Advertisement

கல்யாண் வேகமாக ரம்யா இறந்த வீட்டிற்குள் நுழைந்தான். அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்திருந்த வேலுமணி இவனைப் பார்த்து பதற்றமாக எழுந்து அவனிடம் வந்தார்.

“அந்த ஆதன் அதுக்கு அப்புறம் இங்க வந்தானா?”

“இல்லை சார்.”

“சரி அவன் எங்க எல்லாம் போனான்?” என்று கேட்க,

“மாடிக்குப் போனான் சார். அப்புறம் வீட்டுக்குப் பின்னாடி போய் பார்த்திருப்பான் போல கான்ஸ்டபிள் சொன்னான். அதுக்கு அப்புறம் வேகமாக ரம்யாவோட ரூம்கு வந்து ஜன்னலை பார்த்தான். அதுக்கு அப்புறம் என்னை முறைச்சு பார்த்துட்டு போய்ட்டான்.”

“என்னது முறைச்சு பார்த்தானா? இதை நீ என்கிட்ட ஃபோன்ல சொல்லவே இல்லை. என்ன வேலைப் பார்க்கிறியோ!!” என்று அவரைத் திட்டிவிட்டு கல்யாண் வேகமாக ரம்யா இறந்த அறைக்குச் சென்றான். வேலுமணியும் பின்னையே சென்றார்.

ஆதன் பார்வையிட்ட ஜன்னல் பக்கத்தில் சென்று பார்த்தான். அவனுக்கு எதுவும் வித்தியாசமாகப் படவில்லை. அங்கே ஆதன் எதுவும் சந்தேகம் கொள்ளும்படி இல்லையே என்று யோசித்தான். பின் வேலுமணியிடம் திரும்பி,”எதுவும் இங்க க்ளீன் பண்ணீங்களா?”

“இல்லை சார் நாங்க எதுவும் பண்ணலை.” என்று வேலுமணி கூற, கல்யாண்கு என்ன செய்வதெனப் புரியவில்லை.

“சரி இங்க சீக்கிரம் என்ன செய்யனுமோ முடிச்சுட்டு வந்து என்னைப் பார்.” என்று கூறிவிட்டு கல்யாண் சென்றுவிட, அவன் கூறிய கடைசி வார்த்தைகளில் வேலுமணியின் மனம் குளிர, அங்கு முடிக்க வேண்டியதைப் பார்க்கக் கிளம்பி விட்டார்.

வெளியே வந்த கல்யாண் கொஞ்சம் தூரம் சென்று யாருமில்லா இடத்திற்கு வந்து அவனது கைப்பேசியை எடுத்து யாருக்கோ அழைத்தான்.

“சொல்லுங்க கல்யாண். வேலை முடிஞ்சதா?”

“அது எல்லாம் முடிஞ்சது பாண்டி. நீ கவலைப்படாத. இன்ஸ்பெக்டர் நம்ம ஆள் தான். அதனால் வேலை சுலபமாவே முடிஞ்சது.”

“சரி பணத்தை நான் உன் அண்ணன் அக்கவுன்ட்க்கு போட்டு விடுறேன்.”

“ரொம்ப சந்தோஷம் பாண்டி. வேற வேலை இருந்தாலும் சொல்லு. உங்களை மாதிரி ஆளுங்களுக்கு சேவைச் செய்யத் தான் நான் இருக்கேன்.” என்று கூறி கல்யாண் இழித்துக் கொண்டே கைப்பேசியை அணைத்தான்.

வீட்டில் ஆதன் அவனது கைப்பேசியை எடுத்து கமிஷ்னர் அலுவலகத்திற்கு அழைத்து நாளை அவரைச் சந்திக்க அப்பாய்ன்மென்ட் ஒன்றை ஃபிக்ஸ் செய்தான்.

நாளை கமிஷ்னரை சந்தித்து என்ன பேச வேண்டுமென யோசித்துக் கொண்டு இருக்க, அவனது வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது.

யாராக இருக்கும் என்ற யோசனையுடன் சென்று கதவைத் திறக்க எட்வின் நின்றிருந்தான்.

“ஹேய் வா எட்வின். என்ன இந்நேரம் இங்கு வந்துருக்க?”

“சும்மா உன்னைப் பார்த்துட்டு போகலாம்னு வந்தேன் ஆதன்.” என்று எட்வின் வாய் வார்த்தையாகக் கூறினாலும் அவனது கண் ஆதனின் முகத்தில் ஏதாவது தெரிகிறதா என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தது.

ஆதனும் எட்வினும் உள்ளே சென்று அங்கிருந்த சாய்விருக்கையில் அமர்ந்தனர். பின் ஆதன் உள்ளே சென்று சிற்றுண்டியும் அவனுக்குப் பருக காஃபியும் போட்டுக் கொண்டு வந்து அவனிடம் தந்து விட்டு அவனுக்குப் பக்கத்தில் அமர்ந்தான்.

“சொல்லு எட்வின் என் கிட்ட என்ன கேட்கனும்?” சரியாக ஆதன் எட்வினிடம் கேட்க,

“எப்படி ஆதன் நான் ஏதோ கேட்கத் தான் வந்துருக்கேன்னு சரியா புரிஞ்சுகிட்ட?”

“டேய் இதைக் கூடக் கண்டுபிடிக்காட்டி நான் என்ன போலிஸ் சொல்லு?”

“அதுவும் சரி தான். நான் நேரா விஷயத்துக்கு வரேன். உனக்கு என்ன பிரச்சனை? ஏன் காலைல இருந்து ஒரு மாதிரி இருக்க?”

“அது ஒன்னுமில்லை எட்வின் நேத்து கார்த்திக்கையும் சிவாவையும் பார்த்துட்டு வரும் போது ஒரு லேடி லிஃப்ட் கேட்டாங்க டா. ரொம்ப பதட்டமா இருந்தாங்க. நான் என்னனு கேட்ட போது ஏதோ குழந்தைக்கு உடம்புச் சரியில்லைன்னு சொன்னாங்க டா. நானும் அதை நம்பி அவங்களை வீட்டுல கொண்டு போய் விட்டேன் டா. ஆனால் மனசுல ஏதோ உறுத்திக்கிட்டே இருந்தது டா. அதனால காலைல அவங்களை பார்க்க அவங்க வீட்டுக்குப் போனேன் எட்வின். அங்க ஓரே போலிஸா இருந்தாங்க. என்னனு போய் பார்த்தா அவங்க சூசைட் பண்ணிட்டாங்க டா.”

“ஹேய் ஆதன் என்ன டா சொல்ற?சூசைட் பண்ணிட்டாங்களா?”

“ஆமா எட்வின். நீ நியூஸ்ல கூட பார்த்துருப்ப சமூக ஆர்வலர் ரம்யா வீட்டில் தற்கொலைனு. எனக்கு நேத்து தெரியாது டா அவங்க ரம்யானு. ஆனால் எங்கோ பார்த்த மாதிரி இருந்ததுனு யோசிச்சேன். இன்னைக்கு நியூஸ் பார்த்துத் தான் தெரிஞ்சுக்கிட்டேன்.”

“ஏய் அவங்களா? ரொம்ப நல்லவங்க டா. நிறைய சமூகப் பிரச்சனைக்காக பாடுப்பட்டவங்க டா. அவங்க எப்படித் தற்கொலை பண்ணிக்க முடியும்?”

“அது தான் என்னோட சந்தேகமும் எட்வின். அவங்களுக்கு ஏதோ பிரச்சனை. அவங்க எதிரி யாரோ தான் அவங்களை கொலைப் பண்ணிருக்கனும் எட்வின்.”

“சரி ஆதன் அங்க இருந்த இன்ஸ்பெக்டர் கிட்ட இதைச் சொன்னியா?”

“நீ வேற ஏன் டா. அந்த வேலுமணி தான் டா இன்ஸ்பெக்டர். அவரைப் பத்தி உனக்குத் தெரியாதா? அவர்கிட்ட எப்படி நம்ம நியாயத்தை எதிர்பார்க்கிறது?”

“வேலுமணியா? அய்யோ சரியான காசுப் பார்ட்டி அந்த ஆளு. காசுக்காக என்ன வேணும்னாலும் பண்ணுவார். இப்போ என்ன பண்ணப் போற ஆதன்?”

“கமிஷ்னரை மீட் பண்ணலாம்னு நினைச்சேன் டா. ஆனால் அவர் லீவ்ல போயிருக்கார். நாளைக்குப் போய் பார்க்கனும்.”

“ஆதன் இது சரியா வருமா? நேரா கமிஷ்னரை தான் சந்திக்கனுமா? அந்த ஏரியா ஏ.சி.பி.ய முதல்ல பார்த்து நீ பேசிப் பாரேன்.”

“இல்லை எட்வின். என் மனசு ஏனோ இது சாதாரண கேஸ் மாதிரி இருக்காதுனு சொல்லுது. அதனால நான் ரிஸ்க் எடுக்க விரும்பலை. அந்த ஏ.சி.பி ஆள் எப்படினு நமக்குத் தெரியாது. ஆனால் கமிஷ்னர் அப்படியில்லை. அவர் ரொம்ப நேர்மையானவர். அதனால அவரைப் பார்க்கிறது தான் சரியா வரும்.” தீர்மானமாக ஆதன் கூற,

“நீ சொல்றதும் சரி தான் ஆதன். இந்த கேஸ் விஷயமா உனக்கு ஏதாவது ஹெல்ப் வேணும்னா என்னைத் தயங்கமா கேள்.”

“நீ சொல்லவே வேண்டாம் எட்வின். கண்டிப்பா உன்கிட்ட தான் உதவிக் கேட்பேன்.” என்று ஆதன் கூற, சற்று நேரம் பொதுவாகப் பேசிவிட்டு எட்வின் கிளம்ப, ஆதன் நாளை கமிஷ்னரை சந்திக்கும் போது எப்படி அவரிடம் பேச வேண்டும் என்று தனக்குள் பேசித் தன்னைத் தயார் படுத்திக் கொண்டான்.

ஆதன் நிவாஸ் அன்று சீக்கிரமே எழுந்து தயாராகி வெளியே வர, செல்வம் வரவும் சரியாக இருந்தது.

“என்ன சார் இன்னைக்கு வேற எங்கயாவது போகனுமா? சீக்கிரம் ரெடியாகிட்டீங்க?”

“இல்லை செல்வம் இது வேற விஷயம். நீங்க இருங்க நான் போயிட்டு வந்துரேன்.” என்று ஆதன் கூறிவிட்டு அவனது வண்டியை எடுத்துக் கொண்டு வெளியேறினான். செல்வம் போகும் அவனைத் தான் யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தார். சரி ஏதாவது பெர்சனல் வேலையாக இருக்கும் என்று விட்டுவிட்டு வண்டியைத் துடைக்கும் வேலையைப் பார்க்க ஆரம்பித்து விட்டார்.

சாத்விகாவின் ஷாடோ டிடெக்டிவ் ஏஜென்சி காவலர் குடியிருப்பில் இருந்து பத்து நிமிட தூரத்தில் தான் இருந்தது. அதனால் வேகமாக வர, போகும் வழியிலே அவனது அலைப்பேசி ஒலிக்க, எடுத்துப் பார்த்தான். எட்வின் தான் அழைத்திருந்தான்.

“சொல்லு எட்வின்.”

“கமிஷ்னரை எப்போ பார்க்கப் போற?”

“மதியம் தான் ஆப்பாயின்மென்ட் கொடுத்துருக்காங்கா டா. நான் பார்த்துட்டு வந்து உன்கிட்ட சொல்றேன்.”

“ம் சரி டா. பார்த்துப் பேசு.” என்று எட்வின் கூடுதல் அறிவுரையுடன் அலைப்பேசி வைத்தான்.

ஆதன் சாத்விகாவின் வீட்டிற்குச் செல்ல, அவனை வரவேற்றதோ பூட்டியிருந்த கேட் தான்.

‘காலையிலே எங்க தான் போனாங்களோ!!’ என்ற பொருமலுடன் சாத்விகாவிற்காக காத்திருந்தான்.

அரை மணிநேரம் காத்திருந்தும் சாத்விகா வராமல் போக, ஆதன் அவளை அப்புறம் பார்க்கலாம் என்று முடிவெடுத்து அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டான்.

ஆதன் கிளம்பிய ஐந்து நிமிடத்திலே சாத்விகா அங்கு வந்து விட்டாள். அன்று பார்த்து சாத்விகா தாமதமாக எழ, சமைக்கலாம் என்று பார்த்த போது தான் வீட்டில் எதுவுமில்லை என்று புரிந்து காய்கறி வாங்க மார்க்கெட் சென்றாள். அந்த இடைவெளியில் தான் ஆதன் இவளது வீட்டிற்கு வந்தது.

வீட்டிற்கு வந்த சாத்விகா வேகமாகச் சமைக்க ஆரம்பித்தாள். காலை மற்றும் மதியம் சாப்பாடு சமைத்து முடிக்கும் போது அவளது வீட்டின் அழைப்பு மணி அடிக்க, வேகமாக வந்து திறந்தாள்.

பிரபுவும் சக்தியும் நின்றிருக்க,”என்ன இன்னைக்கு சீக்கிரமா வந்துட்டீங்க?”

“ஹலோ மேடம் நாங்க எப்போவும் போல தான் வந்துருக்கோம். நீங்க தான் லேட் இன்னைக்கு. இன்னும் குளிக்கவே இல்லையா?”

“ப்ச் இல்லை. வீட்டுல எதுவுமே இல்லை. அதான் போய் வாங்கிட்டு வந்து சமைக்க லேட் ஆகிடுச்சு. நீங்க போங்க நான் சீக்கிரம் குளிச்சுட்டு சாப்பிட்டு வரேன்.” என்று அலுவலக சாவியைத் தர, பிரபு வாங்கிக் கொண்டு மேலே செல்ல, சக்தி சாத்விகாவிடம் சீக்கிரம் வரச் சொல்லிவிட்டு அவன் பின்னே சென்றாள்.

ஷாடோ டிடெக்டிவ் ஏஜென்சியில் நான்கு பேரும் சுற்றி உட்கார்ந்து கொண்டு பேசிக் கொண்டிருக்க, சாத்விகா அங்கு வந்தாள்.

“என்ன மேடம் இன்னைக்கு லேட்?” என்று ரவி கேட்க,

“என்னோட அலட்சியம் தான் காரணம். நேத்தே வீட்டுல சமைக்க எந்தப் பொருளும் இல்லைன்னு தெரிஞ்சும் வாங்காம இருந்துட்டேன். அதான் காலைல போய் வாங்கிட்டு வந்து சமைக்க லேட் ஆகிடுச்சு.”

“ம் வீட்டுல வேலைச் செய்ய யாராவது வைச்சுக்கோனா கேட்கிறியா?”

“ஏய் நான் ஒருத்தி தான் இருக்கேன். எதுக்கு வேலைக்கு ஆள் எல்லாம். அதெல்லாம் அனாவசியம்.” என்றவள்,

“சரி என்னைப் பத்திப் பேசினது போதும். நாம வேலையைப் பார்க்கலாம்.” என்றாள் சாத்விகா.

“ஓகே பார்த்துட்டா போச்சு. சொல்லுங்க மேடம் ராக்கி(சாத்விகா) நம்மளோட அடுத்த கேஸ் என்ன?” என்று சக்தி கேட்க,

“இரண்டு பேக்ரௌன்ட் செக் கேஸ். அதுல ஒரு கேஸ் வந்து லேடி ஒருத்தங்க அவங்க ஹஸ்பென்ட் அவங்களுக்கு துரோகம் பண்றாங்கனு டவுட்டாம். அதை செக் பண்ணச் சொல்லி நமக்கு சொல்லிருக்காங்க. அடுத்த கேஸ் வந்து மாப்பிள்ளை பத்தின ஏ டூ இஸட் வேணும்னு கேட்டுருக்காங்க. ஃப்ர்ஸ்ட் கேஸ் கிட்டி(சக்தி) நீ ஃபாலோ பண்ணிடு. அடுத்த கேஸ் நின்ஜா(பிரபு) நீ பார்த்துக்கோ.” என்று சாத்விகா கூற, இருவரும் தலையசைத்தனர்.

“உங்க இரண்டு பேருக்கும் டூ டேஸ் தான் டைம். ரொம்ப டைம் எடுத்துக்காதீங்க.”

“ம் சரி ராக்கி. நீ கவலைப்படாத சீக்கிரமே முடிச்சுடலாம்.” என்று சக்தி கூறினாள்.

“அப்புறம் இன்னொரு கேஸ். நம்ம ஏ.கே.இன்டஸ்ட்ரீஸ் எம்.டி. கூப்பிட்டார். அவர் அவங்க கம்பெனி அக்கவுன்டன்ட் கிட்ட அறுபது லட்சம் கொடுத்து பாங்க்ல டெபாசிட் பண்ணச் சொல்லிருக்கார். ஆனால் அவர் டெபாசிட் பண்ணப் போற வழில யாரோ அதை திருடிட்டாங்கனு சொல்லிருக்கார். பட் எம்.டி. அதை நம்பலை!”

“போலிஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணிருக்காங்களா?” என்று ஜெசிக்கா கேட்க,

“இல்லை பண்ணலை. அவருக்கு அவங்க மேல நம்பிக்கை இல்லை. யார் நல்லவங்க கெட்டவங்கனு சொல்ல முடியாது. ஒருத்தருக்குத் தப்புப் பண்ண ஒரு சந்தர்ப்பம் கிடைச்சும் தப்புப் பண்ணாமல் இருக்கிறவங்க தான் நல்லவங்க. ஆனால் நிறையப் பேர் அந்த மாதிரி சந்தர்ப்பத்துல தப்பு தான் பண்றாங்க. யாரைச் சொல்லி என்ன பயன். நாம நம்ம வேலையைப் பண்ணலாம். போலிஸ் மேல அவங்களுக்கு சுத்தமா நம்பிக்கை இல்லை. அதான் நம்மகிட்ட வந்துருக்கார். அந்த கேஸை நான் பார்த்துக்கிறேன்.” என்று சாத்விகா கூற,

“அப்போ எனக்கு?” என்று ரவி கேட்க,

“நீ என் கூட வந்துரு பீஸ்ட். உன் ஹெல்ப் எனக்குக் கண்டிப்பா தேவைப்படும்.”

“வித் ப்ளஷர் மேடம்.” என்று ரவி அவளைக் கேலிச் செய்ய, சக்தியும் பிரபுவும் அவர்களது வேலையைக் கவனிக்கச் சென்றனர்.

“சரி ராக்கி ஏதாவது ப்ளான் வைச்சுருக்கியா? முதல்ல எப்படி ப்ரொசிட் பண்ணப் போறோம்?”

“முதல்ல பணம் காணாமல் போன இடத்துக்குப் போவோம். அங்க இருக்கிற சிட்டுவேஷன் பார்த்துட்டு அதுக்கு அப்புறம் என்ன பண்றதுனு பார்க்கலாம் ரவி.”

“சரி ராக்கி. அப்போ நாம கிளம்பலாம்.” என்று ரவி கூற,

“ஜெசி பார்த்துக்கோ.” என்று ஜெசியிடம் கூறிவிட்டு இருவரும் வெளியே சென்றனர்.

ஜெசிகாவும் தன் வேலையைப் பார்க்க மடிக்கணினி எடுத்து உட்கார்ந்து விட்டாள்.

Advertisement