Advertisement

ஆதன், சாத்விகாவின் வீட்டிலிருந்து நேராகச் சென்றது அவனது காவல் நிலையத்திற்குத் தான். போகும் முன் மீண்டும் மங்கையிடம்,”அம்மா நீங்க நாளைக்கு வேலைக்குப் போறதுக்கு முன்னாடி இங்க வந்துட்டு போங்க. கொஞ்சம் சீக்கிரம் வந்தீங்கனா நம்ம என்ன பண்றதுனு பேச வசதியா இருக்கும். உங்களை இன்னைக்கு மாதிரி இவர் கூப்பிட்டு வந்துடுவார்.” என்று அவன் கூற,

“சரிங்க ஐயா.”

“அப்புறம் மறந்துடாதீங்க இந்த விஷயத்தை யார்கிட்டயும் நீங்கச் சொல்லக் கூடாது.” என்று அவன் கூற,

“கண்டிப்பா நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேங்க ஐயா.” என்று அவர் கூற,

“சரிங்க அம்மா, செல்வம் அவங்களை வீட்டுல விட்டுட்டு வாங்க.” என்று ஆதன் கூற, மங்கை செல்வத்துடன் அங்கிருந்து சென்றார்.

அவர்கள் சென்றவுடன் சாத்விகா,”சார் இப்போ சக்தி போய் பார்த்துட்டு வந்துடுவா!! ஆனால் எப்படி லேப்டாப்ப அங்கிருந்து எடுக்கிறது?”

“அது பெரிய விஷயமில்லை சாத்விகா. யார் வீட்டுல இருக்குனு தெரிஞ்சதுக்கு அப்புறம் நைட் யாருக்கும் தெரியாமல் நான் போய் எடுத்துட்டு வந்துடுறேன்.” என்று சாதாரணமாக ஆதன் கூற,

சுற்றியிருந்தவர்கள் அனைவரும் அவனை அதிர்ச்சியாகப் பார்த்தனர்.

“சார் என்ன சொல்றீங்க? திருடப் போறீங்களா? தனியாவா?” என்று சாத்விகா கேட்க,

“ஆமா சாத்விகா. நாம போய் கேட்டால் கண்டிப்பா அவங்க எடுத்துக்கோங்கனு நம்ம கையில தரப் போறது இல்லை. ஸோ இது தான் ஓகே வழி. நானும் திருடலை, எவிடன்ஸை அவங்க மறைக்கப் பார்க்கிறாங்க, நான் அதை அவங்ககிட்ட இருந்து மீட்கப் போகிறேன் அவ்ளோ தான்.” என்று அவன் கூற,

சாத்விகா இதற்கு எதிர்ப்பு கூறுவாள் என்று அவளைப் பார்க்க, அவளோ,”சார் நானும் உங்க கூட வரேன். எனக்கு இந்த மாதிரி எக்ஸ்பீரியன்ஸ் பண்ணனும்னு ரொம்ப நாளா ஆசை. ப்ளீஸ் சார் நானும் உங்க கூட வரேன். நோ மட்டும் சொல்லாதீங்க ப்ளீஸ் ப்ளீஸ்.” என்று அவள் கெஞ்ச,

ஆதனிற்கு வியப்பாக இருந்தது. அதே சமயம் அவளைப் பார்க்கச் சுவாரஸ்யமாகவும் இருந்தது.

“ஏய் ராக்கி அவர் ஒன்னும் டூருக்குப் போகலை நானும் வரேன்னு சொல்றதுக்கு. அவர் சொல்றது புரியுது தானா? யாரோ ஒருத்தர் வீட்டுல இல்லை இல்லை யாரோ கிடையாது போலிஸ் வீட்டுல லேப்டாப்ப ஆட்டயப் போடப் போறார். நீயும் போறேன்னு சொல்ற? சும்மா இரு ராக்கி.” என்று ரவி சற்றுக் கடுமையாகக் கூற,

“ப்ச் பீஸ்ட் எனக்கு ஏதாவது ஆகிடும்னு நீ பயப்படாத. அதான் நிவாஸ் சார் என் கூட இருக்கார்ல எனக்கு ஒன்னும் நடக்காது.” என்று சாத்விகா கூற, ஆதன் அவளை ஆச்சரியமாகப் பார்த்தான். இதுவரை யாரும் அவனை நிவாஸ் என்று கூப்பிட்டது இல்லை. அதை விட அவனுக்கு நிவாஸ் என்ற பெயரும் இருக்கிறது என அவள் கூறியதும் தான் நினைவுக்கே வந்தது.

முதலில் அவள் கூட வருகிறேன் என்று சொன்ன போது ஆதன் மறுக்கத் தான் நினைத்தான். ஆனால் அவளது பேச்சு அவனுக்கு மறுக்கத் தோன்றவில்லை.

“கவலப்படாதீங்க, சாத்விகாவுக்கு ஒன்னுமாகாது. நான் பார்த்துக்கிறேன்.” என்று அவன் கூறவும்,

“ஆவ்வ் ரொம்ப தாங்க்ஸ் சார்.” என்று அவள் மிகுந்த மகிழ்ச்சியுடன் கூற,

“ஆனால் ஒரு கண்டிஷன்.” என்று அவன் இழுக்க,

“என்ன கண்டிஷன் சார்?”

“நீங்க என்னை சார்னு கூப்பிட்டால் நான் கூப்பிட்டுப் போக மாட்டேன்.” என்று அவன் கூற,

“ஹாஹா ஓகே அப்போ நான் இனிமேல் உங்களை நிவாஸ்னு கூப்பிடுறேன்.” என்று அவள் தலையை ஒரு பக்கம் சாய்த்துக் கூற, ஆதனும் சிரித்துக் கொண்டே தலையசைக்க, பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு ஏதோ புரிவது போல் இருக்க, யாரும் எதுவும் பேசவில்லை. அமைதியாக இவர்களின் சம்பாஷணைகளைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

பின் செல்வம் வந்து விட, ஆதன் சாத்விகாவிடமும் மற்றவர்களிடமும் சொல்லி விட்டுக் கிளம்பினான். அவன் கிளம்பியதும் சாத்விகா சாதாரணமாக இருக்க, மற்ற நால்வரும் அவளை யோசனையாகப் பார்த்தனர். ஆனால் அவளிடம் எதுவும் கேட்கவில்லை.

அவர்களுக்கு சாத்விகா பற்றித் தெரியும். அவள் வாழ்க்கையில் நடந்த விஷயங்களும் தெரியும். அவளது வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டுமென மனதார நினைப்பவர்கள் இவர்கள். அது ஆதன் மூலமாக நடந்தால் முதல் ஆளாகச் சந்தோஷப் படுபவர்களும் இவர்கள் தான். அவர்கள் பார்த்த வரை ஆதன் நல்லவன் தான். உண்மைக்காகப் போராடுபவன் கண்டிப்பாக நல்லவனாகத் தான் இருப்பான் என்று அவர்கள் நம்பினார்கள்.

காவல் நிலையத்திற்கு வந்த ஆதன் நினைவில் சாத்விகா தான். அவளின் நிவாஸ் என்ற அழைப்பு தான் அவனது மனதில் வந்து வந்து போனது. இதுவரை எத்தனையோ பெண்களுடன் பழகியிருக்கிறான். அதாவது அவனது கல்லூரியில், வேலை இடத்தில் என. ஆனால் ஒருவரிடமும் தோன்றாத உணர்வு சாத்விகாவிடம் தோன்றியது. அது என்ன உணர்வு என்று அவனால் கூற முடியவில்லை. ஆனால் அந்த உணர்வு நன்றாக இருந்தது.

ஒரு நிமிடம் அவன் ஏற்ற வழக்கையே மறந்து விட்டான். எட்வின் கதவைத் தட்டி விட்டு உள்ளே வந்தவுடன் தான் அவனுக்கு ரம்யா கொலை வழக்கே ஞாபகம் வந்தது.

“சொல்லுங்க எட்வின்.”

“சார் சாமிக்கண்ணை என்ன பண்றது?”

“அவனை ரிமான்ட் பண்ணி உள்ள வைங்க எட்வின். அப்புறம் அவன் திருடன பொருட்களை எல்லாம் அவன்கிட்ட இருந்து வாங்கி அதோட உரிமையாளர்கிட்ட ஒப்படைச்சுருங்க. அப்புறம் அவன் ரம்யா வீட்டுல பார்த்த ஆட்களை ஞாபகத்துல வைச்சுருக்கானானு கேட்கனும். நம்ம டேட்டா பேஸ்ல இருக்கிற க்ரிமனல்ஸ் போட்டோ எல்லாத்தையும் கொண்டு வந்து அவன்கிட்ட காட்டுங்க. நானும் வரேன்.” என்று அவன் கூற, எட்வினும் சரியென்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றான்.

எட்வினும் ஆதனும் சாமிக்கண்ணு இருக்கும் அறைக்குச் சென்றார்கள். இவர்களைப் பார்த்ததும் அவன் எழுந்து நிற்க,

“சாமிக்கண்ணு நாங்க இப்போ சில ஃபோட்டோ உன்கிட்ட காட்டுவோம். அதைப் பார்த்துட்டு அன்னைக்கு அந்த வீட்டுல யாரைப் பார்த்தனு ஞாபகப்படுத்தி சொல்லனும் சரியா.” என்று ஆதன் கூற, சாமிக்கண்ணு தலையசைத்தான்.

எட்வின் ஒவ்வொரு புகைப்படமாக அவனுக்குக் காட்ட, அதில் அவர்கள் இல்லை எனத் தலையை அசைத்து,”சார் இதுல யாருமே இல்லை சார.”என்று அவன் கூற, இவர்களுக்கு எரிச்சலாக இருந்தது.

“சாமிக்கண்ணு நீ ஒழுங்கா பார்த்தியா? அவங்க முகத்தை எதுவும் மறந்துட்டியா? இன்னொரு முறை நல்லா பார்த்துச் சொல்லு.” என்று ஆதன் கூற,

“ஆமா ஒழுங்கா பார்த்துச் சொல்லு சாமிக்கண்ணு. இது ரொம்ப முக்கியமான கேஸ். நீ இதுல உதவிச் செஞ்சா தான் அதை மேலிடத்தில சொல்லி உனக்குத் தண்டனையைக் குறைக்கச் சொல்ல முடியும்.” என்று எட்வின் கூற,

“சரிங்க சார் இன்னொரு முறை காமிங்க.” என்று கூற, எட்வின் ஆதனைப் பார்த்து விட்டு மற்றுமொரு புகைப்படங்களைக் காட்ட,

“நல்லா பார்த்துட்டேன் சார். இதுல அன்னைக்குப் பார்த்த யாருமில்லை.” என்று அவன் அதையே கூற,

“சரி. நீ உண்மையைத் தான சொல்ற?”

“ஆமா சார். நெஜமாலும் நான் உண்மையைத் தான் சொல்றேன்.” என்று அவன் திடமாகக் கூற,

ஆதன் கண் ஜாடைக் காட்டி எட்வினை வெளியே வரச் சொல்லி விட்டு செல்ல, எட்வினும் அங்கிருந்து வெளியே வந்தான்.

“எட்வின் அவன் சொல்றதை பார்த்தா வேற ஆட்களை இறக்கி விட்டுருப்பாங்கனு தோனுது. நீங்க என்ன பண்ணுங்க ட்ராயிங் ஆர்டிஸ்ட் வரச் சொல்லி சாமிக்கண்ணு சொல்ல சொல்ல செக்ட்ச் பண்ணச் சொல்லுங்க.” என்று ஆதன் கூற,

“சார் இப்போ நேரமாகிடுச்சு. நான் நாளைக்கு இதைச் செய்ய சொல்லிடுறேன் சார்.” என்று எட்வின் கூற,

“சரி எட்வின். அப்போ நானும் வீட்டுக்குக் கிளம்புறேன். நீங்களும் கிளம்புங்க.” என்று அவன் கூறிவிட்டுச் செல்ல, எட்வினும் சரியென்று கூறிவிட்டுச் சென்றான்.

அடுத்த நாள் காலையில், ஆதன் வேலைக்குக் கிளம்பும் நேரத்திற்கு முன்னதாகவே தயாராகி வெளியே வர, செல்வம் அவனுக்காக வெளியே காத்திருந்தார்.

“செல்வம் நீங்க என்னை சாத்விகா வீட்டுல இறக்கி விட்டுட்டு போய் மங்கை அம்மாவை கூட்டிட்டு வந்துருங்க.” என்று கூறிக் கொண்டே அவன் ஜீப்பில் ஏறி உட்கார்ந்தான்.

செல்வமும் ஆதன் கூறிய படி அவனை சாத்விகாவின் வீட்டின் முன்பு இறக்கி விட்டுவிட்டு மங்கையை அழைக்கச் சென்றார்.

அன்று சாத்விகாவும் நண்பர்களும் சீக்கிரமே வந்திருந்தனர். அவர்களுக்கும் ஆர்வமாக அதே சமயம் சிறிது பயமாகவும் இருந்தது. அதனால் சாத்விகாவிடம் பேசலாம் என்று முன்னமே வந்திருந்தனர்.

சாத்விகா அன்று சீக்கிரமே அவளது அலுவலகத்திற்கு வந்து விட்டாள். சக்தியை மட்டும் தான் அவள் முன்னதாக வரச் சொல்லிருக்க, இப்பொழுது அனைவரும் சீக்கிரம் வந்திருப்பதைப் பார்த்து ஆச்சரியமாகப் பார்த்தாள்.

“ஹேய் நான் சக்தியை மட்டும் தான சீக்கிரம் வரச் சொன்னேன். நீங்களா ஏன் இவ்ளோ சீக்கிரம் வந்துருக்கீங்க?”

“ராக்கி உன்கிட்ட கொஞ்சம் பேசனும். அதான் நாங்க எல்லாரும் சீக்கிரம் வந்துட்டோம்.” என்று ஜெசிக்கா கூற,

“என்ன பேசனும் பாண்டா? ஏன் எல்லாரும் முகத்தை இவ்ளோ சீரியஸா வைச்சுருக்கீங்க?” என்று சாத்விகா கேட்க,

“ராக்கி நமக்கு இந்த கேஸ் தேவையா?” என்று ரவி கேட்க,

“ஏய் பீஸ்ட் என்ன பேசுற நீ? புரிஞ்சு தான் பேசுறியா?”

“அவன் புரிஞ்சு தான் பேசுறான் ராக்கி. இதுல ரிஸ்க் அதிகமா இருக்கும்னு தோணுது.” என்று தயங்கிக் கொண்டே பிரபு கூற,

“நின்ஜா நீயுமா இப்படிப் பேசுற? நான் இந்த கேஸ் பத்திச் சொல்லும் போது எவ்ளோ ஆர்வமா இருந்த!! இப்போ என்னாச்சு? நமக்கு இந்த மாதிரி கேஸ் வராதானு எவ்ளோ நாள் யோசிச்சு இருக்கோம். இப்போ மட்டும் ஏன் இவ்ளோ பயம்?”

“தெரியலை ராக்கி. ஆனால் பயமா இருக்கு.”என்று ஜெசிக்கா கூற, சக்தி மட்டும் எதுவும் கூறாமல் இருக்க,

“கிட்டி நீ ஏன் அமைதியா இருக்க? நீயும் ஏதாவது சொல்ல வேண்டியது தான?” என்று அவள் சற்றுக் கோபமாகக் கூற,

“ராக்கி எனக்கு உன்னைப் பத்தி நல்லா தெரியும். நாங்க சொன்னாலும் நீ கேட்க மாட்டா. அதை எல்லாம் விட, உனக்கு இந்த ஃப்ரொஃபஷன் மேல உள்ள லவ் பத்தியும் தெரியும். உனக்கு ரிஸ்க் எடுக்கப் பிடிக்கும். எனக்கும் இவங்களை மாதிரி பயம் இருக்கத் தான் செய்யுது நான் இல்லைனு பொய் சொல்ல மாட்டேன். ஆனால் உன்னோட முடிவை நான் மதிக்கிறேன். அதே மாதிரி அவங்க பயப்படுறதும் உன் மேல உள்ள பாசத்தால தான். அதை நீயும் புரிஞ்சுக்கனும்.” என்று அவள் கூற,

“இங்கப் பாருங்க எனக்கும் புரியுது. உங்களோட பாசத்தை எண்ணி நான் பல நாட்கள் சந்தோஷப்பட்டு இருக்கேன். என்னோட அம்மா அப்பா இருந்தும் எனக்கும் அவங்களோட பாசம் கிடைச்சது இல்லை. அவங்களோடது மட்டுமில்லை யாரோட பாசமும் கிடைச்சது இல்லை. அதுக்கு நான் வருத்தப்பட்டதும் இல்லை. ஆனால் கடவுள் எனக்கு நண்பர்கள் மூலம் அந்தப் பாசத்தை அனுபவிக்க ஒரு சான்ஸ் கொடுத்துருக்கார்னு நினைக்கும் போது சந்தோஷமா இருக்கு. நீங்க இந்த கேஸ்ல கவலைப்பட எதுவுமில்லை. என்னைப் பத்தி உங்களுக்கு நல்லா தெரியும். நான் தைரியமான பொண்ணு அதை விட என் கூட நிவாஸ் இருக்கிறார். அதை நீங்க மறந்துடாதீங்க. எனக்கு எதுவுமாக விட மாட்டார்.” என்று அவள் கூற,

இதையெல்லாம் ஆதன் வெளியிலிருந்து கேட்டுக் கொண்டு இருந்ததை அவர்கள் கவனிக்கவில்லை. சாத்விகா தன் பெற்றோர் இருந்தும் அவர்களது பாசம் அவளுக்குக் கிடைக்கவில்லை என்று கூறும் பொழுது அவளை இழுத்து அனைத்து உனக்கு நான் இருக்கிறேன் என்று கூற மனம் விழைந்தது. அடுத்த நொடி இது என்ன எண்ணம் என்று தோன்ற, சாத்விகா அவளுக்கு எதுவுமாகமல் நிவாஸ் பார்த்துக் கொள்வார் என்று கூறும் பொழுது என்ன முயன்றும் அவனது மனது அவள் பால் சாய்வதைத் தடுக்க முடியவில்லை. அங்கேயே நிற்பது சரியாக இருக்காது என முடிவெடுத்து அப்போது தான் வந்தது போல உள்ளே வந்தான்.

பேசிக் கொண்டிருந்தவர்கள் இவனைப் பார்த்ததும் அமைதியாகி விட்டனர். சாத்விகா தான் ஆதன் தப்பாக எடுத்துக் கொள்ளக் கூடாதென,

“சார் எல்லாரும் ரொம்ப ஆர்வமா இருக்காங்க இந்த கேஸ்ல. அதான் காலைல சீக்கிரமே வந்துட்டாங்க.” என்று அவள் கூற,

“ரொம்ப சந்தோஷம். நீங்க எல்லாரும் இந்த கேஸ்ல இவ்ளோ ஆர்வமா இருக்கிறது எனக்குச் சந்தோஷமா இருக்கு. செல்வம் மங்கையை கூட்டிட்டு வரப் போயிருக்கார். சக்தி நீங்கத் தயாரா?” என்று கேட்க,

அவள் பதில் கூறுவதற்கு முன் சாத்விகா,”ஒரு நிமிஷம் நிவாஸ், சக்தி என் கூட வா.” என்று அவளைத் தனியாக அழைத்துச் சென்று,

“கிட்டி உனக்கு அங்கப் போறது பிடிக்காட்டி சொல்லிடு நான் போறேன்.” என்று அவள் கூற,

“ஏய் எனக்குப் போறது ஒன்னும் பிரச்சனை இல்லை. லூசு மாதிரி பேசாமல் வா. அப்புறம் நிவாஸ் தப்பா எடுத்துக்க போறார்.” என்று கடைசி வரியை ஒரு மாதிரி கூற, சாத்விகாவிற்கு புரியவில்லை. சக்தி சிரித்துக் கொண்டே அங்கிருந்து செல்ல, சாத்விகா புரியாமல் அவள் பின்னே சென்றாள்.

வெளியே செல்வம் மங்கையுடன் நின்று கொண்டிருந்தார். ஆதன் இவர்கள் வருவதைப் பார்த்ததும் சாத்விகாவை பார்த்து,”எதுவும் பிரச்சனையா?” என்று கேட்க,

“அச்சோ அதெல்லாம் இல்லை நிவாஸ். ஒரு பிரச்சனையும் இல்லை.” என்று அவள் கூறினாள்.

“பிரச்சினை இல்லாட்டி ஓகே தான். சக்தி நீங்கத் தயாரா?” என்று அவன் மறுபடியும் கேட்க,

“எஸ் சார். நான் ரெடி தான்.” என்று அவள் கூற,

“மங்கை ஞாபகம் வைச்சுக்கோங்க, பயப்படாதீங்க மத்ததை இவங்க(சக்தியை காட்டி) பார்த்துக்குவாங்க சரியா.” என்று ஆதன் நிதானமாகக் கூற,

“சரிங்க ஐயா.”

“சக்தி பார்த்துங்க. உங்களுக்கு அங்க ஏதாவது பிரச்சனை வர மாதிரி இருந்தா அப்படியே வந்துருங்க. லேப்டாப்பை விட நீங்க ரொம்ப முக்கியம்.” என்று ஆதன் கூற, சாத்விகாவிற்கு அவன் மேல் மதிப்புப் பெருகிக் கொண்டே சென்றது.

“சரி சார்.” என்று அவள் கூற,

“செல்வம் இவங்க போறதுக்கு ஆட்டோ மட்டும் கொஞ்சம் பிடிச்சு கொடுத்துருங்க.” என்று கூறி அவர்கள் பயணத்திற்குத் தேவையான பணத்தையும் தர, சக்தி வேண்டாமெனக் கூறி சாத்விகாவைப் பார்க்க,

“அவங்க ஒன்னும் சொல்ல மாட்டாங்க. நீங்க வாங்கிக்கங்க.” என்று கூறி மங்கையிடம் தந்தான்.

சக்தியும் மங்கையும் சென்றவுடன் ஆதனிடம் வந்த சாத்விகா,”நிவாஸ் காலைல சாப்பிட்டீங்களா?” என்று அவள் கேட்க,

“இல்லைங்க, இவங்க பத்திரமா போயிட்டு வரனும்னு டென்ஷன். அதுல நான் எதுவும் சாப்பிடலை.” என்று அவன் கூற,

“அப்போ வாங்க நிவாஸ். முதல்ல சாப்பிடுங்க, நீங்கச் சாப்பிடாமல் இருக்கிறதால இங்க எதுவும் மாற போறது இல்லை. வாங்க.” என்று அவள் அழைக்க, மறுக்காமல் அவன் எழுந்தான்.

“ஏய் நீங்கச் சாப்பிட்டீங்களா?” என்று மற்ற மூவரிடம் கேட்க,

“நாங்க சாப்பிட்டோம். நீங்கப் போயிட்டு வாங்க.” என்று அவர்கள் கூற, சாத்விகாவும் ஆதனும் கீழே சென்றார்கள்.

சாத்விகா அவனை அழைத்து உள்ளே சாப்பிடும் அறையில் போடப்பட்டிருந்த மேஜையில் அவனை அமரச் சொல்லிவிட்டு உள்ளே சென்றாள்.

வேகமாக அடுப்பில் தோசைக் கல்லைப் போட்டுச் சுடச்சுடத் தோசை ஊற்றிக் கொண்டு எடுத்து வந்தாள்.

“நீங்கச் சாப்பிடாம வருவீங்கனு தெரியாது. அப்படித் தெரிஞ்சுருந்தா வேற ஏதாவது செஞ்சுருப்பேன். இப்போதைக்கு வீட்டுல தோசை தான் இருக்கு.” என்று கூறி அவன் முன் தட்டை வைத்து அதில் சட்னி மற்றும் சாம்பாரை உற்ற,

“நீங்க வேற, எனக்கு இதுவே அமிர்தம் தான் சாத்விகா.” என்று கூறி அவன் சாப்பிட ஆரம்பிக்க, சாத்விகா தோசை ஊற்ற உள்ளே சென்றாள்.

சட்னி மற்றும் சாம்பார் நன்றாக இருக்க, அவன் எப்போதும் விட ஐந்து தோசை நன்றாகச் சாப்பிட்டான்.

“சாரி, உங்களோட சமையல் சூப்பர். கொஞ்சம் அதிகமாகவே சாப்பிட்டேன்.”

“அய்யோ நிவாஸ் என்ன இது!! நீங்க எவ்ளோ வேணாலும் சாப்பிடலாம். நான் தப்பா எடுத்துக்கலை.” என்று அவள் கூற, ஆதனிற்கு நிம்மதியாக இருந்தது.

“நிவாஸ் நான் எப்படி நீங்கச் சொன்னதும் சார் சொல்லாம பேர் சொல்லி கூப்பிடுறேனோ அது போல நீங்களும் என்னை வாங்க போங்கனு மரியாதையா பேசாமல் சும்மா வா போ னே சொல்லுங்க.” என்று அவள் கூற,

“ஹா ஹா ஓகே.” என்று அவள் எப்போது அப்படிக் கூறுவாள் என்று காத்திருந்தது போல உடனே சரியென்று சொல்லிவிட்டான்.

Advertisement