எனக்கென வந்த தேவதையே

அத்தியாயம் 12

மறுநாள் காலை யாதவி ஏழு மணிக்கெல்லாம் எழுந்து கொண்டவள், கணவனும் மகனும் உறங்கிய அறைக்கதவை சாற்றிவிட்டு, வீட்டை சுத்தம் செய்து முடித்து, குளித்துவிட்டு வந்தாள். முதலில் பாலைக் காய்ச்சி காபி போட்டு குடித்தவள், பிறகு பூரிக்கு மாவு பிசைந்து வைத்துவிட்டு, உருளைக் கிழங்கு மசாலாவும் செய்து வைத்தாள்.

எட்டரை மணிக்கு முதலில் எழுந்த சந்தோஷ் லிங்கா அருகில் படுத்திருப்பதைப் பார்த்ததும் ஆச்சர்யமாகி அறையில் இருந்து வெளியே வந்தவன், தன் அம்மாவை அழைத்து வந்து காட்டினான். முன்தினம் அவன் இங்கே தான் உறங்கினான் என்பது எல்லாம் நினைவு இல்லை.

அவங்க தூங்கட்டும்.” என்றவள் மகனை பல் விளக்கி, பாத்ரூம் அழைத்துச் சென்றவள், அப்படியே அவனைக் குளிக்கவும் வைத்தாள்.

சந்தோஷ் லிங்கா இருந்த அறைக் கதவை திறந்து அவள் எழுந்துவிட்டானா என அடிக்கடி பார்த்தபடி இருந்தான். யாதவி மகனுக்குக் குடிக்கப் பால் கொடுத்துவிட்டு அவள் வேலையைப் பார்க்க… சந்தோஷ் லிங்காவின் அருகே சென்று உட்கார்ந்து விளையாடிக் கொண்டிருந்தான்.

உறக்கம் களைந்து கண்ணைத் திறந்த லிங்கா, அவனைப் பார்த்ததும் அனைத்துக் கொண்டவன், “குட் மார்னிங் குட்டி. நீங்களும் சொல்லுங்க.” என்றதும், அவனும் குட் மார்னிங் என்றான்.

நீங்க இவ்வளவு சீக்கிரம் குளிச்சு ரெடி ஆகிடீங்களா… குட் பாய்.” என்றவன், அவனைத் தூக்கிக் கொண்டு வெளியே வந்தான்.

இந்த வீட்டில் படுக்கை அறையியோடு ஒட்டி குளியல் அறை இல்லை. இரண்டு அறைகளுக்கும் நடுவே பொதுவாகத்தான் குளியல் அறை இருந்தது. அதற்கு முன் வாஷ்பேஸின் இருக்கும்.

யாதவி கணவனுக்குப் புதிய பல் விளக்கும் பிரஷ்ஷை எடுத்து வந்து கொடுக்க… தேங்க்ஸ் என்றபடி பெற்றுக் கொண்டான்.

பல் துலக்கி வந்தவன், அவனே சமையல் அறைக்குச் சென்று தண்ணீர் எடுத்து குடிக்க… “உங்களுக்கும் சேர்த்துதான் டிபன் பண்றேன். காலையில இங்கேயே சாப்பிடுங்க.” என்றவள், அவனுக்குக் காபி கொடுக்க… அதைப் பருகியபடி, “என் டிரஸ் இங்க இல்லையே… நான் அங்க போய்க் குளிச்சிட்டு வரேன்.” என்றான்.

நீங்க சென்னைக்குக் கொண்டு வந்த பேக் இங்கதான் இருக்கு. அதுல இருந்த உங்க டிரஸ் எல்லாம் எடுத்து துவைச்சு அங்க அலமாரியில வச்சிருக்கேன்.” என்றதும், “ஓ… சூப்பர்.” என்றவன், அதிலுருந்து அவனுக்குத் தேவையானது எடுத்துக் கொண்டு குளிக்கச் சென்றான்.

லிங்கா பாத்ரூம் உள்ளே இருக்க… சந்தோஷ் காவலுக்கு நிற்பவன் போல வெளியவே நின்றிருந்தான். இத்தனை நாள் அம்மா மகன் இருவர் மட்டுமே தானே இருந்திருக்கிறார்கள், இப்போது புதிதாக ஒருவர் அவர்களுடனே இருப்பது, அவனுக்கு வித்தியாசமாகத் தெரிந்தது.

லிங்கா குளித்து விட்டு வந்ததும், அவன் உடை அணிந்து கிளம்பும் போதும் சந்தோஷ் அவனுடனே இருந்தான். அவன் கேட்ட எண்ணெய், சீப்பு எல்லாம் அவனே எடுத்துக் கொடுத்தான்.

பரவாயில்லையே எங்க குட்டிக்கு எல்லாமே தெரியுதே…” எனச் சொன்னதும் சந்தோஷ் அவனைப் பார்த்து சிரிக்க… லிங்கா அவனைத் தூக்கிக் கொண்டு அறையில் இருந்து வெளியே வந்தான்.

யாதவி சூடாகப் பூரி சுட்டு எடுத்து வந்தவள், கணவன் மகன் இருவருக்கும் பரிமாற… சந்தோஷுக்கு பூரி மிகவும் பிடிக்கும். அவனே எடுத்து உண்டான்.

அவர்களுக்குப் பரிமாறிவிட்டு யாதவி தனக்கும் எடுத்துக் கொண்டு வந்து உட்கார… மூவரும் சேர்ந்து உண்டனர்.

நீங்களும் பரத்தும் சின்ன வயசுல இருந்து ப்ரண்ட்ஸா?” யாதவி கேட்க,

இல்லை… நான் சென்னையில லா காலேஜ் படிக்கும் போது எனக்குச் சீனியர் பிரபு… அவன் மூலமாதான் நானும் வினோத்தும் அங்க சேர்ந்தோம். எங்களுக்கு ஜூனியர் பரத். நாங்க எல்லாம் ஹாஸ்ட்டல்ல ஒண்ணா இருந்தோம். அப்போதான் ரொம்ப க்ளோஸ் ஆனோம். பரத் படிச்சி முடிச்சு அங்கேயே செட்டில் ஆகிட்டான்.”

மூவரும் உண்டு முடித்ததும், “மதியம் என்ன சமைக்கப் போற? நீ அசைவம் சாப்பிடுவ தான.” லிங்கா கேட்க…

நான் சாப்பிடுவேன் தான். ஆனா இவனுக்கு இன்னும் கொடுக்க ஆரம்பிக்கலை. அதனால சமைக்க மாட்டேன். நான் அம்மா வீட்டுக்குப் போனா சாப்பிடுவேன். முட்டை மட்டும் தான் இவனுக்குக் கொடுத்திருக்கேன்.” என்றாள்.

எனக்கு ஒரு சந்தேகம். உண்மையாவே சந்தோஷுக்காகத் தான் பார்க்கிறியா? இல்லை உனக்குச் சமைக்கச் சோம்பேறித்தனமா?” என்று கேட்டவனை யாதவி முறைக்க… சும்மா விளையாட்டுக்கு என்றவன், சந்தோஷை அழைத்துக் கொண்டு வெளியில் சென்று விட்டான்.

சிறிது நேரத்தில் திரும்பி வந்து, “இதுல மட்டன் இருக்கு. எலும்பை தனியா சூப் வச்சிடு, முதல்ல இவனுக்குச் சூப்ல இருந்து ஆரம்பிப்போம். நமக்குக் குழம்பு வச்சிடு. நான் போய்ப் பரத்தை பார்த்திட்டு வரேன்.” என்றவன், சந்தோஷை பார்க்க… அவன் அறையில் விளையாட… “சரி நான் போயிட்டு வரேன்.” என்று கிளம்பி விட்டான்.

வருடங்களே கடந்துவிட்டது அவள் அசைவம் சமைத்து. அதனால் யாதவி அவள் அம்மாவை கேட்க… அவர் இப்படிச் செய் என்று சொல்ல.. ஒரு நோட்டை எடுத்து வைத்துக் கொண்டு, “அம்மா, வெங்காயம் எவ்வளவு? தக்காளி எவ்வளவுன்னு கரெக்டா சொல்லுங்க மா… இல்லைனா நல்லாவே இல்லைன்னு நேராவே சொல்லிடுவார்.” என்றதும், லக்ஷ்மி சிரித்தவர், மகளுக்கு விளக்கமாகவே சொன்னார்.

லிங்கா சென்ற போது, வீட்டில் பரத்தும் தீபிகாவும் தான் இருந்தனர். சிவகாமி காலையில் சமைத்து வைத்து விட்டு எதோ கல்யாணத்திற்குச் சென்றிருந்தார்.

என்ன டா எப்படி இருக்கு கல்யாண வாழ்க்கை? எல்லாம் ஓகே வா?” என்று பரத் கேட்க…

எதுவும் ஒகே இல்லை.” என்றதும் பரத்தும் தீபிகாவும் அவனைக் கவலையாகப் பார்க்க…

ஹே… நீங்க நினைக்கிற மாதிரி இல்லை. நான் இங்கேயும் அங்கேயும் இருக்கிறதை பார்த்து, சந்தோஷ் கொஞ்சம் குழம்புறான். அவனுக்கு இன்னும் என்னை அவன் குடும்பத்துல ஒருத்தரா ஏத்துக்க முடியலை.”

சின்னப் பையன் டா.. போகப் போகப் புரிஞ்சிப்பான். நீயும் இங்கேயும் அங்கேயுமா இருக்காம ஒரு இடத்தில இரு.”

ஆமாம் அதுதான் அம்மாகிட்ட பேசத்தான் வந்தேன்.” என்றவன், “அம்மா எங்கே?” என்று கேட்க…

அம்மா கல்யாணத்துக்குப் போறேன்னு நேத்தே சொன்னாங்களே அண்ணா.” என்றாள் தீபிகா.

சிறிது நேரம் சென்று சிவகாமி வந்தவர், முகத்தை அழுவது போல வைத்திருந்தார்.

என்ன மா?” என மகன் மகள் இருவருமே கேட்க…

கல்யாணம் முடிச்சிட்டு உங்க அத்தை கூப்பிட்டாங்கன்னு எங்க அண்ணன் வீட்டுக்கு போனேனா… அப்போ அண்ணன் சொன்னார். தூத்துக்குடிக்கு ஒரு வேலையா போன போது, உன் முன்னால் மாமனாரை பார்த்தாராம்.”

அதுக்கு என்ன?” லிங்கா கேட்க…

அவங்களுக்கு நீ கல்யாணம் பண்ணது தெரியும் போல… அவனுக்குக் குழந்தை பிறக்காதுன்னு தான் குழந்தையோட இருக்கப் பெண்ணைக் கல்யாணம் பண்ணி இருக்கான்னு நக்கலா சொல்லி சிரிச்சாராம் அந்த ஆளு.”

பாரு அந்த ஆளே எப்படிப் பேசுறான். இதெல்லாம் உன்னால தான். நீ ஒழுங்கா ஒரு பெண்ணைப் பார்த்துக் கல்யாணம் பண்ணி இருந்தா இந்தப் பேச்செல்லாம் வருமா?” எனச் சிவகாமி சடவாகச் சொல்ல…

அம்மா, அந்த ஆளை நான் மனுஷனா கூட மதிக்கத் தயாரா இல்லை….அவன் என்ன நினைச்சா எனக்கு என்ன?” என்றான் லிங்கா அலட்சியமாக.

இவ்வளவு பேசுறானே அந்த ஆளு… அவன் பொண்ணுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வச்சானே… அந்தப் பெண்ணுக்கு மட்டும் குழந்தை இருக்கா என்ன?” எனப் பரத் கேட்க…

பரத், அவங்க அளவுக்கு நாம் இறங்க வேண்டாம். வேண்டாம்னு விலகியாச்சு, அந்தப் பெண்ணைப் பத்தி நாம் பேச வேண்டாம்.” என்றதும் பரத்தும், “அவன் மட்டும் என்ன வேணா பேசுவானா?” என்றதற்கு, “அதை விடு அவனுக்காக எல்லாம் நான் எதையும் நிரூபிக்க வேண்டியது இல்லை.” என்றவன்,

உங்களுக்கு உங்க பையனை பேசினா வலிக்குது இல்ல மா… ஆனா நீங்க மட்டும் யாதவியைப் பேசலாம். நாம என்ன செய்யுறோமோ, அதுதான் நமக்குத் திருப்பிக் கிடைக்கும்.” என்றதும் சிவகாமி முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டிருக்க…

அதை விடுங்க,நான் உங்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்.” என்றவன்,

தீபிகா இன்னும் கொஞ்ச நாளால் சென்னைக்குப் போயிடுவா. நான் இப்படி இங்கேயும் எதிர் வீட்டுக்கும் நடத்திட்டு இருக்க முடியாது. உங்களை இங்க தனியாவும் விட முடியாது.” என்றதும் சிவகாமி எதோ சொல்ல வர…

நீங்க தனியா இருந்துப்பீங்க அது தானே… ஆனா நைட் நீங்க தனியா இருக்கிறது தெரிஞ்சு எவனாவது வீட்டுக்குள்ள வந்தா உங்களால என்ன பண்ண முடியும்? கழுத்துல கையிலன்னு நகைகளை வேற மாட்டிட்டு இருக்கீங்க. அதனால நான் சொல்றதை கேளுங்க.”

நாங்க உங்களோட சேர்ந்து இருக்கோம்னு சொல்லலை… நாங்க மாடியில இருந்துக்கிறோம். நான் எப்பவும் போலக் காலையில மதியம் உங்ககிட்ட சாப்பிடுறேன்.”

அதுக்கு மட்டும் நானா… ஏன் உன் பொண்டாட்டி பண்ண மாட்டாளா?”

காலையில எழுந்து எனக்குச் சமைச்சு வச்சிட்டு வேலைக்குப் போக அவளுக்குக் கஷ்ட்டமா இருக்கும்.” என லிங்கா சொல்ல… பரத் சிரிக்க… சிவகாமி முறைத்தார்.

ஆமாம் மா… நீங்க இவ்வளவு பெரிய வீட்ல தனியா இருக்கிறது எல்லாம் முடியாது.” என்று தீபிகாவும் சொல்ல… சிவகாமி அமைதியாக இருக்க… அதையே சம்மதமாக எடுத்துக் கொண்டனர்.

மாடியில சமையல்கட்டு இல்லையே மச்சான். அதுக்கு என்ன பண்ணுவ?” பரத் கேட்க…

வெளியில மாடி இருக்கு இல்ல டா… அதுல ஒரு ஓரத்தில போட்டுக்கலாம். அது ஒன்னும் பிரச்சனை இல்லை.” என்றவன், அப்போதே கைபேசியில் அழைத்து யாரையோ வீட்டுக்கு வர சொன்னான்.