Advertisement

சாத்விகாவும் ரவியும் பணம் திருடு போன இடத்துக்கு மறுபடியும் வந்தார்கள். இப்பொழுது கழுகு கண்ணுடன் சுற்றுப்புறத்தைக் கவனமாக நோட்டம் விட, அப்பொழுது ஒருத்தர் அவர்களிடம் வந்து,”நானும் அப்போல இருந்து பார்க்கிறேன் இந்தப் பக்கமே சுத்திட்டு இருக்கீங்க? யார் நீங்க? போலிஸை கூப்பிடவா?” என்று நடுத்தர வயதிலிருந்த ஒருத்தர் வந்து அவர்களிடம் மிரட்ட, ரவி ஏதோ சொல்ல வர, சாத்விகா அவனைத் தடுத்து,

“சார் நாங்க இப்படிச் சுத்துரதுட்கு உங்ககிட்ட ஆதாரம் இருக்கா? சும்மா போலிஸ்னு சொன்னா நாங்க பயந்துருவோமா?” சற்றுத் திமிராக சாத்விகா கேட்க, ரவிக்கு அவள் ஏன் இப்படிப் பேசுகிறாள் என்று புரியாமல் பார்க்க, அந்த மனிதர் அவளைக் கோபமாகப் பார்த்து,”ஓ ஆதாரம் கேட்கிறியா? இந்த ஏரியா கொஞ்சம் ஆள் நடமாட்டம் இல்லாத இடம் அதனால் இங்க என்ன வேணாலும் செய்யலாம்னு யோசிக்காத. அதோ அங்கப் பார் கேமேரா, அதுல எல்லாமே பதிஞ்சுருக்கு.” என்று அவர் கூற, இருவருமே அவர் கை காட்டியே இடத்தைப் பார்க்க, அங்குச் சிறிதாக ஒரு புகைப்படக் கருவி ஒன்று இருந்தது. அது சாதாரணமாகப் பார்த்தாள் யாராலும் கண்டுபிடிக்க முடியாது. அவர் கை காட்டியதும் நன்றாக உற்றுப் பார்க்கும் போது தான் கேமேரா தெரிந்து.

“பார்க்கச் சின்ன கேமேரா மாதிரி இருந்தாலும் நல்ல ரெசலூஷன்ல எல்லாத்தையும் கேப்ட்சர் பண்ணிடும்.” என்று அவர் அவர்கள் கேட்காமலே கூற, சாத்விகாவுக்கும் ரவிக்கும் மிகுந்த சந்தோஷம்.

“சார் நாங்க நீங்க நினைக்கிற மாதிரி தப்பான ஆளுங்க கிடையாது. இந்த ஏரியாவுல எங்க கம்பெனி அக்கவுண்டன்ட் கிட்ட இருந்து பணத்தை யாரோ அடிச்சுட்டு போயிட்டதா அவர் சொல்றார். ஆனால் எங்களுக்குச் சந்தேகமா இருக்குது சார். அதான் நாங்க இங்க ஏதாவது சீசீடிவி இல்லாட்டி யாராவது பார்த்துருப்பாங்களோனு விசாரிக்கத் தான் வந்தோம். காலைல இருந்து நாங்க தேடுறோம் ஒரு கேமராவும் கண்ணுல படலை. நீங்க சொன்னதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது உங்களோட வீட்டுல கேமரா இருக்குனு. எங்களுக்கு அதைக் கொஞ்சம் காட்டூறீங்களா?” என்று சாத்விகா கேட்க,

“என்ன மா புதுசா கதை விடுற? நான் முதல்ல கேட்கும் போதே நீ இதைச் சொல்லிருந்தா நான் நம்பியிருப்பேன். இப்போ என்னால உன்னை நம்ப முடியாது.” அவர் கறாராகக் கூற,

“சார் நாங்க எதுக்கு பொய் சொல்லனும். நான் முதல்ல பதில் சொல்லாததுக்கு காரணம் நீங்க வெளில வரவே இல்லை. ஆனால் நாங்க இங்க அலைஞ்சு திரிஞ்சது எப்படி உங்களுக்குத் தெரிஞ்சதுனு பார்க்கத் தான் அப்படிப் பேசுனேன் சார். சரி சார் எங்க மேல நம்பிக்கை இல்லாட்டி நீங்களே ஃபூட்டேஜ் பார்த்து அதை இந்த பென் டிரைவ்ல ஏத்தி கொடுங்க.”என்று கூறி அவள் பென் டிரைவ்வை நீட்ட, அவரும் சரி என்று வாங்கிச் சென்றார்.

“ராக்கி செம ஷார்ப் நீ. அவர் பேச்சை வச்சே நீ கண்டுபிடிச்சுட்டு. உன்கிட்ட இருந்து கத்துக்க எனக்கு நிறைய இருக்கு.” என்று பெருமையாக அவன் கூற,

“அட சும்மா இரு பீஸ்ட்.” என்று கூறிவிட்டு அவர் வருவதற்காகக் காத்திருந்தனர்.

சரியாக அரை மணிநேரத்தில் அவர் வர, இவர்கள் வேகமாக அவரிடம் வந்து,”சார் நாங்க சொன்னது உண்மைனு நம்புறீங்களா?” என்று ரவி கேட்க,

“சாரி பா, இந்த ஏரியால இது மாதிரி நிறைய நடக்குது. இந்தக் காலத்துல சென்செக்ஸ் எடுக்க வரேன், ப்ராடக்ட் விக்க வரேன்னு டீசன்டா ட்ரஸ் பண்ணித் தான் திருட வராங்க. அதான் யாரையும் நம்ப முடியலை.”

“புரியுது சார். நாங்களும் கொஞ்சம் எடக்கா பேசவும் உங்களுக்கு எங்க மேல சந்தேகம் வந்துருச்சு. பரவால சார். நாங்க சொன்ன விஷயம் என்னாச்சு சார்?”

“நீங்க சொன்ன மாதிரி தான் நடந்துருக்கு. நீங்களே பாருங்க தெரியும்.” என்று கூறி பென் டிரைவ்வை அவர் தர,

சாத்விகா அதை வாங்கி தன் வேலட்டிலிருந்து ஒரு கனெக்ட்டரை எடுத்து அதன் ஒரு முனையில் பென் டிரைவ்வையும் அதன் இன்னொரு முனையை ஃபோன்னில் கனெக்ட் செய்து அவளது கைப்பேசியிலே அவர் கொண்டு வந்த தொகுப்பைப் பார்க்க ஆரம்பித்தார்கள் சாத்விகாவும் ரவியும்.

அவர்கள் சந்தேகித்த படி அந்தக் கணக்காளர் அவரே பணத்தைச் சுற்றிமுற்றும் பார்த்து விட்டு யாருமில்லை என்பதை உறுதிப்படுத்தி விட்டு எதிரிலிருந்த ஆளிடம் கொடுத்தார். அது தெள்ளத் தெளிவாகப் பதிவாகி இருந்தது. இருவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி. அந்த மனிதரிடம் நன்றி உரைத்து விட்டு அவர்கள் அங்கிருந்து கிளம்பினர்.

~~~~~~~~~~

ஆதன் வெளியே வந்து அவனது ஜீப்பில் ஏற, செல்வம் ஆர்வத்துடன் ஆதனின் முகத்தைப் பார்த்தார். ஆதன் அதை முதலில் கவனிக்கவில்லை. அவனது நினைவு எல்லாம் எப்படி இது கொலை என்று நிரூபிப்பது என்பதிலே இருந்ததால் அவன் செல்வத்தின் முகத்தைப் பார்க்கவில்லை.

செல்வமும் அவன் ஏறியதிலிருந்து ஏதோ யோசனையிலே இருப்பது தெரிய அவரே,”சார் கமிஷ்னர் என்ன சொன்னார்? அந்த வேலுமணி கூட வந்தார் போல?” என்று கேட்க,

“ஆமா செல்வம். கமிஷ்னர், நான் முன்னாடி வேலை செஞ்ச அல்ஃபோன்ஸ் சாரோட சீனியர். அவர் என்னைப் பத்திச் சொல்லிருப்பார் போல. அதனால எனக்கு வேலை சுலபமா முடிஞ்சது. கமிஷ்னர் சார் எனக்கு ஒரு வாரம் டைம் கொடுத்துருக்கார். அதுக்குள்ள இது கொலைனு நிரூபிக்க ஏதாவது ஆதாரம் கொண்டு வரச் சொல்லிருக்கார்.” என்று ஆதன் கூற,

“ரொம்ப சந்தோஷம் சார். இப்போ தான் நிம்மதியா இருக்கு சார். வேலுமணி வந்ததைப் பார்த்து கேஸை அவர்கிட்டயே ஒப்படைச்சுவாங்களோ பயந்துட்டேன் சார்.”

“அவர் ஒழுங்கா விசாரிக்காதனால தான் இவ்ளோ பிரச்சனையே!! திரும்ப அவர்கிட்டயே கொடுக்க மாட்டாங்கனு சார்கிட்ட பேசுனதும் தோனுச்சு செல்வம்.”

“அதுவும் உண்மை தான் சார். அவர் ஒழுங்கா விசாரிச்சுந்தா நீங்க ஏன் கமிஷ்னரை போய் பார்க்கப் போறீங்க?”

“ம் ஆமா செல்வம்.” என்று கூறிவிட்டு ஆதன் அமைதியாகி விட, செல்வமும் அதற்கு மேல் எதுவும் பேசாமல் வண்டி ஓட்டுவதில் கவனம் செலுத்தினார்.

சில நிமிடங்களில் ஆதனின் வீடு வர, செல்வம் ஜீப்பை அவன் வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு அவனிடம் கூறிவிட்டு அவர் செல்ல, சரியாக அதே நேரம் எட்வின் அங்கு வந்தான்.

“வா எட்வின். நானே இப்போ உனக்கு ஃபோன் பண்ணலாம்னு நினைச்சேன். நீயே வந்துட்ட. வா உள்ள வா.” என்று கூறிக் கொண்டே வீட்டின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றான். அவன் பின்னேயே எட்வின்னும் உள்ளே சென்றான்.

“கமிஷ்னர் என்ன சொன்னார் ஆதன்?” வந்ததும் வராததுமா எட்வின் கேட்க, ஆதன் சிரித்துக் கொண்டே கட்டை விரலைக் காட்டி,

“சக்சஸ் எட்வின். ஆனால் முழுசா இன்னுமா கிடைக்கலை. நமக்கு ஒரு வாரம் டைம் இருக்கு. அதுக்குள்ள இது கொலைனு நிரூபிக்க நான் ஆதாரம் காமிக்கனும்.”

“அவ்ளோ தான!! அதெல்லாம் நமக்குக் கிடைக்கும் ஆதன். நீ கவலைப்படாத சரியா. உன்னால கண்டிப்பா முடியும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு ஆதன்.”

“எஸ் எட்வின் எனக்கும் நம்பிக்கை இருக்கு.”

“ம் ஓகே ஆதன். இதைக் கேட்கத் தான் வந்தேன். அப்போ நான் கிளம்புறேன்.”

“எட்வின் இரு டா. உனக்கு டீ போடுறேன் குடிச்சுட்டு போ.”

“இல்லை டா நான் வீட்டுல போய் குடிச்சுக்கிறேன். நீயே இப்போ தான் வந்துருக்க, கொஞ்சம் ரெஸ்ட் எடு.”

“ம்ஹூம். ரெஸ்ட் எடுக்கலாம் நேரமில்லை. அடுத்து அடுத்து வேலை நிறையவே இருக்கு எட்வின்.”

“சரி நீ அதைப் பார். நான் கிளம்புறேன்.” என்று எட்வின் கூறிவிட்டுக் கிளம்பிவிட்டான்.

ஆதனும் முகம் கழுவி விட்டு உடை மாற்றிக் கொண்டு அவனுக்கு டீ போட்டுக் குடித்து விட்டு சிறிது நேரம் கண்ணை மூடி அப்படியே அமர்ந்திருந்தான். அடுத்து எப்படித் தொடங்கலாம் என்று பலமாகச் சிந்தித்தான். அது தற்கொலை இல்லாமல் கொலையாக இருந்தால் கண்டிப்பாக ரம்யாவின் பிரேதப் பரிசோதனையில் தெரிந்திருக்கும். ஆனால் அறிக்கையில் அப்படி எதுவுமில்லை. ஒரு வேளை மருத்துவர் பொய் உரைத்திருப்பாரோ!! அப்போது முதலில் அவரைத் தான் போய் சந்திக்க வேண்டும் என்று முடிவெடுத்துக் கிளம்ப எத்தனிக்கும் போது தான் ஆதனுக்கு மனதில் பட்டது,’தான் போய் கேட்டதும் இதை அப்படியே சொல்லிடுவாரா அந்த மருத்துவர்?’ என்பது தான்.

இப்போது என்ன செய்ய என்று தெரியாமல் அமைதியாக நின்றிருக்க, சட்டென்று அவனது மூளையில் யோசனை உதித்தது. காவல் துறை அதிகாரி சென்று பார்த்தால் தானே அவர் சொல்ல மாட்டார். நாம் ஏன் டிடெக்டிவ் மூலம் சென்று பார்க்கக் கூடாது என்ற யோசனை உதிக்க, நொடியும் தாமதிக்காமல் வீட்டைப் பூட்டி விட்டு வண்டியை எடுத்துக் கொண்டு சாத்விகாவை பார்க்கச் சென்றான்.

~~~~~~~~~~

சாத்விகா அவளது வீட்டில் அமர்ந்து அன்று இரவுக்குச் சமைக்கலாமா இல்லை வெளியில் வாங்கிச் சாப்பிடலாமா என்று தனக்குள்ளே பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தாள்.

அந்த நேரம் பார்த்து அவள் வீட்டின் மணி ஒலி எழுப்ப, யார் இந்த நேரத்தில் வந்திருப்பார்கள் என்று யோசித்துக் கொண்டே சென்று கதவைத் திறந்தாள்.

ஆதன் தான் நின்றிருந்தான். அவனை முதலில் அவளுக்கு அடையாளம் தெரியவில்லை. ஒரு நிமிடம் மேல் பார்த்தும் தான் அவளுக்கு அவனை உணவகத்தின் வெளியே பார்த்தது ஞாபகம் வர,

“என்ன சார் இந்தப் பக்கம்?” என்று அவள் அவனை உள்ளே அழைக்காமலே பேச,

“உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்.” என்று மட்டும் அவன் கூற, ஒரு நொடி யோசித்து விட்டு,

“உள்ள வாங்க சார்.” என்று அவள் வழி விட, ஆதன் உள்ளே சென்றான். சாத்விகாவும் கதவை அடைத்து விட்டு அவன் பின்னால் வந்தாள்.

“உட்காருங்க சார். என்ன குடிக்கிறீங்க? டீ ஆர் காஃபி?”

“நோ தாங்க்ஸ் நான் இப்போ தான் குடிச்சுட்டு வந்தேன்.” என்று அவன் கூற, அவள் உள்ளே சென்று தண்ணீர் எடுத்துக் கொண்டு வந்தாள்.

அதை வாங்கிக் கொஞ்சம் குடித்தவன், பாட்டில்லை கீழே வைத்துவிட்டு,”நா நேரா விஷயத்திற்கு வரேன். உங்க ஹெல்ப் எனக்கு வேணும்.” என்று மொட்டையாக அவன் கூற, சாத்விகாவிற்கு புரியவில்லை.

“சார் நீங்க சொல்றது புரியலை. நான் உங்களுக்கு என்ன ஹெல்ப் பண்ணனும்?”

“நான் இப்போ ஒரு கேஸ் எடுத்துருக்கேன். நீங்க டீவில பார்த்துருப்பீங்க!! சமூக ஆர்வலர் ரம்யா தற்கொலைனு.”

“ஆமா சார் பார்த்தேன்.”

“ம் எனக்கு அது தற்கொலை மாதிரி தெரியலை. கொலை மாதிரி தோணுது. மாதிரி என்ன கொலை தான். அதைக் கண்டுபிடிக்க எனக்கு உங்க உதவி வேணும்.” என்று அவன் கேட்க,

“சார் இது என்னோட பாக்கியம். கண்டிப்பா நான் உங்களுக்கு இதுல எந்த உதவினாலும் செய்றேன் சார்.”

“ரொம்ப சந்தோஷம். அப்போ உங்களோட முதல் வேலை, கவர்மென்ட் ஹாஸ்பிட்டல் டாக்டர் காமராஜை நீங்க பார்க்கனும். பார்த்து அவருக்குச் சந்தேகம் வராத மாதிரி ரம்யாவோட அட்டாப்ஸி ரிப்போர்ட் உண்மையான ரிப்போர்டானு தெரிஞ்சுகனும்.” என்று ஆதன் கூற,

“அவ்ளோ தான சார். அது ரொம்ப சுலபமா செஞ்சுடலாம். நாளைக்குக் காலைல என்னோட முதல் வேலையே அது தான் சார். முடிச்சுட்டு உங்களுக்கு ஃபோன் பண்றேன் சார்.” என்று சாத்விகா கூற,

“நோ நீங்க இப்பவே போய் அவரைப் பார்க்கனும்.” என்று ஆதன் கூற, சாத்விகா புரியாமல் அவனைப் பார்க்க,

“எனக்கு ஒன் வீக் தான் டைம் இருக்கு. அதுக்குள்ள நான் இது கொலை தான்னு நிரூபிக்கனும். அதனால தான் உங்களை நான் இப்பேவே போகச் சொல்றேன்.”

“ஓ!! ஓகே சார். நான் இப்பவே கிளம்புறேன்.”

“நானும் வரேன் உங்க கூட, நான் வெளில இருக்கேன். நீங்க உள்ள போய் விசாரிட்டு வாங்க.” என்று அவன் கூற, அவள் எதுவும் கூறாமல் தலையை மட்டும் அசைத்தாள்.

ஆதன் வெளியே வந்து விட, சாத்விகா கதவை எல்லாம் பூட்டி விட்டு அவளும் வெளியே வந்தாள்.

“இருங்க நான் போய் ஆட்டோ ஏதாவது இருந்தா கூட்டிட்டு வரேன்.” என்று அவன் கூற,

“சார் ஆட்டோ எதுக்கு? வண்டி தான் இருக்கே, அதுலயே போகலாம்.” என்று அவள் சாதாரணமாகக் கூற, ஆதனிற்கு தான் எப்படிச் செயல்பட என்று புரியவில்லை.

“சார் என்ன அப்படியே நின்னுட்டீங்க? ஒன்னா வண்டில வர உங்களுக்கு எதுவும் ப்ராப்ளமா சார்?” என்று அவள் கேட்க, இதற்கு மேல் அமைதியாக இருந்தால் நன்றாக இருக்காது என்று அவன் எதுவும் பேசாமல் வண்டியை எடுத்தான்.

ஆதன் வண்டியை எடுக்கவும் சாத்விகா பின்னால் அமர, அவனுக்கு தான் கூச்சமாக இருந்தது. ஆனால் சாத்விகா சாதாரணமாகத் தான் இருந்தாள். ஆதனிற்கு நன்றாக வண்டி ஓட்டத் தெரியும். ஆனால் சாத்விகா பின்னால அமர்ந்திருப்பதால் அவனுக்கு வண்டி ஓட்டச் சற்று சிரமமாக இருந்தது.

இதுவரை அவன் வண்டியில் ஒரு பெண்ணையும் ஏற்றியது கிடையாது. ஏன் அவனது அம்மாவையே அவன் அழைத்துச் சென்றது கிடையாது. பெரும்பாலும் அவர் அவனது தந்தையுடன் தான் செல்வார். அதனால் அவனுக்கு அவனது அம்மாவை அழைத்துச் செல்ல வாய்ப்பு அமைந்தது இல்லை.

முதல் முறை ஒரே ஒரு முறை மட்டுமே பழகிய பெண். தன் பின்னால் தன் வண்டியில் அமர்ந்து வருவது அவனுக்குப் புதிதாக அதே சமயம் இனம்புரியாத உணர்வுடன் தான் வண்டி ஓட்டிக் கொண்டிருந்தான்.

~~~~~~~~~~

வேலுமணி விஷயத்தை கல்யாணிடம் கூறியதும் அவன் மிகுந்த கோபம் அடைந்தான். அவனது அப்போதைய கோபத்திற்கு அளவு கோலே இல்லை. ஆதனை பற்றி அவன் கேள்விப்பட்டது உண்டு. ஆதன் பார்க்கச் சாதுவாக இருந்தாலும் வேலை என்று வந்துவிட்டால் வெள்ளைக்காரன் போல் தான் அவன் செயல்படுவான். இதுவரைக்கும் அவன் எடுத்த வழக்கு அனைத்தையும் சரியாக முடித்திருக்கிறான். எங்கு அவன் இந்த வழக்கிலும் உண்மையைக் கண்டுபிடித்து விடுவானோ என்று பயந்தான். அப்படி அவன் கண்டுபிடித்தால் கண்டிப்பாக பாண்டி தன்னைச் சும்மா விட மாட்டான் என்று புரிய, ஏதாவது செய்ய வேண்டும் என்று பலமாக யோசித்தான். ஆதனை நேராக எதிர்த்து அவனை வீழ்த்த முடியாது. அவனது முதுகில் குத்தித் தான் அவனை வீழ்த்த வேண்டும் என்று யோசித்து அதற்குத் தகுந்த படி சில திட்டங்களை வகுத்தான்.

ஆதன் இவன் வலையில் சிக்குவானா? அல்லது அவன் பின்னிய அதே வலையில் கல்யாண் சிக்குவானா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

Advertisement