சிவகாமிக்கு தான் அவர்கள் இருவரையும் பார்க்கக் ஆச்சர்யமாக இருந்தது.
அவனை ஊட்ட சொல்லாமல் தன்னிடம் வந்ததையே லிங்காவால் தாங்க முடியவில்லை என்றால்… இந்தச் சின்னக் குட்டியும் அவன் வாட்டத்தைப் பொறுக்காமல், உடனே தட்டை திருப்பி எடுத்து சென்று விட்டானே என்று நினைத்துக் கொண்டார்.
இருவருக்கும் ரத்தபந்தம் இல்லை… ஆனாலும் இருவருமிடையே ஒரு ஆழமான அன்பும், சொந்தமும் இருக்கிறது என்பதைச் சிவகாமி புரிந்து கொண்டார். யாதவி புரிந்து கொண்டிருப்பாளா?
பொங்கலுக்கு முன்தினமே பரத் வந்துவிட்டான். லிங்கா ஒரு மாதிரி இருக்க, என்ன என்று கேட்டான். அவனிடம் கண்சிமிட்டி விட்டு,
“ஒரு வீட்ல இருந்திட்டு நாளைக்கு ரெண்டு பொங்கலா வைப்பாங்க.” என்று பரத்திடம் சொல்வது போல லிங்கா தன் அம்மாவுக்குச் சொல்ல…மகன் எங்கே வருகிறான் என்று அவருக்குப் புரியாமல் இல்லை.
“நரிக்கு இடம் கொடுத்தா… கெடைக்கு ரெண்டு ஆடு கேட்குமாம். இன்னும் எங்க அண்ணன் கோபமா இருக்கார். ஆனா உனக்கு உன் பொண்டாட்டி தான் முக்கியம். கோலம் போட சொல்லும் போதே நான் சுதரிச்சுக்கணும்.” என்றார்.
“சரி போங்க உங்களுக்கு இஷ்ட்டம் இல்லைனா விடுங்க.” என லிங்கா அக்கறை இல்லாதது போலக் காட்டிக்கொள்ள…
“ஒரு வீட்ல இருந்திட்டு ரெண்டு பொங்கல் வச்சா நல்லா இருக்குமா அத்தை. தினமும் வேண்டாம் நல்ல நாளுக்கு மட்டுமாவது சேர்ந்து இருக்கலாம் இல்ல…” என்றான் பரத்தும் நண்பனுக்குப் பரிந்து கொண்டு.
“நான் போய் எல்லாம் அவகிட்ட சொல்ல மாட்டேன். சாமி கும்பிடும் நேரத்துக்கு, நீ உன் பொண்டாட்டியோட வர்றதுனா வா… எனக்கு ஒன்னும் இல்லை.” என்றார்.
இந்த அளவுக்காவது இறங்கி வந்தாரே என்று நினைத்தவன், சரி என்றான். பொங்கலுக்குத் தேவையானது எல்லாம் அவனே தான் பார்த்து வாங்கிக் கொடுத்தான். அவர்கள் தோட்டத்தில் இருந்தும் வந்தது.
மறுநாள் சிவகாமி பெரிதாகக் கோலம் வரைந்துவிட்டு சென்றுவிட… யாதவி சாக்பீஸ்ல் பொங்கல் பானை, கரும்பு எல்லாம் வரைந்து கலர் கொடுக்க…. அப்போது சந்தோஷை தூக்கிக் கொண்டு லிங்கா வந்தான்.
“நானும் உனக்கு உதவி பண்றேன்.” என்று வந்தவன், கொஞ்சம் கொஞ்சமாக வண்ண கோல மாவை எடுத்துப் போடாமல், மொத்தமாகக் கொட்டிவிட்டு, பிறகு விரல்கள் வைத்து தேய்த்து விட… அவன் பரப்புவதைப் பார்த்தவள், “இப்படியா போடுவாங்க? நீங்க ஒன்னும் போட வேண்டாம் எழுந்து போங்க.” என்றாள் கடுப்பாக.
இவன் இப்படி என்றால்…. சந்தோஷ் மறுபக்கம் சாக்பீஸ் வைத்துக் கோலம் வரைவதாகச் சொல்லி, அவன் வேறு கிறுக்கி வைக்க… அவனுக்கு ஒன்று போட்டு, அவனிடம் இருந்து சாக்பீஸ் பிடிங்கி வைத்து, இருவரையும் குளிக்கச் சொல்லி யாதவி அனுப்பி வைத்தாள்.
சிவகாமி உள்ளே வேலைப் பார்ப்பதும், இவர்கள் அடிக்கும் கூத்தை பார்ப்பதுமாக இருந்தார். யாதவியிடம் திட்டு வாங்கிக் கொண்டு வந்தவர்களைப் பார்த்து, அப்பாவும் மகனும் ஒரே மாதிரி சேட்டை என்று சொல்ல வந்தவர், சொல்லாமல் பாதியில் நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். இப்போது என்றில்லை… அடிக்கடி அவர் வாயில் இருந்து அது போல வரும். ஆனால் முழுதாகச் சொல்ல மாட்டார். லிங்கா மனதிற்குள் சிரித்துக் கொண்டான்.
மகன் கிறுக்கியதை எல்லாம் துணி கொண்டு துடைத்துவிட்டு, யாதவி ஒருவழியாக வண்ணம் கொடுத்துக் கோலத்தை முடித்தாள்.
லிங்கா முன்தினமே, “ஒரே வீட்ல இருந்திட்டு நாம தனியா பொங்கல் வச்சா நல்லா இருக்காது. அம்மா பொங்கல் வைக்கட்டும், நாம சாமி கும்பிடும் நேரம் போயிட்டு வரலாம்.” என்று சொல்லி இருந்தான்.
யாதவி வடையும் பாயசமும் மட்டும் செய்தாள். எல்லோருக்கும் சேர்த்து நிறையவே தான் செய்தாள்.
லிங்கா முன்பே சென்றிருக்க… சாமி கும்பிடும் நேரம் யாதவி அவள் செய்த பருப்பு வடை, பாயசம் இரண்டையும் எடுத்துக் கொண்டு கீழே சென்றாள்.
அவள் கொண்டு வந்ததை மேஜையில் வைத்தவள், தீபிகாவின் மகளை வைத்துக் கொண்டு ஓரமாகச் சென்று உட்கார்ந்து விட்டாள். லிங்கா தான் எல்லோருக்கும் உடைகள் எடுத்திருந்தான். சிவகாமிக்கு அவர் கட்டும் வகையில் புடவை, யாதவிக்கும் தீபிகாவுக்கும் ஒரே மாதிரி ஆனால் வேறு நிறத்தில் பட்டுப் புடவை, அவனுக்கும் பரத்துக்கும் வேஷ்ட்டி சட்டை என எடுத்தவன், அதே போலச் சந்தோஷிற்கும் எடுத்திருந்தான்.
சிவகாமி சமையல் அறையில் வேலையாக இருந்தவர், யாதவி வந்ததைப் பார்த்து தான் இருந்தார். தீபிகா பூஜைக்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தாள். லிங்கா கரும்பை வைத்துக் கொண்டிருந்தான்.
தீபிகா எல்லாம் எடுத்து வைத்து விட்டு சென்றவள், “அம்மா, விளக்கு நான் ஏத்தவா? இல்ல… நீங்க வந்து ஏத்துறீங்களா?” என்று கேட்க…
“உன் அண்ணன் பொண்டாட்டி தான் வந்து உட்கார்ந்திருக்காளே அவளை ஏத்த சொல்லு. அவங்கவங்க எப்படி வந்தாலும், நாம செய்யற கடமையைச் செய்யணும்.” என்றார். அவரே சொல்லட்டும் என்றுதான் தீபிகா அவரிடம் கேட்டது, இப்போது அம்மாவே சொன்னதும் அண்ணியிடம் சென்றவள், “அம்மா உங்களை விளக்கேத்த சொன்னாங்க அண்ணி.” என்றதும், யாதவி லிங்காவைப் பார்க்க…
அவளை வா என்று அவர் அழைக்கவில்லை. அவரே தான் விளக்கேற்ற சொன்னால் என்ன என்ற எண்ணம் இருந்தாலும், அவளைப் போய் ஏற்று என்றான்.
யாதவி சென்று விளக்கேற்றி வைக்க… பொங்கலை பானையோடு கொண்டு வந்து வைத்து சாமி கும்பிட்டனர்.
“ரொம்பப் பசிக்குது.” எனப் பரத் சொல்ல… தீபிகாவும் அவளுடன் யாதவியும் உணவு பரிமாறத் தயாராகினர். சிவகாமி மற்றவர்களுக்குக் கொடுக்கத் தனியாக எடுத்து வைத்து விட்டு பரிமாறக் கொடுத்தார்.
“அம்மா, அவங்க பரிமாறட்டும், நீங்களும் உட்காருங்க.” என்று லிங்கா அழைக்க… மகன் அழைத்ததும் சிவகாமியும் அவர்களுடன் உட்கார்ந்து கொண்டார்.
சிவகாமி சக்கரைப் பொங்கல், காரப் பொங்கல், சட்னி மற்றும் சாம்பார் செய்திருக்க… யாதவி அதோடு அவள் கொண்டு வந்த வடையையும் பாயசமும் சேர்த்து பரிமாறினாள். இன்றுதான் மருமகள் சமைத்ததை மாமியார் உண்கிறார்.
அவர் அருகில் இருந்த சந்தோஷ், “பாத்தி.” என அழைத்து அவன் அணிந்திருந்த வேஷ்ட்டியைக் காட்ட…
“நல்லா இருக்கு.” என்றவர், “அப்பாவும் மகனும் ஒரே மாதிரி தான் இருக்கீங்க.” என்று அவர் வாயில் இருந்தே வந்துவிட்டிருந்தது. இத்தனை நாள் அவர் சொல்ல வந்து நிறுத்தியதை இன்று சொல்லியே இருந்தார். அவர் சொன்னதைக் கேட்டு யாதவி கூட ஒரு நொடி திகைத்து தான் போனாள். சொன்ன பிறகு தான் என்ன சொன்னோம் என்பதைச் சிவகாமியும் உணர்ந்தார்.
“ஆமாம் இப்போ நான் சொல்லலைனா மட்டும்…” என்று நினைத்தவர், உண்ண தொடங்கினார்.
“அப்பா… அப்பா…” என்று சந்தோஷ் மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்த்தவன், “அம்மா, அப்பா நானு ஒரே மாதிரி டிரஸ்.” என்றான் யாதவியிடம் லிங்காவைக் காட்டி. அவனுக்கு அப்பா என்று அவர் சொன்னது லிங்காவை தான் என்று புரிந்தது.
“ஆமாம்.” என்ற யாதவி, “நீ சாப்பிடு.” என்றவள் கணவனைப் பார்க்க… அவன் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி. அதுவும் அவன் அம்மாவே சொல்லிவிட்டார் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி. அவர்கள் உண்டதும் யாதவியும் தீபிகாவும் உண்டனர்.
ஜெயந்தியின் வீட்டிற்கு யாதவியையே பலகாரங்களைக் கொண்டு போய்ச் சிவகாமி கொடுக்கச் சொன்னார்.
“என்ன தான் செய்கிறார்கள் பார்க்கலாம்.” என்று பொங்கல் சீரை கொடுக்கும் சாக்கில் வந்த பாக்கியதிற்கு, மாமியாரும் மருமகளும் ஒரே வீட்டில் ஒன்றாக இருப்பது பார்த்து மிகுந்த அதிர்ச்சி.
“வாங்க அண்ணி.” என்று சிவகாமி பாக்கியத்தை அழைக்க…
“நீங்கதான் நாங்க எல்லாம் வேண்டாம்னு முடிவுல இருக்கீங்க போல…. நாங்களும் அப்படி இருக்க முடியுமா? முறைன்னு ஒன்னு இருக்கு இல்ல… அதுதான் பொங்க சீரை கொடுத்திட்டு போக வந்தேன்.” என்றார் பாக்கியம் சடவாக.
அவர் பேசியதை கண்டுகொள்ளாமல் “வாங்க அத்தை.” என்ற லிங்கா யாதவியைப் பார்க்க… அவளும் வாங்க என்றாள்.
பாக்கியம் அவர்களுக்குத் தெரிந்த ஆட்டோவில் தான் வந்திருந்தார். அதன் ஓட்டுனரே வந்து சாமான்களை இறக்கி வைத்துவிட்டு சென்றார்.
சிவகாமி சாப்பிடுங்க என்று சொல்ல, பாக்கியம்”நாங்க விடியாம சாமி கும்பிட்டு சாப்பிட்டோம்.” என்றார். அவருக்குச் சிவகாமி பாயசம் மட்டும் கொண்டு வந்து கொடுத்தார்.
“இதெல்லாம் என்ன?” என்று அங்கே ஹாலில் இருந்த பொருட்களைக் காட்டி பாக்கியம் கேட்க…
“நம்ம தோட்டத்தில் இருந்து வந்தது.” எனச் சிவகாமி சொல்ல…
“அதுதானே பார்த்தேன், நான் கூட உங்க மருமகள் கொண்டு வந்த பொங்கல் சீர் போலன்னு நினைச்சேன்.” என்றார் இடக்காக.
இவர் பிரச்சனை செய்யவே வந்திருக்கிறார் போல என நினைத்த லிங்கா, “எதோ வேலை இருக்குன்னு சொன்னியே… நீ சந்தோஷை கூட்டிட்டு மாடிக்கு போ…” என மனைவியிடம் சொல்ல… யாதவியும் விட்டால் போதும் என்று மகனோடு சென்றுவிட்டாள்.
“புதுசா சொந்தம் வந்ததும், பழசெல்லாம் மறந்து போச்சு போல…” எனப் பாக்கியம் லிங்காவைப் பார்த்து சொல்ல…
“நான் மாமாவை வெளியே ரெண்டு இடத்தில பார்த்துப் பேசத்தான் போனேன். அவர் என்னைப் பார்த்தாலே முகத்தைத் திருப்பிகிறார். என்னை என்ன பண்ண சொல்றீங்க?”
“அன்னைக்கு நான் பண்ணது தப்புன்னா… நீங்க பண்ணதும் தப்புதான். எதுனாலும் என்கிட்டே தான் பேசி இருக்கணும். தனியா இருக்கப் பொண்ணுகிட்ட போய்ப் பேசினது தப்பு தானே.” என்றான்.
பாக்கியமும் சிவகாமி எதாவது சொல்வார் என்று பார்த்தார். ஆனால் சிவகாமி அவர் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்க… அதோடு லிங்காவும் அங்கேயே இருக்க… இப்போது ஒன்றும் பேச முடியாது எனப் பாக்கியமும், அவர் வந்த ஆட்டோவிலேயே கிளம்பி சென்றுவிட்டார்.
அவர் சென்றதும் லிங்கா மாடிக்கு வர… சந்தோஷ் கட்டிலில் படுத்து உறங்கி இருந்தான். யாதவியும் அவன் அருகே படுத்திருந்தாள். அவனைப் பார்த்ததும் அவள் எழுந்து உட்கார… லிங்காவும் அவள் எதிரே உட்கார்ந்தான்.
“சந்தோஷ்கிட்ட என்னை அப்பான்னு இதுவரை நீ சொன்னது இல்லை. எங்க அம்மாதான் சொல்லி இருக்காங்க.” என்றதும்,
“நீங்களும் தான் சொல்லலை. ஏன் நீங்க சொல்லி இருக்க வேண்டியது தான.” என்றாள்.
“எனக்குத் தெரியலை யாதவி… திவாகர் அவனோட மனசுல எந்த அளவுக்கு இருக்காருன்னு எனக்குத் தெரியலை… அவரையும் அப்பான்னு சொல்லி, என்னையும் அப்பான்னு சொன்னா… அவன் என்ன நினைப்பான்னு யோசிச்சிட்டு இருந்தேன்.” என்றதும்,
“அவனுக்குத் திவாகரை அப்பாங்கிற அளவுக்கு எல்லாம் தெரியாது. நான் கர்ப்பமா இருக்கும் போதே, நான் திவாகரோட இருக்கலை… திவாகர் ஒருநாளும் சந்தோஷை மகன்னு பாசமா பார்த்ததோ, பேசியதோ கிடையாது. அவருக்கு அவர் தான் முக்கியம். அவரைப் பத்தி தான் யோசிப்பார்.”
“இப்ப கூட அவர் சந்தோஷை பார்க்கிறேன்னு சாக்கு வச்சு வர்றதே… என்னை டார்ச்சர் பண்ணத்தான். இன்னொரு கல்யாணம் பண்ணிகிட்டார், அப்பவும் நான் சென்னை போயிருக்கும் போது நேர்ல வந்து உயிரை எடுத்தார். இப்போ என்னைப் போன் பண்ணி உயரை எடுக்கிறார்.” என்ற யாதவி இருந்த கோபத்தில் உளறிவிட…
“என்னது டார்ச்சர் பண்றானா? அவன் யாரு என் பொண்டாட்டியை டார்ச்சர் பண்ண? இதெல்லாம் சொல்ல மாட்டியா? உனக்கு அறிவு இருக்கா இல்லையா?” என்று லிங்கா மனைவியைப் பிடித்து உலுக்க ஆரம்பித்தான்.