Advertisement

ஆதன் எட்வினை திட்டியதும் அவன் அவனது வேலையைப் பார்க்கச் சென்று விட, எட்வினுக்கு எல்லோர் முன்பும் திட்டியது ஒரு மாதிரியாக இருந்தாலும் இனி இது போல் நடக்கக் கூடாதென அவன் ட்ராயிங் ஆர்ட்டிஸ்ட்டை கையோடு கூட்டிட்டு வரச் சென்று விட்டான்.

ஆதனின் காவல் நிலையத்தில் வேலைப் பார்க்கும் மற்றொரு ஆய்வாளர் தான் தியாகு. அவர் கல்யாணிற்கு வேண்டியவர். ஆதன் ரம்யாவின் வழக்கை எடுத்ததும் இவருக்கு அழைத்துத் தான் கல்யாண் விவரத்தைக் கேட்டான். ஆனால் ஆதன் யாரையும் இந்த வழக்கில் ஈடுபடுத்தவில்லை. அதனால் தியாகுவிற்கு எதுவும் தெரியவில்லை. இப்போது இந்தப் பிரச்சனை கண்டிப்பாக கல்யாணிற்கு ஏதாவது ஒரு விதத்தில் உதவும் என்று எண்ணி உடனே கல்யாணிற்கு அழைத்து நடந்ததை ஒன்று விடாமல் விவரமாகக் கூற, ஏற்கனவே ஏதாவது கிடைக்குமா என்று இருந்து கல்யாணிற்கு இந்த சம்பவம் பெரிய பரிசாக இருக்க, எட்வினை ஆதனிற்கு எதிராகத் திருப்ப என்ன செய்ய முடியுமென யோசித்தான்.

“தியாகு, இதை இப்படியே விடக் கூடாது. இந்தச் சம்பவத்தை நமக்குச் சாதகமாக யூஸ் பண்ணி எட்வினை ஆதனுக்கு எதிரா திருப்ப என்ன செய்ய முடியுமோ எல்லாத்தையும் செய். உனக்கும் எதுவுமாகம நான் பார்த்துக்கிறேன்.” என்று கல்யாண் கூற,

“சார் நீங்க எதுவும் கவலைப்படாதீங்க. எல்லாத்தையும் நான் பார்த்திக்கிறேன். கூடிய சீக்கிரம் நல்ல செய்தியோட உங்களைக் கூப்பிடுறேன்.” என்று அவர் கைப்பேசியை வைத்து விட்டு எட்வினிடம் பேசும் சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தார்.

எட்வின் கையோடு கூட்டிட்டு வந்த ட்ராயிங் ஆர்டிஸ்ட் உதவியுடன் சாமிக்கண்ணு கூற கூற அவர் வரைய, கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்தில் ஒருவனது புகைப்படத்தை வரைந்து விட்டனர். எட்வின் உடனே சென்று ஆதனை அழைத்து வர,

“சாமிக்கண்ணு ஒருத்தனை மட்டும் தான் பார்த்தியா?”

“ஆமா சார். இவன் ஒருத்தன் முகம் தான் ஞாபகத்துல இருக்கு. மத்தவங்க யார் முகமும் சரியா ஞாபகத்துல இல்லை சார்.” என்று அவன் கூற,

“தாங்க்ஸ் சார்.” என்று ஆதன் ட்ராயிங் ஆர்ட்டிஸ்ட்யிடம் கூறியவன் எட்வினைப் பார்த்து,”இவரை அனுப்பி வைச்சுடுங்க.” என்று கூறிவிட்டு அந்தப் படத்தைக் கையோடு எடுத்துக் கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டான்.

எட்வினும் அவன் கூறியபடி செய்து விட்டு அவனது இருக்கையில் வந்து அமர, அவனிடம் பேசும் சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்த தியாகு மெதுவாக அவனிடம் வந்தார்.

“எட்வின் ஆதன் சார் சொன்ன வேலையை முடிச்சுட்டியா?”

“ம் முடிஞ்சது.”

“ப்ச் இருந்தாலும் ஆதன் சார் இப்படிப் பண்ணிருக்கக் கூடாது. எல்லார் முன்னாடியும் உன்னை இப்படித் திட்டிட்டார். நீ போனதுக்கு அப்புறம் எல்லாரும் ஒரு மாதிரியா பேச ஆரம்பிச்சுட்டாங்க. நீ என்ன எப்பவும் தப்புப் பண்ணிட்டேவா இருக்க? என்னமோ உங்க அப்பாவுக்கு உடம்புச் சரியில்லை, அதனால உன்னால செய்ய முடியாமல் போயிடுச்சு. சரி விடு நாம பேசி என்ன ப்ரியோஜனம். நீ வருத்தப்படாத எட்வின், அவர் ஏதாவது கோபத்துல சொல்லிருப்பார். நீ வேணா பார் தனியா உன்கிட்ட மன்னிப்பு கேட்பார்.” என்று எட்வினுக்கு சாதகமாகப் பேசுவது போல் பேச,

“என்ன தியாகு சார் திட்டுறது மட்டும் எல்லார் முன்னாடியும் திட்டிட்டு மன்னிப்பு மட்டும் தனியா கேட்டால் நல்லாவா இருக்கும்? இதுவே எனக்கு இப்படி நடந்துருந்தா அவன் கூட அப்படி ஒன்னும் மானங்கெட்டு நண்பனா இருக்க வேண்டிய அவசியமே இல்லைனு அவனை அத்து விட்டுருப்பேன்.” என்று இன்னொருவர் கூற,

“அட நீ என்ன இப்படிப் பேசுற!! அப்புறம் நாம தூண்டி விட்டது மாதிரியாகிடும்!! நாம எட்வின் நல்லதுக்கு தான் சொல்றோம், ஆனால் ஏதோ ஆதன் சார் மேல தப்புச் சொல்றது போல ஆகிடக் கூடாது. ஏன் எட்வினே அப்படி நினைக்க சான்ஸ் இருக்கு. ஆதன் சார் இப்போ ஏ.சி.பி அதனால் அவர் கை ஓங்கியிருக்கு. நாம எல்லாரும் சாதாரண அதுவும் அவருக்கு கீழ வேலைப் பார்க்கிற இன்ஸ்பெக்டர். எட்வின் அவரை பகைச்சுக்குவானா என்ன? வாங்க நம்ம வேலையைப் போய் பார்ப்போம்.” என்று தியாகு கூறி இன்னொரு வரையும் அவருடன் அழைத்துச் சென்று விட, எட்வினுக்கு பலத்த யோசனை அவர்கள் சென்றதும்.

அதுவரை ஆதன் ஏதோ கோபத்தில் இப்படிச் செய்துவிட்டான் என்று மனதைத் தேற்றிக் கொண்டிருந்தவன் தியாகு வந்து பேசவும் இப்படி எல்லோர் முன்பும் பேசு பொருள் ஆகி விட்டோமே என்று மிகுந்த வருத்தப்பட்டான் எட்வின். தியாகு கூறுவது போல் ஆதன் ஏ.சி.பி.யாக இருந்தால் அவன் என்ன பெரியவனா!! நண்பன் என்று கருதியிருக்க வேண்டாம், குறைந்தபட்சம் சக ஊழியராகவாவது நினைத்து இருக்கலாம் என்று மிகவும் வருத்தப்பட்டான். சுத்தமாக வேலை செய்யும் எண்ணமே இல்லை. விடுப்பும் எடுக்க முடியாது. கஷ்டப்பட நேரத்தைக் கடத்தியவன் சரியாக அவனது வேலை முடியும் நேரம் அனைவர் முன்பும் வீட்டிற்குக் கிளம்பி விட்டான்.

~~~~~~~~~~

புகைப்படத்தை எடுத்துக் கொண்டு சென்ற ஆதன், செல்வத்தை ஜீப்பை எடுக்கக் கூறி அவன் சென்ற இடம் ஒரு பழைய தொழில் நடக்காத ஃபேக்ட்டரி.

“செல்வம் நீங்க இங்கேயே இருங்க.” என்று கூறிவிட்டு ஆதன் உள்ளே சென்றான். செல்வத்திற்கு ஆதன் ஏன் அங்கு வந்தான் என்று புரியவில்லை. இருந்தாலும் அவன் எது செய்தாலும் கண்டிப்பாக அதற்கு ஒரு காரணமிருக்கும் என்று அமைதியாக இருந்தார்.

உள்ளே சென்ற ஆதன் சற்று தூரம் செல்ல, அங்கு இரண்டு மூன்று அமர்ந்திருந்தார்கள். அதிலிருந்த ஒருவன் ஆதனைப் பார்த்ததும் வேகமாக அவனிடம் ஓடி வர, சற்று தூரம் தள்ளிச் சென்று,

“மாசாணி, இந்தப் படத்தை நல்லா பார்த்துக்கோ!! இதுல இருக்கிறவன் ஒரு கொலை கேஸ்ல சம்பந்தப்பட்டிருக்கான். எனக்கு இவனைப் பத்தி டீடெய்ல்ஸ சீக்கிரம் கண்டுபிடிச்சு சொல்லு.” என்று ஆதன் கூற,

“தலை நீங்க சொன்னால் செய்யாமல் இருப்பேனா? சீக்கிரம் நல்ல செய்தியோட உங்களைச் சந்திக்கிறேன் தலை.” என்று அவன் கூற, ஆதன் அவனது தோளில் ஒரு தட்டு தட்டிவிட்டு அங்கிருந்து சென்றான்.

மாசாணி, ஆதன் மதுரையில் வேலைப் பார்த்த போது அந்த மாவட்டத்தின் பெரிய ரவுடியின் அல்லக்கையாக இருந்தவன். ஆதன் அங்கு போஸ்டிங் போனதும் அந்த ரவுடியை பல சந்தர்ப்பத்திற்குப் பிறகு என்கவுன்டரில் போட்டுத் தள்ளினான். அந்த ரவுடியுடன் கூட இருந்த சிலர் தப்பித்துப் போக, சிலரை உள்ளத் தூக்கி வைக்கும் போது தான் மாசாணியை சந்தித்தான் ஆதன். அவனுக்கு அப்போது வெறும் பத்தொன்பது வயது தான். அவனது வயதைக் கருத்தில் கொண்டு ஆதன் அவனிடம் பதமாகப் பேசி அவனுக்குச் சென்னையில் தனது நண்பர்கள் மூலம் நல்ல வேலையில் சேர்த்து விட்டான். மாசாணி என்ன தான் மனம் மாறினாலும் அந்த ரவுடியிடம் இருந்து தப்பித்துச் சென்றவர்களில் சிலர் சென்னையில் மாசாணியை பார்த்து விட்டு அவனை வற்புறுத்தி தங்களுடன் சேர்த்துக் கொள்ள, அவன் ஆதனிடம் வந்து அதைக் கூற,

“இங்கப் பார் மாசாணி நீ மாறனும்னு நினைச்சாலும் இவங்க விட மாட்டாங்க போல!! சரி நீ கவலைப்படாத, அவங்க கூட சேர்ந்துக்கோ! ஆனால் அவங்க ஏதாவது தப்பு செஞ்சா எனக்குச் சொல்லிடு. மத்ததை நான் பார்த்துக்கிறேன்.” என்று ஆதன் கூறி மாசாணியை அவனது இன்ஃபார்மராக மாற்றி விட்டான்.

~~~~~~~~~~

சாத்விகா, பிரபு மற்றும் ஜெசிக்கா உதவியுடன் ரம்யாவின் மடிக்கணினியிலிருந்த கோப்பையில் போட்டிருந்த கடவுச்சொல்லை வெற்றிகரமாகத் தகர்த்து விட்டாள். ஆனால் அதைத் திறந்து பார்க்க அவளும் செய்ய வில்லை மற்றவர்களையும் விடவில்லை. ஆதன் வந்து பார்த்துக் கொள்ளட்டும் என்று அப்படியே விட்டுவிட்டு தனியாகச் சென்று ஆதனுக்கு கைப்பேசியில் அழைத்தாள்.

ஆதன் அப்போது தான் எட்வினை எல்லோர் முன்பும் திட்டியிருந்தான். அதனால் அவள் அழைத்த போது அவனால் எடுக்க முடியவில்லை. அதன் பின்னரும் அவனுக்கு வேலை இருந்து கொண்டே இருக்க, அவன் கைப்பேசியைப் பார்க்கவே இல்லை.

சரியாக மாசாணியிடம் பேசிவிட்டு திரும்பி வரும் போது தான் அவனது கைப்பேசியை எடுத்துப் பார்த்தான்.

“செல்வம், என்னை சாத்விகா வீட்டுல இறக்கி விட்டுட்டு நீங்க கிளம்புங்க. நான் அங்கிருந்து வீட்டுக்குப் போய்க்கிறேன்.” என்று ஆதன் கூற, செல்வமும் அவன் கூறியது போல் அவனை சாத்விகா வீட்டில் இறக்கி விட்டுச் சென்றார்.

ஆதன் இறங்கி நேராக மாடிக்குச் சென்றான். அப்போது அவர்கள் அவர்களுக்கு வந்த வழக்கு பற்றிப் பேசிக் கொண்டிருக்க, சக்தி தான் முதலில் ஆதனை பார்த்தாள்.

“வாங்க சார் வாங்க வாங்க.” என்று அவள் அழைக்க, ஆதனும் உள்ளே வந்தான்.

“நிவாஸ் உங்களுக்குக் கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை. காலைல கூப்பிட்டேன், திருப்பியும் கூப்பிட்டு என்னன்னு கேட்டீங்களா நீங்க?” என்று அவள் கேட்க,

“சாரி மேடம், கொஞ்சம் பிஸியா இருந்துட்டேன். இப்போ தான் பார்த்தேன், அதான் உடனே வந்துட்டேன் இங்க.” என்று அவன் கூற,

“ஏதோ சொல்றீங்க நான் கேட்டுக்கிறேன்.” என்று அவள் கூற, இவர்கள் பேசுவதைப் பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் திகைப்பாகத் தான் பார்த்தனர் என்ன இவள் இப்படிப் பேசுகிறாள் என்று. ஆனால் ஆதன் அதனைச் சாதாரணமாக எடுத்துக் கொண்டு பதிலளிக்க, சுவாரஸ்யமாகப் பார்க்க ஆரம்பித்தனர்.

“சரிங்க மேடம் இப்போவாவது சொல்றீங்களா எதுக்குக் கூப்பிட்டீங்கனு?” என்று அவன் கேட்க,

“ரம்யா லேப்ல இருந்த ஃபைல்லை ஓப்பன் பண்ணியாச்சு நிவாஸ்.” என்று அவள் கூற,

“வாவ் அந்த வீடியோல என்ன இருந்தது?” என்று அவன் ஆர்வமாகக் கேட்க,

“நான் அதை ஓப்பன் பண்ணி பார்க்கலை நிவாஸ். நீங்க வந்ததுக்கு அப்புறம் பார்த்துக்கலாம்னு அப்படியே விட்டுட்டோம். நாங்க ஓப்பன் பண்ணி பார்க்கிறது நல்லா இருக்காது.” என்று அவள் கூற, அவள் மேல் மிகுந்த மரியாதையை ஏற்படுத்தியது நிவாஸிற்கு.

“ம் இப்போ பார்க்கலாம். லேப்ப கொண்டு வா.” என்று அவன் கூற,

“அதுக்கு முன்னாடி உங்களுக்குக் குடிக்க ஏதாவது கொண்டு வரேன்.” என்று அவள் கீழே செல்ல போக, ஆதன் வேகமாக அவளிடம்,”நானும் வரேன்.” என்று கூறி அவள் பின்னால் அவளது வீட்டிற்குச் சென்றான். மற்றவர்கள் இதைச் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருக்க, ஜெசிக்கா,

“இது சரியா வருமா? சாத்விகா ஃபேமலி பத்தித் தெரிஞ்சா ஆதன் சார் அப்போவும் இதே போல இருப்பாரா?” என்று அவள் கேட்க,

“ப்ச் என்ன ஜெசி இப்படிப் பேசுற? எனக்கு நம்பிக்கை இருக்கு, கண்டிப்பா ஆதன் சார் அதைப் பெரிய விஷயமா எடுத்துக்க மாட்டார்.” என்று சக்தி கூற,

“அவர் எடுத்துக்க மாட்டார். ஆனால் அவரோட குடும்பமும் அப்படியே இருப்பாங்களா?” என்று ரவி கேட்க, அதற்கு சக்தி ஏதோ கூற வர, அவளைத் தடுத்து பிரபு,

“முதல்ல அவங்க இரண்டு பேரும் எந்த மாதிரி எண்ணத்துல இருக்காங்கனு நமக்கு இன்னும் கண்ஃபார்ம் ஆகலை!! ஸோ அதுக்குள்ள இவ்ளோ டிஸ்கஷன் வேண்டாம். சரியா!! நாம கிளம்பலாம்.” என்று கூற, மற்றவர்களும் அதை ஏற்றுக் கொண்டு அவர்களது உடைமைகளை எடுத்துக் கொண்டு ரம்யாவின் மடிக்கணினியையும் எடுத்துக் கொண்டு கீழே வந்தனர்.

கீழே வந்த சாத்விகா, ஆதனை கூடத்திலிருக்கும் சாய்விருக்கையில் அமர வைத்து விட்டு சமையலறை செல்ல, சரியாக சக்தி உள்ளே வந்து மடிக்கணினியை அங்கிருந்த மேஜையில் வைத்து விட்டு,

“ராக்கி.” என்று அழைத்துக் கொண்டே சமையலறை செல்ல,

“என்ன சக்தி கீழ வந்துட்ட?”

“நாங்க கிளம்புறோம் ராக்கி. லேப்டாப்ப கீழ கொண்டு வந்துட்டேன். நீயும் சாரும் அதுல என்ன இருக்குனு பாருங்க சரியா. எங்களுக்குச் சொல்லாம்னா நாளைக்குச் சொல்லு சரியா.” என்று அவள் கூற, சாத்விகாவிற்கு அது சரியாகப் பட,

“சரி கிட்டி.” என்று கூற, அவள் சாத்விகாவிடமும் ஆதனிடமும் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டாள்.

சாத்விகா இருவருக்கும் காஃபியை எடுத்துக் கொண்டு கூடத்திற்கு வர, ஆதன் அவனது கைப்பேசியைப் பார்த்துக் கொண்டிருந்தவன் இவள் வரவும் கைப்பேசியைப் பக்கத்தில் வைத்துவிட்டு அவள் தந்த கப்பை வாங்கிக் கொண்டான்.

சாத்விகா அவளுடைய கப்பை எடுத்துக் கொண்டு அவனுக்குப் பக்கத்தில் அமர்ந்து மடிக்கணினியைத் திறந்தாள். பின்னர் சாக்லேட் என்று போடப் பட்டிருந்த கோப்பையைத் திறக்க, அதில் ஒரு காணொளி இருந்தது. சாத்விகா அதை அழுத்த, அந்த காணொளி திரையில் ஒளிபரப்பப் பட்டது.

அதை முழுதாகப் பார்த்த இருவரும் அதிர்ந்து விட்டனர். சாத்விகா அதிர்ச்சியாக ஆதனைப் பார்த்து,”என்ன நிவாஸ் இதுல இப்படி இருக்கு?”

“எனக்கும் அதிர்ச்சியா தான் இருக்கு சாத்விகா. நானும் இப்படினு எதிர்பார்க்கலை!!” என்று ஆதன் கூற,

“இப்போ என்ன பண்ண போறீங்க நிவாஸ்?”

“இதை வைச்சு நாம ஒன்னும் பண்ண முடியாது சாத்விகா. இது பொய்னு ஈசியா நிரூபிச்சுடுவாங்க. நமக்கு ஸ்ட்ராங்கான எவிடன்ஸ் வேணும் சாத்விகா.” என்று அவன் கூற, அவளுக்கும் அது நியாயமாகப் பட்டதால் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தால்.

~~~~~~~~~~

பாண்டி கூறியது போல் கல்யாணிற்கு அழைக்க, அவனுக்கு நடுக்கமாகி விட்டது. பாண்டி சாதாரண ஆள் கிடையாது. அவன் சொன்னதைச் செய்யக் கூடியவன். அவனது அழைப்பை எடுக்காமலிருந்தாலும் கண்டிப்பாகப் பாண்டி சும்மா விட மாட்டான். அதனால் பயத்துடன் அவனது அழைப்பை அவன் எடுக்க,

“கல்யாண் எப்போ லேப்டாப் கொண்டு வந்து தர?” என்று எடுத்தவுடனே அவன் கேட்க,

“பாண்டி அது வந்து…” என்று அவன் இழுக்க,

“ப்ச் இப்போ என்ன கருமத்தைப் பண்ணி தொலைச்ச?” என்று கடுப்பாக அவன் கேட்க,

“அது வந்து…” என்று ஆரம்பித்து நேற்று அவன் வீட்டில் நடந்ததைக் கூற, கேட்டுக் கொண்டிருந்த பாண்டிக்கு இரத்தம் அழுத்தமாகியது.

“ஏன்யா நீ எல்லாம் எதுக்கு உயிரோட இருக்க? எந்த வேலையாவது உருப்படியா செய்றியா நீ? அந்த லேப்டாப்ப அவன் தான் எடுத்தான்னு எப்படித் தெரியும் உனக்கு?”

“வீட்டுல வேற எந்த பொருளும் காணாமல் போகலை பாண்டி. கரெக்ட்டா லேப்டாப் மட்டும் மிஸ்ஸிங்.” என்று கல்யாண் கூற,

“ப்ச் உன்கிட்ட டீல் பேசுனதுக்கு நான் அந்த ஆதன்கிட்டயே டீல் பேசிருக்கனும். இந்த கேஸ்ல உறுபடியா ஏதாவது பண்ணிருக்கியா நீ? அந்த லேப்டாப்ப என்கிட்ட அப்பவே கொடுத்திருந்தா இது நடந்துருக்குமா?” என்று அவனைச் சகட்டு மேனிக்குப் பாண்டி திட்ட,

“பாண்டி லேப்டாப்ப அவன் எடுத்தாலும் அவனால அதுல ஒன்னும் கண்டுபிடிக்க முடியாது பாண்டி. என்னை நம்பு.” என்று அவன் கூற,

“உன்னை நம்பி நம்பித் தான் நான் இந்த நிலைமைக்கு வந்திருக்கேன். இனி உன்னை நம்ப போறது இல்லை. நானே கலத்துல இறங்குறேன். வை யா ஃபோனை.” என்று திட்டிவிட்டு பாண்டி வைத்து விட, கல்யாணறிகு மிகுந்த தலையிறக்கமாகியது.

“டேய் ஆதன் அந்தப் பாண்டி பயலுகிட்ட என்னை இப்படித் திட்டு வாங்க வைச்சுட்டள!! உன்னைப் பழி வாங்காமல் நான் விட மாட்டேன் டா.” என்று வாய் விட்டே கல்யாண் கோபத்துடன் கூறினான்.

Advertisement