எனக்கென வந்த தேவதையே

அத்தியாயம் 5

வார இறுதியில் ஜனனியை பெண் பார்க்க வந்திருந்தனர். அதிகம் பேர் எல்லாம் இல்லை. கல்யாண மாப்பிள்ளை, அவன் பெற்றோர், சகோதரி, அவளின் கணவன் மற்றும் பிள்ளைகள்.

மாப்பிள்ளை சிபி ஜனனியுடன் தனியாகப் பேச வேண்டும் என்றதால்.. அவர்கள் இருவரும் அறையில் தனியாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

சிபியின் சகோதரி ப்ரியா, “ஜனனிக்கு அக்கா இருக்குன்னு சொன்னாங்களே… அவங்க வரலையா?” என்று கேட்க… “இல்லை இப்போ பொண்ணு தானே பார்க்க வர்றாங்கன்னு சொல்லி வரலை.” என்று லக்ஷ்மி சமாளிக்க… மாப்பிள்ளை வீட்டினருக்கு ஏற்கனவே தரகர் சொல்லி யாதவியைப் பற்றித் தெரியும். அவர் எதையும் மறைக்காமல் சொல்லி இருந்தார்.

ஒரே அக்கா தானே ஏன் வரலை?” என்று சிபியின் அம்மாவும் கேட்க…

இல்லை அவளுக்கு விவாகரத்து ஆனதுனால எங்கையும் ரொம்ப வர மாட்டா.” என்றார் லக்ஷ்மி.

இதுல என்ன இருக்கு. அது அவங்க சொந்த விஷயம். அதுக்காக அவங்க ஜனனிக்கு அக்கா இல்லைன்னு ஆகிடுமா? நாங்க அதெல்லாம் எதுவும் நினைக்க மாட்டோம்.” என்று ப்ரியா சொல்ல.. அதைக் கேட்டபடி ஜனனியும் சிபியும் அறையில் இருந்து வெளியே வந்தானர்.

நல்லா கேட்டுக்கோங்க என்பது போல ஜனனி தன் பெற்றோரைப் பார்க்க… சிபி ஜனனியை பிடித்திருப்பதாகச் சொல்ல… மேற்கொண்டு மற்ற விஷயங்களைப் பேசிவிட்டு சென்றனர்.

பார்த்தீங்களா எல்லோரும் ஒரே மாதிரி இல்லை. யாதவியைப் புரிஞ்சிக்கிறவங்களும் இருப்பாங்கன்னு நான் சொன்னது சரி ஆகிடுச்சு.” என்றால் ஜனனி.

எங்களுக்கு மட்டும் அவளைத் தள்ளி வைக்கனும்னு ஆசையா என்ன? நாம தள்ளி நின்னா, புருஷனோட சேர்ந்து பொழைப்பான்னு நினைச்சோம். ஆனா அவ ரொம்பத் தள்ளி போயிட்டா. நம்ம குடும்பத்துக்கு இந்த விவாகரத்து எல்லாம் பெரிய விஷயம் தான். உன் அக்கா இன்னும் கொஞ்சம் பொறுமையா போயிருக்கலாம். இப்போ குடிக்கிறவங்களுக்கு ட்ரீட்மெண்ட் எல்லாம் இருக்கு. கொஞ்சம் அவசரமா முடிவு எடுத்திட்டா.” என்றார் லக்ஷ்மி.

ட்ரீட்மெண்ட் யாருக்கு? உங்க மகளுக்கா இல்ல மருமகனுக்கா… எத்தனை தடவை கூப்பிட்டா… அந்த ஆளு வந்தாரா…”

இல்ல டி இப்போ அவ தானே தனியா நிற்கிறா. கொஞ்சம் பொறுமையா போயிருக்கலாமே…”

விவாகரத்துன்னு பெரிய முடிவை அவளும் யோசிக்காம எடுத்திருக்க மாட்டா… அதை நீங்களும் புரிஞ்சிக்கணும்.” எனச் சொல்லிவிட்டு ஜனனி உள்ளே சென்று விட்டாள்.

ஜனனி யாதவியிடம் பெண் பார்த்துவிட்டு சென்றதைப் பற்றிச் சொல்ல… மாப்பிள்ளை யார் என்ற விவரங்களைப் பெற்றுக் கொண்டாள். ஆனால் அவளுக்கு யாரிடம் சொல்லி விசாரிக்கக் சொல்வது என்று தெரியவில்லை.

லிங்காவிடம் கேட்டுப் பார்க்கலாம் என நினைத்தவள், அன்று அவன் கொடுத்த அவனுடைய எண்ணுக்கு அழைத்தாள். அவனிடம் யாதவியின் எண் இல்லை. அதனால் யாரென்று தெரியாமல் தான் அழைப்பை ஏற்றான்.

ஹலோ லிங்கா சார் தான? நான் யாதவி.” என்றதும்,

சொல்லுங்க யாதவி.” என்றவனுக்கு, காரணம் இல்லாமல் அழைக்க மாட்டாள் என்று தெரியும்.

ஒரு உதவி வேணும். முடிஞ்சா சொல்லுங்க இல்லைனா பரவாயில்லை.”

சொல்லுங்க, செய்ய முடிஞ்சா கண்டிப்பா செய்யுறேன்.”

என் தங்கைக்குச் சென்னையில ஒரு வரன் வந்திருக்கு. அவங்க ஓகே சொல்லிட்டாங்க. ஆனா மாப்பிள்ளையைப் பத்தி இன்னும் கொஞ்சம் விசாரிச்சா நல்லா இருக்கும். உங்களுக்கு யாராவது சென்னையில தெரிஞ்சவங்க இருக்காங்களா…” என்று கேட்க…

என் தங்கச்சி வீட்டுக்காரர் சென்னையில தான் வக்கிலா இருக்கார். நான் அவர்கிட்ட சொல்லி விசாரிக்கச் சொல்றேன். இன்னும் வேற பிரண்ட்ஸ் கூட இருக்காங்க. நீங்க பையனை பத்தி விவரங்களை எனக்கு வாட்ஸ் அப் பண்ணிடுங்க.” என்றான்.

தனக்கு ஆனது போலத் தங்கைக்கும் ஆகி விடக்கூடாது என்ற பதட்டம் யாதவிக்கு, அதை லிங்காவால் உணர முடிந்தது.

லிங்கா தீபிகாவின் கணவன் பரத்திடம் சொல்லி மாப்பிள்ளையைப் பற்றி விசாரித்துச் சொல்ல சொன்னான். சிபி வேலை செய்யும் அலுவலகத்தில் தெரிந்த ஆளைப் பிடித்து விசாரித்து, இரண்டு நாளில் பரத் செய்யலாம் என்று சொல்லிவிட்டான். அதன் பிறகுதான் யாதவிக்கு நிம்மதியாக இருந்தது.

அடுத்த வாரமே ஜனனியின் நிச்சயதார்த்தம் இருந்தது. ஆனால் யாதவி பிடிவாதமாக வரவில்லை என்று விட்டாள். கல்யாணத்துக்காவது வருவியா என்ற தங்கையிடம், கண்டிப்பா வரேன் என்று சொல்லி இருந்தாள்.

ஜனனியின் நிச்சயம் வீட்டிலேயே சிறப்பாக நடந்தது. சிபி அலுவலகப் பணியாக வெளிநாடு செல்லும் வேலை இருந்ததால்… அவன் திரும்பி வந்ததும் திருமணம் என்று பேசி வைத்திருந்தனர்.

சனிக்கிழமை அன்று காலை யாதவி நல்ல உறக்கத்தில் இருக்க… வாயில் மணி விடாமல் அடிக்க… இவ்வளவு காலையில் யார் என்று யாதவி யோசித்துக் கொண்டே வந்தாள். அதுவும் தொடர்ந்து அடிக்க… அப்படியொரு கோபம் வந்தது.

கதவை திறந்து பார்த்தவள், அங்கே யாரும் இல்லாமல்… கேட்டின் அருகே சென்று பார்க்க… மாடிப் படியில் மறைந்து நின்ற ஜனனி திடிரென்று கத்த… தங்கையைப் பார்த்ததும் ஆச்சர்யத்தில் யாதவியும் கத்த… ஜனனி அதற்கு மேல் கத்த… அக்காவும் தங்கையும் போட்ட சத்தத்தில், கீழ் வீட்டினர் மற்றும் எதிரே சிவகாமி, மாடி அறையில் இருந்த லிங்கா என எல்லோருமே என்னவோ ஏதோவென்று எட்டிப் பார்க்க… அக்காவும் தங்கையும் சந்தோஷத்தில் கட்டிக்கொண்டு நின்றனர். உறக்கத்தில் இருந்த சந்தோஷ் கூட எழுந்து வந்திருந்தான். அவனைப் பார்த்ததும் ஜனனி இன்னும் கத்தியபடி அவனைத் தூக்கி சுற்றினாள்.

யாரு யாதவி?” என ஜெயந்தி கேட்க…

என் தங்கச்சி ஆண்டி. சென்னையில இருந்து வந்திருக்கா…சொல்லாம திடிர்ன்னு வந்திருக்கா அதுதான் சாரி…” என, அவருக்குக் கேட்க வேண்டும் என யாதவி சத்தமாக தான் சொன்னாள். 

என்னங்க எது பண்ணாலும் கொஞ்சம் சொல்லிட்டு பண்ணுங்க… தென்காசியில நிலநடுக்கம் தான் வந்திடுச்சுன்னு நினைச்சேன்.” என லிங்கா சொல்ல… யாதவி அவனைச் சங்கடமாகப் பார்க்க…

நாங்க எல்லாம் வந்தா அப்படித்தான் ஊரே அதிரணும்.” என்றால் ஜனனி லிங்காவைப் பார்த்து. அதைக் கேட்டு ஜெயந்தியும் சிவகாமியும் சிரித்தபடி உள்ளே செல்ல… லிங்கா அவன் உறக்கத்தைத் தொடர சென்றான்.

யாருக்கா இது? சுப்பரா இருக்காரு… நீ சொல்லவே இல்லை. ச்ச… போன வாரம் தான எனக்கு நிச்சயம் ஆச்சு.” என்ற தங்கையின் முதுகில் தட்டி யாதவி உள்ளே இழுத்து சென்றாள்.

பல் துலக்கி, முகம் கழுவி, தங்கைக்குக் காபி கொண்டு வந்த யாதவி, “என்ன டி இப்படிச் சொல்லாம வந்து நிற்கிற.” என்றதற்கு,

சிபி சிங்கப்பூர் போயிட்டார். பரிட்ச்சைக்கு படிக்க லீவ் விட்டாங்களா… அதுதான் இங்க போய்ப் படிக்கிறேன்னு சொல்லிட்டு வந்துட்டேன்.”

கல்யாணம் பண்ணி போயிட்டா, நாம அடிக்கடி பார்த்துக்கக் கூட முடியாது. நீ இப்போ வந்தது நல்லது தான்.” என்ற யாதவி, “நானும் இங்க வந்து எங்கேயுமே போகலை. எங்காவது வெளிய போயிட்டு வரலாமா?” என்று கேட்க… ஜனனியும் சரி என்றாள்.

தெரியாத ஓட்டுனருடன் இரண்டு பெண்கள் செல்வது, எவ்வளவு தூரம் பாதுகாப்பு என்று தெரியவில்லை. அதனால் தயங்கி தயங்கி தான் லிங்காவை அழைத்தாள்.

அவன் எடுத்ததும், “சாரி, ரொம்ப நாள் கழிச்சு பார்த்ததுனால கத்திட்டோம்.” என்றதும், “கோபம் எல்லாம் இல்லைங்க… நீங்க சத்தம் போட்டு கூடப் பேசி கேட்டது இல்லையா, திடிர்ன்னு கத்தினதும், ஒரு ஆர்வம் அவ்வளவு தான். உங்க தங்கையைப் பார்த்தும் கொஞ்சம் வம்பிழுக்கலாமேன்னு தோணுச்சு.” என்றான் விளக்கமாக.

இதுக்கா போன் பண்ணீங்க என்றதும், ஊர் சுற்றிப் பார்க்க தெரிந்த இடத்தில் வாகனம் கிடைக்குமா என்று கேட்க…

இருங்க கேட்டுட்டு சொல்றேன்.” என்றவன், சிறிது நேரத்தில் மீண்டும் அழைத்தான்.

இவ்வளவு நேரத்துக்கு அப்புறம் கிளம்பிப் போனா நிறைய இடம் பார்க்க முடியாது சொல்றான். நாளைக்குக் காலையில ஏழு மணிக்கு வரானாம். உங்களுக்கு ஓகே வா…” என்று கேட்க… சரி நாளைக்கே போறோம் என்றால் யாதவி.

“உங்க நம்பர் அவனுக்குக் கொடுத்து பேச சொல்றேன்.” என்றவன், அவள் நன்றியை பெற்றுக் கொண்டு வைத்து விட்டான்.

ஜனனி குளித்துவிட்டு வர… யாதவி நாளைக்குத் தான் போறோம் என்றாள்.

டிபன் செய்யவா சாப்பிடுறியா?”

உட்காரு மெதுவா சாப்பிடலாம்.” என்றவள் “ஆமாம் நீ சென்னையில இருந்ததை விட இங்க தெளிவா இருக்க… சந்தோஷமா இருக்க, எப்படிக்கா? நான் கூட புது இடம் நீ எப்படி இருப்பியோன்னு நினைச்சேன்.”

இங்க சுத்தி இருக்கவங்க எல்லாம் ரொம்ப நல்ல மாதிரி. ஆபீஸ்ளையும் டென்ஷன் இல்லை… அதனால தான்.”

ஜனனி லிங்காவை பற்றிக் கேட்க… “அவரும் ரொம்ப நல்ல மாதிரி. அவர் பக்கத்தில இருக்கிறதே தைரியம் தான். சந்தோஷோட ப்ரண்ட்.” என்றவள், அவனின் சொந்த விஷயம் எதுவும் சொல்லவில்லை.

மறுநாள் அக்காவும் தங்கையும் காலையிலேயே சந்தோஷை தயார் செய்து அழைத்துக் கொண்டு ஊர் சுற்றிப் பார்க்க சென்றனர்.

கோவில், அணைக்கட்டு, அருவி என்று மாலை வரை ஆடிவிட்டு ஏழு மணிப் போலத்தான் வீட்டிற்கு வந்தனர். மறுநாள் யாதவி விடுமுறை எடுத்துக் கொண்டு வீட்டில் இருந்தாள்.

மாலை சந்தோஷை அழைத்துக் கொண்டு ஜனனி கடைக்குச் சென்று விட்டு திரும்ப… வாயிலில் லிங்கா நிற்பதைப் பார்த்ததும், அவனிடம் தொற்றிக் கொண்டான். தீபிகாவுக்குப் பிரசவத்திற்குச் சில நாட்களே இருக்க… வராண்டாவில் நடைபயின்று கொண்டிருந்தாள்.

நீங்கதான் இவனோட ப்ரண்டா…” என ஜனனி லிங்காவிடம் கேட்க…

அதுல அதிசயம் ஒன்னும் இல்லை. ஆனா அமைதியான யாதவிக்கு இப்படியொரு தங்கையா?” என லிங்கா அவளை வம்பிழுக்க… உடன் தீபிகாவும் நின்றிருந்தாள்.

நான் கூடச் சொல்லலாம். இப்படியொரு அழகான தங்கைக்கு இப்படியொரு அண்ணா…” என ஜனனி இழுக்க… லிங்கா சிரிப்பை அடக்க… தீபிகா வாய்விட்டு சிரித்தாள்.

ரொம்ப வாய் உனக்கு.” 

இதை நீங்க சொல்லக் கூடாது வக்கீல் சார். வாயால தான் உங்க பொழப்பு ஓடுது.” என்றதும், அடக்க முடியாமல் சிரித்த லிங்கா… “இவ என்னோட தங்கை தீபிகா.” என்றதும், ஜனனியும் தன்னை அறிமுகம் செய்து கொண்டாள்.

தீபிகா அவளை உள்ளே அழைக்க… ஜனனியும் அலட்டிக்கொள்ளாமல் உள்ளே சென்றாள்.

வீட்டுக்கு வந்தவளை நொறுக்கு தீனி கொடுத்து சிவகாமி உபசரிக்க… 

இதெல்லாம் நீங்களே வா செஞ்சது.” என்றவள், “நீங்க சென்னையில எங்க வீட்டுக்கு பக்கத்து வீடா இருந்திருக்க கூடாது. அடிக்கடி இதெல்லாம் கிடைக்கும்.” என்றும் சொல்ல… 

“உங்க அக்காவுக்கும் சேர்த்து நீ பேசுவ போல…” என்றார் சிவகாமி.

போர் அடித்துப் போயிருந்த தீபிகாவுக்கு ஜனனியோடு பழகுவது பிடித்திருந்தது. யாதவி அவளிடம் இரண்டொரு வார்த்தைகள் தான் பேசி இருக்கிறாள்.

மறுநாள் வழக்கம் போல மகனை அழைத்துக் கொண்டு யாதவி வேலைக்குச் சென்றுவிட…ஜனனி மதியத்திற்கு மேல் சென்று தீபிகாவுடன் பேசிக் கொண்டிருந்தாள். மாலை சந்தோஷ் வந்ததும் அவனை வராண்டாவில் விளையாட வைத்தபடி தீபிகாவும் ஜனனியும் நடந்து கொண்டிருந்தனர். அதுவே தினமும் வழக்கம் ஆனது. லிங்கா வேலை இல்லாத நாட்களில் அவர்களுடன் பேசிக் கொண்டிருப்பான்.

ஜனனி யாதவியைப் பற்றி சொல்லி கவலைப் பட… தீபிகாவும் தன் அண்ணன் குறித்த கவலையை ஜனனியிடம் பகிர்ந்து கொண்டாள். அப்போது தான் ஜனனிக்கு லிங்காவை பற்றி தெரியும்.

சனிக்கிழமை மாலை தீபிகாவும் ஜனனியும் வராண்டாவில் பேசியபடி நடத்துக் கொண்டிருக்க… தீபிகா லேசாக வலிப்பது போல இருக்கு என்றதும், சிவகாமிக்கு பதட்டத்தில் யாருக்கு அழைக்க வேண்டும் என்று கூட புரியவில்லை.

ஜனனியிடம் ஜெயந்தியை அழைத்து வர சொன்னார். ஆனால் ஜெயந்தி இல்லை வீடு பூட்டி இருந்தது. அதனால் அவள்  யாதவியிடம் சொல்ல… அவள் உடனே சென்றாள். 

ஜெயந்தி ஆண்டி எதோ விஷேஷ வீட்டுக்கு போறேன்னு சொன்னாங்களே…” என்றபடி யாதவி வர…

ஆமாம் மறந்துட்டேன்.” என்றவர், “வலிக்குதுன்னு சொல்றா… உண்மை வலியா, பொய் வலியான்னு கூடத் தெரியலையே…” என,

கொடுத்த டேட்டுக்கு இன்னும் நாலு நாள்தான் இருக்கு. அதனால ஆஸ்பத்திரிக்கே போயிடலாம்.” என்ற யாதவி, தீபிகா கிளம்ப ஜனனியை உதவச் சொல்லிவிட்டு, சிவகாமியை தேவையானது எடுத்து வைக்கக் சொன்னவள், தனது கைபேசியில் லிங்காவை அழைக்க… அவன் தென்காசியில் இருக்கிறேன் என்றான். தீபிகாவை காட்டும் மருத்துவமனையும் அங்கே தான் இருக்கிறது.

கார் வர சொல்றீங்களா? நாங்க அங்க ஹாஸ்பிடல் வந்திடுறோம். நீங்க நேரா ஆஸ்பத்திரிக்கு போயிடுங்க.” என்றதும், லிங்கா சரி என்றான்.

சிவகாமி ஏற்கனவே தீபிகாவுக்கும் குழந்தைக்கும் தேவையான துணிகளை துவைத்து மடித்து ஒரு பையில் எடுத்து வைத்திருந்தார். ஆனால் அப்போது இருந்த படபடப்பில் வேறு என்ன எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நியாபகம் வரவில்லை. யாதவி அவளுக்குத் தெரிந்தவரை, வெந்நீர், தட்டு, டம்ளர் எனச் சொல்ல, சிவகாமி எடுத்து வைத்தார்.

பத்து நிமிடங்களில் கார் வந்துவிட…. சிவகாமி மகளுக்கு நல்லபடியாகப் பிரசவம் நடக்க வேண்டும் என்று திருநீர் குங்குமம் வைத்துவிட…. ஜனனி சென்று யாதவியின் கைபையை எடுத்து வந்து கொடுக்க… அவளையும் சந்தோஷையும் அவர்கள் வீட்டுக்குப் போகச் சொல்லிவிட்டு, வீட்டை பூட்டிக் கொண்டு தீபிகா சிவகாமி மற்றும் யாதவி மருத்துவமனை சென்றனர்.

அவள் இல்லாமல் சிவகாமி அந்த நிமிடத்தை எப்படிக் கடந்திருப்பார் என்று தெரியவில்லை. பரத் நாளை வருவதாக இருந்தது. லிங்காவும் அந்நேரம் வரை வீட்டில் தான் இருந்தான். ஒரு வேலையாகப் போய்விட்டு உடனே வந்து விடலாம் என்றுதான் சென்றிருந்தான். அதற்குள் இப்படி ஆகிவிட்டது.

இவர்கள் மருத்துவமனை சென்று சேர்வதற்குள் அங்கே தேவையான வேலைகளை லிங்கா முடித்து வைத்திருக்க… தீபிகாவுக்கு வலி இன்னும் அதிகம் ஆகி இருந்தது.

மருத்துவர் பார்த்துவிட்டு பிரசவ வலிதான் என்றார். வலி வந்தாலும் குழந்தை உடனே பிறந்து விடுமா என்ன? சிவகாமி அவரது உறவினர்களுக்கு அழைத்துச் சொல்ல… லிங்காவும் பரத்திற்குத் தகவல் சொன்னான்.

அவர்கள் உறவினர்கள் வந்ததும் சிவகாமியின் அருகே இருந்த யாதவி, “நல்லபடியா குழந்தை பிறக்கும் கவலைப்படதீங்க. நான் கிளம்புறேன்.” என்றவள், அவரிடம் விடைபெற்று வரவேற்பு அறைக்கு வர.. அங்கே லிங்கா இருந்தான்.

அவளைப் பார்த்ததும், “ரொம்பத் தேங்க்ஸ் யாதவி. நீங்க இருந்ததுனால நேரத்துக்கு ஆஸ்பத்திரி வந்தாச்சு. அம்மாவால மட்டும் தீபிகாவை தனியா கிளப்பி கூடிட்டு வந்திருக்க முடியாது.” என்றதும்,

பக்கத்தில இருந்திட்டு இது கூடப் பண்ணலைனா எப்படி. நீங்க எனக்கு எதுவும் உதவி பண்ணது இல்லையா என்ன?” என்றவள், “சரி நான் கிளம்பட்டுமா… குழந்தை பிறக்க முன்ன பின்ன ஆகும்.”

எதாவது வேணும்னா போன் பண்ணுங்க. நைட் டிபன் வேணா நான் செஞ்சு வைக்கிறேன். நீங்க வந்து வாங்கிக்கோங்க.” என்றும் சொல்ல…

இங்கேயே எங்க அத்தை வீடு இருக்கு. அவங்க வீட்ல இருந்து சாப்பாடு வரும்னு நினைக்கிறேன். அப்படி எதாவது தேவைனா போன் பண்றேன். இப்போ நீங்க எப்படிப் போவீங்க? நீங்க வந்த கார் வெளியதான் இருக்கு, அதிலேயே போயிடுங்க.” என்றவன், அவளுடன் கார் வரை சென்று வழியனுப்பினான்.