Advertisement

எட்வின் ஆதனிடம் கூறியபடியே அடுத்த நாள் அவனது வீட்டிற்கு வந்தான். ஆனால் வீடு பூட்டியிருந்தது. இவ்ளோ காலையில் ஆதன் எங்குச் சென்றிருப்பான் என்று அறியாமல் அவனுக்குக் கைப்பேசியில் அழைத்தான் எட்வின்.

ஆதன் குற்றவாளி ராஜாவை கண்காணிக்க என்று சீக்கிரமே கிளம்பிச் சென்று விட்டான் அன்று. மாசாணி கூறிய ஏரியாவில் உள்ள சிறு தேநீர்க் கடையில் அமர்ந்து நோட்டம் விட்டுக் கொண்டிருக்கும் போது தான் எட்வின் அழைத்தான்.

ஆதன் நேற்று எட்வினிடம் கூறியதை மறந்து அவனது அழைப்பை ஏற்று,”சொல்லு எட்வின்.” என்று சாதாரணமாக அவன் கேட்க,

“என்ன சொல்லு எட்வின்? எங்க இருக்க நீ? அதுக்குள்ள ஸ்டேஷன் போயிட்டியா?” என்று எட்வின் கேட்க, ஆதன் ஒரு நொடி யோசித்தான் எட்வினிடம் விஷயத்தைக் கூறலாமா வேண்டாமா என்று. ஆனால் அடுத்த நொடியே இப்போது எதுவும் சொல்ல வேண்டாம். ராஜா சாதாரணக் குற்றவாளி கிடையாது. அவனால் கண்டிப்பாகப் பெரிய ஆபத்து வரலாம். தேவையில்லாமல் எட்வினை இதில் இழுத்து விட வேண்டாம் என்று முடிவெடுத்து

“இல்லை எட்வின் நான் வேற ஒரு விஷயமா வெளில வந்துருக்கேன். எதுவும் முக்கியமா பேசனுமா?”

“ஏய் நீ தானே நேத்து ஃபோன் பேசும் போது சொன்ன காலைல வீட்டுக்கு வா நான் விஷயத்தைச் சொல்றேன்னு?” என்று எட்வின் கூறியதும் தான் ஆதனிற்கு நினைவில் வந்தது.

“ப்ச் ஆமா எட்வின். ஆனால் இப்போ நான் வெளில இருக்கேன். நேர்ல பார்க்கும் போது நான் சொல்றேன் சரியா.” என்று ஆதன் கூற,

“சரி ஆதன்.” வேறு வழியில்லாமல் எட்வினும் ஆதனிடம் கூறிவிட்டு கைப்பேசியை வைத்துவிட்டான். ஆதனின் செயல் எட்வினுக்கு சந்தேகத்தை உண்டாக்கியது. அப்படித் தன்னிடம் கூடக் கூறாமல் ஆதன் என்ன செய்கிறான் என்று புரியாமல் குழம்பிப் போனான் எட்வின். ஒரு வேளை இந்த வழக்குச் சம்பந்தமாக ஆதன் ஏதாவது செய்தால் கண்டிப்பாக அது அவன் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்குச் செல்வத்தைப் பிடித்தால் சரியாக இருக்கும். அவரை விடுத்து ஆதன் தனியாகச் சென்றிருக்க மாட்டான் என்று எட்வின் நம்பினான். ஆனால் அப்போது தான் அவன் பக்கத்தில் இருந்த காவல் ஜீப்பை அவன் பார்க்க, செல்வம் ஆதனுடன் செல்லவில்லை என்று புத்தியில் உரைத்தது. சரி ஆதன் எப்படியும் காவல் நிலையத்திற்கு வருவான் அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து அங்கிருந்து கிளம்பிச் சென்றான்.

ஆனால் எட்வினால் அன்று மட்டுமல்ல அடுத்து வந்த ஆறு நாட்களுக்கும் அவனால் ஆதனை பார்க்கவே முடியவில்லை. அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. பாண்டி வேறு அழைத்து ஆதன் என்ன செய்கிறான் என்று இதுவரை ஒரு பத்து முறையாவது அழைத்துக் கேட்டிருப்பான். ஆதனிற்கு அழைத்தாலும் எந்தத் தகவலையும் அவனிடம் இருந்து வாங்க முடியவில்லை. அப்படிக் காவல் நிலையத்திற்குக் கூட வராமல் அவன் என்ன தான் செய்கிறான் என்று தெரியாமல் மண்டையைப் பிய்த்துக் கொள்ளும் நிலையில் தான் எட்வின் இருந்தான். பாண்டியிடமும் பதில் சொல்ல முடியாமல் திண்டாடிக் கொண்டிருந்தான் எட்வின்.

சரியா ஏழாவது நாள் எப்போதும் வேலைக்கு எட்வின் வந்து அவனது வேலையைச் செய்து கொண்டிருக்க, ஆதன் ராஜாவை இழுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தான். முதலில் ராஜாவை அடையாளம் தெரியவில்லை எட்வின்றிகு. அதனால் ஆதன் யாரை இப்படி இழுத்து வருகிறான் என்று சாதாரணமாகத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஆதன் ராஜாவை தனியாக ஒரு அறையில் அடைத்து வைத்து விட்டு வெளியே வந்தான். எட்வினை பார்த்து கண் அசைத்து அவனது அறைக்கு வரச் சொல்லிவிட்டு ஆதன் அவனது அறைக்குச் செல்ல, எட்வினும் அவனது பின்னால் ஆதனின் அறைக்குள் நுழைந்தான்.

“என்ன சார் ஒரு வாரமா நீங்க ஸ்டேஷன் வரவே இல்லை. ஃபோன் பண்ணிக் கேட்டாலும் சரியாவே ரெஸ்பான்ட் பண்ணலை நீங்க?” என்று அவன் கேட்க,

“என்ன எட்வின் நான் கூட்டிட்டு வந்தவனைப் பார்த்துமா இந்தக் கேள்வி கேட்கிற?” என்று ஆதன் கேட்க, எட்வின் புரியாமல் அவனைப் பார்க்க ஆதன் அவனது மேஜையிலிருந்த ஒரு காகிதத்தை எடுத்துக் குடுக்க, அதைப் பார்த்த எட்வினுக்கு அதிர்ச்சி.

“சார் இவன் தான் சாமிக்கண்ணு சொன்ன ஆள்ளா? ரம்யா கேஸ்ல சம்பந்தப்பட்ட ஆள் தான சார் இவன்? எப்படிப் பிடிச்சீங்க சார் அவனை?”

“எனக்கு என்னோட ஸோர்ஸ் மூலமா இந்த ராஜா இருக்கிற இடம் தெரிஞ்சது. ஒரு வாரம் எங்க போயிருந்தனு கேட்டியே? இவனைப் பிடிக்க தான் இத்தனை நாள் இவன் பின்னாடியே நாய் மாதிரி அலைஞ்சு மடக்கிப் பிடிச்சேன் இவனை.” என்ற ஆதன் எவ்வாறு ராஜாவை பிடித்தான் என்று கூற ஆரம்பித்தான்.

எட்வினிடம் பேசி முடித்து விட்டு மீண்டும் நோட்டம் விட ஆரம்பித்தான் ஆதன். கிட்டத்தட்ட இரண்டு மணிநேரமாகியும் ராஜா வெளியே வரவில்லை. ஆதனிற்கும் அப்படியே உட்கார்ந்து கொண்டே இருக்க முடியவில்லை. அந்த பகுதி மக்கள் வேறு அவனைச் சந்தேகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர். இனி இங்கு இருந்தால் சரியாக வராது என்று முடிவெடுத்து அப்படியே பக்கத்தில் இருக்கும் உணவகத்திற்குச் சென்றான்.

ஒரு மேஜையில் அமர்ந்து அவன் சாப்பாடு ஆர்டர் தர, சரியாக அதே உணவகத்திற்கு ராஜாவும் அவனது படையுடன் வந்திருந்தான். அவர்கள் கலாட்டாவுடன் ஒரு மேஜையில் அமர, அந்த உணவகத்தின் முதலாளியே வேகமாக வந்து அவர்கள் முன் பம்மிய படி சாப்பிட என்ன வேண்டுமெனக் கேட்டு அவரே கொண்டு வந்து கொடுத்தார். இதையெல்லாம் ஆதன் சாப்பிட்டுக் கொண்டே பார்த்துக் கொண்டிருந்தான். பின்னர் அவர்கள் சாப்பிட்டு காசு கூடக் கொடுக்காமல் சென்று விட்டனர். அவர்கள் சென்றவுடன் தான் அந்த உணவகத்தின் முதலாளிக்கு நிம்மதியாக இருந்தது.

ஆதன் அவன் சாப்பிட்ட உணவிற்குப் பணம் செலுத்து விட்டு கல்லாவில் அமர்ந்திருந்த அந்த உணவக முதலாளியிடம்,”என்ன சார் காசு தராமல் போறாங்க. நீங்களும் எதுவும் சொல்லலை?” என்று கேட்க,

அவர் வேகமாக ராஜாவின் கூட்டம் சென்ற திசையில் பார்த்து விட்டு,”அய்யோ தம்பி மெதுவா பேசுங்க. அவங்க காதுல விழுந்தா அவ்ளோ தான்.” பயந்துபடியே அவர் கூற,

“ஏன் அண்ணே? அவங்க யாரு?” எதுவும் தெரியாதது போல் ஆதன் கேட்க,

“என்ன தம்பி இந்த ஏரியாவுக்கு புதுசா நீங்க? என்கிட்ட கேட்ட மாதிரி வெளில வேற யார்கிட்டயும் கேட்டுடாதீங்க அவ்ளோ தான்.”

“அட என்ன அண்ணே அவங்க அவ்ளோ பெரிய ஆள்ளா என்ன?”

“அட தம்பி என்ன இது திரும்பத் திரும்ப அவனைப் பத்தியே பேசுறீங்க? விஷயத்தை வாங்காமல் விட மாட்டீங்க போல!! சரி சொல்றேன்.” என்று சுற்றும் முற்றும் பார்த்தவர் அவனிடம் குணிந்து மெதுவாக,”அவன் சரியான பொறுக்கி தம்பி. கேடு கெட்ட அயோக்கியன். நான் போய் அவன்கிட்ட காசு கேட்டேன் வச்சுக்கோங்க அவ்ளோ தான் இந்தக் கடையை அடிச்சு நொறிக்குடுவான் தம்பி. அதுக்கும் நான் தான் செலவு செய்யனும். அவன் சாப்பிடுறதை விட இந்தக் கடையை அவன் அடிச்சு நொறுக்கினான் அதுக்குச் செலவுப் பண்றது ஜாஸ்தியா பண்ணனும் தம்பி. எதுக்கு தேவையில்லாத செலவுனு தான் அமைதியா போயிடுறேன்.” என்று அவர் கூற, ஆதன் அனைத்தையும் கேட்டு விட்டு,

“ம் நீங்க சொல்றதலயும் நியாயம் இருக்கு அண்ணே. சரி நான் வரேன்.” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டான்.

வெளியே வந்த ஆதன் பார்த்தது ராஜா மற்றும் அவனது ஆட்கள் அங்கிருந்த சற்று தள்ளியிருந்த மதுக் கடையின் உள்ளே நுழைவதைத் தான். ஆதனும் எதுவும் சத்தம் செய்யாமால் அமைதியாக உள்ளே நுழைந்தான். அவர்கள் உட்கார்ந்திருந்த இடத்திற்குச் சற்று தள்ளி ஒரு மேஜையில் அமர்ந்தான். அங்கு வேலை செய்யும் ஒருவன் வந்து இவனிடம் என்ன வேண்டுமெனக் கேட்க, அப்போது தான் ஆதனிற்கு இப்போது என்ன கூறுவதெனப் புரியாமல் முழித்தான். வேலை செய்யும் பையன் அவனைச் சந்தேகமாகப் பார்க்க வேகமாக அவன்,”ஒரு குவாட்டர் குடு. அப்புறம் சைட்டிஷ் ஆம்லெட் எடுத்துட்டு வா.” என்று கூற, அவனும் சரி என்று எடுத்து வரச் சென்றான்.

அந்தப் பையன் எடுத்துக் கொண்டு வந்து தந்து விட்டுச் சென்று விட, ஆதனிற்கு இப்போது அதை என்ன செய்வது என்று யோசித்தான். அவன் குடிக்காமல் விட்டால் கண்டிப்பாக அங்கு வேலை செய்யும் பையனுக்குச் சந்தேகம் வரும். ஏனென்றால் அவன் இப்போது கூட அவனைச் சந்தேகமாகத் தான் பார்த்துக் கொண்டு இருந்தான். வேறு வழியில்லாமல் அதைக் குடித்தே தீர வேண்டுமென என்ற நிலை வர, அப்போது தான் தோன்றியது ராஜா வெளியே வரும் வரை காத்திருந்து இருக்கலாம் என்று. இப்போது யோசித்து எந்தப் பயனும் இல்லை என்று அவன் நினைக்கும் போதே அங்கு வேலை செய்யும் பையன் ராஜாவிடம் சென்று இவனைக் காட்டி ஏதோ கூற, ராஜா அவனிடம் வந்தான்.

“யார் டா நீ?” என்று கோபமாகக் கேட்க, ஆதன் அந்தப் பக்கம் இந்தப் பக்கம் என்று பார்த்து,

“என்னையா கேட்ட?” என்று ஒருமையிலே வினவ, ராஜாவின் ஆட்கள் வேகமாக அங்கு வந்து,

“ஏய் ஒழுங்கா மரியாதையா பேசு டா. இல்லை சங்கு அறுத்துடுவேன்.” என்று ஒருவன் மிரட்ட, அப்போதும் ஆதன் தெனாவெட்டாக அவனது ஒரு கையை நாற்காலியின் பின்னால் வைத்து சற்று சரிந்து அமர்ந்து,”நீ மரியாதை கொடுத்தா நானும் கொடுப்பேன். நான் கண்ணாடி மாதிரி டா. நீ எப்படி இருக்கியோ அப்படித் தான் இருப்பேன்.” என்று இவன் கூற, இவன் பயப்படாமல் பேசியது ராஜாவுக்கு சந்தேகத்தைத் தருவதற்குப் பதில் அவன் மேல் ஒரு அபிப்பிராயத்தைக் கொடுத்தது.

ராஜாவின் ஆட்கள் அவனை அடிக்க நெருங்க, ராஜா அவனைத் தடுத்து,”சும்மா இருங்க டா.” என்று அவனது ஆட்களிடம் கூறிவிட்டு ஆதனிடம் திரும்பி,”யார் நீ?” என்று மீண்டும் கேட்க,

“நான் நிவாஸ்.” என்று அவன் கூற,

“உன் பேரை நான் கேட்கலை!! நீ என்ன பண்ற? என்ன வேலைல இருக்கேன்னு கேட்கிறேன். அப்புறம் இங்க என்ன பண்ற? இந்த ஏரியாவுக்கு புதுசா நீ? இந்த பார்ல இன்னைக்கு தான் உன்னை நான் பார்க்கிறேன். சொல்லு யார் நீ?” என்று வரிசையாகக் கேள்விகளை ராஜா கேட்க,

ஆதன் நிதானமாக,”ப்ச் என்னத்த சொல்றது அன்னாத்த!! என் பொண்டாட்டி ஒரே டார்ச்சர். சரி வீட்டுல இருந்தா தான் ஏதாவது நொச்சு பண்றானு வேலைக்குப் போனால் அங்க என் முதலாளி அதுக்கு மேல காய்ச்சி எடுக்கிறான். அதான் ஒரு கட்டிங் போடலாம்னு இங்க வந்தேன்.”

“சரி உன் ஏரியாவுல பார் இல்லையா? அதான் தலை திருப்புற இடத்துல எல்லாம் ஒரு பார் இருக்கே!!” என்று ராஜாவின் கூட்டாளி கேட்க,

“ப்ச் என் பொண்டாட்டி சரியான ராங்கி அதை விட அவளோட குடும்பம் அதுக்கு மேல!! எங்க நான் பார்கு வந்துடுவேனோனு அவளோட அண்ணங்காரனையே எனக்கு ஸ்பையா வைச்சுருக்காங்க. அதான் எங்க ஏரியால இருந்து தள்ளி இங்க வந்தேன். என் பொண்டாட்டி, முதலாளி, மச்சான்காரன் தான் பிரச்சனைனு இங்க வந்தால் நீங்க அதுக்கு மேல இருக்கீங்களே!! ப்ச் இப்போ நான் வேற பார்கு போகனும்.” என்று அலுத்துக் கொண்டே ஆதன் எழுந்திருக்க, ராஜா அவனது தோளில் கை வைத்து,

“உட்கார் உட்கார். டேய் சும்மா இருங்க டா. அவனே விரக்தில தண்ணி அடிக்க வந்துருக்கான். விடுங்க டா.” என்று அவனது ஆட்களிடம் கூறிவிட்டு ஆதனிடம் திரும்பி,”சரி வந்து எங்க கூடத் தண்ணி அடிக்கிறது.” என்று அழைக்க,

“ப்ச் போ யா. நீங்க எல்லாம் கேள்வி மேல கேள்வி கேட்டதுல எனக்கு இப்போ தண்ணீ அடிக்கிற மூடே போயிடுச்சு. நான் கிளம்புறேன்.” என்று அவன் கிளம்ப எத்தனிக்கும் போது அவனுக்கு அழைப்பு வர,எடுத்துப் பார்த்தான் செல்வம் தான் அழைத்திருந்தார். ராஜாவிடம் மெதுவாக,”என் முதலாளி தான். பேசிட்டு வரேன்.” என்று சற்று தொலைவில் ஆனால் அவன் கேட்கும் படி இவன் கைப்பேசியை எடுத்து,

“சொல்லுங்க சார்.” என்று இவன் கூற, செல்வத்திற்கு ஒன்றும் புரியவில்லை.

“சார் நான் தான் செல்வம்.”

“சார் என்ன சொல்றீங்க? நான் என்ன தப்புப் பண்ணேன்? எதுக்கு என்னைய வேலையை விட்டு தூக்குறீங்க?”

“அய்யோ சார் என்ன பேசுறீங்க?” செல்வம் புரியாமல் அவனிடம் கேட்க,

“சார் நான் புள்ளக் குட்டிக்காரன். இப்படி என் பொழப்பல மண்ணை அள்ளிப் போட்டுடீங்களே!! போங்க சார்.” என்று குறைபட்டுக் கொண்டு அவன் கைப்பேசியை வைத்து விட, செல்வத்திற்கு மண்டையைப் பிய்த்துக் கொள்ளும் நிலை தான்.

இங்கு ஆதன் கைப்பேசியை வைத்து விட்டு சோகத்துடன் ராஜாவிடம் வந்து,”ப்ச் என் வேலை போச்சு. கண்டிப்பா என்னை என் பொண்டாட்டி வீட்டுல சேர்க்க மாட்டா. அய்யோ நான் இப்போ எங்கே போவேன்?” அழுவது போல் முகத்தை வைத்துக் கொண்டு அவன் புலம்ப, ராஜா ஏதோ யோசிக்க, அப்போது அவனது ஆட்களில் ஒருவன் வந்து அவனிடம்,”தல வாங்க போகலாம். குமார் அண்ணாத்த இப்போ தான் ஃபோன் பண்ணார். அவர் அண்ணி பிள்ளைங்களோட ஊருக்குப் போறாராம். அவர் வர வரைக்கும் உன்ன இந்த ஏரியாவ பார்த்துக்க சொன்னார். அப்புறம் உன்னை உடனே வரச் சொன்னார்” என்று கூற,

“அப்படியா!! வா கிளம்புவோம்.” என்று அவனிடம் கூறிவிட்டு ஆதனிடம் திரும்பி,”பொண்டாட்டினா நசநசனு தான் இருப்பா. அதுக்கு தான் கல்யாணமே பண்ணிக்க கூடாது. நமக்குத் தேவை ஒரு பொண்ணு அதுக்கு எதுக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டு. அவளை விட்டுடு. உனக்கு நான் சொர்க்கத்தையே காட்டுறேன். இப்போ நான் வரேன்.” என்று கூறி அவன் ஒரு அடித் தான் எடுத்து வைத்திருப்பான் அதற்குள் அவர்களுக்கு அந்தப் பக்கம் இருக்கும் ஒருவன் ராஜாவை கத்தியால் தாக்க வர, ஆதன் அவன் கையைப் பிடித்து வளைத்து முறுக்க, கத்தித் தானாகக் கீழே விழ, ஆதன் அவனைத் தள்ளி விட்டான். உடனே சொத் என்று அவன் விழுக, கண் மூடி திறப்பதற்குள் நடந்த விஷயத்தை நினைத்து ராஜா ஸ்தம்பித்து நின்று விட, அவனது ஆட்கள் ராஜாவை தாக்க வந்தவனைப் போட்டு அடிக்க, ஆதன் அவர்களைத் தடுத்து,

“இவனை என் கிட்ட விடுங்க. நம்ம அண்ணாத்தைய அடிக்க வந்தவனை நான் பார்த்துக்கிறேன். உங்களுக்கு ஏதோ வேலை இருக்குனு சொன்னீங்களே அதைப் பாருங்க.” என்று ஆதன் கூற,

“டேய் யார் டா நீ? இவனை என்ன பண்றதுனு எங்களுக்குத் தெரியும். நீ உன் வேலையை மட்டும் பார்த்துட்டு போ டா வெண்ணை.” என்று ராஜாவின் ஆட்களில் ஒருவன் கூறிவிட்டு ராஜாவைத் தாக்க வந்தவனின் சட்டைக் காலரைப் பிடித்து இழுக்க,

“டேய் விடு டா. அதான் அவன் பார்த்துக்கிறேன்னு சொல்றான்ல!! நிவாஸ் நீயே இவனைப் பார்த்துக்க. அப்புறம் நாளைக்கு வந்து என்னைப் பார்.” என்று ராஜா கூறிவிட்டு அவனைத் தாக்க வந்தவனை பளார் என்று அறைந்து விட்டு வேகமாக அங்கிருந்து சென்று விட, அவனது ஆட்கள் மூவரும் ஆதனை கோபமாக முறைத்து விட்டு ராஜா பின்னால் சென்றனர்.

அவர்கள் சென்றதும் ஆதன் ராஜாவை தடுக்க வந்தவனை இழுத்துக் கொண்டு வெளியே வந்தான். வந்தவன் ஒரு ஆட்டோவை நிறுத்தி அவனை ஏற்றிக் கொண்டு அங்கிருந்து வேறு ஒரு இடத்துக்கு ஆள் அரவமற்ற இடத்திற்கு ஆட்டோ ஓட்டுநரைப் போகச் சொன்னான். அவன் சொன்ன இடம் வந்ததும் ஆட்டோ ஓட்டுநர் அவர்களை இறக்கி விட்டுவிட்டு போகாமல் இவன் என்ன செய்கிறான் என்று பார்க்க அங்கேயே நிற்க, ஆதனிற்கு அந்த ஓட்டுநர் ராஜாவின் ஆள் என்பது புரிந்தது. ஆதன் எதையும் முகத்தில் காட்டாமல் ராஜாவை தாக்க வந்தவனைச் சப்பென்று அறைந்தான். அதில் அவன் கீழே விழுக, இதைப் பார்த்ததும் அந்த ஆட்டோ ஓட்டுநர் வேகமாக அங்கிருந்து செல்ல, ஆதன் ராஜாவைத் தாக்க வந்தவனை கைப் பிடித்துத் தூக்கி விட்டான்.

“யார் நீ? எதுக்கு அவரை தாக்க வந்த?” என்று ஆதன் கேட்க, அவனோ வீம்பிற்கு எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, ஆதன் மீண்டும் அவனை அடிக்கக் கை ஓங்க, அதில் பயந்து,

“நீங்க எல்லாம் நல்லாவே இருக்க மாட்டீங்க டா. அந்த ராஜா எல்லாம் நாசமா தான் போவான். என் ஒரே தங்கச்சிய காதலிக்கிறேன்னு சொல்லி சீர் அழிச்சுட்டான் அந்தப் பாவி. அதுல மானம் போன என் தங்கச்சி விஷயத்த குடிச்சு உயிர விட்டுட்டா. விஷயம் கேள்விப்பட்டு என் அப்பாவுக்கு உடம்புச் சரியில்லாமல் இப்போ ஹாஸ்பிட்டல்ல இருக்கார். நீ அந்த அயோக்கியனுக்கு சப்போர்ட் பண்ற!!” என்று அவன் அழுது கொண்டே கூற,

“நீ சொல்றது எல்லாம் உண்மையா?” என்று ஆதன் கேட்க,

“நான் எதுக்கு பொய் சொல்லனும்? இவன் மேல நான் கேஸ் கூடக் கொடுத்தேன். ஆனால் யாரும் ஆக்ஷன் எடுக்கலை. அதான் நானே அவனைத் தீர்த்துக் கட்டலாம்னு வந்தேன். நீ தடுத்துட்ட.” என்று அவன் கோபமாகக் கூற,

“நீ கம்ப்ளைன்ட் பண்ண காப்பி இருக்கா?”

“அது எதுக்கு உனக்கு?”

“கேட்டக் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு.”

“ம் இருக்கு.” என்று கூறி அவனது பாக்கெட்டில் இருந்து ஒரு காகிதத்தை எடுத்துக் காட்ட, ஆதன் அதை வாங்கி நன்றாகப் பார்க்க, அவன் கூறுவது எல்லாம் உண்மை என்று புரிந்தது.

“இங்கப் பார் உன் தங்கச்சிக்கு நடந்தது மாதிரி நிறையவே நடந்துருக்கு. அதுக்கு எல்லாம் சேர்த்து அவனை ஒரு குத்துல கொன்னுட்டா சரியா போகுமா? அதெல்லாம் சரியா வராது. நீ கவலைப்படாம போ நான் பார்த்துக்கிறேன்.”

“நீ என்ன சொல்ற? நான் எதுக்கு நீ சொல்றதை கேட்கனும்?”

“இங்கப் பார் மரியாதையா போயிட்டனா உனக்கு நல்லது இல்லாட்டி நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது. ஒழுங்கா உன் வேலையைப் பார்த்துட்டு வீட்டுலயே இரு. தேவையில்லாத வேலை எல்லாம் பார்த்து உன் குடும்பத்துல இன்னொரு துக்கத்தைப் பார்க்க வைச்சுடாத அவ்ளோ தான் சொல்வேன். அப்புறம் அடுத்த வாரம் நியூஸ் பார். உனக்கே எல்லாம் புரியும்.” என்று மட்டும் கூறிவிட்டு ஆதன் அங்கிருந்து சென்று விட, அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும் ஆதன் கூறியபடி அவன் அமைதியாக அங்கிருந்து சென்று விட்டான்.

ஆதன் அதன் பிறகு ராஜாவை நெருங்க நேரம் பார்த்துக் கொண்டு இருந்த போது அவனுக்குக் கண்ணா லட்டு திங்க ஆசையா என்பது போல அருமையான வாய்ப்புக் கிடைத்தது. அதில் ராஜா அவனது ஏரியா விட்டும் தனியாகவும் வர, ஆதன் அவனை அமுக்கிப் பிடித்துக் காவல் நிலையத்திற்கு தரதரவென இழுத்துக் கொண்டு வந்து விட்டான்.

Advertisement