“வாங்கித்தான் பாரேன் சுபா.” அவள் கையை உரிமையாக பற்றி அதில் தன் கையிலிருந்தவற்றை வைத்தவன், “ம்ம்… கார்ட்டை ஓப்பன் செய்து பாரு” என்றான்.
நடுங்கும் கையோடு இரண்டாக மடிக்கப்பட்டிருந்த கார்ட்டை சுபாஷிணி திறக்கவும், புசுபுசுவென்றிருந்த ஃபான்டா கரடி தன் கையிரண்டாலும் ஒரு இதயத்தை பிடித்துக்கொண்டிருக்க, “ஐ லவ் யூ… நான் உன்னைக் காதலிக்கிறேன்” என்ற குரல் ராகமாக பின்னணியில் இசைத்தது.
அதே வார்த்தைகளை அப்படியே சேனாதிபதியும் மாமன் மகளின் முகத்தைப் பார்த்து சொல்ல, “இல்ல… நான் உங்களை லவ் பண்ணல.” பதறியபடி சொன்னவள், தன் கைகளில் இருந்தவற்றை வேகமாக உதறினாள்.
தான் ஆசை ஆசையாக வாங்கி வந்திருந்த ஒற்றை சிகப்பு ரோஜாவும் வாழ்த்து அட்டையும் தரையில் பரிதாபமாக விழுந்து கிடந்ததை பார்த்த சேனாதிபதி திகைத்துப் போனான்.
“விளையாடாத சுபா.” இப்படி ஒரு பதிலும் செயலும் மாமன் மகளிடமிருந்து வரக்கூடும் என்று ஒரு சதவீதம் கூட நினைத்திராத சேனாதிபதியின் குரல் கொஞ்சம் உயர்ந்திருந்தது.
அவன் அதட்டலில் பதின்ம வயதில் இருந்த பெண்ணவளின் கோபம் நன்றாகவே தூண்டப்பட, “உங்க முகத்தை நீங்க கண்ணாடியில பாக்குறதே இல்லையா த்தான்?” என்று கிண்டலாக கேட்டவள்,
கறுப்பாக இருந்த சேனாதிபதியின் கையைப்பிடித்து பளிங்கு போல இருந்த தன் கைக்கு அருகே வைத்து,
“நம்ம ரெண்டு பேருடைய கலர் காம்பினேஷனே பாக்க சகிக்கலை. இதுல உங்களைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழ்நாள் முழுக்க அடுத்தவங்க கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாக நான் தயாரில்லை” என்றாள் அலட்சியமாக உதட்டைச் சுழித்து.
பிறப்பிலிலேயே சேனாதிபதி கறுப்பு நிறம் தான். அதுவும் கிராமத்து இளைஞனான அவன், தாய்க்கு விவசாய வேலைகளில் வெயிலென்றும் மழையென்றும் பாராமல் உதவி செய்வான்.
போதாதற்கு விளையாட்டு, உடற்பயிற்சி என்று வெயிலில் காய்ந்து, கறுத்துப்போய் உடம்பில் கிள்ளிப் பிடிக்க சதையின்றி நெடுநெடுவென்ற உயரத்தில் தான் இருந்தான் சேனாதிபதி.
தன் இளமனம் முழுவதும் அங்கிங்கெனாதபடி நிறைந்திருந்த சுபாஷிணியின் உருவக்கேலியில் அதிர்ந்து போன சேனாதிபதி, “என்ன பேசுறோம்னு புரிஞ்சு தான் பேசுறியா சுபா?” என்று அதிர்ச்சி மாறாத குரலில் கேட்க,
“எல்லாம் புரிஞ்சு தான் பேசுறேன் அத்தான். கலர், லைஃப் ஸ்டைல் இப்படி எல்லாத்துலயுமே உங்களுக்கும் எனக்கும் ஏணி வச்சாக்கூட எட்டாது. அதனால என்னைப் பற்றி உங்க மனசுல எதுவும் எண்ணம் இருந்திச்சின்னா அழிச்சிடுங்க.” சேனாதிபதியின் கண்பார்த்து அலட்சியமாக சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றிருந்தாள் சுபாஷிணி.
தன் இதயத்தில் தேவதைப் பெண்ணாக இத்தனை ஆண்டுகாலமாக பொத்தி, போற்றி பாதுகாத்த பெண்ணிடமிருந்து வந்திருந்த வார்த்தைகளில் தடுமாறிப் போனான் சேனாதிபதி.
அதுவும் வேறு எந்தக் காரணங்களையும் சொல்லி அவனை மறுத்திருந்தாலாவது அவன் மனது ஆறிப்போயிருக்குமோ என்னவோ? நிறத்தையும், அழகையும் குறிப்பிட்டு அவனை ஒதுக்கியதை, அவனால் ஒத்துக்கொள்ளவே முடியவில்லை.
இதற்குமேல் அவளைத் தொந்தரவு செய்யக்கூடாது, எந்த அளவிற்கு அவளிடமிருந்து விலகிச்செல்ல முடியுமோ அந்த அளவிற்கு விலகிவிட வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டாலும், அப்போது கூட அவளை விட்டு தள்ளிச்செல்ல முடியாமல் அதே வீட்டில் தான் இருந்தான் சேனாதிபதி.
“மாமன் வீட்டுல இருந்து எல்லாரும் வர்றாங்க. அவங்க வந்துட்டு போற வரைக்கும் நாம நம்ம வீட்டுல போய் இருப்போமா?” என்று கேட்ட அம்மாவை,
“அப்புறம் எப்பிடி உங்க அண்ணாவுக்கு நீங்க நினைச்சபடி சமைச்சி போடுவீங்களாம். நாம எப்பவும் போல கீழ இருந்துக்கலாம், அவங்களை மேல மாடியில இருக்க சொல்லலாம்” என்று சொல்லி பாட்டி வீட்டிலேயே தங்க வைத்தவனாலும், அங்கிருந்து உடனே விலகி ஓட முடியவில்லை.
மறுநாள் காலை வீட்டின் பின்பக்கம் சென்றவனின் கண்களில் வெளிப்புறம் இருந்த குளியலறை கதவருகே நின்றுகொண்டு, அங்கும் இங்குமாக நெளிந்து அறைக்குள்ளே உற்று பார்த்துவிட படுபிரயத்தனம் செய்து கொண்டிருந்த சுபாஷிணியின் மாமன் மகன் ரஞ்சன் விழ, கொதித்து போனான் சேனாதிபதி.
பாய்ந்து அவன் சட்டையை சேனாதிபதி பிடிக்க சென்ற நேரம், குளியலறைக் கதவு திறக்க, கதவோடு ஒட்டி நின்ற அந்த ரஞ்சன் தடுமாறி கீழே விழுந்தான். அறைக்குள் இருந்து வெளியே வந்ததோ சேனாதிபதியின் தங்கை மங்கையர்கரசி.
மங்கை குளிப்பதற்காக உள்ளே சென்றதை கண்டுவிட்டு தான் ரஞ்சன் பாத்ரூம் கதவு வழியே உற்றுப்பார்க்க முயற்சி செய்தது. ஆனால் உள்ளே சென்று சோப்பு, ஷாம்பு எல்லாம் இருக்கிறதா என்று சரிபார்த்த மங்கைக்கு, ஏதோ சரியில்லாதது போல உள்ளுணர்வு உந்தவே, கதவைத் திறந்து வெளியே வந்தாள்.
தங்கை குளிப்பதை பார்ப்பதற்கு தான் ரஞ்சன் முயற்சி செய்திருக்கிறான் என்பது நொடியில் சேனாதிபதிக்கு புரிந்துவிடவே, கீழே கிடந்தவனை தன் ஒற்றைக் கையால் முரட்டுத்தனமாக தூக்கியதோடல்லாமல் அதே வேகத்தில் முகத்தில் குத்து ஒன்றும் விட, சற்றும் தாமதிக்காமல் ரஞ்சனின் உதடு கிழிந்து இரத்தம் எட்டிப் பார்த்தது.
அதுவும் சேனாதிபதி அடித்த அடியில், ரஞ்சனின் கையிலிருந்த செல்போன் தெறித்து ஓட, அதை எடுத்து தரையில் ஓங்கி அடித்து சில்லு சில்லாக்கி தன் பாக்கெட்டுக்குள் அள்ளிப் போட்டுக்கொண்ட சேனாதிபதி, இன்னும் முரட்டுத்தனமாக அவனை அடித்தான்.
சேனாதிபதியின் வயதேயுடைய ரஞ்சன், கிராமத்து இளைஞனான சேனாதிபதியின் உடல் உறுதிக்கு முன் தாக்குப் பிடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் போது தான், அந்த பக்கமாக சுபாஷிணி வந்து கொண்டிருந்தாள்.
அந்த நிமிடம் அவளையன்றி தன்னைக் காப்பாற்ற யாரும் இல்லை என்பதை புரிந்து கொண்ட ரஞ்சன், தன் சக்தியெல்லாம் திரண்டி, “சுபா… என்னைக் காப்பாத்து” என்று கத்த, நடந்து கொண்டிருப்பதைக் கண்டவளுக்கோ கண்மண் தெரியாமல் கோபம் வந்தது.
ஓடிவந்தவள், சேனாதியின் கைகளிலிருந்து ரஞ்சனை விடுவிக்க முயற்சி செய்தபடியே, “என்ன தப்பு செய்தார்னு காட்டுமிராண்டி போல என் அத்தானை போட்டு அடிக்குறீங்க?” என்று கத்தினாள்.
நடைபெற்ற அடிதடியில் குளியலறையிலிருந்து சற்று விலகி ஆண்கள் இருவரும் வந்திருந்தபடியால், குளியலறை வாசலில் அதிர்ந்து போன பார்வையோடு நின்றுபோன மங்கை, சுபாஷிணியின் பார்வை வட்டத்துக்குள் விழவேயில்லை.
சுபாஷிணியிடமிருந்து ரஞ்சனுக்காக வந்த, “என் அத்தான்” என்ற அழைப்பு சேனாதிபதியிடம் இன்னும் கொஞ்சம் கோபத்தை விசிறிவிட, “இவன் செஞ்ச அல்ப்ப காரியத்தை வேற, உங்கிட்ட நான் சொல்லணுமோ?” கோபமாக கேட்டவனின் கைகள் மறுபடியும் ரஞ்சனின் முகத்தில் வேகமாக இறங்கியது.
“கண்டிப்பா…, என் அத்தான் என்ன செய்திருந்தாலும் மொதல்ல எங்கிட்ட தான் நீங்க சொல்லியிருக்கணும். அதை விட்டுட்டு இப்பிடி பட்டிக்காட்டான் மாதிரி, என் அத்தான் மேல கை வைக்கிற அதிகாரத்தை உங்களுக்கு யார் தந்தது?”
ரஞ்சனை சேனாதிபதியிடமிருந்து காப்பாற்றிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் சுபாஷிணியால் பேசப்பட்ட வார்த்தைகள், சேனாதிபதியை மேலும் மேலும் வெறியூட்ட, பதில் சொல்லாமல் இன்னும் இன்னும் ரஞ்சனை அடித்தான்.
“நான் ஒன்னும் பண்ணலை சுபா. இவன்தான் நேற்று நீ அவன் ப்ரப்போசலை மறுத்த கோபத்துல என்னைப் பிடிச்சு அடிக்கிறான்.” சேனாதிபதியின் அமைதியை தனக்கு சாதகமாக எடுத்துக்கொண்ட ரஞ்சன், தன் தங்கை ரம்யாவிடம் சுபாஷிணி சொல்லும் போது தற்செயலாக கேட்ட விஷயத்தை வைத்து அளந்து விட்டான்.
“ஹாங்… என்ன சொல்லுறீங்க நீங்க?!”
“ஆமா சுபா. இத்தனை அழகா நீ சுபா கூட ஒட்டிக்கிட்டே திரியுறதாலத் தான், என் சுபா என்னோட லவ்வை அக்செப்ட் பண்ணமாட்டேங்குறா. நீ மொதல்ல உன் வீட்டப் பாத்து போடான்னு என்னை அடிக்கிறான் சுபா.” அத்தனை அடி வாங்கி உதடு கிழிந்து தொங்கிய நிலையிலும் கூட அந்த குள்ளநரி, சுபாஷிணி நம்பும் வகையில் கதை சொல்லியது.
உண்மையில் ரஞ்சனின் அந்த பரிணாமத்தில் அசந்து தான் போனான் சேனாதிபதி.
“ச்சை… நீங்க இப்படிபட்ட ஆளா? உங்களைப் போய் இத்தனை நாளும் அத்தான்னு கூப்பிட்டுருக்கேன்னு நினைக்கும் போதே எனக்கு அசிங்கமா இருக்கு.” உதட்டை அசூசையாக சுழித்தபடி சுபாஷிணி சொல்ல,
“கூப்பிடாதடி… உன் வாயால இனிமே எப்போதும் என்னை அப்படி கூப்பிடாதடி” என்று கத்திய சேனா, தன் கையிலிருந்த ரஞ்சனை மறுபடியும் ஒரு அப்பு அப்பி, கோபமாக உதற, இரண்டடி தள்ளிப்போய் விழுந்தான் அவன்.
அதற்கிடையில் கேட்ட சத்தத்தில் வீட்டிலிருந்த பெரியவர்களும் அங்கு வந்து சேர்ந்திருந்தார்கள். தன் அண்ணன் மகனின் பஞ்சராகிப் போன கோலத்தைக் கண்ட விசாலி, “ஐயோ… ஐயோ… ஐயோ… இதுக்கு தான் இந்த பட்டிக்காட்டுக்கு நான் வரவேண்டாம்னு சொல்லுறது. என் சொல்லை இங்க யார் கேக்குறாங்க? இப்போ இந்த காட்டான் என் அண்ணன் மகனை இந்த அடி அடிச்சு வச்சிருக்கானே, அவனைப் பெத்தவங்களுக்கு நான் என்ன பதில் சொல்லுவேன்?” என்று பெருங்குரல் எடுத்து கத்தியவர்,
அங்கிருந்து நகரப்போன சேனாதிபதியை நிறுத்தி, “எதுக்குடா என் அண்ணன் மகனை அடிச்ச?” என்று கோபமாக கேட்க, “மரியாதையா அவனை இங்கயிருந்து கூட்டிட்டு போய்டுங்க. இல்லைன்னா எங்கிட்ட அடிபட்டே இவன் செத்துப் போவான்” என்று பதில் சொல்லிவிட்டு நிற்காமல் சென்று விட்டான் சேனாதிபதி.
போகும் முன் தங்கையை கூர்ந்து பார்த்த சேனாதிபதியின் கண்கள், நீயும் எதுவும் சொல்லக்கூடாது என்று அவளுக்கு கட்டளை இட்டனவோ என்னவோ? மங்கையும் நடந்தவற்றை யாரிடமும் சொல்லவில்லை.
சேனாதிபதியின் நடத்தையில் அவன் தாய்க்கும் பாட்டிக்கும் அதிர்ச்சியே. என்ன நடந்தது என்று எவ்வளவோ அவனைக் கேட்டும் வாயைத் திறக்க மறுத்தான் சேனாதிபதி. அவனுக்கு தன் தங்கை அந்த கேடுகெட்ட ரஞ்சனின் பொருட்டு பேசும் பொருளாக மாறுவது பிடிக்கவில்லை.
“ஆனாலும் இவ்வளவு திண்ணக்கம் ஆகாதடியம்மா உன் மகனுக்கு” என்று நாத்தனாரை வறுத்தெடுத்த விசாலி, ஷுட்டிங்கிற்காக கன்னியாகுமரியில் நின்ற கணவரிடம் தொணதொணத்து காரை அனுப்ப வைத்தார்.
அடுத்த இரண்டு மணிநேரத்தில் தன் பிள்ளைகளோடும், அண்ணன் பிள்ளைகளோடும், கணவர் அனுப்பி வைத்திருந்த காரில் சென்னைக்கு பறந்திருந்தார் விசாலி.
அடுத்து சேனாதிபதி கல்லூரிக்கு செல்லும் போது, “என்ன ஆச்சு?” என்று ஆர்வமாக கேட்ட நண்பர்களிடம், ஒன்றையும் மறைக்காமல், உள்ளதை உள்ளபடி அப்படியே சொல்லிவிட்டான்.
கேட்ட நண்பர்களுக்கும் சுபாஷிணியின் வார்த்தைகள் பேரதிர்ச்சியையே கொடுத்தது. இருந்தாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் நண்பனுக்கு, தங்களால் ஆன ஆறுதலைத் தரவே முயன்றார்கள்.
கிட்டத்தட்ட ஏழு வருடங்களுக்கு பிறகும் அதே நட்புகள், அந்தநாளைப் போலவே இப்போதும் தடுமாறி நிற்கும் தங்கள் நண்பனை தீவிரமாக ஆற்றுப்படுத்தும் செயலில் ஈடுபடத் தொடங்கினார்கள்.
“உள்ளத்துல இருக்கிற அன்பை பார்க்காமல், அழகைப் பார்த்து காதல் வர்ற வயசுல போய், அந்த சின்னபொண்ணு கிட்ட காதலைச் சொன்னதும் நம்ம தப்பு தானேடா. கடந்து போன இத்தனை வருஷத்துல உன் காதலுக்கான பிரதிபலிப்பு கண்டிப்பா சுபா கிட்டயும் இருக்கும். அதனால நடந்ததையே நினைச்சிட்டு இருக்காம, சுபா கிட்ட மனசு விட்டு பேசு. கண்டிப்பா உங்களுக்குள்ள எல்லாம் சரியாகும்” என்றான் கைலாஷ்.
கைலாஷூக்கு தாங்களும் சேர்ந்து தானே நண்பனை அந்த வயதில் காதலைச் சொல்ல தூண்டினோம் என்ற குற்ற உணர்வும் இருந்தது. எனவே, சுபாஷிணியின் வார்த்தைகளால் நண்பனின் உள்ளத்தில் ஏற்பட்டிருந்த காயத்திற்கு, தன் வார்த்தைகளால் மருந்து பூச முயற்சி செய்தான்.
ஆனால், நண்பனின் உள்ளத்தில் ஏற்பட்டிருப்பது காயம் அல்ல… காலத்தாலும் ஆற்றமுடியாத ‘வடு’ என்பது அந்த நண்பர்களுக்கு தெரியவில்லை.
‘தீயினால் சுட்டப்புண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு.’