Advertisement

திருமண வைபோகம் முடிந்து, அன்று மதிய உணவிற்குப்பின் திருமண மண்டபத்திலேயே தாலியும் பிரித்து கோர்த்துவிட்டார்கள். பர்வதம்மாவிற்கு அதில் பிடித்தமில்லை. ஆனாலும் கையோடே அனைவரும் இருக்கும்போதே செய்துவிடலாம் என்று சகுந்தலா  சொல்லிவிட, வேறு ஒன்றும் சொல்ல முடியவில்லை. பர்வதம் சார்பாக அவரின் அண்ணி, நாத்தனார்கள் இருவரும் அமர்ந்து கோர்க்க, மாலினியின் உறவு முறையிலும் சிலர் அமர்ந்து கொண்டனர்.
காயத்ரியின் மாமியார் அவர்கள் சார்பில் ஒரு கால் சவரனைக் கோர்த்தார்.மற்றவர்கள் காயத்ரியின் கையில் காசைக் கொடுக்க, சகுந்தலா நிறைவாகப் பார்த்திருந்தார்.
ஒரு வழியாக புதுத் தாலிக்கொடி மின்ன மாலினி எழவும், முதலில் பெண் வீடு சென்று பால் பழம் அருந்தி, பின் மணமகன் இல்லம் செல்வதாக ஏற்பாடு.
மாலினியின் வீட்டில் பால் பழம் வர, மாலினிக்கும் ராகவனுக்கும் பந்தக்கால் அன்று அவள் சொன்னதுதான் ஞாபகம் வந்தது.  ஒரு பெரிய புன்னகையோடு ஒரு வாய் பாலை மட்டும் அருந்தியவள், “இந்தாங்க புருஷா, எல்லாம் உங்களுக்குத்தான்.”, என்று சிரிப்புடன் அவனிடம் தள்ளிவிட்டாள்.
குடிக்க முடியாமல் ஒரு வாய் பாலுடன் பழத்தையும் குடித்தவன் பரிதாபமாக பார்க்க, அவனிடமிருந்து டம்பளரை வாங்கி அஸ்வினிடம் கொடுத்தாள், “யாரும் பார்க்காம கொட்டிட்டு சிங்க்ல போடுடா.”, என்ற உத்தரவுடன்.
இடையில் எம கண்டம் இருக்க, அது முடித்து கிளம்பினால் போதும் என்றுவிட்டனர்.  ராகவனை அஸ்வின் அறையில் ஓய்வெடுக்க அனுப்பியவள், ஷீலாவுடன் சென்று தன் தலையலங்காரத்தையும் , மேக்கப்பையும் கலைத்து சற்று நேரம் படுத்தாள். முடிந்த மட்டும் தாயிடம் மாட்டக்கூடாது என்ற முடிவில் இருந்தாள். எதையாவது பேசி அவளை வருந்த வைத்துக்கொண்டிருந்தார் சகுந்தலா.
ராகவன் படுத்திருந்தாலும், போனில் இருந்தான்.  இரவு பெண்ணை மாமியார் வீட்டில் விட என்று பத்து பேர் மாலினி வீட்டு ஆட்கள் வருவார்கள் எனவும், விஜயும் ரமேஷும் ஹோட்டலில் உணவிற்கும்,  மேசை நாற்காலிகளை செட் செய்ய என்று கிளம்பியிருந்தார்கள். மண்டபத்தில் இளங்கோவனுடன் இவர்கள் சார்பாக பேச, முடிவெடுக்க காயத்ரியின் கணவன் ரகுவரன் பார்த்துக்கொண்டான்.  இவர்கள் அனைவரிடமும் பேசி, பர்வதம்மா வீடு சென்றாகிவிட்டாரா என்று விசாரித்து முடிக்கவும், அஸ்வின்  “மாமா, காபி. குடிச்சிட்டு ரெடி ஆனா அரை மணி நேரத்தில் கிளம்பலாமாம்.” என்று வந்து நின்றான்.
மாலினி அறையிலோ, சகுந்தலா மகளோடு தர்க்கம் செய்து கொண்டிருந்தார்.
“சொல்றதைக் கேளுடி. நகையை இங்கையே வெச்சிட்டு போ மாலினி. அங்க போனா போனதுதான்.”
“ம்மா…. தினப்படி போடறதை தவிர ஒரு அட்டிகை செட்டும் , காசு மாலையும்தான் கழட்டி வெக்கற  நகை. அதையும் இங்க வெச்சிட்டு போனா, என் மாமியாருக்கு பதில் சொல்ல வேண்டாமா?”
“கேட்டா சொல்லு. இங்க எனக்குன்னு தனியா வெக்க பீரோ வாங்கிட்டு அப்பறம் எடுத்துட்டு வரேன்னு. இல்லை, நம்ம லாக்கர்ல பத்திரமா இருக்குனு சொல்லு. இப்பவே எதுக்கு அவங்களுக்கு பயந்துக்கற ? “
“நீங்க எனக்கு போட்டாச்சு. அதோட விடுங்க. அதை பார்த்துக்க வேண்டியது என் ப்ரச்சனை. அது உங்களுக்கு வேண்டாம்.”, மாலினி தாயை முறைத்தாள்.
“போ…நீ ஆபிசுக்கு போன அப்பறம் எடுத்து கொண்டு போய் அடமானம் வெப்பாங்க. அப்ப புரியும் நான் சொல்றது.”, சகுந்தலா நொடிக்க, தாயின் அநியாயப் பேச்சு மாலினியை மேலும் கடுப்பாக்கியது. கிளம்பினால் தேவலை என்று நினைத்தவள்,
“ போறும் இந்த பேச்சு, ரகு காதுல விழுந்தா வருத்தப்படுவார். நான் பார்த்துக்கறேன். நீங்க போய் கிளம்பற வழியைப் பாருங்க.”, கையெடுத்துக் கும்பிட்டு அனுப்பி வைத்தாள்.
ஒருவழியாக தாம்பரம் செல்ல காரில் மணமக்கள் ஏற, உடன் அஸ்வின் மற்றும் ட்ரைவர். மற்றவர்கள் வேறு இரு கார்களில் வந்தனர்.
“என்ன மாலினி, ஏன் டென்ஷன் ?”, என்றான் ராகவன்.
“ஹ… எல்லாம் அம்மா பண்ற நொச்சுதான். விடுங்க. கல்யாணம் முடிச்சு ஒரு ரொடீனுக்கு வந்துட்டா எல்லாம் அடங்கும். அது வரைக்கும் பொறுமையை இழுத்து பிடிக்கணும். நீங்களாச்சம் ரெஸ்ட் எடுத்தீங்களா?”, மாலினி பார்க்க,
“எல்லாதுக்கும் போனை போட்டு ஒழுங்கா நடக்குதான்னு பார்த்து முடிக்கவுமே காபியோட அஸ்வின் வந்துட்டான். உங்க வீட்டு ஆளுங்களை நல்லபடியா கவனிச்சு அனுப்பற வரைக்கும் எனக்குமே டென்ஷந்தான்.”, ராகவன் சிரித்தான்.
அவன் கிண்டலை புரிந்து சிரித்தவள், “ கல்யாணத்துல உங்க மாப்பிள்ளை ரகுவரன்தான் அப்பாவோட சுத்திகிட்டு இருந்தார் போல ? ஸ்மூத்தா கொண்டு போயிட்டார். நான் எதுவும் சாங்கியத்துல ப்ரச்சனை வருமோன்னு பயந்துகிட்டு இருந்தேன்.”, மாலினி சொல்லவும்,
“ம்ம்… வியாபாரம் செய்யற மனுஷன், எங்க அனுசரிச்சு எங்க பிடிக்கணும்னு தெரியும். அதனாலதான் என் மாமாங்களை ஓரம் கட்டி இவரை விட்டேன். அவங்க எதாவது ஈகோ பார்பாங்களோன்னு பயம். இங்க அம்மாவை விட பெரிய அத்தை உங்க அம்மாகூட டீல் பண்ணிப்பாங்கன்னு அவங்களை அனுப்பிட்டேன். அம்மா காயத்ரியை கேப்பாங்க, அதுவே ப்ரச்சனையில் கொண்டு விடும்.”
“எல்லார் கல்யாணமும் இப்படியா கண்ண கட்டும் ? என் ப்ரெண்ட்ஸ் கல்யாணத்துல அவங்கல்லாம் ஜாலியா இருந்தா மாதிரி இருந்துச்சு.”, மாலினி புலம்பவும்,  சிரித்த ராகவன்,
“பெத்தவங்க இஷ்டப்படாம செய்யும் போது, நம்ம கஷ்டப்படாம இருக்க முடியுமா ? இன்னும் ஒரு நாலு மணி நேரம் எல்லாரையும் சமாளிச்சா போறும். அப்பறம் எந்த அம்பு எங்கிருந்து வருமோன்னு பயந்துகிட்டு இருக்க வேண்டாம்.”
சொன்னது போலவே நாலு மணி நேரம் ரகுவரன், விஜய், ரமேஷ் உதவியுடன் சிறப்பாகவே சமாளித்தார்கள் புது மண ஜோடி.
சகுந்தலா மூன்று விதமான ஸ்வீட், இரண்டு வகை காரம் என்று ஒரு வகைக்கு நூற்றி ஒன்று என்று மணப் பெண் சீர் வைத்து, மணமக்களுக்கு பட்டுப் புடவை, பாண்ட், ஷர்ட் என்று வைக்க பர்வதம்மாவிற்கு வாயெல்லாம் பல்.
பெரியத்தை கமலம் சகுந்தலாவை சரியாக நாடி பிடித்தவர், ராகவனிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு, பந்தியில் வைக்கும் ஸ்வீட்டுடன், அவர்கள் எடுத்து வந்ததில் குலோப்ஜாமுனையும் வைக்கச் சொல்லிவிட்டார். அதில் சகுந்தலாவிற்கு ஒரு திருப்தி. இப்படியாக ஒப்பேத்தி அனைவரையும் அனுப்பி வைத்து, இறுதியில் காயத்ரி குடும்பத்தார் கிளம்பினார்.
பர்வதம்மா இரண்டு ஸ்வீட், இரண்டு காரம் இருந்ததில் பாதியை கொண்டு வந்து அவள் காரில் அடுக்கி,  “ பெண்ணை பிரசவம் முடிச்சு அனுப்பறோம். மதுரையில எல்லாருக்கும் குடுங்க, நாளை ராத்திரி கிளம்பறதுதானே சம்மந்தி.” என்று கொடுத்து விட்டார்.
மறுனாள் காலையில் குல தெய்வக் கோவிலுக்கு  செல்வதாக ஏற்பாடு. மதுரைக்கு செல்லும் முன் பேரக் குழந்தையை கோவிலுக்கு கூட்டிச் செல்ல வேண்டும் என்பதால் காயத்ரி குடும்பமும் வருவதாக இருந்தார்கள்.
ஒரு வழியாக ராகவன் மாலினி விக்ரம் பர்வதம் மட்டுமே இருக்க, மாலினி கல்யாணப் புடவையை  மாற்றியவள், குளிக்கச் சென்றாள்.  படுக்கை அறைக்குச் சென்றவன் பார்த்தது அலங்கோலமாக இருந்த அறையைத்தான்.
முதலிரவிற்கென அலங்காரம் எதுவும் வேண்டாம் என்று சொல்லியிருந்தான் அன்னையிடம். அதற்காக இப்படி போட்டு வைப்பார்கள் என்றும் எண்ணவில்லை. ஒரு பெருமூச்சுடன் தலையணை, படுக்கை விரிப்பைக் களைந்தவன், பீரோவில் இருந்த மற்றொரு புது விரிப்பைத் தேட, கிடைக்கவில்லை.
“மா… புது பெட்ஷீட் எங்க? “, என்று வந்து நின்றான். அவனைப் பார்த்து முழித்த பர்வதம், “ஏன், இப்ப போட்டிருக்கறது நேத்து போட்டதுதாண்டா. ஏன் மாத்தற ?”, என்றார்.
“ம்ச்… எல்லாரும் அதுல உட்கார்ந்து, சாப்பிட்டுனு நாஸ்தியாகிடுச்சு. புதுசு எங்க?”
“ம்ம்.. அது இப்பதான் கார்ல குழந்தைக்கு அடியில போட பெட்ஷீட் கேட்டாளேன்னு காயத்ரிக்கிட்ட குடுத்தேன்…. தோச்சது வேற இருக்கும், தரவா?”
தாயையே பார்த்தான் ராகவன். ‘இவங்க தெரிஞ்சு செய்யறாங்களா இல்லை மூளையை கழட்டி வெச்சுட்டாங்களா ? இல்லை என்னைப் பத்தின அக்கறை சுத்தமா இல்லையா ?‘, அவனுக்குப் புரியவேயில்லை.
அதற்குள் வெளியிலிருந்த பீரோவிலிருந்து பெட்ஷீட்டைத் தர அது சாயம் போயிருந்தது. மற்றொன்று கொஞ்சம் பொத்தலாகியிருந்தது. ஒன்றுமே சொல்லாமல் சாயம் போனதை வாங்கிக்கொண்டு, இருந்த ஏதோ இரண்டு தலையணை உறைகளை எடுத்து வந்தான். மாற்றி முடிக்கும் வேளை மாலினி உள்ளே வர , “ சாரி மாலினி.பேசாம இன்னிக்கு உங்க வீட்டிலயே இருந்திருக்கலாம்.”, என்றவன் அவன் தாய் செய்ததை சொல்ல, மாலினிக்கு என்ன சொல்லவென்றே தெரியவில்லை.
“சரி, நான் தரையை கூட்டறேன். குப்பையா இருக்கு.”, என்று துடைப்பம் எடுக்க செல்ல ராகவனுக்கு மேலும் வருத்தமாகியது. என்ன கனவுகள் வைத்திருந்தாளோ இன்று இரவுக்கு. அழுத்தமான அமைதியுடன் வெளியே சென்றவன் ஒரு அவசரக் குளியலை போட்டு வந்தான்.
“பால் காய்ச்சவா ராகவா?”, பர்வதம் கேட்கவும், அவர் புறம் ஒரு அனல் பார்வை வீசியவன், “அது ஒன்னுதான் குறை. போங்கமா, போய் படுங்க. விக்ரம் நீ சோஃபாவை விரிச்சு படுக்கையை போடுடா.”, என்றுவிட்டு மீண்டும் உள்ளே வந்தான்.
மாலினி அதற்குள் பெருக்கி முடித்தவள், துடைப்பத்தையும் ,முறத்தையும் பின் கட்டுக்குக் கொண்டு சென்று வைத்துவிட்டு வந்தாள். அவள் வரவும் அவளையே பார்த்தவன், கதவை தாளிட்டான்.
படுக்கையில் அமர்ந்தவன், அவளை அருகில் அழைத்து, “மாலினி, இன்னிக்கு எப்படி இருக்கணும்னு நீ நினைச்சிருந்தியோ எனக்குத் தெரியாது. விக்ரம் இருக்கும்போது பெருசா எதுவும் அலங்காரம் வேண்டாம்னு சொன்னேன் அம்மாகிட்ட. சத்தியமா இப்படி விடுவாங்கன்னு நினைக்கலை. எல்லாரும் கிளம்ப இருக்கவும் நானும் முன்னாடியே பார்க்கலை. சாரிமா..இன்னும் எத்தனை முறை கேட்க வேண்டி வருமோ தெரியலை…”, வருத்தமாக பேசிக்கொண்டிருந்தவனின் வாயை மூடியவள்,
“நீங்க வருத்தப்பட்டு எதுவும் மாத்த முடியாது ரகு. எல்லாத்தையும் நீங்களே கவனிச்சு சரி செய்யவும் முடியாது. உங்களுக்கு செய்ய வேண்டியதை காயத்ரி கவனிச்சிருக்கணும். அவளுக்கு அவ பாடே பெரிசா இருக்கு. விடுங்க. அப்செட் ஆகாதீங்க. கண்டிப்பா இப்படி எதிர்பார்க்கலை நான், பட்…”, என்று தோள் குலுக்க,  “சரி படுக்கலாம் வாங்க. காலையில அஞ்சு மணிக்கு எழுந்துக்கணுமாம். அத்தை சொல்லியிருக்காங்க.”
மாலினியின் ஏமாற்றம் அவள் மறைத்தாலும்  ராகவனுக்குப் புரிந்தது. இந்த நிலையில் அவளுக்கு ஒரு முத்தமிடக்கூட அவனுக்கு தைரியமில்லை.
படுத்திருந்த மாலினிக்கு அவள் தாய் சொன்னதெல்லாம் ஒலித்தது. சின்ன ரூம், தனிமை இருக்காது, எல்லா பொறுப்பும் உன் தலையில் விழும் என்று ரிபீட் மோடில் ஓடியது. முயன்று தன்னிரக்கத்தை தள்ளி நிறுத்தினாள். நாளைக்கு நாலு பெட்ஷீட் செட் வாங்க வேண்டும் என்ற முடிவுடன் உறக்கத்தை தழுவ, ராகவன் மனம் ‘நல்ல பொண்ணு, அவளை கட்டி இப்படி கஷ்டப்படுத்தறியேடா.’, என்று  நீண்ட நேரம் புலம்பிக்கொண்டிருந்தது.
காலையில் அலாரம் அடித்ததில் எழுந்தவள் மெல்ல ராகவனைப் பார்க்க, அவன் அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தான். மன உளைச்சலில் இருந்தவன் வெகு நேரம் சென்றே உறங்கியிருக்கவும் அலாரம் அடித்தது கூட தெரியவில்லை.
‘கல்யாணம் முடிஞ்சு ஒரு நாள் ஆச்சா இல்லை ஒரு வருஷம் ஆச்சா மாலு ?’, என்று தனக்குத்தானே கேட்டவள்,’ எதுவும் நினைக்காதே மனமே.’, என்று சமாதானம் கூறிக்கொண்டு கதவை திறந்தாள்.

Advertisement