அத்தியாயம் 04

“அவ்வளவு பெரிய செயினை அத்தான் அந்த பிள்ளைக்கு போடச்சொல்லி மாமா கிட்ட குடுத்ததும், நான் அசந்தே போயிட்டேன் த்த… எப்படியும் ஒரு அஞ்சாறு பவுன் இருக்காது?”

 “உங்க சின்ன மகன்கிட்ட கேட்டா அண்ணன் நகை வாங்குனது எனக்கே தெரியாதுன்னு ஆதங்கப்படுறாங்க.”

 சடங்கு ஃபங்ஷனில் திடீரென்று சத்யா செயினை எடுத்து தகப்பனின் கையில் கொடுத்து போடச்சொன்னது, மாமியாரை மட்டுமல்லாது மருமகளையும் அதிக அதிர்ச்சிக்குள்ளாக்கி இருந்தது.

வீட்டுக்கு வந்ததும் கணவனிடம் பேச்சுக்கொடுத்து “எத்தனை பவுன்? என்ன? ஏது?” என்று தகவல்களை கேட்டறிந்து கொள்ள ரேவதி முயற்சி செய்தாள்.

அவனோ, “அண்ணன் செயின் வாங்கிய விஷயமே எனக்குத் தெரியாது” என்று சொன்னான்.

அவ்வளவு தான்… அவனை பிடித்து உலுக்கி விட்டாள் ரேவதி.

“அதெப்டிங்க பொதுப்பணத்துலயிருந்து வாங்கும் போது, உங்ககிட்ட கலந்துக்காம அவர் மட்டுமே முடிவு செய்து வாங்கலாம்?”

“அதுவுமில்லாம, இப்போ உங்க அத்த மகளுக்கு இவ்ளோ பெரிசா தங்கத்துல செயின் போடலைன்னு யார் அழுதது?” என்று சண்டைக்கு தயாராக முயன்றாள்.

 “அண்ணன் எது செய்தாலும் அதுக்கு சரியான காரணம் இருக்கும் ரேவதி. தேவையில்லாம இந்த விஷயத்தில் நீ மூக்கை நுழைக்காத!” கண்டிப்பான குரலில் அழுத்தம் திருத்தமாக முரளி சொல்லிவிட,

அதற்கு மேல் அவனிடம் தன் செப்படி வித்தைகள் எதுவும் செல்லாது என்று தெரிந்திருந்தபடியால், அமைதியாக இருந்துவிட்டு, மறுநாள் காலையில் மாமியாரிடம் ஆரம்பித்திருந்தாள் ரேவதி.

ஆனால் அவரோ அவளின் பேச்சுக்கு பதிலேதும் கூறாமல் மௌனமாக இருந்து, “நான் உன் கணவனின் அம்மா” என்பதை நிரூபித்தார்.

‘எல்லாம் ஒரே குட்டையில் ஊறுன மட்டைங்க தான். எதாவது ஒழுங்கா பதில் சொல்லுதா பாரேன்!’ மனதிற்குள் கணவனோடு அவனது தாயையும் தாளித்துக் கொண்ட ரேவதி,

“ஆனாலும் அத்தான் உங்ககிட்ட கூட சொல்லாமல் தன்னிச்சையா இப்படி முடிவெடுப்பாங்கன்னு என்னால நம்பக் கூட முடியலத்த” என்று அடுத்த ரீலை ஓட்டினாள்.

தன்னிடம் கலந்து கொள்ளாமல் நாத்தனார் மகளுக்காக தங்கத்தில் நகை வாங்கி வந்ததுமில்லாமல், அதை வீட்டில் வைத்து காட்டாமல், அங்கே போய் தான் அறிய நேர்ந்ததைக் குறித்து மகன் மீது கோபமிருந்தாலும், அதை மருமகளிடம் காட்ட மனமில்லாமல்,

“சும்மா நொய்நொய்ன்னு வராம, வைஷு தூங்கி முழிக்கிறதுக்கு முன்னாடி காயை நறுக்கி தந்துட்டு எழும்பிப்போ ரேவதி…” என்று ஒரு அதட்டல் போட்டார் தனம்.

“ஆமா… இந்த வீட்டுக்கு இளைச்சவ நான் தான. ஆ… ஊ ன்னா என்னையே எல்லாரும் சத்தம் போட்டு வாயடைக்க வைங்க. ஆனா கேக்க வேண்டியவர்கிட்ட ஒரு வார்த்தை கூட கேட்டுடாதீங்க.” லேசாக முணுமுணுத்தபடியே காய்களை வேகமாக நறுக்க ஆரம்பித்தாள் ரேவதி.

எப்போதுமே சமையலுக்கு காய்நறுக்கி கொடுத்தல், சமையல் முடிந்த பிறகு பாத்திரங்களை கழுவுதல் போன்ற எடுபிடி வேலைகள் தான் ரேவதிக்கு.

‘என்ன சமைப்பது?’ என்று திட்டமிடுவதில் தொடங்கி, அடுப்பில் நின்று சாப்பாட்டை தயார் செய்யும் வேலை வரை எப்போதுமே தனம் தான் செய்வது.

சமையலறை பெண்களின் சாம்ராஜ்யம். அங்கே தங்கள் கொடியை பறக்க விடும் பெண்களால் தான், வீட்டில் அரசாட்சி செய்ய முடியும் என்னும் கருத்தில் தனம் உறுதியாக இருப்பதால் சமையல் பொறுப்பு இன்னமும் ரேவதியின் கைக்கு வரவில்லை.

அவளும் மாமியார் கைச்சமையலை சந்தோஷமாகவே சாப்பிட்டு விட்டு உலாவந்து கொண்டிருக்கிறாள்.

“அங்க என்ன முணுமுணுப்பு?” சும்மாயிரு என்று சொன்ன பிறகும் விடாது முணுமுணுத்துக் கொண்டிருந்த மருகளிடம் தனலட்சுமி தன் எரிச்சலைக் காட்ட,

“நம்ம வீட்டிலயே வயசு பொண்ணிருக்கும் போது, தங்கம் விக்குற வெலையில, இவ்ளோ பெருசா வாங்கி குடுக்கணுமான்னு‌ ஒரு ஆதங்கத்துல தான் அத்த நான் முணுமுணுக்கறேன்.”

எங்கே தட்டினால் மாமியாரை விழவைக்க முடியும் என்ற சூட்சுமத்தை இத்தனை நாட்களில் புரிந்திருந்த ரேவதி, இடம் பார்த்து அடித்தாள்.

அப்போதும் கூட, “அவ்வளவு நல்லவளா நீ!” என்பது போல அவளை பார்த்து வைத்த தனலட்சுமிக்குமே, வீட்டில் கல்யாண வயதில் பெண்ணை வைத்துக் கொண்டு, இப்படி தங்கத்தில் செயின் வாங்கி சீர் செய்ததில் உடன்பாடில்லை தான்.

அதனால் வீட்டுக்கு வந்த உடனேயே மகனைக் கேள்விக்கணைகளால் துளைப்பதற்கு இவர் தயாரானார்.

 மகனோ, “ரொம்ப தலைவலியா இருக்குதும்மா, எது பேசுறதாயிருந்தாலும் நாளைக்கு காலைல பேசிக்கலாம்” என்று சொல்லி விட்டு அவனறைக்குச் சென்று விட்டான்.

மகனின் வார்த்தைகளில் மற்றதெல்லாம் மறந்து போக, “வெறும் வயிறோடு தூங்காத சத்யா, இரண்டு தோசை சுட்டுத் தரேன், அதையாவது சாப்ட்டுட்டு போடா” என்று பதறியபடி தனம் சொன்னார். ஆனால் அதையும் மறுத்துவிட்டு சென்றுவிட்டான் சத்யா.

அவன் கண்களுக்குள் அந்த மங்கிப்போன மதிமுகமே உலா வந்து அவன் நிம்மதியை பறித்துப் போன பிறகு பசியாவது? சாப்பாடாவது? எதுவுமே வேண்டாமென்று ஓடியிருந்தான் தன் அறையை நோக்கி.

காலையில் ஓரளவுக்கு எல்லா நிகழ்வுகளிலிருந்தும் வெளியே வந்திருந்த சத்யா, கடைக்கு செல்வதற்காக புறப்பட்டு கீழே வர, அந்நேரம் முரளியும் புறப்பட்டு வரவே இருவரையும் உட்கார வைத்து தனம் காலை உணவை பரிமாறினார்.

நேற்றைய சத்யாவின் செயலில் அவ்வளவு கோபம் இருந்தாலும், தன்மக்கள் பசியாறும் முன் மறந்தும் அவசரப்பட்டு போய் எதையும் கேட்டுவிடவில்லை தனம். அந்த வகையில் ஒரு சிறந்த அம்மா தான் தனலட்சுமி.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ரேவதிக்கு உண்மையில் தன் மாமியாரைக் குறித்து ஆச்சர்யமாக இருந்தது.

அதைவிட ஆச்சர்யத்தை சத்யா அவளுக்கு கொடுத்தான்.

ஆம்… சாப்பிட்டு முடித்து கைகழுவி விட்டு வந்து, திரும்பவும் சாப்பாட்டு மேஜை நாற்காலியில் அமர்ந்த சத்யா, “நான் உங்ககிட்ட மறைக்கணும் நினைச்சு எதையும் செய்யலைம்மா. அப்படி எதையும் மறைக்க நினைக்கவும் மாட்டேன்னு உங்களுக்கே நல்லாத் தெரியும்” என்று பேச்சை ஆரம்பித்தான்.

“அழைப்பு வரலைன்னா அது வேற விஷயம். ஆனா கூப்பிட்ட பிறகு, அழைப்பு யார் மூலமா வந்திருந்தாலும், கண்டிப்பா அப்பா போகத்தான் ஆசைப்படுவாங்கன்னு எனக்கு தெரியும்.”

“அவ்வளவு ஏன்? அப்பா இடத்தில நானோ, முரளியோ இருந்துருந்தாக் கூட அப்பா எடுத்த முடிவைத் தான் எடுத்திருப்போம்” என்றவன்,

“ஆனா, கடவுள் புண்ணியத்துல நம்ம ப்ரபாவுக்கு அத்தையைப் போல ஒரு லைஃப் அமைஞ்சிடக்கூடாது” சொல்லிவிட்டு கண்களை இறுக மூடித்திறந்தான்.

“நேற்று ஷாப்பிங் எல்லாம் முடிச்ச பிறகு தான், அப்பாவை வெறுங்கையா அனுப்புறது மட்டுமில்ல, நானும், முரளியும் ஒதுங்கிக்கிட்டு அவரை மட்டும் தனியா அனுப்புறது கூட தப்புன்னு எனக்கு தோணிச்சு.”

அதோட, தன்னோட தொழிலை இவங்க கையில தூக்கி குடுத்ததுனாலத் தானே இன்னைக்கு நம்ம தங்கச்சிக்கு சீர் செய்யக் கூட பசங்க முகத்தை பாத்துட்டு நிக்க வேண்டியிருக்குன்னு அப்பா நினைச்சிட்டா… அது ரொம்ப பெரிய தப்பாகிடும் மா.”

“உண்மையில் ரொம்ப லேட்டாத்தான் எனக்கு இந்த உண்மை புரிஞ்சது. அதான் உங்ககிட்ட வந்து சொன்னா நீங்க புரிஞ்சுகுவீங்கன்னு நினைச்சு, நானே நகையை வாங்கிட்டேன் ம்மா.”

“ஆனா, ஏதோ ஒரு ஞாபகத்துல உங்ககிட்ட விஷயத்தை சொல்ல மறந்துட்டேன். சாரி ம்மா” என்று முடித்தவன், தம்பியின் கையைப் பற்றி, “சாரி முரளி” என்றும் சொன்னான்.

“உன் சாரியெல்லாம் நீயே வச்சுக்கோ. எனக்கு வேண்டாம்.” கிண்டலாகச் சொல்லி மென்மையாக சிரித்தான் முரளி.

 அப்பாவின் இடத்தில் நானோ முரளியோ இருந்திருந்தால் கூட அப்பாவைப் போலத்தான் முடிவெடுத்திருப்போம் என்ற மகனின் வார்த்தையில், எந்த சூழ்நிலையிலும் எங்கள் தங்கையை விட்டு கொடுத்துவிட மாட்டோம் என்று மறைந்திருந்த பொருளிலும்,

தன் தங்கைக்கு அத்தையைப் போல ஒரு வாழ்க்கை அமைந்து விடக்கூடாது என்ற அவனின் பிரார்த்தனையிலும், சத்யா மீதிருந்த கோபம் தனத்துக்கு பாதியாக குறைந்திருந்தது.

“ஆனாலும் இவ்வளவு பெருசா போட்டுருக்க வேண்டாம் சத்யா. ஏதோ பெயருக்கு போட்டுட்டு மீதியில நம்ம ப்ரபாவுக்கு ஏதாவது வாங்கியிருக்கலாம்” என்று தன் அதிருப்தியை பதிவு செய்யவே செய்தார் தனம்.

“இதுல மிச்சம் பிடிச்சி தான் நம்ம ப்ரபாவுக்கு செய்யணும்னு இல்லம்மா. நாங்க இரண்டு அண்ணங்க இருக்கோம் அவளுக்கு வேணுங்குற செய்து கொடுக்க.” ஒரு சின்ன சிரிப்போடு சொல்லியவன்,

“அது ஐந்து பவுன் தான் மா. இவ்வளவாவது போட்டா தானே அந்த சபையில அத்தைக்கு கொஞ்சமாவது பெருமையா இருக்கும்” என்றான்.

ஐந்து பவுன் என்றதுமே தனத்தின் முகம் கொஞ்சம் சுருங்கினாலும், மகன் இவ்வளவு சொல்லியதற்கு பிறகும் அதைப்பற்றி பேசினால் நன்றாக இருக்காது என்று நினைத்தவரின் மனம், ‘ம்க்கும்… அந்த எருமைக்கு பெருமை ரொம்ப அவசியம் தான்’ என்று நொடித்துக்கொண்டது.

“எல்லாம் க்ளீயர் தானே ம்மா, நான் இப்போ கடைக்கு போகலாம்ல?” கேட்டபடியே நகர்ந்தவனை,

“சத்யா! இப்பவும் நீ உன்னோட வார்த்தையில உறுதியா இருக்கியா?” என்ற அன்னையின் கேள்வி பிடித்து நிறுத்தியது.

“என்ன வார்த்தை ம்மா?”

“அதான்… அன்னைக்கு நீங்க பாக்குற பொண்ணத்தான் கட்டுவேன்னு சொன்னியே. அந்த வார்த்தையில உறுதியா இருக்குறியா?”

“ஆமா… ஏன் ம்மா திடீர்னு இந்த சந்தேகம்?”

பதில் தெரிந்து கொண்டே கேள்வியைக் கேட்ட மகனுக்கு மௌனத்தையே தனம் பதிலாகத் தந்தார்.

“இப்போன்னு இல்ல, எப்பவுமே அந்த வார்த்தையில நான் உறுதியாத் தான் இருக்குறேன் ம்மா” என்றான் மகன் அழுத்தமாக.

ஆனால், “முடியுமா? உன்னால அது முடியுமா?” அவன் மனதுக்குள் குடிகொண்டிருக்கும் அந்த மதிமுகம் மெதுவாக தன்தலையை நீட்டி அவனை விட அழுத்தமாக கேள்வியை எழுப்பியது.

‘ஏய்… அடங்குடி! என்னை வேண்டாம்னு சொல்லிட்டு போனவதான நீ? இப்போ என்ன மண்ணாங்கட்டிக்கு எம்மனசுக்குள்ள வந்து வந்து என்னை தொந்தரவு பண்ணுற?’

ஆங்காரரூபனாய் மனதுக்குள் இருந்தவளிடம் முறைத்துக் கொண்டவன், இன்னமும் அங்கேயே நின்றிருந்தால் தன்னை மறந்து கத்தி விடுவோமோ? என்ற பயத்தில் விறுவிறுவென்று இடத்தை காலி செய்தான்.

சத்யா சாப்பிட அமர்ந்த நேரத்திலிருந்து இதோ இப்போது சண்டை வந்துவிடும்… இன்னும் கொஞ்ச நேரத்தில் சண்டை வந்துவிடும், அந்தநேரத்தில் நாமும் நாலைந்து பிட்டை போடலாமென்று காத்திருந்த ரேவதி, நடந்தது எதையும் நம்பமுடியாத தன்மையோடு பார்த்து கொண்டு நின்றிருந்தாள்.

*******************