Advertisement

ஆதன் காலையில் எழுந்து எப்பொழுதும் போல் வேலைக்குக் கிளம்பினான். அதுவும் அன்று கொஞ்சம் சீக்கிரமாகவே கிளம்பினான். என்ன தான் அந்தப் பெண்ணை வீட்டில் விட்டுவிட்டு வந்தாலும் அவன் மனதில் ஏதோ சரியில்லாதது போல் உறுத்திக் கொண்டே இருந்தது. அதைத் தெளிவுபடுத்த அந்தப் பெண்ணின் வீட்டிற்குச் சென்று பார்த்து விட்டு வர வேண்டும் என்று சீக்கிரம் தயாராகி வெளியே வர, செல்வம் நின்றிருந்தார்.

“நல்ல வேளை வந்துட்டீங்களா. நீங்க வர லேட்டாகுமோனு யோசிச்சேன். பரவால வந்துட்டீங்க.” ஆதன் வண்டியில் உட்கார்ந்து கொண்டே கூற,

“சார் இன்னைக்கு சீக்கிரமா போகனுமா?” என்று செல்வமும் ஓட்டுநர் இருக்கையில் அமர,

“இல்லை செல்வம். வேற ஒரு இடத்துக்குப் போகனும். நான் சொல்ற அட்ரெஸ்கு வண்டியை விடுங்க.” என்று ஆதன் கூற, செல்வமும் அவன் சொன்ன முகவரிக்கு வண்டியை விட்டார்.

நேற்று அவன் இறக்கிய அந்தப் பெண்ணின் வீடு இருக்கும் சந்துக்குள் நுழையும் போதே அந்த வீட்டின் முன் காவல் வாகனமும் மக்கள் கூட்டமும் இருப்பதைப் பார்த்த ஆதன் அதிர்ந்தான்.

“சார் ஏதாவது சம்பவம் இங்க நடந்துருக்கா? அதான் என்னை இங்க வரச் சொன்னீங்களா? ஆனால் இது நம்மளோட ஜோன்(zone) இல்லையே சார்?” என்று கூறியபடி வண்டியை நிறுத்தினார் செல்வம்.

ஆதன் எதுவும் பதில் கூறாமல் வேகமாக ஜீப்பில் இருந்து இறங்கி உள்ளே செல்ல, செல்வம் அவனை வினோதமாகப் பார்த்தார்.

பல அதிகாரிகளிடம் வேலைப் பார்த்த செல்வம் ஆதன் தனக்கு மேலதிகாரியாக வந்தப் போது மிகுந்த சந்தோஷமே அடைந்தார். மற்ற அதிகாரிகள் இவரை ஓட்டுநர் என்று குறைவாக நடத்த, ஆதன் ஓர் அண்ணன் போல் இவருக்கு மரியாதை தந்து நடத்த ஆதனை இவருக்கு மிகவும் பிடித்து விட்டது. சில சமயம் கேஸ் விஷயமாகக் கூட செலவத்திடம் கலந்துரையாடி உள்ளான் ஆதன். அப்படிப்பட்டவன் இன்று அவரது கேள்விக்குப் பதிலளிக்காமல் செல்வது அவருக்குக் குழப்பத்தை உண்டு பண்ணியது.

உள்ளே வந்த ஆதன் அங்குக் காவல் அதிகாரிகள் இருப்பதைக் கண்டு குழப்பத்துடன் வீட்டின் உள்ளே சென்றான். அவனைப் பார்த்த அதிகாரிகள் அவனின் சட்டையிலிருந்த ஸ்டாரை பார்த்து சல்யூட் வைத்தார்கள்.

“சார் நீங்க இங்க?” என்று தயங்கிக் கொண்டே அந்த வீட்டின் கூடத்தில் இருந்த காவல் அதிகாரி ஒருவர் கேட்க,

“இங்க என்னாச்சு?” அவரின் கேள்விக்குப் பதிலளிக்காமல் இவன் ஒரு கேள்வி கேட்டான்.

“இந்த வீட்டுல இருந்த லேடி, நேத்து நைட் சூசைட் பண்ணிட்டாங்க சார். காலைல பக்கத்து வீட்டுக்காரங்க பார்த்துப் பயந்து எங்களுக்குத் தகவல் சொன்னாங்க சார்.” என்று கூற, ஆதனுக்குப் பயங்கர அதிர்ச்சி.

அதற்குள் இன்னொரு காவல் அதிகாரி மாடிக்குச் சென்று அந்தப் பகுதி ஆய்வாளரிடம்,”சார் கீழ மேல் அதிகாரி ஒருத்தர் வந்துருக்கார் சார்.”என்று பவ்யமாகக் கூற,

“என்னது மேலதிகாரியா? என்ன யா சொல்ற? ப்ச்!” சலித்துக் கொண்டே வேகமாகக் கீழே வர, அங்கு ஆதனை கண்டு அதிர்ச்சியடைந்தார் அந்த ஆய்வாளர்.

‘இவனா மேலதிகாரி! எனக்குனு வந்து வாய்ப்பாங்களோ! யாரை நான் என் வாழ்நாளில் பார்க்கக் கூடாது என்று நினைத்தேனோ அவனே வந்து என் கண் முன்னாடி நிற்கிறான். அதுவும் எனக்கு மேலதிகாரியாக.’ எரிச்சலாக மனதில் நினைத்தபடி வந்தார் ஆய்வாளர் வேலுமணி.

“அடடா நீ ஆதன் தான? பார்த்து எத்தனை வருஷமாகிடுச்சு? பரவாலையே சொன்ன மாதிரி படிச்சு ஐ.பி.எஸ் பாஸ் பண்ணிட்ட போல. என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் ஆதன்.” என்று ஏதோ பல நாட்கள் கூடிப் பழகியது போல் அவர் பேச,

“நான் இங்க ஏ.சி.பி. நீங்க இன்ஸ்பெக்டர். உங்களோட மேலதிகாரிக்கு எப்படி ரெஸ்பெக்ட் குடுக்கனும்னு தெரியாதா?” கடுமையாக ஆதன் கேட்க,

வேலுமணிக்கு இத்தனை பேர் முன்பு அதுவும் இத்தனை நாள் கெத்தாக இவர்கள் முன்பு இருந்த தன்னை ஆதன் வேண்டுமென்றே அவமானப்படுத்துவதாக நினைத்தார்.

“சாரி சார்.” என்று உள்ளே சென்ற குரலில் கூற,

ஆதன் அதைச் சட்டைச் செய்யமால் அவரிடம்,”என்ன ஆச்சு இங்க?”

“அது உங்களுக்கு எதுக்கு சார்? இந்த ஏரியா தான் உங்களோட கட்டுப்பாட்டில் இல்லையே.” தன்னை அவமானப் படுத்தியதுக்கு வேலுமணி திருப்பிக் கொடுக்க,

“அதனால் நீங்க சொல்ல மாட்டீங்களா? இது என்ன சிறு பிள்ளை விளையாட்டு?” என்று அவரை மதியாமல் அவரைக் கடந்து மேலே சென்றான் ஆதன்.

“சார் எங்க போறீங்க?” என்று வேலுமணி கூப்பிடக் கூப்பிட ஆதன் மேலே சென்றான்.

அங்கு ஒரு அறையில் நேற்று உயிருடன் பார்த்த அந்தப் பெண் இன்று சடலமாக இருந்தாள். அதைப் பார்த்ததும் ஆதனுக்கு மனம் ஆராவே இல்லை. நேற்றே திரும்பி வந்து அவளைப் பார்த்திருக்க வேண்டுமோ என்ற குற்றவுணர்ச்சி அவனைக் கொன்றது.

கனத்த மனதுடன் பக்கத்திலிருந்த காவலரிடம்,”இது தற்கொலை தானா?” என்று கேள்வி எழுப்பினான்.

அந்தக் காவலர் பதில் சொல்வதற்கு முன் வேலுமணி அவரிடம் தலையை இருபக்கமும் ஆட்டி பதில் கூறாதே என்று சைகைச் செய்ய அவர் அமைதியாகி விட்டார். இதைப் பார்த்த ஆதனுக்கு கடும் கோபம்.

“அவர் இன்ஸ்பெக்டர் தான். ஆனால் நான் அவரை விடப் பெரியப் பதவில இருக்கேன். நீங்க அவருக்குப் பயப்படாம நான் கேட்டதுக்குப் பதில் சொல்லுங்க.” தீர்க்கமாக ஆதன் கேட்க, அவன் குரலில் இருந்த ஆளுமை அந்த காவலருக்கு நடுக்கத்தைத் தந்தது.

“ஆமா சார். இது தற்கொலை தான்.” பயந்தவாறு அவர் பதிலளிக்க.

“எப்படி இது தற்கொலைனு முடிவு பண்ணீங்க?”

“சார் நாங்களே கதவை உடைச்சுட்டு தான் உள்ள வந்தோம் சார். அதே மாதிரி எந்தப் பொருளும் திருட்டுப் போனதுக்கு அறிகுறி எதுவுமே இல்லை. அப்புறம் இந்த லெட்டர் சார். இது தான் தற்கொலைனு நாங்க ஊர்ஜிதப்படுத்த உதவினது.” என்று கையிலிருந்த காகிதத்தை ஆதனிடம் தர நீட்ட அதை வேகமாகப் பறித்து வேலுமணி வைத்துக் கொண்டார்.

“சார் நீங்க ரொம்ப பண்றீங்க. எங்களோட மேலதிகாரியாக நீங்க இருக்காலம். ஆனால் உங்களுக்கு நாங்க பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இந்த ஏரியாவுக்கு கட்டுப்பாட்டுள்ள ஏ.சி.பி. வரட்டும் அவருக்கு நான் பதில் சொல்லிக்கிறேன். நீங்கள் கிளம்புங்க.”

“ஓ எனக்குப் பதில் சொல்ல முடியாதா? சரி நான் பார்த்துக்கிறேன்.” என்றான் ஆதன்.

அவன் கிளம்பி விடுவான் என்று வேலுமணி நினைக்க, ஆதனோ வீட்டைச் சுற்றிப் பார்க்க ஆரம்பித்தான். முதலில் அந்த அறையிலிருந்து ஆரம்பித்தான். அந்த அறையில் சந்தேகம் படும்படி எதுவும் இல்லை. வெளியே வந்து ஒவ்வொரு அறையாகப் பார்த்தான். வீடு முழுவதையும் நோட்டம் விட்டான். வீட்டை விட்டு வெளியே வந்து வீட்டைச் சுற்றியுள்ள பகுதியையும் பார்வையிட்டான். ஆனால் சந்தேகிக்கும் படி எதுவுமில்லை.

வீட்டின் பக்கவாட்டில் இருந்த சுவரைப் பார்த்தான். ஏதோ தோன்ற அப்படியே மேலே பார்த்தான். என்ன தோன்றியதோ வேகமாக வீட்டின் உள்ளே வந்து அந்தப் பெண் இறந்து கிடந்த அறைக்குள் புயலாக உள்ளே நுழைந்தான்.

வேலுமணி இவன் கிளம்பியிருப்பான் என்ற நிம்மதியுடன் அங்குள்ள காவலர்களிடம் அடுத்த என்ன செய்ய வேண்டுமெனப் பேசிக் கொண்டிருக்க, இவனது அதிரடியான நுழைவு அவரை ஒரு நிமிடம் பதறச் செய்தது.

வந்த ஆதன் அங்குள்ள ஜன்னல் பக்கம் சென்றான். அவன் எதிர்பார்த்தது போலவே இருந்தது. திரும்பி வேலுமணியை ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து விடுவிடுவென அவன் வெளியே வந்தான்.

வந்த வேகத்தில் செல்வம் மிரண்டு பார்க்க, ஆதன் அவரிடம் வண்டியை எடுக்கச் சொல்ல, அவரும் எதுவும் பேசாமல் வண்டியை எடுத்தார்.

வேலுமணி ஒரு முறைக்கு இரு முறை அவன் சென்றுவிட்டானா என்று உறுதிப்படுத்திய பிறகுத் தனியாகச் சென்று யாரும் பக்கத்தில் இல்லை என்பதையும் உறுதிப்படுத்தி விட்டு அவரது கைப்பேசியை எடுத்து யாருக்கோ அழைத்தார்.

“சார் நான் வேலு பேசுறேன். நீங்க சொன்ன மாதிரியே எல்லாம் செஞ்சுட்டேன் சார். ஆனால் நடுவுல இந்த ஆதன் வந்துட்டான் சார். அது தான் எதுவும் பிரச்சனையா வந்துடுமோனு பயமா இருக்கு சார்.” என்று பம்மியபடி அவர் பேச,

“யாருயா அந்த ஆதன்?”

“சார் அவன் எனக்குக் கீழ வேலை பார்த்தவன் சார். இப்போ படிச்சு ஏ.சி.பி.யா வந்துருக்கான் சார்.”

“அவனை எதுக்கு யா உள்ள விட்ட? அவனுக்கு அந்த ஏரியாவுல என்ன வேலை?”

“தெரியலை சார். நான் மேல டெட் பாடிகிட்ட இருந்தேன் சார். கான்ஸ்டபிள் தான் உள்ள உட்ருப்பான். அவன் வந்து சொல்லவும் நீங்க தான் வந்துருப்பீங்கனு வந்தேன் சார். ஆனால் அவன் நிக்கிறான்.”

ஆம் வேலுமணி பேசிக் கொண்டிருப்பது அந்தப் பகுதியின் துணை ஆணையர் கல்யாணிடம்.

“சரி அவன் என்ன பண்ணான் அங்க?” என்று கேட்டான் கல்யான்.

அவன் வந்தது முதல் போனது வரை அச்சுப்பிசாமல் வேலுமணி கூற, கல்யாண் ஒரு நிமிடம் எதுவும் பேசவில்லை.

“சார் சார்.” என்று இவர் அழைக்க,

“அந்த ஜன்னல்கிட்ட என்ன இருந்தது?”

“அவன் போனதும் நான் பார்த்தேன் சார். அங்க எதுவுமில்லை.” என்று இவர் கூற,

“நீ பார்த்த லட்சணம் அங்க வராமலே எனக்குத் தெரியுது. நீ அங்கேயே இரு, கொஞ்ச நேரத்துல நானே வரேன்.” என்று கூறிவிட்டு கைப்பேசியை வைத்தான் கல்யாண்.

“என்னை விடச் சின்ன பையன். நான் எவ்ளோ மரியாதையா பேசுறேன். ஆனால் அவன்! எல்லாம் இந்தப் பதவினால தான். இந்த ஆதன் பைய கூட மரியாதை தரான். அவனை விட இரண்டு மூணு வயசு தான் ஜாஸ்தியா இருக்கும் இவனுக்கு. ஆனால் வாயா போயானு பேசுறான். எல்லாம் என் தலையெழுத்து. நம்ம மண்டையில படிப்பு ஏறியிருந்த நமக்கு ஏன் இந்த நிலைமை.” என்று பொருமியபடியே உள்ளே வந்தார் வேலுமணி.

ஆதன், செல்வத்தை வண்டியை கமிஷ்னர் அலுவலகத்திற்கு விடச் சொல்ல,

“சார் இரண்டு நாள் கமிஷ்னர் லீவ்ல போயிருக்கார்.” என்று செல்வம் கூற,

“ப்ச்! சரி நம்ம ஸ்டேஷனுக்கே போங்க.” என்று ஆதன் கூற, செல்வம் எதுவும் பேசாமல் அமைதியாக வண்டியை ஓட்டினார்.

அவனது அலுவலகம் வந்தும் ஆதனால் அமைதியாக இருக்க முடியவில்லை. அவனது குற்றவுணர்ச்சி அவனை நிம்மதியாக இருக்க முடியாதபடி அவனை வதைத்தது. அந்தப் பெண்ணையும் எங்கோ பார்த்தது போல் இருந்தது. அப்பொழுது இருந்த நிலைமையில் அவனால் சரியாக யோசிக்கவும் முடியவில்லை.

அன்று முழுவதும் அவனால் வேலையில் சரியாகக் கவனம் செலுத்த முடியாமல் சீக்கிரமாகவே அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு வந்துவிட்டான்.

வீட்டுக்கு வந்தும் அவனால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. மனம் அடித்துக் கொண்டே இருந்தது. நேற்றே திரும்பிப் போய் பார்த்திருந்தால் அந்தப் பெண்ணைக் காப்பாற்றி இருக்கலாம் என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை.

இப்படியே இருந்தால் பைத்தியமாகிவிடுவோம் என்று தொலைக்காட்சியைப் போட, அந்தப் பெண் யார் என்று அவனுக்கு விடைக் கிடைத்தது.

ஆம் செய்தி தான் ஓடிக் கொண்டிருந்தது. அதில் செய்தி வாசிப்பாளர்,”பிரபல சமூக ஆர்வலர் ரம்யா அவரது வீட்டில் தற்கொலை. குழந்தையின்மை காரணமாகத் தற்கொலை என்று கடிதம் எழுதி வைத்து தூக்கில் தொங்கியுள்ளார். அவரது குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.” என்று வாசிக்க, ஆதனுக்கு அதிர்ச்சி.

அப்பொழுது தான் ஆதனுக்கு நேற்று ரம்யா வீட்டில் குழந்தை தனியாக இருப்பதாகக் கூறியது ஞாபகம் வந்தது. ஏன் அப்படிச் சொல்ல வேண்டும் என்று யோசனை.

நிதானமாக எல்லாவற்றையும் யோசித்தான். முன்னர் சந்தேகமாக இருந்தது இப்பொழுது அவனுக்கு ஊர்ஜிதமாகியது. ரம்யா தற்கொலை செய்யவில்லை யாரோ அவளைக் கொலை செய்துள்ளனர் என்பது இப்போது தெளிவாகியது.

Advertisement