சந்தோஷ் ஆடி களைத்து போனவன், யாதவி கீழே தனியே உட்கார்ந்திருப்பதைப் பார்த்து, அங்கே சென்றவன், அவள் மடியில் தலைவைத்துப் படுத்துகொள்ள… யாதவி மகனுக்குத் தட்டிக் கொடுக்க…. அப்படியே உறங்கிப் போனான்.
அவன் உறங்கியதும் யாதவி லிங்காவிடம், “இவனைக் கொஞ்சம் தூக்கி கட்டில்ல போடுங்க.” என்றாள். லிங்கா வந்து அவனைத் தூக்கிக் கொண்டு சென்று கட்டிலில் படுக்க வைக்க… யாதவியும் எழுந்து வந்தாள்.
மகனை படுக்க வைத்து விட்டு, லிங்காவும் மறுபக்கம் படுத்துக் கொண்டான்.
எப்போதும் கங்காரு குட்டியை சுமப்பது போலத் தூக்கி கொண்டு திரிபவள், இப்போது எல்லாம் சந்தோஷை நடக்க வைத்துதான் அழைத்துச் செல்கிறாள். எத்தனை நாட்களாக என யோசித்துக் கொண்டிருந்தவன், “உங்ககிட்ட ஒன்னு கேட்கணும்.” என்ற மனைவியின் குரல் கேட்க… அவள் பக்கம் பார்வையைத் திருப்பினான்.
யாதவி மகனின் அருகே கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்திருந்தவள், “லிங்கா, உங்களுக்குன்னு பையனோ பெண்ணோ வந்திட்டா கூட… நீங்க சந்தோஷ்கிட்ட இப்போ இருக்க மாதிரி எப்பவும் இருப்பீங்களா?” என இத்தனை நாட்களாக மனதிற்குள் அரித்துக்கொண்டிருக்கும் விஷயத்தைக் கேட்டே இருந்தாள்.
“இனிமே தான் வரணுமா? ஏற்கனவே வந்தாச்சா?” என அவன் பதில் கேள்வி கேட்க…
“பதிமூன்னு நாள் தள்ளி போயிருக்கு.” என்றதும்,
“இப்போ நான் என்ன பதில் சொல்லணும்னு எதிர்பார்க்கிற. என் மேல நம்பிக்கை இல்லாம தான் இந்தக் கேள்வியையே கேட்கிற. அப்ப நான் சொல்ற பதில் மட்டும் உண்மையாதான் இருக்கும்னு நம்புவியா?”
“என் மேல இவ்வளவு கூட நம்பிக்கை இல்லைனா எதுக்கு என்னைக் கல்யாணம் பண்ணிகிட்ட?” என்று அவன் அவளைக் கூர்மையாகப் பார்க்க… யாதவி சிறிது நேரம் பதிலே சொல்லவில்லை. அவள் அமைதியாக இருந்தாள்.
“சந்தோஷை நல்லா வளர்க்கணும்னு தான் திவாகர்கிட்ட இருந்து விவாகரத்து வாங்கினேன். அவனுக்குகாகத்தான் இன்னொரு கல்யாணம் பண்ண வேண்டாம்னு இருந்தேன். ஆனா உங்களைப் பார்த்ததும், உங்க மேல இருந்த நம்பிக்கையில தான் கல்யாணம் பண்ணிகிட்டேன். இப்போ கொஞ்ச நாளாதான், நீங்களும் சந்தோஷும் அப்பா மகன்கிற அளவுக்கு நெருங்கி இருக்கீங்க. இப்போ உங்களுக்கே ஒரு வாரிசு வரப் போகுது. அதுதான் கேட்டேன்.”
“நான் இப்ப நல்லவிதமா சொல்லிட்டு அப்புறம் மாற மாட்டேன்னு என்ன நிச்சயம்? அப்படி மாற மாட்டேன்னு நம்பிக்கை மட்டும் தான் வைக்க முடியும். உனக்கு அந்த நம்பிக்கை இருந்தா குழந்தை பெத்துக்கோ…. இல்லைனா பெத்துக்காத. நீ எப்பவும் என்னைச் சந்தேகத்தோட தான் பார்த்திட்டு இருப்பேன்னா… என்னால சந்தோஷ்கிட்ட உண்மையா பழக முடியாது.”
“உனக்கு நான் அவனுக்கு அப்பாவா இருக்கணுமா? இல்லை அவனுக்கு அப்பாவா நடிக்கணுமா? நான் நாளைக்கு அவனைத் திட்டலாம், கண்டிக்கலாம். அதுக்கு எல்லாம் நீ வேற மாதிரி அர்த்தம் பண்ணா, நான் ஒன்னும் பண்ண முடியாது.” என்றான் லிங்கா சூடாக.
“லிங்கா, நானும் அவனைக் கொஞ்சிட்டே இருக்கச் சொல்லலை. நான் சொல்ல வர்றது என்னன்னு எனக்குப் புரிய வைக்கத் தெரியலை…. அவனை வித்தியாசமா மட்டும் நடத்திடாதீங்க. அதுதான் சொல்ல வந்தேன்.”
“நான் இந்தக் குழந்தையைப் பெத்துக்கக் கூடாதுன்னு எப்பவும் நினைக்கலை… ஆனா நல்லா உறுதியா தெரிஞ்ச பிறகு வெளிய சொல்வோம்னு இருந்தேன். அவ்வளவு தான்.” என்றவள் படுத்துக்கொள்ள… லிங்காவும் விளக்கணைத்து படுத்துக் கொண்டான்.
என் மீது நம்பிக்கை இல்லையா என்ற குமுறல் லிங்காவுக்கும், குழந்தையை வேண்டாம் என்று நினைக்கும் அளவுக்குக் கல் மனசுக்காரியா நான் என்ற குமுறல் யாதவிக்கும் இருக்க… அடுத்து வந்த நாட்கள் இருவரும் ஒருவரோடு ஒருவர் முகம் கொடுத்துப் பேசாமல் இருந்தனர்.
அடுத்த இரண்டு நாட்களும் யாதவி ஓய்வாகத்தான் இருந்தாள். சந்தோஷை அவளிடம் அதிகம் விடாமல் லிங்காவே பார்த்துக் கொண்டான். திங்கட்கிழமை அவள் அலுவலகம் கிளம்ப…. “உனக்குக் கஷ்ட்டமா இருந்தா எனக்கும் சேர்த்து சமைக்க வேண்டாம். நான் வெளிய சாப்பிட்டுக்கிறேன்.” என லிங்கா சொல்ல….
“எனக்குக் கஷ்டமா இருந்தா நானே சொல்வேன்.” என யாதவி வெடுக்கென்று பதில் கொடுக்க….
“அப்படியே இரு… இந்தக் குழந்தை விஷயமா எதுவா இருந்தாலும் நீதான் எனக்கு சொல்ற…. நான் தலையிடவே மாட்டேன். அப்புறம் உனக்கு இல்லாத சந்தேகம் எல்லாம் வரும்.” என்றவன், மனைவியின் பார்வை தன்னைத் துளைப்பதை உணர்ந்தாலும், துண்டை எடுத்துக் கொண்டு குளிக்கச் சென்றுவிட்டான்.
யாதவி மகனுக்கு வைப்பது போலத் தனக்கும் உண்ண பழங்களை எடுத்து வைத்தவள், நடுவே குடிக்க ஹார்லிக்ஸ் போட்டு எடுத்துக் கொண்டாள். முன்பென்றால் அலுவலகத்திலேயே டீ குடிப்பாள். இப்போது வீட்டில் இருந்து எடுத்து சென்றாள்.
அதையெல்லாம் லிங்கா கவனித்துக் கொண்டு தான் இருந்தான். குழந்தையை ஆரோக்கியமாகப் பெற்று எடுக்க வேண்டும் என்ற எண்ணம் அவளுக்கு இருப்பது அவனுக்கும் மகிழ்ச்சி தான்.
லிங்கா அவர்கள் இருவரையும் காரிலேயே அழைத்துச் சென்று, மீண்டும் மாலை அவனே அழைத்து வந்தான். சில நேரம் காரை யாதவியின் அலுவலகத்தில் நிறுத்திவிட்டு, நண்பர்களின் பைக்கை எடுத்துக் கொண்டு அவன் வேலையாக வெளியே செல்வதும் உண்டு. யாதவிக்குப் பைக்கில் ஏறி இறங்க சிரமமாக இருக்கும் என்று அவளுக்கு எப்போதும் கார்தான்.
வியாழக்கிழமை மாலை வரும் வழியில், “அம்பது நாள் ஆகிடுச்சு. ஹாஸ்பிடல் போகணும்.” என யாதவி சொல்ல…
“எப்போ போகலாம்.” என்றான்.
“நாளைக்குச் சந்தோஷை ஸ்கூல்ல விட்டுட்டு போயிட்டு வந்திடலாமா? நான் ரெண்டு மணி நேரம் பெர்மிஷன் கூடப் போட்டுப்பேன்.” என்றாள்.
அன்றே தீபிகாவுக்குப் பார்த்த மகப்பேறு மருத்துவரிடம் மறுநாள் செல்ல முன்பதிவு செய்தான்.
மறுநாள் காலை சந்தோஷை பள்ளியில் விட்டு, இருவரும் அங்கிருந்தே மருத்துவரிடம் செல்ல… அவர் அப்போதே ஸ்கேன் எடுத்து வர சொன்னவர், அவர்கள் எடுத்துவிட்டு வந்ததும், குழந்தையின் வளர்ச்சி எல்லாம் சரியாக இருப்பதாகச் சொன்னார். இருவருக்குமே அப்போதுதான் முழு மகிழ்ச்சி.
அடுத்த மாதம் வரும் போது, சில ரத்த பரிசோதனைகள் செய்து முடிவுகளை எடுத்துக் கொண்டு வர சொல்லி அனுப்பினார். அவருக்கு லிங்காவையும் அவன் குடும்பத்தையும் நன்றாகவே தெரியும்.
“யார் என்ன பேசினாலும், உண்மை ஒருநாள் வெளி வரத்தானே செய்யுது. ஆனாலும் உனக்கு ரொம்பப் பொறுமை லிங்கா. நீ யாருக்காகவும் அவசரப்படவே இல்லை. உங்க அம்மாகிட்ட சொல்லு. அவங்க ரொம்பச் சந்தோஷப்படுவாங்க.” என்றார்.
அன்று வார நாள், அதுவும் காலை வேளை என்பதால்… மருத்துவமனையில் கூட்டம் இல்லை. யாதவி அங்கிருந்தே அலுவலகம் செல்ல.. அவளை விட்டுவிட்டு லிங்கா மருத்துவர் கொடுத்த மருந்துக்களை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தான்.
வீட்டிற்கு வந்து அவன் அம்மாவுக்கு அழைத்தவன், “அம்மா உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும். ஆனா நீங்க எல்லோருக்கும் தம்பட்டம் அடிச்சீங்க அவ்வளவுதான்.” என முதலிலேயே சொல்லிவிட்டான்.
“முதல்ல என்னன்னு சொல்லு டா….” என்ற சிவகாமி கண்டிப்பாக இதை எதிர்ப்பார்க்கவில்லை.
“யாதவி குழந்தை உண்டாகி இருக்கா?” என்றதும், அவருக்கு மகிழ்ச்சியில் பேச்சே வரவில்லை.
“நிஜமா தான…” என்றார் உறுதி செய்யும் எண்ணத்தில்.
“அம்பது நாள் ஆகிடுச்சு. இன்னைக்குதான் டாக்டர்கிட்ட போயிட்டு வந்தோம். ஸ்கேன் எடுத்து பார்த்து எல்லாம் நல்லா இருக்குன்னு சொன்னாங்க. நல்லா தெரிஞ்சிட்டு சொல்லனும்னு தான் இப்போ சொல்றேன்.” என, அதன் பிறகுதான் சிவகாமிக்கும் முழு நம்பிக்கை வந்தது.
“அம்மா, நாங்க யாருக்கும் நிரூபிக்கக் குழந்தை பெத்துக்கலை… மத்தவங்க யாருக்கும் நாமா சொல்ல வேண்டாம். அவங்களுக்கே தெரியும் போது தெரியட்டும். “ என்றான்.
“ஆமாம் நமக்கு நல்லபடியா குழந்தை பிறந்தா போதும். நான் யார்கிட்டயும் இப்ப சொல்லலை…” என்றார்.
“இதையே கடைபிடிங்க.” என்றவன் போன்னை வைத்து விட்டான்.
சிவகாமி தீபிகாவிடம் குழந்தை உண்டானதை சொல்லி மகிழ்ந்தவர், “எவ்வளவு பேரு எப்படி எல்லாம் பேசினாங்க. ஆனாலும் உங்க அண்ணன் பேர் சொல்ல… ஒன்னு இல்லை இப்போ ரெண்டு பிள்ளைகள் வந்திடுச்சு. சந்தோஷ் அவனை அப்பான்னு கூப்பிட்ட நேரம்தான் எல்லாம்.” என்ற அம்மாவை ஆச்சர்யமாகப் பார்த்த தீபிகா, “அம்மா உங்களைப் புரிஞ்சிக்கவே முடியலை மா…” என்றதற்கு,
“எனக்கு இந்த விவாகரத்து மறுமணம் எல்லாம் இப்பவும் ஏத்துக்க முடியலை தான். ஆனா எப்படியோ ஒரு குடும்பம் ஆகிட்டான். இனி அதையே நினைச்சிட்டு இருக்க முடியுமா? எப்பவுமே எனக்குச் சந்தோஷை வெளி ஆளா நினைக்கத் தோணினது இல்லை.” என்றவர்,
“நானும் வந்து ஒரு மாசம் ஆகிடுச்சு. சந்தோஷையும் வச்சுகிட்டு உங்க அண்ணிக்கு வேலைக்குப் போயிட்டு வந்து வீட்டு வேலையும் பார்க்க முடியாது. நான் ஊருக்கு கிளம்பனும். நான் போனா அந்தச் சந்தோஷ் பயலையாவது மேய்க்கலாம். உன் புருஷன் வந்தா என்ன செய்யலாம்னு கேட்டு வை.” என்றார்.
அந்த வார ஞாயிற்றுக்கிழமை வினோத்தின் மகன் பிறந்தநாளுக்கு அவர்கள் வீட்டில் நண்பர்கள் எல்லோருக்கும் விருந்து ஏற்பாடு செய்திருந்தனர். அவன் பிறந்த நாளான வெள்ளிக்கிழமை அன்று உறவினர்கள் நண்பர்களை அழைத்துக் கொண்டாடி இருந்தனர். இது நண்பர்களுக்கு மட்டும் தனி விருந்து.