“ஹேய்… கமாண்டர்… கையைக் குடுங்க மொதல்ல.” தன் பெற்றோரோடு ஆர்ப்பரித்தபடி சேனாதிபதியின் வீட்டுக்குள் நுழைந்த அனு, ஹால் சோஃபாவில் அமர்ந்திருந்த சேனாதிபதியின் வலது கையைப் பற்றி குலுக்கியபடியே,
“அப்பிடியே நான் ஒரு நேம்லிஸ்ட் போட்டுத் தரேன், அவனுங்களையும் என்கவுண்டர் பண்ணித் தூக்கிடுங்க. அப்போ தான் இந்த சென்னைக்கு ஒரு விடிவுகாலம் பிறக்கும்” என்று கண் சிமிட்டினாள்.
முழுதாக இரண்டு நாட்கள், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் மனைவியோடு கழித்துவிட்டு, இன்று மத்தியானம் தான் சேனாதிபதி வீடு வந்து சேர்ந்திருக்கிறான். அன்றே சாயங்கால நேரத்தில், அவன் உடல்நிலையை விசாரித்துவிட்டு செல்வதற்காக மனைவியோடும் மகளோடும் வந்துவிட்டார் ஐஜி.
வந்தவர்களுக்கு கதவு திறந்து விட்டு, முகமன் கூறியபடியே அவர்களோடு வந்த சுபாஷிணி, அனுவின் செயலிலும், வார்த்தைகளிலும் முகத்தை சுருக்க,
“அவர் கேக்குற மாதிரி நீங்க சொல்லணும்.” கணவனுக்கு பதில் சொல்லியபடியே ஐஜி யின் மனைவி அவருக்கு பக்கத்தில் உட்கார்ந்தார்.
“இந்த ஓல்ட் மேன் சகவாசமெல்லாம் உங்களுக்கு வேண்டாம் கமாண்டர். நாமெல்லாம் யூத். தப்புன்னு தெரிஞ்சா, தட்டணும்… தூக்கணும். அதுதான் நமக்கு கெத்து” என்றபடியே, அமர்வதற்கு இடம் தேடுவது போல அனு கண்களைச் சுழற்ற, சட்டென்று சோஃபாவில் கணவனுக்கு அருகே இருந்த இடத்தில் அமர்ந்து கொண்டாள் சுபாஷிணி.
சுபாஷிணியின் செயலில், உதட்டுக்குள் சிரிப்பை அடக்கிய அனு, தன் தந்தைக்கு அருகே சோஃபாவின் கை வைக்கும் திண்டில் அமர்ந்து கொள்ள, “காயம் எப்பிடி இருக்கு சேனா?” என்று விசாரிக்க ஆரம்பித்தார் ஐஜி.
“ம்ம்… கொஞ்சம் பெயின் இருக்கு சார், மற்றபடி ஒன்னும் பிரச்சினை இல்ல.” வீட்டில் தம்பதியர் மட்டுமே இருக்க, மேல் சட்டை இன்றி டர்க்கி டவலால் தன் தோளை மறைத்திருந்த சேனாதிபதி அதை இழுத்து விட்டபடியே சொல்ல,
“எங்க… காயத்தைப் பார்ப்போம்…” என்றபடியே இருந்த இடத்திலிருந்து அனு எழும்ப முயன்றாள்.
“அதெல்லாம் ஒன்னுமில்ல… ஆற ஆரம்பிடிச்சி.”
நீ ஒன்றும் பார்க்க வேண்டாம், என்ற ரீதியில் அவசர அவசரமாக கணவனின் டவலை இன்னும் கொஞ்சம் இழுத்து விட்டபடியே சொன்ன சுபாஷிணியின் விழிகள், கணவனை உறுத்து விழித்ததில், “எக்ஸ்க்யூஸ்மி…” என்றபடியே எழும்பியவன், அறைக்குள் சென்று சட்டை ஒன்றை போட்டுவிட்டு வந்தமர்ந்தான்.
சுபாஷிணியும், “இதோ டீ போட்டுட்டு வரேன்…” என்று வேறுவழியில்லாமல் எழும்பிச் செல்ல, அவள் விட்டுச் சென்ற இடத்தில் சிறிது இடைவெளி விட்டு சேனாதிபதி அருகில் வந்து அமர்ந்துகொண்ட அனு, “ஆமா… உங்க போண்டா… டீ ஏன் மூஞ்சை தூக்கி வச்சிட்டு அலையுது கமாண்டர்? உங்க என்கவுன்டர் எபெக்டா?” என்று கேட்க, புன்னகை மட்டுமே சேனாதிபதியின் முகத்தில்.
“இதுக்கு தான் உங்களை மாதிரியான தில்லான ஆட்கள், என்னை மாதிரியான தைரியசாலிகளை மேரேஜ் பண்ணனும்னு சொல்லுறது” என்று அவளே பதிலும் சொல்ல, சமையலறைக்கு சென்றாலும், கண்ணையும் காதையும், இங்கேயே வைத்திருந்த சுபாஷிணிக்கு பற்றிக்கொண்டு வந்தது.
எல்லாவற்றையும் விட பதில் எதுவும் சொல்லாமல் மங்குணிச் சாமியாரைப் போல அமர்ந்திருந்த கணவன் மீது கண்மண் தெரியாத அளவிற்கு கோபம் வந்தது.
மகளின் பேச்சில், ஏதோ ஹாஸ்யத்தை கேட்டது போல சத்தமாக சிரித்த ஐஜி, உதட்டில் உறைந்த புன்னகையோடு பதில் பேசாமல் அமைதியாக இருந்த சேனாதிபதியைப் பார்த்து, “வீட்டுல அடி ரொம்ப பலமோ மேன், ரொம்ப அமைதியா இருக்குற” என்றார்.
“நீங்க ரெண்டு பேரும் இன்னைக்கு சேனாதிபதிக்கு அவர் வைஃப் கிட்டயிருந்து அடிவாங்கி குடுக்காம விடமாட்டீங்க போல” என்று சிரித்தார் ஐஜி யின் மனைவி.
“சரியான பைத்தியக்கார குடும்பமா இருக்கும் போல?’ உள்ளுக்குள் கறுவியபடி, தேநீர் தயாரிப்பதில் தீவிரமாக இறங்கினாள் சுபாஷிணி. வேறென்ன? டீயைக் கொடுத்து அவர்களை கிளப்பிவிடும் தீவிரம் தான்.
“அப்பாவும் பொண்ணும் சேர்ந்தா, இப்பிடித்தான் ஏதாவது ஜோக்கா பேசி வீட்டையே இரண்டாக்குவாங்க. நீ தப்பா நினைச்சுக்காத.” அருகே கேட்ட குரலில் திரும்பி பார்த்தாள் சுபாஷிணி. ஐஜியின் மனைவி நின்றிருந்தார்.
ஒருமுறை அவர்களின் அழைப்பின் பெயரில் தேநீர் விருந்துக்கு ஐஜி யின் வீட்டுக்கு சுபாஷிணியை அழைத்து சென்றிருக்கிறான் சேனாதிபதி. அப்போது இவரை சந்தித்தது தான். அதன் பிறகு தரைத்தளத்தில் எப்போதாவது கண்டு கொண்டால் புன்னகையோடு நகர்ந்து விடுவார்கள்.
‘அடடே… இதுக்கு பேருதான் உங்க ஊர்ல ஜோக்கா?” வாய் வரைக்குமே வார்த்தைகள் வந்துவிட்டாலும், நாகரீகம் கருதி அதை விழுங்கினாள் சுபாஷிணி.
“ஆமா… க்கா… தப்பா நினைச்சுக்காதீங்க க்கா…” என்று பின்பாட்டு பாடியபடி தாயின் பின்னால் வந்து நின்றாள் அனு.
எவ்வளவு தான் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள முயன்றாலும், முடியாமல், “நான் உனக்கு அக்காவா?” கண்களை உருட்டியபடி அனுவிடம் கேட்டாள் சுபாஷிணி.
“ஹ்ம்ம்… ஆமா க்கா… நீங்க தானே க்கா, உங்களை மரியாதையா கூப்பிடணும்னு அன்னைக்கு சொன்னீங்க க்கா. அதான் அக்கான்னு கூப்பிடலாம்னு முடிவு பண்ணிட்டேன் க்கா.” சிறுபிள்ளைப் போல கண்களைச் சிமிட்டியபடி அனு சொல்ல, ஐஜியோடு மெல்லிய குரலில் உரையாடியபடி இருந்த கணவன் மீதுதான் மொத்த கோபமும் வந்தது சுபாஷிணிக்கு.
ஒருவழியாக டீயைக் குடித்துவிட்டு, மேலும் சற்றுநேரம் இருந்து கதை பேசிவிட்டு ஐஜி குடும்பம் கிளம்பி செல்ல, கதவை பூட்டிவிட்டு தொப்பென்று, கணவனுக்கு எதிரே கிடந்த இருக்கையில் அமர்ந்த சுபாஷிணி, கோபமாக கணவனைப் பார்வையிட்டாள்.
அன்று மருத்துவமனைக்கு வந்து நின்ற நேரத்திலிருந்து, இதோ இப்போது வரை தொடரும் மனைவியின் கோபப்பார்வைகளை சளைக்காமல் எதிர் கொண்டான் சேனாதிபதி.
ஆமாம்… இரண்டு நாட்களுக்கு முன்னால் கண்களில் கோபத்தோடு மருத்துவமனைக்கு வந்து நின்ற மனைவியிடம், “வா சுபா… எப்பிடி வந்த?” என்ற சேனாதிபதி, தன் காயத்தை பரிசோதித்தபடி நின்றிருந்த மருத்துவரிடம் மனைவியை அறிமுகப்படுத்தினான்.
“நல்லகாலம் புல்லட் உடம்புக்குள்ள இல்ல, இல்லைன்னா இன்னும் கஷ்டமாயிருக்கும்” என்று சுபாஷிணியிடம் கூறிய மருத்துவர், “சாரை கொஞ்சம் ஸ்பெஷல் கேர் எடுத்து கவனிச்சுக்கோங்க” என்றபடி அறையை விட்டு வெளியேற திகைத்து போனாள் சுபாஷிணி.
அவள் கொண்டிருந்த என்கவுண்டரைப் பற்றிய அறிவு, காயம், மருத்துவமனை, சிகிச்சை இவை எல்லாம் கண்துடைப்புக்காக என்ற எண்ணத்தை கொடுத்திருக்க, கணவனின் தோளில் உண்மையாகவே இருந்த காயம் அவளை மிரட்டியது. அதுவும் இல்லாமல் மருத்துவரின் கை, காயத்தை பரிசீலிக்கும் போது, முகத்தைச் சுருக்கிய கணவனின் செயல் அவனது வலியின் அளவைச் சொல்ல, தன்னையறியாமலேயே அவளது கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது.
“ம்ப்ச்ச்… சுபா… என்ன இது? இங்க வச்சு அழாத, ப்ளீஸ்…” சேனாதிபதி சொல்ல, “நான் அழறதுக்கு கூட இடம், பொருள், ஏவல் பாக்கணுமா?” என்று கணவனிடம் கோபமாக பாய்ந்தவள், அதன் பிறகு தேவைக்கு தவிர கணவனிடம் பேசவேயில்லை. பார்வை மட்டும் கோபமாக கணவனை துளைத்துக் கொண்டே இருந்தது.
ஆனால், மருத்துவமனைக்கு வந்தபோது மனைவியின் கண்களில் தெரிந்த கோபத்திற்கும், அதன்பிறகு அவள் கண்களில் வந்து அமர்ந்து கொண்ட கோபத்திற்கும் உள்ள வித்தியாசத்தை ஒரு கணவனாக சேனாதிபதியால் கண்டுகொள்ள முடிந்தது.
இதோ, இன்று மதியம் வீட்டுக்கு வரவும், ஒரு கப் சூடான பாலுடன், ஃப்ரூட் சாலட்டும் தந்து, “ஒன் அவர்ல சமைச்சிடுவேன். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க த்தான்” என்றவள்,
சொன்னது போலவே ஒருமணி நேரத்தில் சுடச்சுட உணவும் தந்து, ஓய்வெடுக்கவும் சொல்ல, மனைவி சொல்லியதை தட்டாமல் செய்தவனிடம், இன்னமும் சகஜமாகவில்லை சுபாஷிணி. ஆனால் முறைப்புக்கு மட்டும் பஞ்சமில்லை.
இப்போதும் முறைத்தபடியே அமர்ந்திருந்தவளை நோக்கி புன்னகையோடு தனது வலது கையை நீட்டி, ‘வா..” என்பது போல சேனாதிபதி தலையசைக்க, கணவனின் நீட்டிய கரத்தைப் பற்றிக்கொண்டு அவனருகே வந்து அமர்ந்தவள், அவன் வலது மார்போடு புதைந்து கொண்டு,
“ஷோல்டர்ல இவ்வளவு பெரிய காயம் இருக்கும்னு நான் நினைச்சுக் கூட பாக்கல த்தான். சாரி…” கணவனின் இடது மார்பை தடவியபடியே தழுதழுத்தாள்.
“ஓஹ்… அப்புறம் என்ன நினைச்சீங்க!” போலியான ஆச்சர்யத்தோடு சேனாதிபதி கேட்க,
“அது… சும்மா போலீஸ் தரப்புல கதை விடுறீங்க. அப்பிடி எல்லாம் ஒரு காயமும் இருக்காதுன்னு நினைச்சேன்.” கணவனின் மார்பில் முகத்தை தேய்த்தபடி உண்மையையே சொன்னாள்.
“எங்க டிப்பார்ட்மெண்டை ரொம்ப டேமேஜ் பண்ணுற சுபா.” மெல்லிய சிரிப்போடு சேனாதிபதி சொல்ல,
“சிரிக்காதீங்க த்தான். நீங்க செய்தது எதுவும் எனக்கு பிடிக்கவேயில்லை.” கணவனின் மார்பிலிருந்து நிமிர்ந்து அவன் முகம் பார்த்து பல்லைக் கடித்தாள் சுபாஷிணி.
அவனோ, “நான் உன்னை என்ன செய்தேன் சுபா? இங்க பாரு எங்கையிரண்டும் கூட சும்மா தான் இருக்கு” என்று, தன் கைகளிரண்டையும் விரித்து காட்டினான்.
“நான் சொல்லவர்றது உங்களுக்கு புரியல? ம்ம்… அடுத்த ஆஸ்கார் அவார்டு உங்க நடிப்புக்கு தான் தரச் சொல்லணும்” என்று முகத்தைச் சுருக்கியவள்,
“தப்பு செய்திருந்தா சட்டப்படி தண்டனை வாங்கி குடுக்கிறதை விட்டுட்டு, ஒரு உயிரை எடுக்குற அதிகாரத்தை உங்களுக்கு யார் தந்தது த்தான்?” என்றாள் கோபமாக.
இப்படி ஏதாவது கேள்வி மனைவியிடமிருந்து வரும் என்று எதிர்பார்த்தபடி இருந்த சேனாதிபதி, ஆழ்ந்து மூச்செடுத்து தன்னை அமைதிப்படுத்திக் கொண்டு, “உயிரை எடுக்குற அதிகாரம் யார் தந்தது? ம்ம்… இதே கேள்வியை எதிராளியை பாத்தும் கேக்கலாம்ல சுபா?” என்று பதிலுக்கு கேட்டான்.
“கண்டிப்பா… ஆனா, யூனிஃபார்ம் போட்டு, அரசாங்க வெப்பன்ல ஒரு உயிருக்கு முடிவுரை எழுதி, என்கவுன்டர்ன்னு பாலீஷ்டா அதுக்கொரு பெயரை வச்சாலும், அதுக்கு பெயர்… அதுக்கு பெயர்… என்ன த்தான்? கொ…கொலை தானே?” தழுதழுத்த குரலில் கேட்டவள்,
“புருஷன் கையால ஒரு உயிர் போறதை எந்த பொண்ணு தான் விரும்புவா? சொல்லுங்க…” இரண்டு நாட்களாக தன் மனதை அழுத்திக் கொண்டிருந்த பாரத்தை ஆற்றாமையோடு கணவனிடம் கொட்டினாள் சுபாஷிணி.
“அதுக்கு பெயர், நீ சொல்லுறது இல்ல சுபா, வதம்.” வலது கையால் மனைவியின் கூந்தலை மென்மையாக வருடிக் கொண்டிருந்தவனின் குரல், அவன் செய்கைக்கு நேர்மாறாக இருந்தது.
“சும்மா பூசி மெழுகாதீங்க த்தான்.” அதிருப்தியாக இதழ் சுழித்தாள் சுபாஷிணி.
“உண்மையாத் தான் சொல்லுறேன் சுபா. தெய்வங்கள் அரக்கர்களை வதம் செய்யுறதை சூரசம்ஹாரம்னு கொண்டாடுற உலகம், அரக்ககுணம் கொண்ட மனுஷங்களை போலீஸ் வதம் செய்யுறதை மட்டும் எப்பிடி நீ சொல்லுற மாதிரி சொல்லும்?” என்றான் சவாலாக.
“சரி… வதம், ஒத்துக்குறேன். ஆனா, சம்ஹாரம் செய்த எந்த கடவுளுக்காவது உயிர் ஆபத்து வந்துருக்கா? இல்லையே.. இதோ… இங்க பட்ட தோட்டா, கொஞ்சமே கொஞ்சம் இறங்கி இங்க பட்டிருந்தா, வதம் செய்த மனுஷனோட நிலமை என்ன? சொல்லுங்க த்தான்?”
கணவனின் இடது தோள் காயத்திலிருந்து ஒற்றைவிரலை இறக்கி மார்புக்கு அருகில் கொண்டு வந்து கேட்டவள்,