Advertisement

சாத்விகாவும் ரவியும் பக்கத்தில் உள்ள ஒரு நல்ல உணவகத்திற்குச் சென்றனர். அங்குக் காலியாக இருந்த இடமாகப் பார்த்து அமர்ந்தனர். பேரர் வந்து ஆர்டர் எடுத்துச் சென்றவுடன் ரவி தான் ஆரம்பித்தான்,

“என்ன பண்றது ராக்கி? இந்த கேஸ் நமக்குக் கொஞ்சம் ரிஸ்க்கா இருக்கும்னு தோனுது.”

“பீஸ்ட் இந்த மாதிரி கேஸ் தான் நம்மளை அடுத்த லெவலுக்கு எடுத்துட்டு போகும். நாம இன்னொரு முறை அந்த இடத்தை நல்லா பார்க்கலாம். முதல்ல நம்ம கண்ல படாத விஷயம் இரண்டாவது முறை பார்க்கும் போது படலாம். ஸோ முயற்சியைத் தளர்த்தாமல் நம்பிக்கையா இரு. என் உள் மனசு சொல்லுது இந்த கேஸ்ல நமக்குக் கண்டிப்பா ஏதாவது க்ளூ கிடைக்கும்.” என்று சாத்விகா நம்பிக்கையுடன் கூற,

“நீ இவ்ளோ நம்பிக்கையா சொல்றனா கண்டிப்பா இந்த கேஸ்ல உண்மையை நாம கண்டுபிடிச்சுருவோம்னு நம்பிக்கை வந்துடுச்சு எனக்கு. நீ சொன்ன மாதிரி சாப்பிட்டுப் போய் மறுபடியும் பார்க்கலாம்.” என்று ரவி கூற, சாத்விகா தலையசைத்தாள்.

“ம் ஜெசிக்கா மட்டும் தான் ஆபிஸ்ல இருக்காளா இல்லை சக்தியும் பிரபுவும் வந்துட்டாங்களானு தெரியலை. இல்லை நாம வருவோம்னு ஜெசி வெயிட் பண்றாளா என்னன்னு தெரியலை. இரு அவளுக்கு ஒரு ஃபோன் பண்றேன்.” என்று கூறிய சாத்விகா, அவளது கைப்பேசியை எடுக்க, சரியாக அதே நேரம் அங்கு வந்தான் கரண்.

சாத்விகா அவனைப் பார்த்தாலும் கண்டுகொள்ளாமல் அவளது கைப்பேசியில் ஜெசிக்காவை அழைக்கப் போகக் கரண் அவர்களது மேஜைக்கே வந்து,”என்ன சாது பார்த்தும் பார்க்காத மாதிரி திரும்பிகிட்ட? ஓ வேற ஒருத்தன் கூட இருக்கிறதால நீ என்னை கண்டுகலையோ!! ஒரு வேளை அவன் இல்லாமல் இருந்துருந்தா நீ என்னைக் கண்டும் காணாமல் இருந்திருக்க மாட்டாள?” என்று அவன் நக்கலாகக் கேட்க, ரவிக்கு கோபம் வந்துவிட்டது.

“ஏய் யாரு டா நீ? மரியாதையா பேசு இல்லாட்டி பல்லை பேத்து கையில கொடுத்துருவேன்.” என்று எகிர,

“அட இந்த ஹீரோயிஸத்தை எல்லாம் ஒரு பொண்ணு உங்க முன்னாடி இருந்தா நல்லா தான் காட்டூவீங்க. அடங்கு டா, என்னைக் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு கூட உனக்கு என்ன டா பேச்சு?” என்று கரண் அவனைப் பார்த்துக் கேட்க, ரவி ஏதோ பேச வருவதற்கு முன்பு, சாத்விகாவே,

“ரவி கண்டவன் பேசுறதுக்கு எல்லாம் நீ எதுக்கு மதிப்பு கொடுக்கிற? நாய் குறைச்சாலோ இல்லை ரோட்ல ஏதாவது அசிங்கத்தைப் பார்த்தாலோ என்ன பண்ணுவோம்? அதைக் கண்டுக்காம நாம அங்கிருந்து போயிடுவோம்ல. அதே மாதிரி இவன் பேசுறதுக்கு நாம மதிப்புக் கொடுத்துத் திருப்பிப் பேசுனோம்னா அவனுக்கும் நமக்கும் வித்தியாசமே இல்லாம போயிடும். நாம இங்கச் சாப்பிட வந்தோம் அதை மட்டும் பார்ப்போம். கண்டவனுக்கு எல்லாம் நாம பதில் சொல்ல வேண்டாம்.” என்று சாத்விகா கரணைப் பார்க்காமலே ரவியை மட்டுமே பார்த்துக் கூற, கரணிற்கு மிகுந்த அவமானமாகப் போய் விட்டது.

“ரொம்ப பேசுற நீ சாத்விகா! இதுக்கு எல்லாம் நீ அனுபவிக்கத் தான் போற! அத்தை ஏதோ என்கிட்ட கெஞ்சி கேட்டதால தான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்க சரினு சொன்னேன். ஆனால் நீ எப்பவும் என்னை அசிங்கப் படுத்திட்டே இருக்க. இதுக்கு நீ கண்டிப்பா ஃபீல் பண்ணத் தான் போற. நான் எங்க பேசனுமோ அங்கப் பேசிக்கிறேன்.” என பேசிவிட்டு இல்லை கத்திவிட்டு அவன் சென்றுவிட, சாத்விகா எதுவும் நடக்காதது போல ஜெசிக்காவை அழைத்து அவர்கள் வர நேரமாகும் என்று கூறிவிட்டு அவள் என்ன செய்கிறாள் என்றும் கேட்டு விட்டு அவளது கைப்பேசியை வைத்தாள்.

ரவி அவளையே வியப்பாகப் பார்த்து,”என்ன ராக்கி அவன் இவ்ளோ பேசுறான் நீ எதுவுமே நடக்காத மாதிரி அமைதியா இருக்க. எனக்குப் பயங்கர கோபம். நீ சொன்னதால தான் அமைதியா இருந்தேன். இல்லாட்டி அவன் இந்நேரம் ஹாஸ்பிட்டல்ல இருந்துருப்பான்.” என்று சிறிது ஆதங்கத்துடன் அவன் கூற,

“ரவி அவன் பேசுனது என்னை எந்த விதத்திலும் பாதிக்கலை. என்னமோ அவன் எனக்கு வாழ்க்கைப் பிச்சை போடுற மாதிரி பேசுறான். அந்த அளவுக்கு நான் ஒன்னும் குறைஞ்சு போயிடல!! ராஸ்கல் அவனைப் பார்த்தாலே கடுப்பாகுது. இந்த கோமதிக்கு எத்தனைத் தடவைச் சொன்னாலும் புரியாது போல. எல்லாம் அவங்க குடுக்கிற இடம். பார்த்துக்கலாம் எவ்ளோ தூரம் போறாங்கனு.” என்று சாத்விகா கூற, சரியாக அவர்களது சாப்பாடும் வர, இருவரும் அதற்கு மேல் எதுவும் பேசாமல் அமைதியாகச் சாப்பிட்டனர்.

~~~~~~~~~~

ஆதன் மிகவும் பதற்றமாக அதே சமயம் படபடப்பாகவும் இருந்தான். கமிஷ்னர் என்ன கூறுவார் என்று தெரியாமல் அவனால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. மதியம் சாப்பிடக் கூடப் பிடிக்காமல் கிளம்பி விட்டான் கமிஷ்னர் அலுவலகத்திற்கு.

“சார் நீங்கக் கவலைப்படாதீங்க, கண்டிப்பா கமிஷ்னர் இந்த கேஸ்ல சரியா நடவடிக்கை எடுப்பார்.” என்று செல்வம் கூற,

“அப்படி நடந்தா ரொம்ப சந்தோஷம் செல்வம். ஆனால் வேலுமணியையும் கல்யாணையும் நம்ப முடியாது. திரும்ப அவங்ககிட்டயே கேஸை ஒப்படைச்சா என்ன பண்றது?”

“சார் அவங்ககிட்டேயே ஒப்படைக்க மாட்டாங்க சார். கமிஷ்னர் உங்களையே கேஸ் எடுத்து நடத்தத் தான் சொல்லப் போறார் பாருங்க.”

“அப்படி நடந்தா சந்தோஷம் செல்வம். என்னோட குற்றவுணர்ச்சியும் கொஞ்சம் குறையும்.” என்று ஆதன் கூற, செல்வம் அவனைப் புரியாமல் பார்த்தார்.

“சார் என்ன சொல்றீங்க? நீங்க என்னத் தப்புப் பண்ணீங்க? உங்களுக்கு எதுக்கு சார் குற்றவுணர்ச்சியா இருக்கு?” என்று செல்வம் கேட்க,

“உங்ககிட்ட சொல்றதுக்கு என்ன செல்வம்? ரம்யா இறந்து போறதுக்கு முந்தின நாள் நான் தான் அவங்களை அவங்க வீட்டுல கொண்டு போய் விட்டுட்டு வந்தேன். அப்பவே ஒரு மாதிரி ரெஸ்ட்லெஸ்ஸா இருந்தாங்க. நான் அப்பவே அவங்ககிட்ட விஷயம் என்னன்னு கேட்டுருந்தா இந்நேரம் அவங்க உயிரோட இருந்துருப்பாங்க.” என்று ஆதன் கூற,

“சார் புரியலை. உங்களுக்கு அவங்களை முன்னாடியே தெரியுமா?” என்று செல்வம் கேட்க, ஆதன் அன்று நடந்ததை விவரிக்க, செல்வத்திற்கு என்ன சொல்வது என்று புரியவில்லை.

“சார் உங்க மேல எந்தத் தப்பும் இல்லை. அந்த இடத்துல யார் இருந்தாலும் அப்படித் தான் நடந்துருப்பாங்க சார். நீங்க அவங்ககிட்ட கட்டாயப் படுத்திக் கேட்டிருந்தாலும் அவங்க சொல்லிருக்க வாய்ப்பில்லை சார். அதனால் நீங்க இதுல குற்றவுணர்ச்சியா ஃபீல் பண்ண வேண்டிய அவசியம் இல்லை சார்.” என்று செல்வம் ஆதனுக்கு ஆதரவாகப் பேச, ஆதனுக்கு சற்று ஆசுவாசமாக இருந்தது.

ஆதன் பதில் கூறுவதற்கு முன்பே கமிஷ்னர் அலுவலகம் வர, செல்வத்திடம் கூறிவிட்டு ஆதன் இறங்கி உள்ளே சென்று விட்டான்.

சில நிமிட காத்திருப்பிற்குப் பிறகு ஆதன் கமிஷ்னர் அறைக்குள் நுழைய, கமிஷ்னர் அவனைப் பார்த்து,”ஹலோ எங்க் மேன் வா வா.” என்று சிரிப்போடு கூற, ஆதனுக்கு வியப்பாக இருந்தது.

அவனது முகத்தைப் பார்த்தே புரிந்து கொண்ட கமிஷ்னர்,”என்ன மேன் உன்னை எப்படி எனக்குத் தெரியும்னு யோசிக்கிறியா?”

“ஆமா சார்.” என்று மறைக்காமல் கூற,

“உன்னோட முன்னால் சீனியர் ஆபீசர். அதான் மேன் நீ சேலத்துல எஸ்.ஐ. ஆ இருந்த போது அங்க எஸ்.பி. யா இருந்தான்ல அல்ஃபோன்ஸ், அவன் என்னோட ஜூனியர் தான். உன்னைப் பத்தி நிறையவே சொல்லிருக்கான். நானே உன்னைப் பார்க்கனும்னு நினைச்சுருந்தேன். நீயே என்னைப் பார்க்க வந்துட்ட.” என்று கமிஷ்னர் கூற, ஆதனுக்கு அப்பொழுது தான் முழு நம்பிக்கை வந்தது அவர் மீது.

“ரொம்ப சந்தோஷம் சார். என்னை அவருக்குப் பிடிக்கும்னு தெரியும் சார். ஆனால் உங்ககிட்ட சொல்லிருப்பார்னு நான் எதிர்பார்க்கலை சார்.”

“நானும் உன்ன மாதிரி தான். சென்னை சிட்டி கமிஷ்னரா பொறுப்பேத்து ஒன்றரை வருஷம் தான் ஆச்சு. அப்போ தான் அல்ஃபோன்ஸ் என்கிட்ட சார் நீங்களும் சென்னை போயிட்டீங்க, இந்த ஆதனும் சென்னை போயிட்டான்னு சொல்லி உன்னைப் பத்தி எனக்குச் சொன்னான். சரி அந்தக் கதை எல்லாம் விடு. என்னை எதுக்கு பார்க்க வந்துருக்க?” என்று அவர் கேட்க,

“சார் நீங்க நியூஸ்ல பார்த்துருப்பீங்க சமூக ஆர்வலர் ரம்யா தற்கொலைனு.”

“ஆமா அதைப் பார்த்ததும் எனக்கும் அதிர்ச்சி தான். ஆனால் அதுக்கும் நீ என்னைப் பார்க்க வந்ததுக்கும் என்ன சம்மதம்?”

“இருக்கு சார். எனக்கு அவங்க சாவுல மர்மம் இருக்கும்னு தோனுது சார்.”

“அதாவது இது தற்கொலை இல்லை கொலைனு தோனுதா?” என்று அவர் கேட்க,

“ஆமா சார். அதுக்கு என்கிட்ட காரணம் இருக்கு சார்.” என்று கூறி அன்று ரம்யாவை பார்த்ததும், அவள் பதற்றமாக இருந்ததும், குழந்தை வீட்டில் உள்ளது எனப் பொய் கூறியது, அதை விட போலிஸ் என்று கூறியதும் அவள் பயந்தது என எல்லாவற்றையும் விளக்கிக் கூற,

“நீ சொல்றதை பார்த்தா எனக்கும் சந்தேகம் வருது. தற்கொலை பண்றவங்க எதுக்கு பதட்டமா இருக்கனும்? கார் ரிப்பேர் அதோட கீயை உள்ள வச்சுட்டேன் அப்படினு சொன்னது நம்புற மாதிரி இல்லையே!”

“ஆமா சார். ரம்யா இறந்துட்டாங்கனு தெரிஞ்சதும் நான் போய் அவங்க கார் இருக்குனு சொன்ன ஸ்பாட்க்கு போய் பார்த்தேன் சார். ஆனால் அங்க கார் இல்லை சார்.”

“ஓ!! சரி இதை இந்த கேஸ் விசாரிக்கிற இன்ஸ்பெக்டர்கிட்ட சொன்னியா?”

“சார் இந்த கேஸோட இன்ஸ்பெக்டர் வேலுமணி, நான் சேலத்துல வொர்க் பண்ணிட்டு இருக்கும் போது என்னோட மேலதிகாரி சார்.” என்று மட்டுமே ஆதன் கூற,

“ஓ!! ஆள் சரியில்லையோ!!”

“ஆமா சார். நான் அவருக்கு கீழ வேலைப் பார்க்கும் போது தேர்தல் பிரசார சமயத்துல நடந்த ரெய்ட்ல நாங்க நாங்க சீஸ் பண்ணப் பணத்துல பாதிக்கும் மேல அவர் எடுத்துக்கிட்டார் சார். அது மட்டுமில்லாம ஒருத்தர் அவரோட பொண்ணு கல்யாணதுக்கு சேர்த்து வைச்ச பணத்தை பேங்க்ல இருந்து எடுத்துட்டு போகும் போது அதையும் இதைச் சாக்கா வைச்சு அவர்கிட்ட பிடுங்காத குறையா பிடிங்கிட்டார் சார். அதனால நான் அந்தப் பெரியவர்கிட்ட எஸ்.பி.ய போய் பார்க்கச் சொன்னேன் சார். அந்தப் பெரியவரை முதல்ல விடலை சார். அப்புறம் நான் அவரை எஸ்.பி. வீட்டுக்குக் கூப்பிட்டு போனேன் சார். அது தெரிஞ்சு வேலுமணி என்னையும் என் ஃபேமிலயும் ரொம்ப டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சுட்டார் சார். எங்க அப்பா வேலைச் செய்யுற இடத்துக்கு நகை வாங்குற மாதிரி போய் பெரிய பிரச்சனை பண்ணிட்டார் சார். அந்தக் கடை முதலாளி நல்லவர் சார் அதனால அப்பாவை எதுவும் சொல்லலை சார். அப்புறம் எஸ்.பி.சார் தான் கூப்பிட்டு கண்டிச்சார் சார். அதுக்கு அப்புறம் அவர் எங்க வழிக்கு வரலை சார்.”

“ம் இவ்ளோ நடந்துருக்கா. சரி நான் என்னன்னு பார்க்கிறேன்.” என்று கூறி பக்கத்திலிருக்கும் அலைப்பேசியை எடுத்து அவரது உதவியாளரை அழைத்து வேலுமணியை இங்கு வரச் சொல்லி உத்தரவிட்டு வைத்தார்.

வேலுமணி வரும் வரை பொதுவாக ஆதனும் கமிஷ்னரும் பேசிக் கொண்டிருந்தனர். அவனது குடும்பத்தைப் பத்தியும் அவன் படிப்பைப் பற்றியும் அவனது விடாமுயற்சி பற்றியும் கேட்கக் கேட்க கமிஷனருக்கு அவனை மிகவும் பிடித்து விட்டது.

சரியாக அரை மணி நேரத்தில் அங்கு வந்தார் வேலுமணி. அவருக்கு ஒன்றும் புரியவில்லை. அவரது காவல் நிலையத்தில் நன்றாகக் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்த போது கமிஷ்னர் அலுவலகத்திலிருந்து ஃபோன் வந்து கமிஷ்னரை அவரைப் பார்க்க வேண்டுமாம் அதனால் சீக்கிரம் அவரது அலுவலகத்திற்கு வர வேண்டும் என்று கூற, அடித்துப் பிடித்து எழுந்து அரக்கப்பரக்க ஓடி வந்துள்ளார்.

வேலுமணி வந்ததும் உள்ளே அனுப்புங்கள் என்று ஏற்கனவே கமிஷ்னர் கூறியிருந்ததால் அவர் வந்தவுடனே கமிஷ்னரின் அறைக்கு அழைத்துச் சென்றார் உதவியாளர்.

கதவைத் தட்டி விட்டு வேலுமணி நடுக்கத்துடன் உள்ளே நுழைய, அங்கு அமர்ந்திருந்த ஆதனை பார்த்து ஒரு நிமிடம் திடுக்கிட, அதைக் காட்டாமல் மனதிற்குள்ளே,”அய்யோ இவனா!! சரியான கிரகம் பிடிச்சவன் ஆச்சே!! இப்போ என்ன ஏழரையை கூட்டப் போறானோ தெரியலையே!!” என்று பொறுமிக் கொண்டே உள்ளே வந்தார்.

வேகமாக கமிஷ்னருக்கு ஒரு சல்யூட் அடித்து விட்டு,”சார் நீங்கக் கூப்பிட்டீங்க ஃபோன் பண்ணிச் சொன்னாங்க சார்.”

“ம் முதல்ல உட்காருங்க” என்று கூறிய கமிஷ்னர் அவர் உட்கார்ந்தவுடன்,”ஆமா, ரம்யா தற்கொலை கேஸ் என்னாச்சு?” என்று அவர் கேட்க,

“சார் அதை நேத்தே க்ளோஸ் பண்ணியாச்சு சார். அவங்க பாடியையும் அவங்க ஃபேமிலிகிட்ட ஒப்படைச்சுட்டோம் சார்.” என்று அவர் கூற,

“அவங்க கேஸை நல்லா விசாரிச்சீங்களா? ஆதன் வேற மாதிரி சொல்றார்?” என்று அவர் கூற, வேலுமணி ஆதனை சலிப்பாகப் பார்த்து விட்டு,

“சார் அவருக்கு இதே தான் வேலை. அவர் மட்டும் தான் நியாயமா இருக்கிறார் மத்தவங்களாம் அந்நியாயம் பண்றதா நினைப்பு சார். அதுவும் நான் இந்த கேஸ்ல இருக்கேன் தெரிஞ்சு என்னைப் பழி வாங்கவே இப்படிப் பிரச்சனை பண்றார் சார்.” என்று அவர் கூற, அதற்கு ஆதன் பதில் கூறுவதற்கு முன், கமிஷ்னர்

“நான் கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க வேலுமணி. தேவையில்லாதப் பேச்சு வேண்டாம். நீங்கச் சரியா விசாரிச்சீங்களா இல்லையா?”

“சார் நான் ஒழுங்கா தான் விசாரிச்சேன். ரம்யாவே லெட்டர் எழுதி வைச்சுட்டு தான் தற்கொலை பண்ணிருக்காங்க சார். அதே மாதிரி இதுல கொலைக்கான அறிகுறி எதுவுமில்லை சார். நாங்களே வீட்டுக்கதவை உடைச்சு தான் உள்ளே போனோம் சார்.” என்று அவர் கூற, கமிஷ்னர் கேள்வியாக ஆதனை பார்த்தார்.

“சார் அவர் சொல்றது உண்மை தான். அவங்க வீட்டுக்குள்ள கதவை உடைச்சுட்டு தான் போனாங்க, நான் ஒத்துக்கிறேன். ஆனால் ரம்யா இறந்துகிடந்த ரூம்மோட ஜன்னலை யாரோ திறந்து உள்ள வந்துருப்பாங்க போல சார். நான் ஏன் சொல்றேன்னா உள்ள வந்தவங்க ஜன்னல் ஸ்க்ரூவ சரியா டைட் பண்ணாம விட்டுருக்காங்க சார். ஸோ வந்தவங்க ஜன்னல் மூலமா வந்துருப்பாங்கனு நான் நினைக்கிறேன் சார்.” என்று ஆதன் கூற, வேலுமணி இப்போது திறுதிறு என முழித்தார்.

“சொல்லுங்க வேலுமணி இதுக்கு என்னப் பதில் சொல்ல போறீங்க?”

“சார் இது அவரோட யூகம் தான். இப்படி நடந்துருக்கு வாய்ப்பு ரொம்ப கம்மி சார். அப்போ அந்த சூசைட் லெட்டருக்கு இவர் என்ன சொல்லுவார் சார்?”

“சார் யாராவது அவங்களை மிரட்டி எழுத வைச்சுருக்கலாம் சார்.” என்று ஆதன் கூற,

“சார் இவர் கதை எழுதப் போகலாம். இவருக்குக் கற்பனைத் திறன் பயங்கரமா இருக்கு சார்.” என்று வேலுமணி எள்ளலாகக் கூற, ஆதனுக்கு பயங்கர கோபம்.

“சார் நான் ஒன்னும் என்னோட கற்பனையைச் சொல்லலை!! இப்படி நடந்துருக்க நிறையவே வாய்ப்பு இருக்கு சார். ரம்யா நிறைய சமூகப் பிரச்சனைக்குக் குரல் கொடுத்துருக்காங்க. அதுல வேண்டாத யாராவது அவங்க கொலை பண்ணிருக்க வாய்ப்பு அதிகமா இருக்கு சார். நாம அப்படியே விட்டுட்டு உண்மையான குற்றவாளிங்க தப்பிச்சுடுவாங்க சார்.” என்று ஆதன் ஆதங்கத்துடன் கூற,

“சார் நான் தான் சொல்றேன்ல இவருக்கு கற்பனைத் திறன் நிறைய இருக்கு சார். எங்களுக்கு நிறைய கேஸ் இருக்கு சார். தற்கொலைனு தெரிஞ்சுகிட்டே தேவையில்லாம நாம எதுக்கு சார் டைம்ம வேஸ்ட் பண்ணனும்?”

“சார் அவருக்கு நேரமில்லாட்டி நான் கண்டுபிடிக்கிறேன் சார்.” என்று ஆதன் கூற,

“சரி இது எல்லாம் நியாயம் இல்லை. எங்க ஜோன்ல வர கேஸ் இவர் எப்படிப் பார்க்கலாம் சார்?” என்று வேலுமணியும் விடாமல் வாதாட,

“சரி ஆதன் உங்களுக்கு ஒரு வாரம் டைம் தரேன். இது கொலைனு நிரூபிக்க ஏதாவது ஒரு ஆதாரம் கொண்டு வாங்க. அதுக்கு அப்புறம் நாம என்ன பண்றதுனு பார்க்கலாம். இப்போ நீங்க கிளம்பலாம்.”

“ரொம்ப தாங்க்ஸ் சார். கண்டிப்பா நான் ஆதாரத்தோட வரேன் சார். தாங்க் யூ ஒன்ஸ் அகெயின் சார்.” என்று கூறி அவருக்கு சல்யூட் அடித்து விட்டு ஆதன் அங்கிருந்து கிளம்ப, வேலுமணியும் அவன் பின்னே வெளியே வந்தார்.

“நான் இந்த கேஸ்ல இருக்கேன்னு என்னைப் பழிவாங்க நினைச்சு தான் நீங்க இப்படிப் பண்றீங்கனு எனக்குத் தெரியும். நானும் பார்க்கிறேன் எப்படி ஒரு வாரத்துல இல்லாத ஆதாரத்தை எடுத்துட்டு வரீங்கனு.” என்று வேலுமணி கூற, ஆதன் அவரை அழுத்தமாக ஒரு பார்வைப் பார்த்து விட்டு எதுவும் பேசாமல் அங்கிருந்த ஜீப்பில் ஏறிச் சென்று விட்டான்.

அவன் சென்றவுடன் வேலுமணி வேகமாக அவரது ஜீப்பிற்கு வந்து கல்யாணிற்கு அழைத்தார்.

“என்னயா?”

“சார் பெரிய பிரச்சனையாகிடுச்சு. அந்த ஆதன் சும்மா இல்லாம கமிஷ்னரை பார்த்து ரம்யா சாவுல டவுட் இருக்குன்னு சொல்லிட்டான் சார். அவரும் அவனுக்கு ஒரு வாரம் டைம் தரேன் கொலைனு ஏதாவது ஆதாரம் கொண்டு வானு சொல்லி அனுப்பிட்டார் சார்.” என்று இவர் கூற,

“யோவ் ஒரு வேலையை நீ உருப்படியா பார்க்க மாட்டியா? எனக்குனு வந்து சேர்வீங்களா சை வைய்யா ஃபோன்னை.” என்று கத்திவிட்டு வைத்து விட்டான் கல்யாண்.

வேலுமணியும் இவனிடம் எல்லாம் பேச்சு வாங்க வேண்டி இருக்கிறது என நொந்து கொண்டார்.

Advertisement