சுபாஷிணியின் அமைதியில் குழம்பிப்போன அனு, “ஏய்… உன்னத்தான் கேக்குறேன். காது கேக்கலையா உனக்கு?” என்று மறுபடியும் கீச்சிட்ட, “யார் நீ?” என்று நிதானமாக கேட்டாள் சுபாஷிணி.

 சுபாஷிணியின் கேள்வியில் இப்போது திடுக்கிட்டுப்போன அனு, “என்னை… என்னை அடையாளம் தெரியலையா உனக்கு?” என்றாள் யோசனையாக.

“தெரியாததுனாலத் தானே கேக்குறேன். சொல்லு… யார் நீ?” என்றாள் சுபாஷிணி அமர்த்தலாக.

“நீ… நீ… ங்க கமாண்டரோட வைஃப் தானே?” ஒருவேளை ஆள்மாற்றி கேட்டுவிட்டோமோ என்று தயக்கத்தோடு அனு கேட்க,

“கமாண்டர் யாருன்னு எனக்குத் தெரியாது. சேனாதிபதி தான் என் ஹஸ்பென்ட்” என்றாள் சுபாஷிணி.

“ஹாங்… அதைத்தான் கேக்குறேன்… சேனாதிபதியோட வைஃப் தானே நீ?” மறுபடியும் மரியாதை தொண்டையில் சிக்கிக்கொள்ள அலட்சியமாக கேட்டாள் அனு‌.

“யாரு? யாரோட வைஃப் ன்னு சொன்ன?”

“அதான்… சேனாதிபதியோட வைஃபான்னு கேட்டேன்.”

“தெரியுதுல்ல… நான் சேனாதிபதியோட பொண்டாட்டின்னு தெரியுதுல்ல? அப்புறம் எதுக்கு உனக்கு இந்த வேண்டாத்தனம்? இனி ஒரு நேரம் இப்பிடி ஏதாவது எங்கிட்ட வந்து மரியாதை குறைவா பேசின, இப்பிடியே பாத்துட்டு சும்மா நிப்பேன்னு நினைக்காத. பல்லு முப்பத்திரெண்டையும் தட்டி கைல தந்துடுவேன், ஜாக்கிரத…” கிட்டத்தட்ட அனுவை மிரட்டவே செய்து விட்டாள் சுபாஷிணி.

 ‘முறையாக திருமணம் முடித்து சேனாதிபதியின் வாழ்க்கையில் வந்திருக்கும் பெண், தான் போகச் சொல்லியதும், அள்ளிக் கட்டிக்கொண்டு ஊரைப்பார்த்து போய்விடமாட்டாள்’ என்று அனுவிற்கும் தெரியும் தான்.

இருந்தாலும், சுபாஷிணியைக் கண்டதும் ஒருவிதமான துவேஷம் மேலெழுப்ப, தன் ஏமாற்றத்தை எல்லாம் வார்த்தைகளாக கொட்டிவிட்டாள்.

 ஆனால், இப்படி ஒரு எதிர்வினையை சுபாஷிணியிடமிருந்து எதிர்பாராத அனுவிற்கு, முகத்தில் அறைவாங்கியது போலாகிவிட்டது. என்றாலும், அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், “பெரிய்ய்ய போண்டா டீ… நீ மட்டும் ஊருக்கு வந்த இடத்தில அவரை ஏமாத்தி கல்யாணம் செய்யலைன்னா, நான் தான் அவரோட போண்டா டீ. அது தெரியுமா உனக்கு?” அடங்க மறுத்து, மறுபடியும் அலட்சியமாகவே பேசினாள் அனு.

“ராஸ்கல்… இவ்வளவு தான் உனக்கு மரியாதை. ஏதோ சின்னப்பிள்ளைன்னு பாத்தா, பேசிட்டே போற நீ? இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசினாலும், இங்க நடக்குறதுக்கு நான் பொறுப்பு கிடையாது.” ஆட்காட்டி விரலை அனுவின் முகத்துக்கு நேராக நீட்டி, கடித்த பற்களுக்கிடையே வார்த்தைகளையும் சேர்த்து சுபாஷிணி கடித்து துப்ப, “பர்சேஸ் பண்ணி முடிச்சாச்சா சுபா?” என்று கேட்டபடி சுபாஷிணியின் அருகில் வந்து நின்றான் சேனாதிபதி.

 தன்மீது படிந்த கணவனின் அதிருப்தியான பார்வையிலேயே, தான் பேசியதை கேட்டிருக்கிறான் என்பது புரிய, வரவில்லை என்று சொல்லிவிட்டு, வந்து நிற்கும் கணவனின் வரவைக்கூட கொண்டாட முடியாத மனநிலையில் நின்றாள் சுபாஷிணி.

“ஹேய்… கமாண்டர்… அதிசயமா உங்க தலை இங்கல்லாம் தெரியுது. என்ன விஷயம்?”அதற்கிடையில் தன்னை சுதாரித்துக்கொண்ட அனு, சேனாதிபதியிடம் கேட்க,

“அதை நான் தான் கேட்கணும்? நீ எங்க இங்க?” என்று பதிலுக்கு கேட்டான் சேனாதிபதி.

“அது… ஒரு ஃப்ரெண்டோட வீடு கிரகப்பிரவேசம். அதுக்கு நாங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து ப்ரசண்ட் பண்ண ஏதாவது வாங்கலாம்னு வந்தோம். வந்த இடத்தில இவங்களை பார்க்கவும், அன்னைக்கு நடந்துகிட்டதுக்கு மன்னிப்பு கேட்கலாம்னு வந்தேன்‌‌. ஆனா இவங்க…”

 கண்டிப்பாக சேனாதிபதி தங்கள் உரையாடலின் இறுதிப் பகுதியைத் தான் கேட்டிருக்க கூடும் என்று உறுதியாக நம்பி, உடனடி நாடகம் ஒன்றை அனு நடத்த, “அடிப்பாவி… என்னமா புளுகுறா!” என்ற பாவனையே சுபாஷிணியிடம்.

நடந்த அனைத்திற்கும் சாட்சியாக நின்றிருந்த திவ்யாவும் அதிர்ந்து போய் தோழியைப் பார்க்க, தன் கண்களால் அவளை அமைதிப்படுத்தினாள் சுபாஷிணி.

“வாங்கியாச்சா?” தன்னை சாதாரணமாக காட்டிக்கொண்டு அனுவிடம் பேசினாலும், மனைவி தன் வார்த்தையை மதிக்கவில்லை என்ற அடக்கப்பட்ட கோபமே சேனாதிபதியிடம்.

“ஹ்ம்ம்… ஃப்ரெண்ட்ஸ் முடிச்சிருப்பாங்கன்னு நினைக்கிறேன். நீங்க பாருங்க, நான் அவங்ககிட்ட போறேன். பை..” என்று கொளுத்தி போட்டுவிட்டு உற்சாகமாக தன் நண்பர்கள் கூட்டத்தோடு போய் இணைந்து கொண்டாள் அனு.

அதன்பிறகு, மனைவி தேர்வு செய்து வைத்திருந்த பொருட்களோடு, வேறுசில பொருட்களையும் வாங்கி, திவ்யாவையும் ஹாஸ்டலுக்கு அனுப்பி வைத்துவிட்டு, வாங்கிய பொருட்களை வீட்டில் கொண்டு வந்து சேர்க்கும்வரை அனாவசியமாக சுபாஷிணியிடம் பேசாத சேனாதிபதி, மறுபடியும் வெளியே கிளம்பும் போது, “ஆனாலும், உங்கிட்ட இருந்து இதை நான் எதிர்பார்க்கலை சுபா” என்றிருந்தான் மனைவியிடம்.

விசாரணையே இல்லாமல் வார்த்தைகளில் தண்டனை தந்துவிட்டுச் சென்ற கணவனை அதிர்ச்சியாக பார்த்தபடி நின்றிருந்தாள் சுபாஷிணி.

உண்மையில், இன்றாவது மனைவியின் நம்பிக்கையை பொய்துபோக விட்டுவிடக்கூடாது என்று, வேலைகளை முடித்து விட்டு, ஏற்கனவே தாங்கள் திட்டமிட்டு கொண்டபடி ஷோரூமுக்கு தான் வந்து கொண்டிருந்தான் சேனாதிபதி.

வரும் வழியில் ஒரு குறிப்பிட்ட குடியிருப்பு பகுதியில் வேலை ஒன்று இருப்பது ஞாபகத்திற்கு வர, அதை முடித்து விட்டு செல்லலாம் என்று அந்த குடியிருப்பு பகுதிக்குள் தன் வாகனத்தை திருப்பியிருந்த சேனாதிபதி, ட்ரைவர் ராஜை தவிர்த்து தானே தான் வண்டியை ட்ரைவ் செய்து கொண்டிருந்தான்.

பாதையின் இருமருங்கிலும் குறிப்பிட்ட இடைவெளியில் அடுக்கி வைத்தது போல, ஒரேமாதிரியான கட்டமைப்பில் இருந்தது அங்கிருந்த அடுக்குமாடி குடியிருப்புகள். அவற்றின் காம்பௌண்ட் சுவருக்கு முன்னால், வரிசையாக வளர்க்கப்பட்டிருந்த மரங்கள் அடர்ந்து வளர்ந்து, கிளை பரப்பி நிழலை தந்த வண்ணம் நின்றன.

மெச்சுதலான புன்னகையோடு, சுற்றுப்புறத்தை கண்களால் ஆராய்ந்தபடியே, சீரான வேகத்தில், வாகனத்தை செலுத்திக் கொண்டிருந்த சேனாதிபதியின் கண்களில், சாலை ஓரத்தில், கல்லூரி மாணவர்கள் போன்ற தோற்றத்தில் இருந்த மூன்று இளைஞர்கள், ஒரு இளம்பெண், ஒருவயதான ஆண் இவர்களுக்கிடையே நடைபெற்றுக் கொண்டிருந்த தள்ளுமுள்ளு விழ, அந்த ஐவருக்கும் அருகே கொண்டு வந்து காரை நிறுத்தினான்.

காரிலிருந்து இறங்குவது போலீஸ் எனத் தெரியவும், அவனை நோக்கி ஓடிவந்த அந்த இளம்பெண், “சார்… அந்த பொறுக்கிப் பசங்ககிட்டயிருந்து அந்த தாத்தாவை காப்பாத்துங்க சார்” என்றாள் பதட்டத்தோடு. அவள் முகத்தில் ஆங்காங்கே கேக் தடவப்பட்டிருந்த தடம் தெரியவும், “என்னாச்சு?” என்று கேட்டபடியே வேகநடையோடு அந்த இளைஞர்களுக்கு அருகில் சென்றான் சேனாதிபதி.

“எப்போ பாரு இந்த பசங்களுக்கு இதே வேலைதான் சார். அவங்க பிறந்தநாள், அந்த நாள், இந்த நாள்னு எல்லா நாளையும் இந்த மரத்தடியில கேக் வெட்டிக் கொண்டாடுறது தான் இவனுங்க பழக்கம். இன்னும் இரண்டு மூனு தடியன்களும் இவனுங்க கூட்டத்துல உண்டு. எல்லாம் சரியான தண்ணிவண்டி‌. குடிச்சிட்டு, போற வர்றவங்களை எல்லாம், எங்களுக்கு விஷ் பண்ணிட்டு போங்கன்னு ஆர்ப்பாட்டம் பண்ணுவானுங்க.”

“இன்னைக்கு இவனுங்க கையில நான் மாட்டிக்கிட்டேன். எங்கையை பிடிச்சி இழுத்து, மாமனுக்கு விஷ் பண்ணிட்டு போடி செல்லம்னு எங்கிட்ட பிரச்சினை பண்ணினாங்க. இந்த தாத்தா வந்து எனக்காக பேசவும், அப்போ நீங்க எங்ககூட செலிபிரேட் செய்யுங்கன்னு, அவர் வாயில் கட்டாயப்படுத்தி ட்ரிங்ஸ்ஸை ஊத்தப் பாக்குறாங்க” என்று வேகவேகமாக சொன்னாள்.

அந்த பெண் சொன்னது போல, அங்கிருந்த சிமெண்ட் திண்டில் வெட்டப்பட்ட கேக் ஒன்று இருந்தது. அதன் அருகே காலி மதுபாட்டில்களும் கிடந்தன.

தனிமனித சுதந்திரம் என்று சொல்லிச்சொல்லி, அந்த தனிமனித சுதந்திரம் போய் நிற்கும் ஆபத்தான திக்கை பார்த்து, எப்போதும் போல இப்போதும் சேனாதிபதிக்கு கோபம் வந்தது.

அந்த கோபத்தின் சுவடு சற்றும் குறையாமல் இளைஞர்களுக்கு அருகே சென்றவன், பெரியவருக்கு வலுக்கட்டாயமாக மதுவை வாயில் ஊற்ற முயற்சி செய்து கொண்டிருந்தவனின் கன்னத்தில் பளாரென்று அறைய, அந்த இளைஞன் கையிலிருந்த மதுபாட்டில் தெறித்து ஓடியது.

இவ்வளவு நேரமும் தாங்கள் செய்த அலப்பறைகளைக் கண்டும் காணாதது போல சென்று கொண்டிருந்த மக்களின் செயலில், ஏதோ தன்னை பெரிய பிஸ்தா ரேஞ்சுக்கு எண்ணிக்கொண்டு நின்றிருந்த அந்த இளைஞன், திடீரென்று விழுந்த அடியில் பொறிகலங்கிப் போனவனாக, “எவன்டா அது?” என்றான் குழறலாக.

 “போலீஸ் டா…” என்று பதில் சொன்னான் உடனிருந்தவன்.

“எவனா இருந்தாலும், நம்ம கூட ஒரு கட்டிங் போடச் சொல்லுடா மச்சான்.” ஏதோ, தன்னை சினிமா கதாநாயகனாக பாவித்துக் கொண்டு, டயலாக் விட்டான் அடிவாங்கியவன்.

எல்லாம் போதை செய்த மாயை. எதிரே நிற்பது யார், நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம், என்று தெரியாத அளவிற்கு தன்னை மறந்த ஒரு நிலை.

“ம்ம்… கட்டிங் தான… போடலாமே மச்சான்… ஆனா இங்கயிருந்து இல்ல… வசதியா ஸ்டேஷனுக்கு போய் போடலாம்” என்று நக்கலாக சொல்லிய சேனாதிபதியின் கரம், மூவரின் கன்னத்திலும் மாறிமாறி இடியென விழ, ஏறியிருந்த போதை சர்ரென்று இறங்கியதில், நடப்பு புரிய, அங்கிருந்து தப்பித்து செல்ல முயன்றார்கள் மூவரும்.

ஆனால், போதையால் தளர்ந்திருந்தவர்களின் முயற்சி, கட்டுமஸ்தான சேனாதிபதியிடம் எடுபடாமல் போனது. மூவரையும் பாகுபாடில்லாமல் உதைத்து தன் வாகனத்திலேயே அள்ளி போட்டுக் கொண்டு, அந்த பகுதியின் காவல் எல்கைக்கு உட்பட்ட காவல் நிலையத்திற்கு தன் வாகனத்தை விடும்போது தான், எதற்காக வந்தோம் என்பது சேனாதிபதிக்கு ஞாபகமே வந்தது.

உடனே மனைவிக்கு அழைத்து, வேலை, வரமுடியாது என்று சொன்னான். ஆனால், மனைவியின் பதிலிலேயே கண்டிப்பாக அவள் இன்று பொருட்களை வாங்க கடைக்கு செல்வாள் என்பது புரிந்து போனது சேனாதிபதிக்கு‌.

எனவே, அந்த காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டரிடம் மூவரையும் ஒப்படைத்தவன், “நான் வர்றதுக்கு முன்னாடி, யார் வந்து இவங்களை ரிலீஸ் பண்ணச் சொன்னாலும், ரிலீஸ் பண்ணக்கூடாது” என்று கட்டளையாகவே சொல்லிவிட்டு, கடைக்கு வந்து விட்டான் சேனாதிபதி.

அது மூன்று தளத்தில் இயங்கும் பெரியகடை. “சுபா எந்த ஃப்ளோர்ல நிக்குறாளோ தெரியலையே?” என்ற எண்ணத்தோடு கடையினுள் நுழைந்த சேனாதிபதியின் கண்களில், முதல் தளத்தில் நின்றிருந்த மனைவியும் அனுவும் விழுந்தார்கள்.

கொஞ்சம் பதட்டத்தோடு அவர்களை நோக்கி சென்றவன், கண்டதும், கேட்டதும், மனைவி ஒற்றை விரலை நீட்டி அனுவை கிட்டத்தட்ட எச்சரித்தது போன்று பேசிய வார்த்தைகளைத் தான்.

மனைவியின் செயலில், நான் சொல்லியது என்ன? இவள் செய்து கொண்டிருப்பது என்ன? என்று அதிருப்தியே சேனாதிபதிக்கு. அதை பார்வையில் அப்போது காட்டியவன், வீட்டுக்கு வந்ததும் வார்த்தையில் சொல்லி விட்டான்.

  அந்த இளைஞர்கள் மூவரையும் ஒப்படைத்து விட்டு வந்திருந்த காவல் நிலையத்திற்கு, தனது வாகனத்தில் சென்று கொண்டிருந்த சேனாதிபதிக்கு, அனு எதுவும் சுபாஷிணியை சீண்டியிருப்பாளோ என்று இப்போது எண்ணத் தோன்றியது. எதற்கும் சுபாவிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்து கொண்டான்.

அதன் பின்னர், அவன் எண்ணம் முழுவதையும், அந்த இளைஞர்கள் ஆக்கிரமித்து கொண்டார்கள். அதுவும் அவர்கள் மூவரும் இருவேறு கல்லூரியில் படிப்பவர்கள் என்று விசாரித்த வரையில் தெரியவர, ஏதேதோ எண்ணங்கள் ஓடியது சேனாதிபதியின் மனதில்.

 அந்த குறிப்பிட்ட காவல் நிலையத்திற்கு சேனாதிபதி வந்து சேரும் போது இரவு எட்டு மணி தாண்டிவிட்டது. இருட்டை விரட்ட முயற்சி செய்து கொண்டிருந்த மின்விளக்குகளின் வெளிச்சத்தில், வழக்கறிஞர்களின் நடமாட்டம் அங்கேயிருப்பது தெரிய, சேனாதிபதியின் இதழ்களில் ஏளனப் புன்னகை தவழ்ந்து.

தன் லேசர் பார்வையால் அங்கிருந்தவர்களை அளவிட்டபடியே வந்தவனின் கண்கள், காவல்நிலைய பெஞ்சில் வரிசையாக உட்கார்ந்திருந்த இளைஞர்களின் இதழ்களில், தன்னைக் கண்டதும் வந்த அலட்சிய புன்னகையையும், “இதோ… நாங்க இப்போ வெளியே போய்டுவோம். உன்னால ஒன்னும் புடுங்க முடியாது…” என்று அந்த புன்னகை தாங்கி நின்ற செய்தியையும் கூட கண்டுகொள்ள தவறவில்லை.

அமைதியாக ஆய்வாளரின் இருக்கையில் வந்து சேனாதிபதி அமர, விறைப்பான சல்யூட் ஒன்றை வைத்த அந்த ஸ்டேஷனின் இன்ஸ்பெக்டர், “சார்… பசங்களை கூட்டிட்டு போக, லாயரோட அவங்க பேரெண்ட்ஸ் வந்துருக்காங்க” என்றார்.

“தெரியும்… அடுத்த நிமிஷமே இப்பிடி பறந்து வந்து நிப்பாங்கன்னு எனக்கு தெரியும். இந்த வேகத்தை பசங்க எங்க போறாங்க? என்ன பண்ணுறாங்க? யார்கூட எல்லாம் ஃப்ரெண்ட்ஸ்ஷிப் வச்சிருக்காங்கன்னு தெரிஞ்சு வச்சிக்குறதுல காட்டச் சொல்லுங்க.” தன் வலதுகையை தனக்கு முன்னால் இருந்த மேஜையில் வேகமாக தட்டியபடி கோபமாகச் சொன்னான் சேனாதிபதி.

சேனாதிபதியின் தார்மீகக் கோபம் நியாயமானதாக இருக்க, “எப்பிடின்னாலும் அவங்க எங்களோட பிள்ளைங்க சார். நாங்க எப்பிடி அவங்களை விட்டுற முடியும்? அதுவும் இல்லாம, அவங்க ஃப்யூச்சர் வேற இதுல அடங்கியிருக்கே” என்றார் ஒருவர் தயக்கத்தோடு.

“அவங்க ஃப்யூச்சர் மேல அவங்களுக்கே அக்கறை இல்லாதப்போ, உங்களுக்கு என்ன வந்தது? ஹாங்…, பிள்ளைங்களுக்கு பேரெண்ட் சப்போர்ட்டிவ்வா இருக்க வேண்டியது தான். அதுக்காக, அவங்க தப்பு செய்யும் போதும் அவங்க பின்னாடி நிக்கணும்னு நினைக்காதீங்க. தப்பு செய்தா யாரும் நம்மளை சப்போர்ட் பண்ணமாட்டாங்க, தண்டனை நிச்சயம் கிடைக்கும் ங்குற பயம் அவங்களுக்கு இருக்கணும். அந்த பயம் மட்டும் வந்திடிச்சின்னா, அவங்க ஜென்மத்துக்கும் தப்பு செய்ய மாட்டாங்க. வேணும்னா நான் சொல்றதை டெஸ்ட் பண்ணி பாக்குறீங்களா?” என்றான் சேனாதிபதி சவாலாக.

ஒரு முள்செடியை, அது சிறியதாக இருக்கும் போது கிள்ளி எறிவது எவ்வளவு சுலபம். அதே செடி, முள்ளோடு வளர்ந்து கிளை பரப்பி மரமாக நிற்கும் போது, அதை அகற்ற நினைப்பது என்பது எளிதான காரியமா? எப்படித்தான் பாதுகாப்பாக அகற்ற முயற்சித்தாலும், அதன் முற்கள் ஒன்றிரண்டாவது நம்மை பதம் பார்க்காமல் விடாதே.

அப்படித்தான், தவறு சிறியதாக இருக்கும் போதே திருத்தப்பட வேண்டும். இல்லையென்றால் முட்செடி போலத்தான் ஆகிப்போகும் நிலமை. இந்த எண்ணம் தான் சேனாதிபதிக்கு.

அவன் எண்ணம் புரிந்ததோ என்னவோ, சேனாதிபதியோடு பேசிய மனிதர், தான் அழைத்து வந்திருந்த லாயரோடு கிளம்பி விட்டார். அங்கிருந்த மற்றவர்களும் கூட அவரையே பின்பற்றினார்கள்.

அதுவரைக்கும் தங்களை பெற்றவர்கள் வெளியே அழைத்துச் சென்று விடுவார்கள் என்று இறுமாப்பில் அமர்ந்திருந்த இளைஞர்களுக்கு, திக்கென்று ஆகிப்போனது.

 “ப்பா… எங்களை இங்க விட்டுட்டு போகாதீங்க ப்பா… ப்ளீஸ் ப்பா… கூட்டிட்டு போயிடுங்க…, கேஸ் ஃபைல் பண்ணிட்டாங்கன்னா எங்க ஃப்யூச்சரே ஸ்பாயில் ஆகிடும்…” ஒருசேர அலறினார்கள் மூவரும்…