Advertisement

சாத்விகா அவளது பெற்றோர்களைப் பற்றிக் கூறியதும், அவள் சாதாரணமாகி விட, கேட்ட ஆதனிற்குத் தான் மனம் கணத்தது. சாத்விகாவை நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டுமென முடிவெடுத்தான். அவன் ஏதோ வேகத்தில் முடிவெடுத்து விட்டான். ஆனால் சாத்விகா அவனது காதலை ஏற்பாளா? அப்படி அவள் ஏற்றாலும் அவனது பெற்றோர்கள் அவளை ஏற்றுக் கொள்வார்களா? கண்டிப்பாக அது நடக்காது என்பது மட்டும் திண்ணம். நிறையப் போராட வேண்டுமென்று தோன்ற, அதற்கு முன் ரம்யாவின் வழக்கை வெற்றிகரமாக முடித்து குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனை வாங்கித் தர வேண்டுமென ஸ்திரமாக முடிவெடுத்தான்.

சாத்விகா, ஆதன் அமைதியாக இருப்பதைப் பார்த்து,”நிவாஸ் என்னோட ஸ்டோரியை சொல்லி உங்களை நான் கஷ்டப்படுத்திட்டேனா?” என்று அவள் சாதாரணமாகக் கேட்க,

“அச்சோ என்ன சாத்விகா இப்படிப் பேசுற? அதெல்லாம் ஒன்னுமில்லை சாத்விகா. நீ வருத்தப்படாத, உனக்கு நான் இருக்கேன். உன்னோட ப்ரண்டஸ் இருக்காங்க. அவங்களுக்கு தான் லாஸ் சாத்விகா நீ அவங்களோட இருக்காமல் இருக்கிறது.” என்று ஆதன் கூற,

“ஹா ஹா அதெல்லாம் எதுவுமில்லை நிவாஸ். ஒரு வேளை அவங்களோட நான் கொஞ்ச வருஷம் வாழ்ந்துட்டு அப்புறம் டைவர்ஸ் ஆகியிருந்தா நீங்க சொல்ற மாதிரி நான் வருத்தப்பட சான்ஸ் இருக்கு. ஆனால் நான் பிறந்தவுடனே என்னை வேண்டாம்னு சொல்லிட்டு போனவாங்களை நினைச்சு நான் எப்போவும் வருத்தப்பட மாட்டேன் நிவாஸ். ப்ச் என்னை விடுங்க நாம ரம்யா கேஸ் விஷயமா பேசலாம். அடுத்த என்ன பண்றதா இருக்கீங்க?” என்று அவள் கூற, ஆதனும் அவளைக் கஷ்டப்படுத்த நினைக்காமல் ரம்யா வழக்கைப் பற்றிப் பேச ஆரம்பித்தான்.

“ஓகே சாத்விகா. இதைப் பத்தி இனி பேசலை.” என்று கூறிவிட்டு அவனே தொடர்ந்தான்,”நாம அன்னைக்கு ரம்யா வீடியோ பார்த்தோம் இல்லையா? அதை இன்னொரு முறை பார்க்கனும் சாத்விகா. ரம்யா லேப் எடுத்துட்டு வா.” என்று அவன் கூற, சாத்விகாவும் உள்ளே சென்று ரம்யாவின் மடிக்கணினியை எடுத்துக் கொண்டு வந்தாள்.

அதை வாங்கிய ஆதன், மடிக்கணினியைத் திறந்து காணொளியைப் போட்டான். அதில் ரம்யா சற்றுப் பதட்டத்துடன் காணப்பட்டாள். ஆதன் இப்போது கூர்மையாக அந்தக் காணொளியைப் பார்க்க ஆரம்பித்தான்.

ரம்யா அவளது மடிக்கணினியின் கேமராவில் எடுத்திருப்பாள் போல, அவள் மடிக்கணினியைப் பார்த்துப் பேச ஆரம்பித்தாள்.

“நான் ரம்யா, என்னை நிறையப் பேருக்குத் தெரிய வாய்ப்பு இருக்கு. தெரியாதவங்களுக்கு என்னைப் பற்றி நான் சொல்றேன். நான் ஜல்லிக்கட்டு, மீதேன் பிரச்சனை, தூத்துக்குடித் துப்பாக்கி விபத்து இப்படிப் பல பிரச்சனைகளுக்காகக் குரல் கொடுத்திருக்கேன். இப்போ என்னோட உயிருக்கு ஆபத்து இருக்கு. இப்ப கூட நான் என்னைக் கொல்ல வந்தவங்களுக்கிட்ட இருந்து தப்பிச்சு தான் வந்திருக்கேன். நாளைக்கு நான் உயிரோட இருப்பேன்னானு எனக்குத் தெரியாது. எனக்கு என் உயிர் போகப் போறதுல எந்த வருத்தமும் இல்லை. ஆனால் நான் செய்ய நினைச்ச விஷயம் முடியாமல் போயிடுமோனு பயமா இருக்கு. எனக்கு முன்னாடியே இந்த விஷயத்தால இரண்டு உயிர் போயிடுச்சு. இதுக்கு மேல எந்த உயிரும் போகக் கூடாது. ஒரு மாசத்துக்கு முன்னாடி சுவேதானு ஒரு பொண்ணு கடல்ல விழுந்து தற்கொலை பண்ணி இறந்து போயிட்டதா நியூஸ்ல பார்த்துருப்பீங்க. அது தற்கொலை இல்லை கொலை. அப்புறம் மூணு நாளுக்கு முன்னாடி வின்சென்ட்னு ஒரு பையன் ஆக்சிடெண்ட்ல இறந்துட்டான்னு பார்த்திருப்பீங்க. அதுவும் ஆக்சிடெண்ட் இல்லை திட்டமிட்ட கொலை. இதெல்லாம் பண்ணினது எல்லாரும் ஆசையா சாப்பிடுற ஸ்வீட் லிக் சாக்லேட் ப்ரான்ட் ஓனர் தேவிகா தான். ஸ்வீட் லிக் சாக்லேட் சமீப காலத்துல நிறைய வளர்ச்சி அடைந்திருக்கு. அதுக்கு அவங்களோட சாக்லேட் நல்லா இருக்குனு சொன்னாலும், அதோட வளர்ச்சி அதீதமானது. அதுவும் நஷ்டத்துல ஓடுன சாக்லேட் ஃபேக்டரி குறுகிய காலத்துல இவ்ளோ வளர்ந்தது எல்லாருக்கும் ஆச்சரியத்தை கொடுத்திருக்கும். அதுக்கு காரணம் அவங்களோட கடின உழைப்பு இல்லை. அவங்க பண்ற இல்லீகல் வேலை தான். சாக்லேட்ஸ் எக்ஸ்போர்ட் பண்றேன்னு அவங்க தங்கத்தை இல்லீகலா கடத்துறாங்க. அதை நேர்ல பார்த்த ஓரே காரணத்திற்காக சுவேதாவை கொண்ணுட்டாங்க. வின்சென்ட்கும் எனக்கும் இந்த விஷயம் தெரியும்னு தெரிஞ்சு வின்சென்ட்டை கொண்ணுட்டாங்க. இப்போ என்னையும் கொல்ல நினைக்கிறாங்க. நான் போலிஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணேன். ஆனால் அவங்களை எல்லாம் விலைக்கு வாங்கிட்டா அந்த தேவிகா. யாரை நம்புறதுனு எனக்குத் தெரியலை. பத்திரிக்கைல சொல்லாம்னு பார்த்தா நாங்க கலெக்ட் பண்ண எல்லா ஆதாரத்தையும் போலிஸ் வைச்சுகிட்டாங்க. நான் கேட்டதுக்கு அப்படி எதுவும் நீங்கக் கொடுக்கலைனு சொல்லி என்னை விரட்டி அனுப்பிட்டாங்க. ஒரு வேளை நான் இறந்துட்டா இந்த வீடியோ யார் கைக்குக் கிடைச்சாலும் எங்களோட சாவுக்கு நியாயம் வாங்கித் தாங்க. அந்த தேவிகாவை சும்மா விடாதீங்க. அந்த தேவிகா நம்ம நாட்டுக்கே தீங்கு. அவள் வெளில இருக்கக் கூடாது.” என்று ரம்யா கூறி முடிக்க அந்தக் காணொளி முடிந்திருந்தது.

“நிவாஸ் நான் அன்னைக்கே கேட்கனும்னு நினைச்சேன். இந்த வீடியோ வைச்சு நம்மாள ஈசியா தேவிகாவை அரெஸ்ட் பண்ண முடியுமே!! ரம்யா தான் தெளிவா எல்லாத்தையும் சொல்லிருக்காங்களே!!” என்று அவள் கூற,

“சாத்விகா நான் அன்னைக்கு சொன்னது தான். இதை பொய்னு சுலபமா அவங்க நிரூபிச்சுடுவாங்க. ஏன்னா ரம்யா இப்போ உயிரோட இல்லை. அதை விட, அவங்க தங்கத்தைக் கடத்துறதுக்கு எந்த ஆதாரமும் ரம்யாகிட்ட இல்லை. ஸோ தேவிகா தரப்புல அவங்களுக்கு வேண்டாத யாரோ செய்த செயல் தான் இதுனு ஈசியா சொல்லிடுவாங்க. ஸோ நமக்கு ஸ்ட்ராங்கான எவிடென்ஸ் வேணும்.” என்று ஆதன் விளக்கமாகக் கூற, அப்போது தான் சாத்விகாவிற்கும் புரிந்தது இவ்ளோ இருக்கிறது என்று.

“அப்புறம் நிவாஸ் எதுக்கு வீடியோவை மறுபடியும் பார்க்கிறீங்க?”

“இல்லை வின்சென்ட் அப்புறம் சுவேதா பத்தி ஏதாவது டீடெயிஸ்ஸ் இருக்கானு பார்த்தேன். ஒரு வேளை நான் விட்டிருந்தால்!! அதான். ஆனால் இதுல எதுவுமில்லை. நானும் வீடியோ பார்த்துட்டு போன இந்த நாலு நாள்ல எல்லா ஸ்டேஷன்லையும் வின்சென்ட் பத்தி விசாரிச்சேன். அப்போ தான் எனக்கு ஒரு ஸ்டேஷ்னல இருந்து வின்சென்ட் பத்தி டீடெய்ல்ஸ கிடைச்சது.” என்று அவன் கூற,

சாத்விகா ஆர்வமாக அவனிடம்,”சூப்பர் நிவாஸ். என்ன சொன்னாங்க?” என்று அவள் கேட்க,

“அது வின்சென்ட் கோயம்புத்தூரை சேர்ந்தவங்க. இங்க ஒரு ஐடி கம்பெனில வேலைப் பார்க்கிறாங்க. அப்புறம் இன்னொரு விஷயம் நான் வின்சென்ட் இறந்த விஷயத்தை நியூஸ்ல பார்த்த போதே ஏதோ தப்பா இருக்குனு தோனுச்சு. இப்போ சரியா போச்சு.” என்று ஆதன் கூறவும், சாத்விகா புரியாமல் பார்த்தாள்.

“என்ன நியூஸ்? என்ன தப்பா இருந்துச்சு?” என்று அவள் கேட்க,

“கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு ஆக்சிடெண்ட்ல இறந்த ஆளுக்கிட்ட இருந்து ஃபோன் செயின் எல்லாம் திருடிடாங்கனு நியூஸ்ல வந்தது. அதைப் பார்த்த போது எனக்கு ஏனோ அது சாதாரண திருட்டு மாதிரி தெரியலை. இப்போ எல்லாம் புரியுது, வின்சென்ட்டை கொலை பண்ணிட்டு அவங்ககிட்ட இருந்த ஆதாரத்தை எடுத்துருக்காங்க.” என்று ஆதன் கூற, சாத்விகாவிற்கு அதிர்ச்சியாக இருந்தது.

“இப்படி எல்லாம் செய்வாங்களா? இப்போ என்ன பண்ணப் போறீங்க நிவாஸ்?” என்று அவள் கேட்க,

“நான் கோயம்புத்தூர் போகலாம்னு இருக்கேன் சாத்விகா. அவங்க வீட்டுல ஏதாவது கிடைக்காதுனு பார்க்கனும். அதுக்குள்ள மாசாணிகிட்ட இருந்து ஏதாவது தகவல் வரும்னு நம்புறேன்.” என்று ஆதன் கூற,

“நிவாஸ் இஃப் யூ டோண்ட் மைன்ட் நானும் உங்க கூட வரவா?” என்று அவள் கேட்க, அவளை மறுக்க அவனுக்குத் தோன்றவில்லை. அவளுடன் நேரம் செலவழிக்கக் கிடைத்த நேரத்தை அவன் இழக்க விரும்ப வில்லை. அதனால் உடனே,

“சுயர் சாத்விகா. நான் இன்னைக்கு நைட் ட்ரெயின்ல போறதா தான் ப்ளான் பண்ணேன். திடீர்னு ப்ளான் போட்டதால நான் டிக்கெட் புக் பண்ணலை. ஸோ அப்போதைக்குத் தான் டிக்கெட் எடுக்கனும். அதனால நீ வரதுல எந்தப் பிரச்சனையும் இல்லை.” என்று ஆதன் கூற,

“வாவ் சூப்பர் நிவாஸ். எத்தனை மணிக்கு ட்ரெயின்?” என்று அவள் கேட்க,

“நைட் செவன் தர்ட்டிக்கு ரெடியா இரு சாத்விகா. நான் வந்து உன்னைக் கூப்பிட்டு போறேன். எட்டு ஐம்பதுக்கு ட்ரெயின். நாம போய் டிக்கெட் எடுக்கச் சரியா இருக்கும்.” என்று அவன் கூற, வேகமாகத் தலையை அசைத்தாள் சாத்விகா.

ஆதன் சாத்விகாவிடம் பேசிவிட்டு சென்றதும் அவள் பரத்தை அழைத்து ரம்யா வழக்கு விஷயமாக அவள் ஆதனுடன் கோயம்புத்தூர் செல்வதாகவும் அதனால் அலுவலகச் சாவியை அவனை வந்து வாங்கிக் கொள்ளச் சொல்ல, பரத்தும் அன்று பக்கத்திலிருந்ததால் உடனே வந்து வாங்கிக் கொண்டு சென்றான்.

சாத்விகா, ஆதன் சொன்ன நேரத்திற்குத் தயாராக இருக்க, ஆதன் வரவும் சாத்விகா வீட்டைப் பூட்டி விட்டு அவனுடன் கிளம்பிவிட்டாள்.

இருவரும் இரயில் நிலையத்திற்குச் சென்று டிக்கெட் வாங்கிக் கொண்டு, இரயில் நிற்கும் பிளாட்பாரத்திற்குச் சென்று அமர்ந்தனர். இன்னும் அரைமணி நேரம் இரயில் வர நேரமிருக்க,

“சாத்விகா நைட் சாப்பிட்டியா?” என்று அவன் கேட்க,

“இல்லை நிவாஸ்…” என்று அவள் பேசி முடிக்கும் முன்பே, ஆதன் குறுக்கிட்டு,

“அப்போ என்ன வேனும்னு டக்குனு சொல்லு சாத்விகா. நான் போய் வேகமா வாங்கிட்டு வந்துடுறேன். எனக்குச் சாப்பாடு ஞபாகமே இல்லை. பக்கத்துல அவங்க சாப்பாட்டு பார்சல் கொண்டு வரதைப் பார்த்துத் தான் எனக்கும் தோனுச்சு நாம எதுவும் வாங்கிட்டு வரலைனு.” என்று அவன் கூற,

“அட நிவாஸ் என்னை முழுசா பேசவிடுங்க. நான் நைட்க்கு சமைச்சு இரண்டு பேருக்கும் கொண்டு வந்துட்டேன். நீங்க டென்ஷன்ல மறந்து போயிருப்பீங்கனு நினைச்சேன் அதான் நானே கொண்டு வந்துட்டேன்.” என்று அவள் கூற,

“நல்ல வேளை சாத்விகா.”

“நிவாஸ் நீங்க வின்சென்ட் இங்கத் தங்கியிருந்த இடத்துல போய் பார்த்தீங்களா? அவங்களோட திங்க்ஸ் அங்க இருக்கும்ல?” என்று அவள் கேட்க,

“எஸ் நான் நேத்தே போய் பார்த்துட்டேன். வின்சென்ட்டோட திங்க்ஸ் எல்லாம் அவங்க ஃபேமிலி மெம்பர்ஸ் எடுத்துட்டு போயிட்டாங்களாம்.” என்று ஆதன் கூற,

“ஓ ஓகே ஓகே!!” என்று அவள் கூறவும் இரயில் வரவும் சரியாக இருக்க, அவர்களது உடைமைகளை எடுத்துக் கொண்டு இருவரும் இரயில் ஏறினர்.

அவர்களது நேரம் எந்தக் கூட்டமும் இல்லாமல் இருக்க, வசதியாக அவர்களுக்கு ஏற்ற சீட்டில் சென்று அமர்ந்து கொண்டனர்.

“நல்ல வேளை எங்க கூட்டமா இருக்குமோனு யோசிச்சுட்டே இருந்தேன். இப்போ தான் சந்தோஷமா இருக்கு.” என்று ஆதன் கூற,

“ஆமா நிவாஸ். இப்போதைக்கு எந்த லீவ்வும் இல்லாதனால நமக்கு வசதியா போச்சு.”

“எஸ் சாத்விகா. பொங்கல் வருதுல அதான் கொஞ்சம் யோசிச்சேன்.”

“அதுக்கு இன்னும் நிறைய நாள் இருக்கு நிவாஸ். சரி வாங்க சாப்பிடலாம்.” என்று கூறி இரு தட்டை எடுத்தாள் சாத்விகா. அதற்குள் ஆதன் சென்று கை கழுவி விட்டு வர, சாத்விகா அவள் கொண்டு வந்த பாட்டில் தண்ணீரிலே ஜன்னலில் கை கழுவி விட்டாள்.

இட்லியும் தக்காளி தொக்கும் எடுத்து வர, நன்றாகச் சப்புக் கொட்டி சாப்பிட்டான் ஆதன்.

“சூப்பரா சமைக்கிற சாத்விகா. செம டேஸ்ட்டா இருக்கு.” என்று ஆதன ரசித்துக் கூற,

“ஹா ஹா தாங்க் யூ தாங்க் யூ.” என்று கூறிக் கொண்டே அவள் சாப்பிட்டாள். பின்னர் இருவரும் சற்று நேரம் பேசி விட்டு படுத்து உறங்கி விட்டனர்.

~~~~~~~~~~

எட்வின், பாண்டி மற்றும் கல்யாணை சந்தித்த சென்ற பின் கல்யாண் பாண்டியிடம்,”இவனை நம்புறதா வேண்டாமா ஒரே சந்தேகமா இருக்கு பாண்டி. நான் மட்டும் பேசிருப்பேன். நீ ஏன் வந்த? ஒரு வேளை இவன் ஆதனுக்கு வேலைப் பார்க்கிறவனா இருந்தால் உன்னைப் பத்தி அந்த ஆதன்கிட்ட சொல்லிடுவானே. அவசரப்பட்டுட்டோமா?” கவலையாகக் கேட்க,

“எனக்கு அப்படித் தோனலை கல்யாண். அப்படியே இவன் அந்த ஆதன்கிட்ட சொன்னாலும் என்னை அவனால ஒன்னும் பண்ண முடியாது. மிஞ்சி போனா என்னைக் கண்காணிக்க ஆள் போடுவான். ஆனால் அதுக்கெல்லாம் ஆசரக் கூடிய ஆள் நான் இல்லை. என்னைக் கைது பண்ணாலும் என்கிட்ட இருந்து ஒரு விஷயத்தையும் அவனால வாங்க முடியாது. நான் அந்த எட்வின் முன்னாடி வந்ததே அவனைச் சோதிக்கத் தான்.” என்று பாண்டி கூற,

“என்ன சொல்ற பாண்டி? எட்வினை சோதிக்க அவன் முன்னாடி வந்தியா? புரியலையே!!” என்று கல்யாண் கூற,

பாண்டி கல்யாணை கேவலமாக ஒரு பார்வைப் பார்த்து விட்டு,”அது புரிஞ்சுருந்தா நீ ஏன் இப்படி இருக்க போற!! நானே சொல்றேன் கேட்டுக்கோ!! நீ சொன்ன மாதிரி எட்வின் என்னைப் பத்தி ஆதன்கிட்ட சொல்றானா இல்லையானா பார்க்கனும். அப்படி அவன் ஆதன்கிட்ட என்னைப் பத்திச் சொன்னால் அவனை என்ன பண்றதுனு எனக்குத் தெரியும். ஒரு வேளை சொல்லாட்டி அவன் நமக்கு அடிமையாகிட்டான்னு அர்த்தம்.” என்று பாண்டி கூற,

“அட செம பாண்டி. எனக்கு எட்வின் ஆதன்கிட்ட சொல்லிடுவான்னு தான் தோனுது. ஆனால் உனக்கு எப்படி அவன் சொல்றது தெரியும்?”

“என்ன போலிஸ்னா உன்னை மட்டும் தான் எனக்குத் தெரியும்னு நினைக்கிறியா? எனக்கு எல்லா இடத்துலயும் ஆள் இருக்கு. எப்படித் தெரிஞ்சுக்கனுமோ அப்படித் தெரிஞ்சுக்குவேன்.” என்று பாண்டி கூற, கல்யாண் அப்படியே அமைதியாகி விட்டான்.

~~~~~~~~~~

பாண்டி மற்றும் கல்யாணிடம் பேசிவிட்டு வந்த எட்வினிற்கு பயங்கர யோசனையாக இருந்தது. அவர்களை நம்பலாமா? ஆதன் இதுவரை தன்னிடம் மட்டுமல்ல யாரிடமும் இப்படி நடந்து கொண்டது இல்லை. ஆனால் அன்று நண்பன் என்றும் பாராமல் எல்லோர் முன்பும் அவனைத் திட்டியது அவனது மனதில் வடுவாக மாறி விட்டது. அதை அவனால் எளிதில் ஒதுக்கித் தள்ள முடியவில்லை. அவன் செய்தது தவறு தான்!! இல்லை என்று ஒரு நாளும் மறுக்க மாட்டான். அதே போல் ஆதன் செய்த செயலையும் ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை. இரு கொள்ளி எறும்பாய் அவன் அவதிப்பட்டுக் கொண்டிருக்க, அவனது அம்மா வேகமாக அவனிடம் வந்து,

“நான் கேள்விப்பட்டது எல்லாம் உண்மையா எட்வின்?” என்று கேட்க,

எட்வின் புரியாமல் அவனது அம்மாவிடம்,”அம்மா இப்படி மொட்டையா கேட்டால் நான் என்ன சொல்றது? நீங்க என்ன கேள்விப்பட்டீங்க? அதை முதல்ல சொல்லுங்க. அப்புறம் அது உண்மையா இல்லை பொய்யா நான் சொல்றேன்.” என்று அவன் கூற,

“அந்த ஆதன் உன்னை எல்லோர் முன்னாடியும் திட்டிட்டானாமே!! அவன் உன்னை விடப் பெரிய ஆபிசர்னா எப்படி வேணாலும் பேசலாமா?” என்று பொரிந்து தள்ள, எட்வின் அதிர்ச்சியாக அவரைப் பார்த்தான்.

“உன்கிட்ட யார் மா சொன்னது?”

“எல்லாம் உன் கூட வேலை செய்ற அந்தத் தியாகுவோட பொண்டாட்டி தான். இப்போ அதுவா முக்கியம் நான் கேட்டதுக்குப் பதில் சொல்லு.” சற்றுக் கோபமாக அவர் கேட்க,

“ப்ச் அம்மா இதெல்லாம் ஒரு விஷயமில்லை. நான் பார்த்துக்கிறேன்.” என்று அவன் பதில் சொல்லாமல் மழுப்ப,

“நான் கேட்டதுக்குப் பதில் இது இல்லை. ஆமாவா இல்லையா அதை மட்டும் சொல்லு. அந்தத் தியாகுவோட பொண்டாட்டி எப்படிக் கேலியா பேசுனா தெரியுமா? அதுவும் எல்லோர் முன்னாடியும். எனக்கு ஒரே அவமனமா போச்சு. நீ தப்பே பண்ணியிருந்தாலும் தனியா கூப்பிட்டு சொல்லாமல் இது என்ன எல்லோர் முன்னாடியும் திட்டுறது? நீ பதில் சொல்லு நானே அந்த ஆதன்கிட்ட நாலு வார்த்தை நல்லா கேட்டுட்டு வரேன்.” என்று அவர் மிகக் கோபமாகப் பேச,

“அம்மா இதை நான் பார்த்திக்கிறேன். நீங்க எதுவும் அவன்கிட்ட பேச வேண்டாம். என்ன பண்ணனும்னு எனக்குத் தெரியும். நான் ஒன்னும் சின்ன பிள்ளைக் கிடையாது மா.” என்று அவன் சொன்னாலும் அவனது அம்மாவால் அதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. இருந்தாலும் எட்வினிற்காக அமைதியாக இருந்தார். அவனது அப்பா வந்ததும் புலம்பித் தீர்த்துவிட்டார். அவருக்கும் ஆதன் பண்ணியது அதிர்ச்சியைக் கொடுத்தது.

எட்வினின் தந்தை மற்றும் தாயைப் பார்த்த அவனுக்கு மனம் ஆறவில்லை. எட்வினின் பெற்றோர்கள் ஆதனை அவர்கள் இன்னொரு மகனாகத் தான் பார்த்தனர். அவனா தங்கள் பையனை அவமானப்படுத்தியது என்று ஆற்ற முடியாமல் கவலையாக அதே நேரம் கோபமாகவும் இருந்தது அவர்களுக்கு.

காவல் நிலையத்தில் மட்டுமல்லாது இப்படிக் காவலர் குடியிருப்பிலும் அவனது மானம் போனது நினைத்து அவனுக்கு அவமானமாக இருந்தது. இது வரை இரு மனமாக இருந்தவன் இப்போது முடிவெடுத்து விட்டான். இனி என்ன ஆனாலும் சரி பாண்டியுடன் கூட்டணி வைத்துக் கொள்ள வேண்டுமென. இது தான் ஆதன் தன்னை அவமானப்படுத்தியதற்குத் தக்கப் பதிலடி. நல்லவனாக இருந்து ஒரு ப்ரியோஜனம் இல்லை. இவன் எத்தனையோ நல்லது பண்ணும் போது பேசாத கூட்டம் இப்போது அவனுக்கு நடந்த அவமானத்தை மட்டும் பெரிய விஷயமாகப் பேச, மனம் வெறுத்து விட்டான்.நல்லவனாக இனி இருக்கப் போவது இல்லை என்று முடிவெடுத்து விட்டான். அதன் முதற்கட்டமாகப் பாண்டிக்கு அழைத்து சாத்விகாவின் வீட்டில் தான் ரம்யாவின் மடிக்கணினி இருப்பதாகவும் அவள் வீட்டில் தனியாகத் தான் இருப்பாள் என்றும் அவளது முகவரியையும் ஒன்று விடாமல் கூறிவிட்டான்.

Advertisement