Advertisement

“ம்மா… “, ராகவன் அழைக்க, எழுந்து வந்தார் பர்வதம். அந்த ரூம்ல சம்மந்திங்க இருகாங்கடா.  பெட்ல இடமில்லைன்னு காயத்ரி இங்க வந்துட்டா. விக்ரம் அங்க தரையில பெட்ஷீட் போட்டு மாமா கூட படுத்துக்கறேன்னு போயிட்டான். அவங்க மூணு ரூம் எடுத்துகிட்டு நமக்கு ரெண்டுதான் குடுத்தாங்க. “, பர்வதம் குறை படிக்க, கேட்டுக் கொண்டிருந்த விஜய், “சரி நீங்க போய் படுங்கம்மா. நாங்க பார்த்துக்கறோம்.”, என்று கத்தரித்து அனுப்பினான்.
“நாளைக்கு வேண்டியதை எடுத்துகிட்டு வா ராகவ். எங்க வீட்டுக்குப் போகலாம்.”
“டேய்… இல்லை. நான் இங்கதான் இருக்கணும்.”, ராகவன் மறுத்து சொல்ல,
“எங்க?  காரிடார்ல படுப்பியா? மாலினிக்கு போன் செய்து சொல்லிட்டு கிளம்பு. அஞ்சு மணிக்கு கிளம்பி நாம வந்துடலாம்.”, விஜய் சொல்லவும், அவன் சொன்ன நிதர்சனம் புரிய,
“காயத்ரி அவங்க மாமானார் மாமியார் இங்க தங்கப்போறாங்கன்னு கடைசீலதான் சொன்னாடா. சரி அந்த ஒரு ரூம்ல இருந்துப்பாங்கன்னு நினைச்சேன்.”, என்று விளக்கியபடியே மாலினியை அழைத்தான்.
அவளிடம் விபரம் சொல்லவும், “இல்லை. இருங்க. ஒரு ரூம்ல அஸ்வினும் அப்பாவும்தான் இருக்காங்க. நான் அஸ்வினை சித்தப்பா கூட படுக்க சொல்றேன்.”, என்றாள்.
“என்னது, உங்க அப்பாவோட ஒரே ரூம்லயா? வேணாம். அதுக்கு நான் தூங்காமயே இருந்துடுவேன்.”, என்று ராகவன் ஜகா வாங்க, கேட்டுக்கொண்டிருந்த விஜய்க்கு அப்படி ஒரு சிரிப்பு.
மாலினி அவள் அறையிலிருந்து அதற்குள் வந்துவிட்டாள். அஸ்வினை அழைத்து வெளியே வர சொல்லவும், பின்னோடே இளங்கோவனும் வந்துவிட்டார்.
விஷயம் தெரிந்ததும், “அடடா… சொல்லிருந்தா பக்கத்து ஹோட்டல்ல இன்னும் ரெண்டு ரூம் போட்டிருப்பேனே. எங்க சொந்தம் சில பேர் அங்கதான் தங்கியிருக்காங்க. “, என்று லேசாக ஒரு கொட்டு வைத்தவர்,  “சரி, நீங்க அஸ்வின் கூட தங்கிக்கோங்க ராகவன். நான் என் தம்பி ரூம்ல இருக்கேன். வீட்டுக்கெல்லாம் போக வேண்டாம் இந்த ராத்திரியில.”, என்று முடித்துவிட்டார்.
“அந்த ஹோட்டல்ல நாங்க ரூம் போட்டுகறோம் சார். உங்களுக்கு எதுக்கு சிரமம்.”, என்று விஜய் சொல்லவும்,
“வேணாம்பா எதுக்கு ராகவனுக்கு வீண் செலவு. நான் குடுக்கறேன்னாலும் வாங்கிக்க மாட்டார். நீங்க போய் படுங்க. நான் தரையில கூட படுத்துக்குவேன். பழக்கம்தான்.”, என்று ஒரு ஊசியை ஏற்றிவிட்டு சென்றார்.
 “அப்பறம் என்னடா? நீ கிளம்பு. எனக்குதான் பெட் ரெடியாகிடுச்சே.”, என்று கடுப்புடன் விஜயிடம் கூறினான் ராகவன். நண்பனை மேலும் தர்ம சங்கடத்தில் ஆழ்த்த வேண்டாம் என்று  நினைத்தவனும், மேலும் எதுவும் சொல்லாமல் தலையசைப்புடன் கிளம்பினான்.
ராகவனின் கடுப்பைப் பார்த்து மாலினிக்கு வருத்தமாகியது. “இதுக்குத்தான் நான் கிளம்பறேன்னு சொன்னேன் மாலினி. இது தேவையா எனக்கு ?”, என்று அவளைக் கடிந்தவன், “எவ்வளவுதான் ப்ளான் போட்டாலும் எங்கயாவது தடுக்கிவிட்டுடறாங்க. சரி விடு. பார்த்துக்கலாம். குட் நைட்.”, என்று சற்று சமாதானமாகக் கூறி அனுப்பினான்.
அவனிடம் விடை பெற்றவள், தன் க்ஷண நேர மடத்தனத்தை எண்ணி நொந்துகொண்டாள். ‘அடுத்த முறையாவது யோசிடி.’, என்று தனக்குள் புலம்பியபடியே படுக்கச் சென்றாள்.
ஐந்து மணிக்கு அலாரம் அடித்து ராகவனை எழுப்பியது அவன் போன்.
“மாமா, நீங்க இங்கயே  குளிச்சிருங்க. மத்த ரூமெல்லாம் பிசியாகிரும். நீங்க முடிச்சிட்டு என்னை எழுப்புங்க.”, என்று சொல்லி நித்திரையைத் தொடர, அவன் பொருட்களை எடுத்து வர ராகவன் மணமகன் அறைக்குச் சென்றான்.
“நீ எங்கடா படுத்திருந்த ? விக்ரம் அங்க வரலைன்னு சொன்னான்?”, பர்வதம் கேட்க, சுகமாய் உறங்கிக் கொண்டிருந்த காயத்ரியையும் குழந்தையையும் பார்த்தவன்,  “எங்கயோ படுத்தேன். இப்ப அதுகென்ன. நீங்க நல்லா ரெஸ்ட் எடுத்தீங்களா? “, என்று கேட்டபடியே தன் கிட் பேக்கையும், காலையில் அணிய வேண்டிய ட்ரெஸ் இருந்த பெட்டியையும் எடுத்துக்கொண்டு கிளம்பினான். இங்கிருந்த பாத்ரூமில் யாரோ குளிக்கும் சத்தம் கேட்டது.
“எங்கடா போற ?”
“இங்க நீங்க எல்லாரும் ரெடியாகுங்க. அஸ்வின் ரூம்ல நான்ரெடியாகிக்கறேன்.”
“அதுக்குள்ள அவங்க ஜனத்தோட சேர்ந்தாச்சு. ஹ்ம்ம்ம் …எல்லாம் பழகிக்க வேண்டியதுதான். “, பர்வதம் முனக ராகவன் கோவம் தலைக்கேறியது.
“இங்க நான் கிளம்பினா, உன் மக, பேரன் தூக்கம் கெடும். அவ எழுந்து கிளம்ப பாத்ரூம் கேப்பா. இன்னும் நீங்களும் பெரியம்மாவும் ரெடியாகணும். கொஞ்சமாச்சம் அறிவை யூஸ் பண்ணுங்கம்மா? எல்லாரும் நேரத்துக்கு கிளம்பணும். இதுல என்னை வேற எங்க போக சொல்றீங்க?”, சுள்ளென்று விழவும், படுத்திருந்த பெரியம்மா எழுந்து,
 “உனக்கு கூறுங்கறதே கிடையாது பர்வதம். நீ போடா ராகவா. “, என்று அனுப்பி வைத்தவர், “எல்லாரும் பொம்பளையாளா இருக்கோம். இங்க அவன் கிளம்புவானா நாம கிளம்ப முடியுமா ? நிலம தெரிஞ்சு அவனே போனா இப்படித்தான் பேசுவியா? “, என்று ஒரு பிடி பிடித்தார்.
அதிலேயே காயத்ரி முழித்துவிட, “ம்மா சத்தம் போடாதீங்க, பிள்ளை எழுந்துடப் போறான்.”, என்று முனகியபடியே மீண்டும் தூக்கத்தை தொடரப் போனாள்.
அங்கே மாலினியை தனியாகப் பிடித்து கடித்துக்கொண்டிருந்தார் சகுந்தலா. “ஏன் மாலினி, உன்னைக் கேட்டுதான அவங்களுக்கு ரூம் குடுத்தது ? ஹோட்டல்ல ரூம் போட்டபோதும் வேண்டாம்னு சொல்லிட்டாங்கதானே? அப்பறம் எப்படி இடம் போதலைன்னு நடு ராத்திரியில வந்து நிப்பாங்க ? கடைசீல லட்சங்களைக் கொட்டி கல்யாணத்தை நடத்தற மனுஷன் தரையில் படுத்திருக்கார். கேட்டுத் தொலைச்சா இன்னொரு ரூம் போட்டிருக்கலாமில்ல? சம்மந்தி வெளியூர்காரங்க. அவங்க வந்தா தங்குவாங்கன்ற எண்ணம் கூடவா இருக்காது ?”
“அம்மா… எதிர்பார்க்கலை. அவங்க ஹோட்டல் போகறதாத்தான் சொன்னாங்க. அப்பாதான் போக வேண்டாம்னு சொல்லிட்டார். தயவு செஞ்சு இந்த விஷயத்தை இத்தோட விடுங்க. நான் அஸ்வினைத்தான் கீழ படுக்க சொல்லியிருந்தேன், அதுக்குள்ள அப்பா முடிவு செய்திட்டார்.”, மாலினி பாவமாய்க் கூற, “இன்னும் என்னென்ன கூத்தெல்லாம் பார்க்க வேண்டியிருக்கோ, கடவுளே.”, என்று புலம்பலோடு சென்றார்.
ஆக திருமண நாள் என்ற சந்தோஷத்தைவிட உறவுகளை சமாளிப்பதே இருவருக்கும் பெரும் வேலையாகிப் போனது.
எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து இருவரும் தயாராக, மேடை ஏறி பாத பூஜை சடங்குகள் முடித்து திருமணப்பட்டை பெற்று வந்தார்கள்.
காலையில், ஆரஞ்சு வண்ணப் பட்டில் பட்டாம்பூச்சியாக வந்தவளை அவன் அறை வாசலில் இருந்து பார்த்தவன்,  “லுக்கிங் கார்ஜியஸ்”, என்று மெசேஜ் அனுப்பி வைத்தான்.
ஐயர் சொல்லிய மந்திரங்களை கர்ம சிரத்தையாக சொல்லிக் கொண்டிருந்தவன், அரவம் கேட்டு திரும்ப, மணப்பெண் கோலத்தில் தேர் போல நடந்து வந்துகொண்டிருந்தாள் மாலினி.
பட்டுப் புடவை முழுவதும் ஜர்டொசி வேலைப்பாடுடன், அங்கங்கே பதிந்திருந்த கற்களும் முத்துக்களும் அந்த சேலைக்கு மெருகேற்ற, தலையலங்காரம், நெத்திச் சுட்டி, ஹாரம், ஒட்டியாணம் என்று அவள் அழகுக்கு அழகு சேர்த்தது.
கல்யாணப் பெண்ணிற்கு தன் மனத்திக்கினியவனோடு வாழக்கையைத் தொடங்கப்போகிற உள்ளத்துப் பூரிப்பு மேலும் ஒரு கூடுதல் சோபையை சேர்க்க, வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தான் ராகவன் அவள் வந்து அவனருகில் அமரும் வரை.
ஐயர் மறுபுறம் திரும்பி எதையோ கேட்க, அந்த சந்தர்ப்பத்தில், குனிந்து “மாலினி அட்டகாசமா இருக்க.”, என்று முணுமுணுத்து அவளிடம் ஒரு புன்னகையும், செல்ல முறைப்பையும் சேர்ந்து பெற்றுக்கொண்டான்.
அடுத்த வந்த திருமண நிகழ்வுகளை இருவரும் அனுபவித்து செய்தார்கள். மங்கல நாண் அனைவரின் ஆசியும் பெற்று ஐயரிடம் வந்தது. ராகவன் கண்கள் மேடையை சுற்றி வந்தது. விக்ரமிடம் பொறுப்பை ஒப்படைத்திருந்தான். நெருங்கிய சொந்தங்களை தாலி கட்டும் நேரம் மேடை ஏற்ற. அனைவரும் அவன் புறம் இருந்தனர். எல்லாம் காயத்ரி கல்யாணத்தில் கற்ற பாடம்.
மந்திரங்கள் ஒலிக்க, கெட்டி மேளம், நாதஸ்வரம் முழங்க தன் வாழ்வில் எதிர்பார்த்த நொடியை அடைந்த பொழுது இருவருக்குமே நெகிழ்ச்சியாக இருந்தது. தாலியை கையில் வாங்கியவன் ஒரு ஆழ்ந்த மூச்செடுத்து மாலினியைப் பார்க்க, அவள் புன்னகையுடன் சம்மதமாய் சற்றே தலை குனிய, தாலியைக் கட்டினான் எல்லா கடவுள்களையும் துணைக்கழைத்தபடி. இரண்டு முடிச்சு ராகவன் முடிய,  மூன்றாவதை அக்கா முறையில் ஒருவர் கட்ட காய்த்ரி காமாட்சி அம்மன் விளக்கை ஏந்தியிருந்தாள்.
குங்குமம் இட அவளைச் சுற்றி கையை கொண்டு சென்றிருந்தவன், காதருகில் ‘லவ் யூ மயிலு’ என்ற முணுமுணுப்போடே வைத்து முடிக்க, மாலினியின் முகத்தில் நொடி நேர திகைப்பும் அடுத்து மகிழ்ச்சிப் புன்னகையும் சேர்ந்து கொண்டது.
அருகிலிருந்தவர்களின் வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டிருக்கையிலேயே, அக்கினியை வலம் வர ஐயர் சொன்னதை அடுத்து, இருவரும் எழுந்து கொண்டார்கள்.  விளக்குடன் காயத்ரி முன்னே செல்ல, மனைவியின் கைத்தலம் பற்றி நடந்தான் ராகவன். சுண்டு விரலெல்லாம் இல்லை, அத்தனை விரல்களையும் பற்றியிருந்தான். அவன் அங்கவஸ்திரமும் அவள் முந்தானையையும் முடிச்சிட வலம் வரத் தொடங்கினார்கள். இரண்டாவது சுற்று முடிந்து மூன்றாவது ஆரம்பிக்க, காயத்ரி வம்பிழுத்தாள்.
“அண்ணா, வண்டி நகராது. என்னை கவனிச்சாத்தான் அடுத்த ரவுண்ட்”, என்று சிரிக்க, இதை எதிர்பார்த்திருந்த ராகவனும் புன்னகையோடே சட்டைப் பையிலிருந்த ஆயிரம் ரூபாயை அவளிடம் தந்தான்.
“ஆ… என்ன வெறும் ஆயிரம்தானா? மச்சானுக்கு முக்கால் பவுன் மோதிரம், சொந்த தங்கச்சிக்கு ஆயிரம்தானா? இதெல்லாம் செல்லாது.”, என்று வாயைவிட,
கேட்டுக்கொண்டிருந்த மாலினியின் தாய், சித்தி இன்னும் சிலரும் முகத்தை சுருக்கினர். ராகவன் காயத்ரியை முறைக்க, அதற்குள் யாரோ ஒரு பெண்மணி,
“ஆத்தி, எதுக்கு எதை இணை கூட்டுறா உன் நாத்தி ! மாலினி கொஞ்சம் கவனமா இருக்கணும்மா நீ கணக்கு வழக்குல.”, என்று சொன்னார்.
மாலினி முழிக்க ராகவனுக்கு இன்னுமே அவமானமாகிப் போனது. அஸ்வினோ விட்டால் மோதிரத்தை கழட்டி விடுவான் போல நெளிய, ராகவன் “காயத்ரி, நட..”, என்றான் அழுத்தமான குரலில்.
கன்றிய முகத்துடன் மூன்றாவது சுற்றினை காயத்ரி நடக்க, ராகவன் மாலினிக்கு மெட்டி அணிவித்து இல்லாத அருந்ததியைக் காட்டி, ஒரு வழியாய் வந்து அமர்ந்தான். விக்ரமைக் கூப்பிட்டவன் காதில் முணுமுணுக்க அடுத்த ஐந்தாவது நிமிடம், காயத்ரி குழந்தை அழுவதாக அழைக்கப்பட்டாள். அவளிடத்தை ராகவனின் அத்தைப் பெண் ரேணு ஏற்றுக் கொண்டாள். அதன் பின்னர் பெரியவர்கள் சிலரிடம் ஆசி பெற்று, பின்னர் சிறு விளையாட்டுக்கள் என்று மீண்டும் பொழுது இனிமையாகியது புது மணத் தம்பதியருக்கு.

Advertisement