எதிர்பாராமல் தன் புகுந்த வீட்டு உறவினர்களைக் கண்ட விசாலிக்கு அதிர்சியே. அதை மறைத்து, வேண்டா வெறுப்பாக அவர் வரவேற்பில் இறங்க, “என்ன அண்ணி? இப்பிடியா சுபா பெரிய மனுஷியா ஆனதை எங்ககிட்டயிருந்து மறைப்பீங்க?” என்று வந்ததுமே அண்ணன் மனைவியிடம் தன் ஆதங்கத்தை வெளியிட்டார் தமிழரசி.

‘உங்ககிட்ட சொன்னா இப்படி வந்து அலப்பறையைக்‌ கூட்டுவீங்கன்னு நினைச்சு தான் சொல்லலை’ என்று மனதுக்குள் முணுமுணுத்துக் கொண்ட விசாலி, “உங்க ஊர்காட்டுல தான் இதையெல்லாம் பெருசுபண்ணி ஃபங்ஷன் எல்லாம் எடுப்பீங்க அண்ணி. இங்க அப்படியெல்லாம் செய்தா சிரிச்சிடுவாங்க. அதனாலத் தான் நான் யாருக்கும் சொல்லலை” என்று, லேசான மட்டம் தட்டும் குரலில் சொன்னார் விசாலி.

“பட்டணத்துல இருக்கிறதால அம்மா, அத்தை ஆகிடமாட்டாங்க விசாலி. எதை எதை, யார் யார்கிட்ட சொல்லணுமோ, அதை சொல்லித்தான் ஆகணும்” என்று மருமகளுக்கு நாசூக்காக கொட்டு ஒன்றை வைத்த பூரணி, அங்கிருந்த விசாலியின் தாயாரிடம், “உங்க பொண்ணுக்கு இதையெல்லாம் நீங்க சொல்லித் தரமாட்டீங்களா?” என்றும் கேட்டுவிட்டார்.

பூரணியின் கேள்வியில் முகம் சிறுத்து விட்டது விசாலியின் தாயாருக்கு. ‘ஒரு கிராமத்து பட்டிக்காட்டு பெண்மணி தன்னிடம் இப்படி பேசுவதா‌?’ என்ற எண்ணம் அவருக்கு தோன்றவே, “இந்த கிராமத்து ஆட்கள் சின்ன விஷயத்தை எல்லாம் ஊதி ஊதி பெருசாக்கிடுவாங்க. அதனால உன்புருஷன் வீட்டாளுங்ககிட்ட விஷயத்தைச் சொல்லிடுன்னு நான் சொன்னா, இவ கேட்டா தானே” என்று அலுத்துக் கொண்டது போல நடித்த அந்த பெண்மணி, இவர்கள் கொண்டு வந்திருந்த பொருட்களை அலட்சியமாக பார்வையிட்டபடியே,

 “இதெல்லாம் இங்க கிடைக்காது ங்குற மாதிரி எதுக்கு வீணா சுமந்துட்டு வந்துருக்கீங்க? காசு குடுத்தா இதைவிட நல்லதாவே இங்க வாங்கலாமே” என்று திமிராக சொன்னார்.

“காசு குடுத்தா கண்டிப்பா வாங்கலாம் தான். நான் இல்லைன்னு சொல்லலை. ஆனா, நான் கொண்டு வந்திருக்கிற பொருள் முழுசும், எம்பையன் குடும்பத்து மேல எனக்குள்ள அன்பு, பாசம், அக்கறை எல்லாம் கலந்திருக்குமே. இப்படி ஒரு பொருளை உங்களால கடையில வாங்கிற முடியுமா என்ன?” என்று சவாலாக கேட்ட பூரணி, “எங்க என் பேத்தி?” என்று கேட்டபடியே உரிமையாக வீட்டுக்குள் நுழைந்தார்.

இவர்களின் குத்தல் பேச்சு அனைத்தையும் தாயைப்போல அனாயசமாக புறம் தள்ளிவிட்டு, வீட்டுக்குள் நுழைய மனமின்றி தனது மக்களோடு வீட்டு ஹாலில் கிடந்த சோஃபாவில் அமர்ந்திருந்தார் தமிழரசி.

பூரணி வீட்டுக்குள் நுழையவும், தன் அறையிலிருந்து, வெளியே வந்த சுபாஷிணி, எதிர்பாராமல் கண்ட தகப்பனின் தாயாரிடம், “எப்ப வந்தீங்க அப்பாம்ம?” என்று கேட்டபடியே அவர் கைகளை பிடித்துக் கொள்ள,

“வாடி ராசாத்தி… உன்னைப் பார்க்க ஊர்லயிருந்து யாரெல்லாம் வந்துருக்காங்க பாரு” என்று பேத்தியின் கைகளை பாசமாக பற்றி மகளும், அவளின் மக்களும் இருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றார் பூரணி.

தமிழரசியும் மருமகளைக் கண்டதும் அணைத்து முத்தமிட, சிறு வெட்கம் சிறியவளிடம். எப்போதுமே சேனாதிபதியின் தங்கை மங்கையர்கரசிக்கு சுபாஷிணியிடம் பெரியதாக ஒட்டுதல் கிடையாது. எனவே அவள் அமைதியாக இருந்தாள்.

கல்லூரியில் அப்போதுதான் காலடி எடுத்து வைத்திருந்த சேனாதிபதியின் மனதில், மாமன் மகள் மீது காதலெனும் உணர்வு மெதுவாக காலடி எடுத்து வைத்திருந்த காலம் அது.

புத்தம் புது பூவாக பளீரென்ற சிரிப்போடு நின்றிருந்த சுபாஷிணியிடம், “எப்படியிருக்குற சுபா?” என்று இயல்பாக அவன் கேட்க, இவளும் “நல்லாயிருக்கேன் அத்தான்” என்று பதில் சொன்னாள்.

பூரணி அம்மா தங்களுக்கு நடுவே பேத்தியை அமர வைத்துக்கொள்ள, சாதாரணமாக அவளுடன் பேச ஆரம்பித்திருந்தான் சேனாதிபதி. சுபாஷிணி, ஆரம்பத்தில் தயங்கினாலும் போகப்போக எப்போதும் போல அவனுடன் சிரித்து பேச ஆரம்பித்துவிட்டாள்.

இதற்கிடையே, சுபாஷிணியின் தம்பி ராகுலுக்கும் சிறுமி மங்கையர்கரசி க்குமிடையே உற்சாகமாக விளையாட்டு போய்க்கொண்டிருந்தது.

திருமணத்திற்கு பிறகு கணவனை தங்களின் ஒட்டுமொத்த சோல் ப்ராபர்டியாக கருதும் ஒருசில பெண்களுக்கு, அவன் குடும்பத்து நபர்களை மட்டும், எந்த காரணமும் இன்றி பிடிப்பதே இல்லை.

இந்த மனநிலையில் இருந்த விசாலிக்கும், தன் பிள்ளைகள் இருவரும் தகப்பனின் உறவுகளோடு ஆனந்தமாக அளவளாவிக் கொண்டிருந்தது பிடிக்கவே இல்லை.

 சிறிது நேரம் பல்லைக் கடித்துக் கொண்டு தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்ட விசாலி, “சுபா, உனக்கு டான்ஸ் க்ளாஸுக்கு போக டைமாகிடிச்சு. நீ கிளம்பு” என்று மகளுக்கு கட்டளையிட்டிருந்தார்.

“ம்மா… ப்ளீஸ் ம்மா… இன்னைக்கு ஒருநாள் மட்டும் லீவ் போட்டுக்குறனே.” ஊரிலிருந்து வந்திருந்த தன் பிரியமான உறவுகளைப் பிரிய மனமின்றி தாயிடம் கெஞ்சினாள் சுபா.

“நாங்கெல்லாம் வந்துருக்கோம்ல, இன்னைக்கு ஒருநாள் மட்டும் பிள்ளை லீவ் போட்டுக்கட்டுமே விசாலி.” பேத்திக்காக மருமகளிடம் சிபாரிசுக்கு வந்தார் பூரணி.

“ஏய்… உனக்கு ஒருதடவை சொன்னா புரியாது? போன்னு சொன்னா போ டி” என்று மகளிடம் கத்தியிருந்த விசாலி,

“வாரத்துல மூனு க்ளாஸூக்கே ஏகப்பட்ட பணத்தை ஃபீஸா கட்டுது அத்த. அதனால லீவ் எல்லாம் போடமுடியாது” என்று மாமியாரிடமும் கண்டிப்பாக சொல்ல, அதற்கு மேலும் சுபாஷிணி அங்கே இருப்பாளா என்ன? எல்லாரிடமும் சொல்லியும் சொல்லாமலும் அங்கிருந்து தெறித்து ஓடியிருந்தாள்.

“இதெல்லாம் இவங்களுக்கு எங்க புரியப் போகுது? இல்லைன்னா வயசுக்கு வந்த பிள்ளையைப் பாக்குறதுக்கு, வயசுப் பையனை கூட்டிட்டு வருவாங்களா? சொன்னா மட்டும் எங்களுக்கு எல்லாம் தெரியும்னு பேசுறது.” பேத்தியின் பின்னே முணுமுணுத்தபடியே சென்றார் விசாலியின் தாயார்.

மகளின் புகுந்த வீட்டு உறவுகளுக்கு கேட்க வேண்டும் என்று நினைத்தே அவர் முணுமுணுத்தது, தெளிவாக இவர்கள் காதில் விழ, அடுத்த வினாடியே எழுந்து தாங்கள் வந்திருந்த காரில் போய் அமர்ந்து கொண்டான் சேனாதிபதி.

“என்ன நினைச்சிட்டு பேசுறீங்க நீங்க? அவனோட மாமன் வீட்டுக்கு வர்றதுக்கு எம்பேரனுக்கு கட்டுப்பாடு விதிக்க நீங்க யாரு?” என்று பூரணி, விசாலியின் அம்மாவிடம் வரிந்து கட்டிக்கொண்டு செல்ல,

“ஐயோ அத்த… அம்மா ஏதோ தெரியாம சொல்லிட்டாங்க. அதையெல்லாம் பெரிசு படுத்தாதீங்க” என்று வேறுவழியில்லாமல் பூரணியை சமாதானப்படுத்துவதில் இறங்கியிருந்தார் விசாலி.

ஆகமொத்தம், கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு விருந்தாடச் சென்று, சிங்கிள் டீ யோடு கிளம்பிய வரலாறு இவர்களுடையதாகத் தான் இருக்கும்.

அன்று பார்த்த சுபாஷிணியை ஐந்து வருடங்கள் கழித்து தான் சேனாதிபதிக்கு பார்க்க முடிந்திருந்தது. ஆனால் அவளோ அவனுடைய ஆசை எல்லாவற்றையும் ஒன்றுமில்லை என்று ஆக்கியிருந்தாள்.

அதன் பிறகு, இதோ இத்தனை வருடங்களாக அவளைத் தன்னிடமிருந்து ஒதுக்கியே வைத்திருந்தான் சேனாதிபதி. இவ்வளவு ஏன்? இரண்டு வருடங்கள் சென்னையில் தங்கி யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாரான பின்னர் கூட, மாமனின் வீட்டுப்படியை இவன் மிதித்ததில்லை.

 இப்போது இரண்டு வருடங்களாக சென்னையில் ஒரே பகுதியில் இருவரும் தங்கியிருப்பதால், அவ்வப்போது பார்க்க நேரிட்டாலும் யாரோ போல சுபாஷிணியை கடந்திருக்கிறான் சேனாதிபதி.

ஆனால் இன்றோ, அதே சுபாஷிணியை பேரன் திருமணம் செய்தே ஆகவேண்டும் என்று அடம்பிடிக்கிறார் பூரணி.

“சரி பாட்டி ம்மா. நான் உங்க பேத்தியைக் கல்யாணம் பண்ணிக்குறேன். நீங்க முதல்ல ட்ரீட்மெண்ட் எடுத்துக்கோங்க.” ஏதோ முடிவு செய்தவன் போல பேசினான் சேனாதிபதி.

“இல்ல… முதல்ல ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கோங்க. அப்புறமா நான் ஊசி போட்டுக்கிறேன்.”

பாட்டியின் பிடிவாதத்தில் சேனாதிபதியின் முகத்தில் புன்னகை விரிந்தது. “சரி… எனக்கு உங்க பேத்தியோட சம்மதம் வேணும். அவ என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னா, நான் பண்ணிக்கிறேன்” என்றான் சேனாதிபதி தெளிவாக.

“அதெல்லாம் சம்மதம் சொல்லுவா.” ஆளுக்கு முந்தி பதில் சொல்லிய விசாலி, “என்னங்க, சுபாவை கூட்டிட்டு, ராகுலை இங்க வரச்சொல்லுங்க” என்றார் கணவரிடம். அவர் சொல்லி முடிக்கவும் ராகுல் அங்கு வந்து நிற்கவும் சரியாக இருந்தது.

ராகுல் இப்போது மதுரையில் இருக்கும் பிரபலமான ஒரு கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முதலாம் ஆண்டு மாணவன்.

“இதோ, மங்கைகிட்ட சுபாவை கூட்டிட்டு வரச் சொல்லுறேன்.” இப்போது பொறுப்பை தன் கைவசம் எடுத்திருந்த வாசு, மகளை கைபேசியில் அழைத்து, விஷயம் எதுவும் சொல்லாமல் சுபாஷிணியை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு வரச்சொல்ல, முதலில் முரண்டினாலும் அடுத்த பதினைந்தாவது நிமிடம் சுபாஷிணியை அழைத்து வந்திருந்தாள் மங்கை.

 எம்எஸ்சி கணிதம் இரண்டாம் வருடம் படித்துக் கொண்டிருக்கும் மங்கைக்கு, தன் மாமன் மகளை இப்போதும் பிடிப்பதில்லை. அதுவும் அன்றைய தினம் அண்ணனை புரிந்து கொள்ளாமல் அவனோடு சண்டையிட்ட சுபாஷிணியை சுத்தமாக பிடிக்காமல் போயிருந்தது.

அறைக்குள் வந்ததும் சிகிச்சை எதுவும் ஆரம்பிக்கப்படாமல் இருந்த பூரணியைப் பார்த்த சுபா, “அப்பாம்மைக்கு ட்ரீட்மெண்ட் தொடங்கலையா?” என்று கேட்க, “அது உங்கைல தான் இருக்கு மக்கா” என்றார் பூரணி.

“என்ன சொல்லுறீங்க அப்பாம்மா?” லேசான அதிர்ச்சியோடு கேட்ட சுபா, குளித்து உடை மாற்றியிருந்தாள். இப்போது அணிந்திருந்த சுடிதார் நல்ல அடர்மஞ்சள் நிறத்தில் இருந்தது.

“அது… நீயும் சேனாவும் இப்போ கல்யாணம் பண்ணிக்கிட்டா தான் ட்ரீட்மெண்ட் எடுப்பேன்னு அம்மா சொல்லுறாங்க. உனக்கு அத்தானை கல்யாணம் பண்ணிக்க சம்மதமா சுபா?” தாயின் சார்பாக தமிழரசி தான் மருமகளிடம் கேட்டிருந்தார்.

கேட்ட வார்த்தையில் ஸ்தம்பித்து போனாள் சுபாஷிணி. நடக்கவே நடக்காது என்று அவள் நினைத்திருந்த திருமணம், இப்போது அவள் அனுமதிக்காக காத்திருக்கிறது. உள்ளம் மகிழ்ச்சி கடலில் நீந்தினாலும், லேசான பயத்தோடு சேனாதிபதியைப் பார்த்தாள் சுபாஷிணி.

அவனோ வைத்த கண் வாங்காமல் இவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அந்த பார்வையிலேயே உள்ளுக்குள் குளிர்ஜூரம் எடுத்தாலும், நிமிடநேரம் கூட யோசிக்காமல் சம்மதம் என்பது போல தலையை ஆட்டினாள் சுபாஷிணி.

“வாயைத் தொறந்து சொல்லு சுபா. சும்மா மண்டையை ஆட்டிகிட்டு.” விசாலி மகளை அதட்ட, “எனக்கு சம்மதம்” என்று திருவாய்மொழிந்தாள் சுபாஷிணி.

அடுத்த வினாடியே அங்கிருந்தவர்களிடம் ஒரு சுறுசுறுப்பு வந்து ஒட்டிக்கொண்டது. “அப்போ தாலியும் மாலையும் வாங்கணுமே” என்று திருமணத்தை திட்டமிட்டார் வாசு.

“மாலை மட்டும் வாங்கிட்டு வாங்க மாப்பிள்ளை. தாலி நான் வச்சிருக்கேன்.” எழும்பி கட்டிலில் லேசாக சாய்ந்தமர்ந்த பூரணி, தன் இடுப்பிலிருந்த சுருக்குப் பையிலிருந்து, நல்ல தடிமனான தங்கத் தாலிச்சரடை எடுத்து காட்டியபடியேச் சொல்ல,

“ஹும்ம்… அப்போ எல்லாம் உங்க ப்ளான்படி தான் நடக்குது, இல்ல பாட்டி ம்மா.” சேனாதிபதியின் வார்த்தைகளையும், அவன் அதை சொன்ன முறையிலும் எல்லோரும் அதை ஜோக்காக எண்ணி கடந்தார்கள். ஆனால், சுபாஷிணியால் அப்படி நினைக்க முடியவில்லை. இருந்தாலும் எல்லாவற்றையும் சரிசெய்துவிட முடியும் என்ற நம்பிக்கையில், தைரியமாக நின்றாள்.

வாசு மாலை வாங்க கிளம்பி செல்லவும், மங்கை தட்தட் என்று கால்களை தரையில் அடித்தபடி நடந்து சென்று, அறைக்கு வெளியே கிடந்த நாற்காலியில் அமர்ந்தாள்.

அவள் பின்னோடு சென்ற ராகுல், “அண்ணி, என்னோட போனைக் கொண்டு வர மறந்துட்டேன். உம்போனைத் தா ண்ணி. அக்கா அத்தான் கல்யாணத்தை போட்டோ எடுத்துட்டு தரேன்” என்று கேட்டான்.

எப்போதுமே இவர்கள் இருவருக்கிடையில் நல்ல நட்பு உண்டு. மாதவபுரத்துக்கு ராகுல் வந்தபிறகு அது இன்னும் அதிகமாக வளர்ந்து மணம் வீசிக்கொண்டிருக்கிறது.

“இப்பிடி மட்டும் நடக்கும்னு எனக்கு தெரிஞ்சிருந்தா உங்கொக்காவையே நான் ஸ்கூட்டில கூட்டிட்டு வந்துருக்க மாட்டேன். இதுல போட்டோ எடுக்க என் போனை உனக்கு தரணுமோ. முடியாது போடா” என்று மங்கை சொல்ல, அவள் கையிலிருந்த போனை பிடுங்க முயற்சி செய்தபடியே,

“அண்ணி… சீப்பை ஒளிச்சு வச்சிகிட்டா கல்யாணம் நடக்காம போய்டாது ண்ணி…” கிண்டலாக சொல்லியபடியே, மங்கையின் கையிலிருந்த போனை பறித்துக் கொண்டு ஓடியிருந்தான்‌ ராகுல்.

மாலை வாங்க சென்ற வாசுவுக்கும், உலகாளும் குமரி அம்மனின் சன்னதி தெருவில், சம்பங்கி பூவால் ஆன ஒரேமாதிரியான இரண்டு மாலைகள் கிடைத்திருக்க, அதை வாங்கி வந்திருந்தார்.

சேனாதிபதி, சுபாஷிணி இருவர் கைகளிலும் அந்த மாலைகள் கொடுக்கப்பட்டது. சேனாதிபதி முதலில் சுபாஷிணியின் கழுத்தில் மாலை அணிவித்தான். கண்களோ கழுகின் கூர்மையோடு சுபாஷிணியின் முகத்தையே உற்று பார்த்தபடி இருந்தது.

அடுத்ததாக சுபாவும் தன் கையிலிருந்த மாலையை சேனாதிபதியின் கழுத்தில் இட்டாள். ஆனால், பெண்ணவளின் பார்வையோ சேனாதிபதியின் சட்டை காலரைத் தாண்டி உயர்ந்து அவன் கண்களை சந்திக்க மறுத்தது.

அடுத்து தன் கையிலிருந்த தாலிக்கொடியை பூரணி அம்மா பேரனின் கைகளில் கொடுக்க, அதை வாங்கி சுபாஷிணியின் கழுத்தில் அவளை நெருங்கி நின்று அணிவித்தவன், அவள் காதுகளில்,

 “கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி பாக்க சகிக்காத எம்முகம், இப்போ நான் ஐபிஎஸ் ஆன உடனே பாக்குற மாதிரி ஆகிடிச்சோ” என்று வெறுப்பாக கிசுகிசுத்தான்…