காரை நிறுத்தி ட்ரைவர் இறங்கிக் கொண்டார். சேனாதிபதியும் இறங்கியிருந்தான். கார் நிற்கவும் கண்முழித்துக் கொண்ட சுபாஷிணிக்கு, ஹோட்டல் முன் கார் நிற்பதிலேயே, எதற்காக என்று காரணம் புரிந்து போயிற்று.
ஆனால், ‘அத்தான் என்று அழைத்ததற்கு தீப்பார்வை பார்த்தவனோடு சாப்பிடப் போவதா?’ என்ற தயக்கம் ஒன்று எழும்பவே, தூங்கியதால் கலைந்திருந்த, தோள்வரைக்குமே இருந்த தன் அடர்ந்த கூந்தலைக் கலைத்து, சரிசெய்ய ஆரம்பித்தாள்.
அதைப்பார்த்த சேனாதிபதி, காரின் கதவை பூட்டி லாக் செய்வதற்காக நின்றிருந்த ட்ரைவரிடம், “நீங்க போய் சாப்பிட ஆரம்பிங்க ராஜ். நான் காரை லாக் பண்ணிட்டு வந்துடுறேன்” என்று சொல்லி, காரின் சாவியை வாங்கிக் கொண்டான்.
ட்ரைவர் கார்ச்சாவியை தந்துவிட்டு அங்கிருந்து நகரவுமே, சுபாஷிணியிடம் “சாப்பிட வரலையா?” என்று கேட்டான் சேனாதிபதி. ஏதோ விசாரணை கைதியிடம் விசாரிக்கும் தோரணை இருந்தது அவன் குரலில்.
“இல்ல… எனக்கு பசிக்கல.” பசியில் சிறுகுடலை பெருங்குடல் சாப்பிட ஆரம்பித்த பிறகும் அவனோடு செல்ல தயக்கம் மீதூற, கூந்தலை மேல்நோக்கி வளைத்து மொத்தமாக கேட்ச்கிளிப்பில் அடக்கியபடியே பதில் சொன்னாள் சுபாஷிணி.
“ஏன்? காற்றையே சுவாசிச்சு பசியை அடக்குற வித்தையை கத்து வச்சிருக்கீங்களோ?” தன் வலது கையில் வெள்ளியில் கிடந்த காப்பை, இடது கையால் உள்நோக்கி தள்ளிவிட்டபடியே நக்கலாக கேட்டவன், “மரியாதையா இறங்கி சாப்பிடவா. இப்பிடியே உங்கிட்ட நின்னு பேசிட்டு இருக்க எனக்கு நேரமும் இல்ல, மனமும் இல்ல” என்றான் எரிச்சலை மறைக்காத குரலில்.
அவன் பேச்சில் மனம் சுருங்கிப் போனாலும், அதற்கு மேலும் அடம்பிடித்தால் என்ன சொல்வானோ என்று பயந்து போய் செல்போனை கையில் எடுத்துக் கொண்டு காரிலிருந்து இறங்கியிருந்தாள் சுபாஷிணி.
அவள் இறங்கவும் காரை லாக் செய்து விட்டு விறுவிறுவென்று நடந்தான் சேனாதிபதி. அவன் பின்னோடு சென்றாள் சுபாஷிணி.
‘ஒட்டகச்சிவிங்கி மாதிரி நீளநீளமா காலை வச்சிட்டு என்ன வேகமா நடக்குறாங்க!’ சேனாதிபதி திட்டியதையும் மறந்து, கிண்டலடிக்கிறேன் பேர்வழி என்று அவன் வேகநடையை ரசித்து தொலைத்தது சுபாஷிணியின் மனது.
கூடவே, ‘நான் இப்போ நினைச்சது மட்டும் தெரிஞ்சிதோ, எம்மேல இருக்கிற கோபத்துக்கு, ஏசிபி சார் என்னைத் தொவைச்சு தொங்கவிட்டுருவாங்க’ என்றும் தோன்ற, அமைதியாக அவன் பின்னோடு நடந்தாள்.
அவர்களுக்கு முன்னால் வந்திருந்த ராஜ் ஒரு டேபிளில் அமர்ந்து சாப்பிடவும் ஆரம்பித்திருந்தார். மற்ற நேரமாக இருந்திருந்தால் ராஜுக்கு அருகிலேயே அமர்ந்து சாப்பிட்டிருப்பான் சேனாதிபதி.
இப்போது சுபாஷிணி உடனிருக்கவும் வேறு டேபிளுக்கு முன் போய் நின்றவன், இவளைத் திரும்பி பார்க்க, அந்த டேபிளில் அமர்ந்தாள் சுபாஷிணி. அவளுக்கு எதிரே கிடந்த நாற்காலியில் அமர்ந்தவன், வந்து நின்ற பேரரிடம் தனக்கு இட்லி கொண்டு வரச் சொல்லிவிட்டு அமைதியாக, சுபாஷிணி தனக்கும் இட்லியே கொண்டு வரச் சொன்னாள்.
பேரர் அங்கிருந்து நகரவும், “சாப்பாடு வர்றதுக்கு முன்னாடி ரெஸ்ட் ரூம் வேணும்னா போய்ட்டு வா.” குரலைத் தாழ்த்தி அமைதியாக சேனாதிபதி சொல்ல,
‘ஆமால்ல, மறந்துட்டனே’ என்று மனதிற்குள் நினைத்தவள், ‘இவங்க முன்னாடி நீ எதைத்தான் சரியா செய்திருக்க சுபா’ என்று தன்னைத் தானே தலையில் தட்டிக் கொண்டு, கையிலிருந்த போனை அவன் முன்னால் வைத்து விட்டு சென்றாள்.
அவள் கண்ணிலிருந்து மறையவும் தனக்கு முன்னாலிருந்த சுபாஷிணியின் கைபேசி மீது சேனாதிபதியின் பார்வை விழுந்தது.
வேண்டாம் என்று மனது சொன்னாலும், அந்த காவலனின் கைகள் ஏனோ, கைபேசியின் ஆன் பட்டனை அழுத்த, ஒளிவெள்ளத்தை அள்ளித்தெளித்தபடி உயிர் பெற்றது சுபாஷிணியின் அலைபேசி.
அங்கே… சிறுவயதில் சேனாதிபதி தன் முதுகில் சுபாஷிணியை உப்பு மூட்டை தூக்கியபடி நின்றிருந்த புகைப்படத்தை கறுப்பு வெள்ளையாக்கி, ஏதோ ஒரு ஆப்பின் மூலம் கோட்டோவியமாக்கி, ஸ்கீரீன் சேவராக வைத்திருந்தாள் சுபாஷிணி.
ஏதோ ஒரு எதிர்பார்ப்போடு தான் போனை ஆன் செய்தான் சேனாதிபதி. ஆனால், இப்படி ஒன்றை எதிர்பார்க்காதவனின் நெஞ்சம் உச்சஸ்தாயியில் படபடவென்று டமாரம் அடித்த சத்தம், அவன் காதுக்கே கேட்டது.
அருகிலிருந்த தண்ணீரை எடுத்து குடித்து தன்னை சமன்படுத்திக் கொண்டவனுக்கு, தான் எதை எதிர்பார்க்கிறோம் என்பதே புரியவில்லை. போனை எதுவுமே தெரியாதது போல ஆஃப் செய்து வைத்தான்.
சிறிது நேரத்தில், நனைந்திருந்த முகத்தை தன் கைக்குட்டையால் துடைத்தபடி வந்து உட்கார்ந்தாள் சுபாஷிணி.
“இப்படித் தான் போனை அடுத்தவங்க முன்னாடி வச்சிட்டு போவியா?” தன் கோபத்தை அவளிடம் கொட்டிவிடும் முயற்சியில் அதட்டலாக கேட்டான் சேனாதிபதி.
“நீங்க அடுத்தவங்க இல்ல… அதுவுமில்லாம ரெஸ்ட் ரூம் உள்ள எப்படி போனைக் கொண்டு போகமுடியும்?” மனம் முழுவதும் பயம் நிரம்பிக் கிடந்தாலும், தைரியமாக பதில் சொல்லிவிட்டாள் சுபாஷிணி. என்றாலும், அத்தான் என்று சொல்ல, ஏனோ கொஞ்சம் பயமாக இருக்க, கவனமாக அப்படி அழைப்பதை தவிர்த்து விட்டாள் சுபாஷிணி.
அன்றைய பொல்லாத நாளுக்கு பிறகு ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டிருந்தாலும், இன்றுதான் இவ்வளவு அருகருகே இருவரும் சந்திக்கும் சூழ்நிலை அமைந்திருக்கிறது.
அப்பா போன் செய்து, “அத்தானோடு வந்துவிடு சுபா” என்று சொல்லும் போதே, அவனிடமிருந்து இடி, மின்னல், மழை எல்லாம், இப்படி ஒருசேர தன் தலையில் விழும் என்று சுபாஷிணிக்கு தெரியும் தான்.
தெரிந்தும் அவனோடு கிளம்பி வந்திருக்கிறாள் என்றால், தான் செய்த முட்டாள்தனத்தை தானே களைந்துவிட வேண்டும் என்ற எண்ணம், அவள் மனதில் என்றோ தோன்றியதால் தான்.
சுபாஷிணியின் பதிலில் ஏளனமாக உதட்டைச் சுழித்த சேனாதிபதி, வேறு ஏதும் பேச முயலாமல் வந்த உணவில் தன் கவனத்தைச் செலுத்த, சுபாஷிணியும் அப்படியே செய்தாள்.
உண்டு முடிக்கவும், பைன் ஆப்பிள் ஜூஸ் வந்தது. “நான் கேக்கலையே?” ஹோட்டல் பணியாளரிடம் யோசனையோடு சொன்னாள் சுபாஷிணி.
“சார் ஆர்டர் கொடுத்தாங்க மேடம்.”
பேரரின் பதிலில் பளிச்சென்று கண்கள் மின்ன சேனாதிபதியைப் பார்த்தாள் சுபாஷிணி. ஏனென்றால் அவளுக்கு பிடித்த ஜூஸ் அது. ‘எனக்காக ஆர்டர் கொடுத்திருக்கிறானே! அப்படி என்றால் என்மீதுள்ள கோபம் குறைந்திருக்கிறது என்று தானே அர்த்தம்.’ இந்த எண்ணத்தில் சுபாஷிணியின் மனம் ஆனந்தத்தில் குதித்தது.
அவள் மனதைப் படித்தது போல, ராஜ் பக்கமாக சேனாதிபதி கண்களைத் திருப்பினான். அவன் பின்னோடு பார்வையை வீசியவளுக்கு, ட்ரைவர் கையிலிருந்த பைன் ஆப்பிள் ஜுஸ் கப்பும் கண்ணில் விழ, சொத்தென்றாகிப் போனது முகம்.
“ரைட்… இப்போ போலாமா?” ஏதோ சாதித்து விட்டது போன்ற சந்தோஷத்தில் டேபிளில் லேசாக தட்டியபடி, எழும்பிய சேனாதிபதி, சாப்பாட்டுக்கான பணத்தை கட்டுவதற்காக பில் கவுண்டரை நோக்கி நடக்க, வெளியே நின்றிருந்த காரை நோக்கி நடந்தாள் சுபாஷிணி. மனம் முழுவதும் அன்று தான் செய்திருந்த முட்டாள்தனத்தை எண்ணி வேதனை பரவிக் கிடந்தது.
*********
மறுநாள் அதிகாலை ஆறு மணியளவில் மாதவபுரத்துக்குள் நுழைந்தது அந்த கார்.
அந்த அதிகாலை நேரத்தில் தெள்ளத்தெளிவாக தன் காதில் விழுந்த கடலடி சத்தத்தில், அவனையும் அறியாமல் இதழ்களில் புன்னகை பூத்தது சேனாதிபதிக்கு.
வீடுகளில் முற்றம் தெளித்து கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண்கள், கார் சத்தத்தில் நிமிர்ந்து பார்த்தார்கள். அவர்களில் பெரும்பாலானோரை சேனாதிபதிக்கு தெரிந்திருந்தது.
பெரும்பாலான வீடுகளுக்கு முன் தென்னை மரங்கள் நின்று கொண்டு, கடற்காற்றுக்கேற்ப தலையசைத்துக் கொண்டிருந்தன.
அதிகாலை நான்கு மணியிலிருந்து ட்ரைவருக்கு ஓய்வு கொடுத்து விட்டு, சேனாதிபதி தான் ட்ரைவ் செய்து கொண்டிருக்கிறான்.
எனவே தன் கிராமத்து தெருவில் எந்தவித தடுமாற்றமும் இன்றி வண்டியை விட்டவன், தங்களை எதிர்பார்த்து திறந்து வைத்திருந்த கேட்வழியே நுழைந்து பாட்டியின் வீட்டுக்கு முன் கொண்டு வந்து வண்டியை நிறுத்தி, இறங்கினான்.
வீட்டுக்கு முன் நின்ற பன்னீர் மரத்திலிருந்து முற்றம் முழுவதும் விழுந்து கிடந்த பன்னீர்பூக்களிலிருந்து வந்த சுகந்தமான மணம், சிந்தையை நிறைத்தது.
இவர்களை எதிர்பார்த்து அதிகாலையிலேயே வந்து அமர்ந்திருந்த உறவுகளின் கைகளில் காஃபி கப் இருந்தது.
காரிலிருந்து இவர்கள் இறங்கவும், முற்றத்தில் கிடந்த நாற்காலிகளில் அமர்ந்திருந்தவர்கள் மொத்தமாக எழும்பினார்கள். அத்தனை பேருடைய முகமும் புன்னகையை பூசிக்கொண்டது.
“வந்துட்டியா ப்பா… இப்போ ரெண்டு மூனு நாளா உங்க ரெண்டு பேரையும் பாத்தே ஆவணும்னு, அந்த பெரிய மனுஷி அழிச்சாட்டியம் பண்ணுறாவ. போய் என்னன்னு கேளு ப்பு” என்றார் பெரியவர் ஒருவர்.
“சரி பெரியப்பா” என்றபடியே வீட்டை நோக்கி நடந்தான் சேனாதிபதி. சுபாஷிணியும் அவனை பின்தொடர்ந்தாள். வீட்டுக்கு வெளியே தங்கள் காலணிகளை களைந்து விட்டு உள்ளே நுழைந்தார்கள் இருவரும்.
புன்னகை முகத்தோடு தங்களை வரவேற்ற பெற்றவர்களுக்கும், உடன்பிறந்தவர்களுக்கும், தங்கள் புன்னகையையே பதிலாக்கியவர்கள், முன்வீடு என்று அவர்களால் அழைக்கப்படும் ஹால் பகுதியில், பனைநார் கட்டிலில் படுத்திருந்த பூரணி அம்மா பக்கத்தில் சென்றார்கள்.
பூரணி அம்மாவின் மார்புக்கூடு ஏறியிறங்கிய வேகமே, அவருக்கு இருக்கும் மூச்சுத்திணறலின் வீரியத்தைச் சொல்லியது.
“நீங்க எப்போ வருவீங்கன்னு கேட்டுட்டே இருந்தாங்க. இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னதான் ப்பா கண் அசந்தாங்க.” மகனுக்கு தகவல் சொன்னார் தமிழரசி.
தன் தைரியலட்சுமி கட்டிலில் சுருண்டிருந்த பாங்கு நெஞ்சை சுட, அவரின் நரைத்த கூந்தலை தன் கையால் தடவிக் கொடுத்தான் சேனாதிபதி.
அடுத்த வினாடி கண்களை பளிச்சென்று திறந்த பூரணி, புன்னகையை பூசிக்கொண்ட முகத்தோடு “வந்துட்டீங்களா மக்கா” என்று, தனக்கு இருபுறமும் நின்றிருந்த தன் பேரனிடமும் பேத்தியிடமும் கேட்டார்.
இவ்வளவு பேசுவதற்கு முன்பே மூச்சு திணறியது பூரணி அம்மாவுக்கு.
“ஹ்ம்ம்… அதெல்லாம் வந்தாச்சு பாட்டி ம்மா. இனிமே எது பேசுறதாயிருந்தாலும் ஹாஸ்பிடல் போய்ட்டு பேசலாம்” என்றான் சேனாதிபதி.
“இல்ல..” தீர்மானமாக சொல்லியபடியே, தலையை மறுப்பாக ஆட்டினார் பூரணி.
“ஏன்?” பாட்டியின் கண்களை கூர்மையாக பார்த்தபடி கேட்டான் சேனாதிபதி.
“நீ… சுபாவை இப்போ கல்யாணம் பண்ணிக்கிட்டா தான், நான் ஆஸ்பத்திரிக்கு வருவேன்.” பிடிவாதம் இருந்தது பெரியவரின் குரலில்.
“இதுக்கு நான் ஏற்கனவே உங்களுக்கு பதில் சொல்லியிருக்கேன் பாட்டி ம்மா.” அழுத்தமான குரலில் பதில் வந்தது சேனாதிபதியிடமிருந்து.
“எனக்கு அந்த பதில் வேண்டாம்…” சொல்லிவிட்டு பூரணி அம்மா லேசாக முகத்தை திருப்பிக் கொள்ள, அவரை தன் கைகள் இரண்டிலும் வாகாக அள்ளியிருந்த சேனாதிபதி, “ராஜ்… ஹாஸ்பிடல் போகணும், வண்டியை எடுங்க” என்று இங்கிருந்தே குரல் கொடுத்தான்…