கன்னியாகுமரி மாவட்டத்தில் விமானநிலையம் இல்லையாதலால், அருகில் இருந்த திருவனந்தபுரத்தையே விமானசேவைக்காக, குமரி மக்களில் பெரும்பாலானோர் நாடினார்கள்.
சேனாதிபதியும் மனைவியோடு, திருவனந்தபுரம் விமானநிலையம் வந்திறங்கி, அங்கிருந்து வாடகைக்கார் மூலம் ஊருக்கு வந்து சேரும்போது, இரவு மணி பதினொன்று ஆகியிருந்தது.
ஊருக்குள் கார் நுழையும் போதே கோவிலில் அடித்துக் கொண்டிருந்த செண்டைமேளத்தின் சத்தம், ஒலி பெருக்கியின் உபயத்தால் துல்லியமாக கேட்டதில், பயண களைப்பையும் தாண்டி, இருவரிடமும் ஒரு உற்சாகம் வந்து ஒட்டிக்கொண்டது.
கார் நேரடியாக சேனாதிபதியின் வீட்டுக்கு முன்னேதான் வந்து நின்றது. வீட்டுக்கு முன் காலியாக இருந்த இடத்தில் திருமணத்திற்கு போலவே ஓலைக்கீற்று கொண்டு அழகாக பந்தல் போடப்பட்டிருந்தது. அது, தங்கள் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக என்று பார்த்ததுமே புரிந்தது தம்பதியருக்கு.
பந்தலுக்குள் நாற்காலிகளில் அமர்ந்திருந்த இருவரின் பெற்றோர்களும், உடன்பிறந்தவர்களும், சேனாதிபதியின் பெரியப்பா குடும்பத்தினரும் ஆவலாக சேனாதிபதியையும், சுபாஷிணியையும் சுற்றி வளைத்துக் கொண்டார்கள். பாட்டி பூரணி கூட அவ்வளவு நேரத்திற்கும் தூங்காமல் முழித்திருந்தார்.
பெண்கள் சுபாஷிணியை அணைத்து தங்கள் அன்பை வெளிப்படுத்திக் கொள்ள, “ஹாய் அக்கா..” என்று தன் இருப்பை வெளிப்படுத்தினான் ராகுல்.
“நீ எப்போ டா வந்த?” என்று ஆவலோடு கேட்டாள் சுபாஷிணி.
“டேய் நாளைக்கு கறிசோறு சாப்பிடுறதுக்கு, நீ இன்னைக்கு வந்ததே அதிகம் தான் டா.” வழக்கம் போல அவனை கேலி செய்தாள் மங்கை.
சேனாதிபதியின் குடும்பகோவில் கொடை விழாவிற்கு, சுபாஷிணியின் பிறந்த வீட்டார்கள் விருந்தினரே.
“போ அண்ணி… கறிசோறு சாப்பிடத் தான் இந்த ராகுல் வருவானா? சாமி கும்பிட வரமாட்டானா?” முகத்தை சுழித்தான் ராகுல்.
“நீ சாமி கும்பிடுற அழகு எனக்கு தெரியும் டா மகனே… வீணா ஸீனப்போடாத.” பதிலுக்கு மங்கை அவனை கலாய்க்க, சூழ்நிலை கலகலப்பாக இருந்தது.
வீட்டு வாசலுக்கு முன் மகனையும் மருமகளையும் நிற்கவைத்து ஆலம் சுற்றியே வீட்டுக்குள் அழைத்துக் கொண்டார் தமிழரசி.
“பிள்ளைங்களுக்கு சாப்பிட குடுத்து, சாமபூசைக்கு கோவிலுக்கு கூட்டிட்டு வாங்க. நாங்க கோவிலுக்கு போறோம்” என்று விட்டு சேனாதிபதியின் பெரியப்பா தன் குடும்பத்தோடு கிளம்பி விட்டார்.
திருமணத்திற்கு பிறகு முதன்முறையாக இப்போது தான் தம்பதியராக இருவரும் வீட்டுக்கு வருவதால், மருமகளைக் கொண்டு வீட்டில் குத்துவிளக்கும் ஏற்ற வைத்தார் தமிழரசி.
அத்தை சொன்னது போல செய்த சுபாஷிணிக்கு, ஏதோ அப்போதுதான் திருமணம் முடிந்தது போல ஒரு உணர்வு. ‘எனக்கு மட்டும் தான் அப்படியிருக்கிறதா? அத்தானுக்கு அப்படி ஏதும் இல்லையா?’ சேனாதிபதியின் நிலையறிய தன் அருகில் நின்று கொண்டிருந்தவனைப் பார்த்தாள்.
அவளை ஏமாற்றாமல் முகமெங்கும் விரிந்த சிரிப்போடு நின்றிருந்தான் சேனாதிபதி. அந்த சிரிப்பில் யானை பலம் வரப்பெற்றவளாக, நடக்கும் நிகழ்வுகளை மகிழ்வோடு உள்வாங்க ஆரம்பித்தாள் சுபாஷிணி.
‘மருமகளைக் கொண்டு இன்னும் ஏதாவது சம்பிரதாயங்களை செய்ய வைக்க வேண்டுமா?’ என்று பரபரப்பாக தமிழரசி யோசிக்க,
“பெரியவர் சொல்லிட்டு போனதை கேட்ட தான அரசி. மொதல்ல, பிள்ளைங்களுக்கு சாப்பிட குடுத்து, கோவிலுக்கு கூட்டிட்டு போய்ட்டு வரலாம்” என்ற பூரணி அம்மா தன் பேரப்பிள்ளைகளிடம், “நீங்க போய் கை, கால், முகம் கழுவிட்டு வாங்க மக்கா, சாப்பிடலாம்” என்றார்.
“வா சுபா.” அழைத்தபடியே தங்கள் பயணப் பைகளை கையில் எடுக்க முயன்றான் சேனாதிபதி.
சேனாதிபதியை முந்திக்கொண்டு அவற்றை தன் கைகளில் அள்ளிக் கொண்ட ராகுல், “நான் கொண்டு வரேன் அத்தான்” என்று மாடியில் இருக்கும் சேனாதிபதியின் அறையில் கொண்டு வைத்துவிட்டு வர, மனைவியோடு தனது அறைக்குள் நுழைந்தான் சேனாதிபதி.
இந்த வீடு கட்டியபிறகு சுபாஷிணி அதிகமாக இங்கே ஊரில் இருந்ததில்லையாதலால், அத்தை வீட்டுக்கும் அதிகம் வந்தது இல்லை. அதிலும் சேனாதிபதி அறைக்கு வந்ததே இல்லை.
சிறிய தயக்கத்தோடும், அதை மிஞ்சும் ஆர்வத்தோடும் அறைக்குள் வந்தவளின் கண்கள் அறையை சுற்றி வலம் வந்தது. நல்ல காற்றோட்டமான ஜன்னல்களோடு, விஸ்தாரமாக இருந்தது அறை. சேனாதிபதியின் அப்பா இராணுவத்திலிருந்து வந்தபிறகு கட்டிய வீடாதலால் அறையோடு இணைந்த பாத்ரூம் வசதியும் இருந்தது.
ஆனால், அங்கே கிடந்த கட்டில் தான், சுபாஷிணியை மிரட்டியது. ஹஹ… ஆமாம்… சென்னையில், முதல்நாள் கண்ட அளவேயான கட்டில் அது.
சென்னையில், அந்த கட்டிலில் முதல்நாள் போட்டி போட்டுக் கொண்டு கணவன் அருகே படுத்ததும், அதன் பிறகு நடந்தவைகளும் சுபாஷிணிக்கு ஞாபகம் வர, இப்போது பத்துநாட்களாக இயல்பாக அவ்வப்போது தன்னை அணைப்பதுவும், முத்தம் கொடுப்பதுவுமாக தன் அன்பை பரிமாறிக் கொள்ளும் கணவனோடு இந்த படுக்கையில் துயில் கொள்ள இருப்பதை நினைத்து சுபாஷிணியின் கற்பனை கன்னாபின்னாவென்று விரிந்ததில், உச்சி முதல் உள்ளங்கால் வரை சிலிர்த்து அடங்கியது பெண்ணுக்கு.
அறைக்குள் நுழைந்ததிலிருந்து, மனைவியின் முகத்தையே அவதானித்துக் கொண்டிருந்த சேனாதிபதி, அவள் மதிமுகம் காட்டிய வர்ணஜாலத்தில் மயங்கி, “டீப் திங்கிங் போல… என்னன்னு எனக்கும் சொல்லுறது…” என்றான் இயல்பாக அவளை தன் கைவளைவில் கொண்டு வந்து.
அதைவிட இயல்பாக கணவனின் கைகளில் இருந்து நழுவியபடி, “ம்ஹூம்… ஒன்னுமில்ல த்தான். ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு வந்துடுறேன்” என்று அவன் முகம் பாராமல் முணுமுணுத்து விட்டு, அவசர அவசரமாக பாத்ரூமிற்குள் நுழைந்து கொண்டாள் சுபாஷிணி.
பின்னே, சுபாஷிணியால் என்ன சொல்லமுடியும்? அதுவும் சொல்லக்கூடியது மாதிரியான கற்பனையா அவளது?
ஒன்றுமில்லை என்ற வார்த்தைக்கு பின்னே கண்டிப்பாக ஏதோ ஒன்று இருக்கும் என்று அறியாதவனா சேனாதிபதியும்.
மனைவியின் உறைந்து போனப் பார்வை கட்டிலிலேயே நிலைத்துப் போனதில், அவள் எண்ணத்தின் போக்கு பிடிபட்டு விட, முகமெங்கும் மந்தகாச சிரிப்பு சேனாதிபதிக்கு. உற்சாகமாக சீட்டியடித்தபடி அவனும் முகம், கை, கால் கழுவி மனைவியோடு கீழே இறங்கி வந்தான்.
சுடச்சுட இட்லி, சாம்பார், சட்னி இருவருக்கும் பரிமாறப்பட்டது. உணவு முடியவும், ஒரு ஜவுளிக்கடையின் பையை சுபாஷிணியிடம் கொடுத்த தமிழரசி, “இரண்டு பேருக்கும் இதுல புது ட்ரெஸ் இருக்குடா. இதையே உடுத்துங்க, கோவிலுக்கு போய்ட்டு வந்துடலாம்” என்றார்.
புன்னகை முகத்தோடு அதை பெற்றுக் கொண்ட சுபாஷிணி, “தேங்ஸ் த்த” என்க, “எனக்கு தேங்ஸ் சொல்லுவியா நீ?” என்று அவள் காதை விளையாட்டாக பிடித்தவர், “ட்ரெஸ் செலக்ட் பண்ணுனது மங்கை தான்” என்றார்.
“ஓ… அப்பிடியா?” என்ற சுபாஷிணி மங்கையிடம் ஏதாவது சொல்லலாம் என்று பார்த்தால், அவள் எப்போதும் போல ராகுலிடம் பேசுவதில் பிஸியாகவே இருந்தாள்.
‘பிறகு பார்த்துக் கொள்ளலாம்” என்ற எண்ணத்தோடு அறைக்குள் மறுபடியும் கணவனோடு வந்த சுபாஷிணி, பைக்குள் இருந்த தங்கள் உடைகளை வெளியே எடுக்க, அழகான லேவென்டர் கலரில் ஒரு சில்க் காட்டன் புடவையும், மேட்சிங் ப்ளௌவ்ஸ்ஸும், அதே கலரில் முழுநீளக்கை சட்டையும், பார்டரிடப்பட்ட வேஷ்டியும், இருந்தது.
“வாவ்… மேட்சிங்… மேட்சிங் ட்ரெஸ். சூப்பரா இருக்குல்ல த்தான்” என்று குதூகலித்தாள் சுபாஷிணி.
“ம்ம்… சீக்கிரமா சாரியை உடுத்தி காட்டுங்க, எவ்வளவு சூப்பரா இருக்குன்னு பாத்துட்டு சொல்லுறேன்.” மனைவியைப் போல கேலியாகப் பேசினாலும், முதன்முறையாக சுபாஷிணியை புடவையில் காணப்போகும் ஆவல் சேனாதிபதியின் குரலில் இருந்தது.
ஆமாம்… சேனாதிபதி பார்க்க இதுவரை புடவை அணிந்ததே இல்லை சுபாஷிணி. இவ்வளவு ஏன்? அவர்கள் திருமணத்தன்று கூட சுபாஷிணி சுடிதார் தானே அணிந்திருந்தாள்!
“ம்ம்… உடுத்திடலாமே” என்று ஆர்வமாக சுடிதார் ஷாலை கழற்றியவளுக்கு, அறையில் கணவனின் இருப்பு சட்டென்று மூளையில் உறைக்க, அதற்கு மேல் உடைமாற்றும் முயற்சியில் ஈடுபடாமல் அவள் கைகள் சண்டித்தனம் செய்தன.
அவளைப் போல தயக்கம் எதுவும் இல்லாமல் வேகமாக உடையணிந்து கொண்டிருந்த சேனாதிபதி, மனைவியிடமிருந்து சத்தமின்றி போகவே, “என்னாச்சு சுபா? ட்ரெஸ் மாத்தலையா?” என்றான் புருவத்தை தூக்கியபடி.
“மாத்தணும் தான்… ஆனா… நீங்க… நீங்க… இருக்கும் போது எப்பிடி த்தான்?” வெட்கத்தில் குழைந்து வந்தன வார்த்தைகள்.
மனைவியின் வெட்கத்தில், உள்ளுக்குள் உற்சாகம் ஊற்றாக கொப்பளிக்க, “ஏன்? உன்னை வச்சிகிட்டே நான் ட்ரெஸ் மாத்தல? அப்படித்தான்” என்றான் சேனாதிபதி கேலியாக.
“இல்லையா?” வேஷ்டியை இடுப்பில் வாகாக கட்டியபடியே கேட்டவனின் பார்வை, மனைவியின் மீது உரிமையாக விழுந்து, ஆராய்ச்சியாக பார்க்கத் தொடங்க, சட்டென்று திரும்பி நின்று கொண்டு, “ப்ளீஸ்... ட்ரெஸ் மாத்திட்டீங்கன்னா கொஞ்சம் வெளியே போங்கத்தான், நானும் மாத்திட்டு வந்துடுறேன்” என்றாள் கெஞ்சலாக.
“நோ சுபா… இது சென்னை இல்ல… இங்க எல்லாரும் இருக்காங்க. நான் இப்போ வெளியப் போனா நல்லாயிருக்காது.” கைகளால் கேசத்தை சரிசெய்தபடியே சொன்னவனின் இதழ்களில் கள்ளச்சிரிப்பு மின்னியது.
வேண்டுமென்றே கணவன் அறையை விட்டு வெளியே செல்ல அடம்பிடிப்பது சுபாஷிணிக்கு நன்றாகவே புரிய,
“உங்களால கோவிலுக்கு போக லேட் ஆகப்போகுது த்தான்” என்றாள் குற்றம்சாட்டும் குரலில். அப்போதாவது அறையை விட்டு கணவன் வெளியே சென்றுவிட மாட்டானா என்ற நப்பாசை தான் அவளுக்கு.
ஆனால், அவனோ கைகள் இரண்டையும் மார்புக்கு குறுக்காக கட்டியபடி, “ஒன்னும் அவசரமில்லை… மெதுவாவே புறப்படு சுபா, காலைல சப்பரத்துல வர்ற சாமியையே நாம கும்பிட்டுக்கலாம்” என்றான் அமர்த்தலாக.
எந்த பந்தை போட்டாலும் அநாயசமாக சிக்ஸருக்கு அடிக்கும் கணவனின் செயலில் செய்வதறியாது சுபாஷிணி திகைத்து நின்ற நேரம், “சுபா ம்மா… நேரம் ஆகுது, சீக்கிரம் புறப்பட்டு வாங்க.” கீழிருந்து தமிழரசி அழைக்கும் குரல், ஒலிபெருக்கி வழியே கேட்ட செண்டைமேள சத்தத்தையும் தாண்டி இருவருக்கும் மெதுவாக கேட்டது.
“அடிங்… நான் செக்யூரிட்டியா உனக்கு?” மிரட்டினாலும், மனைவியின் கேலியை ரசிக்கவே செய்தான் சேனாதிபதி.
சற்று நேரத்திற்கெல்லாம் பாத்ரூம் கதவு திறக்கும் சத்தத்தில் ஆர்வமாக அதன் வாசலைப் பார்த்தான் சேனாதிபதி. பாத்ரூமிலிருந்து தலையை மட்டும் நீட்டி வெளியே பார்த்த சுபாஷிணி, தயங்கியபடியே வெளியே வர, அவள் நின்ற கோலத்தில் அட்டகாசமாக சிரித்தான் சேனாதிபதி.
புடவை உடுத்தப் போனவள், ஜாக்கெட்டையும் உள்பாவாடையையும் மட்டும் அணிந்து கொண்டு, புடவையை மார்போடு அள்ளிப் பிடித்துக்கொண்டு வந்து நின்றால், சிரிப்பு வராமல் என்ன செய்யும்?
“ஹஹ… கடைசியில புடவை கட்டவே தெரியாதா உனக்கு? நான் வேணும்னா ஹெல்ப் பண்ணவா?” வாய்கொள்ளா சிரிப்போடு மனைவியை நோக்கி சேனாதிபதி நகர்ந்தான்.
“வேணாம் த்தான்… அங்க தரை ஈரமா இருக்கு, புடவை நனையாம பேலன்ஸ் பண்ணி என்னால கட்டமுடியல. பிளீஸ்… நீங்க திரும்பி நின்னு கண்ணை மூடிக்கோங்க, நான் இங்கயே கட்டிக்கிறேன்.”
எங்கே புடவை கட்டிவிடுகிறேன் என்று கணவன் வந்துவிடுவானோ என்ற பதட்டத்தில், படபடவென்று சுபாஷிணி பேசிய நேரம், வெளியே “டமால்…” என்று ஒரு வெடி வெடித்தது. எதிர்பாராமல் கேட்ட அந்த பெரும் சத்தம் அதிர்சியை உண்டாக்க, கையிலிருந்த புடவையை நழுவ விட்டுவிட்டு கண்ணை மூடச்சொன்ன கணவனின் இடையையே இறுக கட்டிக்கொண்டாள் சுபாஷிணி.
கிராமங்களில், கோவிலில் பூஜை தொடங்கப் போவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னால் வேட்டு வெடிப்பது வழக்கம். அந்த சத்தத்தில் வீட்டில் இருப்பவர்கள் கூட கோவிலுக்கு வந்து பூஜையில் கலந்து கொள்வார்கள்.
மனைவியின் எதிர்பாராத அணைப்பில் ஒருகணம் தடுமாறிப்போன சேனாதிபதி, தொடர்ந்து அடுத்தடுத்து கேட்ட வெடிச்சத்தத்தில் நடுங்கிய மனைவியின் உடலை ஆதரவாக அணைத்து, முதுகை மென்மையாக தடவி கொடுத்தபடியே, “ஒன்னுமில்ல லட்டுகுட்டி… கோவில்ல பூஜை தொடங்குறதுக்கு முன்னாடி வேட்டு போடுவாங்கல்ல… அந்த சத்தம் தான் பயப்படாத” என்று அமைதிப்படுத்தினான்.
கணவனின் ‘லட்டுகுட்டி’ என்ற அழைப்பில் கண்ணைக் கரித்துக் கொண்டு வந்தது சுபாஷிணிக்கு. சிறுவயதில் திருவிழாவிற்கென்று ஊருக்கு வரும் சமயங்களில், பலநேரங்களில் சுபாஷிணியை இப்படி அழைப்பது தான் சேனாதிபதியின் வழக்கம்.
அந்த அழைப்பு இப்போதும் தன்னையறியாமல் சேனாதிபதியிடமிருந்து வந்ததில் நெக்குருகிப் போனவள், தனக்கான காதல் இன்னமும் கணவனிடம் மிச்சம் இருப்பதை உணர்ந்து, இன்னும் வாகாக கணவனோடு ஒன்றிக் கொண்டாள்.
மனைவியின் இந்த திடீர் நெருக்கத்தில் சேனாதிபதிக்கு தான் மூச்சு முட்டியது. விட்டால் மனைவியோடு அப்போதே இன்பத்தின் கதவை தட்டிவிடும் வேகம் அவனிடம்.
ஆனால் தங்களுக்காக கீழே குடும்பத்தார்கள் காத்திருப்பது ஞாபகம் வர, “விட்டா, நாம ரெண்டு பேரும் விரதத்தை இப்பவே முடிச்சிக்குவோம் போல சுபா. இது சரி வராது. நான் கீழப்போறேன், நீ ட்ரெஸ் மாத்திட்டு வா.” புன்னகையோடு சொல்லியவன், அவசரமாக மனைவியின் இதழ் நிறைத்துவிட்டு கீழே இறங்கி சென்றுவிட்டான்.
கணவனின் வார்த்தைகளும், இதழொற்றலும் சுபாஷிணி சஞ்சரித்திருந்த மாய உலகிலிருந்து அவளை மீட்டிருக்க, ‘என்னடி… செய்து வச்சிருக்க சுபா?’ என்று வெட்கமாகிப் போய்விட்டது.
என்றாலும், அதையே நினைத்து தேங்கி நின்றுபோக முடியாமல், கோவிலுக்கு போக வேண்டியது ஞாபகத்துக்கு வர, படபடவென புடவையை கட்டி முடித்து, கூந்தலை எப்போதும் போல போனிடெய்லில் அடக்கி, முகத்தை திருத்தி கீழிறங்கிய சுபாஷிணியின் கண்கள் கணவனிடமே.
முதன்முதலாக அவளை புடவையில் கண்டவன் தன் பரவசத்தை கண்கள் மூலமாகவே மனைவிக்கு கடத்த, பூரித்துப் போனவள், “ட்ரெஸ் செலக்ஷன் ரொம்ப நல்லாயிருக்கு மங்கை” என்றாள் மங்கையிடம்.
அதற்கு லேசான புன்முறுவல் மட்டுமே மங்கையிடம்.
சேனாதிபதி, சுபாஷிணியிடம் காதல் உரைத்ததும், அதை அவள் மறுத்ததும் தாங்கள் இருவர் மட்டுமே அறிந்த ரகசியம் என்று அவர்கள் இருவரும் நினைத்திருக்க, அதை அறிந்த மூன்றாவது நபராக மங்கையர்கரசி இருந்தாள்.
ஆமாம்… அன்று, மாமரத்திற்கு அடியில் இருவரும் பேசிக்கொண்டு நின்றிருந்தது, சமையலறையில் நின்று கொண்டிருந்த மங்கையின் கண்களிலும் விழுந்திருந்தது. கண்டது ஊமைப்படம் தான் என்றாலும், அங்கு நடந்தவற்றை ஊகிக்க முடிந்திருந்தது மங்கையால்.
ஏற்கனவே பெரிதாக சுபாஷிணியிடம் நட்பு பாராட்டாத மங்கை, இந்த நிகழ்விற்கு பிறகு தன் அண்ணனை ஒதுக்கியவளை, தானும் மொத்தமாக ஒதுக்கி வைத்தாள். இப்போதோ, புன்னகை தவழும் தன் அண்ணன் முகத்தைக் கொண்டே, சுபாஷிணியிடம் சிறு புன்னகையை காட்டினாள்.
சுபாஷிணியை புடவையில் கண்டதும் பூரணி அம்மா, அவள் கன்னம் வழித்து திருஷ்டி எடுக்க, தமிழரசி, அவள் கூந்தலுக்கு தேவையான அளவு பூ வைத்து மருமகளை இன்னும் அழகாக்கினார்.