Advertisement

சாத்விகாவும் ஆதனும் அலமாரிக்குள் நிற்க முடியாமல் நின்று கொண்டிருந்தனர். காரணம் இருவரும் நெருக்கமாக நிற்பது அவர்களுக்குக் கூச்சத்தைத் தந்தது. ஆதனுக்கு கூச்சமாக இருந்தாலும் அவன் ரசித்துக் கொண்டும் நின்றிருந்தான். பத்து நிமிடங்கள் அப்படியே நின்ற சாத்விகா இதற்கு மேல் முடியாதென அலமாரியைத் திறந்து கொண்டு வெளியே வந்து விட்டாள். அப்பொழுது தான் அவளால் நிம்மதியாக மூச்சே விட முடிந்தது.

ஆதன் ஏமாற்றத்துடன் அவனும் வெளியே வந்து மெதுவாக,”என்னாச்சு சாத்விகா?” என்று கேட்க,

அவளுக்கு என்ன பதில் சொல்ல என்று புரியவில்லை. அதனால்,”இல்லை மூச்சு முட்டுது அதான். இப்போ போய் பார்க்கலாம் நிவாஸ்.” என்று கூறி அவள் நகர, ஆதன் அவளது கையைப் பற்றி அவளை நிப்பாட்டி, அவளது இரு தோள் வளைவிலும் அவனது கையை வைத்து,

“சாத்விகா மூச் எதுவும் பேசக் கூடாது. இங்கேயே இரு, நான் போய் பார்த்துட்டு அவங்க தூங்கிட்டா எடுத்துட்டு வரேன். அது வரைக்கும் நீ இங்கேயே இரு. டோன்ட் ஆர்க்யூ.” என்று கூறிவிட்டு ஆதன் செல்ல, சாத்விகா அவனது சொல்லிற்குக் கட்டுப்பட்டு அமைதியாக நின்றாள். மனதிற்குள் மட்டும் ஆதன் எந்த பிரச்சனையுமில்லாமல் மடிக்கணினியை எடுத்துக் கொண்டு வர வேண்டுமென வேண்டுதல் வைத்தாள்.

ஆதன் மெதுவாகக் கதவைத் திறந்து வெளியே வந்தான். வீடே இருட்டாக இருக்க, அவனுக்குச் சுத்தமாக வழி தெரியவில்லை. குருட்டாம்போக்கில் அவன் முன்னேறிச் செல்ல, கல்யாணின் அறை வந்தது. அவர்கள் மட்டுமே வீட்டிலிருப்பதால் அறைக் கதவை மூட மாட்டார்கள். அது ஆதனுக்கு வசதியாக இருக்க, மெதுவாக அறைக்குள் நுழைந்தான். பார்வை வேறு எங்கும் செல்லாமல் அங்கு இருந்த மேஜைக்குச் சென்றது. சக்தி கூறியபடியே பென் ஸ்டான்ட்டை எடுத்து அடியிலிருந்த சாவியை எடுத்து மிக மெதுவாக அலமாரியைத் திறந்தான். இருட்டில் அவனுக்கு எதுவும் தெரியவில்லை. வேறு வழியில்லாமல் அவனது கைப்பேசி ஒளியை உயிர்ப்பித்து அலமாரியில் காட்டினான். அவனுக்கு மடிக்கணினி தெரிய உடனே ஒளியை அமர்த்தி விட்டு மடிக்கணினியை எடுத்துக் கொண்டு மெதுவாக அலமாரியைப் பூட்டிவிட்டு சாவியை எடுத்த இடத்தில் வைத்து விட்டு நகர, குழந்தை மீண்டும் அழ ஆரம்பித்து விட்டது. ஆதன் சட்டென்று வேகமாக ஓடி அறையை விட்டு வெளியே வந்து விட்டான். அப்பொழுது தான் அவனுக்கு மூச்சே வந்தது.

எங்கு மீண்டும் கல்யாணின் மனைவி வந்து விடுவார்களோ என்று பயந்து வேகமாக சாத்விகா இருந்த அறைக்கு வந்து அவளது கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வெளியே வந்து கதவைப் பூட்டி விட்டு இருவரும் நடக்க, அந்தப் பக்கம் ரவுண்ட்ஸ் வந்த காவலாளி இவர்களைப் பார்த்து அவரது விசிலை எடுத்து ஊத, ஆதனுக்கு சாத்விக்காவுக்கும் ஒரு நிமிடம் திடுக்கிட, அடுத்த நொடியே சுதாரித்துக் கொண்டு ஆதன் சாத்விகாவின் கையை இறுக்கமாப் பற்றி வேகமாக ஓடி வந்து அவனது வண்டியை எடுக்க, சாத்விகா பின்னால் அமர, அதி வேகமாக அவன் வண்டி ஓட்டிக் கொண்டு அங்கிருந்து சென்றான்.

~~~~~~~~~~

விசில் சத்தத்தில் எழுந்த கல்யாண் எரிச்சலுடன் பின் பக்கமாக வர, அந்த காவலாளி அவர்களைப் பிடிக்க முடியாமல் போன ஏமாற்றத்துடனும் பதற்றத்துடனும் கல்யாண் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

“என்னயா? எதுக்குயா இப்படித் தூக்கத்தை கெடுக்கிற!!” என்று எரிச்சலாக கல்யாண் கேட்க,

“ஐயா யாரோ திருட்டுப் பசங்க உங்க வீட்டிலிருந்து வெளியே வரதைப் பார்த்தேன். பிடிக்கப் போறதுக்குள்ள அவங்க தப்பிச்சு போயிட்டாங்க.” என்று சொன்னது தான் தாமதம் வேகமாக கல்யாண் வீட்டிற்குள் சென்று அவரது மனைவியையும் எழுப்பி விட்டு வீடு முழுக்க தேட, எந்தப் பொருளும் திருடு போனதுக்கு அறிகுறி இல்லாமல் இருக்க, எல்லாரும் குழம்பிப் போனார்கள்.

“ஒரு வேளை அவங்க வீட்டுக்குள்ள வரலையே என்னமோ!! நான் பார்த்துட்டேன்னு ஓடிட்டாங்களா?” என்று காவலாளி கேட்க, அப்போது தான் கல்யாணின் மனைவிக்கு அந்தச் சத்தம் ஞாபகம் வர,

“என்னங்க நான் பாப்பாவுக்குப் பால் எடுக்க வரும் போது ஏதோ சத்தம் கேட்டது. என்ன சத்தம்னு பார்க்கப் போன அப்போ பாப்பா ரொம்ப அழுதா அதை மறந்துட்டு நான் உள்ளே வந்துட்டேன்.” என்று அவர் கூற, இப்போது கல்யாண மிகுந்த கவனத்துடன் இன்னொரு முறைத் தேட, அப்போது தான் அவர் கண்ணில் பட்டது ரம்யாவின் மடிக்கணினி அங்கு இல்லை என்பதை.

கல்யாணிற்கு தெள்ளத் தெளிவாக விளங்கியது. ஆதன் தான் வந்து மடிக்கணினியை எடுத்துச் சென்றிருக்க வேண்டுமென. ஒன்று அவன் வந்திருக்க வேண்டும் இல்லை என்றால் வேற யார் மூலமாவது இதைச் செய்திருக்க வேண்டும். இப்போது என்ன செய்வதென அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. நாளை பாண்டி கேட்கும் போது ரம்யாவின் மடிக்கணினி ஆதனிடம் இருப்பது தெரியவந்தால்!! அதை நினைக்கும் போதே அவருக்குக் கதி கலங்கியது.

“பச் எல்லாம் அப்படியே தான் இருக்கு. நீங்க போங்க.” என்று காவலாளியிடமும் மனைவியிடமும் கூறிவிட்டு அவரும் படுக்கச் சென்றாலும் அவருக்குத் தீவிர யோசனை. எப்படி ஆதனிற்கு ரம்யாவின் மடிக்கணினி அங்கு இருப்பது தெரியுமென!! என்ன யோசித்தும் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்படியே யோசித்துக் கொண்டிருந்தவன் எப்போது தூங்கினான் என்றே தெரியவில்லை.

~~~~~~~~~~

ஆதனும் சாத்விகாவும் நடுவில் எங்கும் நிப்பாட்டாமல் அதி வேகமாக சாத்விகாவின் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். வண்டியை நிப்பாட்டி இறங்கியதும் தான் இருவருக்கும் ஆசுவாசமாக இருந்தது. வண்டிச் சத்தம் கேட்டு பிரபு,ரவி மற்றும் சக்தி வெளியே வர, அவர்களைப் பார்த்து கட்டை விரலைக் காட்டி போன காரியம் வெற்றி என்பதை அறிவித்தாள் சாத்விகா. மூவருக்கும் அப்போது தான் நிம்மதி. இவர்கள் சென்றது முதல் இருவருக்கும் எதுவும் ஆக கூடாதென வேண்டாத கடவுள் இல்லை.

“சரி லேட்டாகிடுச்சு. நீங்க போய் தூங்குங்க. நான் லேப்டாப்ல என்ன இருக்குன்னு பார்க்கனும். ஸோ நான் வீட்டுக்குப் போறேன்.” என்று ஆதன் கூற,

“நிவாஸ் இது அந்நியாயம்!! உங்களுக்கு எவ்ளோ ஹெல்ப் பண்ணேன். என்னை விட்டுட்டு நீங்க மட்டும் பார்க்கிறேன் சொல்றது நியாயமா? நீங்களே சொல்லுங்க.” என்று சாத்விகா கேட்க, இதுவே வேற யாராவது கேட்டிருந்தால் கண்டிப்பாக ஆதன் இது ரகசியமானது மற்றும் காவல் துறையில் இல்லாதவர்களிடம் காட்ட முடியாது என்று கூறியிருப்பான். ஆனால் கேட்டதோ சாத்விகா. அவனால் மறுக்க முடியவில்லை.

“ஓகே மேல போய் பார்க்கலாம்.” என்று அவன் கூற,

“ஹேய் சூப்பர். நீங்களாம் இங்கேயே தூங்குங்க. இந்த நேரம் வீட்டுக்குப் போக வேண்டாம். நாங்க பார்த்துட்டு வந்துருவோம்.” என்று சாத்விகா கூற,

“ஹேய் இதெல்லாம் ஒரு நேரமா!! எத்தனை தடவை நாங்க இதை விட லேட்டா வீட்டுக்குப் போயிருக்கோம். ஸோ நோ ப்ராப்ளம்.” என்று ரவி கூற,

“ஆமா ராக்கி. நீ யோசிக்க எதுவும் இல்லை. சக்தியை நான் பத்திரமா ட்ராப் பண்ணிடுறேன் போதுமா.” என்று பிரபு கூற,

“ஆமா ராக்கி. நான் வீட்டுக்குப் போறேன். அதான் பிரபு இருக்கான்ல!! எங்களுக்கு எதுவுமில்லை.” என்று சக்தியும் கூற, வேற வழியில்லாமல் அவள் சரியென்று கூற, அவர்கள் மூவரும் ஆதனிடமும் சாத்விகாவிடமும் கூறிவிட்டுக் கிளம்பிச் சென்றனர்.

அவர்கள் கிளம்பியதும் சாத்விகா ஆதனை அவளது இல்லத்தின் உள்ளே அழைத்து வந்தாள்.

“நிவாஸ் எதாவது சாப்பிடுறீங்களா?”

“ம்ஹூம் அதெல்லாம் வேண்டாம். ஒரு காஃபி மட்டும் குடு சாத்விகா.” என்று அவன் கூற, அவளும் சரியெனச் சமையலறை சென்று இருவருக்கும் காஃபி போட்டு எடுத்துக் கொண்டு வந்தாள்.

இருவரும் காஃபி குடித்துக் கொண்டே மடிக்கணினியைத் திறந்து அதைப் பார்க்க ஆரம்பித்தனர். அதில் ஏகப்பட்ட கோப்பைகள்(Files) இருந்தன. ஒவ்வொன்றாகத் திறந்து பார்த்துக் கொண்டிருந்தனர். பார்த்த வரைக்கும் எதிலும் அவர்களுக்குத் தேவையான விவரங்கள் எதுவுமில்லை. அடுத்து ஒரு கோப்பையைத் திறக்க, அதில் சாக்லேட் என்று ஒரு கோப்பை இருந்தது. அதைத் திறக்க முயற்சி செய்த போது அது திறக்கவில்லை. மாறாக அந்த கோப்பையைத் திறக்கக் கடவுச்சொல் கேட்டது.

“என்ன நிவாஸ் பாஸ்வேர்ட் கேட்கிது!!”

“ஆமா சாத்விகா அதான் நானும் யோசிச்சுட்டு இருக்கேன். இந்த மாதிரி பாஸ்வேர்ட் எல்லாம் மூணு முறை தப்பா போட்டால் ஓரேயடியா டெலிட் ஆகிடும்ல!!” என்று அவளிடம் கேட்க,

“ஆமா நிவாஸ், சில பாஸ்வேர்ட் அப்படித் தான் செட் பண்ணிருப்பாங்க. நாம கேர்ஃபுல்லா தான் ஓப்பன் பண்ணனும்.” என்று சாத்விகா கூற, ஆதன் முகத்தில் ஏமாற்றம். அதைப் பார்த்த சாத்விகா அவனது முழங்கையில் லேசாகத் தட்டிக் கொடுத்து,

“நிவாஸ், நம்மகிட்ட இதை க்ராக் பண்ற எக்ஸ்பெர்ட்ஸ் இருக்காங்க!! ஸோ நீங்க கவலையை விடுங்க. நாளைக்கு ஜெசிக்காகிட்ட சொல்லி ஓப்பன் பண்ணச் சொல்லிடலாம் சரியா.” என்று சாத்விகா கூற,

“ம் ஓகே சாத்விகா. அப்போ நான் கிளம்புறேன். ரொம்ப ரொம்ப தாங்க்ஸ் சாத்விகா இன்னைக்கு நீ செஞ்ச வேலைக்கு. கண்டிப்பா வேற யாராவதா இருந்தால் இவ்ளோ துணிச்சலா வருவாங்களானு எனக்குத் தெரியாது.” என்று ஆதன் கூற,

“ப்ச் என்ன நிவாஸ் நமக்குள்ள எதுக்கு தாங்க்ஸ் எல்லாம்.” சட்டென்று சாத்விகா கூற, ஆதன் அவளை அதிர்ச்சியாகப் பார்க்க, அப்போது தான் சாத்விகாவிற்கும் என்ன சொன்னாள் என்பதே புரிய!! ஆதனை பார்க்காமல் வேறு பக்கம் முகத்தைத் திருப்பிக் கொள்ள, ஆதன் சிரித்துக் கொண்டே,

“ஓகே ஓகே!! இனி நமக்குள்ள தாங்க்ஸ் எல்லாம் சொல்லலை சரியா. தாங்க்ஸ் மட்டும் தானா இல்லை சாரியுமா?” என்று அவன் கேலி செய்ய, சாத்விகாவிற்கு முதல் முறை வெட்கம் வந்தது. ஆனால் அதை மறைத்துக் கொண்டு,

“ப்ச் உங்களுக்கு லேட்டாகிடுச்சு. ஸோ கிளம்புங்க நிவாஸ். நாளைக்குப் பார்க்கலாம்.”

“ஓ நாளைக்கும் என்னைப் பார்க்கனுமா ஓகே பார்த்துட்டா போச்சு.” என்று அவன் கூற,

“அய்யோ சார் உங்களுக்கு இந்த ஃபைல் ஓப்பன் பண்ண வேண்டாமா? அப்போ நீங்க இங்க வரனும்ல அதைத் தான் சொன்னேன்.” என்று அவள் கூற, ஆதனிற்கு சிரிப்பு வந்து விட்டது.

“சரிங்க மேடம் நான் வரேன். நாளைக்குச் சந்திப்போம்.” என்று ஒரு மாதிரி கூறிவிட்டு ஆதன் கிளம்பி விட்டான்.

அவன் சென்றதும் சாத்விகாவிற்கு தான் அய்யோ என்று இருந்தது. ஆனாலும் முகத்தில் மட்டும் சிரிப்பு மறையாமல் அப்படியே இருந்தது. அப்படியே உடை மாற்றிக் கொண்டு படுத்து விட்டாள்.

~~~~~~~~~~

அடுத்த நாள் கல்யாண் மிகுந்த கோபத்துடன் ஆதனின் அலுவலகம் வந்தான். ஆதன் எப்போதும் போல அவனது வேலைகளைச் செய்து கொண்டிருந்தவனிடம் அவனது உதவியாளர் வந்து கல்யாண் வந்திருப்பதைக் கூற, ஆதன், கல்யாணிற்கு மடிக்கணினியைத் தான் தான் எடுத்தது தெரிந்திருக்குமோ என்ற சந்தேகத்துடனே வரச் சொன்னான்.

அவனது சந்தேகம் கல்யாண் வந்த வேகத்திலே உறுதியாக, முகத்தில் எதையும் காட்டாமல் அப்படியே அமர்ந்திருந்தான்.

“என்ன மிஸ்டர் ஆதன் எப்போல இருந்து நீங்க போலிஸ்ல இருந்து திருடனா மாறுனீங்க?” என்று கேட்டுக் கொண்டே கல்யாண் அங்குப் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர,

ஆதனோ முகத்தில் எதையும் காட்டாமல் சாதாரணமாக வைத்துக் கொண்டு,”மிஸ்டர் கல்யாண் நீங்க என்ன பேசுறீங்கனு எனக்குச் சுத்தமா புரியலை. கொஞ்சம் தெளிவா பேசுனா நல்லா இருக்கும். எனக்கு நிறைய வேலை இருக்கு.” என்று அவன் கூற,

“திருட மட்டுமில்லாம நல்லா நடிக்கவும் செய்றீங்க ஆதன். இதை நான் உங்ககிட்ட கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை. ஒழுங்கா என் வீட்டுல எடுத்த லேப்டாப்ப என்கிட்ட கொடுத்துருங்க!! இல்லாட்டி நான் கமிஷ்னர்கிட்ட கம்ப்ளைன் பண்ணுவேன்.” என்று கல்யாண் மிரட்ட,

“தாராளமாக நீங்க பண்ணலாம் கல்யாண். ஏனா நான் எந்தத் தப்பும் செய்யலை. உங்க வீடு எங்க இருக்குனு கூட எனக்குத் தெரியாது. இதுல நான் உங்க வீட்டுக்கு வந்து லேப்டாப்ப எடுத்தேன்னு காமெடி பண்ணிட்டு இருக்கீங்க!! எனக்கு கவர்மென்ட் நல்லாவே சம்பளம் தராங்க கல்யாண். அப்படி எனக்கு லேப்டாப் வேணும்னா நானே வாங்கிப்பேன். நான் எதுக்கு உங்க வீட்டுல இருக்கிறதை எடுக்கப் போறேன்?” என்று ஆதன் கேட்க, கல்யாணிற்கு ஆத்திரமாக வந்தது. அது ரம்யாவுடைய மடிக்கணினி என்று அவனிடம் கூறினால் அது எதற்கு உங்கள் வீட்டிலிருந்தது எனக் கேள்வி கேட்பான். என்ன செய்வதெனப் புரியாமல் ஆதனை முறைத்துக் கொண்டே எழுந்து வெளியே சென்று விட்டார்.

அவர் போனதும் யோசித்தான் ஆதன் எப்படி கல்யாணிற்கு தெரிந்தது என்று. நன்றாக யோசிக்கும் போது தான் புரிந்தது அவனுக்கு கல்யாண் வீட்டில் மடிக்கணினியை மட்டும் தான் இவர்கள் எடுத்துக் கொண்டு வந்தார்கள். வேற ஏதாவது பொருள் காணாமல் போயிருந்தால் திருடன் வந்திருப்பான் என்று எண்ணியிருப்பார்கள். அந்த இடத்தில் தான் அவன் தவறு செய்தது அவனுக்கு நன்றாகப் புரிந்தது. இருந்தாலும் கல்யாணால் ஒன்றும் செய்ய முடியாதென இறுமாப்புடன் அவன் வேலையைச் செய்ய ஆரம்பித்தான்.

சிறிது நேரம் கழித்துத் தான் அவனுக்கு எட்வினிடம் படம் வரையும் நபரை வைத்து சாமிக்கண்ணு பார்த்த நபரை வரையச் சொன்னது ஞாபகம் வந்தது. அவன் உடனே தன் கைப்பேசியை எடுத்து எட்வினுக்கு அழைக்க, அவன் எடுக்கவே இல்லை. வேகமாக வெளியே வந்த ஆதன் எட்வின் இருக்கையைப் பார்க்க அங்கு காலி இருக்கையே இருந்தது. அவனது கைப்பேசியும் அங்குள்ள மேஜையில் இருக்க, சரி ஏதாவது வேலையாகப் போயிருப்பான் என்று எண்ணி அவன் இன்னும் கொஞ்ச தூரம் நடந்து வர, அங்கு எட்வின் மற்ற காவலர்களுடன் பேசிச் சிரித்துக் கொண்டிருப்பது தெரிந்தது. அதைப் பார்த்ததும் அவனுக்கு மிகுந்த கோபம்.

ஆதன் இருந்த இடத்திலிருந்தே எட்வின் என்று கத்தி அழைக்க, அங்கிருந்தவர்கள் அனைவரும் ஒரு நொடி அமைதியாகி விட, அந்த இடமே மயான அமைதியாக இருந்தது.

எட்வின் வேகமாக அவனிடம் வந்து,”சொல்லுங்க சார்.” என்று அவன் கூற,

“என்ன சொல்லுங்க சார்? நான் சொன்ன விஷயம் முடிச்சுட்டீங்களா இல்லையா?” என்று ஆதன் கேட்க,

“சார் எந்த வேலை?” என்று எட்வின் கேட்க,

“ப்ச் ட்ராயிங் ஆர்டிஸ்ட் வரச் சொல்லியிருந்தேன்னே!!” என்று ஆதன் கூற,

“சாரி சார். அப்பாவுக்கு உடம்பு சரியில்லை. ஸோ ஹாஸ்பிட்டல் போயிட்டேன் சார். இன்னைக்கு வரச் சொல்லிடுறேன் சார்.” என்று எட்வின் கூற,

ஆதனிற்கு எங்கு இருந்து அவ்ளோ கோபம் வந்ததோ!! சுற்றுப்புறத்தையும் மறந்து எட்வினை அனைவர் முன்பும் திட்ட ஆரம்பித்து விட்டான்.

“உங்ககிட்ட கொடுத்தது ஒரு வேலை தான் எட்வின். அதைக் கூட உங்களால ஒழுங்கா செய்ய முடியாதா!!! சரி அப்பாவை ஹாஸ்பிட்டல் கூப்பிட்டுப் போனது எல்லாம் ஓகே தான். போயிட்டு வந்து என்ன பண்ணுனீங்க எட்வின்?? பேசிச் சிரிச்சுட்டு இருக்கீங்க!! உங்களுக்குக் கொடுத்த வேலையை உங்களால பார்க்க முடியாதுனா எதுக்கு நான் சொல்லும் போது பண்ணிடுறேன்னு சொன்னீங்க? அப்போவே முடியாதுனு சொல்லிருந்தா நானே அந்த வேலையையும் செஞ்சுருப்பேன்னே!! இல்லை எனக்குப் புரியலை! கொடுத்தது ஒரு வேலை தான். அதைக் கூடச் செய்ய முடியலைனா என்ன அர்த்தம்? இல்லாட்டி இவன் நம்ம ப்ரண்ட் தான! நம்மை என்ன சொல்லிடுவான்னு ஒரு மெத்தனமா? அப்படியிருந்தா அந்த நினைப்ப தூக்கிக் குப்பையில போட்டுருங்க எட்வின். ப்ரண்ட் எல்லாம் வெளில மட்டும் தான். வேலைல நான் யாருக்கும் சலுகை எல்லாம் பார்க்க மாட்டேன். ஒழுங்கா இருக்கிறதுனா இருங்க!! இல்லையா லீவ் போட்டுட்டு என்ன வேணாலும் பண்ணுங்க.” என்று சத்தம் போட்டு விட்டு ஆதன் சென்று விட, எட்வினிற்கு மிகுந்த அவமானமாகப் போயிற்று. சத்தியமாக ஆதன் இப்படி எல்லோர் முன்பும் திட்டுவான் என்று எதிர்பார்க்கவே இல்லை. அவன் செய்தது தவறு தான். அதைத் தனியாகக் கூப்பிட்டுச் சொல்லிருந்தால் என்ன திட்டியிருந்தால் கூட எட்வின் ஒன்றும் நினைத்திருக்க மாட்டான். ஆனால் இப்படி எல்லாம் முன்பும் திட்டியதும் அவனை எல்லாரும் பாவமாகப் பார்ப்பதைப் பார்த்து ஆதன் மேல் பயங்கர கோபம் வந்தது. ஆனால் முகத்தில் எதுவும் காட்டாமல் அவன் அவனது இருக்கைக்குச் சென்று விட்டான்.

Advertisement