Advertisement

சக்தியும் மங்கையும் முதலில் சென்றது வேலுமணி வீட்டிற்குத் தான். சக்தி வீட்டு வேலை செய்பவள் என்பதைக் காட்டவே அவளிடமிருந்த பழைய சாயம் வெளுத்த உடையைத் தான் அணிந்திருந்தாள். முகத்திலும் எந்த விதமாகவும் அலங்காரம் செய்யாமல் வெறும் பொட்டு மட்டும் வைத்திருந்தாள்.

வேலுமணி வீட்டில், அவர், அவரது மனைவி, இரு பிள்ளைகள் மற்றும் அவரது அம்மா இருக்கிறார்கள். அவரும் அவரது பிள்ளைகளும் காலையில் சென்றால் மாலையில் தான் வீடு திரும்புவார்கள். அவரது மனைவியும் சமையல் வேலை முடித்து விட்டு பக்கத்து வீட்டுப் பெண்மணியுடன் கதைப் பேசச் சென்று விடுவார். அவரது அம்மா மட்டுமே வீட்டிலிருந்து தொலைக்காட்சிப் பார்த்துக் கொண்டிருப்பார்.

இதையெல்லாம் ஆட்டோவில் வரும் போதே மங்கை, சக்தியிடம் கூறிவிட்டார். அதனால் அவளுக்குச் சுலபமாக இருந்தது.

மங்கை சக்தியுடன் வேலுமணி வீட்டிற்கு வர, வேலுமணியின் மனைவி,”என்ன மங்கை யார் இந்தப் பொண்ணு?” என்று கேட்க,

“அம்மா நேத்து இங்க இருந்து போகும் போது கீழ விழுந்துட்டேன். கால்ல அடிப்பட்டுருச்சு, அதான் ஒத்தாசைக்கு கூட்டிட்டு வந்தேன் மா.” என்று அவர் கூற,

“இப்படிச் சொல்லாம கூட்டிட்டு வந்தா என்ன பண்றது? நான் இந்தப் பொண்ணுக்கு தனியா எல்லாம் காசு தர மாட்டேன். அப்படினா வேலையைப் பார்க்கட்டும். இல்லாட்டி கிளம்பச் சொல்லு.” என்று வேலுமணியின் மனைவி கூற,

“அம்மா அதெல்லாம் வேண்டாம். என் அக்கா பொண்ணு தான்.” என்று கூற,

“சரி நான் எல்லா வேலையும் முடிச்சுட்டேன். பக்கத்துல தான் போறேன். நீ வேலையை முடிச்சதும் அத்தைக்கிட்ட சொல்லிட்டு போ.”என்று அவர் கூறிவிட்டுச் சென்று விட, இருவருக்கும் நிம்மதியாக இருந்தது.

மங்கை சென்று துணியை ஊர வைத்து விட்டு பாத்திரம் கழுவச் செல்ல, சக்தி விளக்குமாறைக் கையில் எடுத்துக் கொண்டு வீடு கூட்டுவது போல் அங்கிருக்கும் ஒவ்வொரு அறையிலும் அதில் இருக்கும் ஒவ்வொரு அலமாரியிலும் மடிக்கணினி இருக்கிறதா என்று பார்த்தால். அவர் வீட்டில் எங்குத் தேடியும் இல்லை. சரி அப்போது கண்டிப்பாக கல்யாண் வீட்டில் தான் இருக்க வேண்டுமென நம்பினாள் சக்தி.

வேலுமணி வீட்டில் வேலை முடிந்ததும் மங்கை வேலுமணியின் அம்மாவிடம் கூறிவிட்டு வெளியே வந்தார், அவரைத் தொடர்ந்து சக்தியும் வந்துவிட்டாள்.

அடுத்து கல்யாண் வீட்டிற்குச் சென்றார்கள். கல்யாண் வீட்டில் அவனும் அவனது மனைவி மற்றும் ஒரு குழந்தை அதுவும் அந்தக் குழந்தைக்கு இரண்டு வயது தான் ஆகிறது.

மங்கை, வேலுமணியின் மனைவியிடம் கூறிய அதையே கல்யாண் மனைவியிடமும் கூற, சரியென அவரும் சக்தியை வேலைச் செய்ய அனுமதித்தார்.

இவர்கள் வீட்டில் துணி துவைக்க இயந்திரம் இருப்பதால், மங்கை முதலில் துணியை அதில் போட்டுவிட்டு அதே பாத்திரம் கழுவச் செல்ல, சக்தி வீடு கூட்ட ஆரம்பித்தாள். வேலுமணி வீட்டில் சுதந்திரமாக வேலைச் செய்தது போல இங்கே அவளால் செய்ய முடியவில்லை. கல்யாணின் மனைவி அவரது முட்டைக் கண்ணைச் சக்தியின் பின்னால் தான் வைத்திருந்தார். அவள் எங்குச் சென்றாலும் அவரது கண்ணும் அவள் பின்னையே சென்றது. மிகுந்த சிரமமாக இருந்தது அவளுக்கு.

மங்கையும் இதைப் பார்த்துக் கொண்டிருந்தவர், சக்தி கல்யாணின் அறைக்குள் நுழையும் போது வேண்டுமென்றே பாத்திரத்தைக் கீழே போட, அந்தச் சத்தத்தில் எண்ணமோ ஏதோ என்று கல்யாணின் மனைவி அங்குச் செல்ல, சக்தி வேகமாக உள்ளே சென்று அங்கிருந்த அலமாரிகளை ஒவ்வொன்றாக திறந்து பார்த்தாள். கடைசியில் இருந்த அலமாரியைத் திறக்க முயல, அது பூட்டியிருந்தது. சாவியைத் தேட, அது எங்கு என்று தெரியவில்லை. பின்னர் வேக வேகமாக அவள் அங்கிருந்த மேஜையில் தேட, அவளது கைப்பட்டு அந்த மேஜையின் மேல் இருந்த பென் ஸ்டான்ட் கீழே விழுக அதற்குக் கீழே சாவி இருக்க, வேகமாக அதை எடுத்து அலமாரியைத் திறக்க அவளது கண்கள் பளிச்சிட்டன. ரம்யா வீட்டிலிருந்து எடுத்த மடிக்கணினி போலவே இருக்க, அதைத் திறந்து பார்க்க முயலும் போது ஏதோ சத்தம் கேட்க, அப்படியே வேக வேகமாகப் பூட்டி சாவியை எடுத்த இடத்திலே வைத்து விட்டுக் கூட்ட ஆரம்பிக்க, கல்யாணின் மனைவி அங்கு வரவும் சரியாக இருந்தது.

பின்னர் வேலை எல்லாம் முடித்து விட்டு அந்த வீட்டை விட்டு வரும் வரை இருவருக்கும் திக்கு திக்கென்று தான் இருந்தது. வெளியே வந்தவுடன் தான் நிம்மதியாக மூச்சே விட்டனர்.

இன்னும் இரண்டு வீடுகளில் மங்கை வேலைப் பார்ப்பதால சக்தியையும் அழைத்துச் செல்ல வேண்டிய நிலை. அவளை அழைக்காமல் சென்று அது வேலுமணி மற்றும் கல்யாணிற்கு தெரிய வந்தால் கண்டிப்பாகச் சந்தேகம் வரும் என்று அவளையும் அழைத்துச் சென்றார். ஆனால் அந்த இரண்டு வீட்டிலும் அவளை எந்த வேலையும் செய்ய விடவில்லை மங்கை.

ஒரு வழியாக அனைத்து வேலைகளையும் முடித்துக் கொண்டு இருவரும் காவலர் குடியிருப்பிலிருந்து வெளியே வந்து ஆட்டோ பிடித்து சாத்விகாவின் அலுவலகத்திற்கு வர மதியமாகி விட்டது.

இவர்கள் அங்கு வருவதற்கும் ஆதன் அங்கு வருவதற்கும் சரியாக இருந்தது. சக்தி ஏதோ கூற வர,”மேல போய் பேசலாம் சக்தி வாங்க.” என்று கூறிவிட்டு அவன் முன்னே நடக்க, இருவரும் பின்னே வந்தார்கள் உடன் செல்வமும்.

சக்தியைப் பார்க்கும் வரை ஒருவருக்கும் வேலை ஓடவில்லை. சாத்விகா எழுந்து வந்து அவளை அனைத்துக் கொண்டாள்.

“ராக்கி ஐ ஆம் ஆல்ரைட். சரியா.” என்று கூறி அவளது முதுகை ஆதரவாகத் தட்டிக் கொடுத்தாள்.

“ம் சொல்லுங்க சக்தி லேப்டாப் அங்க இருந்ததா?” என்று ஆதன் கேட்க,

“எஸ் சார் கல்யாண் வீட்டுல நான் இதே மாதிரி லேப்டாப் பார்த்தேன். ஆனால் அது ரம்யா லேப்டாப்பானு பார்க்கிறதுகுள்ள அவங்க வொய்ப் வந்துட்டாங்க. பட் அதை அவங்க பீரோல வைச்சு பூட்டி வைச்சுருந்தாங்க. லேப்டாப்ப யாரும் பீரோக்குள்ள வைச்சு பூட்டி வைக்க மாட்டாங்க. ஸோ கண்டிப்பா இது ரம்யாவோட லேப்டாப் தான் சார்.” என்று சக்தி கூற,

“ரொம்ப நல்ல வேலை பண்ணிருக்கீங்க. இதுக்கு நான் உங்களுக்கு எப்படி தாங்க்ஸ் சொல்லுவேன்னே தெரியலை.” என்று ஆதன் கூற,

“சார் தாங்க்ஸ் எல்லாம் வேணாம். சமயம் வரும் போது நான் ஒன்னு கேட்பேன். அதை நீங்கத் தட்டாமல் செஞ்சா போதும்.” என்று புதிராக அவள் கூற, சாத்விகா அவளை வியப்பாகப் பார்க்க,

“நீங்க எது கேட்டாலும் நான் செய்வேன் சக்தி.” என்று ஆதன் கூற, சக்தி மகிழ்ச்சியுடன் உள்ளே சென்றாள் தன் உடையை மாற்றிக் கொள்வதற்கு.

அவள் சென்றவுடன் ஆதன் மங்கையிடம் வந்து,”நீங்க ரொம்ப பெரிய உதவி பண்ணிருக்கீங்க. உங்களுக்கும் என்னோட நன்றி. இதை வேண்டாம்னு சொல்லி வாங்கிக்கோங்க.” என்று இரண்டாயிரம் ரூபா தர, மங்கை தயங்க,

“நீங்க தயங்க வேண்டாம். வாங்கிக்கோங்க.” என்று அவர் கையில் திணிக்க, மங்கை ஆதனிடம் நன்றி தெரிவித்து விட்டுக் கிளம்ப, எப்போதும் போல ஆதன் செல்வத்தை அவரை அவரது வீட்டில் விட்டுட்டு வரச் சொல்லி அனுப்பினான்.

~~~~~~~~~~

பாண்டி மிகுந்த கோபத்துடன் இருந்தான். ரம்யா கொலை வழக்கு இப்போது மீண்டும் விசாரணை தொடங்கி இருப்பதை எண்ணி. இது மட்டும் அவனது முதலாளிக்குத் தெரிந்தால் கண்டிப்பாக அவனை உண்டு இல்லை என்று ஆக்கி விடுவார்கள். கோபத்துடன் கல்யாணிற்கு அழைத்தான் பாண்டி.

அலுவலகத்திலிருந்த கல்யாணோ பாண்டியின் எண்ணைப் பார்த்ததும் நடுங்கியது அவனுக்கு. கல்யாண் ஆதனால் எதுவும் கண்டுபிடிக்க முடியாதென நினைக்க, ஆதனோ வேகமாகச் செயல் பட்டு இதுக் கொலை தான் என்று நிரூபித்து வழக்கை விசாரிக்கும் பொறுப்பையும் பெற்றுக் கொண்டான்.

பயத்துடனே கைப்பேசியை எடுத்து,”சொல்லு பாண்டி.” என்று கூறியது தான் தாமதம் பாண்டி பொரிய ஆரம்பித்து விட்டான்.

“என்னமோ எல்லாத்தையும் நான் பார்த்துக்குவேன்னு வாய் கிழிய பேசுன!! இப்போ பார் அந்த ஆதன் கேஸ்ஸ ரீஓப்பன் பண்ணிட்டான். இப்போ என்ன பண்ணப் போற?” என்று சத்தமாகக் கத்த,

“நானும் இப்படியாகும்னு நினைக்கலை பாண்டி. அந்தத் திருடனை இந்த கேஸ்ல ஆதன் கொண்டு வருவான்னு நான் கனவுல கூட நினைக்கலை. இது என்னை மீறி நடந்த விஷயம். இனி எதுவும் தப்பா நடக்காது பாண்டி. என்னை நம்பு ப்ளீஸ்.” என்று கல்யாண் கூற,

“உன்னை நம்புன வரைக்கும் போதும். நான் நாளைக்கு ஊருக்கு வந்துடுவேன். ஒழுங்கா ரம்யாவோட லேப்டாப்ப கொண்டு வந்து என்கிட்ட கொடு. மத்ததை நான் பார்த்துக்கிறேன்.” என்று பாண்டி கூற,

“சரி பாண்டி.” என்று கல்யாண் கூறுவதற்கு முன்பே பாண்டி வைத்து விட்டான்.

கல்யாணிற்கு அவமானமாகப் போனது. ஆதனை ஏதாவது செய்ய வேண்டுமென அவர் யோசித்தார். ஆதனே அவருக்கு அவனை அழிக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்பான் என்று கல்யாண் நினைத்திருக்க மாட்டான். ஏன் ஆதனிற்கே அவனது செயல் இப்படி ஒரு மாற்றத்தைக் கொடுக்கும் என்று யோசித்திருக்க மாட்டான்.

~~~~~~~~~

ஆதன் வேலை முடித்து விட்டு அவனது வீட்டிற்குச் சென்று உடை மாற்றிக் கொண்டு டீ குடிக்கலாம் என்று சென்றவன் பாலை எடுக்க, காலையில் தான் சாப்பிடவில்லை என்று சொன்னதும் சாத்விகாவே தோசை சுட்டுக் கொடுத்தது ஞாபகத்திற்கு வர, பாலை அப்படியே குளிர்சாதனப் பெட்டியில் வைத்து விட்டுக் கிளம்பி சாத்விகா அலுவலகத்திற்கு அவனது வண்டியில் சென்றான்.

பிரபுவும் ரவியும் ஒரு வண்டியை வைத்துக் கொண்டு ஏதோ செய்து கொண்டிருக்க, ஆதன் அவர்கள் அருகில் சென்று,”என்ன பண்றீங்க?” என்று கேட்க,

“சார் நீங்க போறதுக்கு வண்டி ஏற்பாடு பண்றோம் சார். இதுல நம்பர் ப்ளேட் மாத்தியாச்சு. அப்புறம் இந்த வண்டியை அடையாளம் காட்டுற எல்லா இடத்தையும் மறைச்சாச்சு சார்.” என்று அவர்கள் கூற,

“ஓ ஒகே ரொம்ப தாங்க்ஸ். சாத்விகா எங்கே?” என்று அவன் கேட்க, அவர்கள் சிரித்துக் கொண்டே மேலே என்று கை காட்ட, ஆதன் தலையசைத்து விட்டு மேலே சென்றான்.

“ஆதன் சார் சாத்விகாவ ரூட் விடுற மாதிரி இருக்குல?” என்று ரவி பிரபுவிடம் கேட்க,

“எனக்கும் அப்படித் தோணுது. ஆதன் சாரும் சாத்விகாவும் நல்ல பேர். இரண்டு பேரும் சேர்ந்தா நல்லா இருக்கும். பார்க்கலாம்!!” என்று கூறிவிட்டு பிரபு முன்னே நடக்க, ரவியும் அவன் பின்னால் வந்தான்.

மேலே சாத்விகாவும் சக்தியும் ஏதோ உடையை வைத்துக் கொண்டு பேசிக் கொண்டிருக்க, ஆதன் அவர்களைப் புரியாமல் பார்த்தான்.

“என்ன பிரச்சனை?” என்று அவன் கேட்க,

“சார் பிரச்சனை எல்லாம் எதுவுமில்லை. நான் ப்ளாக் போடச் சொன்னேன். அவள் வொயிட் போடனும்னு சொல்றா. அதான் டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்கோம்.” என்று சக்தி கூற,

“நிவாஸ் நீங்களே சொல்லுங்க, வொயிட் போட்டா தான் நம்மளை பார்த்தா கூட பேய்னு நினைச்சு பயந்து ஓடிடுவாங்க.” என்று சாத்விகா கூற,

“ஏய் யார் இப்போலாம் பேயைப் பார்த்து பயப்படுறாங்க? ஒழுங்கா ப்ளாக் போடு. அப்போ தான் இருட்டுல யாருக்கும் எதுவும் தெரியாது.” என்று சக்தி கூற,

ஆதன் புரியாமல் இருவரையும் பார்த்து,”எதுக்கு ட்ரெஸ் இப்போ?” என்று கேட்க,

“சார் நீங்கப் போறது திருட, அப்போ பக்காவா ப்ளான் பண்ணி போகனும். இப்படியே போனால் நீங்க மாட்டிருவீங்க. அதான் நாங்க ட்ரெஸ், மாஸ்க் எல்லாம் வாங்கிட்டு வந்தோம்.” என்று சக்தி கூற,

“பரவால்லயே உங்களுக்கு எல்லாம் ஏற்கனவே எக்ஸ்பீரியனாஸ் இருக்கோ. பக்காவா ப்ளான் பண்ணிருக்கீங்க.” என்று ஆதன் அவர்களைக் கேலி செய்ய,

“சார் இது தான வேண்டாம்னு சொல்றது.” என்று சக்தியும்,

“நிவாஸ் திஸ் இஸ் டூ மச்.” என்று சாத்விகாவும் கூற, ஆதன் வாய் விட்டுச் சிரித்தான். அதை ஒரு நொடி சாத்விகாவும் ரசிக்கத் தான் செய்தாள் அவளுக்கே தெரியாமல்.

பின்னர் சக்தி கல்யாணின் வீடு எப்படி இருக்கும் என்றும் மடிக்கணினி உள்ள இடம் அதன் சாவி உள்ள இடம் என் எல்லாவற்றையும் விலாவாரியாக கூற, ஆதனும் சாத்விகாவும் தெளிவாகக் கேட்டுக் கொண்டனர்.

ஜெசிக்கா தவிர்த்து அனைவரும் அங்குத் தான் இருந்தனர். அவர்களால் ஆதனும் சாத்விகாவும் திரும்பி நல்லபடியாக வரும் வரை வீட்டிற்குச் செல்ல முடியாது என்று கூறிவிட்ட தால் சாத்விகாவும் எதுவும் கூறவில்லை.

இரவு உணவை வெளியில் ஆர்டர் செய்து வாங்கி உண்டு விட்டு ஆதனும் சாத்விகாவும் தயாராகச் சென்றனர். ஆதனிற்கு கருப்பு நிற சட்டை மற்றும் பேன்ட். அதே போல் தான் சாத்விகாவிற்கும் கருப்பு நிற சட்டை மற்றும் பேன்ட். அவளது முடியை கொண்டை போல் போட்டுக் கொண்டு பசங்களுக்கு இருக்கும் முடி போல விக் வைத்துக் கொண்டாள். அவள் பெண் என்பது தெரியாமல் இருப்பதற்காக.

ஆதனும் சாத்விகாவும் மூவரிடமும் சொல்லிவிட்டு கல்யாண் இல்லத்திற்குக் கிளம்பிச் சென்றனர். போகும் வழியில் ஆதன்,”சாத்விகா நீ உள்ள வர வேண்டாம். வெளியே இரு, நான் மட்டும் போய் எடுத்துட்டு வரேன். யாராவது வந்தா சிக்னல் கொடுக்க வசதியா இருக்கும்.” என்று அவன் கூற,

“நிவாஸ் என்ன விளையாடுறீங்களா? அதெல்லாம் எனக்குத் தெரியாது நானும் உள்ள வருவேன்.” என்று அவள் அடம்பிடிக்க,

ஆதனால் அவளது வார்த்தையைத் தட்ட முடியவில்லை. அவளைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்று அழைத்து வர வேண்டுமென சாமியைக் கும்பிட்டுக் கொண்டான்.

கல்யாண் இருக்கும் காவலர் குடியிருப்புக்கு முன் வழி அல்லாது வேறு ஒரு வழி ஒன்று உள்ளது. அதை மாலையே ஆதன் சென்று பார்த்து வந்து விட்டான். ஆதன் வண்டியை நிறுத்த, சாத்விகா இறங்கினாள்.

“சாத்விகா என் கூடவே வா சரியா.” என்று அவன் கூற, அவளோ அவனது கையைப் பிடித்துக் கொண்டாள். நடக்க ஆரம்பித்த ஆதன் சட்டென்று நிற்க, சாத்விகா புரியாமல் அவனைப் பார்த்தான். அவனோ எதுவும் கூறாமல் சாத்விகாவின் கையை இறுகப் பற்ற, அவள் கைப் பிடிக்கும் போது தோன்றாத உணர்வு அவன் கைப் பிடிக்கும் போது அவளுக்குத் தோன்றியது. ஆனால் அவளது கையை அவனிடமிருந்து விளக்க வேண்டுமென மட்டும் தோன்றவில்லை.

கல்யாண் வீட்டிற்கு வந்ததும் ஆதனும் சாத்விகாவும் கையுறையை எடுத்துப் போட்டுக் கொண்டார்கள் அவர்களது கைத்தடம் இருக்கக் கூடாதென. பின்னர் சக்தி கூறிய படி வீட்டின் பின் பக்கம் வந்தனர். சக்தியிடம் ஏற்கனவே ஆதன் அந்த வீட்டுச் சாவியின் அச்சை சோப்பில் எடுத்து வரச் சொல்லியிருந்தான். அதை அவள் காலையிலே எடுத்து வந்திருந்ததால் ஆதன் அதைச் சாவியாக மாற்றி இப்போது எடுத்து வந்திருந்தான். அதை வைத்துப் பின் பக்கக் கதவைத் திறக்க, அது திறந்து கொண்டது.

இருவரும் மகிழ்ச்சியுடன் மெதுவாகத் கதவைப் பூட்டிவிட்டு உள்ளே சென்றனர். கல்யாண் அறை எது என்று சக்தி கூறியதை நினைவு கூர்ந்து அந்த அறை நோக்கிச் செல்ல, தீடிரென குழந்தை அழும் சத்தம் கேட்க, ஆதன் சாத்விகாவின் கையைப் பற்றி அவனுக்குப் பக்கத்திலிருந்த அறைக்குள் வேகமாக இழுக்க, இருட்டில் கீழே இருந்த குழந்தை விளையாடும் பொம்மையைப் பார்க்கத் தவறிவிட, சாத்விகாவின் கால் பட்டு அது சத்தம் கொடுக்க, இருவரும் ஒரு நிமிடம் பயந்துவிட்டனர்.

குழந்தை அழுததால் கல்யாணின் மனைவி எழுந்து வெளியே வர, அப்போது தான் சாத்விகாவின் கால் பட்டுச் சத்தம் கேட்க, வேகமாக அங்குச் சென்று பார்க்க யாருமில்லை. அவருக்குச் சந்தேகம் வந்து ஆதனும் சாத்விகாவும் இருக்கும் அறையைத் திறக்க, அங்கும் யாருமில்லை. பின்னர் எப்படிச் சத்தம் வந்திருக்கும் என்று யோசித்துத் கொண்டிருந்தவர் குழந்தையின் அழுகை அதிகமாக இதைச் சுத்தமாக மறந்து சமையலறைக்குச் சென்றார்.

கல்யாணின் மனைவி வருவதைப் பார்த்து ஆதன் சாத்விகாவுடன் அங்கு இருக்கும் அலமாரிக்குள் புகுந்து கொண்டான். ஏதோ வேகத்தில் இருவரும் உள்ளே சென்று விட்டனர். ஆனால் அந்த அலமாரி சிறியது அதனால் இருவரும் ஒருவரை ஒருவர் ஒட்டிக் கொண்டு தான் நிற்க வேண்டும்.

ஆதனிற்கும் சரி சாத்விகாவிற்கும் சரி அந்த நிலைமை அவஸ்தையைக் கொடுத்தது. அவர்கள் கனவிலும் நினைத்து இருக்க மாட்டார்கள் இருவரும் இப்படி நிற்பார்கள் என்று. ஆதன் வந்த வேலை மறந்து அப்படியே நின்றிருக்க, சாத்விகா தான் தெளிந்து அவன் முன் சொடக்கிட, ஆதனிற்கு வெட்கம் வந்து விட்டது. அந்த இருட்டில் அவனது வெட்கம் தெரியவில்லை என்றாலும் சாத்விகாவிற்கு ஒரு மாதிரியாகி விட்டது. பின்னர் ஆதன் சுதாரித்து மெதுவாக அலமாரி கதவைத் திறந்து வெளியே வந்து,”நீ இங்கேயே இரு வெளியே வராத!! நான் போய் பார்த்துட்டு வரேன்.” என்று கூறி அலமாரியை மீண்டும் மூடிவிட்டு அந்த அறைக் கதவைத் திறக்க, இன்னும் லைட் எறிந்து கொண்டிருந்ததைப் பார்த்து மீண்டும் அலமாரிக்குள் சென்றுவிட்டான்.

“என்ன நிவாஸ் திரும்ப வந்துட்டீங்க?” என்று ஹஸ்கி வாய்ஸில் கேட்க,

“இன்னும் அவங்க போகலை. வெயிட் பண்ணு.” என்று அவன் கூறினான்.

உண்மையில் அவன் அறைக் கதவைத் திறக்கும் போது கல்யாணின் மனைவி லைட்டை அமர்த்தி விட்டு உள்ளே செல்வது தெரிந்தது. வேண்டுமென்றே தான் ஆதன் அவ்வாறு கூறினான். இது சாத்விகாற்கு தெரிந்தால் அவள் என்ன செய்வாள்? ஒரு வேளை கல்யாணின் மனைவிக்கு அந்தச் சத்தம் வந்தது ஞாபகத்தில் வந்து மறுபடியும் இங்கு வந்து பார்த்தால் இவர்கள் கதி!! வெற்றிகரமாக மடிக்கணினியை எடுத்துக் கொண்டு அவர்கள் வெளியே சென்று விடுவார்களா?

Advertisement