Advertisement

ஆதன் கமிஷ்னர் அறையிலிருந்து வெளியே வந்து அவனது வண்டிக்குப் பக்கத்தில் நின்றான். சிறிது நேரத்தில் சாமிக்கண்ணுவுடன் எட்வின் வெளியே வரவும் அவனைக் க்ரோதத்துடன் பார்த்தான் ஆதன்.

வேகமாக அவனிடம் சென்றவன் அவனது சட்டைக் காலரைப் பிடித்து,”உனக்கு என்ன டா துரோகம் பண்ணேன் நான்? ஏன் டா இப்படி என்னை நம்ப வைச்சு கழுத்தறுத்த?” என்று கோபமாகக் கேட்டான்.

எட்வினோ சற்றும் அலட்டிக் கொள்ளாமல் ஆதனின் கையை அவனது சட்டைக் காலரிலிருந்து எடுத்து விட்டு,”அன்னைக்கு என்னை எல்லார் முன்னாடியும் அவமானப்படுத்தும் போது இதை நீ யோசிச்சு இருக்கனும். அதைக் கூட என் மேல தான் தப்பு அதனால போய் தொலைனு விட்டுருப்பேன். ஆனால் நீ என்னை அவமானப்படுத்தியதே மறந்துட்டு திரிஞ்சுகிட்டு இருந்த. அப்போ எனக்கு எவ்ளோ கோபம் வந்துருக்கும். அதனால தான் டா நேரம் பார்த்துக் காத்திருந்தேன். இனி உன்னால எதுவும் பண்ண முடியாது டா. எல்லா பக்கமும் நான் உனக்குச் செக் வைச்சுட்டேன். இதுல இருந்து உன்னால வெளில வர முடியாது டா.” என்று கூறிவிட்டு எட்வின் சாமிக்கண்ணை அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டான்.

அவன் சென்றவுடன் அங்கு வந்த வேலுமணி,”என்ன ஆதன் உன்னை சஸ்பெண்ட் பண்ணிட்டாங்களாமே?” என்று கூறிச் சத்தமாகச் சிரிக்க, அவரைக் கொன்று விடும் அளவு முறைத்துப் பார்த்தான் ஆதன்.

அதற்கு எல்லாம் பயப்படாமல்,”உனக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும் ஆதன். ஏ.சி.பி. ஆகிட்டேன்னு எவ்ளோ ஆட்டம் ஆடுன!! ஆண்டவன் வைச்சான் பார் ஆப்பு உனக்கு. அதுவும் நீ ரொம்ப நம்புன உன்னோட நண்பனை வைச்சே உன்னோட முதுகுல குத்தி!! ஆனாலும் எனக்கு இன்னும் மனசு ஆறல!! உன் மேல கமிஷன் வைச்சுருக்காங்க. அதுல உனக்கு வேலைப் போய் நீ ஜெயிலுக்குப் போகனும். அப்போ தான் எனக்கு மனசு ஆறும்.” என்று வேலுமணி கூற, ஆதன் எதுவும் பதில் பேசவில்லை. அங்கிருந்த அவனது வண்டியை எடுத்துக் கொண்டு வேலுமணியைக் கண்டு கொள்ளாமல் சென்று விட்டான்.

~~~~~~~~~

ஆதன் அவனது வீட்டிற்கு வந்தும் அவனால் எட்வினின் பேச்சையும் வேலுமணியின் எள்ளலையும் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அதுவும் எட்வினின் கோபம் சின்னப்பிள்ளைத் தனமாகத் தான் தெரிந்தது. அவன் மேல் தவற்றை வைத்துக் கொண்டு எட்வின் ஆள்ளே மாறியது அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. நண்பன் என்று நம்பியவன் இன்று துரோகியாக மாறியது மட்டுமல்லாமல் கெட்டவர்களுக்குத் துணை சென்று ஒரு நல்லவரின் சாவிற்கு நியாயம் கிடைக்காமல் செய்து விட்டானே என்று அவன் மேல் பயங்கரக் கோபம் வந்தது ஆதனிற்கு. ஆனாலா அவனால் ஒன்றும் செய்ய இயலாத நிலைமை. இப்போது அவன் நம்பியிருப்பது சாத்விகா மற்றும் மாசாணியை தான். அவர்கள் தங்கள் வேலையைச் சரியாகச் செய்து முடித்தாள் கண்டிப்பாக தேவிகா உள்ளே செல்வது உறுதி என்று தோன்றியது.

அன்று சாத்விகா ஆதனின் விஷயம் கேள்விப்பட்டு அவனது வீட்டிற்கு வந்தப் போது நடந்த நிகழ்வை யோசித்துப் பார்த்தான் ஆதன்.

சாத்விகா சற்றுச் சோகமாக அமர்ந்திருந்தாள். அப்போது ஆதன் அவள் பக்கத்தில் வந்து அவளது கையைத் தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டு,”சாத்விகா நான் வேற ஒரு ப்ளான் போட்டு வைச்சுருக்கேன். அதனால நீ கவலைப்படாத. கண்டிப்பா இந்த முறை நமக்குச் சாதகமாகத் தான் முடியும்.” என்றான்.

“என்ன சொல்றீங்க நிவாஸ்? என்ன ப்ளான்?” என்று ஆர்வமாகக் கேட்டாள் சாத்விகா.

“நான் அந்த ஆயோக்கியன் ராஜாவைக் கண்காணிக்கப் போனேன்ல அப்போ ஒரு யோசனை தோனுச்சு. இவனைப் பிடிச்சா ரம்யாவைக் கொலைப் பண்ணதை மட்டும் தான் நிரூபிக்க முடியும். ஆனால் அந்த தேவிகா தங்கத்தைக் கடத்துறதை நம்மாள நிரூபிக்க முடியாது. அதனால மாசாணி மூலமா காரியத்தைச் செயல் படுத்தலாம்னு யோசிச்சேன்.” என்றான்.

“எப்படிப் பண்ண போறீங்க நிவாஸ். அந்த மாசாணி என்ன பண்ணுவான் இதுல?”

“மாசாணிய தேவிகாவோட ஃபேக்ட்டரிக்கு வேலைக்கு அனுப்பி எப்படி அவங்க தங்கத்தைக் கடத்துறாங்கனு தெளிவாகப் பார்த்து முடிந்தால் அதைப் படம் பிடித்து என்கிட்டச் சொல்லனும் சொல்லிருக்கேன்.” என்றான் ஆதன்.

“வாவ் சூப்பர் நிவாஸ். இப்போ மாசாணி அங்க வேலைக்குச் சேர்ந்துட்டானா? அவனை எப்படி நம்பி அவங்க வேலைக்குச் சேர்த்துக்குவாங்க? அப்படியே சேர்த்தாலும் அவனால அவங்க தங்கம் கடத்துற இடத்துக்குப் போக முடியுமா?” என்று தொடர் கேள்விகளைக் கேட்டாள் சாத்விகா.

“உன்னோட முதல் கேள்விக்கு மட்டும் நான் பதில் சொல்றேன். மாசாணி அங்க வேலைக்குச் சேர்ந்து இன்னையோட மூணு நாளாகிடுச்சு. அவன் சாதாரண வேலைக்குத் தான் போயிருக்கான். அதாவது சாக்லேட் பேக் பண்ற வொர்க் தான் இப்போ கொடுத்துருக்காங்க. அப்புறம் அவன் எப்படி அவங்க தங்கம் கடத்துற இடத்துக்குப் போவான்னு கேட்டா என்கிட்ட பதில் இல்லை. ஆனால் நம்பிக்கை இருக்கு. மாசாணி கண்டிப்பா அவங்களோட கடத்தலை கண்டுபிடிப்பான். அதுவரை நாம கொஞ்சம் பொறுமையா தான் இருக்கனும்.” என்றான் ஆதன்.

அவன் கூறியதைக் கேட்டுச் சற்று நேரம் யோசித்த சாத்விகா ஆதனிடம்,”நிவாஸ் அப்போ நானும் அங்க வேலைக்குப் போறேன்.” என்றாள்.

அவள் அவ்வாறு கூறியதும் ஆதனிற்கு தூக்கிவாரிப் போட்டது. வேகமாக,”என்ன விளையாடுறியா சாத்விகா? இது சாதாரண விஷயமில்லை. கொஞ்சம் தப்பு நடந்தாலும் அவங்க உன்னைக் கொலை பண்ணிடுவாங்க. எதுக்கும் அடங்காத ஜென்மங்கள் அவங்க.” என்று கூறி அவள் போவதை தடுத்தான் ஆதன்.

“இல்லை நிவாஸ் நான் டிசைட் பண்ணிட்டேன். அங்கப் போகத் தான் போறேன். நீங்க என்னைப் பத்தி எப்படிக் கவலைப் படுறீங்களோ அதே மாதிரி எனக்கும் உங்களை நினைச்சு கவலை இருக்கு. ஸோ ப்ளீஸ் என்னைப் போக வேண்டாம்னு சொல்லாதீங்க. ஐ கேன் மேனேஜ் மை செல்ப்.” என்றாள் சாத்விகா.

“ப்ச் சும்மா இரு சாத்விகா. மாசாணியை அங்க அனுப்பவே நான் அவ்ளோ யோசிச்சேன். இதுல நீயும் அங்க போனால் என்னால இங்க நிம்மதியா இருக்க முடியாது பேபி. ப்ளீஸ் புரிஞ்சுக்கோ.”

“நிவாஸ் என்னோட முடிவுல எந்த மாற்றமும் இல்லை. இது உங்களோட எதிர்காலம் சம்பத்தப்பட்டது. அதுல என்னால உங்களை மாதிரி சாதாரண எடுத்துக்க முடியாது. சின்னத் தப்பு நடந்தாலும் உங்களோட லைஃப்பே முடிஞ்சுடும். எவ்வளவோ தப்புப் பண்ணிட்டு தைரியமா இந்த உலகத்துல சுத்திட்டு திரியிறாங்க!! நீங்க அந்தத் தப்பைத் தட்டிக் கேட்டால் உங்க மேல வீணா பழி சுமத்தி உள்ளத் தள்ளப் பார்ப்பாங்களா!! இது நியாயமே இல்லை நிவாஸ். என்னால மாசாணியை மட்டும் நம்பிட்டு உங்களை மாதிரி சும்மா உட்கார முடியாது. நானும் கண்டிப்பா போவேன். எனக்கு ஒன்னும் ஆகாது.” என்றாள் சாத்விகா. அவள் பேசப் பேச அவளைத் தடுப்பது முடியாதது என்று தோன்றியது.

ஆனால் அவளைத் தடுத்தே ஆக வேண்டுமென்று அடுத்து ஒரு விஷயத்தைக் கூறினான் ஆதன். அதைக் கேட்டதும் அவளால் தன் காதுகளையே நம்ப முடியவில்லை. ஆதன் இப்படித் திட்டம் தீட்டுவான் என்று யோசிக்கவே இல்லை சாத்விகா. வேகமாக அவனது கண்ணத்தில் அழுத்தமாக முத்தம் வைத்தாள் சாத்விகா.

“சூப்பர் ப்ளான் நிவாஸ். உங்க ப்ரெயினே ப்ரெயின் தான். எப்படி இப்படி?” என்று அவள் கேட்க, அவன் தோள்களைக் குலுக்கி தெரியாது என்று கூறிச் சிரித்தான்.

“இப்போ என்ன சொல்ற சாத்விகா? நீ போக வேண்டிய அவசியமே இல்லை டா பேபி.” என்றான். ஆனால் சாத்விகாவோ தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் தான் என்று பிடிவாதமாக இருக்க, வேறு வழியின்றி அவன் அவளை அங்கு அனுப்பி வைக்கச் சம்மதித்தான்.

அதன் பிறகு அவள் சற்றும் தாமதிக்காமல் ஆதனிடம் கூறிவிட்டுச் சிட்டாக அவளது வீட்டுக்குப் பறந்துவிட்டாள்.

அவள் தேவிகாவின் ஃபேக்ட்டரிக்குச் செல்வதற்கு முன்பே ஆதன் மாசாணியிடம் சாத்விகாவின் வரவைப் பற்றிக் கூறியது மட்டுமல்லாமல் அவளைப் பத்திரமாகப் பார்த்துக் கொள் என்று கூறி அவளின் பாதுகாப்பிற்கும் வழி செய்து விட்டான்.

இப்போது அதை நினைக்கும் போது ஆதனின் மனதிற்குள் ஒரு புறம் நிம்மதியாக இருந்தது என்றால் மறுபுறம் சாத்விகா மற்றும் மாசாணியை நினைத்துப் பயம் கொள்ள வைத்தது. தன்னுடைய பேராசையால் அவர்களைத் தேவையில்லாமல் ரிஸ்க் எடுக்க வைத்துவிட்டோமோ என்று தோன்றியது அவனுக்கு.

கேடுகெட்டவர்களுக்குத் தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டுமென யோசித்தது ஒன்றும் பேராசை இல்லை. தேவிகா போன்றவர்களைப் பார்த்து பயந்து அப்படியே விட்டுவிட்டால் பல பேர் அவரைப் போல் உருவாவார்கள். அதைத் தடுக்க வேண்டுமென்றால் இந்த விஷப் பரீட்சை தேவையானது என்று மனதிற்குத் தோன்றியது.

~~~~~~~~~~

கமிஷ்னர் அலுவலகத்தில் வேலுமணி ஆதனைப் பார்த்தவுடன் சென்ற இடம் பாண்டியைத் தேடித் தான். ஏனோ பாண்டிக்கு எட்வின் மேல் நம்பிக்கை இல்லை. நம்பிக்கை என்பதை விட, இப்போது அவன் தேவிகாவிடம் நல்ல பெயர் எடுத்ததை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால் அவன் மேல் ஏதாவது ஒரு குற்றத்தைச் சுமத்தி அவனது கதையையும் தீர்த்துக் கட்ட வேண்டுமென முடிவெடுத்து விட்டான் பாண்டி.

அதனால் அவனது ஒவ்வொரு நடவடிக்கையையும் கவனித்து அவனிடம் கூற வேண்டுமென வேலுமணியிடமும் கல்யாணிடமும் கூறியிருந்தான். அதனால் தான் வேலுமணி எட்வினைப் பின் தொடர்ந்து கமிஷ்னர் அலுவலகம் வந்தது. அங்கு அவனிற்கும் ஆதனிற்கும் நடுவில் நடந்த சண்டை என்று ஒன்று விடாமல் அவர் பார்த்து விட்டார்.

ஆதன் சஸ்பென்ட் ஆனதால் கல்யாண் தான் ஆதனின் வழக்கில் தீர்ப்பு வரும் வரை அந்தப் பகுதியின் ஏ.சி.பி. அதனால் அவனிற்கும் எட்வினின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கண்காணிக்கச் சரியான வழி கிடைத்து விட்டது.

வேலுமணியும் கல்யாணும் பாண்டிக்கு துணை போவதற்கு ஒரே காரணம் அவர்கள் தேவிகாவிற்குப் பல ஆண்டுகளாக உழைத்துக் கொண்டிருந்தாலும் அவரை இதுவரை இவர்கள் நேரில் சந்தித்தது கிடையாது. பாண்டியுடன் மட்டுமே தொடர்பில் உள்ளார்கள். அதனால் அவர்களுக்குப் பாண்டியின் உதவி கண்டிப்பாகத் தேவை. அதனாலே அவர்கள் அவனுக்கு உதவுகிறார்கள்.

பாண்டியும் கல்யாணும் பாண்டியின் பண்ணை வீட்டில் உட்கார்ந்து தண்ணீ அடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த வேலுமணி அவர்களின் நிலையைப் பார்த்து,”என்ன காலைலயே தண்ணீயை போட்டுட்டீங்க போல?”

“ம் ஆமா, அந்த எட்வின் வந்ததுல இருந்து எனக்கு அந்த தேவிகாகிட்ட மரியாதையே இல்லாமல் போயிடுச்சா. அது மட்டுமா அவன் செய்யுற ஒவ்வொரு விஷயத்தையும் வைச்சு என்னையும் அவனையும் கம்பேர் பண்ணி மட்டும் வேற தட்டுறா அந்த தேவிகா. இதை எல்லாம் பார்க்கும் போது அவளைப் போட்டு தள்ளிடலாம்னு தான் தோனுது. ஆனால் டீலிங்க்ஸ் எல்லாம் அவளுக்கு மட்டும் தான் தெரியும். அந்த ஜகதீஷ்கு கூடத் தெரியாமல் வைச்சுருக்கா. அந்த ஒரு காரணத்தால தான் அவளை இன்னும் நான் உயிரோடவே வைச்சுருக்கேன்.” என்றான் பாண்டி.

“என்ன பாண்டி இப்படிச் சொல்ற?”

“ஆமா!! ப்ச் அந்தக் கதையை விடு, வேலுமணி நீ போன விஷயம் என்னாச்சு?”

“அந்த எட்வின் சொன்ன மாதிரியே சாமிக்கண்ணு நான் ஆதன் சொல்லி தான் அப்படிப் பொய் சொன்னேன்னு சொல்லிட்டான். அதனால கமிஷ்னர் இந்த கேஸை க்ளோஸ் பண்ணச் சொல்லிட்டார்.”

“ப்ச் எப்படி அந்த எட்வின் மட்டும் இவ்ளோ புத்திசாலித்தனமா இருக்கான். இந்த ஐடியா ஏன் எனக்குத் தோனல?” என்று புலம்பினான் பாண்டி. அவனைச் சமாதானப்படுத்தத் தான் வழி தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தனர் கல்யாணும் வேலுமணியும்.

~~~~~~~~~~

மாசாணி அங்கு வேலைக்குச் சேர்ந்து இப்போது ஐந்து நாட்களாகி இருந்தது. அவனது சிபாரிசில் தான் சாத்விகா அங்கு வேலைக்குச் சேர்ந்தாள். அவள் சேர்வதற்கு முன்பு அவளது தோற்றத்தில் பல மாற்றங்களைச் செய்தாள்.

அவளைப் பார்த்த முதல் பார்வையிலே அனைவரும் அவள் இல்லாத வீட்டிலிருந்து தான் வருகிறாள் என்று கூறினால் கண்டிப்பாக ஒத்துக் கொள்வார்கள். அதனால் அவர்களுக்கு அவள் மேல் எந்தச் சந்தேகமும் வரவில்லை. அவர்களது திட்டத்தில் முதல்படியாக சாத்விகாவும் மாசாணியும் வயிற்றுப் பிழைப்புக்காக அங்கு வேலைச் செய்ய வந்தவர்கள் போல் சேர்ந்து விட்டனர்.

அடுத்து என்ன செய்வது எப்படிச் செய்வது என்றும் ஒன்றும் புரியாமல் அந்த ஃபேக்ட்டரியை வலம் வந்து கொண்டிருந்தனர் இருவரும்.

சாத்விகாவிற்கு காலை எட்டு மணி முதல் மதியம் இரண்டு மணி வரை வேலை என்றால், மாசாணிக்கு மதியம் இரண்டு மணியில் இரவு எட்டு மணி வரை வேலை. அதனால் வேலை நேரங்களில் அவர்களால் ஒருவருக்கு ஒருவர் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. அவர்கள் எப்படித் தங்கத்தைக் கடத்துகிறார்கள் என்றும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இருவருக்கும் மண்டையைப் பிய்த்துக் கொள்ளும் நிலை. ஏனென்றால் அங்கு டேன்ஜர் இந்தப் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்று எங்கும் அவர்கள் போர்ட் வைக்கவில்லை. அதே போல் அந்த ஃபேக்ட்டரியில் அனைத்து இடங்களிலும் அவர்கள் செல்லலாம். அதனால் அவர்களுக்கு மிகுந்த குழப்பம் தான் ஏற்பட்டது. ஒரு வேலை அவர்கள் தங்கத்தைக் கடத்தவில்லையோ என்று நினைக்கும் அளவுக்கு வந்து விட்டனர் இருவரும். இருந்தாலும் அவர்களது முயற்சியை விடாமல் செய்து கொண்டிருந்தனர்.

சிங்கத்தைப் பிடிக்கத் தந்திரமாக ஓரி(ஆண் நரி) தனது பாட்டியை(பெண் நரி) அதன் குகைக்குள்ளே அனுப்பி உள்ளது. சிங்கம் பாட்டியை வேட்டையாடுமா அல்லாது பாட்டி தந்திரமாகச் சிங்கத்தை அதன் குகைக்குள்ளே சிறை பிடிக்குமா?

Advertisement