அத்தியாயம் 12.

அன்னையின் அதட்டலை கண்டுகொள்ளாமல் நிதானமாக மணவறையிலிருந்து எழும்பி நின்ற ரஞ்சித்தைக் கண்டு, ஒரு நிமிடம் அந்த மண்டபமே உறைந்து போனது.

அதன்பிறகு சலசலவென்ற சத்தம் உறவினர்களுக்கிடையே ஏற்பட, “என்ன மாப்பிள்ளை இப்பவே எழும்பிண்டேள்? மனையில உக்காந்து மாங்கல்ய தாரணம் முடிச்சிண்டு பொண்ணோட ஜோடியா எழும்புங்கோ” என்றார் ஐயர்.

ஐயரின் குரலில், விளங்கிக்கொள்ள முடியாத சிரிப்பொன்றை தன் அடர்ந்த மீசைக்கு கீழ் பிடிவாதமாக வளைந்திருந்த இதழ்களில் நெளிய விட்டவன், காரணம் தெரியாமல் அடிவாங்கிய குழந்தையின் தோற்றத்தோடு, உட்கார்ந்தபடியே கலக்கத்தோடு தன்னை நிமிர்ந்து பார்த்த ப்ரபாவின் முகத்தை திரும்பிக் கூட பார்க்க முயலவில்லை.

“ரஞ்சித்! உங்களுக்கு ஒருத்தொருக்கொருத்தர் பிடிச்சி போனதுனாலத் தானே கல்யாணம் வரைக்கும் வந்தோம். அப்படி இருக்கும் போது, நீ இப்படி நடந்துக்கிட்டா நான் என்னன்னு நினைச்சுக்க?” பெண்ணைப் பெற்ற தகப்பனாக கோபத்தில் சற்றே குரலை உயர்த்தியிருந்தார் சண்முகம்.

தன்மீது வீசப்பட்ட கேள்விக்கு, தன்பதில் என்னவாக இருக்கும் என்ற ஆர்வத்தில், தன்னையே பார்த்துக் கொண்டிருந்த உறவுகளைப் பார்த்தபடியே மணவறையிலிருந்து இறங்கிய ரஞ்சித், மாமனுக்கு அருகில் சென்று,

“நான் திரும்பவும் அங்க போய் உட்காரணும்னா நம்ம வீட்ல உள்ள இரண்டு பேரு மனசு வைக்கணும் மாமா” என்றான் அழுத்தமான குரலில்.

“இரண்டு பேர் மனசு வைக்கணுமா! யாரந்த இரண்டு பேர்?” இராஜசேகரன் குழம்பிப் போய் சட்டென்று கேட்டார்.

 சௌந்தர்யாவோ மகனின் நோக்கம் புரிந்தவராக, “அவங்கவங்க தலையெழுத்துபடி எல்லாம் நடக்கட்டும். நீ மொதல்ல உன் வாழ்க்கையைப் பாருப்பா” என்றார் வேதனை நிறைந்த குரலில்.

சௌந்தர்யாவுக்கே விஷயம் புரியும் போது, சம்மந்தபட்ட இருவருக்கும் ரஞ்சித் யாரைச் சொல்கிறான் என்று விளங்கிக்கொள்ள முடியாமல் போகுமா என்ன?

புரிந்து கொண்டவர்கள் சுதாரிப்பதற்கு முன், “நம்ம சுபாவும், சத்யாவும் இப்போ, இந்த இடத்துல எங்களுக்கு முன்னாடி கல்யாணம் பண்ணிகிட்டாத் தான், எங்க கல்யாணம் நடக்கும் மாமா” என்றான் ரஞ்சித் தெளிவாக.

ரஞ்சித்தின் தெளிவான பேச்சில் சத்யாவின் கைமுஷ்டி இறுகியது. தன் தங்கையின் திருமணத்தை வைத்து தன்னைக் கார்னர் செய்யும் ரஞ்சித்தை, விட்டால் அடித்து துவைத்து விடுபவன் போல அடக்கப்பட்ட கோபத்தோடு நின்று கொண்டிருந்தான் சத்யா.

சுபத்ராவோ, “அதானப் பாத்தேன்… நீ திடீர்னு பாசத்தைப் பிழியும் போதே நான் யோசித்திருக்கணும், ‌ம்ஹும்… எங்க? எப்போப் பாத்தாலும் பாசத்தைப் பார்த்து ஏமாந்து போறதே என் டிசைனா இருக்கும் போது, ஏமாத்துறவங்களைக் குறைசொல்ல என்ன இருக்கு?”

விட்டேற்றியாக சொல்லியவள், “இதுக்கு மேல எனக்கு இங்க வேலை இல்லைன்னு நினைக்கிறேன். அதனால நான் வீட்டுக்குப் போறேன்” என்றபடியே அங்கிருந்து நகர்ந்தாள்.

“ஒரு நிமிஷம் நில்லு சுபா, எனக்கும் கூட இதுக்கு மேல இங்க வேலையில்லைன்னு தான் நினைக்கிறேன். வா… நாம ரெண்டு பேரும் சேர்ந்தே வீட்டுக்கு போலாம்” என்ற அண்ணன்காரன், உனக்கு நானும் சளைத்தவனில்லை என்னும் விதமாக தன் கழுத்தில் கிடந்த மலர்மாலையை கழற்ற முயல, சிறு விம்மலோடு ப்ரபா மணவறையிலிருந்து எழும்பினாள்.

“ஹேய்… நீ… நீ எதுக்கு எழும்புற? நீ… உக்காரு ப்ரபா…” பதறிய சுபத்ரா,

 “போ ண்ணா… போய் ப்ரபா கழுத்துல தாலியைக் கட்டுற வழியைப் பாரு. என்னை நினைச்சு, உங்க வாழ்க்கையை சூன்யமாக்கிடாதீங்க!” என்றாள் லேசாக கலங்கியக் குரலில்.

“நீ என் மேல அக்கறைப் படலாம், அதே நான் உம்மேல அக்கறைப்பட்டா தப்பா?” அண்ணனும் தங்கையும் ஒருவர் மாறி ஒருவர் வழக்காடி கொண்டு நிற்க, தந்தை இராஜசேகரன் புரியாமல் பார்த்துக் கொண்டு நின்றார்.

ஏழு வருடங்களுக்கு முன்பு நடந்த நிகழ்வுகளையும், இதோ இப்போது அவருடைய மக்கள் பேசுவதையும் ஒன்றோடொன்று இணைத்து பார்த்தவருக்கு, ‘ஒருவேளை தன் மகளுக்கு சத்யா மீது காதல் இருந்துருக்கக் கூடுமோ?’ என்று இப்போது எண்ணத் தோன்றியது.

‘ஆனால், அன்று கேட்டபொழுது என் மகளே அப்படியெல்லாம் இல்லை என்று சொன்னாளே? ஆனால் அது உண்மையில்லை போலவே!’ குழம்பிப் போனார் மனிதர்.

‘இது தெரியாமல் நான்…’ மனதுக்குள் தவித்துப் போனவரை,

‘தெரிந்திருந்தால் மட்டும்… இருவரையும் பிரிப்பதைத் தவிர, பெரிதாக வேறு என்ன செய்து கிழித்திருப்பாய் இராஜசேகரா?’

அவர் மனதே அவரை தோரணம் கட்டி தொங்கவிட, அங்கு நடப்பவற்றைக் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தார் இராஜசேகரன்.

 கழுத்து மாலையை கழற்ற முயன்ற ரஞ்சித்தின் செயலில் சிறகொடிந்த பறவையாய் அன்னையிடம் தாவிச் சென்ற ப்ரபா, அவர் இடுப்பைக் கட்டிக்கொண்டு விசும்ப ஆரம்பித்தாள்.

“இப்படி ஏதாவது நடக்கும்னு தெரிஞ்சு தானே, இந்த கல்யாணமே வேண்டாம்னு தலப்பாடா அடிச்சிகிட்டேன். யாராவது கேட்டீங்களா? இனி காலம் முழுசும் அனுபவிங்க.” சீற்றத்தோடு பேசினார் தனம்.

“ஹூம்… இந்த ராசி கெட்டவ மணமேடை ஏறும் போதே, எனக்கு இந்த கல்யாணம் நடக்குமான்னு ஒரு சந்தேகம் வந்திடிச்சு. என் சந்தேகம் சரிங்குற மாதிரியே இங்க எல்லாம் நடக்குது பாருங்களேன். நல்லவேளை… இந்த ராசி இல்லாதவக்கிட்ட இருந்து என் அக்கா பையன் தப்பிச்சான்டா சாமி!”

நடந்து கொண்டிருக்கும் களேபரம் போதாதென்று, நக்கலும், நையாண்டியுமாக, மணமேடையில் நின்றிருந்த உறவினர்கள் பக்கத்திலிருந்து இப்படி ஒரு பேச்சு வந்து விழுந்தது.

பேசியது வேறு யாருமல்ல. ஆறு மாதகால கர்பஸ்த்ரீயான மருமகள் மதுராவை அடைகாத்துக் கொண்டே அவள் பின்னோடு அலைந்த அவளின் மாமியார் தான்.

விவாகரத்தான தனது அக்கா மகனுக்கு சுபத்ராவை பெண் கேட்டு, பதிலாக மறுப்பை பெற்றிருந்த பெண்மணி, சமயம் பார்த்து சுபத்ரா மீதான தன் வெறுப்பை வார்த்தைகளாக்கியிருந்தார்‌.

அவ்வளவு தான்… இத்தனை நேரமும் நிமிர்வாக நின்று உடன்பிறந்தவனோடு வார்த்தையாடிக் கொண்டிருந்த சுபத்ரா, ‘ராசி கெட்டவள்’ என்ற அந்த ஒற்றை வார்த்தையில் சுருண்டிருந்தாள்.

அவளையும் மீறி அவள் கண்களில் அடிபட்ட பாவம் தெரிந்தது.

அந்த அம்மா பேச ஆரம்பித்த நேரத்திலிருந்தே சுபத்ராவை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த சத்யாவுக்கு, அவளின் முகமாறுதல் வேதனையை ஏற்படுத்த, அவன் உள்ளத்துக்குள் நெடுநாட்களாக அடைபட்டுக் கிடந்த அந்த காதலன் வீறுகொண்டு எழுந்தான்.

அவன்… அந்த காதலன்… யாரைப் பற்றியும் எதைப்பற்றியும் கவலைப்படாதவனாக தன் காதலியின் கையைப்பற்றி, அவளை மணவறைக்கு கூட்டிச் செல்ல, முரண்டினாள் சுபத்ரா.

“இங்க பாரு… ஏதோ உம்மேல பொங்கி வழியிற காதலால நான் உன்னை கல்யாணம் பண்ண ஆசப்படுறேன்னு தப்பா நினச்சுக்காத. நம்மளால என்தங்கச்சி கல்யாணம் மணவறை வரைக்கும் வந்து நின்னதா இருக்கக் கூடாதுங்குற எண்ணத்துல தான் இந்த முடிவை எடுத்தேன். அதனால ஒழுங்கு மரியாதையா எங்கூட வா.”

 அழகாகப் பொய் சொல்லி, அடிக்குரலில் அதட்டியவன், கைப்பிடியாக சுபத்ராவை அழைத்துக்கொண்டு தன் அன்னையின் அருகில் சென்று, “சாரி ம்மா…” என்ற ஒற்றை வார்த்தையை உதிர்த்துவிட்டு அவளோடு மணவறையில் உட்கார்ந்தான்.

 சத்யாவின் வார்த்தைகளும், அதை அவன் சொன்ன விதமும் இதயத்தை நெருஞ்சி முள்ளாய் தைத்தாலும், ‘தன்னால் யாருடைய வாழ்க்கையும் கேள்விக்குறியாக வேண்டாம்’ என்ற எண்ணத்தில் அமைதியாக உட்கார்ந்திருந்தாள் சுபத்ரா.

ஒருவழியாக இருவரும் கல்யாணத்துக்கு ஒத்துக்கொண்டு அமரவும், சலசலப்பு அடங்கி மறுபடியும் பரபரப்பு வந்து ஒட்டிக்கொண்டது கல்யாண மண்டபத்தில்.

“நாராயணன் அங்கிள், உங்ககிட்ட, காரோட பேக்சைட்ல வைக்கச்சொல்லி ஒரு கவர் குடுத்தனே, அதை இங்க கொண்டு வர்றீங்களா?”

மண்டபத்தில் கூட்டத்தோடு நின்றிருந்த தங்கள் வீட்டு ட்ரைவரிடம் சொல்லிய ரஞ்சித், “சின்ன மச்சான், நாம புறப்படும் போது உங்ககிட்ட ஒரு ஜ்வெல் பாக்ஸ் குடுத்தேன்ல. அதைக்குடுங்க” என்று மதுராவின் கணவனை நோக்கி கையை நீட்டினான்.

திருமணம் ஆகி இத்தனை வருடங்களில் தன்னை மச்சான் என்றே அழைத்திராத மனைவியின் அண்ணன் இன்று மச்சான்… அதுவும் சின்னமச்சான் என்று அழைக்கவே, ஒன்றும் புரியாதவனாக தன் கோட் பாக்கெட்டில் இருந்து அந்த பாக்ஸை எடுத்து கொடுத்தான் ரமேஷ்.

அதைத் திறந்த ரஞ்சித், சற்றுமுன் தன் சட்டை பாக்கெட்டில் போட்டானே ஒரு திருமாங்கல்யம், அதற்கு இம்மியளவு கூட வேறுபாடில்லாத மற்றொரு திருமாங்கல்யத்தை அதற்குள்ளிருந்து எடுக்க, விழிகள் தெறித்து விடும்படி பார்த்தான் ரமேஷ்.

“ஆத்தாடி! இதையா இவ்வளவு நேரமும் நான் சுமந்துட்டு திரிஞ்சேன்? இதுக்காகத்தான் ஸ்பெஷலா இந்த கோட் வாங்கி குடுத்தீங்களா மச்சான்? இனிமேல் எல்லாரும் என்னை கூட்டுக் களவாணின்னுல சொல்லுவாங்க.” கிண்டலாகச் சொன்னான் மைத்துனனின் காதுகளில்.

தாயின் குணத்துக்கு நேர்மாறான குணம் கொண்டவன் ரமேஷ். பழக மிக எளிமையானவன். அவனுடைய அம்மாவின் நடவடிக்கைகள் எப்போதுமே, இதோ இப்போது மேடை நாகரீகம் எதுவும் பார்க்காமல், எப்படி கரடுமுரடாக இருந்ததோ அப்படித்தான் இருக்கும். ஆனால் மகனுக்காக எல்லாமே பொறுத்துக் கொள்ளப்படும் இப்போது போலவே‌.

மைத்துனனின் அங்கலாய்ப்பில், “உங்களை பத்திரமா வச்சுக்கோங்கன்னு சொன்னனேயொழிய, அதை திறந்து பாக்காதீங்கன்னு நான் சொன்னதா எனக்கு ஞாபகம் இல்லையே சின்ன மச்சான்.” கண்ணைச் சிமிட்டி கிசுகிசுத்த ரஞ்சித்,

ட்ரைவர் கொண்டு தந்த பையிலிருந்த பூமாலைகளையும், மங்கலநாணையும் சத்யாவிடம் நீட்டி, “சுபா கழுத்துல போட்டு விடுங்க மச்சான்” என்று சொன்னான் சின்ன சிரிப்போடு.

ரஞ்சித்தின் ஒவ்வொரு நடவடிக்கையும் அங்குலம் அங்குலமாக அமைதியாக பார்த்துக் கொண்டு, மணவறையில் இறுகிப்போய் உட்கார்ந்திருந்த சத்யா, அவன் நீட்டியவற்றை வலது கையால் ஒதுக்கி, தன் ஷர்ட் பாக்கெட்டிலிருந்த டெபிட் கார்டை எடுத்து, அங்கு நின்றிருந்த தந்தையிடம் கொடுத்து,

“ப்பா… இதுல இருக்குற காசுல தங்கத்துல மாங்கல்யமும் மஞ்சள் சரடும் மட்டும் தான் வாங்க முடியும்னு நினைக்கிறேன். முரளியையும் கூட்டிட்டு போய் வாங்கிட்டு வந்துடுறீங்களா?” என்றான்.