சுபாஷிணி சொல்ல முயன்ற எதையும் காது கொடுத்து கேட்க முயற்சி செய்யாமல், தான் பேச நினைத்ததை எல்லாம் கத்தி தீர்த்து விட்டே போனை வைத்தார் மரகதம்.
சுபாஷிணியும் ஒருகட்டத்திற்கு மேல் தன் முயற்சியை கைவிட்டு விட்டு, “என்ன பேச வேண்டுமோ பேசிக்கொள்ளுங்கள்” என்று ரீதியில் அமைதியாக உட்கார்ந்து விட்டாள்.
பேசி முடித்து மரகதம் அழைப்பைத் துண்டிக்கவும், அலையடித்து ஓய்ந்தது போலிருக்க, அமர்ந்திருந்த சோஃபாவிலேயே காலை நீட்டி படுத்து விட்டாள் சுபாஷிணி.
மனமோ, “கணவனோடு அவர்களைத் தான் சந்திக்க செல்லவில்லை” என்று பாட்டி சொல்லிய குற்றச்சாட்டிலேயே நின்றது.
‘ஏன்? நான் தான் அங்க போகணுமா? அவங்க சொன்ன அதே பாசம் எம்மேல அவங்களுக்கும் இருந்தா, எல்லாரும் கிளம்பி இங்க வரலாமே?’ என்று சுபாஷிணி எண்ணிய அதேநேரம்,
‘எதுக்கு அவங்க இங்க வரணும்? இன்னைக்கு ஏதோ கொஞ்சமேக் கொஞ்சம் மலையிறங்கியிருக்குற உன் அத்தானை, மறுபடியும் மலை ஏத்துறதுக்கா?’ என்று அவள் மனமே அவளை நையாண்டி செய்தது.
‘ஹ்ம்ம்… அதுவும் சரிதான். நான் மாமா வீட்டுக்கு போகணும்னு சொன்னாலோ, இல்ல அவங்க இங்க வர்றதா தெரிஞ்சாலோ, கண்டிப்பா அத்தானுக்கு கோபம் வரும். அதனால பாட்டி போன் செய்ததைச் சொல்லி வீணா அத்தானை கோபப்படுத்த வேண்டாம்’ என்று முடிவெடுத்துக் கொண்டாள் சுபாஷிணி.
படிப்பிற்காக, வேலைக்காக என்று சென்னையிலேயே சுபாஷிணி விடுதியில் தங்கியிருந்த இத்தனை வருடங்களில், ஒருசில தடவைகள் தவிர, மாமன் வீட்டுக்கு விரும்பி சுபாஷிணி சென்றதேயில்லை.
எல்லாம் இழந்து தன் குடும்பம் ஊரில் போய் செட்டில் ஆன புதிதில், விடுமுறை நாட்களில் சுபாஷிணி மாமன் வீட்டுக்கு செல்லும் போது, என்னவோ அவர்கள் வீட்டு சொத்தை அவள் மூட்டைக் கட்டி கொண்டு போவதற்காகவே வந்தது போல மாமன் மனைவி நடந்து கொண்ட விதத்திலேயே, சுபாஷிணிக்கு அங்கு செல்லும் ஆவல் இல்லாமலேயே போனது.
அதன் பிறகு பாட்டி மரகதத்தின் ஓயாத புலம்பலில் தான், அத்தி பூத்தது போல சுபாஷிணி அங்கே தன் தலையை காட்டுவது. சுபாஷிணி அங்கே செல்லும் நேரத்தில், மாமன் மகள் ரம்யாவும் இருந்தால், அவ்வளவு தான்… ரம்யா பாடும் அவள் கணவனின் புராணம் கேட்டு சுபாஷிணியின் காதுகள் இரண்டும் தேய்ந்துவிடும்.
புதுப்புது மாடலில், தங்க, வைர நகைகளை சுபாஷிணியிடம் எடுத்துக்காட்டி, “இது என் ஹப்பி, அப்போ வாங்கித் தந்தது, இது இப்போ வாங்கித் தந்தது” என்று உப்புக்கும் பெறாத காரணங்களைச் சொல்லி சுபாஷிணியை அறுத்துதள்ளி விடுவாள் ரம்யா. அதற்குப் பயந்தே சுபாஷிணியின் வருகை அங்கே இன்னும் குறைந்தது.
சமீபகாலமாக, மாமன் மகன் ரஞ்சனின் பார்வைகள் தன்னை வெறிப்பது போல உள்ளுணர்வு சொல்லவே, இப்போதெல்லாம் அங்கே செல்வதற்கு முன் பலதடவை யோசிக்க ஆரம்பித்திருக்கிறாள் சுபாஷிணி.
‘தனக்கே தன் தாய்மாமன் வீட்டுக்கு செல்ல இத்தனை தயக்கம் இருக்கும் போது, அவர்களோடு சுமுக உறவில்லாத தன் கணவன் எப்படி அங்கே வர சம்மதிப்பான்?’ என்றேத் தோன்றியது சுபாஷிணிக்கு.
அதுவும் ரஞ்சனுக்கும், சேனாதிபதிக்கும் மாதவபுரத்தில் வைத்து கைகலப்பே வந்திருக்க, கண்டிப்பாக கணவன் அங்கே வரவாய்ப்பில்லை என்று எண்ணியவளுக்கு, ‘எதற்காக சேனாதிபதி அப்போது ரஞ்சனை அடித்திருப்பான்?’ என்று இப்போது யோசனை ஓடியது.
ரஞ்சன் அன்று சொல்லியது போல, பொறாமைபட்டெல்லாம் அடிக்கிற ஆள் அவள் அத்தானில்லை… அப்படியென்றால், அத்தான் வேறு எதற்காக ரஞ்சனை அடித்திருக்க கூடும்?’ இத்தனை வருடங்கள் இல்லாமல் திடீரென்று யோசிக்கத் தோன்றியது சுபாஷிணிக்கு.
‘அப்படி அடிவாங்கும் அளவிற்கு என்ன செய்திருப்பான் ரஞ்சன்?’ அந்த நாளின் நினைவிற்கே சென்றவளின் மூளையில், பாத்ரூம் வாசலில் அப்போது நின்று கொண்டிருந்த மங்கையின் முகம் பளிச்சென்று மின்னி மறைந்தது.
அதுவும் உடன்பிறந்தவன், ஒருவனை போட்டு புரட்டி எடுக்க, அவனைத் தடுக்க வேண்டும் என்ற எண்ணம் எதுவும் இல்லாமல் அப்படியே பதுமை போல பார்த்துக் கொண்டு நின்ற மங்கையின் முகம் தெளிவாக ஞாபகத்துக்கு வர, ‘அப்படியானால்… அப்படியானால்… மங்கையிடம் ரஞ்சன் எதுவும் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்திருப்பானோ? அதனால் தான் அத்தான் அவனை அடித்ததா? அதனால் தான் மங்கையும் தன் அண்ணனைத் தடுக்காமல் அப்படியே பார்த்துக்கொண்டு நின்றாளா?’
தன் எண்ணத்தின் வீரியத்தில், இதயம் படபடவென அடிக்க, சட்டென்று எழும்பி அமர்ந்த சுபாஷிணியால் தன் யூகத்தை நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. பொதுவாகவே என்னைவிட ராகுலிடம் தான் மங்கைக்கு ஒட்டுதல் அதிகம். அதற்காக என்னை எப்போதுமே அவள் ஒதுக்கியதில்லை. ஆனால், சமீப காலங்களாக என்னிடம் அவள் காட்டும் ஒதுக்கம் கூட அதனால் தானோ?’
ஒன்றன் பின் ஒன்றாக நடந்தவற்றை கோர்த்து பார்த்த சுபாஷிணிக்கு தன் யூகம் சரியானதாக இருக்க வாய்ப்புள்ளது என்று தோன்றவுமே சோர்ந்து போனாள்.
சிறுபிள்ளைத்தனமாக நிறத்தைச் சுட்டிக்காட்டி சேனாதிபதியை நோகடித்ததோடு, தவறு செய்தவனுக்காக பரிந்து கொண்டு பட்டிக்காட்டானைப் போல நடந்து கொள்கிறாய் என்றும் அவனைக் குற்றம் சாட்டியிருக்கிறாளே இந்த அறிவாளி…
‘எப்படித்தான் அத்தானை சமாதானம் செய்யப் போகிறேனோ?’ நினைக்கும் போதே கண்ணைக் கட்டிக்கொண்டு வர, தலை விர்ரென்று வலித்தது சுபாஷிணிக்கு. விரலால் நெற்றியை நீவிவிட்டுக் கொண்டவளுக்கு டீ குடித்தால் நன்றாக இருக்கும் போலத் தோன்றவும் மெதுவாக எழும்பினாள்.
‘முதலில் உடல்கழுவி, வேறு உடைக்கு மாறிக்கொள்ளலாம்’ என்று முடிவு செய்தவள், சேனாதிபதியின் அறையில் இருந்த குளியறையிலேயே தன்னை சுத்தப்படுத்திக் கொண்டாள். ஒரு பலாசோ பேண்ட்டும், குர்தியையும் எடுத்து அணிந்து கொண்டவள், தன் போனிடெயிலை அப்படியே மேலே தூக்கி கேட்ச் கிளிப்பில் மொத்தமாக அடக்கிக் கொண்டு கண்ணாடியில் தன்னைப் பார்த்தாள்.
இத்தனை நேரம் காலர்நெக் சுடிதாருக்குள் மறைந்து கிடந்த தாலி, குர்தியின் வட்டக்கழுத்தின் உபயத்தால் பளிச்சென்று வெளியே தெரிந்தது. அதை கையில் ஏந்தி பார்த்தவளுக்கு, ஒற்றைப் பார்வையிலேயே தாலியோடு அலுவலகத்திற்கு தான் சென்றதற்கான காரணத்தை கண்டுபிடித்த கணவனின் புத்திசாலித்தனத்தை மெச்சிக்கொள்ளாமல் இருக்கமுடியவில்லை.
இதையெல்லாம் கச்சிதமாக கண்டுகொள்ளும் ஏசிபி க்கு, அவர் மீதான என் காதலை மட்டும் ஏன் கண்டுகொள்ளத் தெரியவில்லை? என்று சிணுங்கியது சுபாஷிணியின் மனது.
‘கண்டுகொள்ள தெரியவில்லையா? இல்லை, கண்டுகொள்ள மனமில்லையா?’ என்ற ரீதியில் சுபாஷிணியின் யோசனை செல்ல, இதற்கு மேலும் சிந்தித்தால் தன் மன அமைதியை தானே கெடுத்து கொள்ளும் அபாயம் ஏற்படலாம் என்பதால், தன் சிந்தனைக்கு ஒரு தடா போட்டு அறையை விட்டு வெளியே வந்தாள்.
நேற்றிரவே இங்கே வந்து விட்டாலும், இன்னமும் வீட்டை ஒழுங்காக பார்க்ககூட இல்லை என்ற எண்ணம் இப்போது வர, இரண்டு படுக்கை அறை தவிர மூன்றாவதாக இருந்த அறையையும் திறந்து பார்த்தாள் சுபாஷிணி. அந்த அறை முற்றுமுழுதாக ஒரு சிறிய ஜிம்மாகவே மாற்றப்பட்டிருந்தது.
“அதானே.. இது இல்லாம இருக்க முடியாதே நம்மாளுக்கு” என்று வாய்விட்டு முணுமுணுத்தவாறே, அந்த அறையின் கதவை முன்போலவே சாத்திவிட்டு கிச்சனுக்கு வந்தாள்.
ஃபிரிட்ஜிலிருந்து தனக்கு தேவையான பாலை எடுத்து டீ போட்டுக் குடித்தவள், சிறிதுநேரம் படுத்து ஓய்வெடுக்க, மனதும், தலைவலியும் லேசாக சமன்பட்டிருந்தது.
இப்போது லேசாக வயிறு பசிக்க ஆரம்பிக்க, கொஞ்சம் ரவை கிடைத்தால் உப்புமா செய்து சாப்பிட்டு விட்டு படுத்துக் கொள்ளலாம் என்ற எண்ணமும் தோன்றவே, கிச்சன் ஷெல்பில் இருந்த டப்பா ஒவ்வொன்றையும் திறந்து பார்வையிட ஆரம்பித்தாள் சுபாஷிணி. பாதாம், பிஸ்தா, முந்திரி, சிறுபயறு, கொண்டைக்கடலை ஆகியவற்றால், அங்கிருந்த டப்பாக்கள் நிறைந்திருந்தன.
ஒரு கிண்ணத்தில் சிறுபயறும் நனைய வைக்கப்பட்டிருக்க, எதற்கென்று தெரியாமல் அப்படியே மூடி வைத்துவிட்டாள் சுபாஷிணி.
ஆக, ரவையைத் தேடி அவள் பயணம் தொடர்ந்ததில், ரவை மட்டுமல்ல அரிசி, பருப்பு இப்படி சமைப்பதற்கு தேவையான பொருட்கள் எதுவுமே அங்கே இல்லை என்பதும் தெரிந்தது. ஆனால், முட்டை, பழங்கள், பால் எல்லாம் தாராளமாக ஃப்ரிட்ஜில் இருந்தது.
சரி, ரவை இல்லை என்றால் என்ன, இதோ நனைய வைத்திருக்கும் சிறுபயிரை அவித்து சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று நினைத்து குக்கரைத் தேடினால், அதுவும் இல்லை. குக்கர் மட்டுமல்ல சமைப்பதற்கு ஏதுவான பாத்திரங்கள் கூட எதுவும் அங்கே இல்லை.
மொத்தத்தில், இதுவரையில் சேனாதிபதி உணவு என்ற ஒன்றை இங்கே சமைத்தே சாப்பிடவில்லை என்பது தெள்ளத்தெளிவாக புரிந்தது சுபாஷிணிக்கு.
‘இன்னைக்கு ஃப்ரிட்ஜில இருக்குற பழம் தான் நமக்கு நைட் டிபன் போல’ என்று எண்ணிக் கொண்டு, ஹாலுக்கு வந்து டிவியை போட்டுவிட்டு அமர்ந்து விட்டாள்.
‘வீடு தங்காத துரை எப்படித்தான் டிவியும் வாங்கி, அதுக்கு கனெக்ஷனும் குடுத்து வச்சிருக்காரோ தெரியலை’ என்று கணவனை மனதுக்குள் கிண்டலடித்தபடியே, அங்குமிங்கும் சேனலை மாற்றிக் கொண்டிருந்தாள் சுபாஷிணி.
பொதுவாக சீரியல் எதுவும் பார்க்கும் பழக்கம் இல்லாத சுபாஷிணிக்கு, அவளுக்கு பிடித்த பாட்டுக்கச்சேரி, அதுவும் புகழ்பெற்ற பின்னணி பாடகர்கள் பாடிய நிகழ்ச்சி, சேனல் ஒன்றில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்க, அதில் மூழ்கியே போனாள்.
கிட்டத்தட்ட ஒன்னரை மணி நேரம், தன் மனதிற்கு பிடித்த மாதிரி நேரத்தை போக்கிக் கொண்ட சுபாஷிணி அந்நிகழ்ச்சி முடியவும், டிவியை ஆஃப் செய்து விட்டு எழும்பினாள்.
நேரமும் இரவு ஒன்பது மணியாகிவிட்டது. நேற்றைய நீண்டதூர பயணம், சரியான தூக்கமின்மை எல்லாம் சேர்ந்து கண்கள் தூக்கத்திற்கு சொக்கியது. பழத்தை சாப்பிட்டுவிட்டு தூங்கலாம் என்று முடிவு செய்தவள், ஃப்ரிட்ஜிலிருந்து, ஒரு ஆப்பிளையும் கொய்யாவையும் கையில் எடுத்து நிமிர்ந்த நேரம் வீட்டின் கதவைத் திறந்து கொண்டு சேனாதிபதி வந்தான்.
“நீ இன்னும் தூங்கலையா சுபா?” என்று கிச்சனில் இருந்து வெளியே வந்த சுபாஷிணியிடம் கேட்டவன், சோர்ந்து போயிருந்த அவள் முகத்தையும், கையிலிருந்த பழங்களையும் பார்த்து, “நீ இன்னும் சாப்பிடலையா?” என்றான் அவளை ஏற இறங்க பார்த்தபடி.
“இல்ல” என்று தலையாட்டிய சுபாஷிணியின் கண்கள் ஒருநேர பசியைத் தாங்க முடியாமல் உரியவன் கேட்கவும் கலங்க, சட்டென்று எழுந்த கோபத்தோடு, “நீ என்ன சின்னகுழந்தையா சுபா? நான் தான் உனக்கு தேவைன்னா மெஸ்ல ஆர்டர் செய்து வாங்கி சாப்பிடச் சொல்லியிருக்கேனே” என்று சத்தம் போட்டவன், “இந்தா இதை சாப்பிடு” என்று கையிலிருந்த உணவு பார்சலை சுபாஷிணியிடம் கொடுத்து விட்டு அறைக்குள் நுழைந்து கொண்டான்.
எப்போது வருவேன் என்று தெரியாது என்று சொல்லிச் சென்ற கணவனை ஒன்பது மணிக்கே வீட்டில் காணவும் மனமெங்கும் மகிழ்ச்சி பொங்கிய சுபாஷிணிக்கு, “இன்னும் சாப்பிடலையா?” என்ற கணவனின் கேள்வியில் தன்னை மறந்து கண்கள் கலங்கிவிட்டது.
அதற்காக அவன் கோபித்துக்கொண்டது முகவாட்டத்தைக் கொடுத்தாலும், தனக்காக கணவன் உணவு வாங்கி வந்திருக்கிறான் என்ற எண்ணம் அதையும் மீறி சந்தோஷத்தையேக் கொடுக்க, வேகமாக உணவைப் பிரிக்கத் தொடங்கினாள்.
பார்சலில், மூன்று சப்பாத்திகளும், காய்கறி குருமாவும் இருந்தது. ‘ஒருவேளை, அத்தான் அவங்க சாப்பிட இதை வாங்கிட்டு வந்திருப்பாங்களோ?’ திடீரென்று சுபாஷிணிக்கு தோன்ற, “உனக்கு தேவைன்னா மெஸ்ல வாங்கி சாப்பிட சொல்லியிருக்கேனே” என்ற சேனாதிபதியின் வார்த்தைகள் வேறு அப்படித்தான் என்று அறுதியிட்டு கூறியது.
‘அப்போ, நாம இதை சாப்டுட்டா, அத்தானுக்கு?” இந்த எண்ணம் தோன்றவுமே சுபாஷிணியால் சாப்பிட முடியவில்லை.
சப்பாத்தியை மறுபடியும் பார்சல் செய்து, அங்கிருந்த சிறிய டேபிளில் வைத்து விட்டு அறைக்குள் சென்ற கணவனின் வருகைக்காக காத்திருந்தாள் சுபாஷிணி.
ஒரு குளியல் போட்டு, திரும்பவும் பணிக்கு செல்ல வேண்டியிருந்ததால் சட்டையை கிளம்பும் போது போட்டுக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் காக்கி பேண்டும், கையில்லா வெள்ளை பனியனையும் அணிந்துகொண்டு, தலையை துவட்டியபடி அறையை விட்டு வெளியே வந்த சேனாதிபதிக்கு, சுபாஷிணியைக் கண்டதும் தன் உடையால் சிறு தயக்கமே.