Advertisement

கோபத்தில் துப்பாக்கியை எடுத்து சாத்விகாவை குறி பார்த்து தேவிகா சுடச் செல்ல அப்போது எங்கிருந்தோ வந்த குண்டு அவரது கையைத் துளைக்க, அவரது கையிலிருந்த துப்பாக்கிக் கீழே விழுந்து வீழ் என்று கத்தினார்.

சத்தம் கேட்டு அனைவரும் ஒரு நிமிடம் திகைக்க, தேவிகா கத்தியதில் அனைவரின் கவனமும் அவரிடம் செல்ல, தேவிகாவோ தன்னைச் சுட்டவரை அதிர்ச்சியுடன் பார்த்தார் தேவிகா.

தேவிகாவின் பார்வைச் சென்ற திசையில் அனைவரும் பார்க்க, பாண்டியும் அதிர்ந்து விட்டான். ஏனென்றால் சுட்டது எட்வின். ஆதன் அவனைப் பார்த்துச் சிரிக்க, தேவிகாவும் பாண்டியும் திகைப்புடன் அவர்கள் இருவரையும் பார்த்தனர்.

“எட்வின் என்ன பண்ற நீ?” என்று கோபத்துடன் கேட்டான் பாண்டி.

“பார்த்தால் தெரியலையா? கண்ணு போச்சா?” என்று கிண்டலடித்தான் எட்வின்.

“எட்வின்!!” என்று கத்தினான் பாண்டி.

“சும்மா சவுண்ட் விடுறதை நிறுத்திட்டு உன் மாமியார் வீட்டுக்குப் போக ரெடியாகு.” என்று கூறி பாண்டியை நெருங்கி அவனது கையில் விலங்கை மாட்டினான் எட்வின்.

அனைத்தையும் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டு நின்றிருந்தார் தேவிகா. அவருக்கு எப்படி எதிர்வினையாற்ற என்று தெரியவில்லை.

“என்ன ஒன்னும் புரியலையா?” என்று கேட்டுக் கொண்டே அவரை நெருங்கி அவரது கையில் விலங்கை மாட்டினான் ஆதன்.

அப்போது அங்குச் சத்தத்துடன் இன்னும் சில காவல் ஜீப்கள் வந்து அதிலிருந்து படையாகக் காவலர்கள் இறங்கி அனைவரையும் சுற்றி வளைத்தனர்.

இதைச் சுத்தமாக நம்ப முடியவில்லை தேவிகாவால். ஆனால் அப்படியே நிற்க முடியாது அல்லவா அதனால் ஆதனிடம்,”எதுக்கு என்னை அரெஸ்ட் பண்ற? அதுவும் இல்லாமல் நீ தான் சஸ்பென்ஷன்ல இருக்கியே? அப்புறம் எப்படி என்னை அரெஸ்ட் பண்ண முடியும்?” என்று கேட்டார்.

“அதெல்லாம் பழைய கதை. இப்போ நான் ஏ.சி.பி. ஆதன் தான். அப்புறம் எதுக்கு என்னைக் கடத்துன அப்படின்னா கேட்டா? நல்லா கேட்டுக்கோ சுவாதி, வின்சென்ட் அப்புறம் ரம்யா மூணு பேரையும் கொலை பண்ணதுக்காகவும் சாக்லேட் எக்ஸ்போர்ட் பண்றனு தங்கத்தைக் கடத்துறதுக்கும் சேர்த்து உன்னை நான் அரெஸ்ட் பண்றேன்.” என்று கூற, தேவிகா அதிர்ச்சியோடு அவனைப் பார்த்தார்.

“அதுக்கு என்ன ஆதாரம் இருக்கு?” என்று கேட்டார் தேவிகா.

“அதெல்லாம் ஸ்டேஷன்ல வைச்சு பேசிக்கலாம். இப்போ நடையைக் கட்டுறியா?” என்று கேட்டுக் கொண்டே ஆதன் பின்னால் திரும்பிப் பார்த்து ஒரு பெண் காவலரிடம் சைகைச் செய்ய, அவர் வேகமாக வந்து தேவிகாவை அழைத்துக் கொண்டு சென்றார்.

ஆனால் செல்லும் போது கத்திக் கொண்டே சென்றார் தேவிகா,”இந்த எட்வினும் என்னோட கூட்டாளி தான். அவனையும் அரெஸ்ட் பண்ணுங்க.” என்றார்.

“என்னது நான் உன்னோட கூட்டாளியா? இன்னுமா உனக்கு எதுவும் புரியலை? எல்லாமே நாங்க செஞ்ச ட்ராமா!! நீங்க விரிச்ச வலைல நாங்க மாட்டாளை!!! நாங்க விரிச்ச வலைல தான் நீங்க மாட்டுனீங்க.” என்று எட்வின் கூற, தேவிகாவும் பாண்டியும் புரியாமல் பார்த்தார்கள்.

“என்ன புரியலையா? பரவால சஸ்பெஸ்ஸோடயே ஜெயிலுக்குப் போங்க.” என்று தளபதி விஜய் போல் கூறிவிட்டு ஆதன் எட்வினுடன் ஹைஃபை அடித்துக் கொண்டான்.

~~~~~~~~~~

ஆதன், ரம்யா கொலை வழக்கில் தேவிகா ஏதாவது விளையாட வாய்ப்பு உள்ளது எனப் புரிந்து கொண்டான். அதனால அவர்கள் வெளியே வர முடியாத அளவிற்கு ஆதாரத்தை ஸ்டார்ங்காக நிரூபிக்க வேண்டுமென முடிவெடுத்து எட்வினுடன் சேர்ந்து ஒரு திட்டம் போட்டான். அது தான் எட்வின் ஆதனை முதுகில் குத்தி அவனுக்கு எதிரியாக மாற வேண்டுமென்பது.

அந்தத் திட்டத்தின் முதல் படித் தான் எட்வினை அனைவர் முன்பும் ஆதன் திட்டியது. அதன் பிறகு எட்வினை கண்டிப்பாக தேவிகாவின் ஆட்கள் சந்திப்பார்கள் என்று நினைத்தார்கள். அதே போல் பாண்டி வந்து சந்திக்க அவர்கள் திட்டம் நல்லபடியாகச் செல்கிறது என்று சந்தோஷப்பட்டார்கள் எட்வினும் ஆதனும். அதன் பின்னர் அவர்களின் நம்பிக்கையைப் பெற, சாத்விகாவின் வீட்டில் தான் ரம்யாவின் மடிக்கணினி உள்ளது எனப் பாண்டியிடம் எட்வின் கூறினான்.

இவர்கள் நினைத்தது போல் பாண்டி எட்வினை நம்பிவிட்டான். இப்போது தேவிகாவிடம் எட்வின் நெருங்க வேண்டும். அதற்குத் தான் ராஜாவை படையாகப் பயன்படுத்திக் கொண்டனர் ஆதனும் எட்வினும்.

ராஜாவை நீதிமன்றத்தில் ஒப்படைத்தாலும் அவனுக்கு ஒன்று ஆயுள் தண்டனைக் கிடைக்கும் இல்லை என்றால் தூக்குத் தண்டனைக் கிடைக்கும். அது அவனிற்குப் பெரிய தண்டனையாக இருக்காது. அவன் செய்த குற்றங்கள் ஏராளமானது. அதுவும் பெண்கள் விஷயத்தில் அவன் மிகவும் மோசமானவன். அதனால் தான் ஆதனின் யோசனை மூலம் எட்வின் பாண்டியிடம் ராஜாவை காவல் நிலையத்தில் வைத்துத் தீர்த்துக் கட்டினால் அதுவும் அடித்தே கொன்றால் பழி ஆதன் மேல் விழும் என்று ஆசை வார்த்தைக் கூறி பாண்டியிடம் கூறினான்.

பாண்டி வருவதற்கு முன்பே ராஜா இருந்த அறையில் அதாவது ராஜாவை அங்கு ஆதன் அழைத்து வரும் முன்பே அந்த அறையில் கேமேராவும் வாய்ஸ் ரெகார்டரும் ஃபிக்ஸ் செய்து விட்டான் எட்வின்.

ஆனால் அவர்களே எதிர்பார்க்காதது கல்யாணும் வேலுமணியும் பாண்டியுடன் அங்கு வந்ததை தான். அவர்கள் ராஜாவிடம் பேசியது, அவனை அவர்கள் அடித்தே கொன்றது என ஒன்று விடாமல் அனைத்தும் பதிவாகி விட்டது.

ஆதன் அவர்களின் திட்டப்படியே எதுவும் தெரியாதது போல் காவல் நிலையத்திற்கு வந்து கமிஷ்னர் முன்பு நடித்தான். அதே போல் ராஜாவின் வாக்குமூலத்தையும் ஆதன் தான் எட்வினிடம் தந்தது. ஆனால் காவல் நிலையத்தில் எதுவும் தெரியாதது போல் அவன் சென்று தேடினான்.

இது எல்லாம் எட்வின் தேவிகாவை நெருங்க அவர்கள் போட்ட ப்ளான். எட்வின் கூறக் கூற அவர்கள் செய்ததால் தான் ஆதன் மற்றும் எட்வினால் போதிய ஆதாரத்தைச் சேகரிக்க முடிந்தது. இவர்கள் இப்படித் திட்டம் போடவில்லை என்றால் தேவிகா அவரது செல்வாக்கை வைத்து அனைத்து ஆதாரத்தையும் ஒன்றுமில்லாமல் ஆக்கி இருப்பார்.

எட்வின் ஆதனிற்கு துரோகம் செய்யவில்லை. ஆதன் கூறியதை தான் எட்வின் இதுவரை செய்தான்.

இதைத் தான் சாத்விகா தேவிகாவின் ஃபேக்ட்ரிக்கு செல்லும் முன்பு கூறினான். அதைக் கேட்டுத் தான் அவள் அவனிற்கு முத்தமும் தந்தாள்.

~~~~~~~~~~

தேவிகா மற்றும் பாண்டியை காவலர்கள் சிலர் ஃபேக்ட்டரி உள்ளே அழைத்துச் செல்ல, ஆதன், எட்வின் மற்றும் சாத்விகா அவர்களைப் பின் தொடர்ந்து சென்றனர்.

சாத்விகா கூறிய இடத்தில் பாண்டியின் கையை வைத்து ஸ்கேன் செய்து உள்ளே செல்ல, அங்குப் பல பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதை ஒவ்வொன்றாகப் பிரித்துப் பார்க்க, அதில் ஒரு பேக்கெட் மட்டும் சற்று வித்தியாசமாக இருக்க, அதை எடுக்கும் போதே கனத்தது. அதிலே புரிந்தது அது தங்கம் என்று. இருந்தாலும் அதைப் பிரித்துப் பார்க்க, அதில் தங்கம் தான் இருந்தது.

“பாரு எட்வின் சந்தேகம் வரக் கூடாதுனு ஒவ்வொரு பெட்டியிலும் ஒரு சாக்லேட் மட்டும் தங்கம். எவ்ளோ புத்திசாலித்தனமா செயல்பட்டு இருக்காங்க. அதுனால தான் இதுவரை யாராலையும் கண்டுபிடிக்க முடியாத மாதிரி போயிருக்கு.”

“ஆமா சார். முதல்ல இதைக் கண்டுபிடிச்சது சுவேதா. பாவம் அவங்களை கொன்னுட்டாங்க, அவங்களோட சாவுல மர்மம் இருக்குனு தெரிஞ்சு அதை விசாரித்த வின்சென்ட் அண்ட் ரம்யாவையும் கொன்னுட்டானுங்க பாவி.” என்றான் எட்வின்.

“ம் அவங்க ஆத்மா இப்போ சாந்தியடைஞ்சுருக்கும்.”

“ம் ஆமா சார்.” என்று எட்வின் கூறினான்.

பின்னர் அங்கு அனைத்து விஷயமும் முடிந்ததும் பாண்டி மற்றும் தேவிகாவை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

அதற்குள் ஊடகங்களுக்குச் செய்தி பரவ, அனைவரும் காவல் நிலையத்தில் கூடி விட்டனர். விஷயம் கேள்விப்பட்டு கமிஷ்னரும் அங்கு வந்து விட்டார்.

பத்திரிக்கையாளர்கள் அவரைப் பார்த்ததும் அவரைச் சூழ்ந்து கொள்ள, அவர்களைத் தவிர்த்து விட்டு உள்ளே சென்றார் அவர். அவரைப் பார்த்ததும் ஆதனும் எட்வினும் வேகமாக வந்து அவருக்கு சல்யூட் அடிக்க, இருவரையும் முறைத்துப் பார்த்தார் அவர்.

“உங்க இரண்டு பேர்னால பாருங்க.” என்று அவர் கூற,

ஆதன் சிரித்துக் கொண்டே,”தாங்க்ஸ் சார் எங்களுக்கு பெர்மிஷன் தந்தது மட்டுமில்லாமல் நீங்களும் எங்களுக்கு co-operate பண்ணதுக்கு.” என்றான்.

ஆம் இதில் கமிஷ்னருக்கும் பங்கு உள்ளது. அவரிடம் முதலிலே ஆதன் விஷயத்தைக் கூறி அனுமதி வாங்கியிருந்தான். முதலில் கமிஷ்னர் ஒத்துக்கொள்ள வில்லை. பி்ன்னர் ஆதனின் நச்சரிப்பால் அவர் ஒத்துக் கொண்டார்.

“சரி சரி வாங்க, நீங்கத் தான் இன்னையோட ஹீரோஸ். ஸோ நீங்கத் தான் பேட்டிக் கொடுக்கனும்.” என்று கூறி இருவரையும் அழைத்துக் கொண்டு வெளியே வந்தார்.

அவர்களைப் பார்த்ததும் நிரூபர்கள் வந்து கேள்வி மேல் கேள்வி கேட்க, ஒவ்வொன்றிற்கும் பொறுமையாகப் பதிலளித்தனர்.

“இந்த கேஸ் ரம்யா கொலைல இருந்து தான் ஆரம்பிச்சது. ஆனால் அவங்க இறப்பிற்கு முன்னேயே சுவேதா மற்றும் வின்சென்ட் இரண்டு பேரையும் தேவிகா மற்றும் அவரது ஆட்கள் கொலை பண்ணிருக்காங்க. அதுக்கான காரணம் தேவிகா சாக்லேட் எக்ஸ்போர்ட் பண்றேன்னு தங்கத்தை கடத்துனது தான். அது இவங்க மூணு பேருக்கும் தெரிஞ்சதால் இவங்களை கொன்னுட்டாங்க.” என்றான் ஆதன்.

“சார் உங்களைத் தான் சஸ்பெண்ட் பண்ணிருந்தாங்க. அப்புறம் எப்படி நீங்க இப்போ இங்க?”

“ஏனா என் மேல் எந்தக் குற்றமும் இல்லைனு ப்ரூவ் ஆகிடுச்சு. அன்னைக்கு போலிஸ் ஸ்டேஷன் வந்து எங்கு ராஜா தன்னைக் காட்டிக் கொடுத்துடுவானோனு பாண்டி தான் அவனைக் கொன்னது. அதுக்கான ஆதாரம் எங்களுக்குக் கிடைச்சது. இப்போதைக்கு அவ்ளோ தான் எங்களால சொல்ல முடியும்.” என்று ஆதன் கூறிவிட்டு உள்ளே செல்ல, கமிஷ்னரும் எட்வினும் அவனுடன் உள்ளே சென்றார்கள்.

“உண்மையிலே உங்க இரண்டு பேரையும் நினைச்சால் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்தக் கடத்தல் விவகாரத்துல யாரெல்லாம் ஈடுபட்டு இருக்காங்கனு பார்த்து சீக்கிரம் அவங்களையும் பிடிங்க. அதுக்கு தனி ஃபோர்ஸ் வேணும்னாலும் நான் அரேன்ஜ் பண்ணித் தரேன். அப்புறம் வெல் டன் மை பாய்ஸ்.” என்று கூறிவிட்டு அவர் சென்று விட்டார்.

~~~~~~~~~~

அடுத்து ஒரு வாரத்திலே இந்தக் கடத்தில் வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைதிச் செய்தனர் ஆதன் மற்றும் எட்வின் அடங்கிய சிறப்புக் காவல்படை. கிட்டத்தட்ட ஒரு வாரம் அவர்களைப் பற்றித் தான் பரப்பரப்பாக அனைத்துச் செய்திகளிலும் பேசினர்.

தேவிகா மற்றும் பாண்டி இருவரும் முதல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு அவர்களுக்காகத் தூக்குத் தண்டனை அளிக்கப்பட்டது. வேலுமணி மற்றும் கல்யாண் இருவரது பதவியும் பறிக்கப்பட்டு அவர்களுக்கும் மூன்று ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டது.

அது மட்டுமில்லாமல் ஆதன் மற்றும் எட்வின் சிறப்பாகச் செயல்பட்டதால் முதல்வர் கையால் அவர்களுக்கு விருதும் வழங்கப்பட்டது.

~~~~~~~~~~

அனைத்தும் முடிந்ததும் ஆதன் சாத்விகாவை பற்றித் தன் வீட்டில் கூறிவிட வேண்டுமென முடிவெடுத்து அவனது ஊருக்குக் கிளம்பினான். ஆனால் அதைத் தெரிந்து கொண்ட சாத்விகா தானும் கூட வந்து அவனது குடும்பத்துடன் பேச வேண்டும் என்று அடம்பிடித்து அவனுடன் அவனது வீட்டிற்கு வந்தான் ஆதன்.

ஆதனுடன் சாத்விகாவை வருவதைப் பார்த்து ருக்மணிக்கு பயங்கரக் கோபம் வந்துவிட்டது. அவருக்கு அவர்கள் வருகைக்கான காரணத்தை அவர்கள் சொல்லவில்லை என்றாலும் அவருக்குத் தெரியாதா என்ன?

ஆதன் தனது அண்ணன் பாலாஜி மட்டும் தான் சாத்விகாவின் வருகையைப் பற்றிக் கூறியிருந்தான். பாலாஜியும் தன் அம்மாவிடம் கூறிவிடலாம் என்று நினைத்து அவரிடம் கூறச் சென்ற போது தான் அவனது மாமா வந்தார்.

அன்று ஆதன் பற்றிய செய்திகளைப் பார்த்துப் பெண்ணைத் தர மாட்டேன் என்று கூறியவர் இன்று அவனைப் பாராட்டி அதுவும் முதல்வர் கையால் விருதும் வாங்கியவுடன் மீண்டும் மாப்பிள்ளைக் கேட்டு வந்துள்ளார். அதைப் பார்த்ததும் அனைவருக்கும் கோபம் வந்தாலும் ருக்மணிக்கு அவரது பெண்ணைப் பிடித்ததால் அமைதியாக இருந்தார். அதனால் பாலாஜியால் எதுவும் பேச முடியவில்லை. சரி அவர் போனதும் பேசலாம் என்று நினைத்தான். ஆனால் அதுவும் முடியவில்லை. அவர் போனவுடன் இவன் பேசலாம் என்று போகும் போது ஆதனே வந்து விட்டான்.

ருக்மணி ஆதன் சாத்விகாவுடன் வருவதைப் பார்த்து முடிவெடுத்து விட்டார் தன் அண்ணன் பெண் தான் இந்த வீட்டு மருமகள் என்று. அதனால் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்.

“டேய் ஆதன் யார் இந்தப் பொண்ணு?” என்று கேட்டார் ஸ்ரீனிவாசன்.

“அப்பா இது சாத்விகா. நான் லவ் பண்ற பொண்ணு. லவ் மட்டுமில்லை கல்யாணமும் இவள் கூடத் தான்.” என்று அழுத்தமாக அவனது அம்மாவைப் பார்த்துக் கூறினான்.

“என்ன சொன்ன கல்யாணமும் இவக்கூடத் தானா? அதெல்லாம் உன் கனவுலயும் நடக்காது. இப்போ தான் என் அண்ணன் வந்து மன்னிப்புக் கேட்டு அவர் பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி கேட்டார். அதனால அடுத்த முகூர்த்தத்துல உனக்கும் என் அண்ணன் பொண்ணுக்கும் தான் கல்யாணம்.” என்று திட்டவட்டமாகக் கூறினார்.

“அம்மா நல்லா சொல்றேன் கேட்டுக்கோங்க. என் கல்யாணம் சாத்விகா கூடத் தான் நடக்கும். என்னோட பொண்டாட்டி சாத்விகா மட்டும் தான்.” என்று ஆதனும் தெளிவாகக் கூறினான்.

ருக்மணி ஏதோ பேச வர, பாலாஜி அவரைத் தடுத்து,”அம்மா போதும்!! என் தம்பி என்ன அவருக்குக் கிள்ளுக் கீரையா? அவருக்குத் தேவைனா வருவார். வேண்டாம்னா போயிடுவார். இது என்ன விளையாட்டா? ஆனால் இந்தப் பொண்ணு நம்ம ஆதனுக்காக எவ்ளோ ரிஸ்க் எடுத்துருக்கு தெரியுமா?” என்று கேட்டு ஆதனிற்காக தேவிகாவின் ஃபேக்ட்டரி சென்று அடி வாங்கியது என அனைத்தையும் பாலாஜி கூற, கேட்ட ருக்மணிக்கு தான் என்ன கூற என்று தெரியவில்லை.

“அம்மா இன்னைக்கு ஆதன் நல்ல போலிஸ்னு அவார்ட் வாங்காமல் இருந்திருந்தால் உங்களோட அண்ணன் இந்தப் பக்கம் எட்டிக் கூடப் பார்த்திருக்க மாட்டார். ஆனால் இந்தப் பொண்ணு அப்படியில்லை. நம்ம ஆதனுக்காக என்ன வேண்டும்னாலும் செய்வா.” என்றான் பாலாஜி.

“இங்கப் பார் ருக்மணி எனக்கு என் பிள்ளைங்க சந்தோஷம் தான் முக்கியம். நீ ஒத்துக்கலைனாலும் பரவால நான் முன்னாடி நின்னு இந்தக் கல்யாணத்தை நடத்துவேன்.”என்று ஸ்ரீனிவாசன் கூறியதும் ருக்மணி அதிர்ந்து பார்த்தார்.

இதுவரை தான் எது செய்தாலும் சரியாகத் தான் இருக்கும் என்று கூறும் கணவர் இன்று தன்னை எதிர்த்து இந்தத் திருமணத்தைச் செய்து வைப்பேன் என்று கூறியதை அவரால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

அவர் எதுவும் பேசாமல் அமைதியாக அவரது அறைக்குச் சென்று விட்டார். சாத்விகா வேகமாக,”நான் போய் அத்தைக்கிட்ட பேசுறேன்.” என்று கூறி அவர்கள் எதிர்ப்பை மீறி உள்ளே சென்றாள்.

ருக்மணி சோகமாகக் கட்டிலில் உட்கார்ந்திருக்க, உள்ளே சென்ற சாத்விகா அவரது காலடியில் அமர்ந்தாள். முதலில் அவரது கணவர் தான் உள்ளே வருகிறார் என்று நினைத்த ருக்மணி சாத்விகா அவரது காலடியில் அமரவும் தான் வந்தது சாத்விகா என்றே தெரிந்தது.

“அத்தை நான் நிவாஸை ரொம்ப லவ் பண்றேன். அவரும் என்னை ரொம்ப லவ் பண்றார். உங்களுக்கு என்கிட்ட என்ன பிடிக்கலைனு சொல்லுங்க நான் மாத்திக்கிறேன். ஆனால் நிவாஸை மட்டும் என்கிட்ட இருந்து பிரிச்சுடாதீங்க அத்தை ப்ளீஸ். எனக்குனு இருக்கிறது நிவாஸ் மட்டும் தான் அத்தை. ப்ளீஸ்.” என்று கெஞ்சினாள் சாத்விகா.

“என்ன சொல்ற நீ? உனக்கு அம்மா அப்பா இல்லையா?” என்று கேட்டார் ருக்மணி.

விரக்தியாக ஒரு சிரிப்பை உதிர்த்து விட்டு அவளது அம்மா மற்றும் அப்பாவைப் பற்றிக் கூறினாள். இதற்கு மேல் அவர் ஒத்துக்கொள்வது கடினம் என்று தோன்றியது. அவளது குடும்பத்தைப் பற்றிக் கேள்விப்பட்டால் யார் தான் ஒத்துக்கொள்வார்கள் என்று தோன்றியது சாத்விகாவிற்கு. எதற்கும் இதுவரை கலங்காதவள் முதல் முறையாக ஆதன் தனக்குக் கிடைக்க மாட்டானோ என்று நினைத்துக் கலங்கினாள்.

ஆனால் ருக்மணியோ அவள் எண்ணியதற்கு மாறாக அவளது தலையைத் தடவி விட்டார். அதில் அதிர்ந்து அவள் அவரைப் பார்க்க,”எப்போ பாலாஜி ஆதனுக்காக நீ அவ்ளோ ரிஸ்க் எடுத்தனு சொன்னானோ அப்பவே நான் யோசிக்க ஆரம்பிச்சுட்டேன். என் பையனுக்கு இந்த போலிஸ் வேலை ரொம்ப பிடிக்கும். விரும்பி இதுல சேர்ந்தான். அதனால அவனைப் புரிஞ்சுக்கிற பொண்ணு கிடைச்சா தான் அவன் சந்தோஷமா இருப்பான். அது என் அண்ணன் பொண்ணா இருக்கும்னு நான் நினைச்சேன். ஆனால் ஆதனுக்கு உன்னைப் பிடிச்சுருக்கு அதைவிட பாலாஜியோட அப்பா இதுவரை என்னை எதிர்த்து எதுவும் செஞ்சதும் கிடையாது பேசுனதும் கிடையாது. அவரே இப்படிச் சொல்லும் போது நான் யோசிக்காமல் இருப்பேனா? எனக்கு உங்க கல்யாணத்துல சம்மதம்.” என்று அவர் கூறவும், சாத்விகாவிற்கு மிகுந்த மகிழ்ச்சி. எழுந்து அவரைக் கட்டிக் கொண்டாள் சாத்விகா.

கதவின் ஓரம் நின்று பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கும் ருக்மணியின் சம்மதம் சந்தோஷத்தைக் கொடுத்தது. அனைவரும் மகிழ்ச்சியுடன் சத்தம் போட்டனர்.

~~~~~~~~~~

ஆதன் அவனது அறையில் பரப்பரப்பாக இருந்தான். அப்போது அங்கு வந்தார்கள் பாலாஜி, எட்வின், பிரபு மற்றும் ரவி.

“என்ன ஆதன் டென்ஷனா இருக்கா?” என்று எட்வின் கேட்டான்.

“பின்ன இருக்காதா? இன்னைக்கு கல்யாணம் அப்போ டென்ஷன் இல்லாமல் இருக்குமா?” என்று கேட்டான் பாலாஜி.

“ப்ரோ என்னது இது? அங்க ராக்கி ரொம்ப கேஸ்வலா இருக்கா? நீங்க இப்படிப் பயப்படுறீங்க?” என்று கேட்டான் ரவி.

“அட எல்லாரும் பேசாமல் இருங்க, ப்ரோ ரிலாக்ஸா இருங்க. சாத்விகா சடங்குச் செய்ய மேடைக்கு வந்துட்டா. அடுத்து உங்களைத் தான் கூப்பிடுவாங்க. ஸோ ஏதாவது பேட்ச் அப் பண்ணனும்னா பண்ணிடுங்க.” என்றான் பிரபு.

ஆம் இன்று ஆதன் நிவாஸ் மற்றும் சாத்விகாவின் திருமணம்.

சாத்விகா அவளது அம்மா மற்றும் அப்பாவிடம் தகவலாகத் தான் இதைக் கூறியிருந்தால். அவர்கள் முதலில் மறுத்தாலும் பின்னர் வேறு வழியில்லாமல் சொசைட்டிக்கு பயந்து யாரோ போல் வந்திருந்தனர்.

பிரபு கூறியது போல் சாத்விகா கூரைப் புடவை வாங்கிச் சென்றதும் ஆதனை அழைத்தார் ஐயர். ஆதன் வந்து அவர் சொல்லிய சடங்குச் செய்ய, சிறிது நேரத்தில் சக்தி மற்றும் ஜெசிக்காவுடன் அங்கு வந்தாள் சாத்விகா. அவளைப் பார்த்ததும் அவனால் அவனது கண்களை எடுக்கவே முடியவில்லை.

அவள் வந்து அமரும் வரை அவளையே தான் பார்த்திருந்தான். பாலாஜி தான் அவன் பக்கம் குனிந்து,”டேய் எல்லாரும் பார்க்கிறாங்க. இப்படி வலிஞ்சு மானத்தை வாங்காத. அங்கப் பார் அம்மா முறைச்சு பார்த்துட்டு இருக்காங்க.” என்று கூறவும் தான் சுயம் உணர்ந்து ஐயர் கூறிய மந்திரங்களைக் கூற ஆரம்பித்தான் ஆதன்.

அய்யர் கெட்டிமேளம் கெட்டிமேளம் என்று கூறி மாங்கல்யத்தை எடுத்து ஆதன் கையில் குடுக்க, அதை வாங்கிச் சாமியைக் கும்பிட்டு விட்டு சாத்விகாவின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு அவளைத் தன் சரிபாதியாக ஏற்றுக் கொண்டான் ஆதன் நிவாஸ்.

பின்னர் மெதுவாக அவள் பக்கம் குனிந்து அனைவரும் பார்க்கிறார்கள் என்று கொஞ்சமும் பயமின்றி அவளை நெருங்கி அவளது கண்ணத்தில் அழுத்தமாக முத்தம் வைத்தான் ஆதன். டேய் என்று அனைவர் கத்தினாலும் அதைக் காதிலே வாங்கவில்லை ஆதன்.

“ஐ லவ் யூ நிவாஸ்.” என்று சாத்விகா கூற,

அவளது கையைப் பிடித்துக் கொண்டு,”ஐ லவ் யூ அ லாட்.” என்றான் ஆதன் நிவாஸ்.

– முற்றும் –

Advertisement