“அப்போ, இந்த மாதிரி கேடுகெட்ட மனுஷங்க செய்யுறதை எல்லாம், கையைக் கட்டி வேடிக்கை பார்க்க சொல்லுறியா நீ?” சேனாதிபதியின் வார்த்தைகளில் இப்போது லேசாக சூடு ஏறியிருந்தது.
“சட்டப்படி தண்டனை வாங்கிக் குடுங்க. யாரு வேண்டாம்னு சொன்னது?”
“சில தப்புகளுக்கு உடனடியா தண்டனை குடுத்தே ஆகணும் சுபா.”
“சட்டத்துல அப்பிடி எதுவும் சொல்லியிருக்கா என்ன?”
“சில விதிவிலக்குகளும் இங்க உண்டு சுபா.”
“அந்த விதிவிலக்குகளோட விதியை நீங்க எழுதக் கூடாதுன்னு தான் நான் சொல்லுறேன்” என்றவள்,
“வேலைக்கு போன ஹஸ்பென்ட் எப்போ திரும்பி வருவார்னு காத்துட்டு இருக்கலாம் த்தான். ஆனா, எப்பிடி திரும்பி வருவாரோன்னு ஒவ்வொரு நிமிஷமும் பயந்துட்டே வாழுறது கொடுமை. அந்த கொடுமையை எனக்கு நீங்க தராதீங்க… அதனால…” இவ்வளவு நேரமும் கணவனுக்கு ஈடுகொடுத்து சரமாரியாக பேசிக் கொண்டிருந்தவள் இப்போது கொஞ்சம் தயங்கினாள்.
“அதனால…” விழிகளில் கூர்மையோடு மனைவிக்கு எடுத்துக் கொடுத்தான் சேனாதிபதி.
“அதனால… பேசாம இந்த வேலையை நீங்க ரிசைன் பண்ணிடுங்க” கணவனின் கண் பார்க்காமல் சொல்லியே விட்டாள் சுபாஷிணி.
“என்ன சொன்ன சுபா?” உடல் நாணாக முறுக்கேற, இடது கையால் மனைவியின் முகவாயைப் பற்றி தன்னை நோக்கி பார்க்க வைத்தவன், அதட்டலாக கேட்டான்.
“ம்ம்… தினம் தினம் உங்களுக்கு என்ன ஆகுமோன்னு என்னால செத்து செத்து பிழைக்க முடியாது அத்தான். இந்த வேலை உங்களுக்கு வேண்டாம்.” அழுத்தமாகச் சொல்லியவளின் குரலில் இலவச இணைப்பாக பிடிவாதமும் எட்டிப்பார்த்தது.
நடந்த நிகழ்வின் தாக்கத்தால், குழப்பமும், பயமும் மனைவியை சுழற்றியடிக்கிறது என்பதை சேனாதிபதியால் புரிந்து கொள்ள முடிந்தாலும், மனைவியின் பேச்சு அவன் பொறுமையை சோதித்தது.
“எவ்வளவு ஈசியா சொல்லிட்ட வேலையை விடுன்னு. அப்போ, இவ்வளவு நாளும் எங்கூட இருந்தும், இந்த யூனிஃபார்மை நான் எவ்வளவு நேசிக்கிறேன்னு உன்னால புரிஞ்சிக்க முடியல, இல்ல?” மனைவியை தன்னிலிருந்து விலக்கி, எழும்பி நின்றவனின் முகத்தில் கோபத்தின் சாயல்.
ஏன் புரியாமல்? இவ்வளவு ஏன்? சேனாதிபதியின் காக்கி உடையிலும், அவன் அதிரடியிலும் காதலில் சறுக்கி விழுந்தது தானே சுபாஷிணியின் மனது.
‘எப்போதும் தூரத்து பச்சை கண்ணுக்கு குளிர்ச்சி தானே!’
அப்படித்தான் தள்ளி இருந்து எல்லாவற்றையும் பார்த்த போது நன்றாகத்தான் இருந்தது. ஆனால், உடனிருந்து பார்க்கும் போது பெண்ணவளை பயம் ஆட்டிவைக்கிறதே, என்ன செய்ய?
சேனாதிபதியின் கோபம் அப்பட்டமாக அவன் முகத்தில் தெரிய, “நான் என்ன சொல்ல வரேன்னா…” என்றபடியே இருந்த இடத்திலிருந்து எழும்ப முயன்றாள் சுபாஷிணி.
“வேண்டாம் சுபா… நீ குழம்பி போயிருக்க, இப்போ நாம இதைப் பற்றி பேசினா, தப்பா போயிடும். அதனால வேற பேசலாம்.” ஒற்றைக் கையை உயர்த்தி, அருகில் வராதே என்பது போல சேனாதிபதி சொல்ல,
“ஹாங்… பேசலாமே… நானுமே பேசணும்னு தான் நினைச்சேன்… வாங்க சார் உக்காந்து பேசலாம்.” சட்டென்று அந்த சூழ்நிலையிலிருந்து வெளியே வந்து, “வாங்க சார் பழகலாம்” என்ற ரீதியில் சுபாஷிணி கணவனை அழைக்க, அவனோ நகராமல் அதே இடத்தில் நின்றான்.
“அட… வா…ங்க சார் பேசலாம்.” ராகமாக சொல்லியபடியே, கணவனின் அருகே வந்து அவன் இடுப்பைச் சுற்றி தன் கையைப் போட்டு தன்னோடு இழுத்துக் கொண்டு போய் சோஃபாவில் அமரவைத்தவள்,
“பேசலாம்னு சொல்லிட்டு இப்பிடி கம்முன்னு வாயை மூடிட்டு நின்னா, எப்பிடி சார் பேசுறது?!” கேலியாக கேட்டபடியே அவன் சட்டை பட்டன்களை கழற்ற ஆரம்பித்தாள்.
கொதி நிலையில் இருந்தவள் சட்டென்று குளிர்ந்து போன அதிசயத்தை வியந்து போய் பார்த்துக் கொண்டிருந்த சேனாதிபதி, “ஹேய்… என்னடி பண்ணப்போற? ஷோல்டர் வேற எனக்கு பெயின்னா இருக்கு.” கண்களைச் சிமிட்டியபடி வாய்கொள்ளா சிரிப்போடு சொல்ல,
“ஹாங்… நினப்பு தான்…” என்று கணவன் கன்னத்திலேயே விரல்களை மடக்கி குத்தியவள், சட்டையை முழுவதுமாக கழற்றி எடுத்து அவன் காயத்தை பார்வையிட்டபடியே, “சொல்லுங்க… எதுக்கு அந்த அனு பக்கத்துல உக்காந்தீங்க?” என்றாள் கண்களை உருட்டியபடி.
‘ஆத்தாடி… இதுக்கு தான் இவ்வளவு பில்டப்பா?’ உள்ளுக்குள் அலறிய சேனாதிபதி, “நான் எங்க உக்காந்தேன் சுபா? அவதான் எம்பக்கத்துல வந்து உக்காந்தா?” என்றான் அப்பாவியாக.
“உக்கார்ந்தா இல்ல? நீங்க எழும்பி தூர போறதுக்கு என்னவாம்?” அக்மார்க் மனைவியாக மாறி சுபாஷிணி கேள்விக்கணையை வீச,
“ஹேய்… உன்னை வெறுப்பேத்துறதுக்காக தான் அனு அப்பிடி செய்தா தெரியுமா?உன்னோட எக்ஸ்பிரஷன்ஸ் பார்த்து அவளுக்கு சிரிப்பு ஓடிச்சி, நான் பார்த்தேன்” என்றான் மனைவியை சமாதானப் படுத்திவிடும் வேகத்தில்.
ஆமாம்… நிசர்சனத்தை ஏற்றுக் கொள்ள பழகியிருந்தாள் அனு. என்றாலும் சுபாஷிணியை வெறுப்பேற்றிப் பார்ப்பதில் அவளுக்கு ஒரு சின்ன ஆனந்தம். அதை திவ்யமாக செய்துவிட்டு போயிருக்க, சுபாஷிணியிடம் மாட்டிக் கொண்டு முழிந்தான் சேனாதிபதி.
“அப்போ எல்லாம் தெரிஞ்சே தான் அவளை என்கரேஜ் பண்ணுற மாதிரி, நீங்க அமைதியா இருந்துருக்கீங்க? ம்ம்…” சண்டைக்கோழியாக மாறி அவன் கன்னம் இரண்டையும் பற்றி கிள்ளினாள் சுபாஷிணி.
“அம்மாடியோவ்… இதுக்கு மேல இந்த டாபிக்கை உன்னை பேசவிட்டா நான் தாங்க மாட்டேன்” என்றவன், ஒற்றைக் கையால் மனைவியை இழுத்தணைத்து, “ஆனாலும் கொஞ்சம் அதிகமாத் தான் இந்த வாய் இன்னைக்கு பேசுது” என்று முணுமுணுத்தபடியே, மனைவியின் இதழ்களை தன் உதடுகளால் மூடி பேசவிடாமல் செய்தான்…
மறுநாள் காலையிலேயே மாதவபுரத்திலிருந்து, இருவரின் குடும்பத்தாரும் வந்திறங்கி விட்டார்கள். செய்தி மூலம் விஷயத்தை அறிந்து கொண்டவர்கள் அன்றே வந்துவிடத் துடிக்க, சேனாதிபதி தான் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு வந்தபிறகு வந்தால் போதும் என்று அவர்களை அமைதிபடுத்தியிருந்தான்.
சுபாஷிணியின் அப்பா கூட இம்முறை வந்திருந்தார்.
வந்திருந்தவர்களில் விசாலி தவிர அனைவருமே சேனாதிபதியை கூடுதல் கவனத்தோடு பணிபுரிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்களே தவிர, அவன் வேலையை யாரும் குறை சொல்லவோ, விட்டுவிடவோ சொல்லவில்லை.
விசாலி எப்போதும் போல மகளிடம் தன் பாட்டை ஆரம்பிக்க, “ம்மா.. அத்தானுக்கு எல்லாம் தெரியும். நீங்க அமைதியா இருங்க” என்று விட்டாள்.
மங்கையும், ராகுலும், “சூப்பர்… இப்பிடி உடனுக்குடன் தூக்குனா தான், தப்புசெய்ய பயம் வரும்” என்றார்கள் பெரிய மனிதத் தோரணையோடு.
‘இதைத்தானே அந்த பெண் அனுவும் சொன்னாள், ஆனால் எனக்கு கோபம் வந்ததே’ என்ற எண்ணம் ஓடியது சுபாஷிணிக்கு.
எவ்வளவு சொல்லியும் இளையவர்களின் படிப்பை காரணம் காட்டி, மறுநாள் காலை ட்ரெயினுக்கே அனைவரும் கிளம்பி விட்டார்கள். கிளம்புவதற்கு முன் பூரணி அம்மா, “நல்லி எலும்பு வாங்கி எம்பேரனுக்கு சூப் வச்சி குடு மக்கா, அப்போ தான் உடம்பு சீக்கிரம் தேறும்” என்று, சூப் வைக்கும் பக்குவத்தை சுபாஷிணிக்கு சொல்லி கொடுத்திருந்தார்.
சுபாஷிணியும் பக்கத்தில் இருந்த மட்டன் கடையிலிருந்து எலும்பு வாங்கி வந்து அப்பாம்மை சொன்ன பக்குவத்திலேயே கணவனுக்கு சூப் வைத்து கொடுத்தாள்.
காலை, மாலை இருவேளை மட்டும் தான் சேனாதிபதி சொல்லுவது போல சாப்பாடு. மத்தியானம் சுபாஷிணி வைத்தது தான் சட்டம். மட்டன், சிக்கன், மீன், முட்டை என்று சமையல் தூள் கிளம்பியதைப் பார்த்து சேனாதிபதியே அரண்டு போனான் என்று தான் சொல்ல வேண்டும்.
போதாதற்கு தினமும் செய்யும் உடற்பயிற்சி வேறு அவனால் செய்ய முடியவில்லை. ஒருநாள் ஜிம் அறையை சேனாதிபதி லேசாக திறந்து பார்த்ததற்கே, அந்த அறை பூட்டப்பட்டு சாவி சுபாஷிணியின் கைக்கு வந்திருந்தது.
“ஹ்ம்ம்… இப்பிடியே போனா லீவ் முடிஞ்சு ஆஃபீஸ் போகும் போது, நீ யாருன்னு கேக்கப் போறாங்க சுபா. அந்த அளவுக்கு வெயிட் போட்டுறப் போறேன்” என்று சேனாதிபதி சொல்ல,
“பரவாயில்ல… இப்பிடி வத்தலும் தொத்தலுமா இல்லாம, நானும் கொஞ்சம் கண்ணுக்கு குளிர்ச்சியா உங்களை பாத்துக்குறனே.” செதுக்கி வைத்தது போலிருந்த கணவனின் தேகத்தை கேலி செய்த பிறகு தான், தன் வார்த்தைகளை கணவன் தவறாக எடுத்துக் கொள்வானோ என்ற பயம் வந்தது சுபாஷிணிக்கு.
ஆனால் சேனாதிபதி, “ஆஹாங்… எத்தனை நாள் சதித்திட்டம் சுபா இது?” என்று கேலியாக கேட்டு சிரித்ததோடல்லாமல், “அப்படியே வெயிட் போட்டாலும், ஷோல்டர் காயம் சரியானதும், ஓவர் டைம் வொர்க் அவுட் செய்து குறைச்சிடுவேன்” என்று மனைவியைப் பார்த்து விஷமமாக கண்ணடிக்க, பயம் மறந்து சிவந்து போனாள் சுபாஷிணி.
என்ன செய்தும் ஐந்து நாட்களுக்கு மேல் கணவனை வீட்டில் பிடித்து வைக்க முடியவில்லை சுபாஷிணியால். எப்போது “காக்கிச்சீருடையை நான் காதலிக்கிறேன்” என்று கணவன் சொன்னானோ, அதன் பிறகு அவனை வேலையை விட்டுவிடச் சொல்லி சுபாஷிணி சொல்லவில்லை. இவ்வளவு ஏன்? அப்படி ஒரு பேச்சு தங்களுக்குள் நடந்தது என்பதையே தம்பதியர் காட்டிக் கொள்ளவில்லை
இத்தனை நாட்களில், தனக்கு நேர்ந்ததை தெளிவாக சொல்லும் அளவிற்கு அந்த பெண் கமலியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது.
கிடைத்த சாட்சிகளைக் கொண்டே பரபரப்பாக ஓடிய கமலியின் வழக்கு, இப்போது நேரிடையாக பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தை வைத்து இன்னொரு முறை பத்திரிக்கைகளில் பரபரப்பு செய்தியாகியது. அப்படியே, தாஸுக்கு ஏற்பட்ட முடிவு கூட சரிதான் என்றும் பத்திரிக்கைகளே தீர்ப்பெழுதின.
கூடவே ‘வதம்’ என்று ஹேஷ்டேக் செய்து சேனாதிபதி, தாஸை என்கவுன்டர் செய்ததை சமூக வலைத்தளங்களில் இளைஞர்கள் கொண்டாடித் தீர்த்தார்கள்.
அத்தனையையும் மனைவியிடம் காட்டிய சேனாதிபதியின் கண்களில் “என்னவோ சொன்னாயே?” என்ற கேலியே.
“அதுக்காக, இதைப்போல எல்லாம் இனிமேல் நீங்க செய்யக்கூடாது?” என்று முறுகிக்கொண்டாள் மனைவி. பதிலாக கணவனின் இதழ்களில் ஒரு பொருள் விளங்கா புன்னகை மட்டுமே.
அதன்பிறகு வந்த நாட்களில் அந்த தம்பதியரின் வாழ்க்கை தெளிந்த நீரோடையாக சலசலப்பின்றி அழகாகவே ஓடிக்கொண்டிருந்தது.
சேனாதிபதியின் தோள்ப்பட்டை காயமும் நன்றாகவே ஆறியிருந்தது. இப்போதெல்லாம் நள்ளிரவு எந்நேரத்திற்கு வந்தாலும், மனைவியின் தூக்கம் கலைக்காமல் தூங்குவதே இல்லை சேனாதிபதி. அவளுக்கும் தன் தூக்கம் கெட்டுப் போகிறதே என்ற கவலை எல்லாம் இல்லை.
அன்றும் அப்படித்தான், கணவனோடு சம்சார சாகரத்தில் குதித்து, நீந்தி களித்து, களைத்து கணவனின் மார்பையே மஞ்சமாக்கி தூங்க ஆரம்பித்திருந்தாள் சுபாஷிணி.
இத்தனை நேரமும் அத்தான்… அத்தான்… அத்தான்… என்று பிதற்றி, தன்னை பித்தாக்கி விட்டு தூங்கும் மனைவியை ஆதூரமாக அணைத்து அவள் முன்நெற்றியில் சேனாதிபதி முத்தம் ஒன்றை வைக்க,
“போதும்… தூங்குங்க த்தான்” என்று சிணுங்கினாள் மனைவி.
“அடேய்… நீ இன்னும் தூங்கலையா? அப்போ…” மனைவியின் காதோடு தன் மீசைமுடி உரச கிசுகிசுத்தவனின் வாயில், தன் வெண்பஞ்சு விரல்களால் நச்சென்று அடி ஒன்றை சுபாஷிணி வைக்க, சத்தமாக சிரித்தவனுக்கு தனக்கு வலியை தந்தவளே வலிநிவாரணி ஆகிப்போனது குறித்து ஆச்சர்யமே.
தன்மீது அக்கறை காட்டி, தனக்கொன்று என்றால் துடித்து, தன்னோடு காதலாய் ஒரு வாழ்க்கை வாழும் மனைவி, என்றோ ஒருநாள் சொன்ன வார்த்தைகளின் வீரியம் வலுவிழந்து விட்டதாகவே அவனுக்கு தோன்ற, இல்லை என்று சொல்வதற்காக அந்த பொல்லாத நாளும் வந்து சேரத்தான் செய்தது…