இரவோடு இரவாக, அந்த வீடியோவில் இருந்த நபரை தனது கஸ்டடிக்கு கொண்டு வந்திருந்தான் சேனாதிபதி.
அந்த நபர் ‘தாஸ்’.
ஆம்… முன்னாள் எம்எல்ஏ இராஜபூபதியின் வலது கையான தாஸ் தான்.
அந்த வீடியோவை அனுப்பியிருந்தது, அன்று குடியிருப்பு பகுதியில் சேனாதிபதியிடம் வாங்கிகட்டிக் கொண்ட மூன்று இளைஞர்களில் ஒருவன்.
வாட்ஸ் அப் குரூப் ஒன்றில் அந்த வீடியோ வலம்வர, ஒருநபரோடு பேசிக்கொண்டு நின்றிருந்த கமலியை கண்டவனின் மூளை, அவளின் விபத்தோடு அதை பொருத்திப் பார்க்க, சற்றும் தாமதிக்காமல் சேனாதிபதிக்கு அந்த வீடியோவை அனுப்பி வைத்து விட்டான்.
பரிச்சயமான முகமாக இருக்கிறதே என்று யோசித்தபடியே வீடியோவை பார்த்துக் கொண்டிருந்த சேனாதிபதிக்கு, இராஜபூபதியை பார்க்க கிடைத்த ஒருசில சந்தர்ப்பங்களில், அவரோடு ஒட்டிக் கொண்டு அலைந்த தாஸை இனம் கண்டுகொள்ள முடிந்திருந்தது. வீடியோவை ஜெகன்நாதனுக்கு அனுப்பி தன் எண்ணத்தை உறுதிபடுத்திக் கொண்டான்.
இராஜபூபதியின் பினாமி பெயரில் இருக்கும் பப்பை தொடர்ந்து கண்காணித்து வந்ததன் பயனாக, அந்த பப்பில் தான் இந்நேரத்திற்கு அந்த தாஸ் இருக்கக்கூடும் என்று ஜெகன்நாதன் கூடுதல் தகவல் சொல்ல, தாமதிக்காமல் தன் கட்டுப்பாட்டில் இருக்கும் ரகசிய இடத்திற்கு அந்த தாஸை அள்ளிக்கொண்டு வந்துவிட்டான் சேனாதிபதி.
“சொல்லு… எதுக்காக கமலியை கொலை பண்ண முயற்சி செய்த?” அந்த நள்ளிரவில் தாஸிடம் தனது விசாரணையைத் தொடங்கிய சேனாதிபதியிடம், கோர்ட்டுக்கு அவனை கொண்டு செல்லும் முன் அவனிடமிருந்து உண்மையை வாங்கிவிட வேண்டும் என்ற வேகம் இருந்தது.
“எதுக்கு சார் என்னை ஸ்டேஷனுக்கு கொண்டு போகாமல், இங்க வச்சிருக்கீங்க?” கமலியின் பெயரைக் கேட்டதுமே உள்ளுக்குள் அதிர்ந்தாலும், அதை முகத்தில் துளியும் காட்டிக்கொள்ளாமல், தான் இருக்கும் அறையின் நாலாபுறமும் கண்களை சுழல விட்டபடியே கேட்டான் தாஸ்.
“என்ன? பெரிய பருப்புன்னு நெனைப்போ… கேட்டதுக்கு ஒழுங்கா பதில் சொல்லுடா” என்றபடியே, ஓங்கி அவன் பின்னந்தலையில் ஒரு தட்டு தட்டினான், அங்கிருந்த ஜெகன்நாதன்.
ஜெகன்நாதனோடு, இன்னும் சில நம்பிக்கைக்குரிய போலீஸார்கள் இந்த திட்டத்தில் சேனாதிபதியோடு கைக்கோர்த்திருந்தார்கள்.
“காரணம் சொல்லாம என்னை நீங்க அரெஸ்ட் பண்ணுனதே தப்பு. இதுல போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு போகாமல் இப்பிடி தனியா அடைச்சு வச்சு டார்ச்சர் பண்ணுறது இன்னும் தப்பு” என்றான் தாஸ் அலட்டிக் கொள்ளாமல்.
“அடடே… ஐயாவுக்கு உண்மையான டார்ச்சர் ன்னா என்னன்னு காட்டாம பேசிட்டு இருக்குறது நம்ம தப்பு தானே ஜெகா. சாரோட ஆசையை தீத்து வச்சிடுவோமா?”
நக்கலாகச் சொல்லியபடியே நாற்காலியில் அமர வைக்கப்பட்டிருந்த தாஸின் கன்னத்தில் தனது வலது கையை இடியென இறக்கியிருந்த சேனாதிபதி, தாஸின் அடர்ந்து வளர்ந்திருந்த கேசத்தை கொத்தாக பற்றி தலையை பின்நோக்கி வளைத்தபடியே, “இப்போ சொல்லுடா அந்த பொண்ணை எதுக்காக கொல்லப் பாத்த?” என்றான் முகத்தில் ஏறிய ரௌத்திரத்தோடு.
“நீங்க… தப்பான ஆள் மேல கை வச்சிட்டீங்க ஏசிபி சார். எனக்கு அப்பிடி ஒரு பொண்ணையேத் தெரியாது.” ஆக்ரோஷமாக இழுபட்ட முடியால் முகம் சுருக்கி பல்லைக் கடித்து வலியைப் பொறுத்துக் கொண்டு திக்கித்திணறி பதில் சொன்னான் தாஸ்.
“ஓ… அப்பிடியா சார்… இப்போ தெரியுதா பாருங்க.” பிடித்திருந்த அவன் முடியை பலமாக ஒரு ஆட்டு ஆட்டி, தலையை பின்னால் தள்ள, அமர்ந்திருந்த நாற்காலியோடு சரிந்து கீழே விழுந்தான் தாஸ்.
அதை ஒரு பொருட்டாக கொள்ளாத சேனாதிபதி, தன் மொபைலில் அந்த வீடியோவை ஓடவிட்டு தாஸின் முன்னால் காட்ட, விழிகள் இரண்டும் தெறித்து விடுவது போலப் பார்த்தபடியே தரையிலிருந்து மெதுவாக எழும்பினான் தாஸ்.
உண்மையில் இப்படி ஒன்றை அந்த தாஸ் எதிர்பார்க்கவேயில்லை. இதை மட்டுமா அவன் எதிர்பார்க்கவில்லை. அன்று அப்படியொரு சம்பவம் நடைபெறும் என்றே அவன் எதிர்பார்க்கவில்லையே.
கமலியிடம் அவன் எதிர்பார்த்து சென்றது ஒன்று. ஆனால் நடந்தது வேறு. தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, அந்த நேரம் திட்டமிடாமலேயே, கமலியை அடித்து தூக்க வேண்டியதாகிப் போனது. இல்லையென்றால் இப்படி சாட்சிகள் கிடைக்குமளவிற்கு தவறு செய்பவனா அவன்?
அப்படியும், எதுவுமே தெரியாதது போல அரசு மருத்துவமனை வரைக்கும் சென்று பார்த்துவிட்டு தானே வந்திருந்தான். அங்கே அந்த பெண் பிழைப்பதற்கான சாத்தியங்கள் இல்லை என்ற தகவல் கிடைத்ததாலும், கேஸில் ஈடுபாடு காட்டாத இன்ஸ்பெக்டராலும் பயம் விலகியவனாக இருக்க, இப்படி சேனாதிபதி மூலம் வழக்கு விஸ்வரூபம் எடுத்து நிற்கும் என்று அவன் கிஞ்சித்தும் எண்ணினான் இல்லையே.
“இந்த பைக் என்னோடது தான். ஆனா, நானே இதைக் காணோம்னு தேடிக்கிட்டு தான் இருக்கேன். மத்தபடி பைக்ல உக்கார்ந்திருக்கிறது நான் இல்ல. எம்முகத்தை யாரோட உடம்புலயோ ஒட்டி மாஃபிங் பண்ணிருக்காங்க.” சட்டென்று சுதாரித்துக்கொண்டு கதை அடித்துவிட்டான் தாஸ்.
இத்தனை வருட சர்வீஸில் இப்படி எத்தனையோக் கதைகளைக் கேட்டிருந்த சேனாதிபதியும், ஜெகனும் ஒருவரையொருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டார்கள்.
“ஆமா… இந்த வீடியோவை கேப்சர் பண்ணுனவனுக்கும் உனக்கும் வாய்க்கா தகறாறு பாரு… அதனால உம்முகத்தை ஒட்டியிருக்காங்க.” கேலி செய்த சேனாதிபதி, “பைக் காணலைன்னு எந்த ஸ்டேஷன்ல கம்ப்ளைண்ட் கொடுத்துருக்க” என்றான் தாஸை கூர்ந்து பார்த்தபடி.
“எங்க தலைவர் கூட ஊருக்கு போய்ட்டு நேத்து தான், நான் திரும்பி வந்தேன். அப்புறம் தான் என் வண்டி காணாமப் போனதே தெரியவந்திச்சி. நேற்று முழுக்க அக்கம்பக்கம் எல்லாம் நானே தேடிப்பாத்தேன், கிடைக்கல. இன்னைக்கு தான் கம்ப்ளைண்ட் குடுக்கணும்னு நினைச்சேன். அதுக்குள்ள நீங்க என்னை இங்க கொண்டு வந்துட்டீங்க.” குற்றம் சாட்டும் குரலில் சொன்னான் தாஸ்.
“உன் தலைவர் என்ன சுதந்திர போராட்ட தியாகியா? நீ சொன்னதும் நாங்க கண்டுபிடிக்க? எந்த நாயின்னு பெயரைச் சொன்னாத்தான் எங்களுக்கு தெரியும்.” வேண்டுமென்றே தாஸை கடுப்படித்தான் ஜெகன்நாதன்.
“சார்… என் தலைவரை மரியாதையா பேசுங்க.” அந்த நிலையிலும் தாஸ் பொங்கியெழ,
“கவலப்படாத… கூடிய சீக்கிரம் ஜெயில்ல உன் பக்கத்து ரூமையே உன் தலைவனுக்கு குடுத்து, மாலை மரியாதை பண்ணிடலாம், இப்போ அந்த பொண்ணை எதுக்கு நீ கொல்ல முயற்சி பண்ணுண? அதைச் சொல்லு.” தொடங்கிய இடத்திற்கே வந்து நின்றான் சேனாதிபதி.
இந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து இராஜபூபதியின் பினாமிகளின் பெயரில் இயங்கும் பப்புகளில் போதைப் பொருட்களின் நடமாட்டம் இருக்கிறதா என்று கண்காணித்ததில், இராஜபூபதி என்னும் திமிங்கலமே மாட்டக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதால், கொக்கு மீனுக்காக கண்களை மூடி ஒற்றைக்காலில் காத்திருப்பது போல, சரியான சாட்சிக்களுக்காக சேனாதிபதியும், ஜெகனும் காத்திருக்கிறார்கள். அதைக்கொண்டே இத்தனைப் பேச்சுகள் இருவரிடமும்.
தன் தலைவர் குறித்த இருவரின் நக்கலான பேச்சில் குழம்பிப் போன தாஸின் எண்ண ஓட்டம், இதை எப்படியாவது தலைவரிடம் சொல்லிவிட வேண்டும் என்ற ரீதியில் ஓடிக்கொண்டிருக்க, “பதில் சொல்லுடா…” என்று சேனாதிபதியின் கை இப்போது தாஸின் இடது கன்னத்தில் விழுந்திருந்தது.
“சார்… நீங்க ஆழம் தெரியாம காலை வச்சிட்டீங்க.. என் தலைவருக்கு மட்டும் இது தெரிஞ்சுது… உங்க ரெண்டு பேரையும் பீஸ் பீஸா ஆக்கிடுவாரு.” அடிவாங்கிய கன்னத்தை தடவியபடியே அடங்க மறுத்து பேசினான் தாஸ்.
“பட்டப் பகல்ல, நட்டநடு ரோட்டுல ஒரு பொண்ணை கொலை செய்ய முயற்சி செய்த உன்னை, தூக்குனதும் போட்டுத்தள்ளாம கொஞ்சிட்டு இருக்கோம்ல, நீ பேசத்தான் டா செய்வ. உன்ன…” கோபத்தோடு தாஸின் தாடையை சேனாதிபதி பற்றிய நேரம், அவன் கைபேசி அழைத்தது.
அழைப்பது யார் என்று பார்த்தவன் அதை அலட்சியப்படுத்தியபடியே தாஸிடம் திரும்ப, ஒருமுறை முழுவதும் அடித்து ஓய்ந்த அந்த வஸ்து மறுபடியும் கதறியது.
“ஹலோ… சேனாதிபதி… எங்க இருக்க?” என்று கேட்டார் ஐஜி.
“என்ன சார் இது வம்பா போச்சு? மிட்நைட்ல தூங்குறவனை எழுப்பி விட்டு, எங்க இருக்கன்னு கேக்குறீங்க?” என்றான் குரலில் வரவழைத்துக் கொண்ட சலிப்போடு.
“எங்கிட்ட நடிக்காத மேன். நீ வீட்டுக்கு வரலைங்குறதும் எனக்குத் தெரியும், இப்போ எங்க இருக்க ங்குறதும் எனக்கு தெரியும்” என்றார் ஐஜி.
“அதான் ஐஜி இருக்குற அபார்ட்மெண்ட்லயே இருக்க கூடாது ங்குறது.” வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டவன், “தெரிஞ்சிடிச்சில்ல, அப்புறம் எதுக்கு வீணா பேசிக்கிட்டு, போனை வச்சிடுறேன் சார்” என்றான்.
“வேண்டாம் சேனா… அக்யூஸ்டை ப்ராப்பரா அரெஸ்ட் பண்ணாம இப்பிடி கொண்டு போய் வச்சிருக்குறது தப்பு” என்றார் ஐஜி அவசரமாக.
“விதிமீறல் செய்யுறவங்களை தண்டிக்கிறதுக்கு மட்டும் விதியை ஃபாலோ பண்ணணுமா? நல்லா இருக்கு சார் உங்க நியாயம்.” கிண்டலடித்தான் சேனாதிபதி.
“யோவ்… போலீஸ் பேசுற மாதிரி பேசு ய்யா. அக்யூஸ்டை அரெஸ்ட் செய்து இருபத்திநாலு மணி நேரத்துல ஜட்ஜ் முன்னாடி கொண்டு வந்து ஆஜர் பண்ணலைன்னா பிரச்சினையாகும்னு நான் சொன்னா, நீ ஜோக் அடிக்கிறியா?” பணிச்சூழலைத் தாண்டி இருவருக்குள்ளும் இருந்த நட்பு இருவரையுமே இயல்பாக பேச வைத்தது.
“என்ன? ரூல்ஸ் எல்லாம் திடீர்னு ஐஜி சாருக்கு ஞாபகம் வருது. யாரும் சொல்லித் தந்தாங்களா என்ன?” மேலிடத்து பிரஷர் எதுவும் வந்ததா என்பதை சேனாதிபதி ஜாடையாக கேட்க, அதைக் கண்டுகொள்ளாமல்,
“மொதல்ல அந்த ஆளை ப்ராப்பரா அரெஸ்ட் செய்து கோர்ட்ல கொண்டுவந்து நிறுத்து சேனாதிபதி” என்றார் கண்டிப்பாக.
“எதுக்கு? அவன் ஜாமீன்ல தப்பிச்சு போகவா?” கோபமாக கேட்டான் சேனாதிபதி.
“ஸ்ராங் எவிடென்ஸ் இல்லாம கண்டிப்பா நீ ஆளை தூக்கி இருக்க மாட்ட ங்குறது எனக்கு புரியுது சேனா. அந்த எவிடென்ஸ்ஸை கோர்ட்ல சப்மிட் பண்ணுனா ஜாமீன் கிடைக்காதுன்னு உனக்கு தெரியாதா என்ன? கோர்ட்டு மூலம் கஸ்டடி எடுத்து விசாரி. உன்னை யாராலயும் தடுக்க முடியாது” என்றவர், சேனாதிபதியின் மௌனத்தில்,
“பிடி எப்போதும் நம்ம கைல தான் இருக்கு ங்குறது நமக்கு மட்டும் தெரிஞ்சா போதும் மேன்” என்று விட்டு அழைப்பை துண்டித்து விட்டார்.
அவருடைய வார்த்தைகள் கிருஷ்ண பரமாத்மாவின் கீதை வரிகள் போல, அவன் மனதிற்குள் தங்கிவிட, அங்கிருந்த காவலர்களிடம் அந்த தாஸின் பொறுப்பை ஒப்படைத்து விட்டு, வீட்டுக்கு வந்தான்.
சேனாதிபதி வீடு வந்து சேரும்போது அதிகாலை மணி ஐந்து. இன்னமும் படுக்கையிலிருந்து எழும்பாத சுபாஷிணி, கணவன் வந்து படுகையில் விழவுமே கண்டுகொண்டவள், “இப்பிடி நாள் முழுசும் தூங்காம இருந்தா உடம்பு என்னத்துக்கு ஆகும் த்தான்” என்று கவலையோடு கேட்க,
“கொஞ்சநேரம் தூங்கி முழிச்சிடுறேன் சுபா. எதுனாலும் அப்புறம் கேட்பியாம்” என்று மனைவி மீது கையைப் போட்டுக்கொண்டு கண்களை மூடினான்.
ஏழு மணிக்கு எழும்பிய சேனாதிபதி குளித்து முடித்து அறையை விட்டு வெளியே வர, சமையலறையில் பரபரப்பாக வேலையில் இருந்தாள் சுபாஷிணி.
கணவனை கண்டதும் அதிகாலையில் விட்ட இடத்திலிருந்து பேச்சை தொடங்க ஆரம்பிக்க, “சரிடி பொண்டாட்டி… அத்தானுக்கு பசிக்குது, ஏதாவது சாப்பிடத் தா.” மனைவியின் இடைவளைத்தபடி சேனாதிபதி கேட்க, உருகி விட்டது சுபாஷிணிக்கு.
“இதோ… ஒரு நிமிஷம் உக்காருங்க த்தான்… மொதல்ல ஒரு கப் பால் சூடா குடிங்க. அப்புறம் சாப்பிடத் தர்றேன்.” பேசவந்ததை விட்டுவிட்டு கணவனுக்கு பால் ஆற்றும் வேலையில் பரபரப்பாக சுபாஷிணி இறங்கிய நேரம் வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது.
தன்னியல்பாக கதவை நோக்கி நகர்ந்த மனைவியை தடுத்து விட்டு, தானே சென்று கதவை திறந்தான் சேனாதிபதி.
திறந்த கதவிற்கு முன் நின்று கொண்டிருந்தது இராஜபூபதி. அவருக்கு சற்றுதள்ளி பாபுவோடு இன்னும் சிலர்.
உன்னை எதிர்பார்த்தேன் என்பது போன்ற பார்வையை அவருக்கு தந்த சேனாதிபதி வாசலை மறைத்து நந்தி போல நின்று கொள்ள, வீட்டுக்குள் பார்வையை வீசியபடியே, “உள்ள போய் பேசலாமா தம்பி?” என்றார் இராஜபூபதி.
“என் வீட்டுக்குள்ள சொந்தக்காரங்களுக்கும் ஃப்ரெண்ட்ஸுக்கும் மட்டும் தான் அனுமதி. அதோட எனக்கு உங்ககிட்ட பேச எதுவுமே இல்லை. உங்களுக்கு எங்கிட்ட பேசியே ஆகணும்னா ஆபீஸுக்கு வாங்க.” சட்டென்று சொன்னான் சேனாதிபதி.
“எனக்கு கண்ணு தெரியலைன்னு, உங்ககிட்ட நான் எப்போ சொன்னேன்?” நக்கலாக கேட்ட சேனாதிபதி, “மொதல்ல இங்கயிருந்து கிளம்புங்க” என்றான் கட்டளையாக.
“வேண்டாம் தம்பி என்னை பகைச்சிக்காத, எப்பிடி யாருக்கும் தெரியாம எம்பயலை தூக்கினியோ, அதே மாதிரி விட்டுரு, இல்லைன்னா பின்விளைவுகள் பயங்கரமா இருக்கும்.” வந்த வேலையை முடிக்காமல் போக மனமின்றி இராஜபூபதி விஷத்தை கக்க,
“உங்க பையனா?! இனிஷியல் வேறயா இருந்தது?” கேலியாக இதழ் வளைத்தான் சேனாதிபதி.
சேனாதிபதியின் கிண்டலில் அங்கே நின்றிருந்த அடிபொடிகளிடமிருந்து, “ஏய்… யாருகிட்ட” என்ற சத்தம் வர, “என்ன… ஓவர் சவுண்டா இருக்குது? ஒரே ஒரு ஃபோன், மொத்த கூட்டத்தையும் காலி பண்ணிடுவேன், என்ன.. பண்ணட்டுமா?” என்றபடியே அணிந்திருந்த ட்ராக் பாண்ட் பாக்கெட்டிலிருந்து ஃபோனை சேனாதிபதி கையிலெடுக்க,
“காக்கிச்சட்டை போட்ட உடனே நீ பெரிய இவனா? அந்த பொண்ணு உயிரோடத்தானே இருக்கு. என்னமோ செத்துப்போனது போல ஸீனப் போடுற?” என்று குரலை உயர்த்தினார் இராஜபூபதி.
அந்த வார்த்தைகளில் சுர்ரென்று கோபம் உச்சிக்கு ஏற,
“ஓ… அப்போ பொண்ணுங்க செத்துப்போன பிறகு தான் அவங்களுக்கு நியாயம் கிடைக்கணும், இல்ல?” என்று சீறிய சேனாதிபதி,
“சின்ன கேஸ்ல உங்களை சிக்க வைக்க, இஷ்டம் இல்லாமல் அமைதியா நின்னா ஓவரா ஆட்டம் போடுவீங்களோ? இன்னும் பத்து செகண்ட்ல எல்லாரும் இடத்தை காலி பண்ணனும். இல்லைன்னா, ஒரு போலீஸ் அதிகாரி வீட்டுல வந்து கலாட்டா பண்ணுன குற்றத்துக்காக எல்லாரும் அந்த தாஸ் கூடவே உள்ள போக வேண்டியிருக்கும்” என்று கர்ஜித்தான்.
சேனாதிபதி வாசலுக்கு சென்ற நேரத்திலிருந்தே அங்கேயே கவனத்தை பதித்திருந்த சுபாஷிணி, அங்கே சத்தம் உயரவும், “என்ன த்தான் நடக்குது இங்க? இவங்க எல்லாம் யாரு?” என்று பதட்டமாக கேட்டபடியே கணவனிடம் வர,
“உள்ளப் போ சுபா” என்று அவளிடமும் உறுமினான் சேனாதிபதி.
அதற்குள் வெளியே நின்றிருந்த இராஜபூபதியின் மொத்த பார்வையும் சுபாஷிணியை அலசி ஆராய்ந்திருக்க, “ஓ… ஏசிபி சாருக்கு கல்யாணம் ஆகிடிச்சோ! சொல்லவேயில்ல…” என்று சத்தமாக சிரித்தவன்,
கணவனின் கோபத்தில் மறுபேச்சில்லாமல் திரும்பி நடந்த சுபாஷிணியை நோக்கி, “ஏசிபி சாரை பாத்து, பக்குவமா நடந்துக்க சொல்லும்மா, அப்புறம் சேதாரம் ஆகிடிச்சின்னா நான் பொறுப்பு கிடையாது” என்று சத்தமாக சொல்லி, சேனாதிபதியை சவாலாக பார்த்தபடி அங்கிருந்து நகர்ந்தான்.