Advertisement

ஆதன் தன்னுடைய காவல் ஜீப்பில் தான் சாத்விகாவின் வீட்டிற்கு வந்திருந்தான். அதனால் சாத்விகாவின் காரில் தான் அவர்கள் பீச்சிற்கு வந்திருந்தனர். சாத்விகா தான் வண்டியை ஓட்டினாள். அதையே தான் ஆதனும் விரும்பினான். இருவரும் அவர்களது பயணம் முழுவதும் அமைதியாகத் தான் கழித்தனர். அந்தப் பயணம் முழுவதும் ஆதன் அவனது காதலை எப்படி அவளிடம் தெரிவிப்பது என்று யோசித்துக் கொண்டே வர, சாத்விகாவோ ஆதனின் அம்மா கல்யாணம் பற்றிப் பேசியதில் அவள் மனம் ஆழிப்பேரலையில் சிக்கியது போல் துடிதுடித்தது.

இருவரும் அவரவர் யோசனையில் இருக்க, சில நிமிடங்களிலே பீச்சும் வந்து விட்டது. காரை நிறுத்தவிட்டு இருவரும் இறங்கினார்கள். பீச்சில் மக்கள் கூட்டம் மிகவும் குறைவாகத் தான் இருந்தது.

பேரலையின் சத்தத்தில் ஆதன் அவனது யோசனையிலிருந்து வெளி வந்து விட்டான். சாத்விகா தான் எதையோ இழந்தது போல் இருக்க, ஆதன் அவள் கையைப் பிடித்தான். அதில் சாத்விகா சுய உணர்வுப் பெற்று அவனைப் பார்த்தாள்.

“என்ன யோசனை? நானும் கிளம்புனதுல இருந்து பார்த்துட்டு இருக்கேன். ஏதோ யோசனைலயே இருக்கிற மாதிரியே இருக்க? பீச் வந்தும் நீ தெளிவாவே இல்லை. நல்ல வேளை ஒழுங்கா கார் ஓட்டு வந்துட்ட. இல்லாட்டி இந்நேரம் நாம ஹாஸ்பிட்டல்ல தான் இருந்திருக்கனும்.” என்று கேட்டுக் கொண்டே அவளுடன் நடந்தான் ஆதன்.

அவன் கூறியதைக் கேட்ட சாத்விகா அவனது புஜத்தில் செல்லமாக அடித்து விட்டு,”ப்ச் சும்மா இருங்க நிவாஸ். உங்களுக்கு எதுல விளையாடனு ஒரு விவஸ்தை இல்லை. நான் யோசனைல இருந்தாலும் வண்டி ஓட்டும் போது கான்சென்ட்ரேட் பண்ணித் தான் ஓட்டுனேன். அதுவும் நீங்க பக்கத்துல இருக்கும் போது ஒழுங்கா தான் ஓட்டுவேன்.” என்று அவளும் பேசிக் கொண்டே கூறினாள்.

அவள் கூறிய கடைசி வரியைப் பிடித்துக் கொண்டு,”அது என்ன நான் உன் கூட வரும் போது? எனிதிங் ஸ்பெஷல்?” என்று கேட்டான்.

அவன் கேட்டதில் சுதாரித்துக் கொண்ட சாத்விகா,”ஹா ஹா அதெல்லாம் ஒரு ஸ்பெஷலும் இல்லை. நீங்க போலிஸ் ஸோ நான் ஜாக்கிரதையா இருக்கனும்ல அதனால தான கான்சென்ட்ரேட் பண்ணி ஓட்டுனேன்.” என்று சமாளித்தாள் சாத்விகா.

“சரி சரி நம்பிட்டேன். இப்போ சொல்லு என்ன அப்படிப் பலத்த யோசனை?” என்று அவன் கேட்க, அவளுக்குத் தான் எப்படிச் சொல்வதெனப் புரியவில்லை. அவனிடம் நேரடியாக அவனுக்குக் கல்யாணமா இல்லை கல்யாணத்திற்குப் பேசுகிறார்களா என்றும் கேட்க முடியவில்லை.

சிறிது தூரம் நடந்தவர்கள், சாத்விகா அப்படியே அமைதியாகவே நிற்க அவள் முகத்தின் முன்பு தன் கையை ஆட்டி,”என்ன மேடம் என்ன யோசனைனு கேட்டா ஆஃப் மோட்க்கு போயிட்டீங்க?” என்று கேட்டான் ஆதன்.

“ப்ச் அதெல்லாம் ஒன்னுமில்லை. ஒரு வாரம் என்ன பண்ணிட்டு இருந்தீங்க? ஏதோ ரவுடியப் பிடிக்கப் போறேன்னு சொன்னீங்க? அது என்ன ஆச்சு?” என்று அவள் பேச்சை மாற்றி விட்டு அங்கேயே அமர்ந்தாள்.

ஆதனும் அவள் அருகே அமர்ந்து விட்டு அவளுக்கு மெச்சும் பார்வை ஒன்றைக் கொடுத்து விட்டு,”சக்சஸ் தான். அவனைப் பிடிச்சு உண்மையை வாங்கியாச்சு. இப்போ ஸ்டேஷன்ல தான் இருக்கான். அவன் கூட இருந்த கூட்டாளிகள் பத்தி எல்லாத்தையும் சொல்லிட்டான். அவங்களையும் பிடிச்சுட்டா அந்தத் தேவிகாவை அரெஸ்ட் பண்ணிடலாம். ரம்யா சாவுக்கு நியாயம் கிடைச்சுடும்.” என்று கூறினான் ஆதன்.

“சூப்பர் நிவாஸ். அப்போ இந்த கேஸ் சீக்கிரம் முடிஞ்சுரும்னு சொல்லுங்க.”

“எஸ். இந்த கேஸ் முடிஞ்சா சென்னைக்கு வந்து நான் சால்வ் பண்ணப் பெரிய கேஸ் இதுவா தான் இருக்கும்.”

“சந்தோஷம் நிவாஸ். அப்போ அடுத்து உங்க அம்மா ஃபோன்ல பேசுன மாதிரி கல்யாணம்னு சொல்லுங்க.” என்று அவள் கூறியதும் ஆதன் அவளது முகத்தைப் பார்த்தான். அதில் அவன் என்ன கூறப் போகிறான் என்ற பரபரப்பு தெரிந்தது. அதை மனதில் குறித்துக் கொண்டான் ஆதன்.

“எஸ் சாத்விகா எனக்கும் வயசாகுதுல. இப்போ கல்யாணம் நடந்தால் தான் குழந்தை, அதோட வளர்ப்புனு எல்லாம் பார்க்கச் சரியா இருக்கும்.” என்று அவன் கூற, அவளுக்கு அந்தப் பதில் கேட்டுவிட்டு என்னப் பேசுவதெனப் புரியாமல் அமைதியாகி விட்டாள்.

ஆதனிற்கு அவளது அமைதி ஆனந்தத்தைக் கொடுத்தது. அவள் மனதில் தான் இருக்கிறோம் என்ற எண்ணம் குதூகலமாக இருந்தது. அவன் காதலைக் கூறினால் கண்டிப்பாக அவள் ஏற்றுக் கொள்வாள் என்று அவன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவள் எழுந்து கடல் நீரில் காலை நனைக்கச் சென்றாள்.

அவளது முகத்தில் சோகம் அப்பட்டமாகத் தெரிய அவனுக்கு அதைப் பார்த்து ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும் மறுபக்கம் கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருந்தது. அதனால் அவனும் எழுந்து அவளிடம் சென்றான்.

அவள் இவன் வந்ததைக் கூடக் கவனிக்காமல் கடல் அலையை வெறித்த படி நின்று கொண்டிருந்தாள். அவளின் அந்த நிலை ஆதனிற்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை.

“சாத்விகா.” என்று அழைத்தான்.

அவனது அழைப்பில் அவனைத் திரும்பிப் பார்த்தாள் சாத்விகா. அவளது தோள்பட்டையில் கை வைத்து அவளைத் தன்னைப் பார்க்கும் மாதிரி திருப்பி நிறுத்துவிட்டு, அப்படியே கையைக் கீழே கொண்டு வந்து அவளது விரல்களைப் பிடித்துக் கொண்டு,”சாத்விகா நான் சுத்தி வளைச்சு பேச விரும்பலை. நேரா விஷயத்துக்கே வரேன். எனக்குக் கவிதையாலாம் பேசத் தெரியாது சாத்விகா. அதனால பட்டுனு விஷயம் என்னன்னு சொல்லிடுறேன். ஐ லவ் யூ சாத்விகா. டூ யு லவ் மீ?” பளிச்சென்று கேட்டான் ஆதன்.

ஆதன் அப்படிக் கூறியதும் சாத்விகாவிற்கு அது வரை இருந்த வருத்தம் எல்லாம் மறைந்து மனம் குளிர்ந்து போனது. அவனுக்குப் பதில் கூற வேண்டுமென்று கூட உணராமல் அப்படியே அவனைப் பார்த்துக் கொண்டே அவள் நின்றாள்.

“ஹலோ மேடம் என்ன அப்படியே ஃப்ரீஸ் மோட்ல நின்னுட்டீங்க? ஸே எஸ் ஆர் நோ.” என்று கூறினான் ஆதன்.

“நிவாஸ் நீங்க விளையாடலை தான? நிஜமா சொல்றீங்களா?” அவள் நம்பாமல் கேட்டாள்.

அதில் சிரித்து விட்டான் ஆதன். அவளது கண்ணத்தைத் தன் கைகளால் தாங்கி அவளது நெற்றியோடு அவனது நெற்றியை முட்டி,”உண்மையைத் தான் சொல்றேன் பேபி. ஐ லவ் யூ அ லாட். எப்போ எப்படினு எனக்குத் தெரியலை. ஆனால் நீ உன்னோட பேரன்ட்ஸ் பத்திச் சொல்லும் போது உன்னை நான் வாழ்க்கை முழுசும் சந்தோஷமா வச்சுக்கனும்னு தோனுச்சு. அப்போ தான் நான் புரிஞ்சுக்கிட்டேன் உன்னை நான் லவ் பண்றேன்னு. இப்போ சொல்லுங்க மேடம் உங்களோட பதிலை.” என்று அவள் நெற்றி மீது வைத்த அவனது நெற்றியை எடுக்காமலே அவன் கூற, அப்படியே அவனை அணைத்துக் கொண்டாள் சாத்விகா. அதிலே அவளது பதில் அவனுக்குத் தெரிந்தது.

இருந்தாலும் அவளது வாய் வழியாகக் கேட்க வேண்டுமென மனசில்லாமல் அவளைத் தன்னிடமிருந்து பிரித்துச் சிரித்துக் கொண்டே,”அதை அப்படியே உங்க வாயால சொன்னா நல்லா இருக்கும்.” என்றான் அவன்.

அவளும் சிரித்துக் கொண்டே,”எஸ் நானும் இந்த போலிஸ லவ் பண்றேன்.” என்று கூறிவிட்டு எம்பி அவனது கண்ணத்தில் முத்தம் வைத்தாள். ஆதன் சுத்தமாக இதை எதிர்பார்க்கவில்லை. அப்படியே அவளை இழுத்துக் கட்டிப் பிடித்துக் கொண்டான் ஆதன்.

ஆதன் அவனது முதுகின் பின்னால் நடக்கும் சதியையும் அதனால் அவனது வேலைக்கே ஆபத்து வரப் போகிறது என்பதை எல்லாம் தெரியாமல் கடல் நீரில் சாத்விகாவுடன் விளையாடிக் கொண்டிருந்தான்.

~~~~~~~~~~

பாண்டி, எட்வின் விஷயத்தைக் கூறியதும் அடுத்து என்ன செய்வதெனப் புரியாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தான். பின்னர் இப்படி அமைதியாக இருப்பது சரி வராது என்று புரிந்து மனதைத் திடப்படுத்திக் கொண்டு எழுந்து தேவிகாவைச் சந்திக்கச் சென்றான்.

தேவிகா அவரது வீட்டில் கூடத்திலிருந்த சாய்விருக்கையில் அமர்ந்து தொலைக்காட்சிப் பார்த்துக் கொண்டிருந்தார். பக்கத்திலே அவரது கணவர் ஜகதீஷ் அமர்ந்திருந்தார்.

#####

தேவிகாவைப் பார்த்தால் முப்பதின் இறுதியில் இருப்பதைப் போலவே தெரியாது. ஏதோ இருபது வயது பெண் போல் தான் தெரிவார். அவர் அவரது தோற்றத்திற்கு அத்தனை முக்கியத்துவம் தருவார். ஆனால் அவரது கணவர் ஜகதீஷோ அவருக்கு அப்படியே நேர் எதிர். அவரது வயது அவரது தோற்றத்திலே காட்டிவிடும். இருவருக்கும் கிட்டத்தட்ட பதிமூன்று வயது வித்தியாசம்.

ஜகதீஷ், தேவிகாவின் தந்தையிடம் வேலையில் இருந்தவர். அவரது ஜாலத்தில் தேவிகாவை அவரது காதல் வலையில் விழ வைத்து விட்டார். தேவிகாவின் வீட்டில் இருவரையும் ஏற்றுக் கொள்ளவே இல்லை. அதனால் வீட்டை விட்டு வெளியேறியது மட்டுமல்லாமல் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்து அவருக்குச் சேர வேண்டிய சொத்தையும் வாங்கிக் கொண்டார் தேவிகா. அதில் கிடைத்தது தான் பத்துக் கோடி மதிப்புள்ள வீடும், சாக்லேட் ஃபேக்ட்டரியும். அதையும் அவர் உருப்படியாகப் பார்த்துக் கொள்ளாமல் நஷ்டத்தை ஏற்படுத்த, அடுத்து என்னச் செய்வதெனப் புரியாமல் தவித்துக் கொண்டிருக்கும் போது தான் ஜகதீஷின் தூரத்துச் சொந்தமான பாண்டியின் தொடர்பு கிடைத்தது.

அவன் பல சட்டவிரோதமான செயல் செய்வது தெரிந்தது. இவர்களது நிலையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தலாம் என்று எண்ணி அவனது ஆலோசனையைக் கூற, முதலில் யோசித்த தேவிகா, ஜகதீஷூம் தொடர்ந்து வலியுறுத்தக் கடைசியில் செய்து பார்க்கலாம் என்று முடிவெடுத்து ஆரம்பித்தது தான் தங்கம் கடத்தல் செய்யும் பிஸினஸ். முதலில் சொற்ப அளவில் ஆரம்பித்தது போகப் போக நிறையச் செய்ய ஆரம்பித்தார்கள். எண்ணம் மட்டுமே பாண்டியுடையது ஆனால் அதைச் செயல்படுத்தியது எல்லாம் தேவிகா என்ற தனி மனுஷி.

#####

பாண்டி உள்ளே நுழைய, அவனைப் பார்த்ததும் ஜகதீஷ் தொலைக்காட்சியை அணைத்தார். தேவிகா அவனைப் பார்வையாலே என்ன என்று கேட்க, அவன் பதில் பேசாமல் தலையைக் குனிந்து கொண்டு நின்றான்.

அவனது நிலையே ஏதோ தப்பாக நடந்திருக்கிறது என்று தேவிகா மற்றும் ஜகதீஷ்கு புரிந்தது. ஜகதீஷ் வேகமாக எழுந்து அவனிடம் சென்று,”என்னாச்சு பாண்டி? என்னப் பிரச்சனை?” என்று கேட்டார்.

பாண்டி எதுவும் பேசாமல் அமைதியாகவே நிற்க, தேவிகா உட்கார்ந்த இடத்திலிருந்தே,”என்ன விஷயம் பாண்டி?” என்று கேட்டார்.

அவன் தலையைச் சொறிந்து கொண்டு ஆதன் பற்றி ஆதி முதல் அந்தம் வரை அனைத்தையும் கூறி முடித்தான். கேட்ட தேவிகாவிற்கு கோபத்தில் அப்படியே எழுந்து நின்று,”அவன் இவ்ளோ தூரம் வர வரைக்கும் நீ என்ன டா பண்ணிட்டு இருந்த?” கோபமாகக் கர்ஜித்தார் தேவிகா.

“இல்லை மேடம் அவன் இவ்ளோ தூரம் கண்டுபிடிப்பான்னு நான் நினைக்கவே இல்லை. என்ன பண்ணிட போறான்னு கொஞ்சம் அசால்ட்டா இருந்துட்டேன். அதை விட எந்த ஆதாரமும் இல்லைனு தான் நினைச்சேன். ஆனால் ஒரு திருடனை வைச்சு அவன் அந்த ராஜாவைப் பிடிப்பான்னு நான் கொஞ்சம் கூட நினைக்கலை மேடம்.”

“வாயை மூடு. எல்லா பக்கமும் நாம யோசிக்கனும். நம்ம செய்றது என்ன நல்ல காரியமா அசால்ட்டா இருக்க? எவ்ளோ ரிஸ்க்கான விஷயம் செய்றோம்!!அப்போ நாம எவ்ளோ ஜாக்கிரதையா இருக்கனும். நீ எல்லாம் பார்த்துப்பன்னு நம்பித் தான் நான் அமைதியா இருந்தேன். இப்படி ஒன்னுத்துக்கும் உதவாம இருப்பன்னு தெரிஞ்சுருந்தா நானே கலத்துல இறங்கி இருப்பேன்.”

“இல்லை மேடம் அந்த ஆதன் இதுக்கு மேல இந்த விஷயத்துல குடைச்சல் தராமல் நான் பார்த்துக்கிறேன்.”

“நீ தான கிழிச்ச!! உன் லட்சணம் தான் நல்லா தெரிஞ்சுடுச்சே!! நீ ஒதுங்கிக்கோ அவனை என்ன பண்ணனும் நான் பார்த்துக்கிறேன்.” என்று தேவிகா கூற, அதிர்ச்சியாகி விட்டான் பாண்டி.

“இல்லை மேடம் கடைசியா எனக்கு ஒரு சான்ஸ் கொடுங்க.” என்று கெஞ்சிக் கேட்டான் பாண்டி.

“சரி தரேன், சொல்லு அடுத்து என்ன பண்ணப் போற?” என்று தேவிகா கேட்க, அவன் பதில் கூறும் முன் அவனது கைப்பேசி ஒலி எழுப்பியது.

எட்வின் தான் அழைத்திருந்தான். அதை எடுத்து கைப்பேசியில் உள்ள ஸ்பீக்கரை ஆன் செய்தான் பாண்டி.

“சொல்லு எட்வின். எதுக்கு கூப்பிட்டிருக்க?”

“எனக்கு ஒரு யோசனை அது சரியா வருமானு பார்….” என்று கூறி அவனது யோசனையைக் கூறினான் எட்வின். கேட்ட பாண்டிக்கும் தேவிகாவிற்கும் பரம திருப்தி. கண்டிப்பாக இந்த யோசனைப் படிச் செய்தால் இந்த கேஸ் ஒன்றுமில்லாமல் ஆவது மட்டுமல்லாமல் ஆதனின் எதிர்காலமே கேள்விக் குறியாக அதிக வாய்ப்பு உள்ளது.

எட்வின் கூறி முடித்ததும் பாண்டி, தேவிகா மற்றும் ஜகதீஷின் முகம் பிரகாசித்தது.

“சூப்பர் எட்வின். நான் அதுக்கு என்ன செய்யனுமோ அதைச் செஞ்சு முடிச்சுடுறேன். நீயும் அங்கச் செய்ய வேண்டியதைச் செஞ்சுடு.” என்று பாண்டி கூற, மேலும் சில விஷயங்களைப் பேசிவிட்டு பாண்டி கைப்பேசியை வைத்தான்.

அவன் வைத்ததும் தேவிகா பாண்டியிடம்,”நீ செஞ்சதுலயே உருப்படியான வேலைனா அந்த எட்வினை நம்ம பக்கம் கொண்டு வந்தது தான். அவன் சொன்ன வேலையையாவது ஒழுங்கா முடி.” என்று கூறிவிட்டு தேவிகா அங்கிருந்து சென்றுவிட்டார்.

அவர் சென்றதும் ஜகதீஷ் பாண்டியிடம் வந்து,”டேய் பாண்டி ஒழுங்கா இரு டா. எங்களுக்கு என்ன பிள்ளையா குட்டியா? இந்தச் சொத்து எல்லாம் யாருக்குப் போகப் போகுது? எல்லாம் உனக்குத் தான?”

“ப்ச் போங்க இப்படித் தான் சொல்றீங்க ஆனால் அந்த அம்மா என்னை மதிக்கவே மாட்டீங்குது!!”

“விடு டா!! என்னை மட்டும் மதிக்கவா செய்றா? எல்லாம் இந்தப் பணத்துக்காகத் தான் பொருத்து போறேன். எங்களுக்கு அப்புறம் எல்லாம் உனக்கு வர மாதிரி பண்ண வேண்டியது என் பொறுப்பு. அதனால அவள் சொல்ற வேலையை ஒழுங்கா செய் சரியா.” என்று கூறிவிட்டு ஜகதீஷூம் சென்று விட, பாண்டி யோசிக்க ஆரம்பித்தான். ஜகதீஷ் சொல்வதிலும் நியாயம் இருப்பதால் இனி ஒழுங்காக ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமென முடிவெடுத்தான் பாண்டி. பின்பு எட்வின் கூறியதைச் செய்து முடிக்கக் கிளம்பிவிட்டான்.

~~~~~~~~~~

ஆதனும் சாத்விகாவும் கடல் அலையில் நன்றாக விளையாடி விட்டு மகிழ்ச்சியாகக் கடற்கரையில் வந்து அமர்ந்தார்கள். சாத்விகா ஆதனின் புஜத்தில் அவளதுக் கையைக் கோர்த்து அவனது தோளில் சாய்ந்து கண்ணை மூடிக் கொண்டாள். ஆதன் அவனது தலையை அவள் தலை மேல் வைத்து கண்ணை மூடிக் கொண்டான் ஆதன்.

இருவரும் எதுவும் பேசாமல் அந்த ஏகாந்த வேளையில் தங்களை மறந்து லயித்திருந்தனர். அப்போது ஒரு பந்து சாத்விகா மேல் வந்து விழுக, சிறு எரிச்சலுடன் அவள் கண்ணைத் திறக்க, அவளது ச்சு என்ற சத்தத்தில் ஆதனும் கண்ணைத் திறக்க அப்போது ஒரு மூன்று வயதுக் குழந்தை ஒன்று ஓடி வந்து சாத்விகாவிடம்,”பால்.” என்று மட்டும் கூறிக் கையை நீட்ட, அந்தச் சிறு மொட்டைப் பார்த்ததும் சாத்விகாவிற்கு எரிச்சல் மறைந்து அந்தக் குழந்தையை அணைத்து கண்ணத்தில் ஒரு முத்தம் வைத்து பந்தை அந்தக் குழந்தையிடம் தர, குழந்தையும் சாத்விகாவின் கண்ணத்தில் முத்தம் வைத்து விட்டுப் பந்தை வாங்கிக் கொண்டு செல்ல, அந்தக் காட்சியை இரசித்துப் பார்த்தான் ஆதன்.

“வாவ் சூப்பர்ல அந்தப் பாப்பா.”லயித்துக் கூறினான் ஆதன்.

“ஆமாம் நிவாஸ். சோ க்யூட். நமக்குக் கல்யாணம் ஆனால் இப்படி க்யூட்டா ஒரு குழந்தைப் பிறக்கும்ல.” ஆசையாகக் கேட்டாள் சாத்விகா.

“ஹேய் அது என்ன ஆனால்?கண்டிப்பா நடக்கும் பேபி. இந்தப் பாப்பாவ விட நம்ம பாப்பா இன்னும் க்யூட்டா இருக்கும். அதுவும் என் பேபியோட பேபி எப்படி க்யூட்டா இல்லாமல் இருக்கும்?” என்று கேட்டான் ஆதன்.

“நிவாஸ் இப்படி எல்லாம் பேசுவீங்களா நீங்க?” ஆச்சரியமாகக் கேட்டாள் சாத்விகா.

“எனக்குமே ஆச்சரியமா தான் இருக்கு பேபி. ஆனால் நல்லா இருக்கு.” என்று அவன் கூற, சாத்விகாவின் கைப்பேசி ஒலி எழுப்ப, அதை எடுத்துப் பார்த்தாள். சக்தி தான் அழைத்திருந்தாள்.

“சொல்லு சக்தி.”

“ஹேய் நாங்க கிளம்பிட்டோம். நீ வர லேட்டாகுமா இல்லை வந்துடுவியா? அப்படி லேட்டாகும்னா சாவியை நாங்க எடுத்துட்டு போறோம்.” என்றாள் அவள்.

சக்தி அவ்வாறு கூறவும் தான் நேரத்தைப் பார்த்தாள். மாலை ஐந்து மணி என்று கடிகாரம் காட்ட, அத்தனை மணி நேரமா இங்கு இருந்தோம் என்று வியப்பாக எண்ணினாள் சாத்விகா.

“ஹேய் நீங்க எடுத்துட்டு போங்க சக்தி. நாங்க இப்போ கிளம்பினா கூட அங்க வர எப்படியும் தர்ட்டி டு ஃபார்ட்டி மினிட்ஸ் ஆகலாம். அதனால நீங்களே எடுத்துட்டு போங்க சரியா.” என்று கூற, சக்தி சரியென்று கூறிவிட்டு வைத்துவிட்டாள்.

“நிவாஸ் நாம கிளம்பலாமா?” என்று சாத்விகா கேட்க, ஆதனிற்கோ கிளம்ப மனமே இல்லை. ஆனால் எவ்ளோ நேரம் இப்படியே அமர்ந்திருப்பது? அதனால் கிளம்பலாம் என்று முடிவெடுத்தார்கள்.

அன்றைய நாள் நடு இரவில் ஆதனிற்கு கமிஷ்னரிடம் இருந்து அழைப்பு வர, அடித்துப் பிடித்து அவன் காவல் நிலையம் செல்ல, அங்குச் சென்று பார்த்தால் ராஜாவின் உடல் மட்டுமே இருந்தது உயிர் எப்போதோ பிரிந்து போயிருந்தது. அதிர்ச்சியாக ராஜாவின் உடலை வெறித்த வண்ணம் நின்றிருந்தான் ஆதன்.

Advertisement