Advertisement

ஆதனும் எட்வினும் கிளம்பியதும் சதீஷ் வேகமாக அவனது அறைக்குச் சென்று கதவைப் பூட்டி விட்டு அவனது கைப்பேசி எடுத்து யாருக்கோ அழைத்தான்.

“சொல்லு சதீஷ் எதுக்கு கூப்பிட்ட?” என்று கணீர் குரலில் கேட்டான் பாண்டி.

“பாண்டி ரம்யா கேஸை க்ளோஸ் பண்ணிட்டாங்கனு நீங்கச் சொன்னீங்க!! ஆனால் இங்க ஆதன்னு ஒரு ஏ.சி.பி. வந்து எங்களுக்குச் சில சந்தேகம் இருக்கு, அதை நிவர்த்திப் பண்ணிட்டு தான் கேஸை க்ளோஸ் பண்ணுவோம்னு ரம்யாவோட லேப்டாப்பையும் ஃபோன்னையும் வாங்கிட்டு போயிட்டான் பாண்டி.” என்று இவன் கூற,

“என்ன சதீஷ் சொல்ற? ஆதனா? எந்த ஸ்டேஷன் ஏ.சி.பி அவன்? கல்யாண் தான அந்த ஏரியா ஏ.சி.பி!! சரி அப்படியே அவன் வந்து கேட்டாலும் உன்னை யார்யா கொடுக்கச் சொன்னது? கொடுக்க முடியாதுனு சொல்லிருக்க வேண்டியது தான?” என்று பாண்டி கேட்க,

“இல்லை அது எப்படி நான் சொல்ல முடியும்? அப்படிச் சொன்னா அவங்களுக்கு என் மேல சந்தேகம் வந்துடாதா?” என்று சதீஷ் கேட்க,

“ஏதாவது சொல்லிட போறேன். சரி வையா நான் என்ன பண்றதுனு பார்க்கிறேன். மறுபடியும் எவனாவது வந்தா வீட்டுக்குள்ள விடாத.” என்று கோபமாக பாண்டி கூற,

“சரி பாண்டி. அப்புறம் இன்னும் அமௌன்ட் வரலைனு… பேபி சொன்னா….” என்று இழுத்துக் கூற,

“யோவ் இப்போ என்ன பிரச்சனை போயிட்டு இருக்கு? நீ பணம் கேட்டுட்டு இருக்க? அதெல்லாம் சொன்னபடி உனக்கு வந்து சேரும். வை யா ஃபோன்னை.” என்று கடுப்புடன் கைப்பேசியை வைத்தான் பாண்டி.

சதீஷ் வைத்தவுடன் பாண்டி வேகமாக கல்யாணிற்கு அழைக்க, அவன் எடுத்து சாதாரணமாக,”என்ன பாண்டி?” என்று கேட்க,

“ரம்யாவோட லேப்டாப் உன்கிட்ட தான இருக்க?”

“ஆமா பாண்டி, பத்திரமா என்கிட்ட தான் இருக்கு.”

“எங்ககிட்ட டபுள் கேம் எதுவும் விளையாட நினைச்ச உன்னை உரு தெரியாம அளிச்சுடுவேன்.” என்று பாண்டி மிரட்ட,

“பாண்டி எதுக்கு நீ இவ்ளோ கோபமா பேசுற?”

“என்ன நீ சொல்லாட்டி எனக்கு எதுவும் தெரியாதுனு நினைச்சியா?”

“புரியலை பாண்டி, நீ என்ன பேசுறனு!!”

“ஏய் ரம்யா கேஸ்ஸை யாரோ ஆதன்னு ஒருத்தன் டீல் பண்றானாம்? க்ளோஸ் பண்ண கேஸை ஏன் திடிர்னு ஓப்பன் பண்ணாங்க?”

“அது கமிஷ்னர் முடிவு பாண்டி. என்னால தடுக்க முடியலை. ஆனால் கவலைப்பட எதுவுமில்லை பாண்டி. அவனுக்கு எந்த ஆதாரமும் கிடைக்காது. அப்படியே கிடைச்சாலும் அவனை மண்ணை கவ்வ வைக்காமல் நான் விட மாட்டேன்.” என்று கல்யாண் கூற,

“வசனம் எல்லாம் நல்லா தான் பேசுற!! ஆனால் செயல்ல ஒன்னத்தையும் காணோம்.”

“இந்த முறை எந்தத் தப்பும் நடக்காது பாண்டி. என்னை நீ நம்பலாம் பாண்டி.”

“உன்னை நான் நம்புறேன். ஏதாவது தப்பு நடந்துச்சு உன்னைக் கொல்லக் கூட நான் தயங்க மாட்டேன். ஞாபகம் வைச்சுக்கோ!!” என்று கூறிவிட்டு பாண்டி வைக்க, கல்யாணிற்கு தான் முடியைப் பிடிங்கிக் கொள்ளும் நிலை. கல்யாண், எட்வின் அல்லது செல்வத்தை ஆதனிற்கு எதிராகத் திருப்ப நினைத்தான். ஆனால் அவன் விசாரித்தவரை அவர்கள் இருவரும் ஆதனிற்கு இரண்டு கைகள் போல். அவர்களை எளிதில் ஆதனிற்கு எதிராக மாற்ற முடியாது. சரி வேற யாரையாவது ஏற்பாடு செய்யலாம் என்று பார்த்தால், ஆதன் அவர்கள் இருவரைத் தவிர வேற யாருடனும் இந்த வழக்கு பற்றி விவாதிக்க வில்லை. என்னச் செய்வது என்று புரியாமல் குழம்பித் தவிர்த்தான் கல்யாண். ஒன்றும் செய்யாமலிருந்தால் கண்டிப்பாக பாண்டி தன்னைக் கொலை பண்ணிடுவான் என்று பயந்தார். ஆனால் அவனே எதிர்பார்க்காத நேரத்தில் ஆதனே அவனுக்கு ஒரு வாய்ப்பை உருவாக்குவான் என்று கல்யாண் கனவிலும் நினைத்திருக்க மாட்டான்.

~~~~~~~~~~

எட்வினும் செல்வமும் திறுதிறு என முழிக்க, ஆதன் அவர்களைப் பார்த்துச் சிரித்து,”அட முழிக்காம வாங்க இரண்டு பேரும்.” என்று அவன் கூறிவிட்டு முன்னே நடக்க, எட்வினும் செல்வமும் அவன் பின்னையே சென்றார்கள்.

செல்வம் மெதுவாக எட்வினிடம்,”சார் எதுக்கு இங்க வந்துருக்கோம்?”

“அண்ணா எனக்குத் தெரிஞ்சா நான் சொல்ல மாட்டேனா? சார் ஏதாவது காரணத்தோட தான் நம்மளை இங்கக் கூட்டிட்டு வந்துருப்பார். மேல போனால் நமக்கு எல்லாம் தெரிஞ்சுடும்.” என்று எட்வின் மெதுவாகக் கூற, அதுவும் சரிதான் என்று செல்வமும் அமைதியாகி விட்டார்.

மேலே சென்றவர்களை சாத்விகா வரவேற்று அவர்களுக்குக் குடிக்க காஃபி கொண்டு வந்து கொடுத்தாள். முன்னமே அவளது நண்பர்களிடம் மேலோட்டமாக ஆதன் எதற்கு வருகிறான் என்பதைக் கூறியிருந்ததால் அவர்களும் ஆர்வமாக இருந்தனர். முதன் முதலாக அவர்கள் ஒரு கொலை வழக்கில் ஈடுபடுகிறார்கள். அந்த ஆர்வம் அவர்களை மேலே எதுவும் கேட்க விட வில்லை.

“சார் ஏதோ முக்கியமா பேசனும்னு சொன்னீங்க?”

“ஆமா, நாங்க ரம்யா வீட்டுக்குப் போனோம் இன்னைக்கு. இது அவங்க லேப்டாப் அண்ட் ஃபோன். இதுல ஏதாவது ஆதாரமிருக்கானு பார்க்கனும். உங்க ப்ரண்ட இதுல கை தேர்ந்தவங்கனு நீங்க நேத்து சொன்னது ஞாபகம் வந்துச்சு. அதான் இப்போ நாங்க இங்க வந்தோம்.” என்று கூறி மடிக்கணினியையும் கைப்பேசியையும் அவளிடம் தர,

“நீங்கக் கவலையை விடுங்க இதுல ஜெசிக்காவும் பிரபுவும் எக்ஸ்பெர்ட். அக்கு வேறு ஆணி வேறா அலசி ஆராயஞ்சிடுலாம்.” என்று சாத்விகா கூற,

“ரொம்ப தாங்க்ஸ் நான் ஈவ்னிங் வரேன். அதுக்குள்ள பார்த்து வைங்க.” என்று கூறிவிட்டு கிளம்பி விட, எட்வினும் செல்வமும் கீ கொடுத்த பொம்மைகள் போல எழுந்து அவன் பின்னையே சென்றனர்.

செல்வம் இப்பொழுது முந்திக் கொண்டு ஓட்டுநர் இருக்கையில் அமரப் போக, அவரின் செய்கை ஆதனிற்கும் எட்வினிற்கும் சிரிப்பைத் தந்தது.

“செல்வம் இப்போ நீங்கத் தான் வண்டி ஓட்டப் போறீங்க. மெதுவாவே போங்க, விழுந்துடாதீங்க.” என்று அவன் கூற,

அவரும் சிரித்துக் கொண்டே ஜீப்பில் ஏறி அமர்ந்தார். ஆதன் அவருக்கு அருகில் அமர, எட்வின் பின்னால் அமர்ந்தான்.

“சார் இப்போ ஸ்டேஷனுக்கா?”

“இல்லை செல்வம். கணபதி அனுப்புன லிஸ்ட்ல இருக்கிறவங்களைப் பார்க்கப் போறோம். அவங்க எங்க இருக்காங்கனு உங்களுக்குத் தெரியுமா?” என்று அவன் கேட்க,

“இல்லை சார். ஆனால் அவங்களோட செல்ஃபோன் நம்பர் கொடுத்துருக்கார் சார் கணபதி.” என்று அவர் கூற,

“அப்போ எட்வின் உங்களை ஸ்டேஷன்ல இறக்கி விடுறேன். நீங்கப் போய் ஒவ்வொரு நம்பரோட கரென்ட் லோகேஷன் பார்த்துட்டு எனக்குச் சொல்லுங்க.” என்று ஆதன் கூற,

“ஓகே சார்.” என்று எட்வினும் கூற,

“அந்த வீட்டுல யார் திருடுனாங்கனு கணபதிக்குத் தெரியலையா?” என்று ஆதன் செல்வத்திடம் கேட்க,

“இல்லை சார். அது அந்த வேலுமணிக்கு மட்டும் தான் தெரியும் சார். அதை விட கணபதி நேர்மையானவர் சார். அப்படியே காசு பார்ட்டியா இருந்தாலும் வேலுமணி அந்த ஸ்டேஷன்ல இருக்கிற வரைக்கும் யாரும் காசு பார்க்க முடியாது சார். அவர் மட்டுமே லஞ்சம் வாங்குவார் சார்.மத்தவங்க வாங்குனாலும் அவங்ககிட்ட இருந்து இவர் பிடிங்கிடுவார் சார். அதனால யார் என்னன்னு அவர் மத்தவங்கிட்ட சொல்றது இல்லை சார்.” என்று செல்வம் கூற,

“அந்த ஆள் இன்னும் திருந்தல!! சை அவரெல்லாம் போலிஸா இருக்க லாயிக்கே இல்லாதவர். என்கிட்ட மாட்டாமலா போவார்!! அப்போ இருக்கு அந்த ஆளுக்கு.”

“அந்த ஆள் இவ்ளோ பண்ணியும் நீங்க இன்னும் மரியாதை தந்துட்டு இருக்கீங்க சார்.” என்று எட்வின் கூற,

“அவரு கெட்டவரா இருந்தாலும் என்னை விட வயசுல மூத்தவர். என்னால சட்டுனு ஒருமையில பேச முடியல.” என்று ஆதன் கூறுவதற்கும் காவல் நிலையம் வருவதற்கும் சரியாக இருக்க, எட்வினை இறக்கி விட்டு அவர்கள் கிளம்பினார்கள்.

எட்வினும் ஆதன் கூறியது போல் கன்ட்ரோல் ரூம் சென்று முதலில் இருக்கும் ஆள்ளின் எண்ணை அளித்து அவனது தற்போது எங்கு இருக்கிறான் என்று ஆதனிடம் கூற, அவன் அதை செல்வத்திடம் கூற, செல்வம் அங்கே வண்டியை விட்டார்.

ஆதனை பார்த்ததும் அந்த ஆள் அங்கு இருந்து தப்பிக்க முயற்சி செய்ய, வேகமாக ஓடிச் சென்று அவனை இழுத்துப் பிடித்து விலங்கை மாட்டி ஜீப்பில் ஏற்றிய ஆதன்,”என்கிட்ட இருந்து தப்பிக்க நினைச்ச, இருக்கிற எல்லா கேஸ்ஸையும் உன் மேல போட்டு உன் ஆயுசு முடியற வரைக்கும் நீ ஜெயில்ல இருக்கிற மாதிரி பண்ணிடுவேன். ஒழுங்கா அமைதியா எனக்கு ஒத்துழைச்சா மதியமே நீ வீட்டுக்கு வந்துடலாம். இல்லை நீ ஆயுசுக்கும் களி திங்க வேண்டியது தான். ஞாபகம் வைச்சுக்கோ!!” என்று ஆதன் மிரட்டலுடன் கூற, அந்தத் திருடன் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை அமைதியாகி விட்டான்.

அதே போல் கணபதி கூறிய ஆறு பேரையும் பிடித்துக் கொண்டு காவல் நிலையம் வந்தார்கள் செல்வமும் ஆதனும். அவர்கள் வரவும் எட்வினும் வெளியே வந்து ஆறு பேரையும் கைதிகளை விசாரிக்கும் விசாரணை அறைக்கு அழைத்துச் சென்றான் எட்வின்.

“ஏய் எல்லாரும் வரிசையா நில்லுங்க.” என்று ஆதன் கூற, அவர்கள் அசையாமல் அப்படியே நிற்க,

“சார் சொன்னது காதுல விழலையா? ஒழுங்கா நில்லுங்க டா.” என்று எட்வின் கூற, அப்பொழுதும் அப்படியே நிற்க,

“சரி அவங்க அப்படியே நிக்கட்டும். எட்வின் நீங்க போய் இருக்கிற பெண்டிங் கேஸ் எல்லாத்தையும் எடுத்துட்டு வாங்க. இவங்க மேல போட்டு ஆயுசுக்கும் உள்ள வராத மாதிரி பண்ணிடலாம். நான் சும்மா சொன்னேன்னு நினைச்சுட்டாங்க போல.” என்று கூறி அங்கிருந்த மேஜையின் மேல ஏறி அமர, எட்வின் எடுக்க வெளியே செல்ல, ஆறு பேரும் பயந்து,”அய்யோ வேண்டாம். நாங்க நிக்கிறோம்.” என்று கூறி வரிசையாக நின்றனர்.

“சரி நான் கேட்கிற கேள்விக்கு ஒழுங்கா பதில் சொல்லிட்டா சீக்கிரமே போயிடலாம். அப்படி இல்லாமல் நீங்க வீம்பு பண்ணா நானும் சொன்னதை செய்வேன் புரியுதா?” என்று ஆதன் கேட்க,

“புரியுது சார்.” என்று அனைவரும் மெதுவாகக் கூற,

“கேட்கலை சத்தமா!!” என்று காதை குடைந்து கொண்டே கேட்க,

“புரியுது சார்.” என்று ஆறு பேரும் ஓரே நேரத்தில் அந்த அறையே அதிரும் படிக் கத்திச் சொன்னார்கள்.

“ம் இது நல்லா இருக்கு. சரி சொல்லுங்க உங்க ஆறு பேர்ல யார் மாதவரம், சாமி தெருவுல பத்தாம் நம்பர் வீட்டுல திருடப் போனது?” என்று கேட்க, ஆறு பேரும் அமைதியாக இருக்க,

“ப்ச் இவங்களுக்கு நான் சொல்றது புரியலை. எட்வின் நீங்க இன்னுமா ஃபைல்லை எடுக்கப் போகலை?” என்று ஆதன் கேட்க,

“சார் நாங்க இல்லை சார்.” என்று ஐந்து பேர் கூற, அந்த ஆறாவது ஆள் திறுதிறுவென முழித்தான். அவன் இதை எதிர்பார்க்கவே இல்லை. அனைவரும் அமைதியாக இருப்பார்கள் என்று அவன் நினைக்க, மற்றவர்களோ சிறைச் செல்லப் பயந்து தாங்கள் இல்லை என்று ஒத்துக் கொள்ள, அவன் மாட்டிக் கொண்டான்.

ஆதன் செல்வத்திடன் கண்ணைக் காட்ட, அவர் மற்ற ஐவரையும் வெளியே அழைத்துச் சென்று இன்னொரு அறையில் அமர வைத்தார். அவர்கள் சென்றதும் ஆதன் அந்த ஆறாவது ஆளிடம் வந்து,”உன் பேர் என்ன?” என்று கேட்க,

“சாமிக்கண்ணு சார்.”

“அப்படியா சந்தோஷம். சொல்லு சாமிக்கண்ணு நீ தான் அந்த வீட்டுல திருடினியா? சாமி பேர் வேற வைச்சுருக்க, அதனால பொய் சொல்லக் கூடாது. அப்புறம் உன் பேரை மாதிரியே சாமி உன் கண்ணை குத்திரும்.” என்று அவன் ஏற்ற இறக்கத்துடன் நக்கலாகக் கூற,

“சார் அது வந்து…” என்று அவன் தலையைச் சொறிய,

“அடச் சும்மா சொல்லு சாமிக்கண்ணு. நான் ஒன்னும் பண்ண மாட்டேன்.” என்று ஆதன் கூற,

மிகவும் தயங்கிக் கொண்டே அவன்,”ஆமா சார். நான் தான் பண்ணேன்.”

“சரி எப்போ நீ அந்த வீட்டுக்குத் திருடப் போன?” என்று அவன் கேட்க,

“சார் ஒரு இரண்டு நாளுக்கு முன்ன சார்.”

“எத்தனை மணிக்குப் போன?”

“பண்ணென்டு மணிக்கு மேல இருக்கும் சார்.” என்று அவன் கூற,

“சூப்பர். அப்படியே நான் இப்போ கேட்கிற கேள்விக்கும் நல்ல பிள்ளையா பதில் சொல்லிடனும் சரியா. நீ திருடப் போன போது சந்தேகம் வர மாதிரி ஆள் நடமாட்டம் எதுவும் பார்த்தியா நீ?” என்று ஆதன் கேட்க,

“இல்லை சார் நான் எதுவும் பார்க்கலை.” என்று அவன் கூற,

“ப்ச் நல்லா யோசிச்சு சொல்லு சாமிக்கண்ணு.” என்று ஆதன் கூற, அவன் மறுபடியும் எதுவும் பார்க்கவில்லை என்று சாதிக்க,

“இங்கப் பார் என் பொறுமைய ரொம்ப சோதிக்கிற!! தயவு செஞ்சு நீ உண்மையை சொல்லிடு. அப்படிச் சொன்னா நீ இது வரைக்கும் செஞ்ச தப்பை எல்லாம் மறந்து நீ திருந்தி வாழ உனக்கு நல்ல வேலை நான் வாங்கித் தரேன். அதனால யாருக்கும் எதுக்கும் பயப்படாம நீ சொல்லு.” என்று ஆதன் மிகவும் பொறுமையாக அவனிடம் கேட்க,

சாமிக்கண்ணு, ஆதன் சொன்னது போல, தனக்கு ஒரு நல்ல வேலை இருந்தால் பிரிந்து சென்ற மனைவியும் குழந்தையும் தன்னுடன் வந்து விடுவார்கள் என்று எண்ணி,”சார் நான் சொல்றேன். ஆனால் அதுக்கு அப்புறம் நீங்கச் சொன்னதை மறக்கக் கூடாது.” என்று அவன் கூற,

“கண்டிப்பா நான் சொன்னதைச் செய்வேன். நீ தயங்காமல் சொல்லு.” என்று ஆதன் கூறியதும்,

“சார் அன்னைக்கு நான் திருட போன இடத்துக்கு மூணு வீடு தள்ளி, அதான் இப்போ இறந்து போனாங்களே அவங்க வீடு தான் சார். அந்த வீட்டுக்குள்ள நாலைஞ்சு பேர் போனாங்க சார். அதுவும் ஏணி போட்டு ஜன்னல் வழியா உள்ள போனாங்க சார். நான் அவங்க திருடத் தான் வந்துருக்காங்க அவங்ககிட்ட பங்குக் கேட்கலாம்னு நானும் ஏணி வழியா ஏறிப் போனேன் சார். அப்போ அந்த அம்மா மொபைலை பார்த்து கிட்டே தூக்குப் போட்டுக்குச்சு சார். எனக்குக் கை கால் எல்லாம் உதர ஆரம்பிச்சுடுச்சு. அப்படியே சத்தம் போடாமல் வந்த வழியா இறங்கி நான் போயிட்டேன் சார். அதை நினைச்சு எனக்கு காச்சல்லே வந்துருச்சு சான்.” என்று அவன் கூற, ஆதனிற்கு என்ன கூறுவது என்று புரியவில்லை.

“எட்வின், செல்வத்தை வரச் சொல்லுங்க, நான் இப்போவே கமிஷ்னர் ஆபிஸ் போறேன்.” என்று அவன் கூற, வேகமாக எட்வின் வெளியே சென்றான்.

செல்வம் உள்ளே வந்து சாமிக்கண்ணை அழைத்துக் கொண்டு செல்ல, ஆதனிற்கு சாத்விகாவிடம் இருந்து அழைப்பு வந்தது.

“சொல்லுங்க சாத்விகா.”

“சார் அந்த மொபைல் அண்ட் லேப்ல எதுவுமில்லை. அப்புறம் முக்கியமான விஷயம் அந்த லேப்டாப் ரம்யாவோடதே இல்லை.” என்று அவள் கூற, அதைக் கேட்டவனுக்கு அதிர்ச்சி.

“என்ன சொல்றீங்க சாத்விகா? எப்படி அது ரம்யா லேப் இல்லைனு சொல்றீங்க?”

“ஆமா சார். ஜெசி அந்த லேப்ல எதுவும் இருக்கானு பார்த்த போது எங்களுக்கும் எதுவுமே கிடைக்கலை. அப்புறம் ஒரு சந்தேகத்துல லேப்ல இருக்கிற ஃபிங்கர் ஃபிர்ன்ட் டெஸ்ட் பண்ணும் போது அதுல ரம்யாவோட ஃபிங்கர் ஃபிர்ன்ட்டே இல்லை.” என்று சாத்விகா கூற, ஆதனுக்கு இருந்த அவசரத்தில் அவனால் எதுவும் யோசிக்க முடியவில்லை. இவர்கள் எப்படி இதைச் செய்தார்கள் என்று அவன் யோசித்து நேரத்தை வீணாக்க விரும்பவில்லை அதனால்,

“சாத்விகா எனக்கு இம்பார்ட்டென்ட் எவிடன்ஸ் கிடைச்சுருக்கு. அது விஷயமா பேச நான் கமிஷ்னர் ஆபிஸ்கு போறேன். வந்ததும் நான் உங்களை வந்து பார்க்கிறேன். அது வரைக்கும் யாரும் எதுவும் செய்ய வேண்டாம்.” என்று கூறிவிட்டு அவன் வைத்து விட,

“சார் உண்மையைச் சொன்னா விட்டுடுறேன்னு சொல்லிட்டு இப்போ எங்க கூட்டிட்டு போறீங்க?” என்று பயத்துடன் சாமிக்கண்ணு கேட்க,

“நீ பயப்படாத. நான் சொன்னதை அப்படியே கமிஷ்னர்கிட்டு சொல்லு போதும். நான் சொன்னதைக் கண்டிப்பா செய்வேன்.” என்று ஆதன் கூறினாலும் அவனுக்குப் பயமாகத் தான் இருந்தது.

சாமிக்கண்ணு கமிஷ்னரிடம் உண்மையைக் கூறுவானா அல்லது மனம் மாறி விடுவானா? பார்க்கலாம்.

Advertisement