Advertisement

ஆதன், சாத்விகா அவளது வீட்டில் இல்லை என்று திரும்பி வந்தவுடன் காலை உணவு கூடச் சாப்பிடாமல் கிளம்ப, செல்வம் தான் அவனிடம்,”சார் டிஃபன் சாப்பிட்டீங்களா?”

“இல்லை செல்வம். அதுக்கு நேரமில்லை. அதை விடுங்க உங்களுக்கு மாதவரம் ஸ்டேஷன்ல யாரையாவது தெரியுமா?” என்று ஆதன் கேட்க, சில நிமிடம் யோசித்த செல்வம் வேகமாக,

“ம் தெரியும் சார். அந்த ஸ்டேஷன் ஏட்டு நமக்குத் தெரிஞ்சவர் தான் சார். ஏன் சார் எதுவும் அவர்கிட்ட கேட்கனுமா?”

“ஆமா செல்வம். அவரை நான் இப்போ பார்க்கனும். உங்களால அவரை வரச் சொல்ல முடியுமா?”

“கண்டிப்பா வரச் சொல்றேன் சார். எங்க வரச் சொல்ல சார்?”

“நான் கூப்பிடுறேன்னு சொல்லாம சும்மா பேசனும்னு சொல்லி வரச் சொல்லுங்க செல்வம். அதுக்கு முன்னாடி அவர் எப்படிப் பட்டவர்?” என்று ஆதன் கேட்க, செல்வம் அவன் எதைக் கேட்கிறான் என்று புரிந்து கொண்டு,

“சார் அவரு ரொம்ப நல்லவர். அதனால தான் சர்விஸ் வந்து ரொம்ப வருஷமாகியும் இன்னும் ஏட்டாவே இருக்கிறார்.”

“அப்போ சந்தோஷம் அவரை வரச் சொல்லுங்க.” என்று ஆதன் கூற,

“உடனேவா சார்?”

“ஆமா செல்வம் மதியம் கமிஷ்னரை மீட் பண்ணப் போகனும் அதுக்கு முன்னாடி எனக்குச் சில தகவல்கள் வேணும். அதுக்கு தான் அவரை மீட் பண்ணனும்.”

“சார் நீங்க இவ்ளோ விளக்கம் சொல்ல வேண்டாம் சார். நான் இப்போவே வரச் சொல்றேன்.” என்று கூறிய செல்வம் அவரது கைப்பேசியை எடுத்து மாதவரம் காவல் நிலையத்தின் ஏட்டை அழைத்து அவரிடம் பேச வேண்டுமென ஒரு இடம் கூறி வரச் சொன்னார்.

அரை மணிநேரத்தில் செல்வம் கூறிய இடத்திற்கு அந்த ஏட்டு வர, செல்வம் அவரிடம் சென்று,”நான் கூப்பிட்டதும் வந்ததுக்கு ரொம்ப நன்றி கணபதி. உங்களை ஆதன் சார் தான் பார்க்கனும்னு சொன்னார். அதான் உங்களை இங்க வரச் சொன்னேன். சார் நமக்காக அங்க காத்துட்டு இருக்கார்.” என்று அவர் கூறி முன்னே நடக்க,

“அட நில்லுங்க செல்வம். திடிர்னு என்னை ஃபோன் போட்டு பேசனும்னு வரச் சொல்லிட்டு இப்போ சார் வரச் சொன்னார்னு சொல்றீங்க? என்ன விஷயம் செல்வம்?”

“அது தெரியலை கணபதி. சார் என்கிட்ட எதுவும் சொல்லலை. நீங்க வாங்க ஆதன் சார் ரொம்ப நல்லவர். விஷயம் இல்லாம உங்களைக் கூப்பிட்டிருக்க மாட்டார். அதனால தைரியமா வாங்க.” என்று கூறி அவரை கொஞ்ச தூரம் அழைத்துச் சென்றார்.

ஆதன் ஒரு உணவகத்தில் அமர்ந்திருந்தான். செல்வமும் கணபதியும் அங்கு வர, அவர்கள் இருவரையும் அமரச் சொன்னான்.

“என்ன சாப்பிடுறீங்க?” என்று அவர்களிடம் ஆதன் கேட்க,

“எனக்கு எதுவும் வேண்டாம் சார். நான் சாப்பிட்டுத் தான் வந்தேன்.” என்று செல்வம் கூற,

“ஆமா சார் நானும் சாப்பிட்டுத் தான் வந்தேன்.” என்று கணபதியும் கூற,

“ஆனால் நான் இன்னும் சாப்பிடலையே! உங்களைப் பார்க்க வைச்சு நான் எப்படிச் சாப்பிட முடியும் சொல்லுங்க? சரி டிஃபன் சாப்பிட வேண்டாம். வடை, டீ யாவது சாப்பிடுங்க.” என்று ஆதன் கூற,

“சரி சார். எனக்கு காஃபி.” என்று செல்வம் கூற,

“எனக்கு டீ சார்.” என்று கணபதியும் கூறினார்.

“கணபதி, என்னை ஞாபகம் இருக்கா?” என்று ஆதன் அவரிடம் கேட்க, சற்று நேரம் யோசித்த கணபதி,

“எஸ் சார். நேத்து அந்த சமூக ஆர்வலர் ரம்யா வீட்டுக்கு வந்தீங்க தான சார்?”

“ஆமா கணபதி. சரியா சொன்னீங்க. அந்த கேஸ் விஷயமா பேசத் தான் இப்போ நான் உங்களை இங்கக் கூப்பிட்டேன்.” என்று ஆதன் கூற, அவருக்கு ஒன்றும் புரியவில்லை.

“சார் என்ன சொல்றீங்க? எனக்கு ஒன்னும் புரியல.”

“கணபதி நான் நேரா விஷயத்துக்கு வரேன். எனக்கு ரம்யா இறந்து போனதுல சில சந்தேகம் இருக்கு.”

“சார் சந்தேகமா? என்ன சந்தேகம்?”

“ஆமா சந்தேகம் தான். அது தற்கொலை இல்லை கொலைன்னு சந்தேகம்.” என்று ஆதன் கூற, இருவருக்கும் பயங்கர அதிர்ச்சி.

“சார் என்ன சொல்றீங்க?” என்று பதற்றத்துடன் செல்வம் கேட்க,

“ஆமா செல்வம். அது தற்கொலையா இருக்க வாய்ப்பே இல்லை. இன்னைக்கு இந்த கேஸ் பத்திப் பேசத் தான் நான் கமிஷ்னரை போய் பார்க்கப் போறேன். இதெல்லாம் நான் உங்ககிட்ட சொல்லனும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை. நீங்க எனக்குக் கீழ வேலைச் செஞ்சாலும் நீங்களும் போலிஸ் தான். ஒரு போலிஸா இருந்துட்டு தப்பை மூடி மறைக்கிறது நம்ம தொழிலுக்கு நாம செய்ற துரோகம். அதை நீங்கச் செய்ய மாட்டீங்கனு நம்பித் தான் நான் எல்லா விஷயத்தையும் சொல்றேன்.” என்று ஆதன் கூற,

“சார் நான் என்ன செய்யனும்?” என்று உடனே கணபதி கேட்க,

“நீங்க இப்போ எதுவும் செய்ய வேண்டாம் கணபதி. எனக்குச் சில தகவல்கள் வேணும். அதைச் சொன்னால் மட்டும் போதும்.”என்று ஆதன் கூற,

“என்ன தகவல் வேணும் சார். கேளுங்க நான் சொல்றேன்.”

“நேத்து ரம்யா இறந்த விஷயம் எப்படி உங்களுக்குத் தெரிய வந்துச்சு? அதாவது பாடிய யார் முதல்ல பார்த்தா?” எதுவும் தெரியாதது போல் ஆதன் கேட்க,

“சார் ரம்யா வீட்டுக்குப் பக்கத்து வீட்டுல உள்ளவர் தான் முதல்ல பார்த்துருக்கார் சார். நேத்து எப்போவும் போல காலைல அவர் எழுந்து ஜன்னல் வழியா கீழ பார்த்துட்டு எதார்த்தமா எதிர்ல பார்த்துருக்கார். ரம்யா அறை ஜன்னல் திறந்து இருந்துருக்கு சார். எப்பவும் இந்நேரம் மூடியிருக்கிற ஜன்னல் திறந்து இருக்கிறதைப் பார்த்துட்டு நல்லா உத்துப் பார்த்துருக்கார் சார். கால் மட்டும் அந்தரத்துல ஆடிட்டு இருந்ததைப் பார்த்துப் பயந்து எங்களுக்குத் தகவல் சொன்னார் சார். நான் தான் ஃபோன் எடுத்து பேசினேன் சார்.”

“ஓ!! ரம்யா வீட்டுல அவங்களை தவிர வேற யாருமில்லையா?”

“இல்லை யாருமில்லை.”

“நீங்க எப்படி உள்ள போனீங்க?”

“நாங்க முன் பக்கக் கதவை உடைச்சுட்டு தான் உள்ள போனோம் சார்.”

“வேற வழி எதுவும் இருக்கா அந்த வீட்டுக்குள்ள போக?” என்று ஆதன் கேட்க,

“இல்லை சார். நேத்து நீங்களே பார்த்தீங்கள சார்.” என்று கணபதி கூறிய அதே நேரம் பேரர் வந்து மூன்று பேருக்கும் வடை மற்றும் டீ, காஃபியை வைத்து விட்டுப் போக,

“சாப்பிடுங்க.” என்று கூறிய ஆதன் ஒரு வடையை எடுத்துச் சிறிது கடித்து விட்டு, மீண்டும் ஆரம்பித்தான்,

“ம். அப்புறம் ஃபாரின்சிக் டீம் வந்தாங்களா?”

“வந்தாங்க சார். சந்தேகிக்கும் படி எந்த எவிடன்ஸும் இல்லை சார்.”

“ஓ!! அதனால தான் சூசைட்னு கேஸை க்ளோஸ் பண்ண டிசைட் பண்ணாறா உங்க இன்ஸ்பெக்டர்?”

“அது மட்டுமில்ல சார். கூடவே லெட்டர் ஒன்னு இருந்துச்சு சார்.” என்று கணபது கூற,

“என்ன சொல்றீங்க கணபதி? லெட்டரா? என்ன லெட்டர?” அதையும் தெரியாதது போலவே கேட்டான் ஆதன்.

“ஆமா சார். அது சூசைட் லெட்டர் சார். ரம்யா அவங்க இறந்து போனதுக்குக் காரணம் அவங்களுக்கும் அவங்க கணவருக்கும் கல்யாணமாகி பத்து வருஷமாகியும் இன்னும் குழந்தை இல்லாமல் இருக்கிறதால மனசுடஞ்சு இந்த முடிவெடுக்கிறதா எழுதியிருந்தாங்க சார்.”

“அப்படியா? அந்த லெட்டர் அவங்க தான் எழுதினதா?”

“ஆமா சார். லேப்ல கொடுத்து செக் பண்ணிட்டாங்க சார்.” என்று கணபதி கூற,

“போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் என்ன சொல்லுது?”

“அதுலயும் சூசைட்னு தான் சார் சொன்னாங்க.” என்று கணபதி கூற, ஆதன் யோசித்தான்.

“எப்படி சார் நீங்க இது கொலைனு சொல்றீங்க? சூசைட்கான அத்தனை அறிகுறியும் இருக்கே சார்.” என்று கணபதி கேட்க,

“கணபதி, அது தான் கொலை செஞ்சவங்களோட மாஸ்டர் ப்ளானே!! மத்தவங்க பார்வைக்குப் படாத சில விஷயங்கள் என் பார்வைக்குப் பட்டது. அதனால் தான் எனக்குச் சந்தேகமும் வந்தது. ஓகே கணபதி, நீங்க நாங்க கூப்பிட்டதும் வந்ததுக்கு ரொம்ப நன்றி. எதாவது உதவித் தேவைப்பட்டா நான் உங்களைக் கூப்பிடுறேன்.” என்று ஆதன் கூற,

கணபதியும் தலையசைத்து விட்டு எழுந்து சென்றவர் வேகமாகத் திரும்பி வந்து,”சார் முக்கியமான விஷயம் சொல்ல மறந்துட்டேன். நேத்து நீங்கப் போனதும் இன்ஸ்பெக்டர் தனியா போய் யாருக்கோ பேசினார் சார். அது ஏ.சி.பி.கல்யாண் சாரா தான் இருக்கனும். ஏனா இன்ஸ்பெக்டர் பேசி முடிச்ச கொஞ்ச நேரத்துலயே ரொம்ப பதட்டமா அங்க வந்தார் சார்.”என்று அவர் கூற, ஆதன் அவர் கூறியதை உள் வாங்கிக் கொண்டான். ஆனால் எதுவும் பேசவில்லை. சில நிமிட மவுனத்திற்குப் பிறகு,

“ரொம்ப நன்றி கணபதி. நீங்க என்னைப் பார்த்துப் பேசினதை யார்கிட்டயும் சொல்ல வேண்டும்.”என்று அவன் கூற,

“சார் கண்டிப்பா நான் சொல்ல மாட்டேன். வேற எந்தத் தகவல் வேணும்னாலும் என்னைக் கூப்பிடுங்க சார்.” என்று அவர் கூற,

“சந்தோஷம் கணபதி. சரி கிளம்பலாம்.” என்று அதன் கூற, மூவரும் வெளியே வந்தனர்.

“ஏதாவதுனா கூப்பிடுறேன் கணபதி. என்னோட நம்பர் இது தான். உங்களுக்கும் ஏதாவது செய்தி கிடைச்சா எனக்குக் கூப்பிடுங்க.” என்று கூறி அவனது கைப்பேசி எண்ணைத் தர, அதை வாங்கிக் கொண்டு அவர் சென்று விட, ஆதனும் செல்வமும் ஜீப்பில் ஏறினர்.

“சார் இப்போ எங்க போகனும்?”

“ஸ்டேஷனுக்கே போங்க செல்வம்.” என்று அவரிடம் கூறிவிட்டு,

தான் கமிஷ்னரை பார்க்கப் போவது சிறந்தது என்று யோசித்தான். இப்பொழுது வேலுமணி மேல் மட்டுமல்லாது கல்யாண் மேலும் அவனுக்குச் சந்தேகம் வந்தது. ரம்யாவிற்கான நியாயத்தைக் கண்டிப்பாக வாங்கித் தர வேண்டும் என்று தீர்மானமாக எண்ணினான்.

~~~~~~~~~~

சாத்விகா மற்றும் ரவி இருவரும் அந்த நபர் பணம் தொலைந்தது என்று கூறிய இடத்திற்கு வந்தனர். அந்த இடம் கொஞ்சம் ஆள் நடமாட்டம் குறைவாக இருக்கும் இடமாகத் தான் தெரிந்தது.

“ராக்கி அந்த ஆள் சொன்னது உண்மை தான் போல. இந்த ஏரியால ஆள் நடமாட்டம் ரொம்ப கம்மியா தான் இருக்கு. அந்த ஆள் சொன்ன மாதிரி பணம் திருடு போயிருக்க நிறைய சான்ஸ் இருக்கு.”

“பீஸ்ட் எவ்ளோ கேஸ் பார்த்துருப்போம். இது தான் அவங்களோட ப்ளஸ்ஸே.”

“புரியலை நீ என்ன சொல்றனு.”

“ப்ச், இப்போ நீ இந்த இடத்தைப் பார்த்ததும் பணம் திருடு போயிருக்கும்னு நம்புறல அது தான் அவங்களுக்கும் வேணும். அதனால தான் இந்த இடத்தை அவங்க சூஸ் பண்ணிருக்காங்க.”

“அட ஆமா. நீ சொல்றதும் சரி தான்.”

“ம், நான் சொல்றது எப்பவும் சரி தான். சரி அதை விடு, இங்க எங்கயாவது சீசீடிவி இருக்கானு பார். நீ அந்த சைட் போ, நான் இந்த சைட் போறேன்.” என்று சாத்விகா கூற, ரவியும் அவள் கூறியது போல் செய்தான்.

ஒரு மணி நேரம் அந்த இடத்தைச் சுற்றி வந்தும் அவர்களுக்குக் அங்கு கண்காணிப்பு கருவி இருப்பதற்கான சாத்தியக்கூறு எதுவும் தென்படவில்லை.

“இப்போ என்ன பண்றது ராக்கி? எங்கயும் சீசீடிவி இல்லை. அடுத்து என்ன பண்றது?” என்று ரவி கேட்க, சாத்விகா மீண்டும் ஒரு முறை அந்த இடத்தை நன்றாகச் சுற்றி வந்தாள். அவளுக்கு எதுவும் கிடைக்கவில்லை.

“நாம எத்தனை முறை சுத்தி வந்தாலும் எதுவும் கிடைக்காது ராக்கி. வேற எதாவது தான் பண்ணனும். அதுக்கு முன்னாடி எனக்குச் சாப்பிடனும். டைம் பார்த்தல ஒரு மணி ஆகிடுச்சு.”

“ஒன்னு தான ரவி ஆகுது. அதுக்குள்ள சாப்பிடனுமா? அங்க ஆபிஸ்ல இருந்தா இரண்டு மணிக்கு ஏன் சில சமயம் மூணு மணிக்கெல்லாம் சாப்பிட்டிருக்கோம் மறந்துட்டியா?”

“ஓய் அது ஆபிஸ்ல சும்மா இருக்கும் போது இப்போ வெயில்ல சுத்துனது ஒரு மாதிரி இருக்கு. அதனால முதல்ல போய் சாப்பிடுவோம். அப்போ தான் மூளை நல்லா வேலைச் செய்யும். அதனால சாப்பிட்டு வந்து தெம்பா என்ன பண்றதுனு யோசிப்போம்.” என்று ரவி கூற,

“சரியான திண்ணி பண்டாரம். சரி வா போகலாம்.” என்று சாத்விகா கூற, ரவி வாயெல்லாம் பல்லாக அவள் பின்னால் சென்றான்.

~~~~~~~~~~

ஆதன் அவனது காவல் நிலையத்திற்குச் சென்றதுமே அவனுக்குப் பின்னேயே வந்தான் எட்வின்.

“சார் அப்பவே கிளம்புனீங்க? இப்போ தான் ஸ்டேஷன் வரீங்க?” என்று எட்வின் கேட்க,

ஆதன் மாதவரம் காவல் நிலையத்தின் ஏட்டு கணபதியை பார்த்த விவரம், அவரிடம் பேதியதை என ஒன்று விடாமல் அனைத்தையும் கூற,

“நீங்க என்ன நினைக்கிறீங்க சார்?”

“கண்டிப்பா இது தற்கொலை இல்லை. நான் அங்க போயிட்டு வந்ததும் எதுக்கு வேலுமணி அவசரமா ஃபோன் பேசனும், கல்யாணும் அவசரமா அங்க வரனும்? அப்போ இந்தக் கொலைல ஏ.சி.பி.கல்யாண்கும் பங்கு இருக்குனு தான அர்த்தம். இல்லை அந்த ஆள்கு கொலையாளியைத் தெரிஞ்சுருக்கனும் எட்வின்.”

“கரெக்ட்டா சொன்னீங்க சார். யோசிச்சா எனக்கும் அப்படித் தான் தோனுது. நீங்க கமிஷ்னர்கிட்ட பேசனும்னு முடிவு செஞ்சது ரொம்ப ரொம்ப சரியான முடிவு சார்.”

“ஆமா எட்வின். கமிஷ்னர் என்னை நம்புவாரானு தெரியலை எட்வின். அப்படியே நம்புனாலும் யாரை இந்தக் கேஸ்கு அப்பாய்ன்ட் பண்ணுவாங்கனு தெரியலை. அவங்க எப்படிப் பட்டவட்டங்கனு நமக்குத் தெரியாது. இப்படிப் பல விஷயங்கள் இருக்கு எட்வின்.”

“சார் நீங்க முதல்ல கமிஷ்னரை பார்த்துப் பேசுங்க. அதுக்கு அப்புறம் மத்ததை நாம யோசிக்கலாம். இப்போவே எதுக்கு இவ்ளோ யோசிக்கனும்?”

“நீ சொல்றதும் சரி தான் எட்வின். சரி நீ போய் உன் வேலையைப் பார். சாயந்தரம் வீட்டுக்கு வா. நான் கமிஷ்னரை பார்த்துட்டு நேரா வீட்டுக்குப் போனாலும் போய்டுவேன் சரியா.” என்று ஆதன் கூற, எட்வினும் தலையசைத்து விட்டு அங்கிருந்து சென்றான். எட்வின் கூறியது சரியென்றாலும் கமிஷ்னரை பார்த்துப் பேசி முடிக்கும் வரை அவனால் நிம்மதியாக இருக்க முடியாது என்பதை மட்டும் புரிந்து கொண்டான் ஆதன்.

Advertisement