Advertisement

மூன்று நாட்களாகிவிட்டது மாசாணியிடமிருந்து எந்தத் தகவலும் ஆதனுக்கு வரவில்லை. அடுத்த என்ன செய்வதெனப் புரியாமல் தவித்துக் கொண்டிருந்தான். அதே போல் அவன் அனைவரின் முன்பும் எட்வினைக் கத்தியதை சுத்தமாக மறந்து விட்டான். எட்வினைப் பார்க்கும் போது அவன் சாதாரணமாகவே பேச, எட்வினிற்குப் பயங்கர கோபம் வந்து விட்டது. இது மட்டும் பத்தாது என்று தியாகு வேறு அங்கிருக்கும் ஆட்களையும் சேர்த்துக் கொண்டு எட்வினை நன்றாக உசுப்பேற்றிக் கொண்டிருந்தார்.

“என்ன எட்வின் ஆதன் சார் உன்கிட்ட மன்னிப்பு கேட்டாரா?” என்று தியாகு சாதாரணமாக அவனிடம் முதல் நாள் கேட்க, அவன் எதுவும் பதில் பேசவில்லை.

“அட அவர் கேட்கலை பாருங்க. அவர் நம்மளை விட பெரிய போஸ்ட்ல இருக்கிறதால எதுக்கு இறங்கி வந்து மன்னிப்பு கேட்கனும் நினைப்பு!!” என்று இன்னொருவர் கூற, எட்வினிற்கு என்ன பதில் பேசுவது என்றே புரியவில்லை. அவனுக்கு ஆதன் மேல பயங்கரமாகக் கோபம் வந்தது.

முதல் நாள் மட்டுமல்லாமல் அடுத்து அடுத்து வந்த நாட்களும் அவர்கள் அவனை ஏதாவது கேட்டுக் கொண்டே இருக்க, எட்வின் முழுவதுமாக வெறுத்து விட்டான். அது நாள் வரை யாரையும் அவனை ஒரு சொல் சொல்ல விட்டதில்லை. ஆனால் இன்று அனைவரும் தன்னைக் கேலி செய்வதைப் பார்த்து அவனுக்கு மிகுந்த மன வேதனையைக் கொடுத்தது.

யாரிடமும் எதுவும் பேசாமல் அப்படியே எழுந்து வெளியேறி வந்து விட்டான். யாரிடமும் பேசப் பிடிக்கவில்லை. அவன் வண்டியை எடுத்துக் கொண்டு பக்கத்திலிருக்கும் டீக்கடைக்குச் சென்றான்.

~~~~~~~~~~

எட்வின் வெளியே சென்றதுமே தியாகு முதலில் செய்த வேலை கல்யாணிற்கு அழைத்து எட்வினது மனநிலையைப் பற்றித் தெள்ளத் தெளிவாகக் கூறினான்.

கல்யாண் உடனே பாண்டிக்கு அழைத்து விவரத்தைக் கூற,”இப்போவாவது உருப்படியா ஒரு வேலையைச் செஞ்சியே ரொம்ப சந்தோஷம். மத்ததை நான் பார்த்திக்கிறேன்.” என்று கூறிவிட்டு உடனே பாண்டி கிளம்பிவிட்டான்.

~~~~~~~~~~

எட்வின் டீக்கடையில் உட்கார்ந்து டீ குடித்துக் கொண்டிருக்க, பாண்டி எதார்த்தமாக அங்கு வருவது போல் வந்தான். எட்வினுக்கு அவன் யாரென்று தெரியவில்லை. அதனால் கண்டு கொள்ளாமல் அமைதியாக டீ குடித்துக் கொண்டிருந்தான்.

அவன் கிளம்பும் நேரம் கல்யாணும் அங்கு வர, எட்வின் இவன் எதற்கு இங்கு வருகிறான் என்ற சந்தேகத்துடன் பார்த்தான். கல்யாண் நேராக எட்வினிடம் வந்தான்.

“அப்புறம் எட்வின் எப்படி இருக்க?” என்று கேட்க,

“நான் நல்லா இருக்கேன்.” என்று மட்டுமே கூறினானே தவிர, வேற எதுவும் அவன் பேசவில்லை. அங்கிருந்து நகர, அவனது தோளைத் தொட்ட கல்யாண்,

“அட இரு யா. உன்கிட்ட பேசத் தான் நான் வந்தேன்.” என்று அவன் கூற, எட்வின் புரியாமல் அவனைப் பார்த்தான்.

“என்கிட்ட பேச என்ன இருக்கும்?” என்று அவன் கேட்க,

“எல்லாம் எனக்குத் தெரியும் எட்வின். அந்த ஆதனுக்காக நீ எவ்ளோ பண்ணிருப்ப!! அதெல்லாம் விடு நீ அவனோட நண்பன் தான? அதைக் கூட மனசுல வைச்சுக்காம அத்தனைப் பேர் முன்னாடி உன்னை அவன் திட்டினது ரொம்ப தப்பு!! கேட்ட எனக்கே கஷ்டமா இருந்தது. அனுபவிச்ச உனக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கும்!!” என்று கல்யாண கூற, எட்வினுக்கு அவமானமாக இருந்தது. இப்படி கல்யாண் வந்து பேசுவான் என்று அவன் சுத்தமாக நினைக்கவில்லை. அவன் இவனுக்கு ஏதோ பாவம் பார்த்துப் பேசுவது போல் தோன்றத் கோபமாக அங்கிருந்து செல்லப் போக,

“அட சரி நான் அதைப் பத்திப் பேசலை. உன்கிட்ட வேற ஒரு விஷயம் பேசனும். ஆனால் இங்க பேச வேண்டாம், என் கூட வா.” என்று கல்யாண அழைக்க, எட்வின் அப்படியே நிற்க,

“உன் நல்லதுக்கு தான் நான் சொல்றேன். என் கூட வா.” என்று கூறி எட்வினைக் கட்டாயப்படுத்த அங்கிருந்து அழைத்துச் சென்றான்.

அவனை தன்னுடன் அழைத்துக் கொண்டு கல்யாண அங்கிருந்து செல்ல, பாண்டி அவர்களைப் பின் தொடர்ந்து அங்கிருந்து சென்றான்.

அவர்கள் சென்றது ஊரைத் தாண்டி இருக்கும் பாண்டியின் பண்ணை வீட்டுக்குத் தான். எட்வினுக்கு கல்யாண் தன்னிடம் என்ன பேசப் போகிறான் என்று தெரியவில்லை என்றாலும் ஆர்வமாகத் தான் வந்தான்.

அந்த வீட்டின் உள்ளே சென்றதும் பின்னாலே பாண்டியும் உள்ளே நுழைய, எட்வினை அவனை யார் என்று பார்த்தான். கல்யாணிடம்,”யார் சார் இவங்க?” என்று கேட்க,

“எல்லாம் நம்ம ஆள் தான்.” என்று கல்யாண் கூறிவிட்டு தொடர்ந்து,”நான் சுத்தி வளைச்சு பேச விரும்பலை. நேரா விஷயத்துக்கே வரேன் எட்வின். அந்த ரம்யா கேஸ்ல நீ எங்களுக்குக் கொஞ்சம் ஹெல்ஃப் பண்ணனும்.” என்று கூற,

“என்ன சொல்றீங்க? நான் என்ன ஹெல்ஃப் பண்ணனும்?” என்று எட்வின் கேட்க,

“ஆதன் பண்ற எல்லா விஷயத்தையும் எங்களுக்கு இன்ஃபார்ம் பண்ணனும்.” என்று பாண்டி கூற, எட்வின் கோபமாக அவர்களை முறைத்து விட்டு,

“அந்த மாதிரி ஆள் நான் இல்லை.” என்று கூறிவிட்டு அவன் எழுந்து செல்ல,

“அப்போ கடைசி வரைக்கும் இப்படியே இன்ஸ்பெக்டராக இருந்து ஆதன் கீழ வேலை செஞ்சு அசிங்கப்படப் போறியா?” என்று பாண்டி கேட்க, அப்படியே நின்று விட்டான் எட்வின்.

“எங்கக் கூட சேர்ந்தால் உன்னோட எதிர்காலத்துக்கு நான் பொறுப்பு. அந்த ஆதனுக்கு அழிவுக் காலம் ஸ்டார்ட் ஆகிடுச்சு. அவனுக்கு நீ விசுவாசமா இருந்து என்ன ப்ரியோஜனம்? ப்ரண்ட்னு கூடப் பார்க்காமல் எல்லார் முன்னாடியும் உன்னை அசிங்கப்படுத்திட்டான். அதுக்கு மன்னிப்பும் அவன் கேட்கலைனு எனக்கு நல்லாவே தெரியும். இந்தச் சம்பவத்தால எல்லார் உன்னை எப்படி ட்ரீட் பண்றாங்கனு கொஞ்சம் யோசி. இதுவே எங்க கூட நீ சேர்ந்தா ஆறே மாசத்துல உனக்கு ப்ரோமோஷன் கிடைச்சுடும். அதுக்கு நான் கியாரண்டி.” என்று பாண்டி அடுக்கு அடுக்காக ஆசை வார்த்தைகளைக் கூற, எட்வின் யோசிக்க ஆரம்பித்தான்.

ஆதன் அவனிடம் கத்தியது மட்டுமின்றி அவனிடம் ஒரு மன்னிப்பு கூட இது வரை கேட்கவில்லை. இத்தனை நாள் அவனுக்கு உண்மையாக இருந்து என்ன பயன்? இவர்கள் கூடச் சேர்ந்தால் தான் என்ன? என்று அவன் யோசிக்க, கல்யாண் இன்னும் பேச, எட்வின் முடிவெடுத்து விட்டான்.

“ம் ஓகே!! அவன் என்னை விட உயர்ந்த பதவில இருக்கிறதால தான் அவன் இப்படி நடந்துக்கிட்டான். எல்லாரும் என்னைப் பாவமா பார்க்கிற மாதிரி கேலி பண்றாங்க. இதுக்கு எல்லாம் காரணம் அந்த ஆதன் தான். அவனைப் பழிவாங்க எனக்கு ஒரு சந்தர்ப்பம் நீங்கத் தரீங்க. அந்த ஒரே காரணத்துக்காக நான் உங்ககூட சேர்ந்துக்கிறேன்.” என்று கூறி எட்வின் பாண்டியிடம் கையை நீட்ட, பாண்டியும் அவனது கையைப் பற்றிக் குலுக்கினான்.

~~~~~~~~~~

அன்று ஞாயிற்றுக் கிழமை, சாத்விகா அவளது வீட்டில் வேலைப் பார்த்துக் கொண்டிருக்க அவளது வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது. சற்று நேரத்திற்கு முன்பு தான் ஆதன் அவளை அழைத்து அவளது வீட்டிற்கு வருவதாகக் கூறியிருந்தான். அவன் தான் வந்திருப்பானோ என்று ஆர்வமாகப் போய் கதவைத் திறக்க, வெளியே நின்றிருந்தவரைப் பார்த்து ஆச்சரியமாகப் பார்த்தாள்.

“இங்க என்ன பண்றீங்க?” என்று அவள் அலட்சியமாகக் கேட்க,

“முதல்ல வந்தவங்களை உள்ள விடனும்னு தெரியாதா?” என்று கோபமாகக் கேட்டார் சாத்விகாவின் அப்பா ரமேஷ்.

“ஊஃப், பொண்டாட்டிக்கும் புருஷனுக்கும் எதுல ஒற்றுமை இருக்கோ இல்லையோ இதுல நல்லா ஒற்றுமை இருக்கு.” என்று அவள் கூற,

“ஏய் என்ன சொல்ற நீ? மல்லிகா இங்க வந்திருக்க மாட்டாளே!!” என்று அவர் கூற,

“ப்ச் உங்களோட முன்னால் மனைவி.” என்று அவள் கூற,

“ஏய் அவளைப் பத்தி என்கிட்ட பேசாத!! அப்புறம் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது. முதல்ல வழியை விடு.” என்று அவர் கடுமையாகக் கூற,

“இது என்னோட வீடு உங்களை எல்லாம் உள்ள விட முடியாது. அப்புறம் இந்த அதிகாரம் பண்ற வேலை எல்லாம் என்கிட்ட வேண்டாம். முதல்ல வந்த விஷயத்தை சொன்னா நல்லா இருக்கும். எனக்கு ஆயிரத்து எட்டு வேலை இருக்கு.” என்று அவள் அப்போதும் அலட்சியமாகக் கூற,

“அப்படியே அவளோட அம்மா மாதிரி சை!! எல்லாம் என் தலை எழுத்து.” என்று அவர் கூற, அவள் கையைக் கட்டிக் கொண்டு அவரைப் பார்த்து நிற்க, அவரே தொடர்ந்தார்,

“உன்னைப் பொண்ணு பார்க்க நாளைக்கு வராங்க. மாப்பிள்ளை ஐடில வேலைப் பார்க்கிறார். ரொம்ப நல்லவர், லட்சக்கணக்குல சம்பளமும் வாங்குறார். ஒழுங்கா நாளைக்குப் பொண்ணா லட்சணமா தயாராகி இரு. அப்புறம் இன்னொரு விஷயம் நீ வேலைனு ஒரு கருமத்தைப் பண்ணிட்டு இருக்கியே அதை அப்படியே மூடிடு. அதனால நயா பைசாக்கு ப்ரியோஜனம் இல்லை….” என்று அவர் பேசிக் கொண்டே போக, கேட்டுக் கொண்டிருந்த சாத்விகாவிற்கு இரத்தம் கொதித்தது. அவளது தொழிலை அவள் மிகுந்த ஈடுபாட்டுடன் அதே போல் விரும்பி செய்கிறாள். அவள் பணத்தைப் பெரிய விஷயமாக இன்று வரை நினைத்தது இல்லை. இப்போது இவர் இப்படிப் பேசவும் அவளுக்குப் பயங்கர கோபம் வந்துவிட்டது.

“அதைச் சொல்ல நீங்க யார்? நான் என்ன வேணாலும் பண்ணுவேன். இதைப் பண்ணு அதைப் பண்ணுனு சொல்ல உங்களுக்கு எந்த ரைட்ஸூம் இல்லை. அப்புறம் எனக்கு மாப்பிள்ளை பார்க்க நீங்க யார்? நான் கேட்டேனா எனக்குக் கல்யாணம் பண்ணி வைங்கனு? ஒழுங்கா இங்கயிருந்து போயிடுங்க இல்லாட்டி அசிங்கப்பட்டு போவீங்க!!” என்று அவள் மிகக் கடுமையாகக் கூற,

“அப்படியே அம்மா புத்தி!! அவளோட பொண்ணு அவளை மாதிரி ராங்கியா தான இருக்கும். உனக்குப் போய் ஒரு நல்லது பண்ணனும்னு நினைச்சேன்ல என்னைச் சொல்லனும். இனி இந்தப் பக்கம் வந்தால் என்னை என்னனு கேள்.” என்று தலையில் அடித்துக் கொண்டு செல்ல, சரியாக ஆதன் உள்ளே வந்தான்.

சாத்விகா அவனை அப்போது அங்கு எதிர்பார்க்காததால் திகைப்பாக அவனைப் பார்த்தான். அவளது முக பாவனையே அவனுக்கு ஏதோ தப்பாக நடந்திருப்பதுப் புரிய,

“நான் வேணா போயிட்டு அப்புறம் வரவா?” என்று அவன் கேட்க,

“இல்லை நிவாஸ் அதெல்லாம் ஒன்னுமில்லை. நீங்க உள்ள வாங்க.” என்று அவள் கூறி அவனை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.

அவனை சாய்விருக்கையில் அமர வைத்து உள்ளே சென்று தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள்.

“சாரி நான் தப்பான டைம்ல வந்துட்டேன்னா?” என்று அவன் கேட்க,

“அதெல்லாம் ஒன்னுமில்லை நிவாஸ்.” என்று அவள் கூற,

“வந்தது யார் சாத்விகா? என்கிட்ட சொல்லலாம்னா சொல்லலாம்.” என்று அவன் கூற,

“உங்ககிட்ட சொல்றதுக்கு என்ன நிவாஸ்!! வந்தது என்னோட அப்பா மிஸ்டர்.ரமேஷ்” என்று அவள் கூற, அதிர்ந்து பார்த்தான் ஆதன்.

“அப்பாகிட்ட ஏன் இப்படிப் பேசுனானு யோசிக்கிறீங்களா?” என்று சரியாக சாத்விகா கேட்க, ஆதன் தலையசைத்தான்.

“ப்ச் அது ஒரு பெரிய கதை நிவாஸ். என்னோட அப்பாவும் அம்மாவும் ஒரே காலேஜ்ல தான் படிச்சாங்க. இரண்டு பேரும் பயங்கரமா காதலிச்சாங்க. காலேஜ் முடிச்சதும் அம்மாவுக்கு வீட்டுல மாப்பிள்ளைப் பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. அதனால இரண்டு பேர் வீட்டுலயும் அவங்க காதலைப் பத்திச் சொன்னாங்க. ஆனால் இரண்டு பேர் வீட்டுலயும் ஒத்துக்கவே இல்லை. அதனால் வீட்டை விட்டு வெளியேறி அவங்களை மீறி கல்யாணமும் பண்ணிட்டாங்க. இரண்டு மாசத்துக்கு எல்லாம் நல்லபடியா தான் போயிட்டு இருந்துருக்கு!! நகமும் சதையுமா தான் இரண்டு பேரும் இருந்துருக்காங்க. அப்போ அப்பா மட்டும் தான் வேலைக்குப் போயிட்டு இருந்தார். திடிர்னு ஒரு நாள் அம்மாவுக்கு அவங்க கல்யாணத்துக்கு முன்னாடி அப்ளை பண்ண வேலை கிடைச்சுருக்கு. அதை அப்பாகிட்ட சொல்ல, அப்பா அம்மாகிட்ட வேலைக்குப் போக வேண்டாம்னு சொல்ல, அங்கப் பிரச்சனை ஆரம்பிச்சது. அம்மா அப்பாவை மீறி வேலைக்குப் போக, அப்பா அம்மாகிட்ட சண்டை போட, கோச்சுகிட்டு அம்மா அவங்க அம்மா வீட்டுக்குப் போயிட்டாங்க. இதைச் சாக்கா வைச்சு அப்பாவோட அம்மா, அப்பா, தங்கச்சி எல்லாம் அப்பாவை ஏத்துகிற மாதிரி வந்து அவர்கிட்ட பேசி அவரை ப்ரைன் வாஷ் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. அம்மாவோட அம்மாவும் அப்பாவும் அம்மாவுக்கு எவ்ளோவோ புத்திமதி சொன்னாங்க!! ஆனால் அம்மா அவங்க பேச்சை கேட்கவே இல்லை. அம்மா, அப்பா வந்து மன்னிப்பு கேட்கிற வரைக்கும் அவர்கிட்ட போகவே முடியாதுனு சொல்லிட்டாங்க. பாட்டியும் தாத்தாவும் அப்பாகிட்ட பேசுனதுக்கு அவர் தான் சொல்றதை கேட்கிறதா இருந்தா மட்டும் உங்கப் பொண்ணு இந்த வீட்டுக்கு வரட்டும் இல்லாட்டி நீங்களே வைச்சுக்கோங்கனு சொல்லிட்டார். இதைக் கேள்விப்பட்ட அம்மா அவருக்கு அவ்ளோ கொழுப்பு இருந்தா எனக்கு அதுக்கு மேல இருக்கும்னு அவங்க அப்பா வீட்டுக்குப் போகவே இல்லை. அம்மா பேசாமல் வேலைக்குப் போயிட்டு வந்துட்டு இருந்தாங்க. அப்போ தான் ஒரு நாள் வேலைக்குக் கிளம்பிட்டு இருக்கும் போது மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க. ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போய் பார்த்த போது தான் அவங்க ப்ரெக்னென்ட்டா இருக்கிறது தெரிஞ்சுருக்கு. உடனே பாட்டியும் தாத்தாவும் அப்பாவுக்குத் தகவல் சொல்ல, அவரும் எல்லாத்தையும் மறந்து வந்து அம்மாகிட்ட பேசி வீட்டுக்குக் கூப்பிட்டு போய்ட்டார். ஆனால் இப்போ அப்பா அவங்க குடும்பத்தோட இருக்க, அவங்களோட அம்மாவுக்கு சுத்தமா ஒத்து போகவே இல்லை. அம்மா பத்தித் தெரிஞ்சு அவங்களும் அம்மாவை வம்பிழுக்க, அம்மா அதனால அப்பாகிட்ட சண்டைப் போட, திரும்பவும் பிரச்சனை பெரியதாகி அம்மா மீண்டும் பாட்டி வீட்டுக்கு வந்துட்டாங்க. அப்பாவும் அம்மாவை வந்து பார்க்கவே இல்லை. அப்போ தான் அவங்க வேலைக்குப் போற இடத்துல மிஸ்டர். கோபால் அறிமுகமானது. அவர் அம்மாகிட்ட நட்பா பழக, அதைப் பார்த்த அப்பா அவங்க இரண்டு பேரையும் இனைச்சு தப்பா பேச, அம்மா இனி நீ எனக்குத் தேவையில்லைனு டைவர்ஸ் அப்ளை பண்ணிட்டாங்க. அப்பாவும் இது தான் சாக்குனு டைவர்ஸ்கு ஒத்துக்கிட்டார். அது மட்டுமில்லாம நான் பிறந்த போது அவர் வந்து பார்க்கவே இல்லை. அதே மாதிரி நான் பிறந்த இரண்டாவது மாசத்துலயே அவரோட மாமா பொண்ண கல்யாணம் பண்ணிகிட்டார். அவர் கல்யாணம் பண்ண ஒரே காரணத்திற்காக அம்மாவும் போட்டிக்கு மிஸ்டர். கோபாலையே கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. அம்மாவோட செயல் பாட்டியையும் தாத்தாவையும் ரொம்பவே பாதிச்சுடுச்சு. அதுக்கு அப்புறம் அவங்க அம்மாகிட்ட பேசவே இல்லை. அம்மாவுக்கு என்னை வளர்க்கப் பிடிக்கலை. அதனால பாட்டிக்கிட்டயும் தாத்தாகிட்டயும் உங்க சொத்து எதுவும் வேண்டாம். அதுக்கு பதிலா நீங்களே இவளை வளர்த்துருங்கனு சொல்லிட்டு என்னை விட்டுட்டு போயிட்டாங்க. பாட்டியும் தாத்தாவும் தான் என்னை வளர்த்தாங்க. என்னோட நேரம் நான் காலேஜ் செகண்ட் யியர் படிக்கும் போது இரண்டு பேரும் ஒரு ஆக்சிடெண்ட்ல இறந்துட்டாங்க. இத்தனை வருஷம் கண்டுக்காதவங்க இப்போ என்னமோ புதுசா வந்து எனக்குக் கல்யாணத்துக்கு மாப்பிள்ளை பார்க்கிறாங்களாம் மாப்பிள்ளை!!” என்று அவள் கடுப்பாகக் கூற, ஆதனுக்கு அவளை நினைத்து பெருமையாகவும் அதே சமயம் வேதனையாகவும் இருந்தது.

அவளை வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியாகப் பார்த்துக் கொள்ள வேண்டுமென மனதில் நினைத்துக் கொள்ள, ஒரு நொடி அதிர்ந்து விட்டான் அவனது எண்ணத்தை நினைத்து. அவனுக்கு சாத்விகாவை பிடிக்கும். அவள் மேல் ஈர்ப்பு இருந்தது என்னமோ உண்மை. ஆனால் அது காதல் என்று எண்ணவில்லை. இப்போது அவளது கடந்தகாலத்தைக் கேட்டு விட்டு அவள் இனி சந்தோஷமாக இருக்க வேண்டுமென எண்ணியதிலே அவனுக்குப் புரிந்து விட்டது அவன் அவளைக் காதலிக்கிறான் என்று. அவனது காதலை சாத்விகா ஏற்றுக் கொள்வாளா!!

Advertisement