Advertisement

அத்தியாயம் – 8
மாலை  நேர அலங்கார விளக்குகள் மின்னிக் கொண்டிருந்த அந்த கல்யாண மண்டபத்தில் பூக்களால் மிதமான அலங்காரம் செய்யப்பட்ட அந்த வெள்ளை நிற ஸ்கோடா கார் வந்து நின்றது.
ராகவன் மாப்பிள்ளையாக இறங்க உடன் மாப்பிள்ளை தோழனாக அஸ்வின், மற்றும் விக்ரம் இறங்கினார்கள்.
ஃபார்மல் ப்ரவுன் பாண்ட், க்ரீமி யெல்லொ ஷர்ட், பெய்ஜ் கலர் ப்ளேசர், ப்ரௌன் ஷூ என்று படு ஸ்டைலாக இருந்தவனை வாசலில் நிறுத்தி ஆரத்தி எடுத்தார்கள் மாலினியின் அத்தையும் சித்தியும்.
கோவிலிலிருந்து ஊர்வலம் எல்லாம் வேண்டாம் என்று அங்கே முடிக்க வேண்டிய சாங்கியங்களை முடித்து, காரில் வந்துவிட்டிருந்தனர். பின்னோடே வந்த சில கார்களில் கோவிலுக்கு வந்த சொந்தங்கள் வந்து சேர்ந்தனர்.
அஸ்வின் அனுப்பிய போட்டோக்களின் புண்ணியத்தில் மாலினி ராகவனைப் பார்த்தவள், நேரில் காண ஆவலாய் இருந்தாள். ஆனால் மணப்பெண் அறையைத் தாண்டி வெளியே வர வாய்ப்பில்லாமல் ‘பொறு மனமே பொறு’ என்று அடக்கிக் கொண்டிருந்தாள். அவளைச் சுற்றி தோழிகள் கூட்டம் பேசிக்கொண்டிருந்தது எதுவும் ஏறவில்லை.
மாப்பிள்ளை வந்தது தெரிந்ததும், மற்றவர்கள் வெளியே கிளம்பிச் செல்ல ஷீலா மற்றும் அவள் தோழி ரேவதி மட்டுமே இருந்தார்கள். ரேவதி ராகவனுடன் பணிபுரிபவள், மாலினியை அறிமுகம் செய்து வைத்தவளும் கூட.
வெளியே மாப்பிள்ளைக்கு வரிசை தட்டு வைத்து, நலங்கு வைத்தார்கள். ராகவனுக்கு மாலினியின் தந்தை தங்க செயினை அணிவித்தார். வரிசைத் தட்டிலிருந்தவற்றை நோட்டம் விட்டுக்கொண்டிருந்தாள் காயத்ரி.
“பரவாயில்லை, அவங்க கெளரவத்துக்காகவாகச்சம் நிறைவாத்தான் செஞ்சிருக்காங்க.”, என்று பர்வதத்தின் காதைக் கடித்தாள்.
“பொண்ணுக்கு இப்ப தட்டு வெக்கணும். அதையெல்லாம் உன் பெரியத்தைதான் பார்த்துக்கறான்னு சொன்னான் ராகவன். என்ன வெக்கறான்னு கூட சொல்லலைடீ எங்கிட்ட. புள்ள சொன்னதெல்லாம் வாங்கி வெச்சிட்டேன்னு மொட்டையா சொல்றா, நேத்து நான் கேட்டதுக்கு.”, மகளிடம் நொடித்தார் பர்வதம்.
“நாமளே வாங்கியிருக்கலாம். அண்ணன் எதுக்கு அவங்ககிட்ட சொல்லுச்சு?”
“குழந்தையை வெச்சிகிட்டு காயத்ரியால முடியாது, தனியா போய் நீ என்னம்மா செய்வ ? உன் கூட சுத்த எனக்கு நாழியில்லை. அதான் அத்தைகிட்ட சொல்லிட்டேன்னு உங்க அண்ணணும் நழுவிட்டான். தட்டுங்க எத்தனைடான்னு கேட்டதுக்கும், அதெல்லாம் அத்தை பார்த்துக்குவாங்க. அவங்க பொண்ணுக்கு செய்ஞ்சதுதானன்னு ஒரே வரியில முடிச்சிட்டான்.”, இங்கே புலம்பலை பர்வதம் தொடர, இவர்கள் இருவரையும் தொந்தரவே செய்யாமல்  ராகவனின் பெரியத்தை கமலமும் அவர் மகளும் பதினொரு நேர்த்தியாக அடுக்கப்பட்ட தட்டுக்களை அவர்கள் சொந்தக்கார பெண்களை வைத்து கொண்டு வந்து அடுக்கினர்.
“என்னம்மா பாதாம் ஒரு தட்டு, முந்திரி ஒரு தட்டுன்னு இருக்கு? ஒரு ஒரு தட்டும் ஆயிரம் ரூபா இருக்கும்மா. சொல்லவேயில்லை ? எப்ப இந்த மாதிரியெல்லாம் அடுக்கி அலங்காரம் செஞ்சாங்க ?”, காயத்ரி வேக வேகமாக முன்னால் வந்து பார்த்தாள்.
“எப்ப அத்தை இந்த டெகரேஷனெல்லாம் செஞ்சீங்க. நாங்க ரூம்ல இருந்தப்போ பார்க்கலையே? தட்டு வைக்க என்னை கூப்பிடவேயில்லை ?”, காயத்ரி கேட்கவும்,
“நீங்க கோவில் போனதும் ஆரம்பிச்சா என் பொண்ணு ரேணு. எல்லாரும் இருக்கும்போது எங்க வெச்சு ரெடி செய்ய ? அதுக்கு முன்ன வரை தட்டை பத்தி எந்த அக்கறையும் இல்லை. இப்ப வந்து கேட்கற ?  நீ எடுக்க வேண்டிய தட்டைத்தான் உன் மாமியார் கொண்டு வந்து வெச்சாங்க. போ, போய் நாத்தனாரா நீதான் மாலினியை அழைச்சிகிட்டு வரணும். அதையாவது செய்.”, என்று விரட்டி விட்டார் கமலம். ராகவனின் தந்தை குணசேகரனின் இரு உடன்பிறப்புகளில் ஒருவர்.
ராகவனின் தந்தை காலமானதும், எங்கே தன்னிடம் காசு கேட்டு வருவார்களோ என்ற அச்சத்தில் தள்ளி வைத்தார். ஆனால் ராகவன் காயத்ரியின் கல்யாணத்தை இவர்கள் யாரிடமும் கடன் கேட்காமல் நடத்தி முடிக்கவும் அவன் மீது மரியாதையும் பாசமும் வந்தது. ராகவனும் தன் எல்லை தெரிந்து நடந்துகொள்ளுவான். காயத்ரி, பர்வதம் குணம் தெரிந்து தட்டு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டி, கமலத்திடம் பொறுப்பையும் முக்கியமாக பணத்தையும் முன்பே கொடுத்துவிட, இன்று சகுந்தலாவிற்கு திருப்தியாக பெண் வரிசை தட்டு அமைந்தது.
ராகவன் அவன் அறைக்கு செல்லும் வழியில், மாலினியை அழைத்துக்கொண்டு காயத்ரி வர, அதுவே அவர்களின் அன்றைய முதல் சந்திப்பு.
க்ரீமி யெல்லொவில் ப்ரவுன் பார்டரில் தங்க சரிகையுடன் பனராசி சில்க் டிசனர் வேலைப்பாடுகள் செய்த புடவையில் அதற்கு தக்க பெரிய சோக்கர், வளை,ஜிமிக்கி என்று பொன்னோவியமாக இருந்தாள் மாலினி.  ராகவனின் கருத்தில் முதலில் பதிந்ததென்னவோ மாலினியின் கண்கள் தன்னைக் கண்டு ரசிப்பதுதான். அவள் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி, சிறு வெட்கம் கலந்த புன்னகை என்று அவன் பார்த்து முடிப்பதற்குள் கடந்து விட்டிருந்தார்கள்.
“மாமா, நடங்க.”, என்று அஸ்வின் உந்த பின்னே திரும்பி மாலினி செல்வதை பார்க்க முடியாதபடி அவன் நட்புகள் அவனை சூழ்ந்தன.
“இதுக்குத்தானாடா மச்சி க்ரீமி யெல்லோ ஷர்ட்தான் வேணும்னு அந்த அடம் பிடிச்ச ?”, என்று விஜய் கலாய்க்க, “அட அட, மேடையில் மேட்சிங் மேட்சிங்கா நிக்கப்போறாங்கடா ? இது தெரியாம அந்த கலர் நல்லாருக்கும் இது நல்லாருக்கும்னு ஆவிய வேஸ்ட் செஞ்சோமேடா நண்பா..“, என்று ஒத்து ஊதினான் ரமேஷ். இருவரும் கல்லூரி காலத்திலிருந்து ராகவனின் நெருங்கிய தோழர்கள்.
“ஷ்… இங்க வெச்சு கத்தாதீங்கடா…”,என்று ஒரு புன்சிரிப்புடன் அவர்களை அடக்கியவன் மணமகன் அறையை நோக்கி நடந்தான் ‘சே …அவ அலங்காரத்தைக்கூட சரியா கவனிக்கலையே.’, என்று நொந்தபடி.
மெசேஜ் வரவும் பார்த்தவன், அத்தைப் பெண் ரேணு அனுப்பியிருந்தாள். ‘All done perfect.’ என்ற செய்தியுடன். ஒரு நிம்மதி பெருமூச்சு வந்தது ராகவனிடம். இதுக்குத்தான் எவ்வளவு மெனக்கெட வேண்டியிருந்தது ? மாலினி அவனுக்கு வைக்கப்போகும் தட்டுக்களை சொல்லி, சகுந்தலா கண்டிப்பாக அதற்கு ஈடாக எதிர்பார்க்கிறார் என்று சொல்லியிருந்தாள்.
இதை அவன் வீட்டில் சொன்னால் தேவையில்லாத விவாதங்களே மிஞ்சும் என்று தெரிந்து அத்தை கமலத்திடம் பொறுப்பை விட, இதோ நேர்த்தியாக அமைந்துவிட்டது என்று தகவல் வந்துவிட்டது. முதல் கிணறு தாண்டியாகிவிட்டது.
அடுத்த சில நிமிடங்களில் நாதஸ்வர ஓசை அடங்கி, இளங்கோவன் ஏற்பாடு செய்திருந்த மெல்லிசை ட்ரூப்  தன் நிகழ்ச்சியை ஆரம்பிக்க, மாப்பிள்ளையை மேடைக்கு வருமாறு அழைக்க ஆள் வந்தது. அஸ்வின் ஷீலா பேசி வைத்து ஒரே நேரத்தில் அழைத்துவர வீடியோகிராஃபரின் ஒளி வெள்ளத்தில் மாப்பிள்ளையும் பெண்ணும் ஒருங்கே மேடை ஏறினார்கள். காயத்ரியைக் காணவில்லை. மாலினியைச் சுற்றி அவள் சகோதரிகள் மற்றும் ஷீலா.
வாழ்த்து சொல்ல வந்த மக்கள் பின்னோடே  மேடை ஏற, அதற்குப் பின் தனியாக பேசிக்கொள்ளவே நேரமில்லை இருவருக்கும். கூட்டம் ஒரு வாராய் அடங்கியபின் சற்று இடைவெளி வர, “மாலினி எதாச்சம் குடிக்கறயா ?”, என்று கேட்டுக்கொண்டிருக்கையிலேயே அங்கே வந்த ஷீலா, “என்ன ப்ரோ, மாலினி இப்படி ஒரு அழகை நான் பார்த்ததேயில்லைன்னு சொன்னீங்களா ?”, என்று இரண்டு வருடம் முன்னர் வந்த வாரணம் ஆயிரம் டையலாக்கை சொல்ல, ராகவனுக்கு அப்போதுதான் அவள் அழகை, அலங்காரத்தைப்பற்றி ஒரு வார்த்தை இது வரை சொல்லவில்லை என்றே உரைத்தது.
“அது… அது…”, என்று ராகவன் திணற, “சே சே…அது சூர்யா ஏற்கனவே சொல்லிட்டார்.  இவர் புதுசா யோசிச்சி அப்பறமா சொல்லுவார் ஷீலா.”, என்று அவன் சொல்லாததை மாலினி போட்டுக் கொடுக்க, ஷீலா கச்சிதமாய் அதை பிடித்துக்கொண்டாள்.
அவன் தோழர்களை அழைத்து, “என்னத்துக்கு நீங்க ப்ரெண்ட்ஸ் ? எவ்ளோ கஷ்டப்பட்டு மூணு மணி நேரம் மாலினிக்கு அலங்காரம் செஞ்சா, உங்க ஃபரெண்ட்  ஒரு வார்த்தை சொல்லலையாம். இதெல்லாம் கேட்க மாட்டீங்களா ? வெர்ரி பாட்.” என்று கோர்த்துவிட  இளசுகள் பட்டாளம் ராகவனை தோரணம் கட்டியது. இப்ப எங்க முன்னாடி சொல்லுங்க என்று கட்டளையிட்டார்கள்.
“மாலினி… “, என்று ராகவன் பேச முற்பட, அதே நேரம் ம்யூசிக் ட்ரூப்பில் ஒருவன் , “மாலினி…இதை நான் சொல்லியே ஆகணும். நீ அவ்வளவு அழகு. இப்படி ஒரு அழகை நான் பார்த்ததேயில்லை.’, என்று வசனம் பேசி, முந்தினம் பார்த்தேனே என்று பாட, பாவம் ராகவன் முகம் வாடிப் போனான்.
ரமேஷ் புன்னகையுடன்  அப்போது மேடை ஏறி, “நாந்தான் மச்சி இந்த பாட்டு பாட சொன்னேன். சூப்பர் சாங் இல்லை?”, என்று சொல்ல ராகவனின் அத்தனை ஆதங்கமும் கோவமாக மாறி அவனின் முதுகில் ஒன்று வைத்தான். விஜய், ஷீலா என்று அங்கிருந்த அனைவரும் சிரிக்க, இங்கே நடந்தது தெரியாத ரமேஷ், “என்னடா, எதுக்கு அடிக்கற? சிஸ்டர் பயந்துக்க போறாங்க.”, என்று பாவமாக கூறி மேலும் ராகவனின் பிபியை ஏற்றினான்.
“மச்சி, நாமே நம்ம நண்பனை டாமேஜ் செய்யக்கூடாது. “, என்று ரமேஷை தன்புறம் இழுத்த விஜய்,  “சிஸ்டர், அவன் பாவம். சொல்லிக் குடுத்தா அடுத்த முறை கரெக்டா செய்வான்.  ஒரு வாட்டி மன்னிச்சு விட்டுருங்க.”,  என்று மாலினியிடம் சிபாரிசு செய்துவிட்டு அங்கே நிற்காமல் ரமேஷோடு இறங்கிவிட்டான்.
அடுத்து விடைபெற்றுக் கொள்ள வந்த உறவினர் கூட்டம் வரவும் அதில் மும்மரமானார்கள் இருவரும். அவன் முகம் சற்று வாட்டமாகவே இருப்பதைப் பார்த்து ‘அச்சோ… போட்டு குடுத்திருக்கக் கூடாதோ. இப்படி அப்செட் ஆகிட்டாரே.’, என்று மாலினி ராகவனை எப்படி சரி செய்வது என்ற யோசனையில் இருந்தாள்.
“என்ன ரகு…அவங்கதான் கிண்டல் செய்யறாங்கன்னா நீங்க ஏன் சீரியசா எடுத்துக்கறீங்க. நீங்க சொல்லிட்டீங்கன்னு நானே ஷீலா கிட்ட சொல்லியிருக்கணும். இது இப்படி பெருசாகும்னு நினைக்கலை.”, மெதுவாக அவனிடம் சொன்னாள் மாலினி.
“இல்லை மாலினி, உன்னை முதல்ல பார்த்தப்போ உன் அலங்காரம் எதுவும் கண்ணுக்குப் படலை. உன் சந்தோஷமான முகமும் , என்னைப் பார்த்து ரசிச்ச கண்ணும், உன் வெக்க சிரிப்பும்தான் தெரிஞ்சுது. அதுலர்ந்து நான் வெளிய வரதுக்குள்ள நீ க்ராஸாகி போயிட்ட.”, ராகவன் சொல்ல , பின்புறமிருந்து இதை கேட்டுவிட்ட ஷீலா, “ஆவ்… சோ க்யூட்.”, என்று நெஞ்சில் கைவைத்து மயக்கமாவதைப் போல ஆட, அதிர்ந்து திரும்பினான் ராகவன்.
அவன் வார்த்தைகளை கிரகித்து பூரிப்படைந்து கொண்டிருந்த மாலினி, ஷீலாவின் கையில் அடித்து. “உஷ்… இது பர்சனல். எல்லார்கிட்டையும் சொல்லக்கூடாது.”, என்று மிரட்டினாள்.
“ப்ரோ…கலக்கிட்டீங்க.  நான் கூட என்னவோன்னு நினைச்சிட்டேன். இப்ப புரியுது மாலு ஏன் உங்ககிட்ட விழுந்தான்னு. நீங்க கண்டின்யூ பண்ணுங்க. கரடிங்க எதுவும் வராம நான் பார்த்துக்கறேன்.”, என்று அவன் தோளில் தட்டி அவர்களுக்கு தனிமை கொடுத்து மற்றவர்களையும் பேசி திசை திருப்பினாள்.
ஷீலாவின் வார்த்தைகள் மாலினியை இன்னும் சிவக்க வைக்க, “ அழகிம்மா நீ. நான் சொல்லித்தானா தெரியப் போகுது. எனக்கு தனித்தனியா சிலாகிச்சு வர்ணிக்க வராது மாலினி. உன் கண்ணே என்னை கட்டி போடும், அதைத் தாண்டி எங்க வர ?”, ராகவன் சொல்லச் சொல்ல, விழி விரித்த மாலினியின் கண்கள் அவனிடம் இருந்த காதலை பறைசாற்ற, அதுவே ராகவனின் முகத்திலும் எதிரொலித்தது. சில நொடிகளே கிடைத்த தனிமை இருவருக்கும் போதுமானதாக இருந்தது அந்த இரவை மகிழ்ச்சியாக கொண்டு செல்ல.
இரவு மணி பன்னிரண்டை நெருங்கவும், பெரியவர்கள் இளசுகளின் அரட்டைக் கச்சேரியை கலைத்து அனுப்பினார்கள்.  கண்ணால் விடை பெற்றுக்கொண்ட மாலினியையும் ராகவனையும் பார்த்த விஜய்… “டேய்… நாளையிலர்ந்து உரிமையா நீ உன்னோட கூப்பிட்டுக்கலாம்டா. இன்னிக்கு ஒரு நாள்தான். இப்படி ஏக்க லுக்கெல்லாம் விட்டு எங்க ஸ்டமக்கெல்லாம் பர்ன் பண்ணாதடா.”, என்று கலாய்க்க அதற்கும் ஓவென்று கத்தி காலாட்டா செய்த படி மாலினியை இழுத்துக்கொண்டு போனார்கள் அவள் இரு தங்கைகளும், ஷீலாவும்.
“டேய்…. ஏண்டா… என் மானத்தை வாங்கறீங்க ?”, என்று புலம்பியபடியே தன் நண்பர்கள் இருவரையும் தள்ளிக்கொண்டு போனான் ராகவன்.
ரமேஷை விடை கொடுத்து அனுப்பிவிட்டு, மணமகன் அறையில் சென்று பார்த்தால், படுக்கையில் காயத்ரியுடன் குழந்தை உறங்க, அருகே பர்வதம் படுத்து இருந்தார்.  தரையில் விரிப்பு விரித்து அவனது உறவு முறை பெண்கள் இருவர் படுத்திருந்தனர்.

Advertisement