Advertisement

வெளியே வரவும், பர்வதம், “அப்படியே போய் குளிச்சிட்டு வா மாலினி.”, என்றார். “ம்க்கும்…நேத்து நீங்க அடிச்ச கூத்துக்கு நாங்க அப்படியே முதலிரவை கொண்டாடிட்டோம். நான் தலை குளிக்க.”, என்று மனதிற்குள் கவுண்டர் கொடுத்துக்கொண்டே, ஒரு தலையசைப்புடன் சென்றாள்.
குளித்து முடித்து வந்தவளிடம் “காபிக்கு பால் காய்ச்சிட்டேன். நீ போட்டுக்கமா. நான் வாசல் தெளிச்சிட்டு வரேன்.”, என்று செல்ல,
தனக்கு மட்டும் போடுவதா, இல்லை எல்லோருக்குமா ? யாருக்கு எப்படி காபி பிடிக்கும் ? கேள்விகள் வரிசை கட்ட முழித்து நின்றாள்.
விக்ரம் வந்தவன், “என்ன அண்ணி ? “, என்று கேட்க, அவனிடம் காபி பற்றி விவரம் கேட்டாள். பின் அவனுக்கும் அவளுக்கும் போட்டு முடித்தாள். பர்வதம்மா குடித்துவிட்டு போட்டிருந்த டம்ளர் சிங்க்கில் இருந்தது.
ராகவனை எழுப்ப உள்ளே சென்றவள், கதவை லேசாக மூடி வைத்து, அவன் தோள் தொட்டு எழுப்பினாள்.
சட்டென்று முழித்தவன், அவள் முகம் கண்டு, புன்னகை பூத்தான். “ குட் மார்னிங் மயிலு.”
“அதென்ன மயிலு? பொட்டு வைக்கும்போதும் சொன்னீங்க ?”
“ம்ம்… நீ முதல் முதல்ல எனக்கு ப்ரபோஸ் செய்தியே, அன்னிக்கு கருப்பு பாக்ரவுண்ட்ல, தோகை விரிச்ச மயில் டிசைன்ல சேலை கட்டியிருந்தியே…”
“ஆமா”, அவனுக்கு ஞாபகம் இருந்ததே ஆச்சரியமாய் இருந்தது மாலினிக்கு.
“ஒரு நிமிஷம் கருப்பா இருக்க என் வாழ்க்கையை வண்ணமாக்க  வந்த மயில் மாதிரிதான் பட்டுச்சு. ஆனா இப்ப என் கருப்பு உன்னையும் சூழ்ந்துக்குமோன்னு கொஞ்சம் பயம் வந்திருக்கு.”, கரகரத்து வந்தது ராகவனின் குரல்.
“ரகு…என்னதிது. இப்ப என்ன ஆகிடுச்சுன்னு இவ்ளோ டவுன் ஆகறீங்க ? எல்லாம் சமாளிக்கலாம். வாழ்க்கை பூரா இருக்கு நமக்கு. அடுத்த முறை நானும் கவனமா இருக்கேன். நமக்கு வேண்டியது நாமதான் செய்யணும்னு தெரிஞ்சிடுச்சு. நான் பார்த்துக்கறேன். நீங்க எழுந்து கிளம்புங்க.”, அவள் நம்பிக்கை பார்த்து தானும் நிதானம் கொண்டவன், கிளம்பச் சென்றான்.
ஒரு வழியாய் இவர்கள் ட்ராவல்ஸ் காரில் கிளம்ப, காயத்ரியும் ரகுவரனும் குழந்தையுடன் இன்னொரு காரில் வழியில் இணைந்து கொள்ள, செய்யாறு அருகில் ஒரு ஊரில் இருந்த அம்மன் கோவிலுக்கு சென்றடைந்தார்கள்.
அபிஷேகம் முடிந்து, அலங்காரத்திற்கு காத்திருக்க, காயத்ரி மெல்ல ஆரம்பித்தாள்.
 “ஏன் அண்ணா, எனக்கு வெறும் ஆயிரம் ரூபாய் மட்டும்தானா ? கல்யாண டென்ஷனில் நான் கேட்டது தப்புதான். ஆனாலும் இப்ப மதுரைக்கு கிளம்பறேன். எனக்கு என்ன செய்யப் போறீங்க ?”
“நீ கேட்டதெல்லாம் செஞ்சாச்சு. இன்னும் என்ன ?”, புருவம் சுருக்கினான் ராகவன்.
“இல்ல ராகவா. அவள வெறுங்கையோட அனுப்ப முடியாது. ஒரு அஞ்சாயிரம்…”
“என்ன வெறுங்கை ? குழந்தைக்கு மூணு பவுன்ல நகை போட்டுத்தான் அனுப்பறோம். “, என்று தன் தாயை இடை மறித்தவன்,
“நீ எனக்கு செஞ்சதுதான் நான் உனக்கு திரும்ப செய்யணும்.”, என்றான் அவளைப் பார்த்து யோசனையாக.
“என்னதுண்ணா ?”, புரியாமல் கேட்க்கவும்,
“அதான் நான் கல்யாணம் செஞ்சு பொண்டாட்டியை முதல் முறை வீட்டுக்கு கூட்டிட்டு வரேன்னு பெட் ரூமை அப்படி அலங்காரம் செஞ்சயே. பார்த்து ஸ்டன்னாகிட்டோம்.”, என்றான் நக்கலாக.
“அ..அண்ணா… அம்மா நீ எதுவும் பண்ண வேண்டாம்னு சொல்லிட்டதா சொன்னாங்க ?”, திணறலாய் சொன்னவள் அன்னையைப் பார்க்க,
“அதுக்குன்னு குப்பையா போட்டு வைக்கவும் சொல்லலை. புது பெட்ஷீட்டை அம்மாதான் குடுத்தா, எங்களுக்கு வேண்டியிருக்குமேங்கற அறிவு, உனக்கு கூடவா இல்லாம போகும் ? இருக்கற மிச்சம் இரண்டும் சாயம் போனதும், கிழிஞ்சதுமா இருக்கு. எவ்வளவு கேவலமா இருந்துச்சு தெரியுமா எனக்கு, உன் அண்ணி முன்னாடி? ஆனா அதெல்லாம் உங்களுக்கு அக்கறையில்லை. “, கனல் தெறித்தது அவன் பார்வையிலும், வார்த்தையிலும்.
“என்ன கேட்டீங்கம்மா ? அஞ்சாயிரமா ? அந்த காசுல நான் இன்னும் இரண்டு பெட்ஷீட் செட் வாங்கணும். காயத்ரி வாங்கிக் குடுத்தான்னு சொல்லிக்கோங்க.”, என்று அன்னையிடமும் ஒரு பிடி பிடித்தவன், விறு விறுவென எழுந்து மற்றவர்கள் பம்ப் செட் பக்கம் சென்றிருக்க அவர்களைத் தேடிச் சென்றான்.
“ஏம்மா… இப்படியா செய்வ ? கடைசில என் கணக்குல எழுதிட்டு போயிடுச்சே அண்ணன். எனக்குத்தான் குழந்தையை வெச்சிகிட்டு முடியலை. நீயாச்சம் பார்க்க வேண்டியதுதான ? இப்படியே போச்சு, அண்ணன் அவ கூட தனியா போயிரப் போகுது.”, தன் பக்கம் வந்த தவறை, அன்னையிடம் தள்ளி விட்டாள்.
பர்வதம் முழித்துக்கொண்டிருந்தார்.  சாயம் போனதைக் கொடுத்தால் சம்மந்தி வீட்டில் என்ன நினைப்பார்கள் என்று மட்டுமே யோசித்தவர், மகனுக்கும் சற்று யோசித்திருக்கலாம். இப்போது அவன் பேசிவிட்டு செல்லவும்தான் புரிந்தது. நேற்று இருந்த உடல் வலியில் அவ்வளவு யோசனை அவரை எட்டவில்லை.
‘அச்சோ…அந்த பொண்ணு குடும்பம் ஏற்கனவே கீழ நினைக்கறாங்க. இதுல நான் வேற இப்படி செஞ்சிட்டேனே. காயத்ரி சொன்ன மாதிரி, புள்ளைய கூட்டிட்டு தனியா போயிருவாளா? அம்மா சாமுண்டி, நீதான் அப்படியெல்லாம் எதுவும் நடக்காம பார்த்துக்கணும் என்று அவசரமாக ஒரு வேண்டுதலை வைத்தார்.’
பூஜை முடித்து, சர்க்கரைப் பொங்கலை கோவிலுக்கு வருபவர்களுக்கு அளிக்க மாலினியுடன் செல்லும் போது, “மாலினி…நேத்து நாந்தான் யோசிக்காம போர்வையை குடுத்துட்டேன். புதுசுதான போட்டிருக்குன்னு நினைச்சிட்டேன். நீ தப்பா எடுத்துக்காதமா. ராகவன் ரொம்ப கோச்சிக்கிட்டான் என்னையும் காயத்ரியையும். இன்னிக்கு வேற வாங்கிக்கலாம். என்ன?”, என்று ஒரு சமாதானத்தைக் கூறவும், “பரவாயில்லை அத்தை.  இன்னிக்கு எங்க வீட்லதான் தங்கறோம். நாளைக்கு வாங்கிடலாம். “, என்று முடித்து விட்டாள்.
‘ஏதோ சொத்தப்பிட்டேன்னு வந்தாச்சம் சொன்னங்களே. அந்த மட்டுக்கும் பரவாயில்லை.’, என்று மனதை தேற்றிக்கொண்டாள்.
ஆனால் பார்வதம் மாலினியிடம் பேசுவதை கவனித்த காயத்ரிக்கு புரிந்தது, அம்மா மன்னிப்பு கேட்கிறார் என்று. அதற்கும் அவரை தனியே அழைத்து ஒரு பிடி பிடித்தாள். “கொஞ்சமாச்சம் மாமியார்னு ஒரு கெத்தோட இரும்மா. இப்ப யாரு உன்னை சாரி கேட்க சொன்னா? இப்படி செஞ்சா உன் தலை மேல ஏறி உட்கார்ந்துக்குவா. ஏற்கனவே சம்பாதிக்கறா, வசதியான அம்மா வீடுன்னு கிரீடம் இருக்கு. இப்பவே அவ அம்மா மதிக்கறதில்லை நம்மளை. இதுல நீயும் இப்படி செய். மருமகளும் மதிக்க மாட்டா. ஏந்தான் உனக்குப் புரிய மாட்டேங்குதோ போ.”, என்று எரிச்சலைக் கொட்டினாள்.
“நீதானடி, ராகவனை அவ தனிக் குடித்தனம் கூட்டிட்டு போயிருவான்னு பயபடுத்தின. அதான் தெரியாம செஞ்சிட்டேன். இன்னிக்கு வேற புதுசு வாங்கிக்கலாம்னு சொன்னேன். “, பர்வதம் தன் செயலை விளக்க,
“ஆமாம். நீ எடுத்து குடுக்கற வரைக்கும் இருக்கப்போறாளா? கல்யாணப் புடவைக்கே கலந்துக்கலை, வாங்கிட்டு வந்து வெக்கறது கூட உனக்கு தெரியாது.”, என்றாள் காயத்ரி நக்கலாக.
“ஏன்,  அவ எடுத்தபோது எடுப்பா இல்லைன்னு சொன்னோம். ஆனா கல்யாணத்தன்னிக்கு எத்தனை பேரு கேட்டாங்க ? ரொம்ப விலையா இருக்கணுமே. இவ்ளோ டிசைனர் வொர்க், எங்க வாங்கனீங்கன்னு ?  மாலினி திறமையா இருந்தா நல்லதுதானடி ?”
“ம்கும்… நான் கேட்டேன் மாலினியை…எனக்கும் அந்த மாதிரி ஒரு புடவை வேணும்னு… அவ கல்யாணத்துக்கு மட்டும்தான் டிசைன் செய்யறா. பிசி அது இதுன்னு சாக்கு சொல்லிட்டா. “, காய்த்ரி நொடித்தாள்.
“அண்ணின்னு சொல்லி பழகு காயத்ரி. ராகவன் முன்னாடி இப்படி அவ இவனு பேசினா ப்ரச்சனை ஆகும். உன்னை விட வயசுலயும் பெரியவதான? “, பர்வதம் அதட்டவும், உதட்டை சுழித்தவள் அங்கிருந்து அகன்றாள்.
போனோடு மாலினியைத் தேடி வந்தவன், அவள் பூசாரியுடன் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்து, வரும்படி சைகை செய்தான்.  வந்தவளிடம்,
“மாலினி, நாளைக்கு நாம கொடைக்கானல் போகலாமா. நாலு நாள் ட்ரிப்.”
கேட்டவள் முகம் மலர்ச்சியாக, “ஹை ஹனிமூனா ? சொல்லவேயில்லை ?”
அவள் சந்தோஷத்தைப் பார்த்து சிரித்தவன், “ விஜய்யும் ரமேஷும் அவங்க கிஃப்ட்டா புக் பண்றாங்க ரிசார்ட்டை.  முதல்ல ஒரு மாசம் கழிச்சு மெதுவா போகலாம்னுதான் இருந்தேன். ஆனா இத்தனை கலாட்டால நாம் நம்ம கல்யாணத்தை கொண்டாடவேயில்லைங்கற மாதிரி ஆகிடுச்சு. அதான், நாளைக்கு போனா, வந்து ஒரு நாள் ரெஸ்ட் இருக்கும், அப்பறம்  திங்கள் ஆஃபிஸ் போக சரியா இருக்கும்.”
“சரிங்க. போகலாம். “, சந்தோஷமாக தலையாட்டினாள்.
“இப்பத்திக்கு எதுவும் சொல்லாத. எல்லா ஏற்பாடும் செஞ்சிட்டு  அப்பறம் சொல்லிக்கலாம்.”, என்று தன் குடும்பத்தைப் பற்றித் தெரிந்தவனாக மாலினியை எச்சரித்தான்.

Advertisement