Advertisement

சாத்விகா மாட்டுவாள் என்று சுத்தமாக எதிர்பார்க்க வில்லை. அவளுக்குப் புரியவுமில்லை எப்படித் தன்னைக் கண்டுபிடித்தார்கள் என்று. அவள் சுதாரிப்பதற்குள் பாண்டியின் ஆட்கள் அவளைத் தூக்கிக் கொண்டு வந்து விட்டார்கள். இல்லை என்றால் அவள் அவர்களைக் கண்டிப்பாகச் சமாளித்துத் தப்பியிருப்பாள்.

அந்த ஃபேக்ட்டரியின் பின்னால் உள்ள காலியிடத்தில் தான் சாத்விகாவின் கையையும் காலையும் கட்டிப் போட்டு அவளை ஒரு நாற்காலியில் உட்கார வைத்திருந்தனர். எப்படி யோசித்தும் எங்கு தான் தவறு செய்தோம் என்று அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இப்போது அதை யோசிப்பதை விடுத்து, இங்கிருந்து எப்படித் தப்பிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாள். அவளது கையையும் காலையும் வேறு கட்டிப் போட்டிருந்ததால் முதலில் அந்தக் கட்டை அவிழ்க்கலாம் என்று முயற்சி செய்ய ஆரம்பித்தாள்.

அவளது நேரம் கையை முன்னால் வைத்துத் தான் கட்டியிருந்தார்கள். அதனால் தன் பல்லைக் கொண்டு கடித்து அந்தக் கயிற்றை அவிழ்க்க முயன்றாள். ஆனால் அவளால் சுத்தமாக முடியவில்லை. அவர்கள் முடிச்சை இறுக்கமாகக் கட்டியிருந்தார்கள். அதே போல் கயிறும் சற்றுக் கணமாக இருந்தது. இருந்தாலும் முயற்சியைக் கைவிடாமல் மீண்டும் மீண்டும் தன் பல்லால் கடித்து அவிழ்க்க, அவளது முயற்சி சிறிது வெற்றியைக் கொடுத்தது.

கயிற்றின் முடிச்சு கொஞ்சம் பிரிந்தது. அதில் சக்திப் பெற்ற சாத்விகா இப்போது இன்னும் நன்றாக முயற்சி செய்ய, கட்டு மெல்ல மெல்ல அவிழ்க்க ஆரம்பித்தது. கடைசியில் நன்றாக அவிழ, வேகமாகக் கட்டை அவளது கையிலிருந்து அவிழ்த்தாள்.

பின்னர் வேகமாகக் காலில் கட்டப்பட்டு இருந்த கயிற்றை அவிழ்க்க முயன்ற போது சரியாக உள்ளே வந்தார் தேவிகா, பாண்டி மற்றும் அவனது ஆட்களுடன். சாத்விகா கயிற்றை அவிழ்ப்பதைப் பார்த்த தேவிகா கோபம் அடைந்து விட்டார்.

வேகமாக,”அவளை யார் கட்டிப் போட்டது?” என்று கேட்டார். ஒருவன் முன்னால் வந்து தான் தான் என்று கூற, சப்பென்று அவனது கண்ணத்தில் அறைந்தார் தேவிகா.

“ஒரு பொண்ணை கட்டிப் போடத் துப்பில்லை!! போ டா போய் இப்போவாவது ஒழுங்கா கட்டிப் போடு.” என்று தேவிகா கூற, அவன் சாத்விகாவை கட்டிப் போட நெருங்க, அதற்குள் அவள் காலில் உள்ள கட்டைப் பிரித்து விட்டாள் வேகமாக எழுந்து அவளைக் கட்டிப் போட வந்தவனை, எழுந்து ஒரு சுழன்று சுழன்றி அவளது வலது காலால் எட்டி உதைக்க அவன் இரண்டு அடித் தள்ளி விழுந்தான்.

இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை அங்கிருந்தவர்கள். தேவிகா அவளை வியப்பாகப் பார்த்து,”பொண்ணு ரொம்ப துள்ளுதே!! நீ சாதாரணப் பொண்ணு மாதிரி தெரியலையே!! சொல்லு யார் நீ? எதுக்காக இங்க வந்து நீ?” என்று கேட்டார்.

“பரவாலயே தெரிஞ்சுடுச்சா!! ம் புத்தி உங்களுக்கும் இருக்கு போல.” என்று நக்கலாகக் கேட்டாள் சாத்விகா.

அதில் சற்றுக் கோபமடைந்த தேவிகா பாண்டியிடம் கண்ணைக் காட்ட, அவன் தன் பக்கத்தில் உள்ளவனைப் பார்க்க, அவன் சாத்விகாவை நெருங்கும் போது அவளது கை முஷ்டியால் அவனது மூக்கை உடைத்தாள். அதில் அவனது சில்லு மூக்கு உடைந்து இரத்தம் கொட்ட, அவன் சற்றுக் கவனம் சிதற அவனது கால்லை தட்டி விட்டு அவனைக் கீழே விழச் செய்தாள் சாத்விகா.

இது என்ன இவள் இப்படி அடிக்கிறாள் என்று அங்கிருந்தவர்கள் யோசிக்க, அடுத்து ஒருவன் பின்னால் வந்து அவளைத் தாக்க நினைக்க, தன் கை முட்டியால் அவனது வயிற்றில் ஒரு குத்து விடுத்துத் திரும்பி அவனது தலையைத் தன் தொடையில் இடித்து அவனைத் தள்ளிவிட, சுவரில் சென்று மோதி கீழே விழுந்தான் அவன்.

இவளைச் சாதாரணமாக வீழ்த்த முடியாது என்று புரிந்தவர்கள் இப்போது மீதம் இருக்கும் நான்கு பேரும் அவளை நெருங்க, அவளும் முடிந்த அளவு அவர்களைச் சமாளித்தாள். ஆனால் அவளது சக்தி சற்று குறைய ஆரம்பிக்க, அதற்குள் கீழே விழுந்தவர்களும் இப்போது எழுந்திருக்க ஒரு கட்டத்தில் அவளால் சுத்தமாகச் சமாளிக்க முடியாமல் போய் விட்டது.

பாண்டி அவளது கையைப் பிடிக்க, வேறு ஒருவன் அவளது கால்லை பிடிக்க, இப்போது அவளை முன்னால் கட்டிப் போட்டிருந்த நாற்காலியில் அமர வைத்துத் திமிரத் திமிர மீண்டும் கட்டிப் போட்டனர் அவளை.

“என்ன டீ ஓவரா சீன் காட்டுற!! ரொம்ப ஆடாத, அப்புறம் அப்படியே அடக்கம் பண்ணிடுவேன் உன்னை. இப்போ சொல்லு யார் நீ?” என்று கேட்டார் தேவிகா.

சாத்விகா அமைதியாகவே இருக்க, அவளை நெருங்கிய தேவிகா அவளது கண்ணத்தில் சப்பென்று அறைந்தார்.

அதில் நக்கலாக தேவிகாவைப் பார்த்து,”கொஞ்சம் கூடத் தைரியம் இல்லாமல் என்னைக் கட்டிப் போட்டு அடிக்கிற நீ என்னை அடக்கம் பண்ணப் போறியா? எங்க இவனுங்களை வெளிய அனுப்பிட்டு என் கூட ஒத்தைக்கு ஒத்தை வா பார்க்கலாம்.” என்று திமிராகக் கேட்டாள் சாத்விகா.

அதில் சற்று கோபமடைந்த தேவிகா அவரது ஆத்திரம் தீரும் வரை அவளை அடித்தார். ஆனால் அதில் எல்லாம் கலங்கவில்லை சாத்விகா. திடமாக அவள் அமர்ந்திருக்க, அப்போது தான் தேவிகா நிதானமாக யோசிக்க ஆரம்பித்தார். இவள் இவ்வளவு திடமாக அமர்ந்திருப்பதைப் பார்த்தால் கண்டிப்பாக இவள் சாதாரணப் பெண் கிடையாது என்று இப்போது உறுதியாகத் தோன்றியது.

“ஏய் நீ போலிஸா?” என்று கேட்டார் தேவிகா.

“இல்லை உன்னை அழிக்க வந்தவள் நான்.” என்று நெஞ்சை நிமிர்த்தி பதில் கூறினாள் சாத்விகா.

இதில் இன்னும் ஆத்திரம் அடைந்த தேவிகா பாண்டியிடம்,”பாண்டி இவள் யாருனு கேள். இன்னைக்கு நைட் வரை தான் டைம். அப்பவும் இவள் பதில் சொல்லாட்டி நம்ம சாக்லேட் போற கன்டெய்னர்ல இவளையும் தூக்கிப் போடு. மஸ்தான் கிட்ட நான் பேசிக்கிறேன். அவன் இவளை எங்க சேர்த்து என்ன பண்ணனுமோ பண்ணிடுவான்.” என்று பாண்டியிடம் கூறினார் தேவிகா.

அதைச் சாத்விகா முன்னால் தான் கூறினார். அவள் பயப்படுவாள் என்று அவளது முகத்தைப் பார்க்க,ஏமாற்றமே மிஞ்சியது தேவிகாவிற்கு. ஒரு பெண்ணிடம் இத்தனை தைரியத்தை அவர் எதிர்பார்க்கவில்லை. அவளைப் பார்த்து சற்று அசந்து தான் போனார் தேவிகா.

சாத்விகா ஆதனிற்கு வேண்டப்பட்டவள், அதுவும் அவனின் உயிர் அவள் என்று சற்றும் யோசிக்கவில்லை தேவிகா. அவள் யாரோ ஒருவள் என்று தான் யோசித்தார்.

“ஏய் நான் சொன்னது உனக்குப் புரிஞ்சதா? உன்னை நான் அந்த மஸ்தான்கிட்ட ஒப்படைச்சா அவன் என்ன பண்ணுவான் தெரியுமா? உன்னையும் உன்னோட திமிரையும் அவன் அடக்கிடுவான். அதுவும் எப்படினு நினைக்கிற? உன்னை நிர்வாணமாக்கி ஃபோட்டே எடுத்து உன்னை வித்துருவான். அப்போவும் இதே திமிரோட இருக்கியானு நானும் பார்க்கிறேன்.” என்றார் தேவிகா.

“ஹா ஹா.” என்று சத்தமாகச் சிரித்து விட்டு,”பார்க்கலாமா? நீ என் திமிரை அடக்கிறியா இல்லை நான் உன் திமிரை அடக்கிறேன்னானு பார்க்கலாமா?” என்று அவள் தலையைச் சாய்த்துக் கேட்க, அதில் நக்கலே இருக்க, தேவிகாவிற்குப் பயங்கரக் கோபம் வந்துவிட்டது.

“பாண்டி இவளை இப்பவே தூக்கிட்டு போய் அந்த கன்டெய்னர்ல போடு டா. நானும் பார்க்கிறேன் இவள் எப்படித் தப்பிக்கிறானு. இவளோட இந்தத் தைரியத்தை நான் உடைச்சே ஆகனும். இவள் என் கால்ல விழுந்து அவளைக் காப்பத்த சொல்லி கதறனும்.” என்று கூறினார் தேவிகா.

அப்போதும் சாத்விகா பாரதி கண்டப் புதுமைப் பெண்ணாக நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையாக அவள் தேவிகாவைப் பார்த்தாள்.

இதையெல்லாம் மறைந்து நின்று பார்த்துக் கொண்டு இருந்தான் மாசாணி. அவன் முன்னால் இருந்தே அங்கு தான் நின்றிருந்தான். எப்போதும் போல் அவன் அவனது ஷிப்ட்டில் வேலைக்கு வந்தான். அப்போது தான் பாண்டியின் ஆட்கள் சாத்விகா தூக்கிக் கொண்டு சென்றார்கள். அதைப் பார்த்ததும் வேகமாக அவர்களிடம் செல்லும் முன் அவனை அங்கு வேலைச் செய்யும் அவனது கூட்டாளிகள் பிடித்துக் கொள்ள, அவர்களை எல்லாம் சமாளித்து வருவதற்குள் சாத்விகாவை எங்கு அழைத்துச் சென்றார்கள் என்று தெரியவில்லை.

அவன் அவளை எங்கு வைத்திருக்கிறார்கள் என்று இண்டு இடுக்கு என எல்லா இடத்திலும் தேட, சரியாக அவள் கட்டை அவிழ்த்து அவளது வலது காலால் அவளை நெருங்கியவனை அடிக்கும் போது தான் அங்கு வந்தான். அதில் மெய் மறந்து அவன் நின்று விட, அவர்கள் அவளைப் பிடித்தவுடன் தான் நினைவுக்கு வந்தவன் வேகமாக ஆதனிற்கு அழைத்து விஷயத்தைக் கூறினான்.

“மாசாணி நீ மறைஞ்சு நின்னு அவங்களை கண்காணிச்சுட்டே இரு. நான் எவ்ளோ சீக்கிரம் வர முடியுமோ வரேன்.” என்று கூறிவிட்டு அவனது வீட்டிலிருந்து கிளம்பினான் ஆதன்.

~~~~~~~~~~

ஆதன் வருவதற்கு முன், ஏதாவது செய்ய வேண்டுமெனச் சுற்றும் முற்றும் பார்க்க அவனிற்கு எதுவும் தெரியவில்லை. அவன் யோசிப்பதற்குள் சாத்விகாவின் வாயை டேப்பால் அடைத்து விட்டான் பாண்டி. பின்னர் அவளை அப்படியே தூக்கி ஒரு சாக்குப் பையில் போட்டுக் கட்டினர்.

“இன்னைக்கு நைட் தான் ஷிப் வரும். அப்போ நம்ம சரக்கு எல்லாம் ஏத்துனதும் இவளையும் அதுல போட்டுருங்க. அதுக்கு முன்னாடி கவனம், செக்கிங்ல இவள் மாட்டக் கூடாது.” என்று எச்சரித்து விட்டு அங்கிருந்து வெளியேறினார் தேவிகா.

வேகமாக நடந்து வந்து அவரது காரில் ஏற காரின் கதவைத் திறந்தவர் முன்பு வண்டியைக் கொண்டு வந்து நிப்பாட்டினான் ஆதன். அவன் வந்த வேகத்தில் சற்று மிரண்ட தேவிகா, ஆதனைப் பார்த்ததும் இன்னும் மிரண்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

“என்ன மேடோம் என்னை இங்க எதிர்பார்க்கலைல?” என்று நக்கலாகக் கேட்டான் ஆதன்.

“யார் நீ?” என்று தெரியாதது போல் கேட்டார்.

“ஓ மேடோம்க்கு என்னைத் தெரியாதுல!!! நான் தான் ஆதன், ஆதன் நிவாஸ் ஏ.சி.பி. இப்போ ஞாபகம் வருதா?.” என்று கேட்டான்.

அப்போதும் அவர் எதையும் தெரிந்தது போல் காட்டிக் கொள்ளாமல்,”ஓ அப்படியா!! என்னை எதுக்கு பார்க்க வந்தீங்க? ஏதாவது உதவி வேணுமா?” என்று கேட்டார்.

“கண்டிப்பா உங்களோட உதவி ரொம்ப தேவை. என்னன்னு பார்க்கிறீங்களா?” என்று கேட்டு விட்டு அவனது வண்டியின் முன்னால் இருந்து கைவிலங்கை எடுத்து அவரின் முன்பு காட்டி,”நீங்களா வந்தீங்க இதுக்கு வேலை இருக்காது. நானா இழுத்துட்டு போனால் இதுக்கும் வேலை இருக்கும். எனக்கும் வேலை இருக்கும். உங்களோட வசதி எப்படி?” என்று கேட்டான் ஆதன்.

அதில் இன்னுமே மிரண்டு விட்டார் தேவிகா. அவனிற்குத் தெரியாமல் தேவிகா திரும்புவது போல் திரும்பி அவரது கைப்பேசியிலிருந்து பாண்டிக்கு குறுஞ்செய்தி ஒன்று அனுப்பினார்.

பாண்டி அப்போது தான் மூட்டையைத் தூக்கிக் கொண்டு அவனது வாகனத்தில் போட்டு விட்டுத் திரும்பி நிற்க, அவனது கைப்பேசி வைப்ரேட் ஆவதைப் பார்த்து விட்டு எடுத்துப் பார்த்தான். அதில் தேவிகா அனுப்பிய செய்தியைப் பார்த்து விட்டு வேகமாக அவனது ஆட்களுடன் முன்னால் வந்தான் பாண்டி.

அவன் சென்றவுடன் மாசாணி வேகமாக வந்து சாத்விகா இருக்கும் மூட்டையைப் பிரிக்க, சாத்விகா அவனைப் பார்த்து நிம்மதியாகச் சிரித்தாள். அவளது கை மற்றும் காலில் போட்ட கட்டை அவன் அவிழ்த்து விட்டு,”இருந்தாலும் உங்களுக்கு இவ்ளோ தைரியம் ஆகாது அக்காவ்.” என்றான் சற்று பயந்து போய்.

“ஹா ஹா எல்லாம் உன் தலை இருக்கிற தைரியம் தான். கண்டிப்பா அவர் என்னை அப்படியே விட மாட்டார்னு தெரியும் அது தான் என்னைத் தைரியமா இருக்கச் செய்தது.” என்று அவள் கூற, அவன் வியந்து தான் பார்த்தான் அவளை.

~~~~~~~~~~

ஆதன், தேவிகா குறுஞ்செய்தி அனுப்பயிதை பார்த்து விட்டான். இருந்தாலும் அவன் அமைதியாக இருக்கக் காரணம் சாத்விகா. அவள் இவர்கள் பிடியில் இருக்க, தன்னால் எதுவும் செய்ய இயலாது. அதனால் தான் தேவிகாவிடம் வம்பிழுத்துக் கொண்டிருந்தான் ஆதன்.

பாண்டி அவனுடைய ஆட்களுடன் அங்கு வரவும், ஆதனிற்கு மாசாணியிடமிருந்து சாத்விகா ஸேப் என்ற குறுஞ்செய்தி வரவும் சரியாக இருந்தது. சாத்விகா பத்திரமாக இருக்கிறாள் என்று தெரிந்ததும் நிம்மதியாக வண்டியை விட்டு கீழே இறங்கினான் ஆதன்.

அதற்குள் பாண்டி அவனை நெருங்கி வந்துவிட்டான். தேவிகா பாண்டியிடம்,”பாண்டி சாருக்கு உடம்பு நல்லா இருக்கிறது பிடிக்கலையாம். கொஞ்சம் காட்டு காட்டி விடு, ஒரு மாசத்துக்கு எந்திரிக்கவே முடியாத மாதிரி.” என்று கூறிவிட்டு தேவிகா காரில் அமர, எங்கு அவர் போய்விடுவாரோ என்று வேகமாக ஓட்டுனர் பக்கம் குனிந்து காரின் சாவியை எடுத்து வைத்துக் கொண்டான் ஆதன்.

இதைச் சற்றும் எதிர்பார்க்காதவர் வேகமாகக் கீழே இறங்க, அதற்குள் பாண்டியின் ஆட்களும் ஆதனை தாக்க வர, ஆதன் அனைவரையும் திருப்பித் தாக்க, அந்த இடமே போர்க்களம் போல் காட்சியளித்தது.

ஆதன் அனைவரையும் அடிப்பதைப் பார்த்த தேவிகாவிற்கு அள்ளு விட்டது. அப்போது ஒருவன் ஆதனைப் பின்னால் இருந்து தாக்க வர, வேகமாக அங்கு வந்த சாத்விகா கையில் கொண்டு வந்தக் கட்டையால் அவனை அடிக்க, அம்மா என்ற சத்தத்துடன் கீழே விழுந்தான்.

அந்தச் சத்தம் கேட்டு ஆதன் திரும்பிப் பார்க்க, அங்குச் சாத்விகா நின்றிருந்தாள். அவளைப் பார்த்ததும் வேகமாகச் சென்று அவளை அணைத்துக் கொண்டான். அப்போது தான் சாத்விகா ஆதனின் ஆள் என்றே புரிந்தது. அதைவிட அவள் மீண்டும் தப்பித்தது தேவிகாவிற்கு பயங்கரக் கோபத்தைத் தூண்டி விட்டது.

வேகமாக காரிலிருந்த அவரது ஃகண்ணை எடுத்து சாத்விகாவை குறி பார்க்க, அதைப் பார்த்த ஆதன் தடுப்பதற்குள் டமால் என்ற சத்தம் கேட்டது.

Advertisement