Advertisement

வீட்டிற்கு வந்த ஆதனுக்கு நினைவு முழுவதும் சாத்விகா பற்றித் தான். அவனால் அவளது சந்திப்பைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. அவனிற்கு அவனது செயல் சரியாகப் படவில்லை. அவள் ஒரு பெண் என்றும் பாராமல் அவளைத் தான் கையாண்ட விதம் சரியில்லை என்று ஒரு பக்கம் குற்றவுணர்ச்சியாக இருக்க,

“டேய் ஆதன் அவளை அப்படியே விட்டுட்டு வந்துட்டு இங்க ஃபீல் பண்ணிட்டு இருக்கியா?” இன்னொரு பக்கம் அவனது மனசாட்சி அவனைக் கேள்வி கேட்க,

“ப்ச் நானே ஒரு பொண்ணுனு பார்க்காமல் அப்படி பிஹேவ் பண்ணிட்டேன்னு ஃபீல் பண்ணிட்டு இருக்கேன். நீ வேற ஏதோ பேசி என்னைக் குழப்பாத.”

“என்னது ஏதோ பேசுறேன்னா? டேய் நீ போலிஸ் டா. எத்தனை பெண் அக்யூஸ்ட்டை பார்த்திருக்க? ஏன் நீயே அவங்களை அரெஸ்ட்டும் பண்ணிருக்க. அப்புறம் என்ன டா?”

“ஆமா ஒத்துக்கிறேன். நானே அரெஸ்ட் பண்ணிருக்கேன் தான் இல்லைன்னு சொல்லலை! ஆனால் இந்தப் பெண்ணைப் பார்த்தா அப்படித் தெரியலை!”

“அது எப்படி அவ்ளோ உறுதியா சொல்லுவ நீ? அந்தப் பெண்ணை முதல் முறை இப்போ தான் பார்க்கிற! ஏதோ ரொம்ப தெரிஞ்ச பெண் மாதிரி அவள் சொன்னதும் அப்படியே விட்டுட்டு வந்துட்ட.”

“அந்தப் பெண்ணைப் பார்த்தா எனக்குச் சந்தேகப்படவே தோனலை. அதான்!” தயங்கிக் கொண்டே கூற,

“நீ ஒரு போலிஸ்னு வெளில சொல்லிடாத. அந்தப் பெண்ணைப் பார்த்தா அப்படித் தெரியலையாம்!! டேய் நீ இன்னும் அந்தக் காலத்துலயே இருக்கியா? இப்பலாம் ரொம்ப டீசன்டா தான் ட்ரெஸ் பண்ணிக் கொள்ளையடிக்க வராங்க. எத்தனை நியூஸ் பார்த்துருப்போம்! வீட்டுக்கு ஆபிஸர்னு பொய் சொல்லி வந்து எத்தனை பேர் கொள்ளையடிச்சுட்டு போயிருக்காங்க? அதெல்லாம் மறந்துட்ட போல?” என்று மனசாட்சி இவனிடம் கேள்வி எழுப்பு,

“ஆமால!! அச்சோ அப்போ நான் அப்படியே விட்டு வந்திருக்கக் கூடாதோ!”

“ஆமா இப்போ யோசி!”

ஆதன் சில நிமிட யோசனைக்குப் பிறகு,”இல்லை அந்தப் பெண் உண்மையைத் தான் சொல்லிருப்பா.” மறுபடியும் ஆதன் அவளுக்குச் சாதகமாகப் பேச,

மனசாட்சி வெகுண்டெழுந்து,”டேய் என் வாய்ல நல்லா வந்துரும். அந்தப் பொண்ணுகிட்ட நீ ஏன் வேஷம் போட்டு வந்தனு கேட்டதுக்கு முதல்ல என்ன சொல்லுச்சு?” என்று அவனிடம் கேள்வி கேட்க,

“என்ன சொல்லுச்சு?” மனசாட்சியிடமே திரும்பிக் கேட்க,

“போ டா முட்டாள். முதல்ல அந்தப் பெண் சும்மா த்ரில்லுக்கு போட்டேன்னு சொல்லுச்சு. அப்புறம் அவனுக்குத் தன்னை அடையாளம் தெரியும் அதனால் மாறுவேஷம் போட்டு வந்தேன்னு சொல்லுது. இதுல எது உண்மை நீயே சொல்லு பார்க்கலாம்.” என்று மனசாட்சி கேள்வி எழுப்ப அப்பொழுது தான் அவனும் உணர்ந்தான்.

ஒரு வேளை சாத்விகா தப்பாக எதுவும் செய்கிறாளோ என்ற ஐயம் முதல் முறை தோன்றியது. ஏனென்றால் டிடக்டிவ் ஏஜென்சியில் உள்ளவர்கள் அனைவரும் நல்லவர்கள் என்று கூற முடியாது. அதே போல் அவர்கள் நல்ல நோக்கத்தோடு வரும் க்ளைன்ட்காக மட்டும் அவர்கள் வேலைப் பார்ப்பத்தில்லல. சிலர் யார் பணம் கொடுத்தாலும் தப்பான வேலையாக இருந்தாலும் செய்யத் துணிவார்கள் என்ற உண்மை அப்பொழுது தான் ஆதனுக்கும் உறைத்தது.

ஆதன் நொடியும் தாமதிக்காமல் அவனது கைப்பேசியை எடுத்து அவனது காவல் நிலையத்தில் வேலை செய்யும் ஆய்வாளர் எட்வின்னை தொடர்பு கொண்டான்.

“ஹலோ எட்வின்.”

“சொல்லுங்க சார். என்ன விஷயம்?”

“எதுவும் வேலைல இருக்கியா? மரியாதையா பேசுற?”

“சார் இன்னைக்கு எனக்கு ஹாஃப் டே ட்யூட்டி இருக்கு சார். நான் ஸ்டேஷன்ல தான் இருக்கேன்.”

“அப்படியா! சரி நீ வேலை முடிஞ்சதும் வீட்டுக்கு வா. நாம கொஞ்சம் பேசனும்.”

“எதுவும் முக்கியமான விஷயமா சார்? உடனே வரட்டுமா?”

“அவ்ளோ அவசரமில்லை எட்வின். இன்னும் மூணு மணிநேரம் தான. உன்னோட வேலையை முடிச்சுட்டு வா.”

“சரிங்க சார்.” என்று கூறி எட்வின் வைத்து விட்டான்.

எட்வின்னும் ஆதன்னும் முதலில் சந்தித்தது துணை ஆய்வாளர் பயிற்சி மையத்தில் தான். இருவருக்கும் ஒரே அறை தான் கொடுத்திருந்தனர். அதில் பழகி நட்பாகினர். பயிற்சி காலம் முடிந்தவுடன் ஆதனிற்கு சேலத்திலே வேலைக் கிடைக்க, எட்வின்னுற்கு சொந்த ஊர் சென்னையாக இருந்தாலும் அவனுக்கு மதுரையில் தான் வேலை கிடைத்தது. வேறு வேறு ஊர்களில் வேலை கிடைத்தாலும் இருவரும் தொடர்பில் தான் இருந்தனர்.

ஆறு மாதங்களுக்கு முன் தான் எட்வின் பதவி உயர்வு பெற்று ஆய்வாளராக ஆதனிற்கு கீழ் வேலை சேர்ந்தான். வேலை நேரத்தில் மட்டுமே இருவரும் மரியாதையுடன் பேசிக் கொள்வர். மற்ற நேரத்தில் மரியாதை காற்றில் பறந்திருக்கும்.

மதியம் ஒன்றரை மணி போல் எட்வின் ஆதனின் வீட்டிற்கு வந்தான். ஆதன் மற்றும் எட்வின் இருவரும் காவலர் குடியிருப்பில் தான் வசிக்கின்றனர். எட்வின் அவனது அப்பா மற்றும் அம்மாவுடன் இங்கேயே இருக்கிறான்.

“வா எட்வின். சாப்பிட்டியா?”

“எங்க நீ கூப்பிட்டதும் நேரா இங்க தான் வரேன். இனிமேல் தான் வீட்டுக்குப் போகனும். அம்மா என்ன சமைச்சுருக்காங்கனு தெரியலை. சரி சொல்லு என்ன விஷயம்?”

“நீ சாப்பிடலைனா வா நாம வெளில போய் சாப்பிடலாம். அப்படியே சாப்பிட்டுட்டே பேசலாம்.”

“அதுவும் சரி தான். ஆனால் அம்மா சமைச்சு வைச்சுருப்பாங்க டா. நீ வேனா வீட்டுக்கு வா. அங்கப் போய் பேசலாம்.”

“டேய் அதலாம் வேண்டாம் டா. அம்மா சமைச்சு வைச்சுருக்கிறதையே நீ சாப்பிடு. இப்போ சும்மா எனக்காகக் கொஞ்சமா சாப்பிடு வா.” என்ற ஆதன் அவனை கையோடு அழைத்துக் கொண்டு உணவகம் சென்றான்.

உணவகத்தில் சென்று அமர்ந்ததும் அவர்களுக்குத் தேவையானதை ஆர்டர் செய்துவிட்டுப் பேச ஆரம்பித்தனர்.

“நீ பொதுவா வெளில சாப்பிட மாட்டியே! இப்போ என்ன டா என்னையும் வெளில கூப்பிட்டு வந்துருக்க?”

“அந்தக் கதையை ஏன் டா கேட்கிற! ரொம்ப அலுப்பா இருந்துச்சுன்னு காலைல வெளில சாப்பிடப் போனேன் டா.” என்று ஆரம்பித்து அங்கு நடந்த கலாட்டாக்களையும் அதனால் அவன் ஆர்டர் செய்த மினி டிஃபனை சாப்பிடாமலே அவன் வீட்டிற்கு வந்து இரண்டு ப்ரட் துண்டுகளைக் சாப்பிட்ட கதையையும் கூற, எட்வின் விழுந்து விழுந்து சிரித்தான்.

“டேய் அமைதியா இரு டா. நானே கடுப்புல இருக்கேன். ஒரு வேளை சாத்விகா தப்பானவளா இருந்தா! அது தெரிஞ்சுக்காம என்னால் தூங்கவே முடியாது டா.”

“சரி நான் என்ன பண்ணனும் ஆதன்?”

“அந்தப் பெண்ணைப் பத்தி தெரிஞ்சுகிட்டு சொல்லு டா. ஏதோ டிடெகட்டிவ் ஏஜென்சி வைச்சுருக்களாம். அதைப் பத்தி விசாரிச்சு எனக்குச் சொல்லு.” என்று கூறி ஆதன் அவனிடமிருந்த விசிடிங் கார்ட்டை எட்வினிடம் தர, அவனும் அதை வாங்கிக் கொண்டான்.

“நீ கவலையை விடு நான் பார்த்திக்கிறேன். கூடிய சீக்கிரம் அந்தப் பெண்ணைப் பத்தி ஏ டு இஸட் உன்கிட்டு இருக்கும்.” என்று எட்வின் கூற, ஆதனிற்கு நிம்மதியாக இருந்தது.

இருவரும் சாப்பிட்டு விட்டு அங்கிருந்து அவரவர் வீட்டிற்குச் சென்றனர்.

ஆதன், சாத்விகா மற்றும் சக்தி இருவரிடமும் பேசிவிட்டுச் சென்றதும், சக்தியும் சாத்விகாவும் அவர்களது டிடெக்டிவ் நிறுவனத்திற்கு வந்தனர். சரியாக அதே நேரம் முன்னர் சாத்விகா சொன்ன நின்ஜா என்பவன் அவளது கைப்பேசிக்கு அழைத்தான்.

“சொல்லு நின்ஜா.”

“ராக்கி, இவன் தான் பணத்தைக் கையாடல் பண்ணிருக்கான். அவனோட மச்சான் பேங்க் அக்கவுன்ட்க்கு பணத்தை ட்ரான்ஸ்ஃபர் பண்ணிருப்பான் போல, இப்போ இரண்டு பேரும் ஏ.டி.எம் வந்து பணத்தை எடுத்துட்டு இருக்கும் போது பேசுனதை நான் கேட்டுட்டேன்.”

“நீ கேட்ட சரி, அதை ரெக்காட் பண்ணியா?”

“ஓ எஸ். அதைப் பண்ணாம இருப்பேன்னா?”

“சூப்பர். அப்போ நீ கிளம்பி வா.”

“ராக்கி அவங்க குடும்பத்தோட எங்கோ டூர் போக ப்ளான் போல! அதுக்கு தான் இப்போ பணத்தை எடுத்துட்டு போறாங்க.”

“ஓ அப்படியா! சரி நீ கிளம்பி வா. நாம நேர்ல பேசிக்கலாம்.” என்று சாத்விகா அவளது கைப்பேசியை வைக்க, சக்தி ஆர்வமாக அவளைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்.

“ஹேய் சாது என்னாச்சு?”

“ப்ளான் சக்ஸஸ்.” என்று கட்டை விரலைத் தூக்கிக் காட்ட, சக்திக்கு அப்பொழுது தான் நிம்மதியாக இருந்தது.

சாத்விகா தன் பட்டப்படிப்பு முடித்தவுடனே ஆரம்பித்தது தான் இந்த ஷாடோ டிடெக்டிவ் ஏஜென்சி. அவளுக்குத் துப்பறியும் வேலை மிகவும் பிடித்த ஒன்று. இதற்காகவே பிரத்யேகமாகன படிப்பைப் பயின்றிருக்கிறாள்.

அவளின் கல்லூரி தோழி தான் சக்தி. சாத்விகா எப்பொழுதும் ஏதாவது துப்பறிவது பற்றி அல்லது அதன் சார்ந்த பாடம், கதை இதைப் பற்றியே பேசிப் பேசியே சக்திக்கும் துப்பறியும் தொழில் மீது ஆர்வம் வர, சாத்விகாவுடன் இணைந்து கொண்டாள்.

இவர்கள் இருவர் தவிர, இன்னும் மூன்று பேர் இங்கு வேலை செய்கின்றனர். அவர்கள் ஜெசிக்கா, பிரபு மற்றும் ரவி.

ஜெசிக்கா சாத்விகாவுடன் பள்ளியில் படித்தவள். ஜெசிக்கா தன் கல்லூரி படிப்பை முடித்து விட்டு ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணியிலிருந்தாள். அவளுக்கு மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்ய ஆசை. ஆனால் வீட்டில் விடவில்லை. வீட்டில் இருக்கவும் பிடிக்கவில்லை. அதனால் சென்ற வேலை தான் ஆசிரியையாக. ஆனால் அவளால் அதில் தொடர்ந்து வேலை செய்ய முடியவில்லை. அப்பொழுது தான் சாத்விகாவின் நிறுவனம் பற்றித் தெரிந்து கொண்டு அவளிடம் வேலை கேட்க, சாத்விகாவும் சந்தோஷமாக வேலைக்கு வைத்துக் கொண்டாள். அந்த நிறுவனத்தின் கணினி வேலை அனைத்தும் ஜெசிக்கா தான் செய்வாள்.

பிரபு மற்றும் ரவி இருவரும் ஐந்து வருடம் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி, அது பிடிக்காமல் வந்து சேர்ந்த இடம் தான் இந்த ஷாடோ டிடெக்டிவ் ஏஜென்சி. அதுவும் சக்தி மூலம். ஏனென்றால் பிரபு சக்தியின் பக்கத்து வீட்டில் தான் தன் குடும்பத்துடன் குடியிருக்கிறான். அவன் வேலையில்லாமல் வீட்டில் இருக்கும் போது அவனிடம் சக்தி ஒரு பேச்சுக்குக் கேட்டாள் தங்களது நிறுவனத்திற்கு வேலைக்கு வருகிறாயா என்று. பிரபு உடனே சரி என்று கூறியதோடு உடன் தன் நண்பனான ரவியையும் அழைத்து வந்துவிட்டான். சாத்விகாவும் அவர்கள் சக்திக்கு தெரிந்தவர்கள் என்று சேர்த்துக் கொண்டாள்.

ஆண்கள் இருவரும் சக்தி, சாத்விகா மற்றும் ஜெசிக்காவை விட மூன்று வயது பெரியவர்கள். ஆனால் பெண்கள் மூவரும் அவர்களை மரியாதையோடு அழைத்தது அவர்கள் வேலையில் சேர்ந்த கொஞ்ச நாட்கள் தான். பின் அந்த மரியாதை எங்குச் சென்றது என்பது கேள்விக் குறித் தான்.

சாத்விகா இந்த டிடெக்டிவ் ஏஜென்சி ஆரம்பித்து ஆறு வருடங்களாகிறது. முதல் இரண்டு வருடம் அவளுடன் இருந்தது சக்தி மட்டும் தான். மூன்றாவது வருடத்தின் தொடக்கத்தில் ஜெசிக்காவும் அதே வருடத்தின் முடிவில் பிரபுவும் ரவியும் இணைந்து கொண்டார்கள்.

அவர்கள் வேலை நேரத்தில் தங்கள் உண்மையான பெயரைக் கூறி அழைக்க மாட்டார்கள். அவர்களுக்கு என்று தனித் தனிப் பெயர்கள் உண்டு.

சாத்விகாவை முதலில் தல என்று தான் அழைத்தனர். ஆனால் அது அவளுக்குப் பிடிக்கவில்லை. அப்பொழுது தான் கே.ஜி.எஃப் படம் வந்தது. அதைப் பார்த்து ராக்கி என்று தனக்கு வைத்துக் கொண்டாள்.

சக்திக்கு பூனை என்றால் மிகவும் பிடிக்கும் அதனால் அவளுக்குக் கிட்டி. ஜெசிக்கா கொஞ்சம் வெள்ளை நிறத்தில் உடல் சற்றுப் பூசினார் போல் இருப்பதால் அவளுக்கு பாண்டா. பிரபுவிற்கு சிறு வயதிலிருந்தே எஸ்.பீ.டி.நின்ஜா ஸ்டார்ம் பிடிக்கும் என்பதால் அதிலிருந்த நின்ஜாவை தன் பெயராக வைத்துக் கொண்டான். ரவி கொஞ்சம் உயரமாகவும் அவனது உயரத்திற்கு ஏற்ற எடையை விட அதிக எடையுடன் இருப்பான். பார்ப்பதற்குக் கொஞ்சம் ஆஜானுபாகுவான தோற்றத்துடன் இருப்பான். அதனால் அவனுக்கு எல்லோரும் பீஸ்ட் என்று வைத்துவிட்டனர்.

அவர்கள் இப்பொழுதும் பார்க்கும் கேஸ் ஒரு நிறுவனத்தில் நடந்த கையாடல் கேஸ் தான். நிறுவனத்திலிருந்து மூவர் மேல் சந்தேகம் என்று இவர்களிடம் வந்தனர். ஒரு வாரம் அவர்கள் மூவரின் பின்னால் சுற்றி இதோ சாட்சியுடன் குற்றவாளியையும் கண்டுபிடித்து விட்டனர்.

சாத்விகாவின் பாட்டி மற்றும் தாத்தா அவளது பெயருக்குச் சென்னை, எண்ணூர் பகுதியில் ஒரு வீட்டை எழுதி வைத்தனர். அந்த வீடு ஒரு தனி வீடு. கீழே அவள் குடியிருக்க, முதல் மாடியில் இவர்களது நிறுவனம் செயல்படுகிறது. அதற்கு மேல் மொட்டை மாடி.

பிரபு ஆதாரத்துடன் அங்கு வர, சாத்விகா அவனிடம்,

“எந்த பேங்க் ஏ.டி.எம்ல அவங்க கேஷ் வித்ட்ரா பண்ணாங்க?” என்று கேட்க, அவன் அந்த வங்கியின் பெயரைக் கூற, சாத்விகாவிற்கு நிம்மதி.

“அந்த பேங்க் மேனேஜர் நமக்குத் தெரிஞ்சவர் தான். வேலை ஈசியா முடிஞ்சுடும். நாளைக்கு என் கூட வா பிரபு. நாம பேங்க் போயி அவனோட அக்கவுண்ட் ஸ்டேட்மென்ட் வாங்கிட்டு அவனோட ஆஃபிஸ்கு போயிட்டு வந்துரலாம்.” என்று சாத்விகா கூற,

“ம் ஓகே சாது.”

“சரி அப்போ இன்னைக்கு இது போதும். நீங்க இரண்டு பேரும் வீட்டுக்குக் கிளம்புங்க. நானும் கிளம்புறேன்.” என்று சாத்விகா கூற, மூவரும் வெளியே வந்து அலுவலகத்தை மூடிவிட்டு கீழே வந்தனர். சாத்விகா அவளது வீட்டிற்குள் நுழைய, சக்தியும் பிரபுவும் அவர்களது வாகனத்தை எடுத்துக் கொண்டு அவர்களது வீட்டிற்குச் சென்றனர்.

பெரும்பாலும் ஞாயிறு விடுமுறை தான். இப்படித் தவிர்க்க முடியாது சூழலில் யாரையாவது ஒருத்தரைத் தான் அழைப்பாள். அப்படி இன்று சக்தியை மட்டும் தான் அழைத்தாள். ஆனால் சக்தி செல்வதைப் பார்த்து பிரபுவும் வீட்டில் சும்மா இருக்க முடியாமல் கிளம்பி வந்துவிட்டான்.

Advertisement