Advertisement


சாத்விகா தன் வீட்டுக்குள் வந்து வேக வேகமாக அவளது வேலையைச் செய்ய ஆரம்பித்து விட்டாள். ஒரு வாரம் போட்டிருந்த துணிகளைத் துணி துவைக்கும் இயந்திரத்தில் போட்டுவிட்டு வீடு முழுவதையும் கூட்டித் துடைத்து விட்டாள். வீடு கூட்டுவது மற்றும் துடைப்பது தினமும் நடக்கும். துணி மட்டும் வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை மொத்தமாகப் போட்டுத் துவைத்து விடுவாள்.

சரியாக அவள் வீடு கூட்டித் துடைத்து முடிக்கவும் அவள் ஆர்டர் செய்த உணவு வந்தது. அதை வாங்கிக் கொண்டு உள்ளே வர, துணியும் துவைத்து முடித்துத் தயாராக இருக்க, அதை எடுத்துக் கொண்டு பின் பக்கமாகச் சென்று துணிகளைக் காயப் போட்டு விட்டு வந்து சாப்பிட அமர்ந்தாள்.

சாப்பிட்டு முடித்தவுடன் தொலைக்காட்சியைப் போட்டு, அதில் நெட்ஃபிள்க்ஸை ஆன் செய்து ஆங்கிலப் படம் ஒன்றைப் போட, அவளது கைப்பேசி ஒலி எழுப்பியது. எடுத்துப் பார்த்தவள் கோமதி என்ற பெயர் வரவும் அதை அலட்சியப்படுத்தி விட்டு படம் பார்ப்பதில் ஆர்வமானாள். இரண்டு மூன்று முறை அழைப்பு வந்தும் சாத்விகா எடுக்கவில்லை.

ஒரு மணி நேரம் கடந்திருக்கும், வீட்டின் அழைப்பு மணி ஒலிக்க, படத்தை அப்படியே பாஸ் செய்துவிட்டுப் போய் கதவைத் திறந்தவள், வெளியே நின்றவர்களை அலட்சியமாகப் பார்த்தாள்.

“என்ன சாத்விகா இது? எத்தனை முறை உனக்குக் கூப்பிட்டேன்.” என்று கூறியபடியே அவர் உள்ளே நுழைய முயல, சாத்விகா அவரை மறைத்துக் கொண்டு நின்றாள்.

கோமதி கோபமாக அவளைப் பார்த்து,”நான் ஃபோன் பண்ணும் போது தான் எடுக்கலை!இப்போ வீட்டுக்கு வந்தவங்களை உள்ள விடாம இப்படி வெளில நிற்க வைக்கிற என்ன பழக்கம் இது?” என்று கேட்டார்.

“அத்தை நீங்க கோபப்படாதீங்க. சாது ஏதாவது வேலைல இருந்துருப்பா. அவளைத் திட்டாதீங்க அத்தை.” என்று கோமதி பக்கத்தில் நின்றிருந்த கரண் கூற, அப்பொழுதும் சாத்விகா அவனை நக்கலாகப் பார்த்து விட்டு அமைதியாக இருக்க,

“பார் கரண், நீ இவ்ளோ பேசியும் அவள் எப்படி அசையாமல் அப்படியே நின்னுட்டு இருக்கா.”

“அத்தை..” என்று பேச ஆரம்பித்த கரணை, சாத்விகா தடுத்து,

“ஸ்டாப் இட். நீ எனக்காக எதுவும் பேசத் தேவையில்லை. அண்ட் உங்களை நான் இங்க வரச் சொல்லவே இல்லை. அப்புறம் எதுக்கு இங்க வரனும் இப்படி அசிங்கப்படனும்? கிளம்புறீங்களா எனக்கு வேலை நிறையா இருக்கு.”

“ஏய் நான் உன் அம்மா டி. இப்படித் தான் நீ பேசுவியா?”

“அம்மாவா? யார் நீங்களா? நான் எதுவும் சொல்றதுக்கு முன்னாடி நீங்களா போயிடுங்க. அவ்ளோ தான்.” என்று கூறிவிட்டு அவர்கள் இருப்பதையும் பொருட் படுத்தாமல் அவள் கதவை அடைத்து விட்டு உள்ளே சென்று விட, அவமானப்பட்ட உணர்வில் கோமதியும் கரணும் அங்கிருந்து சென்றனர்.

உள்ளே வந்த சாத்விகா படத்தைத் தொடர்ந்து பார்க்க உட்கார்ந்தாலும் அவளால் அதில் லயிக்க முடியவில்லை. அவளது கடந்த காலம் அவள் மனதில் வடுவாக இன்றும் உள்ளது. அதை அவளால் என்ன முயன்றும் மறக்க முடியவில்லை. அவர்களை மன்னிக்கவும் முடியவில்லை. தொலைக்காட்சியை அணைத்து விட்டு அவளது அறைக்குச் சென்று படுத்து விட்டாள்.

~~~~~~~~~~

பத்து நாட்கள் சென்றிருக்க, எட்வின் ஆதனை அவனது அலுவலக அறையில் சந்தித்தான்.

“என்ன எட்வின் நான் சொன்ன வேலை முடிஞ்சதா?”

“எஸ் சார். ஷாடோ டிடெக்டிவ் ஏஜென்சி ஆரம்பித்து ஆறு வருஷமாகிடுச்சு சார். சாத்விகா தான் அதன் முதலாளி. அவங்களுக்கு கீழ நாலு பேர் வேலை செய்றாங்க. அன்னைக்கு நீங்கள் நினைத்தது போல் அவங்க எந்த தப்பான வேலையும் செய்யவில்லை சார். அதே மாதிரி அவங்க சொன்னதும் உண்மை சார். அவங்க எடுத்த கேஸ் எல்லாம் நல்ல நோக்கத்தோட உள்ள கேஸ்கள் மட்டும் தான் சார். நீங்கள் நிம்மதியாக இருக்கலாம் சார்.” என்று எட்வின் கூறிவிட, அப்பொழுது தான் ஆதனுக்கு நிம்மதியாக இருந்தது.

“இப்போ தான் நிம்மதி எட்வின். ரொம்ப தாங்க்ஸ். நீ செய்த இந்த உதவியை நான் மறக்க மாட்டேன்.” ஆத்மார்த்தமாக ஆதன் கூற,

“அய்யோ சார் எதுக்கு தாங்க்ஸ்லாம் சொல்றீங்க? இதை நான் என் மேல் அதிகாரிக்காகச் செய்யவில்லை. என்னுடைய நண்பனுக்காகத் தான் செய்தேன்.” என்று எட்வின் கூற, ஆதன் எழுந்து வந்து அவனை அனைத்துக் கொண்டான்.

“சரிங்க சார் நான் வரேன்.” என்று கூறிவிட்டு எட்வின் வெளியேற, ஆதன் நிம்மதியுடன் அவனது நாற்காலியில் அமர்ந்தான்.

வேலை முடித்து விட்டு ஆதன் அவனது வீட்டுக்குச் சென்று உடை மாற்றிக் கொண்டு அமர, அவனது அலைப்பேசி அழைத்தது. அவனது கல்லூரி தோழன் சிவா அழைத்திருந்தான்.

“ஹேய் சிவா சொல்லு டா.”

“டேய் நீ சென்னை வந்து ஒரு வருஷமாகிடுச்சு. ஆனால் இன்னும் நம்ம மீட் பண்ணவே இல்லை. எனக்குத் தெரியாது இந்த சனிக்கிழமை நீ வர. கார்த்திக்கும் நானும் உன்னைப் பார்த்து எத்தனை வருஷமாகிடுச்சு. அதனால் எந்த சாக்குப் போக்கும் சொல்லாம ஒழுங்க வரனும்.” என்று சிவா அழுத்தமாகக் கூற,

ஆதனுக்கும் என்ன தோன்றியதோ! அவனும்,”சரி டா நான் வரேன்.” என்று கூற,

“டேய் ரொம்ப சந்தோஷம் டா.” சந்தோஷத்துடன் சிவா கூற, இருவரும் சிறிது நேரம் பேசிவிட்டு வைத்தனர்.

சிவா மற்றும் கார்த்திக் இருவரும் ஆதனுடன் கல்லூரியில் பி.காம். படிப்பை ஒன்றாக ஒரே வகுப்பில் படித்தவர்கள். அப்பொழுதில் இருந்தே மூவரும் இணைபிரியா நண்பர்கள். சிவாவும் கார்த்திக்கும் பி.காம் முடித்தவுடன் எம்.சி.ஏ படித்து முடித்து இப்பொழுது சென்னையில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் நல்ல வேலையில் இருக்கிறார்கள்.

சிவாவும் கார்த்திக்கும் ஆதன் சென்னை வந்த தினத்தில் இருந்து சந்திக்க அழைக்கின்றனர். ஆனால் அவனாலோ தன் வேலையின் பொருட்டு அவர்களைச் சந்திக்க முடியாமல் போகின்றது. இந்தச் சமயம் கட்டாயமாக வருகிறேன் என்று கூறிவிட்டான்.

அதே போல் சனிக்கிழமை சீக்கிரமே வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு வந்து விட்டான் ஆதன். அவனது நண்பர்களைச் சந்திக்க உற்சாகத்துடன் கிளம்பினான். அவனது வண்டியை எடுத்துக் கொண்டு அவர்கள் சந்திக்கலாம் என்று முடிவெடுத்த உணவகத்துக்குச் சென்றான்.

ஆதனுக்கு முன்பே சிவாவும் கார்த்திக்கும் அவனுக்காகக் காத்திருந்தார்கள். ஆதன் வரவும் இருவரும் எழுந்து அவனை அனைத்துக் கொண்டனர். கடைசியாக ஆதனை இருவரும் மூன்று ஆண்டுகளுக்கு முன் பார்த்தது. அதன் பிறகு அலைப்பேசியில் மட்டுமே தொடர்பில் இருந்தனர். இப்பொழுது தான் நேரில் சந்திக்கின்றனர்.

“வா டா. கடைசியா உன்னோட எக்சாம் அப்போ பார்த்தது. அதுக்கப்புறம் உன்னை எத்தனை தடவைக் கூப்பிட்டோம்?” என்று சிவா கேட்க,

“என்ன பண்றது சிவா என் வேலை அப்படி.” என்று கார்த்திக் ஆதன் போல் பேசிக் காட்ட,

“டேய் ஏன் டா! உண்மையிலே வேலை டா. தீடிர்னு நைட் ஷிஃப்ட் வேலைக்குக் கூப்பிட்டுறுவாங்க டா. எப்போ வேலைனு சொல்லவே முடியாது.”

“சரி விடு. இப்போவாவது வந்தியே அதுவரைக்கும் சந்தோஷம்.” என்று சிவா கூற,

“ம் அப்புறம் உங்க வேலைலாம் எப்படிப் போகுது?” என்று ஆதன் கேட்க,

“அது எப்பவும் போல தான் டா. கார்த்திக்கு தான் ஆன்சைட் வந்துருக்கு. இன்னும் பத்து நாள்ல அவன் கனடா போறான்.”

“ஏய் சூப்பர் டா. கங்க்ராட்ஸ் கார்த்திக். எத்தனை வருஷம் டா?”

“மோஸ்ட்லி அங்கேயே செட்டில் ஆகிட ப்ளான் இருக்கு டா. பட் இப்போதைக்கு மூணு வருஷம். வீட்டுல தான் எல்லாரும் ஃபீல் பண்றாங்க கல்யாணம் பண்ணிட்டு போயிருக்கலாம்னு.”

“அதுவும் சரி தான் டா. இப்போ ஃபாரின் மாப்பிள்ளைனாலே யோசிக்கிறாங்க.”

“சரியா சொன்ன டா. அதனால தான் அம்மாவும் அப்பாவும் யோசிக்கிறாங்க.”

“அப்போ என்ன பண்றதா இருக்க?”

“தெரியலை டா. பார்க்கலாம். இப்போதைக்கு நான் போறது உறுதி தான். பின்னாடி அப்புறம் பார்த்துக்கலாம்.”

“அதுவும் சரி தான்.” என்று ஆதன் கூற, அப்படியே கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் பேசிக் கொண்டே சாப்பிட்டு விட்டு மூவரும் கிளம்பி வெளியே வந்தனர்.

“சரி கார்த்திக் பத்திரமா போயிட்டு வா டா. நேரம் இருந்தா நீ போற நாள் வந்து பார்த்துட்டு போறேன்.” என்று ஆதன் கூற,

“சந்தோஷம் டா. கண்டிப்பா வா.”

“ம் சரி கிளம்புறேன்.” பொதுவாக இருவருக்கும் கூறிவிட்டு ஆதன் அவனது இருசக்கர வண்டியை எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பி விட்டான்.

அவன் கிளம்பிய நேரமே இரவு பத்து மணி. அவர்கள் சந்திக்க நினைத்த இடத்திலிருந்து காவலர் குடியிருப்புக்கோ போக ஒரு மணி நேரமாகும்.

அவன் வண்டியில் போய்க் கொண்டிருந்தான், சில தூரம் தான் சென்றிருப்பான், யாரோ ஒரு பெண் கையைக் காட்டி வண்டியை நிறுத்தச் சொன்னாள். இவனுக்குச் சந்தேகமாக இருந்தது, அந்த ராத்திரி நேரத்தில் அவள் தனியாக நிற்பதைப் பார்த்து. முதலில் அவனுக்குத் தோன்றியது அவள் தப்பான அதாவது அந்த மாதிரி பெண்ணாக இருப்பாளோ என்று. ஆனால் அந்த மாதிரி பெண்கள் இப்படிக் கையைக் காட்டி நிப்பாட்ட சொல்ல மாட்டார்கள் என்று யோசித்தான். இருந்தாலும் ஒரு பாதுகாப்பிற்காக வண்டி ஓட்டிக் கொண்டே ஒரு கையால் பின் இடிப்பிலிருந்த கண்(gun) ஐ எடுத்து வண்டியின் பெட்ரோல் டேங்கின் மேல் வைத்துக் கொண்டான். அவன் எங்கு வெளியில் சென்றாலும் துப்பாக்கியை மறக்காமல் எடுத்துக் கொள்வான். கிட்ட நெருங்கியவுடன் தான் தெரிந்தது அந்தப் பெண் பதட்டமாக இருக்கிறாள் என்று. உடனே துப்பாக்கியை எடுத்து மீண்டும் இடிப்பில் சொருகிக் கொண்டான்.

அவள் பக்கத்தில் நிறுத்தி,”என்னாச்சு? எதுக்கு இங்க நின்னுட்டு இருக்கீங்க?”

“சார் எனக்குக் கொஞ்சம் லிஃப்ட் கொடுக்க முடியுமா??”

“நான் கேட்ட கேள்விக்கு முதல்ல பதில் சொல்லுங்க. ராத்திரி நேரத்துல இப்படி தனியா இங்க நின்னுட்டு இருக்கீங்க?? அதுவும் பதட்டமா வேற இருக்கீங்க?? உங்ககிட்ட ஒரு பேக் கூட இல்லை. எதுவும் பிரச்சனையா? நான் போலிஸ் தான். பயப்படாமல் சொல்லுங்க.” என்று ஆதன் கூற, அந்தப் பெண் முகத்தில் ஆதன் போலிஸ் என்று கூறியவுடன் இன்னும் பயம் தொற்றிக் கொண்டது. அவள் எதுவும் பேசாமல் இருக்க,

“நீங்க பயப்படாதீங்க, எந்த பிரச்சனையா இருந்தாலும் சொல்லுங்க.” என்று ஆதன் கனிவாகக் கேட்க,

“அது அது சார்… பிரச்சனைலாம் ஒன்னுமில்லை. அங்க வீட்டுல என் பொண்ணுக்கு உடம்பு முடியலை சார். என்னோட கார் வேற ரிப்பேர் ஆயிடுச்சு சார். பேக் அப்புறம் ஃபோன்லாம் கார் உள்ள வைச்சுருந்தேன் சார். பதட்டத்துல வேற கார் வருதானு பார்க்க வெளியே வந்து கதவை அடச்சிட்டேன் சார். சாவி கார்குள்ளேயே வச்சுட்டேன். வேற ஒன்னுமில்லை.” என்று அந்தப் பெண் கூற,

ஆதனுக்கு அவள் சொல்வதை நம்ப முடியவில்லை. அதனால், “உங்க கார் எங்க மேடம்?” என்று கேட்டுக் கொண்டே தேட,

“சார் அது கொஞ்ச தூரத்துல இருக்கு. வீட்டுல யாருமில்லைன்னு அப்படியே நடந்து வந்துட்டேன் சார். உங்களைப் பார்த்ததும் லிஃப்ட் கேட்டேன் சார். காரை நான் நாளைக்கு எடுத்துக்குறேன் சார். ப்ளீஸ் இப்ப கேள்வி கேட்க நேரமில்லை. என்னைக் கொஞ்சம் எங்க வீட்டுல இறக்கி விட்டுருங்க ப்ளீஸ். ரொம்ப அர்ஜெண்ட். என் பொண்ணை என்னைத் தேடுவா சார்.” என்று அந்தப் பெண் சொல்ல, இவனுக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை. அவளை நம்பவும் முடியாமல் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. அவன் அமைதியாக இருக்க,

“சார் வீட்டுல யாருமில்லை. என் பொண்ணு அங்க எப்படி இருக்காளோ. ப்ளீஸ் சார்.” என்று அந்தப் பெண் கெஞ்ச, வேறு வழியில்லாமல் அவன்,”சரி ஏறுங்க.” என்று கூற,

“ரொம்ப நன்றி சார்.” என்று கூறிவிட்டு அந்தப் பெண் அவனது வண்டியில் ஏறினாள்.

“எங்க இருக்கு உங்க வீடு?” என்று விலாசம் கேட்டுக் கொண்டு அந்தப் பெண்ணை அவளது வீட்டில் இறக்கி விட்டான். இறங்கியவள் அவனைப் பார்த்து,”தாங்க்ஸ் சார்.” என்று கூறிவிட்டு அவளது வீட்டுக்குள் வேகமாகச் சென்று விட்டாள். அந்த வீடும் பார்க்கப் பெரிய வீடாக இருந்தது. அந்தப் பெண் உள்ளே நுழைந்து வீட்டுக் கதவைப் பூட்டும் வரை நின்று பார்த்துவிட்டு இரண்டு நிமிடம் கழித்துத் தான் அவன் அவனது வீட்டுக்கு வண்டியை விட்டான்.

போகும் வழி முழுவதும் யோசனையுடனே சென்றான். அந்தப் பெண்ணின் முகத்தை எங்கோ பார்த்ததைப் போல இருந்தது அவனுக்கு. திரும்பிச் சென்று அந்தப் பெண்ணிடமே கேட்கலாமா என்று யோசித்த போது, இந்த நேரத்தில் வேண்டாம் காலையில் பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து வீட்டுக்குச் சென்றான்.

நாளை அந்தப் பெண்ணை அவன் உயிருடன் பார்க்க மாட்டான் என்பதை அறிந்திருந்தால் அப்படியே விட்டுச் சென்றிருக்க மாட்டானோ என்னவோ!!

Advertisement