Advertisement

ஆதன் செல்லும் வழியிலே கமிஷ்னருக்கு அழைத்து விவரத்தைக் கூறிவிட்டான். அவரும் வரச் சொல்ல, ஆதன் தான் மிகுந்த பரபரப்பாக இருந்தான்.

ஆதன் பின்னால் திரும்பி,”இங்கப் பார் சாமிக்கண்ணு நீ பயப்படாத சரியா. என்கிட்ட என்ன சொன்னியோ அதை அப்படியே கமிஷ்னர்கிட்ட சொல்லு. அவரைப் பார்த்து நீ பயப்பட வேண்டிய அவசியமில்லை புரியுதா?” நிதானமாக ஆதன் எடுத்துரைக்க, சாமிக்கண்ணு கண்ணில் பயம் அப்பட்டமாகத் தெரிந்தது.

“அட சாமிக்கண்ணு அவரும் நம்மளை மாதிரி மனுஷன் தான். நீ இவ்ளோ பயப்பட வேண்டிய அவசியமே இல்லை புரியுதா?” என்று மேலும் மேலும் ஏதோ ஏதோ பேசிப் பேசி சாமிக்கண்ணின் பயத்தைப் போக்கினான் ஆதன்.

கமிஷ்னர் அலுவலகம் வந்ததும், செல்வத்திடம்,”செல்வம் நீங்க இருங்க. நான் இவனைக் கூட்டிட்டு போயிட்டு வந்துடுறேன்.”

“எஸ் சார்.” என்று கூறி செல்வம் வெளியே நின்றுவிட, ஆதனும் சாமிக்கண்ணும் உள்ளே சென்றனர்.

கமிஷ்னரின் அறைக் கதவைத் தட்டிவிட்டு ஆதன் உள்ளே சென்றான் சாமிக்கண்ணுவுடன். உள்ளே வந்தவன் அவரைப் பார்த்து சல்யூட் அடித்தான். கமிஷ்னர் அதைத் தலையை ஆட்டி ஏற்றிக் கொண்டு,

“என்ன ஆதன் பயங்கர வேகமா எல்லா வேலையையும் செஞ்சுருக்க. ஆதாரத்தைக் கொண்டு வரச் சொன்னா ஒரே நாள்ல ஐ விட்னஸையே கூட்டிட்டு வந்துட்ட போல.”

“ஆமா சார். நான் எதிர்பாரம கிடைச்ச எவிடனஸ் இவன் தான் சார். இவன் அந்த ஏரியால திருடப் போயிருக்கான் சார். அப்போ ரம்யா வீட்டுல நடந்ததை பார்த்திருக்கான் சார்.” என்று ஆதன் கூற,

“அப்படியா? ஆதன் சொல்றது உண்மையா? அங்க என்ன பார்த்த நீ?” என்று கமிஷ்னர் அவனிடம் கேட்க, ஆதனிற்கு உள்ளுக்குள் பயமாக இருந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் சாமிக்கண்ணு உண்மையைச் சொல்லிவிட வேண்டுமென இருக்கிற எல்லா கடவுளையும் பிரார்த்திட்டான்.

அவனது பிரார்த்தனை வீணாகவில்லை, சாமிக்கண்ணு கமிஷ்னரிடம்,”சார் அவர் சொல்றது உண்மை தான்.” என்று கூறி ஆதனிடம் அவன் என்ன கூறினானோ அச்சுப் பிசாகமல் அப்படியே கமிஷ்னரிடமும் கூற,

“அப்போ ஆதன் நீ சந்தேகப்பட்ட மாதிரி இது கொலை தான் போலயே!! முதல்ல நீ சொல்லும் போது கூட நான் யோசிச்சேன். ஆனால் இப்போ தெளிவா தெரியுது இது கொலைனு!!”

“ஆமா சார். ஆனால் யார் செஞ்சாங்க எதுக்கு செஞ்சாங்கனு இன்னும் தெரியலை சார்.”

“ம் சரி ஆதன். நான் கேஸ் ரீஓப்பன் பண்ண பெர்மிஷன் தரேன். உனக்கு நம்பிக்கையா இருக்கிற ஆட்களைக் கூட வைச்சு சீக்கிரம் உன்னோட தலைமைல இந்த கேஸ்ஸ சால்வ் பண்ணப் பாரு. இப்போதைக்கு மீடியாவுக்கு எல்லாம் எந்த நியூஸூம் சொல்ல வேண்டாம்.” என்று அவர் கூற, சந்தோஷமாய் ஆதன்,

“ரொம்ப தாங்க்ஸ் சார். ஓகே சார். கூடிய சீக்கிரம் குற்றவாளியைக் கண்டுபிடிச்சு உங்க முன்னாடி நிறுத்திறேன் சார்.” என்று கூறிவிட்டு அவன் மகிழ்ச்சியுடன் வெளியே வந்தான்.

செல்வம் அவனது முகத்தைப் பார்த்தே விஷயம் நல்லபடியாகத் தான் முடிந்தது என்று புரிந்து அவரும் சந்தோஷமானார்.

“சார் நீங்கச் சொன்னதை நான் செஞ்சுட்டேன். அதே மாதிரி நீங்களும் அரசியல்வாதி மாதிரி உங்க வேலை முடிஞ்சதும் குடுத்த வாக்கை மறந்துடாதீங்க சார்.” என்று சாமிக்கண்ணு கூற,

“நான் அரசியல்வாதி இல்லை சாமிக்கண்ணு பொய்யான வாக்குறுதி தர. நான் போலிஸ், அதை விட நான் சொன்னால் கண்டிப்பா செய்வேன். நீ கவலைப்படாத.” என்று கூற, அவனுக்கு அப்பொழுது தான் நிம்மதியாக இருந்தது.

பின்னர் சாமிக்கண்ணை காவல் நிலையத்தில் எட்வின் பொறுப்பில் விட்டு விட்டு ஆதன், சாத்விகாவை பார்க்க அவளது அலுவலகம் சென்றான்.

சாத்விகா ஜீப் சத்தம் கேட்டதுமே அவள் கீழே இறங்கி வந்துவிட்டாள். அவளிடம் அவன் ஏற்கனவே கூறியிருந்தான் இந்த வழக்கு விஷயமாகப் பேச அவன் அடிக்கடி அங்கு வர நேரும். இது முக்கியமான வழக்கு என்பதால் அவள் நண்பர்கள் முன்னால் எல்லா விஷயங்களையும் விலாவாரியாக பேச முடியாது. அதனால் அவர்கள் அலுவலகத்தில் இருந்தால் கீழே வீட்டில் பேசலாம். அவர்கள் உதவி தேவைப்பட்டால் மட்டும் நாம் அவர்களிடம் விஷயத்தைக் கூறலாம் என்று முன்பே கூறியிருந்ததால் அவள் கீழே வந்துவிட்டாள்.

ஆதனும் செல்வத்தை இருக்கச் சொல்லிவிட்டு அவன் மட்டும் உள்ளே சென்றான். சாத்விகா கையில் ரம்யா வீட்டிலிருந்து எடுத்த மடிக்கணினி இருந்தது.

உள்ளே நுழைந்ததும் ஆதன் கேட்ட முதல் கேள்வியே,”எப்படி இது ரம்யாவோட லேப்டாப் இல்லைனு கண்டுபிடிச்சீங்க?”

“சார் நாங்க ஓப்பன் பண்ணி பார்த்தோம் சார். அதுல படம் அப்புறம் சில சாங்க்ஸ், அப்புறம் அவங்க கணவரோட எடுத்த புகைப்படங்கள், அம்மா அப்பாவோட எடுத்த புகைப்படங்கள், இப்படி மட்டும் தான் இருந்துச்சு சார். சரி ஒரு வேளை டெலிட் பண்ணிருப்பாங்களோனு நினைச்சு நாங்க ரீஸ்டோர் பண்ணிப் பார்த்தோம். ஆனால் அதுலயும் எதுவுமில்லை சார். அப்புறம் எனக்கு டவுட் வந்துச்சு ஒரு வேளை இது ரம்யா லேப்டாப்பா இல்லாட்டி!! அதனால் நான் லேப்டாப்ல ரம்யா ஃபிங்கர் ஃபிர்ன்ட் இருக்கானு செக் பண்ணோம் சார். அதுல ரம்யாவோட ஃபிங்கர் ஃபிர்ன்ட்டே இல்லை சார்.” என்று அவள் கூற,

“இதை நீங்க ஃபோன்லயே சொல்லிட்டீங்க சாத்விகா. அவங்க ஃபிங்கர் ஃபிர்ன்ட் எப்படி உங்களுக்குக் கிடைச்சது?” என்று ஆதன் கேட்க,

“சார் அவங்களோட ஃபோன் குடுத்தீங்கள, அதுல இருந்து அவங்களோட ஃபிங்கர் ஃப்ரின்ட் எடுத்தோம் சார்.” என்று சாத்விகா கூற, ஆதனால் அவளது அறிவை மெச்சாமல் இருக்க முடியவில்லை.

“உங்களுக்கு ஃபிங்கர் ஃபிர்ன்ட் எப்படி செக் பண்றதுனு தெரியுமா?”

“எஸ் சார். நான் படிக்கும் போது எனக்குச் சொல்லிக் கொடுத்துருக்காங்க சார்.”

“சூப்பர் சாத்விகா. ரொம்ப நல்ல வேலை பண்ணிருக்கீங்க சாத்விகா. அப்போ ரம்யா லேப்டாப்ல தான் ஏதோ இருக்கு. அதனால தான் அந்த ரவுடிங்க அவங்க லேப்டாப்ப எடுத்துட்டு போயிருக்கனும்.” என்று ஆதன் கூற,

“சார் என்ன சொல்றீங்க? ரவுடீங்க எடுத்துட்டு போனாங்களா?”

“ஆமா சாத்விகா…” என்று ஆரம்பித்து அந்தத் திருடன் கூறியதைக் கூற, கேட்ட சாத்விகாவிற்கு இந்த வழக்கு ஏதோ விவகாரமான வழக்கு என்று மட்டும் புரிந்தது.

“சார் இதை எப்படிக் கண்டுபிடிக்கிறது?”

“முதல்ல லேப்டாப்ப அந்த ரவுடீங்க எடுத்துட்டு போனாங்களா இல்லை வேலுமணி அல்லது கல்யாண் எடுத்துட்டு போனாங்களானு விசாரிக்கனும்.”

“எப்படி விசாரிப்பீங்க சார்? யார்கிட்ட விசாரிப்பீங்க?”

“வேலுமணி ஸ்டேஷன்ல நமக்கு ஆள் இருக்காங்க. இருங்க அவங்களுக்குக் கூப்பிட்டு கேட்கிறேன்.” என்று ஆதன் கூறிவிட்டு கணபதிக்கு அழைத்தான்.

“சார் சொல்லுங்க சார்.”

“கணபதி பக்கத்துல யாருமில்லை தான? இப்போ பேசலாமா உங்ககிட்ட?” என்று அவன் கேட்க,

“எஸ் சார் பேசலாம் சார். நான் வெளில வந்திருக்கேன் சார்.” என்று அவர் கூற,

“அப்போ சரி. கணபதி, ரம்யா வீட்டுல இருந்து எதுவும் லேப்டாப் கொண்டு வந்தீங்களா? அதாவது அந்த வேலுமணி எதுவும் எடுத்துட்டு போறதை நீங்க பார்த்தீங்களா?” என்று அவன் கேட்க,

“சார் அது தெரியலையே!! நாங்க அங்க இருந்த வரை அவர் எதுவும் எடுத்த மாதிரி தெரியலை சார். நான் வேணா வேற யார்கிட்டயாவது விசாரிச்சு சொல்லட்டுமா சார்?” என்று அவர் கேட்க,

“சரி கணபதி கேட்டுச் சொல்லுங்க.” என்று அவரிடம் கூறிவிட்டு அவன் வைத்து விட,

“சார் இப்போ என்ன பண்றது?”

“அது தான் யோசிக்கிறேன் சாத்விகா. கணபதி கேட்டுட்டு சொல்றேன்னு சொல்லிருக்கார். ஆனால் வேலுமணி எடுத்திருந்தா கண்டிப்பா மத்தவங்களுக்கு தெரிஞ்ச மாதிரி அவர் எடுத்திருக்க மாட்டார்.” என்று ஆதன் கூற,

“சார் நான் ஒரு யோசனை சொல்லட்டுமா?”

“சொல்லுங்க சாத்விகா.”

“சார் நாம இரண்டு பேர் மட்டும் யோசிச்சா யோசனை கிடைக்காது சார். நீங்க என்னோட ஃப்ரண்ட்ஸ தாரளமா நம்பலாம் சார். நாம எல்லோரும் சேர்ந்து யோசிச்சா ஏதாவது வழி கிடைக்கும் சார்.” என்று சாத்விகா கூற, ஆதன் யோசித்தான்.

“சரி வாங்க நாம மேல போகலாம்.” என்று ஆதன் கூறவும் சாத்விகா மகிழ்ச்சியாக அவனை அழைத்துக் கொண்டு சென்றாள்.

மேலே அலுவலகத்தில் நால்வரும் பேசிக் கொண்டிருக்க, இவர்கள் இருவரையும் பார்த்து எழுந்து நின்றனர்.

“பட்டிஸ் இந்த கேஸ்ல உங்க ஹெல்ப் வேணும். அதான் நாங்க இங்க வந்திருக்கோம்.” என்று சாத்விகா கூற,

“ராக்கி நீ விஷயத்தை மட்டும் சொல்லு. எக்ஸ்ப்ளனேஷன் எல்லாம் வேண்டாம்.” என்று பிரபு கூற,

சாத்விகா விஷயத்தைக் கூற, நால்வரும் யோசித்தனர். அதற்குள் ஆதனிற்கு கணபதியிடமிருந்து அழைப்பு வர, அவன் கைப்பேசியை எடுத்துக் கொண்டு தனியாகச் சென்றான்.

“சொல்லுங்க கணபதி.”

“சார் நான் கேட்டுட்டேன். யாருக்கும் தெரியலைனு சொல்றாங்க சார்.” என்று அவர் கூற,

“சரி கணபதி பார்த்துக்கலாம்.” என்று கூறிவிட்டு ஆதன் வைத்தான்.

இங்கு சாத்விகாவும் அவர்களது நண்பர்களும் யோசித்தும் என்ன செய்வதெனப் புரியவில்லை.

“சார் எனக்கு ஒரு யோசனை தோனுது.” என்று சாத்விகா கூற,

“சொல்லுங்க சாத்விகா.”

“சார் வேலுமணி அப்புறம் கல்யாண் இவங்க வீட்டுக்குப் போயே நாம பார்த்தா என்ன?”

“ராக்கி என்ன பேசுற நீ? நாம எப்படி அவங்க வீட்டுக்குப் போய் பார்க்கிறது?” என்று சக்தி கேட்க,

“கிட்டி நாம என்ன இப்படியே நேரடியாவா போய் பார்க்கப் போறோம்?”

“அப்புறம் எப்படி சாத்விகா?” என்று ஆதன் கேட்க,

“சார் நாம வேற வேஷத்துல அவங்க வீட்டுக்குப் போகலாம் சார்.”

“சாத்விகா வேற வேஷத்துல போனாலும் அவங்க நம்மளை எப்படி உள்ள விடுவாங்க?”

“சார் நாம எந்த வேஷம் போட்டாலும் விட மாட்டாங்க. ஒரே ஒரு வேஷத்தை தவிர.” என்று சாத்விகா புதிர் போட,

“என்ன வேஷம் ராக்கி?” என்று ரவி ஆர்வமாகக் கேட்க,

“வேலைக்காரங்க வேஷம்.” என்று சாத்விகா கூற, அனைவரும் புரியாமல் அவளைப் பார்க்க, அவளே தொடர்ந்தாள்,

“அவங்க வீட்டுல, அங்க இருக்கிறவங்க மட்டும் சுதந்திரமா எல்லா இடத்துக்கும் போக மாட்டாங்க. அவங்களை தவிர்த்து இன்னொரு ஆளும் சுதந்திரமா அந்த வீட்டுக்குள் எங்க வேணாலும் போகலாம். அதாவது அந்த வீட்டுல வேலைச் செய்றவங்களும் சுதந்திரமா போகலாம்.” என்று அவள் கூற, யாருக்கும் எதுவும் புரியவில்லை.

“சரி அதுக்கு என்ன பண்ண இப்போ?” என்று சக்தி கேட்க, ஆதனிற்கு இப்போது நன்றாகப் புரிந்தது.

“நான் இப்போவே வேலுமணி அப்புறம் கல்யாண் வீட்டுல யாரு வேலைப் பார்க்கிறாங்கனு விசாரிக்கிறேன்.” என்று ஆதன் கூறிவிட்டு அவனது கைப்பேசி எடுத்து செல்வத்திற்கு அழைத்து விஷயத்தைக் கூறி விசாரிக்கக் கூறிவிட்டு வைத்தான்.

அதற்குள் சாத்விகா இங்கு மற்றவர்களிடம்,”ஹேய் புரியலையா? அங்க வேலைச் செய்றவங்களை நம்ம சைட் வேலைச் செய்ய வைச்சா போதும்.” என்று அவள் கூற,

“ராக்கி எப்படி இவ்ளோ உறுதியா சொல்ற? ஒரு வேளை அவங்க வீட்டுல யாரும் வேலைப் பார்க்காட்டி?” என்று ரவி கேட்க,

“டேய் ஏன் டா நெகடிவ்வா பேசுற?” என்று பிரபு அவனைத் திட்ட,

“இல்லை பீஸ்ட், கண்டிப்பா அவங்க வீட்டுல யாராவது வேலை செய்வாங்க. அவங்களாம் சொகுசா வாழ்றவங்க பீஸ்ட். ஸோ கண்டிப்பா யாரையாவது வேலைக்கு வைச்சுருப்பாங்க.” என்று சாத்விகா திடமாகக் கூற, மற்றவர்கள் அப்படி இருக்க வேண்டுமெனக் கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டனர்.

சரியாக அரை மணிநேரத்திலே அவர்கள் வீட்டில் வேலை செய்யும் பெண் யாரென்ற விவரத்துடன் செல்வம் அங்கு வந்தார்.

“ரொம்ப சந்தோஷம் செல்வம். அந்த லேடிய இங்கக் கூட்டிட்டு வர முடியுமா உங்களால? என்ன விஷயம்னு சொல்லாதீங்க. அதே மாதிரி அந்த அம்மா பத்தி நல்லா விசாரிச்சுட்டு வாங்க நம்பிக்கையானவங்களானு.” என்று ஆதன் கூற,

செல்வமும்,”சார் கண்டிப்பா கூட்டிட்டு வரேன்.” என்று கூறி அவர் சென்றார்.

அவர் சென்றவுடன் ஆதன்,”சாத்விகா அவங்க நமக்கு உதவிச் செய்வாங்கனு நம்புறீங்களா? அதுவமில்லாமல் அவங்க நமக்கு எப்படி உதவிச் செய்வாங்க? ஏதாவது செஞ்சு மாட்டிக்கிட்டா நமக்கு அது ஆபத்தா முடியுமே.”

“சார் எந்த ஆபத்தும் வரப் போறது இல்லை. அவங்க நமக்கு நேரடியா உதவப் போறது இல்லை. மறைமுகமா தான் உதவப் போறாங்க. அவங்களுக்கு உடம்புச் சரியில்லை அதனால வேற ஒருத்தர் அன்னைக்கு ஒரு நாள் மட்டும் வேலைக்கு வரதா அவங்க சொன்னா மட்டும் போதும் சார். நாம யாராவது அவங்களுக்கு பதில்ல போனால் போதும் சார். அவங்க வீட்டுல ரம்யா லேப் இருந்தா அதை அப்படியே எடுத்துட்டு வந்துடலாம் சார்.” என்று சாத்விகா கூற,

“இல்லை சாத்விகா இது விபரீதமா முடியும். நீங்க போய் லேப்டாப் எடுத்துட்டு வந்துட்டா அவங்களோட சந்தகேம் அப்படியே அந்த அம்மா மேல விழுந்துரும். ஸோ இது ரிஸ்க் ஜாஸ்தி. அதுவுமில்லாம அவங்க வரலைனு சொன்னா உடனே உங்களை வேலைக்கு வரச் சொல்லுவாங்களா?”

“ப்ச் நான் இதை யோசிக்கவே இல்லை சார். நீங்க சொல்றதும் கரெக்ட் தான். இப்போ என்ன செய்றது சார்?” என்று அவள் கேட்க,

“இப்படி வேணா பண்ணலாம். கண்டிப்பா ரம்யாவோட லேப்டாப் நம்மகிட்ட இருக்கிற லேப் மாதிரி தான் இருக்கும். ஏனா அவங்களோட ஃபோன்ல ஒரு ஃபோட்டல லேப்டாப் ஓட எடுத்திருக்காங்க. அதுல இந்த மாதிரி தான் லேப் வைச்சுருந்தாங்க. யாருக்கும் சந்தேகம் வரக் கூடாதுனு அவங்க அதே மாதிரி லேப்டாப்பை வைச்சருக்காங்க. ஸோ நாம அந்த அம்மாகிட்ட இந்த மாதிரி லேப்டாப் அங்கிருந்தா பார்க்க மட்டும் சொல்லுவோம். அதுக்கு அப்புறம் மீதிய நாம பார்த்துக்கலாம்.” என்று ஆதன் கூற, அதுவும் சரியாகத் தோன்றியது.

ஆதன் கூறிய யோசனைப் படி செய்தால் யாருக்கும் யார் மேலையும் சந்தேகம் வராது. அதன் பிறகு மடிக்கணினியை எப்படி எடுப்பது என சாத்விகா யோசிக்க ஆரம்பித்து விட்டாள்.

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே செல்வம் அந்தப் பெண்மணியுடன் அங்கு வந்தார்.

“சார் இவங்க பேர் மங்கை. வேலுமணி வீட்டுலயும் கல்யாண் சார் வீட்டுலயும் இவங்கத் தான் வேலைப் பார்க்கிறாங்க.” என்று செல்வம் கூற, அந்தப் பெண் சிறிது பயத்துடன் நின்றிருந்தார்.

பேச்சினிடையே செல்வம் ஆதனிற்கு குறுஞ்செய்தி அனுப்பி விட்டார்,”நல்ல நம்பிக்கையானவங்க தான் சார். இவங்க நமக்கு எந்தத் துரோகமும் செய்ய மாட்டாங்க.” என்று. அதனால் ஆதன் தைரியமாகவே பேச்சை ஆரம்பித்தான்.

“அம்மா நீங்கப் பயப்படாதீங்க. நாங்க உங்களை விசாரிக்கக் கூப்பிடலை. உங்களால எங்களுக்கு ஒரு காரியம் ஆகனும். அதுக்கு தான் கூப்பிட்டோம்.” என்று மெதுவாக ஆதன் கூற,

“ஐயா எனக்கு ஒன்னும் புரியலை. என்னால உங்களுக்கு என்ன காரியம் ஆகனும்?” என்று அவர் கேட்க,

“நீங்க இன்ஸ்பெக்டர் வேலுமணி வீட்டுலயும் ஏ.சி.பி. கல்யாண் வீட்டுலயும் வேலைப் பார்க்கிறீங்க தான?”

“ஆமாங்க ஐயா. நான் தான் அங்க வேலைப் பார்க்கிறேன்.” என்று அவர் கூற, ஆதன் சாத்விகாவைப் பார்க்க,

“அம்மா எங்களுக்கு நீங்க ஒரு உதவி பண்ணனும்.”

“என்ன உதவி செய்யனும் மா?” என்று அவர் கேட்க,

சாத்விகா, மடிக்கணினியை எடுத்துக் கொண்டு வந்து அதை அவரிடம் காட்டி,”நீங்க வேலைப் பார்க்கிற வேலுமணி வீட்டுலயும் கல்யாண் வீட்டுலயும் இந்த மாதிரி லேப்டாப் இருக்கான்னு பார்க்கனும்.” என்று அவள் கூற,

“அம்மா எனக்கு இதைப் பத்தி எதுவும் தெரியாதுங்களே!!” என்று அவர் தயங்க,

“உங்களுக்கு எதுவும் தெரிய வேண்டாம். நீங்க திறந்துலாம் எதுவும் பார்க்க வேண்டாம். இதோ பார்க்கிறீங்கள இதே மாதிரி இதே கலர்ல இருந்தா அதைப் பார்த்துட்டு வந்து எங்ககிட்ட சொன்னால் மட்டும் போதும்.” என்று ஆதன் கூற, அப்பொழுதும் அவர் திறுதிறுவென முழித்துக் கொண்டு நிற்க,

“சார் அவங்க ரொம்ப பயப்படுறாங்க. நான் வேணா அவங்கக் கூட போறேன். அவங்களுக்கு உடம்புச் சரியில்லை அதனால நான் அவங்களுக்கு ஹெல்ப் பண்றேன்னு போறேன். அப்போ யாருக்கும் எந்தச் சந்தேகமும் வராதுல சார்.” என்று சக்தி கூற, ஆதன் யோசித்தான்.

“சார் இது சரியா வரும்னு நினைக்கிறேன். சக்தி போக வேண்டாம்னு விருப்பப்பட்டா நான் போறேன்.” என்று சாத்விகா கூற,

“இல்லை இல்லை அப்படி எல்லாம் கிடையாது. எனக்கு அவங்க போறதுல எந்தப் பிரச்சனையும் இல்லை. இது சரியா வருமானு தான் யோசிக்கிறேன்.” என்று கூறிவிட்டு, இரண்டு நொடி அமைதிக்குப் பின்,”சரி இவங்களும் ரொம்ப தயங்குறாங்க. அவங்க கூடப் போகட்டும்.” என்று முடிவு செய்யப்பட,

“இங்கப் பாருங்க அம்மா, இதோ நிக்கிறாளே இவளை உங்கக் கூட கூட்டிட்டு போங்க நாளைக்கு. அந்த வீட்டுல இருக்கிறவங்க ஏன் இவள் வந்துருக்கானு கேட்டா உங்களுக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்லை அதனால் உங்களுக்கு உதவிப் பண்ண வந்துருக்கானு சொல்லுங்க. இவள் உங்களுக்கு யாருனு கேட்டா, உங்களோட அக்கா பொண்ணுனு சொல்லுங்க சரியா. இதை மட்டும் நீங்க எங்களுக்குச் செய்யுங்க போதும்.” என்று சாத்விகா பொறுமையாக அவருக்கு எடுத்துக் கூற,

“எனக்குப் பயமா இருக்குதுங்க.” என்று அவர் கூற,

“இங்கப் பாருங்க, இதுல பயப்பட எதுவுமில்லை. நீங்க ஒரு பெரிய கொலை வழக்குக்கு உதவிச் செய்யப் போறீங்க. அதை மட்டும் நீங்க ஞாபகம் வைச்சுக்கோங்க. நீங்க ஒரு நல்ல நோக்கத்துக்குத் தான் எங்களுக்கு உதவிச் செய்றீங்க. இதனால உங்களுக்கு எந்தப் பாதிப்பும் வராது. அதுக்கு நான் உத்திரவாதம் தரேன்.” என்று ஆதன் கூற,

“சார் எனக்குப் பயமா தான் இருக்கு. ஆனால் கொலை வழக்குனு வேற சொல்றீங்க. கண்டிப்பா நான் உங்களுக்கு உதவிப் பண்றேன் சார். எனக்குப் பிரச்சனை வராமல் மட்டும் பார்த்துக்குங்க சார்.” என்று அவர் கூற,

“உங்களை நாங்க நம்பித் தான் இந்த வேலையை உங்ககிட்ட ஒப்படைக்கிறோம். எங்களை ஏமாத்த நினைக்காதீங்க. அப்புறம் அந்தப் பாவதுக்கு நீங்க பதில் சொல்லனும்.” என்று தன்மையாக அதே சமயம் சற்று அழுத்தமாக ஆதன் கூற,

“சார் என் பிள்ளைங்க மேல ஆணைய நான் எந்த துரோகமும் செய்ய மாட்டேன் சார். நீங்க என்னைத் தாராளமாக நம்பலாம்.” என்று அவர் கூற, ஆதனுக்கு அப்போது தான் நிம்மதியாக இருந்தது.

Advertisement