அத்தியாயம் 02

பெரும் பணக்காரர்கள் மட்டுமே வசிக்கும் சென்னை போர்ட் க்ளப் பகுதியில் உள்ள முத்தையா நகர் காலைநேர சுறுசுறுப்பில் பரபரத்துக் கிடந்தது.

சீராக பராமரிக்கப்பட்டு நீண்டிருந்த தெருவில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த மனிதர்களின் தோற்றமே அங்கு வாழ்பவர்களின் வாழ்க்கைத் தரத்தைச் சொன்னது.

பெரிய பெரிய காம்பவுண்ட் சுவர்களுக்கு பின்னால், பிரம்மாண்டமாக எழுந்து நிற்கும் ஒவ்வொரு பங்களாக்களும், அதன் உரிமையாளர்களின் ரசனையையும் செல்வச் செழிப்பையும் பறைசாற்றியது.

 பெரும்பாலும் எல்லா பங்களாக்களின் காம்பவுண்ட் சுவர்களையும் தாண்டி பச்சைபசேலென்ற செடிகளின் தலைகள் தெரிந்தன. சிலவற்றின் தலையில் பூக்கள் கூட சிரித்தன.

அங்கிருந்த அத்தனை பங்களாக்களின் தோற்றத்திற்கு சற்றும் குறைவில்லாமல் இரண்டடுக்கு மாளிகையாக பிரம்மாண்டமாக நிமிர்ந்து நின்றது ‘கற்பகம் விலாஸ்’.

சென்னையில் டெக்ஸ்டைல் தொழிலுக்கென்றே பெயர்பெற்ற பகுதியில் இருக்கும் நான்கடுக்கு ஜவுளிமாளிகை ‘கற்பகம் சில்க்ஸ்’ உரிமையாளர் இராஜசேகரனின் வீடு தான் அது.

வீட்டின் பிரம்மாண்டத்திற்கு சற்றும் பொருந்தாமல் மிக மிக எளிமையான தோற்றத்தில் வீட்டு ஹாலுக்கும் தன்னறைக்கும் பரபரப்பாக நடமாடிக் கொண்டிருந்தாள் சுபத்ரா. அந்த வீட்டின் பெண் வாரிசு.

தன் நீண்ட கருங்குழலைத் தூக்கி கொண்டையாகப் போட்டு, காலர் நெக் ப்ளவுஸின் கை முழங்கையைத் தொட, எளிமையான காட்டன் சாரி அணிந்து இருபத்தெட்டே வயதில் ஒரு தபஸ்வினி தோற்றத்தை கொண்டுவர அவள் முயன்றிருந்தாலும், பார்ப்பவர்களின் கண்களுக்கென்னவோ பாகுபலியின் தேவசேனையாகத் தான் தெரிந்தது பெண்.

“சுபா…”

அன்னையின் அழைப்பு அவள் பரபரப்புக்கு தடைபோட, நின்று திரும்பிப் பார்த்தவளிடம், “இன்னைக்கு கண்டிப்பா நீ வேலைக்கு போகணுமா சுபா?” என்று தாய் கேட்க,

“131…” என்றாள் அந்த கணித ஆசிரியை.

ஆமாம்… கணிதத்தில் எம் எஸ்ஸி, எம் எட் முடித்து அடையாறில் இருக்கும் ஒரு அரசாங்க மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியையாக பணியில் இருக்கிறாள் சுபத்ரா.

அதில் தாய்க்கு மனம்கொள்ளாப் பூரிப்பு தான்.

 ஆனால் தகப்பன் தான், “லட்சக்கணக்கில் அரசாங்கத்துக்கு நான் வரிகட்டுறேன். ஆனா ஆயிரக்கணக்குல அவங்ககிட்ட சம்பளத்துக்கு எம்பொண்ணு கைநீட்டி நிக்குறது எனக்கு பிடிக்கல” என்று அடிக்கடி மனைவியிடம் முணுமுணுப்பதுண்டு.

ம்ம்… முணுமுணுப்பு எல்லாம் மனைவியிடம் மட்டுமே.

“இதென்ன சுபா? நான் கேள்விகேட்டா பதில் சொல்லாமல் நம்பர் சொல்லுற?”

“ம்மா… இன்னைக்கு காலைலயிருந்து இதோ இப்போ வரைக்கும் 131 தடவை இதே கேள்வியை நீங்க கேட்டு, நானும் ஆமான்னு பதிலும் சொல்லியாச்சு.” சலிப்பாக சொல்லிய மகளிடம்,

“132 வது தடவையும் கேக்குறேன், போகணுமா?”

 வேதாளத்தை விடாது துரத்தும் விக்ரமாதித்தனைப் போல, தான் விரும்பிய பதிலை மகளிடமிருந்து பெற்றுவிடுவதற்காக விடாது மகளை துரத்தினார் அந்த அன்னை.

“மேத்ஸ் பரீட்சைக்கு ஸ்டூடண்ட் வேணும்னா கட் அடிக்கலாம், அதே டீச்சர் கட் அடிச்சா நல்லாருக்காது ம்மா!”

மகளின் பதிலில், அவள் முடிவு மாறாது என்பது புரிந்து விட, “அப்போ ஈவ்னிங் எப்பவும் போல வந்துடுவல்ல?” அடுத்தகட்ட கேள்வியில் இறங்கினார் அந்த தாய்.

“ஏன்? அதுல என்ன சந்தேகம்?” அழுத்தமாக அன்னையைப் பார்த்து சுபத்ரா கேள்விக்கணையை வீசினாள்.

“இல்ல சாயங்காலம் ஐந்து மணிக்கு மேல பாப்பாவுக்கு ஃபங்ஷன் இருக்கு. அதான்… அதுக்கு முன்னாடி வீட்டுக்கு வந்துடுவியான்னு தெரிஞ்சிக்கத்தான்.”

லேசான தடுமாற்றத்தோடு சொன்ன அன்னையை பார்த்தபடியே, “ஏன்? ஈவ்னிங் வரப்போற உங்க அண்ணன் குடும்பத்தை பார்த்து பயந்துபோய் நான் வீட்டுக்கே திரும்பி வரமாட்டேன்னு நினைக்குறீங்களா ம்மா?”

மகளின் கேள்வியில் தன்னிடம் ஒரு சின்ன தடுமாற்றம் வந்த போதும் அதை அழகாக மறைத்து, “நீ பயப்பட்டு ஒளிஞ்சிக்குற அளவுக்கு எங்கண்ணன் குடும்பம் பேயா? இல்லை பூதமா? அவங்களும் நம்மளைப்போல மனுஷங்க தான். அதுலயும் எங்கண்ணன் எவ்ளோ நல்லவங்க தெரியுமா?”

 கண்களில் அண்ணன் மீதான பாசம் மின்னலடிக்கச் சொன்னார் சௌந்தர்யா. ஆம்… சண்முகத்தின் தங்கை சௌந்தர்யா…

ஆனால், இன்றோ ‘கற்பகம் சில்க்ஸ்’ ஓனர் இராஜசேகரன் மனைவி சௌந்தர்யா என்று சொன்னால் தான் அனைவருக்கும் தெரியும்.

ஹ்ம்ம்… மகளாய், சகோதரியாய், மனைவியாய், தாயாய்… காலம் தான் பெண்களின் வாழ்க்கையில் அவர்களுக்கு எத்தனை அடையாளங்களைக் கொடுக்கிறது?

தகுதியில் மலையும், மடுவுமாக இருந்த இராஜசேகரனும், சௌந்தர்யாவும் இணைய இருவருக்கிடையே பாலமாக இருந்தது காதல்.

ஆமாம்… தன்னுடைய கல்லூரித் தோழியின் கல்யாணத்திற்காக போன இடத்தில் மாப்பிள்ளைத் தோழனாக வந்த கோடீஸ்வரர் இராஜசேகரனின் மனதை சௌந்தர்யமே வடிவாக நின்ற சௌந்தர்யா கொள்ளை கொள்ள,

விரட்டி விரட்டி காதல் செய்து, தன் காதல் வலையில் அந்த பெண்மானை விழவைத்தார் இராஜசேகரன்.

ஆனால், வானமும் பூமியும் எளிதாக கைகோர்த்து விடமுடியுமா என்ன?

தன் தங்கையின் காதல் விஷயம் கேள்விப்பட்டு சண்முகம் பயந்து போய் நின்றாரானால், ராஜசேகரனது அம்மா கற்பகம் அதிர்ந்து போய் நின்றார்.

கணவர் திருவேங்கடத்தை சிறுவயதிலேயே பறிகொடுத்து, தன் வாழ்வில் எல்லாம் மகனே என்றிருந்த பெண்மணிக்கு, தன் ஒற்றை மகனின் திருமணம் குறித்த கனவுகள் ஏராளம்.

அதில் ஒன்றுதான், தன்மகனுக்கு பெண் எடுக்கும் வீட்டில் பெண்ணோடு பிறந்த ஆண்கள் இரண்டு, மூன்று பேராவது இருக்க வேண்டும் என்பது.

 ‘மச்சான் துணையிருந்தால் மலையேறிப் பிழைக்கலாம்’ என்ற வார்த்தையை அவர் மலைபோல நம்பியதே அதற்கு காரணம்.

தன் ஒற்றை மகனுக்கு துணையாக அவனின் மைத்துனர்கள் இருப்பார்கள் என்ற நம்பிக்கையிலேயே இந்த ஆசையை மனதுக்குள் வளர்த்திருந்தார் கற்பகம்.

 மகனின் திருமண விஷயத்தில் தன் முதல் கனவே முற்றுப்பெறாமல் போனதோடு, சௌந்தர்யா தங்கள் தகுதிக்கு சமமான வீட்டுப் பெண் இல்லாது போகவே, முழுமூச்சாக எதிர்த்தார் மகனின் காதலை.

ஆனால் தன் காதலில் இராஜசேகரன் உறுதியாக நிற்கவே, வேறுவழியில்லாமல் கற்பகம் தான் மகனுக்காக தன் பிடிவாதத்தை விட்டு கீழே இறங்கி வந்து திருமணத்தை நடத்தி வைக்க வேண்டியிருந்தது.

இதுதான் ஏழை சண்முகத்தின் தங்கை சௌந்தர்யா, கோடீஸ்வரர் திருவேங்கடம் வீட்டு மருமகளானக் கதை.

இந்த தம்பதியருக்கு நான்கு குழந்தைகள். எல்லோருக்கும் மூத்தது ரஞ்சித் திருவேங்கடம். அடுத்தது சுபத்ரா, அவளுக்கடுத்து மதுரா, கடைக்குட்டி மயூரா.

கடைக்குட்டி மயூராவிற்கு தான் இன்று பூப்புனித நன்னீராட்டு விழா.

தாயின் முகபாவனையிலிருந்தே அவரது நினைவுகள் இங்கே இல்லை என்பதை புரிந்து கொண்ட சுபத்ரா, அன்னையின் கன்னத்தை லேசாக தட்டி,

“யாரைப் பார்த்தும் எனக்கு பயம் கிடையாது. ஈவ்னிங் எப்பவும் வர்ற நேரத்துக்கு கரெக்டா வந்து நிப்பேன். அநாவசியமா கவலைப்படாதீங்க ம்மா.”

என்ன மனநிலையில் இதைச் சொல்கிறாளென்றே புரிந்து கொள்ள முடியாதக் குரலில் சொல்லிவிட்டு கிளம்பியவளின் முன், அவளுக்கு அடுத்த தங்கை மதுரா வந்து நின்றாள்.

“வா மது! இப்போ மார்னிங் சிக்னெஸ் எல்லாம் எப்படி இருக்கு?” வெகு இயல்பாகக் கேட்டாள் சுபத்ரா.

“ஹ்ம்ம்… பரவாலக்கா” என்ற மது, “இன்னைக்கும் வேலைக்கு போறீயாக்கா?” என்று அவள் பங்குக்கு கேட்டாள்.

மறுபடியும் முதலிலிருந்தா என்பதைப்போல தாயைப் பார்த்த சுபத்ரா, “எல்லாம் அம்மாட்ட சொல்லியிருக்கிறேன் மது. நீ அவங்ககிட்டயே கேட்டுக்கோ, எனக்கு டைம் ஆகிடிச்சி, டேக் கேர் டா” என்றபடியே கிளம்பிச் சென்றே விட்டாள்.

“என்னம்மா! இத்தனை வருஷம் கழிச்சும் கொஞ்சம் கூட மாறாம அக்கா அப்டியே இருக்குறா?” அங்கலாய்த்தபடியே கேட்ட மதுரா, சுபத்ராவை விட இரண்டு வயது சிறியவள்.

ஏழு வருடங்களுக்கு முன், தன்வாழ்வில் நடந்த குளறுபடிக்குப் பிறகு திருமணம் என்ற பேச்சுக்கே இடம் கொடாமல் எஃகின் உறுதியோடு சுபத்திரா நின்றுவிட, வேறுவழியில்லாமல் இரண்டாவது மகளின் திருமணத்தை நடத்தியிருந்தார் ராஜசேகரன்.

இரண்டு வருடங்களுக்கு முன், இதே சிங்காரச் சென்னையில் தன்னைப் போலவே ஒரு பணக்கார வீட்டின் வாரிசோடு மதுராவின் திருமணம் முடிந்திருக்க, இப்போது தான் தாய்மையடைந்திருக்கிறது அந்த பெண்மை.

காலைநேரத்தில் கர்பகால தொந்தரவுகள் அதிகம் இருந்ததால், பெண் தாயின் மடியைத்தேட, இங்கு கொண்டு வந்து விட்டுச் சென்றிருக்கிறான் அவளின் கணவன் ரமேஷ்.

ஒரு தாயாக தன் பெரிய மகளைக் குறித்த கவலை சௌந்தர்யாவை விழுங்கியது.

‘என் விருப்பப்படி நடக்காவிட்டாலும், என் மகள் கல்யாணம் முடிஞ்சு குடும்பமா இருப்பான்னு நினைச்சனே, ஆனா அதுவும் நடக்கலையே. நான் யாருக்கு என்ன பாவம் பண்ணுனேன்? என் பொண்ணோட வாழ்க்கை ஏன் இப்படி ஆகிப்போச்சு?’

 புற்றீசலாய் மனதிலிருந்து கேள்விகள் ஒன்றன்பின் ஒன்றாக வரிசைகட்டிக் கிளம்ப, போகும் தன் பெண்ணையே பார்த்திருந்த சௌந்தர்யாவை நடப்புக்கு கொண்டு வந்தது மதுராவின் பேச்சு.

“ஹாங்… விதி மது… எல்லாம் விதி.” சோர்ந்து போனக்குரலில் சொல்லிய அன்னையை அவர் கைகளைப் பற்றி அங்கிருந்த இருக்கையில் அமரவைத்து, “கவலப்படாதீங்கம்மா அக்கா வாழ்க்கையிலும் சீக்கிரமே நல்லது நடக்கும்” என்று இளையவள் சொல்ல,

“நடக்குமா மது… அப்படி ஒன்னு நடந்தா நான் பழனிக்கு பால்குடமே எடுப்பேன்டி.” எப்படியாவது தன் மகளுக்கு ஒரு நல்லது நடந்துவிடாதா என்ற எண்ணத்தில் சொன்ன சௌந்தர்யாவின் வார்த்தைகள் உணர்ச்சி மிகுதியில் தத்தளித்தது.

 “கண்டிப்பா நடக்கும் ம்மா. நாங்களும் அந்த சாக்குல உங்ககூட பழனிக்கு ஒரு ட்ரிப் போட்ருவோம்ல.” அழகாகச் சிரித்து, அன்னையின் கைகளைப் பற்றியவள், “ம்மா… நான் ஒன்னு சொல்லுவேன் நீங்க தப்பா எடுத்துக்கக் கூடாது” என்ற முஸ்தீப்போடு ஆரம்பித்து,

“நேற்று நீங்களேப் போய் மாமாவுக்கு தகவல் சொல்லிட்டு வந்துருக்கணும். ட்ரைவர் அங்கிளை அனுப்புனது தப்பு ம்மா” என்றாள் தெளிவாக.

மகளின் குற்றச்சாட்டில் சட்டென்று கண்கலங்கிய சௌந்தர்யா, “ம்ஹும்… எனக்கு மட்டும் அந்த ஆசை இல்லைன்னா நினைக்குற மது?”

“ஆனா இந்த அளவுக்கு உங்கப்பாட்ட பெர்மிஷன் வாங்குறதுக்கே எனக்கு உம்பாடு, எம்பாடு ஆகிப்போச்சு, தெரியுமா உனக்கு?” குரல் தழுதழுத்தது அந்த பேரிளம்பெண்ணிற்கு.

ம்ம்… கல்யாணம் வரை தங்கள் இருவரின் குடும்பத்திற்கிடையே இருந்த அந்தஸ்துபேதம் ஒரு பெரிய விஷயமாகத் தெரியாத இராஜசேகரனுக்கு, திருமணத்திற்கு பிறகு அது கண்ணில் விழுந்த துரும்பாக உறுத்த ஆரம்பித்தது.

விளைவு, தன் மனைவியின் பிறந்த வீட்டுக்குச் செல்வதையே கௌரவக்குறைச்சலாக நினைக்க ஆரம்பித்தார் மனிதர். கூடவே மனைவிக்கும் அங்கே போக அனுமதி மறுக்கப்பட்டது.

முதல் பிரசவத்திற்கு கூட அம்மாவும் மகனும் சேர்ந்து சௌந்தர்யாவை பிறந்த வீட்டுக்கு அனுப்பவில்லை. தாயில்லாத சௌந்தர்யாவின் நிலைமை அதற்கு ஏதுவாக இருந்தது அவர்களுக்கு.

எத்தனையோ அழுகைகள், மன்றாடல்கள், கெஞ்சல்களுக்குப் பிறகு வருடத்தில் ஒரு தடவையோ, இல்லை இரண்டு தடவையோ மட்டுமே சௌந்தர்யாவிற்கு பிறந்த வீட்டுக்கு செல்ல அனுமதி கிடைக்கும்.

அதுவும், இப்போது ஒரு ஏழு வருடத்திற்கு முன்னால் நடந்த களேபரத்தில் நின்றுபோயிருந்தது.

தாய் மாமன் சீரின்றியே மதுராவின் திருமணம் நடந்து முடிந்திருந்தது போலவே, இப்போது கடைக்குட்டி மயூராவின் சடங்கும் நடந்துவிடுமோ என்ற பயத்தில் மறுபடியும் நேற்று தன் அழுகை ஆயுதத்தை கையிலெடுத்திருந்தார் சௌந்தர்யா.

 மனைவியின் அழுகை பொறுக்காமல் தான், “நீ போகக்கூடாது. வேணும்னா ட்ரைவரைப் போய் சொல்லச்சொல்லு. தங்கச்சி வேணும்னா உன் அண்ணன் வரட்டும்” என்று பெரிய்ய்ய மனிதராக இறங்கி வந்திருந்தார் இராஜசேகரன்.

தன்னிடமிருந்து தகவல் என்ற ஒன்றை யார் கொண்டு சென்றாலும், தன் அண்ணன் தனக்காக வந்து நிற்பார் என்பதில் உறுதியாக இருந்ததால், நெடுநாட்களாக தங்கள் வீட்டில் ட்ரைவராக இருக்கும் நாராயணனை அனுப்பியிருந்தார் சௌந்தர்யா.

அன்னையின் தழுதழுத்தக் குரல் மகளை ஏதோ செய்ய, “நீங்க முதல்லயே உங்க ரைட்ஸ்ஸுக்காக ஃபைட் பண்ணியிருக்கணும்மா. இப்படி குட்டக் குட்ட குனிஞ்சு தலையை குடுத்துட்டு இருந்துருக்கக் கூடாது.” இளரத்தம் ரொம்பவே எளிதாக வழிசொல்லித் தந்தது.

 தன் அன்னையைப் போன்ற பெண்கள் நதியோடு செல்லும் ஓடங்கள் என்று மதுராவுக்கு ஏனோ தெரியவில்லை.

மகளின் பேச்சுக்கு ஒரு சின்னச்சிரிப்பை மட்டுமே பதிலாகத் தந்த சௌந்தர்யாவின் இதயம், அன்றைய மாலைப்பொழுதுக்காக அந்தநொடிப் பொழுதிலிருந்தே காத்திருக்கத் தொடங்கியது.

*****************

“இன்னுமா புறப்படுறீங்க? சீக்கிரம் வாங்கம்மா எல்லாரும்…”

ஆளுக்கு முதலாக புறப்பட்டு தயாராக இருந்த சண்முகம் கடந்த அரைமணி நேரமாக இதே டயலாக்கை வேறு வேறு மாடுலேஷனில் சொல்லிச் சொல்லி அலுத்துப் போய் உட்கார்ந்திருந்தார்.

ஆனால் புறப்பட்டுத் தான் யாரும் அறையை விட்டு வெளியே வந்ததாகத் தெரியவில்லை.

“தனம்… என்னம்மா பண்ணுற? சீக்கிரமா வந்து எல்லா சீர் தட்டையும் ரெடி பண்ணுமா. சாயங்காலம் அஞ்சு மணிக்கு நல்ல நேரம் இருக்கு, அதுக்குள்ள நாம அங்க இருக்கணும்.”

இனி பொதுவாகக் கூப்பிட்டு பலனில்லை என்று நினைத்தாரோ என்னவோ ஒண்டிவீரனாய் மனைவியை அழைத்து விட்டார் சண்முகம்.

‘ம்ஹூம்… கார் ட்ரைவர் வந்து தகவல் சொன்னதுக்கே இத்தனை ஆர்ப்பாட்டம். இதுல தங்கச்சி மட்டும் நேர்ல வந்து சொல்லியிருந்தாளோ? மனுஷனை கையில பிடிச்சிருக்க முடியாது.’

 நினைக்க மட்டும் தான் முடிந்தது தனத்தால், முன்போல பளிச்சென்று வெளியே சொல்லிவிட முடியவில்லை.

காரணம் மாமியார் வாயிலிருந்து என்ன வார்த்தை வந்து விழும், அதையே தானும் ஏதாவது சூழ்நிலையில் திருப்பி சொல்லலாமென்று கண்கொத்தி பாம்பாக அவரையே வட்டமிடும் ரேவதி தான்.

முதலில் தனத்துக்கு கணவரின் தங்கை வீட்டுக்குச் செல்வதற்கு விருப்பமே இல்லை தான். ஆனால் இதையே முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு தனது மருமகள் தன்னுடைய மகளுக்கு செய்துவிட்டால்?

ஹஹ… இதைத்தான் ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும், வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும், என்று சொல்லுவார்கள் போலும்.

வேறுவழியில்லாமல் கைகள் கட்டப்பட்ட நிலையில் தான் புறப்பட்டுக் கொண்டிருந்தார் தனம். இதில் கணவனின் பரபரப்புக்கு ஈடுகொடுத்து விடுவாரா என்ன?

“நான் ரெடிப்பா…” முதலில் அவளுடைய அறையை விட்டு வெளியே வந்தாள் ப்ரபா. கைகளில் இன்று காலை சத்யாவோடு சென்று வாங்கியிருந்த பொருட்கள் நிறைந்த பைகள்.

எல்லாவற்றையும் ஹாலில் வைத்துவிட்டு, “இப்பவே எடுத்து அடுக்க வேண்டாம் ப்பா, தாம்பாளம் எடுத்து வச்சிருக்கிறேன். அங்க போய் எல்லாம் அடுக்கிக்கலாம். சரியா?”

சிறுபிள்ளைக்கு சொன்னது போலத் தந்தைக்குச் சொன்ன பெண்ணிற்கு, தந்தையின் மனநிலை புரியவே செய்தது.

“ம்ம்…” என்று தலையாட்டியவர், ஏதோ நினைத்துக் கொண்டது போல, “இந்த வாடாமல்லிக்கலர் பட்டு சின்னதுக்கு நல்லாயிருக்கும்லடா?” மகளிடம் ஆவலாகக் கேட்க,

“ம்ம்… மய்யூ, அத்தையைப் போல ரொம்பக் கலர்ப்பா. அதனால சூப்பரா இருக்கும்.”

மகளின் பதிலில் தகப்பன் குளிர்ந்து போனாரென்றால் தாயோ எரிதழலாய் மாறி நின்றார்.

“பூ, மாலை எல்லாம் போதும்லடா…” தங்கை மகளுக்கு செய்யும் செய்முறைகளில் எதுவும் குறை வந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில் சண்முகம் மறுபடியும் மகளிடம் கேட்க,

“உங்க மருமகளுக்கு தழையத் தழைய வச்சிவிடுற அளவுக்கு தாராளமாப் பூ போதும் ப்பா…”

“அவளுக்கு போய் வைக்குறது இருக்கட்டும் டி… முதல்ல நீ வயசு புள்ள மாதிரி தழைய தழைய வச்சுக்கோ” என்ற தனம், சரசரவென்று கொண்டு செல்வதற்காக பையில் வாங்கி வைத்திருந்த பூவிலிருந்து ஒருபந்து பூவை எடுத்து, இடுப்புவரை வளர்ந்திருந்த மகளின் நீளக்கூந்தலுக்கு சமமாக, இருமடிப்பாக பூவை வைத்துவிட்டார்.

புறப்பட்டு முடித்து பேத்தியோடு அறையை விட்டு வெளியே வந்த மருமகளிடம் மீதிப் பூவை கொடுத்து, “இந்தா ரேவதி! நீயும் தலைநிறைய வச்சிட்டு மீதியை ஃபிரிட்ஜ்ல வை. உங்க அம்மாவும், தவம் அக்காவும் வருவாங்க, அவங்களுக்கும் குடுக்கலாம்” என்று சொன்னார்.

இதுவரைக்கும் தன் மாமனாரின் உடன்பிறந்த பெண்ணின் புகுந்தவீட்டைப் பற்றி கணவன் வாய்மொழியாக மட்டுமே கேட்டிருந்த ரேவதி, இன்று அங்கே போகப்போகிறோம் என்று தெரிந்ததும் உற்சாகமாகவே புறப்பட்டு வெளியே வந்திருந்தாள்.

வந்தவளுக்கு மாமியாரின் இந்த புதிய முகம் ஒருவித சுவாரஸ்யத்தைக் கொடுக்க அவர் சொல்லியதற்கு தலையை ஆட்டியபடியே கையில் பூவை வாங்கிக் கொண்டு சற்றே நகர்ந்தாள்.

ஆனால் எங்கு நின்றாலும் கண்ணையும் காதையும் தன் மாமியார் மீதே வைத்திருந்தாள் அந்த மருமகள்.

ப்ரபாவுக்கோ தாயின் இந்த செயல் ஏற்புடையதாக இல்லாமல் போகவே, “ம்மா… சத்யா ண்ணா வாங்கித் தந்து, ஏற்கனவே நாங்க தாராளமா தலையில பூ வச்சிருக்கோம்மா… இப்படி ஃபங்ஷனுக்கு கொண்டு போறதுலயிருந்து எடுத்தா நல்லாவா இருக்கு?” ஆற்றாமை நிறைந்த குரலில் தாயிடம் கேட்டுவிட,

“அடிப்போடி இவளே… ஏதோ இங்க இருந்து போற பட்டுக்கும், பூவுக்கும், மாலைக்கும், யாரோ அங்க ஏங்கிக் கிடந்த மாதிரி தான். அங்க எல்லாம் பக்காவா ரெடி பண்ணி வச்சிட்டு, போனாபோகுதுன்னு உங்க அப்பாவை வேலைக்காரனை விட்டு கூப்பிட்டிருக்காங்க… உங்கப்பா தான் வெக்கங்கெட்டு போய் கிளம்பி நிக்கார்னா, நாமளும் போக்கத்து போய் அவர்கூட கிளம்பி நிக்குறோம்.”

அணிந்திருந்த முகமூடியை மறந்துவிட்டு தன் உண்மை முகத்தை காட்டினார் தனலட்சுமி.

மனைவியின் வார்த்தைகள் இதயத்தை வசமாக பதம் பார்த்தாலும், இன்றா, நேற்றா இந்த வார்த்தைகளைக் கேட்கிறார் சண்முகம்? அதனால் ஐம்புலன்களில் ஒன்று தனக்கில்லை என்பது போல நின்று கொண்டார் மனிதர்.

கூடவே, தான் உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை விடும் நேரம் இதுவல்ல என்றும் அந்த மனிதருக்கு நன்றாகவே தெரிந்திருந்தது.

ஒருவேளை மனைவியின் வார்த்தைகளுக்கு பதில் வார்த்தை தான் கூற, வார்த்தைகள் அப்படியே தடித்து ஏடாகூடமாகி தங்கை வீட்டிற்கு போக முடியாமல் போய்விட்டால்?

எனவே வீரியத்தை விட காரியமேப் பெரிது என்றெண்ணி நின்றிருந்தார் அந்த மனிதர்.

‘தன் தங்கையை கண்ணுக்குள் வைத்து தன் மனைவி பார்த்துக் கொள்வாள் என்ற நம்பிக்கையில் தானே, தான் இருபத்தி ஐந்து வயதிலேயே குடும்பஸ்தன் ஆகிப்போனது’ என்ற எண்ணம் அந்த மனிதருக்கு வராமலில்லை.

ஆனால் நடந்ததெல்லாம் அதற்கு நேர்மாறாகத் தானே இருந்தது.

“எல்லாரும் கெளம்பிட்டீங்களா? ஒரு நிமிஷம் வெயிட் பண்ணுங்க, இதோ நாங்களும் கிளம்பி வரோம்.”

பெரிய மகனின் சத்தத்தில் சட்டென்று தன் நினைவுகளிலிருந்து கலைந்தவரின் மனதினுள், வீட்டுக்குள் வந்து கொண்டிருந்த தன் இரண்டு மகன்களையும் பார்த்து உற்சாகம் ஊற்றாக பொங்கி வழிந்தது.

இருக்காதா பின்னே… நேற்றிரவு கடையிலிருந்து திரும்பி வந்திருந்த மகன்கள், சாப்பிட்டு முடித்து ஹாலில் அமர்ந்து அன்றைய நடப்புகளை தன்னிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போதுதான், சண்முகம் தன் தங்கை வீட்டிலிருந்து வந்திருந்த தகவலைப் பிள்ளைகளிடம் கூறினார்.

“ஏன்? போனதடவை கல்யாணத்தையே நீங்க இல்லாமல் முடிச்சவங்களுக்கு, இந்த சடங்கை முடிக்க முடியாதாமா?” சட்டென்று கேட்டிருந்தான் சத்யா.

அப்படி கேட்டவன், இன்று காலையில் தங்கையோடு வெளியே சென்று சீர் செய்வதற்கான அத்தனை பொருட்களையும் வாங்கித் தந்ததோடு நில்லாமல், இதோ தம்பியையும் அழைத்துக்கொண்டு வந்து விட்டானே!

மக்களின் வருகையில் சண்முகம் வாயெல்லாம் பல்லாகி நின்றாரென்றால், தனத்தின் முகமோ நிமிடத்தில் மாறிவிட, “நீங்களும் அங்க வர்றீங்களா ப்பா? என்று கேட்டார்.

கேள்வி என்னவோ இரண்டு மகன்களுக்கும் பொதுவாயிருந்தாலும், “நீயும் வர்றியா என்ன?” என்ற பார்வையையே வைத்திருந்தார் மூத்தவனிடம்.

இது எதுவும் புரியாமல், “ஏம்மா வரவேண்டாமா?” என்றான் தலைமகன்.

“இல்ல… இதுக்கு எதுக்கு… நீங்கன்னு நினைச்சேன்?” மென்று தின்றார் வார்த்தைகளை.

“போறதுன்னு முடிவாகிடிச்சி, அப்புறம் ஏன் அப்பாவை மட்டும் யாருமே இல்லாத மாதிரி தனியா அனுப்பனும்னு தோணிச்சு. அதான் கிளம்பி வந்துட்டோம்” என்றவன், “நான் சொல்லுறது சரிதானம்மா…” என்றும் கேட்க,

“ஹ்ம்ம்…” என்று முணங்கினார் தனம் சுரத்தேயில்லாமல்.

சற்றுநேரத்துக்கெல்லாம், வெள்ளை வேஷ்டி, சட்டையில் மாப்பிள்ளை தோரணையில், கொஞ்சம் ஷ்ரத்தை எடுத்து புறப்பட்டு வந்தாற்போல் வந்து நின்ற மூத்த மகனை, விழிகள் தெறித்து விடுவது போல பார்த்துக்கொண்டு நின்றார் தனலட்சுமி…