லிங்கா இது போல ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை இருக்கும் பெண்ணை மணப்பது பற்றி உறவுகளிடையே கசிய… ஆளாளுக்குச் சிவகாமியை போன் செய்து விசாரித்தனர். இவரும் அவர்களிடம் புலம்பிக் கொண்டிருந்தார்.
அதற்குத்தான் திருமணத்தைச் சாக்கு வைத்து லிங்காவை இங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
லிங்கா தான் வரும் போதே, தாயிக்கும் மகனுக்கும் வயிற்றை நிரப்பித் தானே அனுப்பினான். மாலை அலுவலகத்தில் இருந்து வந்து மகனை வீட்டிற்குள்ளேயே விளையாட சொல்லிவிட்டு, வீட்டை சுத்தம் செய்துவிட்டு, விளக்கேற்றி சாமி கும்பிட்டு, யாதவி உட்கார்ந்து தான் இருப்பாள், அந்நேரம் வாயில் மணி அடித்தது.
யாதவி அலுவலகத்தில் இருந்து வந்ததை உறுதி செய்து கொண்டு, சிறிது நேரம் விட்டுப் பாக்கியம் அவரது கணவர் மற்றும் சிவகாமி மூவரும் இங்கே வர…
மேலே இருப்பது போலக் கீழேயும் சுற்றி கிரில் வைத்த வராண்டா இருக்கும். அங்கே தான் மாடிக்குச் செல்லும் வழி. அதனால் ஜெயந்தி வந்துதான் கதவை திறந்து விட்டார். அவரிடம் எதுவும் சொல்லாமல், இவர்கள் மாடி ஏற, இவர்கள் எதோ பேசத்தான் செல்கிறார்கள் என்று புரிந்து கொண்டு, கணவரிடம் சென்று சொல்லிவிட்டு, பின்னாடியே ஜெயந்தியும் வந்துவிட்டார்.
யாதவிக்கும் அவர்கள் எதோ பேச வந்திருக்கிறார்கள் என்று புரியாமல் இல்லை. வந்தவர்களை உள்ளே அழைத்து உட்கார சொல்லி, தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தாள்.
ஹாலில் சோபா செட் எல்லாம் இல்லை. மகன் விளையாட இடம் வேண்டும் என்று இரண்டு சேர் தான் போட்டு வைத்திருப்பாள். லிங்காவின் மாமா சேரில் உட்கார்ந்துகொள்ள.. பெண்கள் அவள் விரித்த பாயில் உட்கார்ந்து கொண்டனர்.
யாதவி படுக்கை அறையில் மகனை விளையாட விட்டு, அதன் கதவை சாற்றிவிட்டு வாயிலில் நின்று இருந்தாள். ஜெயந்தியும் வந்தவர் அங்கே நில்லாமல், சமையல் அறையில் சென்று நின்று கொண்டார். அவர் யாதவிக்காக வந்திருந்தார். அவளை இந்த நிலையில் தனியாக விட அவர் விரும்பவில்லை. அவர் இருந்தது யாதவிக்கும் தைரியமாகவே இருந்தது.
லிங்காவின் மாமா நரசிம்மன், முதலில் அவர்கள் குடும்பம் எப்படிப் பாரம்பரியமான குடும்பம் என்று விளக்க ஆரம்பித்து, லிங்கா விவாகரத்து செய்ததே… தங்கள் குடும்பத்தில் பாதிப் பேருக்கு பிடிக்கவில்லை என்றார்.
தங்கள் குடும்பத்திற்குக் குழந்தையோடு இருக்கும் பெண்ணைத் திருமணம் செய்வது எல்லாம் ஒத்துவராது. உறவினர்கள் பலதும் பேசுவார்கள். அப்படி இப்படியென நிறையச் சொல்ல…யாதவி வேறு வழியில்லாமல் கேட்டு இருந்தாள்.
கணவர் முடித்ததும் அடுத்துப் பாக்கியம் ஆரம்பித்தார். “நீ இங்க வந்திருக்கலைனா லிங்காவுக்கு இப்படி ஒரு எண்ணமே வந்திருக்காது. அவன் உன்னைப் பார்த்து குழந்தையோட தனியா இருக்கேன்னு பரிதாபப்பட்டுக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்றான். ஆனா நிஜத்துல இதெல்லாம் ஒத்துவராது.”
“ஆம்பிளைங்க ஆயிரம் சொல்வாங்க, பொம்பளைங்க நமக்குத் தெரியனும், எது செய்யணும் செய்யக் கூடாதுன்னு.”
“நீ வேலை பார்க்கத்தானே இங்க வந்த… அப்புறம் இதெல்லாம் என்ன தேவையில்லாத வேலை? உனக்குக் கல்யாணம் பண்ணணும்ன உங்க அப்பா அம்மாகிட்ட சொல்லு, அவங்க பார்த்து பண்ணி வைப்பாங்க.” எனப் பாக்கியம் பேசிக்கொண்டே செல்ல…
“கொஞ்சம் நிறுத்துறீங்களா…உங்க பிள்ளையைப் பிடிக்க எல்லாம் நான் இங்க வரலை. விவாகரத்து ஆகி குழந்தையுடன் இருக்கும் பொண்ணுங்க எல்லாம் அடுத்தப் புருஷனை தேடிட்டு இருக்காங்கன்னு அர்த்தம் இல்லை. அதுக்காக விவாகரத்தும் பண்ணிக்கிறது இல்லை.”
“உங்க வீட்லயே அப்படி ஒருத்தருக்கு நடத்து கூட உங்களால புரிஞ்சிக்க முடியலைனா… ஆச்சர்யமா இருக்கு.”
“உங்க பையன்தான் என்னைக் கேட்டார், எனக்கும் அவரைப் பிடிச்சிருந்தது சரின்னு சொன்னேன். உங்க பையனை நான் பிடிச்சு எல்லாம் வைக்கலை. போய் அவர்கிட்ட பேசுங்க. என்கிட்டே இப்படி எல்லாம் பேசுற வேலை வச்சுக்காதீங்க.” என யாதவி கத்தி விட…
“நீங்க இவகிட்ட வந்து பேசுறதே தப்பு. உங்க பையன்கிட்ட தான் பேசணும். அதுவும் லிங்கா இல்லாத நேரம் பேசுறது ரொம்பத் தப்பு. உங்களுக்குப் பிடிக்கலைனா உங்க பையன்கிட்ட சொல்லுங்க. இவ என்ன பண்ணுவா?” என்று ஜெயந்தி சொன்னதும், மூவரும் எழுந்து வெளியே சென்று விட்டனர்.
இவர்கள் அவளை மிரட்ட நினைக்க… பதிலுக்கு அவள் நன்றாக கொடுத்து விட… சரியான திமிர் பிடித்த பெண் என்று மூவரும் பேசிக் கொண்டு சென்றனர்.
அவர்கள் சென்றதும் ஜெயந்தி, “அவங்க பேசினது மனசுல வச்சுக்காத. முதல் கல்யாணத்துல லிங்கா ரொம்பப் பட்டுட்டான். அவங்க பையன் இனியாவது சந்தோஷாமா இருந்தா போதும்னு நினைக்காம, என்னவோ அவன் யாரை வேணாலும் கட்டிக்கத் தயாரா இருக்க மாதிரி நினைச்சிட்டு பேசுறாங்க.”
“இவங்க பேசினதை வச்சு நீ எந்த முடிவுக்கும் வராத… லிங்கா வரட்டும் பார்த்துக்கலாம்.”
“அவன் போகும் போது, நான் நாளைக்குத்தான் வருவேன். யாதவியையும் சந்தோஷையும் பார்த்துக்கங்கனு சொல்லிட்டுதான் போனான்.” என்றதும், யாதவி சரி எனத் தலையசைக்க, ஜெயந்தி அவர் வீட்டுக்கு சென்றார்.
இங்கே அவள் வந்ததே எதோ லிங்காவை பிடிக்கத்தான் என்பது போலப் பேசியது மனதை வருத்தி இருந்தது.
இன்னும் இரண்டு வாரங்களில் ஜனனியின் திருமணம் இருந்தது. அதற்கு அடுத்த வாரம் போவதாகத் தான் இருந்தாள். ஆனால் இப்போது உடனே கிளம்பினாள். இங்கே இருக்கவே பிடிக்கவில்லை.
இரவு பேருந்தில் இடம் இருக்கிறதா என்று பார்க்க, இடம் இருந்தது. லிங்கா அவளுக்கு அறிமுகம் செய்து வைத்த கார் ஓட்டுனரை அழைத்து, தென்காசியில் விட முடியுமா என்று கேட்க… அவர் சரி என்றதும், உடனே பயணச் சீட்டுப் பதிவு செய்தவள், அப்போதே தேவையானது எடுத்து வைத்து கிளம்ப ஆரம்பித்தாள்.
மாவு எதுவும் இல்லை. சாதம் வைத்து மகனுக்குப் பால் சோறு கொடுத்து, மிச்சம் மீதி இருந்ததைத் தானும் வழித்து வாயில் போட்டவள், பாத்திரங்களை விளக்கி வைத்து விட்டு கிளம்பினாள்.
டாக்ஸி வந்ததும், ஒரு பெரிய பையும், அதோடு அவள் கைப் பையும் எடுத்துக் கொண்டவள், வீட்டை பூட்டிவிட்டு மகனையும் தூக்கிக் கொண்டாள்.
கீழே இறங்கியவள் ஜெயந்தியை அழைத்துச் சொல்ல… ஜெயந்திக்கு அப்போதுதான் ஊருக்கு செல்கிறாள் என்று தெரியும்.
“லிங்கா வரட்டுமே.” என்று அவர் சொன்னதற்கு,
“நானும் சந்தோஷும் அவருக்கு வேணும்னா, நாங்க எங்க இருந்தாலும் அவரே வருவார் ஆண்டி.” என்றாள்.
அவள் சொல்வதும் சரி தானே… எதோ அவனை வளைத்து பிடிக்க வந்தது போலப் பேசி வைத்தால்… அப்படித்தான் சொல்வாள் என்று நினைத்தவர், “சரி நீ அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காத. லிங்காவை நினைச்சு பாரு. பாவம் அவன் என்ன பண்ணுவான்?” என, சரி என்பதாகத் தலையசைத்தவள், வெளியே வர… அப்போதுதான் பாக்கியமும் அவர் கணவரும் கிளம்பிக் கொண்டிருந்தனர்.
டாக்ஸியில் ஏறிச் செல்லும் அவளைப் பார்த்தவர்கள், அவள் இப்படி உடனே கிளம்புவாள் என்று நினைக்கவில்லை. இவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாமா? அவளுக்குத் தன்மானம் சுயமரியாதை எல்லாம் இருக்காதா என்ன?
காரில் ஏறியதுமே சந்தோஷ் உறங்கிவிட்டான். அவனை மடியில் படுக்க வைத்துக் கொண்ட யாதவிக்கு, சிலதை நினைக்க நினைக்கக் கண்கள் கலங்குவதும், அவள் அதைக் கண்ணைச் சிமிட்டி சமாளிப்பதுமாக இருந்தாள்.
பேருந்து நிலையத்திற்கு வந்த பிறகும் சந்தோஷ் உறங்கியதால்… பேருந்து வரும் வரையில் யாதவி காரிலேயே இருந்தாள்.
பேருந்து வந்ததும் யாதவி சந்தோஷை தூக்கிக்கொள்ள, ஓட்டுனர் அவளது பைகளை எடுத்து வந்து கொடுத்தான். அவனிடம் பணத்தைக் கொடுத்து விடைபெற்றாள்.
சீட்டில் மகனை படுக்க வைத்துவிட்டு, தானும் அருகில் படுத்தவளுக்கு அப்படி ஒரு அழுகை. இவ்வளவு நேரம் கட்டுப்படுத்தி இருந்தவளால்… இப்போது நினைத்தாலும் கட்டுபடுத்தவே முடியவில்லை.
இனிமையான கனவு கலைந்து போனது போல இருந்தது.
மதுரையில் லிங்காவின் கூடவே அவனது அத்தை மகன்கள் பிரதீப்பும், நவீனும் இருந்தனர். நிச்சயம் முடிந்து உணவு உண்டு அறைக்கு வர பத்து மணி ஆகி இருக்க… அதன் பிறகே அழைத்தான். அவனது மாமன் மகன்கள் அவன் தனியாகச் சென்றதை பார்த்தே இருந்தனர்.
பாக்கியம் தன் மகன்களிடம் சொல்லி தானே அனுப்பினார். அவனைத் தனியா விடாதீர்கள். அவன் யாரிடம் பேசுகிறான் என்று கவனியுங்கள் என்று சொல்லித்தான் அனுப்பினார். ப்ரதீப்புக்கு மட்டும் திருமணமாகி இருந்தது. இன்னும் நவீனுக்கு ஆகவில்லை.
அவன் யாதவிக்கு அழைக்க, அவள் எடுக்கவே இல்லை. உறங்கி விட்டாளோ என்னவோ, தனியாக எப்படி இருப்பேன் என்றால், அதற்குள் உறங்கி விட்டாளா என்று நினைத்தவன், மீண்டும் ஒருமுறை அழைக்க… அப்போதும் யாதவி எடுக்கவில்லை. உறங்கித்தான் விட்டாள் போல என நினைத்துக் கொண்டான்.
பாக்கியம் பிரத்தீப்புக்கு அழைத்து, இங்கே நடந்ததைச் சொன்னவர், அங்கே என்ன நிலவரம் என்று கேட்க,
“அவருக்கு இன்னும் எதுவும் தெரியாது போல… சாதாரணமா தான் இருக்கார்.” என்றான்.
வெளியே சென்றிருக்கும் இடத்தில் அவனைப் பதட்டபடுத்த வேண்டாம் என்றுதான் யாதவி அவனிடம் எதுவுமே சொல்லவில்லை. இப்போது இருக்கும் மனநிலையில் அவனிடம் பேச வேண்டாம் என்று நினைத்தவள், அவன் உறங்கியதாக நினைத்துக்கொள்ளட்டும் என்று கைபேசியை எடுக்காமல் இருந்தாள்.
மறுநாள் அதிகாலை சொல்லாமல் கொள்ளாமல் வந்து நின்ற மகளைப் பார்த்ததும், பெற்றவர்களுக்கு மகிழ்ச்சியே. ஆனால் திவாகரை விட்டு பிரிந்து வந்த போது கூட, அவள் கண்களில் கலக்கத்தைக் கண்டது இல்லை. தைரியமாகவே இருந்தாள். ஆனால் இப்போது அவள் கண்களில் வலி தெரிய… ஜனனி எதோ சொன்னா, அனா இவ இப்படி வந்திருக்காளே என நினைத்துக் கவலைப்பட்டனர்.
மகனை பெற்றோரிடம் கொடுத்தவள், களைப்பாக இருக்கிறது உறங்க போகிறேன் என்று அறைக்குள் சென்று படுத்து விட்டாள்.
மறுநாள் அதிகாலை முஹுர்த்தம் என்பதால், லிங்கா எழுந்து கிளம்பி திருமணத்திற்குச் சென்றுவிட்டான். காலையில் யாதவி அலுவகலம் செல்லும் பரபரப்பில் இருப்பாள், சற்று நேரம் சென்று அழைப்போம் என்று நினைத்தவன், அங்கிருந்து கிளம்பும் போது யாதவியை அழைக்க… அவள் எண் அனைத்து வைக்கப்பட்டிருக்கிறது என்று வந்தது.
டென்ஷன் ஆகி விட்டது லிங்காவுக்கு. லிங்கா தீபிகாவுக்கு அழைத்துக் கேட்க, அவளுக்கு நடந்தது எதுவும் தெரியாது. கைக்குழந்தை இருப்பதால் அறையிலேயே தான் அதிகம் இருக்கிறாள். மாமா அத்தை வந்தது தெரியும், ஆனால் எதற்கு வந்தார்கள் என்று தெரியாது.
“இரு நான் போய்ப் பார்த்திட்டு வந்து கூப்பிடுறேன்.” என்றவள், போன்னை வைத்துவிட்டு, மகள் உறங்குகிறாள் என்பதை உறுதி செய்து கொண்டு, எதிர்வீட்டுக்கு சென்றாள். சிவகாமி குளித்துக் கொண்டிருந்தார்.
இவளைப் பார்த்ததும் ஜெயந்தி என்ன என்று விசாரிக்க… “யாதவி எங்க வேலைக்குப் போயிட்டாங்களா?” என்று கேட்க,
“நேத்து நடந்தது எதுவும் உங்க அம்மா சொல்லலையா?” என்றவர், நேற்று அவர்கள் வந்து பேசியது அனைத்தையும் சொன்னவர், யாதவி அப்போதே கிளம்பி சென்னை சென்று விட்டாள் என்றார்.