.
“அகன் நான் ஒன்னு சொன்னா என்னைத் தப்பா எடுத்துக்க மாட்டிங்களே?” என்றாள்.
“என்ன உன்கூட நான் சைக்கியாட்ரிஸ்ட்டைப் பார்க்க வரணுமா?” என்றான். அவன் குரலில் இருந்தது கேலியா இல்லை இலகுத் தன்மையா என்று அவளுக்குப் புரியவில்லை.
“உங்களுக்கு ஓகேன்னா மட்டும் தான்” என்றாள்.
“ஆக, நீயும் என்னைப் பைத்தியம்னே முடிவு பண்ணிட்ட இல்லையா? என்றான்.
அவள் அதிர்ந்து அவளைப் பார்க்க,
“இப்போ தான் ரொம்ப வலிக்குது தாரா” என்றவன் குளியல் அறைக்குள் நுழைந்து கொண்டான். அவள் தான் விக்கித்தபடி நின்றிருந்தாள்.