Advertisement

ஆதனிடம் பேசிவிட்டு வெளியே வந்த எட்வின் எதிர்கொண்டது செல்வத்தை தான். அவர் சாப்பாடு கொண்டு வந்து எட்வினிடம் தர, அதை வாங்கிக் கொண்டு ராஜா இருக்கும் அறைக்குச் சென்று அவனிடம் தந்தான் எட்வின். அதைக் கொடுத்து விட்டு வெளியே வந்தவன் சற்று தள்ளிச் சென்று ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு வந்து தன் கைப்பேசியை எடுத்து பாண்டிக்கு அழைத்தான்.

“சொல்லு எட்வின்.”

“ப்ச் பாண்டி எல்லாம் முடிஞ்சது. நீ பார்த்துப்பனு உன்கூடச் சேர்ந்தேன்ல என்னைத் தான் சொல்லனும். இல்லை இல்லை அந்த ஆதன் பத்தித் தெரிஞ்சும் உன் கூட நான் சேர்ந்தது தான் நான் செய்த பெரிய தப்பே.” விஷயம் என்னவென்று கூறாமல் அவன் பாட்டிக்கிற்குப் பேசிக் கொண்டே போனான் எட்வின்.

“இப்போ என்ன நடந்துச்சுனு நீ இப்படிக் குதிக்கிற எட்வின்?”

“எது நடக்கக் கூடாதோ அது நடந்துருச்சு. நீ கூடியச் சீக்கிரம் களி திங்க போற!! உன் கூட சேர்ந்து நானும் திங்க போறேன்னு நினைக்கிறேன்.” அப்போதும் விஷயம் என்னவென்று கூறாமல் பேசினான் எட்வின்.

“இங்கப் பார் எட்வின் இப்போ நீ விஷயத்தைச் சொல்லாட்டி நான் ஜெயில்ல களி திங்கிறது உறுதியானாலும் நீ திங்க மாட்டா ஏனா உன்னைப் போட்டுத் தள்ளிட்டு தான் நான் உள்ளே போவேன். ஒழுங்கா விஷயத்தைச் சொல்லு எட்வின்.”

“அந்த ரம்யா கேஸ்ல ஆதனுக்கு கொலைனு நிரூபிக்கச் சாட்சி கிடைச்சுருச்சு. அதுவும் சாதாரண சாட்சி கிடையாது. நீங்கக் கொலை பண்ணும் போது உங்கக் கூடவே இருந்தவன் தான்.” என்று எட்வின் கூறியதும் பாண்டிக்கு என்ன பேசுவதென்றே புரியவில்லை.

“என்ன சொல்ற எட்வின்? யார் அவன்? எப்படி ஆதனுக்கு தெரிஞ்சது அவனைப் பத்தி?” படப்படப்பாக அவனிடம் கேட்டான் பாண்டி.

உடனே எட்வின் சாமிக்கண்ணை பிடித்தது. அவன் இவர்கள் ரம்யாவைக் கொலை செய்ததைப் பார்த்து. அதிலும் ஒருவனது முகத்தை மட்டும் பார்த்தது. அதை ஆதனிடம் கூறி அவன் படம் வரையும் கலைஞரை வைத்து ராஜாவின் முகத்தை அடையாளம் கண்டது. பின்னர் அதை வைத்து இப்போது ஆதன் அவனைப் பிடித்தது என அனைத்தையும் எட்வின் கூறக் கேட்டுக் கொண்டிருந்த பாண்டிக்கு தான் இதயம் வேகமாக அடித்தது. அவன் சற்றும் இந்தத் திருப்பத்தை எதிர்பார்க்கவில்லை.

“இப்போ என்ன பண்றது எட்வின்?” என்று அவனிடமே யோசனை கேட்டான் பாண்டி.

“ஆமா இப்போ வந்து என்ன பண்றதுனு என்கிட்ட கேளு!! நான் ஏதாவது யோசிக்கிறேன். ஏனா நான் மாட்டாமல் இருக்கனும்ல அதுக்கு தான். நீயும் யோசி!! ஆனால் ஒன்னு ஞாபகம் வைச்சுக்கோ ஆதன் அவன்கிட்ட உண்மையை வாங்கிட்டு தான் இங்கக் கூட்டிட்டே வந்தான். அதை ஞாபகத்துல வைச்சுட்டு என்ன பண்றதுனு யோசி. நானும் யோசிக்கிறேன்.” என்று கூறிவிட்டு எட்வின் வைத்து விட்டான்.

எட்வின் வைத்ததும் பாண்டிக்கு உடல் எல்லாம் நடுக்கம் ஏற்பட்டது. அவனுக்கு அடுத்து என்ன செய்வது என்று புரியவில்லை. இது தேவிகாவிற்கு தெரிந்தால் கண்டிப்பாக அவள் பத்ரகாளியாக மாற வாய்ப்பு உள்ளது. என்ன செய்யலாம் என்று தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தான் பாண்டி.

~~~~~~~~~~

சாத்விகாவிடம் அன்று அழைக்கிறேன் என்று கூறிவிட்டுச் சென்ற ஆதன் ஒரு வாரம் ஆகியும் அழைக்கவே இல்லை. அவன் ராஜாவைப் பிடிப்பதில் கவனம் செலுத்தியதால் சுத்தமாக சாத்விகாவைப் பற்றி மறந்துவிட்டான். சாத்விகா பற்றி மட்டுமல்ல அவனது வீட்டிற்கும் கூட அவன் பேசவே இல்லை.

சாத்விகா இந்த ஒரு வாரமாக ஆதன் தன்னை அழைப்பான் என்று ஆயிரம் முறையாவது அவளது கைப்பேசியைப் பார்த்திருப்பாள். அதை அவள் கூட இருந்த சக்தி, பிரபு, ரவி மற்றும் ஜெசிக்கா எல்லாம் பார்த்துக் கொண்டு தான் இருந்தார்கள். ஆனால் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை அவளிடம். அவளாக அனைத்தையும் உணர வேண்டும் என்று அமைதியாக இருந்தார்கள்.

ஆனால் சக்தியால் அப்படி இருக்க முடியவில்லை. ராஜாவைப் பிடித்து அவனது காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த அதே நாள் சக்திக்குப் பொறுமை பறந்து பொங்கிவிட்டாள்.

“என்ன நினைச்சுட்டு இருக்க ராக்கி?” எடுத்தவுடனே சக்தி அப்படிக் கேட்க, புரியாமல் அவளைப் பார்த்தாள் சாத்விகா.

“சக்தி அமைதியா இரு.” என்று பிரபு கூற, அவள் கேட்கவே இல்லை.

“முடியாது பிரபு. நாம சொல்லாட்டி கண்டிப்பா இந்த மர மண்டைக்கு எதுவும் புரியாது.” என்று சாத்விகாவை காண்பித்து சக்தி கூற, சாத்விகா பொங்கி விட்டாள்.

“ஏன் யாரைப் பார்த்து மர மண்டைனு சொன்ன?”

“இதுல உனக்கு என்ன சந்தேகம்? உன்னைப் பார்த்துத் தான் நான் அப்படிச் சொன்னேன்.” சாதாரணமாக சக்தி கூற, சாத்விகாவிற்குப் பயங்கர கோபம் வந்துவிட்டது.

ஆனால் கோபத்தை அடக்கிக் கொண்டு,”இப்போ எதுக்கு நீ இப்படிச் சொன்ன?” என்று நிதானமாகக் கேட்டாள் சாத்விகா.

“நான் அன்னைக்கு உனக்கும் ஆதன் சார்கும் நடுவுல என்ன இருக்குனு கேட்டதுக்கு நீ என்ன சொன்ன?” என்று அவளிடமே கேள்வி கேட்டாள் சக்தி.

“என்ன சொன்னேன்? எங்களுக்குள்ள எதுவுமில்லைனு சொன்னேன்.” என்று சாத்விகா கூறவும் அனைவரும் அவளை முறைத்துப் பார்த்தனர்.

சக்தி தலையில் அடித்துக் கொண்டு,”நான் தான் சொன்னேன்ல இவள் ஒரு மர மண்டைனு இப்போ புரியுதா?” என்று மற்றவர்களிடம் கேட்க, அவர்கள் தலையில் அடித்துக் கொண்டார்கள் சாத்விகாவைப் பார்த்து.

அதில் அவளுக்கு இன்னும் கோபம் வர அனைவரையும் இவள் முறைத்துப் பார்த்து,”ஏய் தயவுச் செஞ்சு புரியற மாதிரி பேசுறியா ப்ளீஸ்.”

“ஓகே ஓகே நான் நேரா விஷயத்துக்கு வரேன். ஆதன் சார்கும் உனக்கும் எந்தச் சம்மதமும் இல்லைனு சொன்ன!! ஆனால் இந்த ஒரு வாரமா ஏன் அவர் உனக்கு ஃபோன் பண்ணலைனு ரெஸ்ட்லெஸ்ஸ இருக்க? அதே மாதிரி யாராவது உனக்கு கால் பண்ணா அது ஆதன் சாரா தான் இருக்கும்னு நீ ஏன் ஒரு எதிர்பார்ப்போட உன்னோட ஃபோன்ன எடுத்த?” என்று கேட்டாள் சக்தி.

சக்தி அவ்வாறு கேட்டவுடன் தான் சாத்விகாவுக்கும் தான் ஏன் ஆதனின் அழைப்புக்காகக் காத்திருக்கிறோம்? யார் அழைத்தாலும் அது ஆதனாக தான் இருக்கும் என்று ஏன் யோசித்தோம் என்று யோசிக்க ஆரம்பித்தாள். அவள் யோசனையைப் பார்த்த ஜெசிக்கா,”இங்கப் பார் சாத்விகா ஒருத்தர் மனசுல என்ன இருக்குனு அவங்களுக்கு மட்டும் தான் தெரியும்னு சொல்லுவாங்க. ஆனால் காதல்னு வந்துட்டால் மட்டும் அவங்க மனசுல என்ன நினைக்கிறாங்கனு அவங்களுக்கே தெரியாதாம். அது தான் உன்னோட நிலையும். உனக்கு ஆதன் சார் மேல ஒரு அபிப்பிராயம் வந்துருச்சு. அதை நீ ப்ரண்ட்ஷிப்னு நினைக்கிற. ஆனால் உண்மை என்னனா அவரை நீ காதலிக்க ஆரம்பிச்சுட்ட.” என்று கூறினாள்.

“இல்லை ஜெசி, நீயும் சக்தி மாதிரி பேசாத. எனக்கு அப்படி எந்த தாட்டும் இல்லை. நிவாஸ் அன்னைக்கு எனக்குக் கூப்பிடுறேன்னு சொன்னார். அதனால தான் நான் ஃபோன் வரும் போது எல்லாம் அவரோனு பார்த்தேன். ஆனால் கூப்பிடவே இல்லை. ஸோ சும்மா சாதாரணமா நடந்த விஷயத்தை நீங்க மாத்தாதீங்க.” என்று திடமாகக் கூறினாள்.

“ஊஃப்!! சரி நான் கேட்கிறதுக்குப் பதில் சொல்லு. சப்போஸ் உனக்கு பிரபுவோ ரவியோ கால் பண்றேன்னு சொல்லிட்டு அவங்க காலும் பண்ணாமல் இங்க வராமலும் இருந்தால் அப்போவும் இப்படித் தான் நடந்துப்பியா?” என்று சக்தி கேட்க, சாத்விகா யோசித்தாள். அவளுக்குக் கண்டிப்பாகத் தோன்றியது அவர்கள் அவளைத் தொடர்பு கொள்ளவில்லை என்றால் பயம் வரும். ஆனால் இப்போது போல் ஒரு எதிர்பார்ப்பு அவளிடம் இருக்காது. அதை நினைக்கும் போது அவளுக்குள்ளும் தோன்ற ஆரம்பித்தது. ஒரு வேளை நாம் நிவாஸை காதலிக்கிறோமோ என்று!!!

“நல்லா யோசி சாத்விகா. ஆதன் சார் ரொம்ப நல்லவர். எங்களுக்குத் தெரிஞ்சு அவருக்கும் உன்னைப் பிடிக்கும். நீ ஏதாவது ஏடாகூடமா பேசி கெடுத்து வைச்சுர கூடாதுனு தான் நாங்க உன்கிட்ட இப்படி உட்கார வைச்சு பேசிட்டு இருக்கோம். அதனால நல்லா யோசி.” என்று கூறிவிட்டு அவர்கள் அங்கிருந்து சென்று விட, சரியாக அதே நேரம் ஆதன் அழைத்தான். அவனது அழைப்பு அவளுள் பல மாற்றங்களைக் கொண்டு வந்தது.

~~~~~~~~~~

எட்வின் வெளியேறியதும் தான் பல விஷயங்கள் ஆதனின் நினைவுக்கு வந்தது. அதில் ஒன்று அவன் சாத்விகாவிற்கு அன்று கூப்பிடுறேன் என்று கூறிவிட்டு அதன் பிறகு அழைக்கவே இல்லை. அவள் என்ன நினைப்பாளோ என்று யோசித்தே அவளுக்கு அழைக்கலாமா என்று நினைக்கும் போது தான் அவனது வீட்டிற்கும் ஒரு வாரம் காலமாக அவன் பேசவே இல்லை என்பது நினைவில் வந்தது. முதலில் வீட்டில் பேசிவிடலாம், அதன் பிறகு சாத்விகாவிடம் நிறைய நேரம் கூடப் பேசலாம் என்று யோசித்து அவனது அம்மாவிற்கு அழைத்தான்.

“என்ன ஆதன் ஒரு வாரமா ஃபோன்னே இல்லை? நாங்க அன்னைக்கு ஃபோன் பண்ணும் போது நானா பண்ற வரைக்கும் கூப்பிடாதீங்கனு சொல்லிட்டு வைச்சுட்ட. நீ எப்போ கூப்பிடுவனு நாங்க இங்க தவியா கிடந்துருந்தோம்.” என்று அவனது அம்மா ருக்மணி கூறினார்.

“அம்மா நான் இப்போ ஒரு முக்கியமான கேஸ்ல வொர்க் பண்ணிட்டு இருக்கேன்னு சொன்னேன்ல. அதுல இருந்தனால எனக்கு உங்களைக் கூப்பிட முடியலை. இப்போ தான் நான் முடிச்சேன். அதான் உடனே கூப்பிட்டேன்.” என்று ஆதன் அவரைச் சமாதானம் செய்தான்.

“சரி, எதுவா இருந்தாலும் பார்த்து இரு ஆதன். ரொம்ப ரிஸ்க்கான கேஸ்லாம் எடுக்காத.” என்று கூறிவிட்டுப் பொதுவாகப் பேசிவிட்டு வைத்தார்கள்.

அவர்கள் வைத்ததுமே உடனே சாத்விகாவிற்கு அழைத்தான். அவள் தான் இவன் எப்போது அழைப்பான் என்று காத்திருந்தாளே, முதல் அழைப்பிலே கைப்பேசியை எடுத்து விட்டாள் சாத்விகா.

“ஹலோ நிவாஸ்.” அவளது குரலிலே அவள் அவனை எவ்வளவு தேடி இருப்பாள் என்று அவள் சொல்லாமலே புரிந்து கொண்டான் ஆதன்.

“சாரி சாத்விகா, நான் ரம்யா கேஸ்ல கொஞ்சம் பிசியா இருந்தனால உனக்குக் கூப்பிடவே முடியலை. நான் ஸ்டேஷனுக்கு வந்தும் ஏழு நாள் ஆச்சு. இன்னைக்கு தான் நான் வந்தேன்.” என்று கூறிவிட்டு அவன் ராஜாவை எப்படி மடக்கிப் பிடித்தான் என்பதையும் விளக்கிக் கூற, கேட்டுக் கொண்டிருந்த சாத்விகாவிற்குத் தான் முதன் முறையாகப் பயம் வந்தது.

“நிவாஸ் இவ்ளோ ரிஸ்க் எடுத்துருக்கீங்க அதுவும் தனியா!! ஏன் நிவாஸ், கூட யாரையாவது வைச்சுக்கலாம்ல.”

“இல்லை சாத்விகா, இது ரொம்ப ரிஸ்க்கான விஷயம். வேற யாரையும் இதுல இழுத்து விட எனக்கு மனசில்லை. அதனால தான் நான் தனியா போனேன்.”

“ப்ச் சரி ஓகே. நான் உங்களைப் பார்க்கனும்.” என்று அவள் கூறவும், ஆதன் யோசித்தான்.

“நானே மதியம் உன்னை மீட் பண்ண வரலாம்னு நினைச்சேன். நீயே கூப்பிட்ட, மதியம் உன் வீட்டுக்கு வரேன்.” என்று கூறினான் ஆதன்.

“அப்போ உங்களுக்கு மதியம் லன்ச் இங்கத் தான்.” என்று அவள் கூறவும், ஆதனும் சரியென்று கூறி ஒத்துக் கொண்டான்.

சாத்விகா அவனிடம் பேசி முடித்ததும், தாவிக் குதித்துக் கொண்டு கீழே இருக்கும் அவளது வீட்டிற்கு வந்து மதியம் அவன் சாப்பிட ஏதுவாக அவனுக்குப் பிடித்த உணவு வகைகளைச் சமைக்க ஆரம்பித்தாள்.

இதையெல்லாம் இவளது நண்பர்கள் பார்த்துக் கொண்டு தான் இருந்தார்கள்.

“பாருங்க எப்படி பாஞ்சு போய் ஆதன் சார்கு லன்ச் ரெடி பண்றா!! ஆனால் கேட்டால் எங்களுக்குள்ள எதுவுமில்லைனு மட்டும் சொல்றது. இவளை வைச்சுக்கிட்டு என்ன பண்றதுனே தெரியலை!!” சக்தி அங்கலாய்ப்பாகக் கூற, மற்றவர்களும் அவளை ஆமோதித்தனர்.

~~~~~~~~~~‍

ஆதன் சாத்விகாவிடம் கூறியபடியே மதியம் அவளது வீட்டிற்குச் செல்ல கிளம்பினான். அவன் காவல் நிலையத்திலிருந்து வெளி வருவதற்கு முன்பு ராஜா இருந்த அறைக்குச் சென்று அவனை ஒரு முறை பார்த்து விட்டுக் கிளம்பினான்.

சரியாக இரண்டு மணிக்கு ஆதன் சாத்விகாவின் இல்லத்திற்கு வந்து விட்டான். அவன் வீட்டின் அழைப்பு மணியை அழுத்த, சாத்விகா இவனது வரவிற்காகக் காத்திருந்தவள் ஓடி வந்து கதவைத் திறந்தாள். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு ஒரு வாரமாகியதால் இருவருக்குள்ளும் ஒரு வித பரவசம் உருவானது.

“ஹாய் சாத்விகா.” என்று இவன் வெளியே நின்றபடியே கூறினான்.

“ஹலோ நிவாஸ். உள்ள வாங்க.” என்று அவள் இவனுக்கு வழி விட்டுக் கூறினாள்.

ஆதனும் உள்ளே செல்ல, சாத்விகா அவன் பின்னோடு வந்தாள். அங்கிருந்த சாய்விருக்கையில் அவன் அமர, அவளும் பக்கத்திலிருக்கும் இன்னொரு இருக்கையில் அமர்ந்தாள். இருவருக்கும் என்ன பேசுவதெனப் புரியவில்லை. ஆதனுக்கு சாத்விகா மேல் எப்போதோ காதல் வந்துவிட்டது. அதே போல் சாத்விகாவிற்கும் அவன் மேல் காதல் வந்துவிட்டது. ஆனால் இத்தனை நாள் அவள் அதைப் புரியாமல் இருந்தாள். இன்று அவளது நண்பர்கள் உட்கார்ந்து அவளிடம் பேசியதும் தான் அவளுக்கும் விளங்கியது தான் ஆதனை காதலிக்கிறோம் என்று. அதனால முளைத்த வெட்கம் அவனிடம் பேச விடாமல் செய்தது.

அவர்களது மௌனத்தை ஆதனின் கைப்பேசி அழைப்பு கலைத்தது. அவனது அம்மா தான் அழைத்திருந்தார். காலையில் தானே பேசினோம். இப்போது எதற்கு அழைக்கிறார் என்ற சந்தேகத்தோட அவன் அழைப்பை ஏற்றான்.

“சொல்லுங்க மா.”

“காலைல உன்கிட்ட பேசிட்டு வைச்சதும் ஒரு ஒருமணி நேரத்துக்கு அப்புறம் உன் மாமா வீட்டுக்கு வந்தார். எப்போ கல்யாணத்தை வைச்சுக்கலாம்னு கேட்கிறார். உனக்கு எந்தத் தேதி சரியா வரும்னு சொல்லு. அன்னைக்கே உனக்கும் தமிழ்கும் கல்யாணத்தை வைச்சுடலாம்.” என்று ஆதனின் அம்மா கூற, அதைக் கேட்ட ஆதனிற்கு அதிர்ச்சி.

“என்ன மா சொல்றீங்க? கல்யாணமா? அதுவும் தமிழ் கூடயா? கண்டிப்பா முடியாது மா. என்னால இப்போதைக்கு கல்யாணம் எல்லாம் பண்ண முடியாது. நான் தான் சொன்னேன்ல ஒரு முக்கியமான கேஸ்ஸை ஹேன்டில் பண்ணிட்டு இருக்கேன்னு. அது முடியிற வரை என்னால கல்யாணம் பத்தி எல்லாம் யோசிக்க முடியாது. அதை விடக் கண்டிப்பா இந்த கேஸ் முடிஞ்சாலும் நான் தமிழை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். நான் தெளிவா என்னோட பதில்ல சொல்லிட்டேன். இதுக்கு மேல சொல்ல எதுவுமில்லை. உங்களுக்கு மாமாகிட்ட பேசக் கஷ்டமா இருந்தால் சொல்லுங்க நானே சொல்லிக்கிறேன்.” என்று கூறிவிட்டு அவர் பேச வாய்ப்பு அளிக்காமல் கைப்பேசியை அனைத்து விட்டான்.

ருக்மணிக்கோ சுத்தமாகப் புரியவில்லை. ஆதன் இப்படிப் பேசக் கூடியவனே கிடையாது. தான் என்ன சொன்னாலும் அப்படியே கேட்கும் பையன் இன்று இப்படி அப்பட்டமாக முடியாதெனக் கூறினான் என்றால் ஏதோ தப்பாக இருக்கிறது என்று அவர் மனம் அடித்துக் கூறியது. இப்போதைக்கு எதுவும் கூறாமல் விஷயத்தை ஆரப் போடலாம் என்று முடிவெடுத்து அவரது அண்ணனுக்கு அழைத்து ஆதன் முக்கியமான வேலையில் இருப்பதால் அது முடிந்ததும் கல்யாணம் பற்றிப் பேசலாம் என்று கூறி வைத்துவிட்டார். ஆதனை கண்டிப்பாகச் சமாளித்துக் கொள்ளலாம் என்று நினைத்தார்.

கல்யாணம் என்ற வார்த்தையைக் கேட்டதும் சாத்விகாவிற்கு அதிர்ச்சியாகி விட்டது. அதிலும் ஆதனிற்குத் தான் என்று தெரிந்ததும் அவள் மனம் வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது. அவளது காதலையே இப்போது தான் உணர்ந்தாள். அதற்குள் இப்படி ஒரு திருப்பமா!! அப்போது ஆதன் தனக்கு இல்லையா? என்று மனம் கேட்டு அவளைத் துன்புறுத்தியது.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற பழமொழிக்கு ஏற்ப, அவளது மனதில் என்ன நினைக்கிறாள் என்று அவள் முகம் பார்த்தே கண்டு கொண்டான் ஆதன். இதற்கு மேல் தாமதிக்கக் கூடாதென முடிவெடுத்து அவளிடம்,”சாத்விகா பசிக்குது. சாப்பிடலாம்?” என்று கேட்க, அவளோ அவனை வேற்றுக்கிரக வாசி போல் பார்த்து வைத்தாள். அதில் ஆதனிற்குச் சிரிப்புத் தான் வந்தது. இருந்தாலும் அதை முகத்தில் காட்டாமல் அமைதியாக இருந்தான்.

“சாப்பாடு தான வாங்க.” சற்றுக் கோபமாகவே கூறி அவனை அழைத்துச் சென்றாள் சாத்விகா.

ஆதனும் சிரித்துக் கொண்டே அவளின் பின்னால் சென்றாள். அவன் சென்று அமரவும், சாத்விகா பார்த்துப் பார்த்து அவனுக்குச் சாப்பாட்டைப் பரிமாறினாள்.

“சாத்விகா நீயும் உட்காரு. சேர்ந்தே சாப்பிடலாம்.” என்று அவன் கூற, அவள் எதுவும் பதில் பேசாமல் அமைதியாக அமர்ந்து அவளும் சாப்பிட ஆரம்பித்தாள்.

இருவரும் எதுவும் பேசாமல் அமைதியாகச் சாப்பிட்டனர். சாப்பிட்டு முடித்ததும் ஆதன் சாத்விகாவிடம்,”சாத்விகா எங்காவது வெளில போகலாமா?” என்று கேட்டான் அவன்.

“எங்க?”

“ம்!!” ஒரு நொடி யோசித்து விட்டு,”பீச் போகலாமா?” என்று கேட்டான் ஆதன்.

“பீச்சா? ம் ஓகே போகலாம்.” என்று அவள் உடனே கூறினாள்.

பகல் நேரமாக இருந்தாலும் தட்பவெப்ப நிலை சற்று மந்தமாகத் தான் இருந்தது. அதனால் பீச் செல்ல கிளம்பி வந்தார்கள்.

சாத்விகா அவளது நண்பர்களுக்கு ஆதனுடன் வெளியே செல்வதைக் குறுஞ்செய்தியாக அனுப்பி விட்டு அவனுடன் கிளம்பிவிட்டாள். நேராகச் சென்று கூறினாள் கண்டிப்பாக அவர்கள் கேலி செய்வார்கள் என்றே கைப்பேசி வாயிலாக விஷயத்தை அவர்களுக்குத் தெரிவித்து விட்டு ஆதனுடன் பீச் நோக்கிச் சென்றாள்.

Advertisement