Advertisement

ஆதனும் சாத்விகாவும் கோயம்புத்தூர் வரும் போது அதிகாலை நான்கு மணி. இரயிலிலிருந்து இறங்கிய இருவரும் இரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்தார்கள். அங்கு ஒரு டீக்கடை இருக்க ஆதன் சாத்விகாவிடம்,”சாத்விகா ஒரு டீ குடிக்கலாமா?” என்று அவன் கேட்க,

“ம் குடிக்கலாம் நிவாஸ். நான் ட்ரெயின்லயே ப்ரஷ் பண்ணிட்டேன்.” என்று அவள் சிரித்துக் கொண்டே கூற, ஆதனும் சிரித்துக் கொண்டே சென்று இரு டீ வாங்கிக் கொண்டு வந்தான்.

இருவரும் அதைக் குடித்துவிட்டு சற்று தூரம் நடக்க ஒரு ஆட்டோ வந்து இவர்கள் பக்கம் நின்று,”எங்க போகனும்னு சொல்லுங்க சார். நான் கூப்பிட்டு போறேன்.” என்று ஓட்டுநர் கூற, ஆதன் ஒரு முறை அவனை நன்றாகப் பார்த்து விட்டு ஆட்டோவில் ஏறிய, அவனைத் தொடர்ந்து சாத்விகாவும் ஏறினாள். ஓட்டுநரிடம் ஒரு லாட்ஜ் பெயர் கூற, ஓட்டுநர் ஆதன் கூறிய லாட்ஜிற்கு ஆட்டோவை கிளம்பினார்.

“நிவாஸ் இதோட ரிவ்யூ பார்த்தீங்களா?” என்று சாத்விகா கேட்க,

“ம் பார்த்துட்டேன் சாத்விகா. நீ கவலைப்படாத, நான் தான் உன் கூட இருக்கேன்ல.” என்று ஆதன் கூற, சாத்விகா அவனைப் பார்த்துச் சிரித்தாள்.

கால் மணிநேரப் பயணத்தில் ஆதன் கூறிய லாட்ஜ் வர, இருவரும் ஆட்டோவில் இருந்து இறங்கினார்கள். அந்த லாட்ஜ் சற்றுப் பெரிதாகவே இருக்க, சாத்விகாவிற்கு நிம்மதியாக இருந்தது. ஆதன் பணத்தை ஓட்டுநரிடம் கொடுத்து விட்டு உள்ளே செல்ல, அவனைத் தொடர்ந்து சென்றாள் சாத்விகா.

லாட்ஜின் ரிசப்ஷனுக்கு சென்றவர்கள், ஆதன் அவனது ஆதார் அட்டையைக் கொடுத்து இரண்டு அறை வேண்டுமெனக் கேட்க, அவர்களும் மேலும் சில விவரங்களைக் கேட்டுக் கொண்டு இரண்டு அறைக்கான சாவியை அவர்களிடம் தந்து அவர்களுடன் ஒரு உதவியாளரையும் அனுப்ப, ஆதன் அவரை மறுத்து விட்டு தாங்களே சென்று கொள்வதாகக் கூறி சென்றனர்.

இவர்களுக்குக் கொடுத்த அறை நான்காவது மாடியில் இருக்க, மின்தூக்கி மூலம் நான்காவது தளத்திற்குச் சென்றனர். முதல் அறை வந்ததும்,”சாத்விகா ஒரு நிமிஷம் நீ வெளியே இரு, நான் வந்துடுறேன்.” என்று கூறி உள்ளே செல்ல, சாத்விகாவுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் அவன் சொன்னது போல் வெளியே நின்றாள்.

உள்ளே நுழைந்த ஆதன் முழு அறையையும் ஒரு முறை நோட்டம் விட்டான். எங்காவது கேமரா இருக்கிறதா என்று!! மூலை முடுக்கு எதையும் விடாமல், பாத்ரூம் முதற்கொண்டு அனைத்தையும் ஆராய்ந்த பிறகே அவன் வெளியே வந்தான்.

“இப்போ நீ உள்ள போகலாம் சாத்விகா.” என்று அவன் அவளிடம் கூற, அப்போது தான் புரிந்து கொண்டாள் அவன் உள்ளே ஏதாவது இருக்கிறதா என்று ஆராயத் தான் சென்றுள்ளான் என்பது புரிய, அவன் மேல் மதிப்புக் கூடிக் கொண்டே போனது சாத்விகாவிற்கு. ஒரு சிரிப்பைப் பதிலாகக் கொடுத்து விட்டாள் உள்ளே சென்றாள் சாத்விகா.

அந்தச் சிரிப்பு ஆதனை ஏதோ செய்ய, அவள் சென்ற பின்பும் மூடிய கதவையே ஒரு நிமிடம் பார்த்தவன் தலையை குலுக்கி விட்டு பின்னந்தலையில் அடித்துக் கொண்டு,’டேய் ஆதன் வந்த வேலையைப் பாரு டா.’ என்று தனக்குத் தானே கூறிக் கொண்டு அவனது அறைக்குச் சென்றான்.

சரியாக நான்கு மணி நேரம் நன்றாகத் தூங்கியவர்கள் ஆதனும் சாத்விகாவும். முதலில் எழுந்த ஆதன் குளித்துத் தயாராகி விட்டு வெளியே வர, சாத்விகா அறைக் கதவு இன்னும் சாற்றியே இருக்க, மீண்டும் அவனது அறைக்குச் சென்று விட்டான். அங்குத் தொலைக்காட்சி இருப்பதால் அதைப் போட்டு விட்டு அவன் அமர்ந்து விட்டான்.

அரை மணிநேரம் கடந்து இருக்கும் ஆதனின் அறைக் கதவைத் தட்டும் சத்தம் கேட்க, தொலைக்காட்சியை நிறுத்தி விட்டு கதவைத் திறக்க, சாத்விகா தான் நின்றிருந்தாள்.

“டிவி சத்தம் கேட்டுச்சு நிவாஸ் அதான் கதவைத் தட்டுனேன்.” என்று தன்னிலை விளக்கம் கூற,

“அதனால என்ன சாத்விகா, நான் அப்போவே எழுந்துட்டேன். வந்து பார்த்தேன் நீ தூங்கிட்டு இருக்கிற மாதிரி இருந்துச்சு அதான் வந்து டிவியை போட்டுட்டு உட்கார்ந்துட்டேன்.” என்று ஆதன் கூற,

“ஓ!!என்னோட ஃபோன்கு கூப்பிட்டிருக்கலாம் நிவாஸ் நீங்க.”

“பரவால சாத்விகா. சரி வா பக்கத்துல ஹோட்டல் பார்த்தேன் போய் சாப்பிட்டு வரலாம்.” என்று கூறி கதவைப் பூட்டி விட்டு அவளை அழைத்துக் கொண்டு கீழே வந்தான்.

இருவரும் பக்கத்தில் இருக்கும் உணவகத்திற்குச் சென்று காலியாக இருந்த மேஜையில் அமர்ந்தார்கள். பின்னர் பேரர் வர இருவரும் அவர்களுக்குத் தேவையான உணவை ஆர்டர் செய்தார்கள்.

“நிவாஸ் இங்கயிருந்து வின்சென்ட்டோட வீடு எவ்ளோ தூரம்?” என்று சாத்விகா கேட்க, உடனே ஆதன் அவனது கைப்பேசியை எடுத்து ஜீ.பி.எஸ். மூலம் எவ்ளோ தூரம் இருக்கிறது என்று பார்த்தான்.

“இங்கயிருந்து அஞ்சு கிலோ மீட்டர் தூரத்துல இருக்கு சாத்விகா.” என்று அவன் கூற,

“இப்படிச் சொல்லாமல் அவங்க வீட்டுக்குப் போனால் அவங்க பயந்துர மாட்டாங்காளா?” என்று சாத்விகா கேட்க,

“அது பார்த்துக்கலாம் சாத்விகா. நாம சாதாரணமா போய் பேசுவோம். வின்சென்ட்டோட டெத் ஆக்சிடெண்ட்டாவே இருக்கட்டும். கொலைனு நாம எதுவும் சொல்ல வேண்டாம்.” என்று ஆதன் கூற,

“ஓகே நிவாஸ்.” என்று இவள் கூற, சரியாக பேரர் உணவை எடுத்துக் கொண்டு வர, இருவரும் அமைதியாகச் சாப்பிட்டார்கள்.

சாப்பிட்டு விட்டு, பணத்தைக் கொடுத்து விட்டு இருவரும் வெளியே வர, சரியாக சாத்விகா கைப்பேசி ஒலித்தது. அதை எடுத்துப் பார்த்தவள் பிரபு தான் அழைத்திருந்தான்.

“பிரபு தான்.” என்று ஆதனிடம் கூறிவிட்டு, கைப்பேசியை எடுத்து அடென்ட் செய்து காதில் வைத்தாள்.

“சொல்லு பிரபு.”

“சாத்விகா, உன் வீட்டுக்கு திருடன் வந்துருக்கான். நாங்க வந்து பார்க்கும் போது ப்ரண்ட் டோர் உடைஞ்சு இருந்தது சாத்விகா. உள்ளே போய் பார்த்தால் திங்க்ஸ் எல்லாம் அப்படியே தான் இருக்கு. எது காணாமல் போயிருக்குனு தெரியலை சாத்விகா. நீ வந்தால் தான் தெரியும். ரவியை கார்பெண்டரோட வரச் சொல்லிருக்கேன்.” என்று பிரபு கூற, சாத்விகாவிற்கு அதிர்ச்சி. தன் வீட்டில் திருடு போயிருக்கா? விலை மதிப்புள்ள பொருட்கள் எதுவுமில்லையே!! பின்னே எதற்காக? ஒரு நிமிடம் அவள் அப்படியே உறைந்து நிற்க,

“சாத்விகா என்னாச்சு? ஏன் இப்படி நிக்கிற? பிரபு என்ன சொன்னான்?” என்று ஆதன் கேட்க, அப்போது தான் சாத்விகா சுய உணர்வு பெற்று,

“ஹான் நிவாஸ்.” என்று கூற, ஆதன் ஏதோ சரியில்லை என்று புரிந்து கொண்டு அவளது கையிலிருந்த கைப்பேசியை வாங்கி பிரபுவிடம் இவன் பேச, அவனுக்கும் அதிர்ச்சி தான். ஆனால் சாத்விகா போல் அப்படியே இருக்காமல் துரிதமாக அவனது மூளையைப் பயன்படுத்த, காரணம் நன்றாகப் புரிந்தது.

“சாத்விகா ரம்யா லேப் எங்க வைச்ச?” என்று அவளிடம் கேட்க, சாத்விகாவிற்கும் புரிந்தது இவன் ஏன் கேட்கிறான் என்று.

“என் ரூம்ல பெட் பக்கத்துல இருக்கிற ஸ்டான்ட்ல தான்.” என்று அவள் கூற,

ஆதன் உடனே பிரபுவிடம்,”பிரபு சாத்விகா ரூம்மூக்கு போய் லேப்டாப் இருக்கானு பார்.” என்று அவன் கூற, பிரபுவும் வேகமாகச் சென்று பார்க்க, அங்கு லேப்டாப் இல்லை.

“இல்லை சார் இங்க எந்த லேப்டாப்பும் இல்லை.” என்று அவன் கூற,

“ம் ஓகே பிரபு. நாங்க வர நைட்டாகும். அது வரைக்கும் அங்க இருக்க முடியுமா?” என்று அவன் கேட்க,

“சார் நீங்க சொல்லலைனாலும் நானும் சக்தியும் இருக்கிறதா தான் ப்ளான் பண்ணியிருந்தோம். நீங்க அங்க உங்க வேலையை நல்லபடியா முடிச்சுட்டு வாங்க. நாங்க இங்கப் பார்த்துக்கிறோம்.” என்று பிரபு கூற, ஆதனும் சரியென்று கைப்பேசியை வைத்துவிட்டான்.

அவன் வைத்ததும் கைப்பேசியை சாத்விகாவிடம் தர, அதை வாங்கிக் கொண்டே,”நிவாஸ் ரம்யா லேப்பை எடுக்கத் தான் வீட்டு டோர்ர உடைச்சுட்டு உள்ள போயிருக்காங்களா?” என்று கேட்க,

“ஆமா சாத்விகா. ஆனால் லேப்டாப்ப அவங்க என் வீட்டுல தான தேடிருக்கனும். எப்படி உன்னோட வீட்டுல இருக்குனு அவங்களுக்கு தெரிஞ்சது?” என்று ஆதன் கேட்க, சாத்விகாவும் அதிர்ந்து பார்த்தாள்.

“ஒரு வேளை நம்மளை ஃபாலோ பண்றாங்களா?” என்று சாத்விகா கேட்க,

“எஸ் சாத்விகா. இனி நாம எடுத்து வைக்கிற ஒவ்வொரு ஸ்டெப்பும் கேர்ஃபுல்லா எடுத்து வைக்கனும். சரி வா நாம சீக்கிரம் வின்சென்ட் வீட்டுக்குப் போகலாம்.” என்று ஆதன் கூற, சாத்விகாவும் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே நடந்தாள்.

சரியாக இருபது நிமிடத்தில் வின்சென்ட் வீட்டிற்கு வந்தனர் ஆதனும் சாத்விகாவும். வீட்டின் அழைப்பு மணியை ஆதன் அடிக்க, வயதான பெண்மணி ஒருவர் வந்து கதவைத் திறக்க, அவர் வின்சென்ட்டின் தாயாக இருப்பாரோ என்று ஆதன் நினைத்து,”இது வின்சென்ட் வீடா?” என்று கேட்க,

“ஆமா நீங்க யார்?” என்று அவர் கேட்க,

“நாங்க போலிஸ்.” என்று ஆதன் கூற,

“என்ன வேணும்?”

“உள்ளே போய் பேசலாமா? நீங்க வின்சென்ட்டோட அம்மாவா?” என்று ஆதன் கேட்க, அந்தப் பெண்மணிக்கு சந்தேகம் வந்துவிட்டது. அவர்களை ஒரு மாதிரி அவர் பார்க்க, ஆதன் புரிந்து கொண்டு,”நான் நிஜமா போலிஸ் தான். இது தான் என்னோட ஐடி.” என்று அவன் ஒரு அட்டையைக் காட்டியது தான் அவர் உள்ளேயே விட்டார்.

வீட்டின் மாடத்திலிருந்த சுவரில் வின்சென்ட் புகைப்படம் மாட்டப் பட்டு அதற்கு கீழ் மெழுகுவத்தியை ஏற்றி வைத்திருந்தனர். ஆதன் ஒரு நிமிடம் அந்தப் புகைப்படத்தைப் பார்த்து விட்டு அந்தப் பெண்மணியைப் பார்த்து,”நீங்க வின்செட்டோட அம்மாவா?” என்று மீண்டும் கேட்க,

“ஆமா. நீங்க எதுக்கு வந்திருக்கீங்க? அதான் என் பையன் இறந்துட்டானே!! அப்புறம் எதுக்கு நீங்க வந்துருக்கீங்க?” என்று அவர் கவலையுடன் கேட்க,

“எங்களுக்கு வின்சென்ட் மூலமா சில விஷயம் தெரியனும். ஆனால் அவர் உயிரோட இல்லை. ரம்யானு ஒருத்தங்க இறந்துட்டு போயிட்டாங்க. அவங்களுக்கு உங்கப் பையனை நல்லா தெரியும். அவங்களோட சாவுல மர்மம் இருக்கு. அதான் வின்சென்ட் ஓட திங்க்ஸ்ல ஏதாவது இந்தக் கொலைக்கு ஆதாரம் இருக்கானு நாங்க பார்க்கனும். அவரோட ரூம்மை நாங்க பார்க்கலாமா?” என்று ஆதன் நேரடியாகவே கேட்க, அவருக்கு ஒன்றும் புரியவில்லை.

“என்ன சார் என்ன என்னமோ சொல்றீங்க? எனக்கு ஒன்னும் புரியலை. இருங்க என் பெரிய பையனைக் கூப்பிடுறேன்.” என்று அவர் கைப்பேசியை எடுத்து அவரது பெரிய பையனுக்கு அழைத்து வரச் சொன்னார்.

“அவர் எங்க இருக்கார்?” என்று சாத்விகா கேட்க,

“என் பையன் இறந்து விஷயம் தெரிஞ்சு என் கணவருக்கு ஹார்ட் அட்டாக் வந்துருச்சு. ஹாஸ்பிட்டல்ல அவர் கூடத் தான் இருக்கான். நான் சாப்பாடு எடுத்துட்டு போக வந்தேன்.” என்று அவர் கூற, ஓ என்றதோடு இருவரும் அமைதியாகி விட்டனர்.

மருத்துவமனை பக்கத்தில் இருப்பதால், வின்சென்ட்டின் அண்ணன் சீக்கிரமே வந்துவிட்டான். ஆதனையும் சாத்விகாவையும் அங்குப் பார்த்தவன் யாரென்று புரியாமல் பார்த்தான்.

“யார் நீங்க?” என்று அவன் கேட்க, ஆதன் மீண்டும் ஒரு முறை அவன் யார் எதற்கு வந்திருக்கோம் என்று கூற, அப்போதும் வின்சென்ட்டின் அண்ணன் நம்பாமல் பார்க்க, ஆதன் அவனது கைப்பேசியை எடுத்து அவனைப் பற்றி வந்தச் செய்தியை வின்சென்ட்டின் அண்ணனிடம் காட்ட, அதன் பின் தான் அவன் நம்பினான்.

“வாங்க சார்.” என்று அழைத்துக் கொண்டு வின்சென்ட்டின் அறைக்குச் சென்றான். ஆதனும் சாத்விகாவும் அவனின் பின்னால் சென்றனர்.

வின்சென்ட்டின் அண்ணன்,”சென்னைல இருந்தும் அவனோட திங்க்ஸ் எல்லாம் எடுத்துட்டு வந்துட்டோம். அது எல்லாம் அந்த பேக்ல இருக்கு. ஆனால் அவனோட ஃபோன்னும் லேப்டாப்பும் அவன் இறந்த ஸ்பாட்ல யானோ திருடிட்டு போயிட்டாங்க. நீங்க தான் நியூஸ்ல பார்த்துருப்பீங்களே!!” என்று அவன் கூற,

“ம் ஆமா!! பார்த்தோம்.” என்று மட்டுமே ஆதன் கூறிவிட்டு வின்சென்ட்டின் பொருட்களை ஆராய ஆரம்பித்து விட்டான்.

சாத்விகா வின்செட்டின் அண்ணனிடம் வந்து,”உங்களுக்கு சுவாதினு யாரையாவது தெரியுமா?” என்று அவள் கேட்க, அந்தப் பெயரைக் கேட்டதும் அவன் முகம் அப்படியே மாற,

“அந்தப் பொண்ண பத்தி எதுக்கு கேட்கிறீங்க!! அவளால தான் என் தம்பி எங்ககிட்ட சண்டைப் போட்டுட்டு போனான்..” என்று கோபமாக அவன் கூற,

“என்ன சொல்றீங்க?” என்று சாத்விகா புரியாமல் கேட்க,

“ப்ச் அந்தப் பொண்ணை அவன் எங்க பார்த்தான் எப்போ பார்த்தான்னு ஒரு மன்னும் புரியலை!! ஆனால் திடீர்னு ஒரு நாள் அவளைத் தான் லவ் பண்றேன். அவளைத் தான் கல்யாணம் பண்ணுவேன்னு எங்க கிட்ட வந்து சொன்னான். அப்பாவும் அம்மாவும் கேட்ட ஒரே கேள்வி அவள் எங்க கம்யூனிட்டியானு. ஆனால் அந்தப் பொண்ணு எங்க கம்யூனிட்டியும் இல்லை. அதை விட அந்தப் பொண்ணு என்ன ரிலிஜியனே தெரியலை. அந்தப் பொண்ணு ஒரு அநாதை. நாங்க முடியாதுனு சொல்லிட்டோம். எங்க கிட்ட பயங்கரமா சண்டைப் போட்டுட்டு அவள் தான் வேணும்னு போனான். அப்புறம் அவனை நாங்க கான்டாக்ட் பண்ணவே இல்லை. அது தான் எங்க கூட அவன் கடைசியா பேசுனதுனு தெரிஞ்சுது அவனை அப்படியே விட்டுருக்கவே மாட்டோம். திடீர்னு ஒரு நாள் அவன் இறந்துட்டதா எங்களுக்கு நியூஸ் வந்த போது நாங்க ரொம்ப துடிச்சு போயிட்டோம். ஆனால் அந்தப் பொண்ணு இவன் இறந்துட்டான்னு தெரிஞ்சும் அவள் வரவே இல்லை. என்ன காதலோ கருமமோ!!” என்று அவன் வெறுப்பாகக் கூற, இறந்த பெண்ணை அவன் திட்டுவது பொறுக்காமல்,

“உங்களுக்கு விஷயம் தெரியலைனு நினைக்கிறேன். உங்க தம்பி காதலிச்சு சுவாதி இறந்து ஒரு மாசத்துக்கு மேல ஆச்சு.” என்று சாத்விகா கூற, அவன் அதிர்ச்சியாகப் பார்த்தான்.

“நிஜமாவா?” என்று அதிர்ச்சி நீங்காமல் அவன் கேட்க,

“ஆமா!!” என்று மட்டும் சாத்விகா கூற, வின்சென்டின் அண்ணனுக்கு என்ன கூறுவதெனப் புரியவில்லை. அவன் முகத்தில் மட்டும் வேதனைப் பிரதிபலித்தது.

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே ஆதன் வின்சென்டின் பொருட்களை ஆராய்ந்ததில் அவனுக்கு உருப்படியாக எதுவும் கிடைக்கவில்லை.

சாத்விகா அவனைப் பார்க்க, ஆதன் தோளைக் குலுக்கி உதட்டைப் பிதுக்கி எதுவும் கிடைக்கவில்லை என்று கூறினான்.

“சுவாதி என்ன வேலைப் பார்த்தாங்கனு தெரியுமா?” என்று ஆதன் கேட்க,

“ஏதோ ஃபேக்ட்டரில வேலைப் பார்த்தானு தெரியும். ஆனால் எந்த ஃபேக்கடரினு தெரியாது.” என்று வின்சென்ட்டின் அண்ணன் கூற, இருவருக்கும் புரிந்தது அது தேவிகாவின் சாக்லேட் ஃபேக்ட்டரி என்று.

“ம் நாங்க எதிர்பார்த்த எதுவும் இங்கக் கிடைக்கலை. எங்களுக்கு முன்னாடி யாராவது வந்து வின்சென்ட்டோட திங்க்ஸை பார்த்தாங்களா?” என்று ஆதன் கேட்க,

“இல்லை சார் யாரும் வரலை.” என்று அவன் கூற, மூவரும் பேசிக் கொண்டே கீழே வந்தார்கள்.

“ம் தாங்க்ஸ். நாங்க கேட்டதும் எங்களுக்கு உதவிப் பண்ணதுக்கு. நாங்க வரோம்.” என்று கூறிவிட்டு ஆதனும் சாத்விகாவும் அங்கிருந்து கிளம்பினர்.

ஆதனும் சாத்விகாவும் தங்கியிருந்த லாட்ஜ் வரும் வரை எதுவும் பேசவில்லை. யார் எப்படி வேவு பார்க்கிறார்கள் என்பது தெரியாமல் ரிஸ்க் எடுக்க அவர்கள் விரும்பவில்லை. அவர்கள் தங்கியிருந்த இடம் வந்ததும் இறங்கி நேராக சாத்விகாவின் அறைக்கு வந்தார்கள்.

“என்ன நிவாஸ் இவ்ளோ தூரம் வந்தும் எதுவும் கிடைக்கலை நமக்கு.” என்று சாத்விகா குறைபட,

“ம் எனக்கும் அதை நினைச்சா வருத்தமா தான் இருக்கு. நாம எதுவும் பண்ண முடியாது. கண்டிப்பா இந்த கேஸ்கு நமக்கு வேற ஏதாவது க்ளூ கிடைக்கும்.” என்று ஆதன் நம்பிக்கையாகக் கூற, சரியாக அவனது கைப்பேசி ஒலி எழுப்பியது.

மாசாணி தான் அழைத்திருந்தான். வேகமாக அவன் எடுத்து,”சொல்லு மாசாணி.” என்று வேகமாக அவன் கேட்க,

“தல பாசிட்டிவ் தான். பூனை எங்க இருக்குனு தெரிஞ்சுடுச்சு தல.” என்று கூற,

“சந்தோஷம் மாசாணி. நான் வர வரை பூனையைப் பார்த்துக்க. எங்கயாவது ஓடிட போகுது. நான் இப்போ சென்னைல இல்லை. நைட் தான் வருவேன். வந்ததும் உன்னைப் பார்க்க வரேன்.” என்று கூறிவிட்டு ஆதன் கைப்பேசியை வைக்க, சாத்விகா அவனது முகத்தை ஆர்வமாகப் பார்க்க, அவளது கையை இறுக்கமாகப் பிடித்து,

“சாத்விகா ரம்யாவை கொலை பண்ண ஒருத்தன் இருக்கிற இடம் தெரிஞ்சுடுச்சு. நாம உடனே சென்னை கிளம்பனும்.” என்று ஆதன் சந்தோஷமாகக் கூற,

“சூப்பர் நிவாஸ். ஆனால் இப்போ ட்ரெயின் எதுவும் இல்லையே!!” என்று அவள் கூற,

“சாத்விகா உனக்கு கார் ட்ராவல் ஒத்துக்குமா?” என்று அவன் கேட்க,

“எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை நிவாஸ்.” என்று அவள் கூற, உடனே ஒரு காரை புக் செய்து அங்கிருந்து கிளம்பிவிட்டனர் ஆதனும் சாத்விகாவும்.

Advertisement