Advertisement

ஆதனும் சாத்விகாவும் மருத்துவமனை வந்து சேர்ந்த போது மணி எட்டு. கிட்டதட்ட முக்கால் மணி நேரத்தில் வர வேண்டிய இடத்திற்கு ஆதன் ஒரு மணி நேரத்திற்கும் மேல் எடுத்துக் கொண்டதால் தான் இந்தத் தாமதம். ஆதன் நன்றாக அதுவும் வேகமாகவே வண்டி ஓட்டக் கூடியவன் தான். ஆனால் இன்று சாத்விகா பின்னால் அமர்ந்திருந்தது அவனுக்கு இனம் புரியா உணர்வைத் தந்து மனம் அதை அனுபவிக்க வேறு சொன்னது. அதனால் தான் ஏதோ காதலியுடன் நீண்ட தூரம் பயணம் போவது போல் அவன் மனதில் தோன்றியது.

சாத்விகா இறங்கியவுடன் ஆதனின் முகம் ஏதோ தொலைந்தது போல் இருக்க,”சார் என்னாச்சு? ஏன் இப்படி இருக்கீங்க? வீட்டுல கூட நல்லா தான இருந்தீங்க?” என்று அவள் கேட்டதும் தான் சுயம் உணர்ந்து தன்னையே திட்டிக் கொண்டான்.

“ஒன்னுமில்லை, அந்த டாக்டர் உண்மையைச் சொல்லனும்னு யோசனை அவ்ளோ தான்.” என்று அவன் சமாளிக்க,

“சார் அந்தக் கவலை உங்களுக்குத் தேவையில்லை. நான் அதை வெற்றிகரமா முடிச்சுட்டு வரேன். இந்த சாத்விகாவை நம்பினோர் கைவிடப்பட மாட்டார்.” என்று ஞானி போல் கூறிவிட்டு அவள் செல்ல, ஆதன் தான் அவனையே அறைந்து கொண்டான்.

‘என்ன ஆதன் நீ? நீயா இப்படி நினைக்கிற? ஒரு பொண்ணு உன் கூட வண்டில வந்தா அவள் உன் மேல நம்பிக்கை வைச்சு வந்துருக்கானு அர்த்தம். அந்த நம்பிக்கை கெடுற மாதிரி நீயே நடந்துக்கலாமா? அப்புறம் உனக்கும் கேடு கெட்ட நாய்களுக்கும் என்ன வித்தியாசம்? சரி இது வரைக்கும் எந்தப் பொண்ணும் உன் வண்டில ஏறல அதனால கொஞ்சம் ஸ்லிப்பாகிட்ட அவ்ளோ தான் சரியா. இப்போ உன்னோட கான்சென்ட்ரேஷன் எல்லாம் இந்த கேஸ்ல மட்டும் தான் இருக்கனும்.’ என்று தன்னையே திட்டி திடப்படுத்திக் கொண்டான்.

ஆதன் அந்த மருத்துவமனை எதிரிலிருக்கும் டீ கடைக்குச் சென்று அங்குப் போடப் பட்டிருந்த பெஞ்சில் அமர்ந்து கொண்டான்.

சாத்விகா மருத்துவமனைச் சென்றவள், அங்கிருந்த வரவேற்பு இடத்தில் மருத்துவர் பெயர் கூறி அவரை இப்போது பார்க்கலாமா என்று கேட்க,

“மேடம் இப்போ தான் சார் ஓ.பி. எல்லாம் முடிச்சார். அவர் வீட்டுக்குக் கிளம்பிட்டு இருப்பாரே!” என்று அங்கு வேலைச் செய்யும் பெண் கூற,

“இது ரொம்ப அர்ஜென்ட். ஒரு முறை டாக்டர்கிட்ட கேளுங்க ப்ளீஸ்.” என்று இவள் கூற,

அங்கு இருந்த மற்றொரு பெண்,”கேளூ டீ, அப்புறம் டாக்டருக்கு தெரிஞ்சா திட்டுவார்.” என்று அவள் கூற,

“டாக்டர் எதுக்கு திட்டப் போறாங்க?” என்று சாத்விகா விஷயத்தை அவர்களிடமிருந்த கரக்க,

“அது ஒன்னுமில்லை மேடம், ஒரு முறை ஒருத்தங்க காச்சல்னு வந்தாங்க. உங்களை மாதிரி இந்த டைம்க்கு தான் வந்தாங்க. அவர் வீட்டுக்குக் கிளம்புற நேரமாச்சுனு நான் இப்போ பார்க்க முடியாதுனு சொல்லிட்டேன். அப்போனு பார்த்து டாக்டர் அங்க வர, நாங்க பேசுனதை கேட்டு, ‘நான் வீட்டுக்குப் போறது முக்கியமில்லை இவங்களுக்கு ட்ரீட்மென்ட் தரது தான் முக்கியம்னு.’ எங்களைத் திட்டிட்டார். அதைத் தான் சொன்னேன் மேம்.” என்று அந்தப் பெண் கூற,

“டாக்டர் ரொம்ப நல்லவரா இருப்பார் போலயே?”

“ஆமா மேம். இங்க இருக்கிற டாக்டர்ஸ் நிறையப் பேர் அவங்க டியூட்டி முடிஞ்சதும் அவங்க தனியா வைச்சுருக்கிற கிளினிக் போயிடுவாங்க. இவரும் அவரோட கிளினிக் போவார் மேடம். ஆனால் அவர் காசே வாங்கமா இலவசமா தான் ட்ரீட்மென்ட் பார்ப்பாங்க மேம். நிறையப் பேர் வாய் வார்த்தையா நாங்க சேவைப் பண்றோம்னு சொல்லுறாங்க. ஆனால் இவர் சொல்லாமலே நிறையச் சேவையை பண்ணிட்டு இருக்கார் மேம்.” என்று அந்தப் பெண் கூற, சாத்விகா எல்லாவற்றையும் மனதிலும் ஏற்றிக் கொண்டாள். அவள் பையிலிருந்த குரல் பதிவு இயந்திரத்திலும் பதிவேற்றிக் கொண்டாள்.

அதற்குள் மற்றொரு பெண்,”மேம் நான் டாக்டர்கிட்ட சொல்லிட்டேன். உங்களை வரச் சொன்னார் மேம் நீங்க போகலாம் மேம்.” என்று கூறி அவரது அறை எங்குள்ளது எனக் காட்டி விட்டு அந்தப் பெண் சென்று விட, சாத்விகா அவரது அறைக் கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தாள்.

மருத்துவர் அவரது இருக்கையில் அமர்ந்து ஏதோ கோப்புகளைப் பார்த்துக் கொண்டிருக்க, இவள் உள்ளே நுழைந்தவுடன் அதை ஓரமாக வைத்து விட்டு சாத்விகாவை அமரச் சொன்னார்.

“சொல்லுங்க உங்களுக்கு என்ன பண்ணுது?”

“டாக்டர் எனக்கு எதுவும் இல்லை. நான் உங்களைப் பார்க்க வந்த விஷயம் வேற.”

“வேற விஷயமா? என்ன விஷயம்?”

“சமூக ஆர்வலர் ரம்யா இறந்துட்டாங்கனு அவங்களை போஸ்ட்மார்ட்டம் பண்ண இங்க கொண்டு வந்தாங்கள.”

“ஆமா நான் தான் போஸ்ட்மார்ட்டன் பண்ணேன். அதை நீங்க ஏன் கேட்கிறீங்க?”

“டாக்டர் ரம்யா என்னோட அக்கா. அவள் தற்கொலை பண்ற அளவுக்குக் கோழை இல்லை டாக்டர். எனக்கு அவளோட சாவுல மர்மம் இருக்கும்னு தோனுது. போலிஸ்கிட்டச் சொன்னால் நம்ப மாட்டீங்கிறாங்க டாக்டர். அதான் நானே கண்டுபிடிக்கலாம்னு முயற்சி பண்றேன் டாக்டர்.”

“அதுக்கு நான் என்ன பண்ண முடியும்?” என்று மருத்துவர் கேட்க,

“டாக்டர் நீங்க உண்மையைச் சொன்னா மட்டும் போதும். ப்ளீஸ் டாக்டர் உண்மையை மட்டும் சொல்லுங்க, நீங்க எழுதிக் கொடுத்த ரிப்போர்ட் உண்மை தானா? அதாவது என்னோட அக்காவோட போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் உண்மை தானா?” என்று இவள் கேட்க,

“இங்கப் பாருங்க, நீங்க நிறையப் படம் பார்ப்பீங்கனு புரியுது. அதனால தான் இப்படிக் கேட்கிறீங்க போல!!”

“டாக்டர் நிஜத்துல நடக்கிறதை தான் படமா எடுக்கிறாங்க. நீங்க இப்படிச் சொல்லித் தப்பிக்கப் பார்க்காதீங்க.” என்று சாத்விகா சற்றுக் குரலை உயர்த்தி சொல்ல,

“நான் எதுக்கு தப்பிக்கப் பார்க்கிறேன்? என் மடில எந்தக் கணமும் இல்லை. சரி நீங்க இவ்ளோ கேட்கிறதால சொல்றேன். நான் எழுதிக் கொடுத்த ரிப்போர்ட் உண்மையானது தான். அவங்க சாவுல மர்மம் இருக்குதுனா எனக்குத் தெரியாது. ஆனால் அவங்களை யாரும் கொலைச் செய்யலை. Its purely a suicide only.” என்று அவர் கூற,

“டாக்டர் நீங்கத் தப்பா நினைக்காட்டி எனக்குக் கொஞ்சம் விளக்கமா சொல்றீங்களா?”

“Why not? அவங்களோட பாடில எந்த இடத்திலும் காயம் எதுவுமில்லை. நீங்க சொன்ன மாதிரி யாராவது அவங்க கழுத்தை இறுக்கிக் கொலைப் பண்ண முயற்சிச் செஞ்சிருந்தா கண்டிப்பா அவங்க அதைத் தடுக்க முயற்சிச் செஞ்சுருப்பாங்க. ஆனால் அவங்களோட பாடில அப்படி ஸ்ட்ரகுல் பண்ண எந்த அறிகுறியும் இல்லை. நான் என்னோட வேலையைச் சரியா தான் செஞ்சேன். ஒரு வேளை உங்களுக்கும் இன்னும் சந்தேகமா இருந்தா நான் போஸ்ட்மார்ட்டன் பண்ணும் போது இந்த மாதிரி பிரச்சனை வரக் கூடாதுனு அதை வீடியோவா எடுப்பேன். உங்க கிட்ட தரேன். நீங்க அதை எந்த டாக்டர்கிட்ட வேணாலும் கேட்டு வெர்ரிஃபை பண்ணிக்கலாம்.” என்று அவர் கூறிவிட்டு அவரது மடிக்கணினியை எடுத்து,

“உங்ககிட்ட பென் டிரைவ் இருக்கா? இல்லாட்டி உங்க மொபைலை கொடுங்க. அதுல நான் ஏத்தித் தரேன்.” என்று அவர் கூற,

“டாக்டர் இப்படி வீடியோ எடுத்து வைச்சுக்கலாமா?”

“எல்லா போஸ்ட்மார்ட்ம்க்கும் நாங்க வீடியோ எடுக்க மாட்டோம். இந்த மாதிரி போலிஸ் கேஸ்னா தான் வீடியோ எடுப்போம். இதை நாங்க போலிஸ்கிட்டயும் கொடுத்துருக்கோம். உங்களுக்குச் சந்தேகம் இருக்கிறதால தான் உங்ககிட்டயும் நான் தரேன். இதை நீங்க வெளியே சொல்லாமல் இருக்கனும். ஏனா உங்ககிட்ட கொடுக்க எனக்கு எந்த பெர்மிஷனும் இல்லை.” என்று அவர் கூற,

“தாங்க்ஸ் டாக்டர். ரொம்பவே தாங்க்ஸ்.” என்று அவள் கூறிவிட்டு பென் டிரைவ்வை நீட்ட, அவரும் வாங்கி அதில் வீடியோவை ஏற்றிக் கொடுத்தார்.

அதை வாங்கிக் கொண்டு சாத்விகா அவரிடம் நன்றி உரைத்து விட்டு வெளியே வர, ஆதன் வேகமாக அவளிடம் வந்தான்.

“என்ன சொன்னார் டாக்டர்?”

“அவர் எந்தத் தப்பும் செய்யலைனு ஆணித்தரமா சொன்னார். எனக்கும் அவர் ரிப்போர்ட் மாத்தி வைச்சுருக்க சான்ஸ் இல்லைன்னு தான் நினைக்கிறேன்.” என்று கூறி, அங்கு நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் கூறிவிட்டு பென் டிரைவ்வையும் அவனிடம் தந்தாள்.

“அப்போ ரம்யாவை யாரோ கட்டாயப்படுத்தி தற்கொலை பண்ண வைச்சுருக்காங்க. அது யார்னு கண்டுபிடிக்கனும்!!” என்று ஆதன் கூற,

“நீங்க ஏன் சார் இது தற்கொலை இல்லை கொலைனு நினைக்கிறீங்க? உங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லாட்டி சொல்லலாம். இல்லை சொல்ல முடியாது என்றாலும் ஓகே. I can understand.” என்று அவள் கூற,

“இங்க நின்னு பேச வேண்டாம். வாங்க உங்க போயிட்டு பேசலாம்.”

“நோ சார். டைம் பார்த்தீங்களா? எனக்குப் பசிக்குது. நாம ஹோட்டல்லுக்கு போகலாம்.” என்று சிறு குழந்தை போல் அவள் முகத்தை வைத்துக் கொண்டு கூற, அவனுக்கும் பசி தெரிய,

“சரி வாங்க போகலாம். எந்த ஹோட்டலுக்கு போகலாம்?” என்று அவன் கேட்க, அவள் ஒரு உணவகம் பேர் சொல்ல, ஆதன் அங்குச் சென்றான்.

இருவரும் உணவகத்திற்கு வந்து அவர்களுக்குத் தேவையானதை ஆர்ட்ர் செய்துவிட்டு பேச்சை ஆரம்பித்தார்கள். ஆதன் ரம்யாவை முதன் முறை பார்த்ததிலிருந்து கமிஷ்னர் அலுவலகத்தில் நடந்தது வரை அனைத்தையும் கூறினான்.

“ம் நீங்க சொல்றதைப் பார்த்தா எனக்கும் சந்தேகமா தான் இருக்கு. டோண்ட் வொர்ரி சார் கண்டிப்பா இந்த கேஸ்ல உங்களுக்கு ஏதாவது ஒரு ஆதாரம் கிடைக்கும். நீங்க கவலைப்படாதீங்க சார்.” என்று அவள் கூற,

“தாங்க் யூ. ஆனால் இந்த கேஸ் சாதாரணமா இருக்காதுனு தோனுது. ஏனா நேருக்கு நேராவே வேலுமணி என்கிட்ட சவால் விடுறார் ஆதாரத்தை என்னால கொண்டு வர முடியாதுனு. அதனால என்னோட வேலைல நிறைய இடைஞ்சல் தர அவங்க முயற்சிக்கலாம். அதனால உங்களோட உதவி எனக்குக் கண்டிப்பா வேணும்.” என்று அவன் கூற,

“சார் தாராளமா எந்த உதவியாக இருந்தாலும் தயங்காமல் நீங்கக் கேட்கலாம். இந்த மாதிரி கேஸ் எல்லாம் வராதனு நாங்க வெயிட் பண்ணிட்டு இருக்கோம் சார்.” என்று அவள் மிகுந்த சந்தோஷத்துடன் கூற,

“ஓகே, உங்களோட ஆபிஸ்ல உங்களையும் சேர்த்து ஐந்து பேர்னு கேள்விப்பட்டேன். இந்த கேஸை பத்தி மேலோட்டாமா மட்டும் சொல்லுங்க அவங்ககிட்ட. டீடெயில்லா எதுவும் சொல்ல வேண்டாம்.” என்று அவன் கூற,

“டோண்ட் வொர்ரி சார். அதை நான் பார்த்துக்கிறேன்.”

“தாங்க் யூ.” என்று இவனும் கூற, சரியாகச் சாப்பாடும் வர, இருவரும் அடுத்த என்ன செய்வது எனப் பேசிக் கொண்டே சாப்பிட்டு முடித்தார்கள்.

பின்னர் ஆதன், சாத்விகாவை வீட்டில் இறக்கி விட்டு அவனது வீடு நோக்கிப் போனான்.

~~~~~~~~~~

ஆதன் அவனது காவல் நிலையத்திற்குச் சென்றதும் அவன் செய்த முதல் வேலை எட்வினை அழைத்துக் கொண்டு செல்வத்துடன் ரம்யா வீட்டிற்குச் சென்றது தான்.

ரம்யாவின் வீட்டின் முன்பு இவர்கள் ஜீப்பை நிறுத்திவிட்டு இறங்க,

“செல்வம் அக்கம் பக்கத்து வீட்டுல நைட் ஏதாவது சவுண்டு கேட்டுச்சா? யாரையாவது சந்தேகம் படும்படி வந்தாங்களானு கேளுங்க செல்வம். நாங்க உள்ள போய் பார்க்கிறோம்.” என்று அவன் கூற, செல்வமும் சரியென்று அவனிடம் கூறிவிட்டுச் சென்றார்.

ஆதனும் எட்வினும் ரம்யா வீட்டின் அழைப்பு மணியை அடிக்க, முப்பதின் இறுதியிலிருந்த ஆண் ஒருவர் கதவைத் திறந்தார்.

“சார் என்ன வேணும் உங்களுக்கு?”

“நான் ஆதன் நிவாஸ் ஏ.சி. இவர் எட்வின் இன்ஸ்பெக்டர். நாங்க தான் ரம்யா கேஸ்ல இன்சார்ஜ். உள்ள போகலாமா?”என்று ஆதன் கேட்க,

“எஸ் சார் உள்ள வாங்க.” என்று அவர் உள்ளே அழைத்துக் கொண்டு சென்றார்.

அங்கு ஹாலில் ரம்யாவின் புகைப்படம் வைக்கப்பட்டு அதில் மாலையிட்டு அந்தப் படத்தின் முன்பு விளக்கும் வைத்து அதை ஏற்றி வைத்திருந்தனர்.

ஓரமாக வயதில் முதிர்ந்த ஓர் அம்மா உட்கார்ந்திருந்தார்கள். முகத்தில் அவ்வளவு சோகம். அவர் ரம்யாவின் தாயாகத் தான் இருக்க வேண்டும். அவருக்குப் பக்கத்திலே அவரது கையைப் பிடித்துக் கொண்டு ஓர் ஆண் உட்கார்ந்திருந்தார். அவர் தான் ரம்யாவின் தந்தையாக இருக்க வேண்டும் என யூகித்தான் ஆதன்.

இவர்களுக்குக் கதவு திறந்து விட்டவர் அவர்களிடம் வந்து,”சார் என் பேர் சதீஷ். நான் ரம்யாவோட கணவன். இதோ இவங்க அவளோட அப்பா, அம்மா சார். நான் வேலை விஷயமா ஊருக்குப் போயிருந்த நேரத்துல இப்படியாகிடுச்சு சார். எங்களுக்குக் குழந்தை இல்லைனு அவள் வருத்தப்படாத நாளே இல்லை சார். நானும் அவளை எவ்ளோவோ சமாதானப்படுத்தி இருக்கேன் சார். நமக்குக் குழந்தையில்லாட்டி என்ன? நாம தத்து எடுத்துக்கலாம்னு சொன்னேன் சார். அவளும் சரி நீங்க ஊருக்குப் போயிட்டு வாங்க நாம முறைப்படி என்ன செய்யனுமோ செய்யலாம்னுலாம் சொன்னா சார். ஆனால் இப்படி ஒரு தப்பான முடிவு எடுப்பானு நான் யோசிக்கவே இல்லை சார். அவளுக்குத் தத்து எடுக்கப் பிடிக்காட்டி என்கிட்டச் சொல்லிருக்கலாம் சார். அய்யோ இப்போ நான் என்ன பண்ணுவேன்?”

“வருத்தப்படாதீங்க சதீஷ். இதெல்லாம் கடவுள் முன்னாடியே நம்ம வாழ்க்கை எப்படி இருக்கனும்னு முடிவுப் பண்ணிட்டார். அதை மாத்துர சக்தி யார்கிட்டயும் இல்லை. நிதர்சனத்தை ஏத்துக்குவோம்.” என்று ஆதன் கூற, சதீஷும் தலையசைத்தான்.

“சதீஷ் உங்களுக்கு ஆட்சேபனை இல்லாட்டி நான் ஒரு முறை வீட்டைப் பார்க்கலாமா?” என்று அவன் கேட்க,

“சூயர் சார். நானே கூட்டிட்டு போறேன்.” என்று கூறி அவனே அழைத்துக் கொண்டு சென்றான்.

ஆதன் அன்று பார்த்தது போலத் தான் இன்றும் வீடு இருந்தது. ரம்யா இறந்து கிடந்த அறைக்குள் சென்று ஜன்னல் பக்கம் போய் பார்க்க, அன்று போல் இல்லாமல் இன்று ஸ்க்ரூ அனைத்தையும் டைட்டாக இருந்தது. அதிலே ஆதன் கண்டு கொண்டான் அவனது யூகம் சரியென்று. அதை எட்வினிடமும் கண்ணால் சைகைச் செய்து தெரிவித்தான்.

“ரம்யாவோட ஃபோன், லேப்டாப் இதெல்லாம் எங்க இருக்கு?” என்று ஆதன் கேட்க, சதீஷ் கொண்டு வந்து தர,

ஆதன் கைப்பேசியையும், எட்வின் மடிக்கணினியையும் சோதித்துப் பார்த்தனர். அதில் சந்தேகிக்கும் படி எதுவுமில்லை. இருந்தாலும் நன்றாகப் பார்க்க வேண்டும் என்று,”நாங்க இதை ஸ்டேஷனுக்கு எடுத்துட்டு போறோம்.” என்று அவன் கூற,

“சார் நீங்க எதுக்கு ஸ்டேஷனுக்கு எடுத்துட்டு போகனும்? எனக்கு ஒன்னும் புரியலை. ரம்யா கேஸ் தான் க்ளோஸ் பண்ணிட்டாங்களே!! நீங்க ஏதோ பார்க்கனும்னு சொன்னதால உங்களை உள்ள விட்டேன். இப்போ லேப்டாப், ஃபோன் எல்லாம் கேட்கிறீங்க?”

“இங்கப் பாருங்க சதீஷ், ரம்யா கேஸ் இன்னும் க்ளோஸாகலை. போலிஸ் சைட்ல இருந்து சில சந்தேகம் இருக்கு. அதை நிவர்த்தி செஞ்சதும் நாங்களே இதைக் கொண்டு வந்து உங்ககிட்ட ஒப்படைக்கிறோம்.” என்று அவன் கூற,

“சார் சந்தேகமா? என்ன சந்தேகம்?” என்று வேகமாகக் கேட்க,

“இப்போதைக்கு உங்ககிட்ட எதுவும் சொல்ல முடியாது சதீஷ். எங்களை எங்க வேலையை மட்டும் செய்ய விடுங்க. முடிஞ்சதும் நாங்களே சொல்றோம்.” என்று அவன் கூற, சதீஷிறகு அதற்கு மேல் என்ன கூற எனப் புரியாமல் முழிக்க,

“சரி நாங்க கிளம்புறோம். நீங்க ஊருக்குப் போறதா இருந்தா எங்ககிட்ட சொல்லிட்டு போங்க.” என்று ஆதன் கூறிவிட்டு எட்வினுடன் அங்கிருந்து வெளியே வந்தான்.

சரியாக செல்வமும் வர, அவருக்கும் முன் அவன் வண்டியில் ஏறி ஓட்டுநர் இருக்கையில் அமர,

“சார் நான் ஓட்டுறேன்.”

“அட உட்காருங்க செல்வம். நாம போய்கிட்டே பேசுவோம்.” என்று ஆதன் கூற, செல்வமும் எட்வின்னை முன்னால் அமர வைத்து விட்டு அவர் பின்னால் அமர்ந்தார்.

“சரி செல்வம் சொல்லுங்க. ஏதாவது உருப்படியான தகவல் கிடைச்சதா?”

“எஸ் சார். அந்த ஏரியால ஒரு வீட்டுல திருடு போயிருக்கு. ஆனால் ரம்யா இறந்த அன்னைக்கா இல்லை எப்போனு தெரியலை சார்.”

“அப்படியா? ரம்யா இறந்த நாள்னா நியூஸ்ல வந்துருக்கும். ஆனால் அப்படி எந்தச் செய்தியும் வரலையே?” என்று எட்வின் கூற,

“சார் நியூஸ்ல வந்தது. ஆனால் நேத்து நடந்ததா தான் சார் நியூஸ்ல வந்துருக்கு. அந்த வீட்டுல இருக்கிறவங்க ஊருக்குப் போயிட்டு நேத்து வந்து பார்க்கும் போது தான் திருடு போனது தெரிஞ்சுருக்கு சார். ஆனால் இன்னும் சரியா தெரியலை சார் என்னைக்கு திருடு போச்சுனு.”

“அப்போ முதல்ல அந்த திருடனைக் கண்டுபிடிக்கனும். கண்டுபிடிச்சா என்னைக்கு நடந்ததுனு தெரிஞ்சதும். ரம்யா இறந்த அன்னைக்குனா கண்டிப்பா அவனுக்கு ஏதாவது தெரிய வாய்ப்பு இருக்கு.” என்று ஆதன் கூற,

“ஆமா சார். நான் கணபதிகிட்ட ஃபோன் பண்ணிப் பேசினேன் சார். அந்த வேலுமணிக்கு எல்லா திருட்டு வேலையும் பண்றவங்களோட தொடர்பு இருக்கு சார். அவங்க திருடுற பொருள்ள இவருக்கும் கொஞ்சம் கமிஷன் வருது சார். அவங்க லிஸ்ட் எல்லாம் எனக்கு அனுப்பச் சொன்னேன் சார்.” என்று செல்வம் கூற, ஆதனால் அவரை மெச்சாமல் இருக்க முடியவில்லை.

“ரொம்ப நல்ல விஷயம் பண்ணிருக்கீங்க செல்வம்.” என்று அவன் கூறி முடிக்க, ஜீப் காவல் நிலையம் செல்லும் வழியில் செல்லாமல் வேறு வழியில் செல்வதை அப்பொழுது தான் எட்வின் கவனித்தான்.

“சார் நாம ஸ்டேஷன் போகலையா?”

“இல்லை எட்வின். வேற ஒரு இடத்துக்குப் போறோம்.” என்று அவன் கூறி முடித்த பத்தாவது நிமிடத்தில் வண்டியை ஒரு வீட்டின் முன்பு நிப்பாட்டினான்.

எட்வினும் செல்வமும் இறங்கிப் பார்க்க, ஷாடோ டிடெக்டிவ் ஏஜென்சி என்ற பெயர் தாங்கிய பலகை இருக்க, ஆதனை புரியாமல் பார்த்தனர் இருவரும்.

Advertisement