அத்தியாயம் 10

“கறுத்த மச்சான், கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்?”

கடந்த பத்து நாட்களாக சுபாஷிணியைக் காணும் போதெல்லாம் தான் பாடும் பாடலை, இப்போதும் சுபாஷிணியின் கழுத்தோடு தன் கையைக் கோர்த்துக் கொண்டு, பாடியபடியே நடந்து கொண்டிருந்தாள் திவ்யா. இடம், அவர்கள் அலுவலகத்திலிருந்து சற்றே தொலைவிலிருந்த வீட்டு உபயோக பொருட்கள் விற்கும் ஒரு விற்பனை நிலையம்.

“ம்ப்ச்… கஞ்சத்தனம் எல்லாம் இல்லை திவ்யா, இது அத்தானுக்கு எம்மேல உள்ள அன்பு, லவ், ப்யார்… ” கடந்த பத்து நாட்களாக திவ்யாவின் கிண்டலுக்கு சொல்லும் பதிலை, இப்போதும் அலுக்காமல் சொன்னாள் சுபாஷிணி.

வேறொன்றுமில்லை, சேனாதிபதி வாங்கிக் கோடுத்த கருகுமணியை, தாலிச்செயினுக்கு பதிலாக அலுவலகத்திற்கு அணிந்து வந்த சுபாஷிணி, அத்தான் வாங்கித் தந்தது என்று திவ்யாவிடம் சொல்ல, அப்போதிலிருந்து இப்படித்தான் தோழியை கேலி செய்து கொண்டிருக்கிறாள் திவ்யா.

“செயின்ல தான் கஞ்சத்தனம் காட்டுறார்னு பார்த்தா, நம்ம கறுத்த மச்சான் உங்கூட டைம் ஸ்பெண்ட் பண்ணவும்ல கஞ்சத்தனம் காட்டுறார்.” சுபாஷிணியின் கோபத்தை எதிர்பார்த்து, வேண்டுமென்றே திவ்யா பேச,

“இங்கபாரு திவ்யா… நீ என் அத்தானை கறுப்புன்னு சொன்னா கூட எனக்கு கோபம் வராது… ஏன்னா கறுப்பு தான் கொழுப்பு, வெள்ளை எல்லாம் சொள்ளை. அதேநேரம் விளையாட்டுக்கு கூட என்அத்தானை நம்ம மச்சான்னு சொல்லாத. அப்புறம் நான் கொலகாரியா மாறிடுவேன் பாத்துக்க.” அடிக்குரலில் திவ்யாவை மிரட்டியபடியே அங்கிருந்த வீட்டு உபயோக பொருட்களை பார்வையிட்டு கொண்டிருந்தாள் சுபாஷிணி.

“ஹஹஹ… கொலகாரியா மாறிடுவியா? ஏன் மா? ஏன்?” என்று வாய்விட்டு சிரித்த திவ்யா, “அம்மிணிக்கு அடி ரொம்ப பலம் போல!” என்று விடாது கேலி பேச, அவளை பரிதாபமாக பார்த்தாள் சுபாஷிணி.

“நான் தான் சொன்னேன்ல… ஏசிபி சாருக்கு கல்யாணம் முடிஞ்சது தெரியவந்ததுன்னா, நிறைய இளம்பெண்களோட மனசு ஒடைஞ்சு போகும்னு. அதுல இரண்டே இரண்டு எக்ஸாம்பிளை லைவ்வா பாத்ததுக்கே இப்பிடி மிரண்டுபோயிட்டியே ம்மா ராசாத்தி” என்று மறுபடியும் சிரித்தாள் திவ்யா.

அனுவையும், அந்த மெஸ் மோனியையும் பற்றி பேச்சுவாக்கில் திவ்யாவிடம், சுபாஷிணி சொன்னதன் விளைவே, இப்போது இந்த கேலி.

அன்று, ஆர்டர் செய்த உணவை அந்த பெண் மோனியிடமிருந்து பெற்றுக் கொண்டு, அவளை அனுப்பி வைத்த சேனாதிபதி, “வா சுபா, வந்து சாப்டுட்டு எப்பிடி இருக்குன்னு சொல்லு” என்று அழைக்க,

‘பத்துநாள் பட்டினியா கிடந்தாலும், இவங்க மெஸ்ல மட்டும் சாப்பாடு வாங்கவேக் கூடாது’ என்ற முடிவை எப்போதோ எடுத்திருந்தாள் சுபாஷிணி.

‘வேலியில் போவதை எடுத்து, எதற்கு மடியில் கட்டிக்கொள்ள வேண்டும்? அதன்பிறகு குத்துதே, குடையுதே என்று எதற்கு சொல்லவேண்டும்?’ என்ற எண்ணமே சுபாஷிணியிடம். அப்படித்தான் நினைக்க வைத்தது அந்த மோனியின் முகபாவனை.

 சுபாஷிணியை எதிர்பார்க்காமல், தட்டில் ஆப்பத்தையும் கடலைக்கறியையும் தானே பரிமாறி, அவள் கையில் கொடுத்து, “ம்ம்… சாப்பிட்டு பாரு” என்ற சேனாதிபதி, தானும் இரண்டு ஆப்பத்தை ஒரு தட்டில் வைத்துக் கொண்டு சாப்பிட உட்கார்ந்து விட்டான்.

“தயாளபிரபு எப்படியோ சாப்பிட தட்டு வாங்கி போட்டுருக்காங்க” என்று மனதிற்குள் முணுமுணுத்தவாறே கணவன் நீட்டிய உணவைப் பெற்றுக் கொண்ட சுபாஷிணிக்கு, பார்க்கும் போதே அந்த உணவு சுவையாகத்தான் இருக்கும் என்று தோன்றியது.

அவள் எண்ணம் போல உணவும் சுவையாகத் தான் இருந்தது. அதை வாய்விட்டு சொல்ல மனமின்றி அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் சுபாஷிணி.

ஆனால், சேனாதிபதியோ அவளிடமிருந்து வரும் பதிலுக்காக, சாப்பிடுவதும் மனைவியின் முகத்தை பார்ப்பதுமாக இருந்தான். சுபாஷிணி எதுவுமே சொல்லாமல் இருக்கவும் சற்றுநேரம் வரை பொறுமையாக இருந்த சேனாதிபதி, “எப்பிடி? டேஸ்ட் நல்லாயிருக்கா சுபா?” என்று ஆர்வமாக கேட்க,

“இதைவிட எங்க அம்மா நல்லா ஆப்பம் செய்வாங்க” என்றாள் சுபாஷிணி உதட்டைப் பிதுக்கியபடி.

“அப்போ நல்லா இல்லைன்னு சொல்லுறியா?”

“ஆமா” என்றாள் சுபாஷிணி, மனசாட்சியை அடகு வைத்தவளாக.

“பாத்தா அப்படி தெரியலையே!” சுபாஷிணியின் வார்த்தைக்கு மாறாக அவள் கைகள் வேகமாக வாய்க்கு ஆப்பத்தை எடுத்து கொடுத்து கொண்டிருந்ததை அவதானித்த சேனாதிபதி, லேசான கிண்டல் இழையோட மனைவியிடம் கேட்டான்.

“ஹைய்யோ… நாய் வேஷம் போட்டா குலைக்கணும்னு மறந்து போய்ட்டியே டி சுபா…” என்று மனதிற்குள் அலறிய சுபாஷிணி நொடியில் சுதாரித்துக் கொண்டவளாக, “காசு குடுத்து வாங்கினது வேஸ்டா போயிடக்கூடாதுல்ல த்தான். அதான்…” என்றாள் அக்கறை போல காட்டிக்கொண்டு.

மனைவியின் பதிலில் ‘அவ்வளவு பொறுப்பானவளா நீ?’ என்ற பார்வையே சேனாதிபதியிடம்.

“அப்போ டெய்லி சாப்பாட்டுக்கு என்ன பண்ணப்போறதா உத்தேசம்?” அடுத்து என்ன என்பதைத் தெரிந்து கொள்ள சேனாதிபதி கேட்க,

“நானே வீட்ல பண்ணிக்கிறேன் த்தான். எனக்கு சாப்பாடு ப்ரிப்பேர் செய்ய பாத்திரம், ப்ரொவிஷன்ஸ் எல்லாம் வாங்கி கொடுங்க, போதும்” என்றாள் சுபாஷிணி தெளிவாக.

“உன் ஒருத்திக்கு சமையல் செய்து, எதுக்கு கஷ்டப்படணும்னு நெனைச்சு தான், நான் இந்த ஐடியாவையேச் சொன்னேன். நீ என்னடான்னா இப்பிடி சொல்லுற” என்றவன், “எனக்கு ருசியா இருந்தது உனக்கு எப்படி ருசிக்காமல் போகும் சுபா?” என்று யோசனையோடு மனைவியின் முகத்தைப் பார்க்க, பொய் சொல்லியதால் அவன் கண்களைப் பார்க்க முடியாமல் தடுமாறிய சுபாஷிணி வேகமாக அங்கிருந்து நகர முயன்றாள்.

அவள் அவசரமும், தடுமாற்றமும் அவனுக்கு வித்தியாசமாகத் தோன்ற, “ஹேய்… நில்லு சுபா.” சட்டென்று சுபாஷிணியின் கையைப் பற்றி நிறுத்திய சேனாதிபதி, அவள் முகத்தை உற்றுபார்த்தபடியே, “சொல்லு… எதுக்கு சாப்பாடு நல்லாயில்லைன்னு பொய் சொல்லுற?” என்று சுற்றிவளைக்காமல் கேட்டான்.

தன் பொய்யை உடனே கண்டுபிடித்ததும் இல்லாமல், ஏதோ குற்றவாளியிடம் விசாரணை செய்தது போல கணவன் தன்னிடம் கேள்வியும் கேட்ட தோரணையில், “ம்ம்… அப்புறம் அதுயாரு அந்த மோனியா, இல்ல சோனியா, அந்த பொண்ணையும் என்னோட ஃப்ரெண்ட் லிஸ்ட்ல நீங்க சேத்துக்க சொல்லிடக் கூடாதுல்ல த்தான்… அதான் ஒரு முன்னெச்சரிக்கை…” என்று விட்டாள் தைரியமாக.

நெற்றியை சுருக்கி அவள் பேச்சை புரிந்து கொள்ள முயன்றவனுக்கு, மனைவி சொல்ல வந்தது புரிந்ததும், “எது பேசுறதா இருந்தாலும் ஒரு தடவைக்கு நாலு தடவை யோசிச்சு பேசணும் சுபா. அதுவும் அடுத்த பொண்ணுங்களைப் பத்தி பேசும் போது வார்த்தையை ரொம்பவே கவனமா யூஸ் பண்ணணும்” என்றான் கறார் குரலில்.

“எனக்கு மட்டும் இப்படி பேசணும்னு ஆசையில்ல அத்தான். என்னை நீங்க அறிமுகப்படுத்தும் போது அந்த பொண்ணோட ரீஆக்ஷனை வச்சு தான் சொன்னேன்.”

தன் வாதத்தில் இருந்து இறங்காமல் சுபாஷிணியும் நிற்க,

“இப்போ என்ன? உனக்கு வீட்டுல சமைக்கணும் அவ்வளவு தானே… நாளைக்கே தேவையானது எல்லாம் வாங்கித் தரேன், சமைச்சுக்கோ” என்று அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டான் சேனாதிபதி.

உண்மையில், அந்த மோனி ஒருவகையில் பயமுறுத்தினாள் என்றாலும், இப்படியே வெளியே வாங்கி சாப்பிட்டு கொண்டிருந்தால், தான் தங்கியிருந்த ஹாஸ்டலுக்கும் வீட்டுக்கும் பெரிதாக என்ன வித்தியாசம் இருக்கப் போகிறது என்ற எண்ணம் தான் சுபாஷிணியிடம்.

எனவே, சமையலில் முன்அனுபவம் இல்லாவிட்டாலும் கூட தானே வீட்டில் சமைத்துக் கொள்வது என்ற முடிவைத் திடமாக எடுத்துக் கொண்டாள் சுபாஷிணி.

ஆனால், மறுநாளே எல்லாம் வாங்கித் தந்துவிடுவதாக சொன்ன சேனாதிபதிக்கு, அன்று மட்டுமல்ல அதற்கு பிறகு வந்த நாட்களில் கூட அவன் சொல்லைக் காப்பாற்ற முடியாத அளவிற்கு பணிச்சூழல் அமைந்து போக,

“சென்னை உனக்கு ஒண்ணும் புதுசில்லையே சுபா. ஏதாவது ஷோரூம் க்கு போய் உனக்கு தேவையான திங்ஸ்ஸை நீயே வாங்கிக்கோயேன், ப்ளீஸ்…” என்று சொல்லி, தனது பேங்க் கார்டை மனைவியிடம் நீட்டினான் சேனாதிபதி.

‘ஒருதடவை தனியாகத் தன் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டால், காலம் முழுவதும் அதுவே தொடர்கதையாகிப் போக வாய்ப்புள்ளது’ என்ற எண்ணத்தில் கணவன் நீட்டிய கார்ட்டை வாங்காமல், “எனக்கு பேங்க் கார்ட் தான் முக்கியம்னா, அதை எங்க அப்பாகிட்டவே வாங்கிக்குவேனே அத்தான்” என்றாள் சுபாஷிணி அமைதியாக.

 ‘என் தேவை பணம் அல்ல, என்னோடு உன் வருகை மட்டுமே’ என்று மனைவியின் வார்த்தையில் இருந்த மறைமுகப் பொருளில், மனதிற்குள் மெல்லிய சாரல் அடிக்கத்தான் செய்தது சேனாதிபதிக்கு.

அப்போ, நாளைகழிச்சு உங்க ஆஃபீஸுக்கு பக்கத்துல இருக்கிற கடைக்கே போவோம். நீ ஈவ்னிங் நாலு மணிக்குப் போல பெர்மிஷன் போட்டுட்டு அங்க வந்துடு, நானும் வந்துடுவேன்” என்று திட்டம் தீட்டினான் சேனாதிபதி.

ஏற்கனவே இருமுறை அப்படி திட்டம் தீட்டியும் நிறைவேறாத காரணத்தால், சுபாஷிணி கணவனை நம்பாத பார்வை பார்க்க, “இந்த தடவை கண்டிப்பா வந்துடுவேன். நம்பு சுபா” என்றும் சொன்னான்.

அதைநம்பி சுபாஷிணியும் விஷயத்தை திவ்யாவிடம் சொல்ல, அவளோ, “எப்பிடி… ஏற்கனவே இரண்டு தடவை உன்னை கூட்டிட்டு போனாங்களே, அப்படியா?” என்று கிண்டலடித்தாள்.

“ம்ப்ச்… கிண்டல் பண்ணாத திவ்யா, அத்தான் கண்டிப்பா இன்னைக்கு வந்துடுவாங்க” என்று சொன்ன சுபாஷிணி, ஆனந்திடம் நான்கு மணிக்கு அலுவலகத்திலிருந்து செல்ல அனுமதியும் வாங்கிக் கொண்டாள்.

ஆனால், எப்போதும் போல இன்றும் அவளை ஃபோனில் அழைத்த சேனாதிபதி, “அங்க வர்றதுக்கு தான் கிளம்புனேன் சுபா. வழியில சின்ன வேலை வந்திடிச்சி, இன்னொரு நாள் நாம போகலாம். நீ வீட்டுக்கு போ” என்று சொல்ல, இத்தனை நாட்களாக சுபாஷிணி கட்டிக் காத்து வந்த பொறுமை மெதுவாக அவளிடமிருந்து நழுவ ஆரம்பித்தது.

 ஹாஸ்டலில் இந்த மாதம் முழுமைக்கும் பணம் கட்டியிருந்ததால், இந்த பத்து நாட்களாக காலை, மதிய உணவை அங்கேயே பார்த்துக் கொண்டாள் சுபாஷிணி.

இரவு மட்டும் நூடுல்ஸ், பாஸ்தா, அவல் என்று எளிதான உணவுகளை வீட்டிலேயே செய்து சாப்பிட்டுக் கொண்டாள்.

நேற்றோடு, மாதமும் முடிந்து, ஹாஸ்டல் கணக்கு வழக்குகளை முடித்தும் கொண்டாயிற்று. இனி, சமைக்க தெரியுமோ, தெரியாதோ, தனக்கான உணவை சுபாஷிணி தயார் செய்தே ஆகவேண்டும். அது தெரிந்தும் கணவன் இப்படி சொல்கிறான் என்றால் என்மீதான அக்கறை அவ்வளவு தானா என்ற எண்ணம் சுபாஷிணிக்கு வேகமாக எழும்ப,

“உங்ககூட போய் பர்சேஸ் பண்ணணுங்கற என்னோட ஆசை, ஒரு மாமாங்கம் ஆனாலும் நிறைவேறாதுன்னு இந்த பத்துநாள்லயே புரிய வச்சிட்டீங்க த்தான். எ பிக் தேங் ஃபார் தேட். எனிவே… ‌என்னோட வேலையை நானே பார்த்துக்கறேன். உங்க வேலையை டென்ஷன் இல்லாம நீங்க பாருங்க.” மெல்லிய குரலில் சொல்லியவள், இம்முறை அலைபேசியை தானே துண்டித்திருந்தாள்.

 ஆனால், தோழியிடம் கணவனை விட்டுக் கொடுக்காமல், “உன் ஃப்ரெண்ட்டை கூட்டிட்டு போய் பர்சேஸ் பண்ணு சுபா, நான் இதோ வந்துடுறேன்னு அத்தான் சொன்னாங்க” என்று சொல்லி, திவ்யாவையும் அழைத்துக் கொண்டு, கணவனும் தானுமாக வருவதாக திட்டமிட்டிருந்த விற்பனை நிலையத்திற்கு, இதோ வந்தே விட்டாள் சுபாஷிணி.

கடந்த ஒரு வருடமாக தான், சுபாஷிணி வேலை பார்த்துக் கொண்டிருக்கிறாள். வேலையின் ஆரம்பநிலையில் இருப்பதால் சம்பளம் கூட பெரிய அளவில் கிடையாது. என்றாலும் தன் பணத்தை வீட்டில் கேட்ப்பதில்லை என்பதால் ஓரளவுக்கு அவள் வங்கிக் கணக்கில் பணம் இருக்கத்தான் செய்தது.

 அதை வைத்து மிகவும் தேவையான பொருட்களை முதலில் வாங்கிக் கொள்வது என்று முடிவெடுத்து, தோழியின் உதவியோடு பொருட்களை தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தாள் சுபாஷிணி.

அந்நேரம், “ஏய்… நீ இன்னும் ஊருக்கு போகாம இங்க என்ன பண்ணுற?” என்று கீச்சுக்குரலில் யாரோ அதட்டிய சத்தம் அருகில் கேட்கவே, பார்த்து கொண்டிருந்த எலக்ட்ரிக் ரைஸ் குக்கரிலிருந்து கவனத்தை விலக்கி, பக்கத்தில் பார்த்தாள் சுபாஷிணி.

யாரையோ இல்லை, சுபாஷிணியைத் தான் அதட்டியபடி அவள் அருகில் நின்று கொண்டிருந்தாள் அனு.

ஒரு நாளில் கொஞ்ச நேரமே பார்த்திருந்தாலும், மனதில் அதிர்வலைகளை உண்டாக்கிய முகம் என்பதால் பளிச்சென்று அனுவை அடையாளம் தெரிந்தது சுபாஷிணிக்கு‌. என்றாலும், அவள் கேள்வியும், கேட்ட தோரணையும் எரிச்சலை வகைதொகையில்லாமல் உற்பத்தி செய்ய, இழுத்து வைத்து சப்பு சப்பென்று அறையத் துடித்த கைகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு, அமைதியாக விட்ட வேலையைப் பார்க்கத் தொடங்கினாள் சுபாஷிணி.