காலையில் குளித்து முடித்து ஹாலில் ஏற்றப்பட்டிருந்த திருவிளக்கின் முன் நின்று வணங்கிவிட்டு வந்த சேனாதிபதியிடம், கிச்சனில் இருந்தபடியேக் கேட்டாள் சுபாஷிணி.
சுபாஷிணியின் வருகைக்குப் பிறகு தலைகீழாக மாறியிருந்தது சேனாதிபதியின் வீடு. சுருக்கமாகச் சொன்னால், சேனாதிபதியின் ‘இல்லாளின்’ வருகைக்குப் பிறகு இல்லமாகியிருந்தது அவன் வீடு.
“டேஸ்ட் பண்ணி பாருங்கன்ணு சொல்லிச் சொல்லியே, நீ சமைக்கிறது எல்லாத்தையும் என்னை சாப்பிட வச்சிடுற சுபா. இன்னைக்கு நான் இந்த விளையாட்டுக்கு வரலை.. என்னை விட்டுரு.” வீடு முழுவதும் நிறைந்திருந்த பச்சரிசிமாவு புட்டின் வாசத்தை ஆழ்ந்து சுவாசித்தபடி சொல்லிய சேனாதிபதி, கிச்சனில் புதிதாக இடம்பிடித்திருந்த டைனிங் டேபிளின் செயரில் வந்து அமர்ந்தான்.
“இப்பிடி மோப்பம் பிடிக்கிறதுக்கு பதிலா கொஞ்சமா சாப்பிடலாம்ல அத்தான்” என்ற சுபாஷிணி, இரண்டு துண்டு புட்டையும், அவித்த சிறுபயறையும் ஆவிபறக்க ஒரு தட்டில் பரிமாறி சேனாதிபதிக்கு முன்பாக டைனிங் டேபிளில் வைத்து, “சாப்பிடுங்க த்தான்” என்றாள்.
“என்னை தொப்பையும் தொந்தியுமா பாக்கணும்னு உனக்கு ரொம்பநாள் ஆசை போல சுபா.” கிண்டலாக சொன்னாலும், புட்டை சிறுபயறில் கலந்து சேனாதிபதி உண்ண ஆரம்பிக்க,
“ஹலோ… ஹலோ… உன் சாப்பாடு டேஸ்டா இல்லையான்னு நீ சொல்லக்கூடாது ம்மா, அதை நான்தான் சொல்லணும்.” இதழ்கள் புன்னகையில் விரிய சொன்னான் சேனாதிபதி.
“நீங்க சொல்லமாட்டீங்கன்னு தெரிஞ்சு தான், நானே சொல்லிக்கிறேன் த்தான்.” சொல்லிவிட்டு கலகலவென்று சுபாஷிணி சிரிக்க, தன்னை மறந்து அவளைப் பார்த்தான் சேனாதிபதி.
கடந்திருந்த ஒருமாத காலம், தம்பதியருக்கிடையே கூடுதல் இலகுதன்மையைக் கொண்டு வந்திருந்திருந்ததோடு, சுபாஷிணியை சமையலில் தேர்ச்சி பெறவும் வைத்திருந்தது.
அதுவும் இப்படி கணவனைத் தன் கைச்சமையலை சாப்பிட வைத்து விடவேண்டும் என்ற ஆசை சுபாஷிணியின் அடிமனதில் முளைவிடவே, அவளின் சமையல் செய்யும் ஆர்வத்தின் அளவு கூடித்தான் போனது.
சமையலில் எந்த சந்தேகம் என்றாலும், தங்கள் இருவரின் தாய்மார்களையும் தவிர்த்து, தன் அப்பாமைக்கு தான் தொலைபேசி அழைப்பு பறக்கும் சுபாஷிணியிடமிருந்து. அவரும் தன் பேத்தியின் ஆர்வத்தை கண்டு, தனக்கு தெரிந்த வித்தையெல்லாம் அலைபேசி வழியாகவே பேத்திக்கு கடத்தினார். அதோடு இயல்பாக சுபாஷிணிக்கு அமைந்திருந்த கைபக்குவமும் சேர்ந்துகொள்ள, ஒற்றை மாதத்திலேயே சமையற்கலையில் தேர்ந்தவளாகிப் போயிருந்தாள் சுபாஷிணி.
விட்டால் மதிய சாப்பாட்டைக் கூட கணவனுக்கு கட்டி கொடுத்துவிடும் அளவுக்கு அம்மணி இப்போது சமையலில் புலி. ஒரே இடத்தில் உட்கார்ந்து பார்க்கும் வேலை இல்லை என்னுடையது என்று சேனாதிபதி மறுத்ததாலேயே, அவனோடு சுபாஷிணியின் உணவு பயணிக்கவில்லை.
ஆனால், இன்னும் பத்து நாட்களில் தோழி திவ்யாவின் திருமணம் இருக்க, தினமும் அவளுக்கு மதிய சாப்பாடு கட்டிக் கொண்டு போய்க்கொண்டிருக்கிறாள் சுபாஷிணி.
“இன்னும் கொஞ்சம் புட்டு வைக்கட்டுமா த்தான்?” கணவனின் தட்டில் உணவு காலியாகவும் சுபாஷிணி கேட்க,
“ஒரு க்ளாஸ் பால் மட்டும் குடு சுபா, போதும்” என்ற சேனாதிபதி, மனைவி கையால் பாலையும் வாங்கி குடித்து தன் காலை உணவை முடித்துக் கொண்டு, உடைமாற்றி வர அறைக்குள் சென்றான்.
இப்போதெல்லாம் சேனாதிபதிக்காக பயிரை முளைகட்டுவது, சாலட் செய்து கொடுப்பது போன்ற சின்னச் சின்ன வேலைகளை சுபாக்ஷிணி செய்ய ஆரம்பித்திருக்கிறாள். ஆரம்பத்தில் வேண்டாம் என்று சேனாதிபதி மறுத்தாலுமே, சுபாஷிணி கண்டுகொள்ளாமல் தொடர, அதற்குமேல் ஒன்றும் சொல்லாமல் விட்டுவிட்டான் சேனாதிபதி.
இந்த ஒரு மாதத்தில் மாதவபுரத்திலிருந்து, சுபாஷிணியின் தகப்பனைத் தவிர குடும்பத்தில் உள்ள அனைவரும் சென்னைக்கு வந்து தங்கள் மக்கள் இருவரும் குடும்பம் நடத்தும் அழகை பார்த்துவிட்டு தான் சென்றிருந்தனர்.
காலையில் வீட்டுக்கு வந்து இறங்கியதும் சுபாஷிணியின் கழுத்தில் கிடந்த கருகுமணியைக் கண்ட விசாலி, சுற்றியிருந்த யாரையும் பொருட்படுத்தாமல் “என்னடி இது கோலம்?” என்று தான் மகளிடம் கேட்டிருந்தார்.
சுபாஷிணி விஷயத்தை சொல்ல, “ஏன்? நானெல்லாம் தங்கத்துல போட்டுட்டு இங்க சென்னைல பிழைக்கலையாக்கும்” என்ற நொடிப்பு தான் அவரிடம்.
அன்னையின் பேச்சில், அங்கிருந்த கணவனின் முகம் சட்டென்று மாறுவதைக் கண்ட சுபாஷிணி, “ம்மா… நீங்க என்ன, என்னைப் போல ஸ்கூட்டில வேலைக்கா போனீங்க? சேஃப்டியா வீட்டுக்குள்ளயே தானே இருந்தீங்க” என்று சொன்னவள், “எனக்குமே இதை போடத்தான் ரொம்ப பிடிச்சிருக்கு ம்மா” என்றும் சொல்ல, சமாதானம் அடையாமல் மறுபடியும் ஏதோ சொல்ல முயன்றார் விசாலி.
அவரை எதுவும் பேசவிடாமல் இடையிட்ட பூரணி அம்மா, “எவடி இவ, சுத்த கூறுகெட்டவளா இருக்கிறா? எம்பேரன், பேத்தி ஜோடிப் பொருத்தம் போல, அத்தனை அம்சமா இருக்குது எம்பேத்தி கழுத்துல கிடக்கிற கருகுமணி. அதை ரசிக்கிறதை விட்டுட்டு, தங்கத்துல போடலையா வைரத்துல போடலையான்னு கேட்டுகிட்டு” என்று மருமகளின் அதிகப்பிரசங்கித்தனத்திற்கு ஒரு கொட்டு வைக்க,
“சரியா சொன்னீங்க அப்பாம்ம” என்று சொல்லி, பூரணி அம்மாவின் கழுத்தை கட்டிக்கொண்டு முத்தம் குடுத்த சுபாஷிணிக்கு கணவனின் முகத்தில் வந்துபோன நக்கல் சிரிப்பைக் கண்டு, ‘எப்போதுதான் இந்த அத்தான் என்னை புரிந்து கொள்வாரோ?’ என்ற ஆற்றாமையே.
ஆனால் அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கவிடாமல் சேனாதிபதியின் தங்கை மங்கையர்கரசி சுபாஷிணியை சுறுசுறுப்பாக வைத்திருந்தாள்.
ஆமாம்... எப்போதும் போல இல்லாமல், இம்முறை மங்கையிடம் வலிய சென்று நட்பை வளர்க்க சுபாஷிணி முயற்சிக்க, அவளோ எப்போதும் போலவே சுபாஷிணியிடம் முறுக்கி கொண்டு, ராகுலிடமே கூட்டணி வைத்துக் கொண்டு அலைந்தாள்.
ஷாப்பிங் மால், தியேட்டர், கடற்கரை என்று இளையவர்களுக்காக சுபாஷிணி அழைத்துச் சென்ற இடங்களில் கூட, ராகுல், மங்கை கூட்டணியே தொடர, ‘இவ அண்ணனைக் கூட மலையிறக்கிடுவேன் போல, அம்மணி தான் உச்சாணி கொம்புல உடும்பு போல தொங்கிட்டு இருக்குறா” என்று கடைசியில் சுபாஷிணியை முணுமுணுக்கவே வைத்து விட்டாள் மங்கை.
அவர்கள் அங்கிருந்த நான்கு நாட்களும் சுபாஷிணி விடுமுறை எடுத்துக் கொண்டாள். சேனாதிபதி எப்போதும் போல பணிக்கு சென்று கொண்டிருந்தான். அவனின் பணியின் தன்மை தெரியுமாதலால், ஒருவரைத் தவிர, வேறு யாருக்கும் அது வித்தியாசமாக தெரியவில்லை. அந்த ஒருவர் விசாலி என்று சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன?
‘என்னவோ போலீஸ் டிபார்ட்மெண்டையே தோள்ல தூக்கி சுமக்குற மாதிரி தான் உன்மாப்பிள்ளைக்கு நினைப்பு” என்று அடிக்கடி மகளின் காதைக் கடிக்க தவறவில்லை விசாலி.
சேனாதிபதியின் தகப்பன் வாசு, “இதுக்கு முன்னாடி நீ எப்பிடி இருந்தியோ தெரியாது தம்பி. இனிமே குடும்பத்துக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்கணும் ப்பா” என்று மகனிடம் தனிமையில் சொல்லவே செய்திருந்தார்.
பதிலுக்கு “சரி” என்று மறுக்காமல் சேனாதிபதி தலையசைத்திருந்தாலும், அவனுமே அப்படியொரு முயற்சியில் தானே, தினமும் இரவு ஒன்பது மணிக்கு வீடு திரும்பி ஒருமணிநேரம் மனைவியோடு வீட்டில் இருந்து விட்டு, மறுபடியும் கிளம்பி சென்று நள்ளிரவில் கண்டிப்பாக வீடு திரும்பும் முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருக்கிறான்.
அவ்வளவு ஏன்? தங்கள் அறையில் இருந்த கட்டிலை பக்கத்து அறைக்கு மாற்றிவிட்டு, இரண்டு பேர் தாராளமாக படுக்கும் அளவிற்கு பெரிய கட்டிலை வாங்கிப் போட்டு, ஒரே அறையில், ஒரே கட்டிலில் தான் மனைவியோடு தன் இரவுப் பொழுதுகளை கடக்கிறான் சேனாதிபதி. என்ன? அவன் தூங்க வரும் நேரங்களில், அவன் மனைவி பெரும்பாலும் ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பாள். அவனும் இதுவரையிலும் மனைவியின் தூக்கத்தைக் கலைக்க முற்பட்டதேயில்லை, அவ்வளவு தான்.
ஊருக்கு கிளம்புவதற்கு முன்தினம் காலையில், தாயாரைப் பார்க்க போவதாக விசாலி சொல்ல, யாருமே அவரோடு செல்ல தயாரில்லை. ஆனால் அவர் பெற்ற மக்கள் அவரோடு வரமாட்டேன் என்று சொல்ல முடியாதே. எனவே தாயோடும் தம்பியோடும் பாட்டியை பார்த்து வருவதற்காக கிளம்பிய சுபாஷிணிக்கு, தங்களோடு கணவனும் வந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்ற, தங்களது அறையில் வைத்து கணவனுக்கும் அழைப்பு விடுத்தாள்.
அவனோ, “உன்னையே அங்க போகவேண்டாம்னு நான் சொல்லணும்னு நினைச்சா, நீ என்னைக் கூப்பிடுறியா?” என்று பல்லைக் கடித்தான்.
“ஐய்யைய்யோ… பாட்டி ஏற்கனவே நம்ம இரண்டு பேரையும் வரச்சொல்லிட்டே இருந்தாங்க. இப்போ, அம்மா வந்தபிறகும் அவங்க கூட நாம போகலைன்னா, தப்பா போயிடும் த்தான். அதனால நான் மட்டுமாவது போய்ட்டு வரேன்” என்றாள்.
அப்போதும், “உன் இஷ்டம்” என்று சொன்னானே தவிர, “சரி” என்று அவன் மனதார சம்மதம் சொல்லவில்லை. ஆனால், அவர்கள் சென்றுவர வாடகைக்கார் மட்டும் ஏற்பாடு செய்யத் தவறவில்லை.
கிளம்பும் தருவாயில், “நாம இப்போ கார்ல தானே போறோம். இப்பவாவது உன் செயினை போட்டுட்டு வரலாம்ல சுபா” என்று மறுபடியும் விசாலி ஆரம்பிக்க,
“ம்மா… நான் இப்பிடியேத்தான் வருவேன். இஷ்டம்னா என்னை கூட்டிட்டு போங்க. இல்லைன்னா நான் வீட்லயே இருந்துக்குறேன்” என்று கறாராக சுபாஷிணி சொல்ல, வாயை மூடிக்கொண்டார் விசாலி.
ஆனால், மாமன் வீட்டிலும் அவள் கழுத்தணியே பேசும் பொருளாகி, ‘ஏனடா இங்கே வந்தோம்?’ என்று சுபாஷிணியை எண்ண வைத்து விட்டார்கள்.
“உன் புருஷன் பெரிய போலீஸ் ஆபீஸர்னு சொன்னாங்க. தங்கத்துல தாலி போடுற அளவுக்கு அவனுக்கு வருமானம் இல்லையா என்ன?” என்று சுபாஷிணியிடமே அவள் பாட்டி கேட்க, பல்லைக் கடித்துக் கொண்டு அமைதியாக பதில் சொன்னாள் சுபாஷிணி.
“அது சரி… ஏற்கனவே தலைக்கு மேல கத்தி தொங்குற உத்தியோகம், இதுல பெரிய சினிமா ஹீரோ ரேஞ்சுக்கு ஆட்டிட்டியூட் காட்டி, எக்கச்சக்க எதிரிகளை உம்புருஷன் சம்பாதிச்சு வச்சிருக்குறதா வேற கேள்விப்பட்டேன். எதுக்கும் இப்பவே நீ கவனமா இருக்கிறது நல்லது தான் சுபா. இல்லைன்னா, உன் புருஷன் மேல உள்ள கோபத்துல உன்னை யாரும் எதுவும் செய்துடப்போறாங்க” நாக்கில் நரம்பே இல்லாமல் பேசினார் சுபாஷிணியின் தாய்மாமன் மனைவி.
எல்லாவற்றுக்கும் மேலாக, மாமன் மகன் ரஞ்சன், “என்னவோ போதையில்லா சென்னையை உருவாக்குவோம்னு சொல்லிட்டு சேனாதிபதி பயங்கர ஆக்ஷன்ல இறங்கியிருக்கான்னு நியூஸ்ல சொல்லுறாங்க. பாத்து சுபா… போதைப்பொருள் கடத்துற கேங் எல்லாமே சரியான மாஃபியா கேங்கா தான் இருக்கும்னு கேள்விபட்டுருக்கேன். அவங்ககிட்ட தெரியாம தலையை குடுத்துட்டு சேனாதிபதி மாட்டிக்காம. எதுக்கும் அவனை கொஞ்சம் அடக்கி வாசிக்க சொல்லு” என்றான் கேலியாக.
அம்மா, மகன் இருவர் பேச்சிலுமே தன் கணவன் மீதான பொறாமை அப்பட்டமாக தெறிப்பதைக் கண்ட சுபாஷிணிக்கு, இவர்களையும் சொந்தமாக எண்ணி அங்கே வந்த தன் முட்டாள்தனத்தை எண்ணி, தன்மீதே கோபம் தான் வந்தது.
ஆனால், அங்கிருந்த மாமன் மகள் ரம்யா மட்டும் ஏனோ இம்முறை வழக்கத்திற்கு மாறாக அமைதியாக இருந்தாள். ‘நான் அத்தானை திருமணம் செய்தது ரம்யாவிற்கு பிடிக்கவில்லை போல. அதனால் தான் என்னிடம் பேசாமல் இருக்கிறாள்’ என்று மாமன் மகளின் அமைதிக்கு தானாகவே ஒரு காரணத்தை யூகித்து கொண்டாள் சுபாஷிணி.
அதுவும் ஊருக்கு திரும்பி செல்ல ட்ரெயின் ஏறும் வரைக்கும், ஆயிரம் பத்திரம் சொல்லி மகளை படுத்தி எடுத்துவிட்டார் விசாலி.
அன்றிலிருந்து, இதோ இப்போது சீருடை அணிந்து பணிக்கு கிளம்பி நிற்கும் கணவனிடம், “பாத்து… கவனமா போய்ட்டு வாங்க த்தான்” என்று சொல்வதை வழக்கமாக வைத்திருக்கிறாள் சுபாஷிணி.
“நான் கவனமா போய்ட்டு வரேன்… நீங்களும் கவனமா போய்ட்டு வாங்க மேடம்.” சிரித்தபடியே மனைவியின் தலையை பிடித்து ஆட்டிய சேனாதிபதி, ஷு ராக்கிலிருந்து ஷூவை எடுத்து அணிந்தபடியே, “சுபா, உன் ஃப்ரெண்ட் கல்யாணத்துக்கு போறதைப் பற்றி முடிவெடுத்துட்டியா?” என்று கேட்டான்.
“ம்ம்… கல்யாணத்துக்கு அப்புறம் திவ்யா வேலைக்கு வரமாட்டான்னு நினைக்கும் போது அவகூடவே கிளம்பி போகணும்னு ஆசையா தான் இருக்கு. அதேநேரம் உங்களை விட்டுட்டு அஞ்சு நாள் இருந்திடுவேனான்னு யோசனையாவும் இருக்கு த்தான்.” தன் மனதை மறைக்காமல் சொன்னாள் சுபாஷிணி.
மனைவியின் பதிலில் மனதிற்குள் குளுகுளு என்று குற்றாலச்சாரல் அடித்தது சேனாதிபதிக்கு. இருந்தாலும் அதைக் காட்டிக்கொள்ளாமல், “நான் எப்பவுமே உங்கூட இருக்கமுடியாது சுபா. ஒருவேளை இன்னைக்கே ஏதாவது கேஸ் விஷயமா வெளியூருக்கு போகவேண்டி வந்தா, நான் போய் தான் ஆகணும். அப்போ நான் இல்லாமல் நீ தனியா இருந்து தான் ஆகணும். அதனால இப்பிடி சில்லியா காரணம் சொல்லாம உனக்கு போகணும்னா போய்ட்டு வா” என்றான் தாராளபிரபுவாக.
வேறொன்றுமில்லை, திருமணத்திற்கு பிறகு, தான் கணவனோடு மும்பைக்கு செல்லயிருப்பதால், திருமணத்திற்கு ஐந்து நாட்கள் முன்னதாக ஊருக்கு கிளம்பும் தன்னோடு வந்து, தன்வீட்டில் தங்கிவிட்டு, திருமணம் முடிந்தபிறகு ஊருக்கு திரும்பி செல்லுமாறு சுபாஷிணியை அழைத்துக் கொண்டிருக்கிறாள் திவ்யா. அதைப்பற்றி தான் இருவரின் பேச்சும் இருக்கிறது.
“ஹ்ம்ம்… பாப்போம் த்தான்…” என்று பதில் சொல்லிய சுபாஷிணி, “திவ்யா இல்லாம எப்பிடித்தான் அந்த ஆஃபீஸுக்கு போகப்போறனோ தெரியலை” என்று தன்போக்கில் முணுமுணுக்க,
“ஏன்? அந்த ஆனந்த் ஏதாவது பிரச்சினை பண்ணுறானா?” என்று கேட்டான் சேனாதிபதி.
“ஐய்யைய்யோ… அப்படியெல்லாம் எதுவும் இல்ல த்தான். பாவம் அந்த மனுஷன். ரொம்ப நார்மலா பழக ஆரம்பிச்சிட்டார். இல்லாததை எதுவும் நாம சொல்லக்கூடாது.” வேகமாக பதில் சொன்னாள் சுபாஷிணி.
“உனக்கு வித்தியாசமா எதுவும் ஃபீல் ஆகலைன்னா நோ ப்ராப்ளம் சுபா. ஆனா, எதுவும் பிரச்சினைன்னா மறைக்காம எங்கிட்ட சொல்லிடணும்” என்றவன், மனைவியிடம் விடைபெற்று தன் வண்டிச் சாவியை எடுத்துக்கொண்டு கிளம்பினான். சற்று நேரத்தில் புறப்பட்டு சுபாஷிணியும் கீழே இருக்கும் பார்க்கிங் ஏரியாவுக்கு வந்தாள்.
அந்நேரம் தன் ஸ்கூட்டியை எடுக்க அங்கே வந்த அனு, சுபாஷிணியைக் கண்டுகொள்ளாமல் சென்றாள். சொல்லப்போனால், அந்த கடையில் வைத்து அனு, சுபாஷிணியை வம்பிழுத்தது தான். அதன்பிறகு இந்த ஒருமாத காலத்தில் சுபாஷிணியை எப்போதாவது இப்படி காணும் பொழுதுகளில் கூட யாரோ போன்ற பாவனைதான் அனுவிடம்.
‘தன்னைவிட எதிராளி பலமானவன் என்று தெரிந்தால், இப்படித்தான் இருக்கும் இடம் தெரியாமல் பம்மிக்கொள்வார்கள் போல’ என்று எண்ணிக் கொண்டு, வண்டியை ஸ்டார்ட் செய்த சுபாஷிணிக்கு, தனக்கும் அனுவிற்கும் வாக்குவாதம் நடந்து இரண்டு நாட்கள் கழித்து, “அனு ஏதாவது உங்கிட்ட மிஸ்பிஹேவ் பண்ணுனாளா என்ன?” என்று கேட்ட கணவனும், அதைத்தொடர்ந்து, “ரொம்ப சீக்கிரம் கேட்டுட்டீங்க” என்று, தான் முகம் திரும்பியதும் ஞாபகத்துக்கு வந்தது.
அனு தன்னிடம் நடந்து கொண்டதாக மனைவி சொன்னவற்றைக் கேட்டு சேனாதிபதிக்கு அதிர்ச்சியே. அதுவும், தன்னிடம் பொய் சொல்லியிருக்கிறாள் என்று தெரியவும் தடுமாறிப் போன சேனாதிபதி, “இதுக்கு தான் அவகிட்ட கொஞ்சம் சாஃப்டா பிஹேவ் பண்ணுன்னு சொன்னேன் சுபா. இப்பபாரு எங்கிட்டயே பொய் சொல்லியிருக்கா” என்று மனைவியிடம் குறைபடித்தான்.
“ஒரு கன்னத்துல அடிச்சா மறுகன்னத்தைக் காட்ட நான் ஒன்னூம் ஜீசஸ் கிடையாது… எல்லா உணர்வுகளும் உள்ள சாதாரணமான மனுஷி. எனக்கு வலிச்சா நானும் திருப்பி அடிப்பேன். அப்பிடி அடி விழும்ங்குற பயம் இருந்தா தான், செய்த தப்பை திரும்ப செய்யக் கூடாதுன்னு தோனும். நீங்க சொல்லுற மாதிரி கொஞ்சுனால்லாம் கதைக்காகாது. இனிமேலும் அவ எங்கிட்ட ஏதாவது வச்சிகிட்டா, இதைவிட மோசமா திருப்பி குடுப்பேன் ” என்று சொல்லியிருந்தாள் சுபாஷிணி.
கிட்டத்தட்ட தன்னுடைய கருத்தையே மனைவி பிரதிபலிக்க, வேறுவழியில்லாமல் சேனாதிபதியும் அமைதியாகிப் போயிருந்தான்.
‘என்னோடு முகம் திருப்பும் இந்த பெண், என் கணவனோடும் முகம் திருப்பிக்கொண்டால் நன்றாக இருக்கும்’ என்ற எண்ணம் தோன்ற, சிரித்தபடியே தன்வழியில் ஸ்கூட்டியை விட்டாள் சுபாஷிணி.
அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்த சேனாதிபதி, அன்று அந்த இளைஞர்கள் பிரச்சினை செய்த குடியிருப்பு வழியே தன் காரை செலுத்திக் கொண்டிருந்தான். ட்ரைவர் ராஜை நேரடியாக அலுவலகத்திற்கு வரச் சொல்லியிருந்ததால், இப்போதும் செல்ஃப் ட்ரைவிங் தான்.
அன்றைய நிகழ்விற்குப் பிறகு வாரத்தில் ஒரு நாளாவது அந்த குடியிருப்பு பகுதிக்கு வந்து பார்வையிடுவதை ஒரு வழக்கமாகவே வைத்திருந்தான் சேனாதிபதி.
அங்கே நடைபாதையில், அன்று சந்தித்த அதே பெண் நடந்து சென்று கொண்டிருப்பதைக் கண்ட சேனாதிபதி, அந்த பெண்ணருகே கொண்டு காரை நிறுத்த, அவனை அடையாளம் கண்டு கொண்டு சிரித்தாள் அவள்.
“என்னம்மா தைரியலட்சுமி.. இப்போ தெருவுல யாரும் பார்ட்டி கொண்டாடுறாங்களா என்ன?” சேனாதிபதி காரில் இருந்தபடியே அந்த பெண்ணிடம் கேட்க,
“நீங்க உதைச்ச உதையில எல்லாத்தையுமே மறந்துட்டாங்க போல சார்… அவங்க யாரையும் அதுக்கு பிறகு இங்க காணவே முடியல” என்றாள் அந்த பெண்.